Saturday, February 7, 2009

எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்?


ஒரு தாமதித்த மாலை நேரத்தில், இன்னும் எவ்வளவு நேரம் அலுவலகத்தில் இருந்தாலும், வேலை முடியாது என்று ஒரு தெளிவு பிறந்து, சரி வீட்டிற்கு கிளம்பலாம் என்று முடிவு எடுத்தப் பிறகு, அலுவலக இருக்கையை விட்டு எழுவதற்கு முன்னர் இடைப் பட்ட ஒரு சோம்பல் முறிக்கிற நேரத்தில் பிறந்த ஒரு சிந்தனை இது.

"எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்? "

வெட்டேத்தியாக இருந்த நிலையில் இருந்து மாறி இப்போது ஒரு பொறுப்பான உத்யோகத்தில் அமர்ந்துள்ளோம்.

அபூர்வமாக பாக்கெட் மணி கொடுக்கும் அப்பா தந்த ஒரு பத்து ரூபாய் நோட்டை பத்திரமாக ஒரு பழைய பர்சில் வைத்து மகிழ்ந்த நம்மால், இன்று பர்ஸ் முழுக்க நோட்டுக்கள், கிரெடிட், டெபிட் கார்டுகள் எல்லாம் இருந்தும் சந்தோஷம் பெற முடிய வில்லையே? அன்றைய ஒரு நூறு ரூபாய் (கல்லூரியில் திருப்பித் தந்த டெபாசிட் பணம்) தந்த மகிழ்ச்சியை விட இன்றைய பல ஆயிரம் சம்பளம் குறைவான மகிழ்ச்சியையே தருகிறதே, ஏன்?

தினத்தந்தி பேப்பரின் உதவியுடன் பஜ்ஜியில் உள்ள எண்ணெயை பிழிந்தெடுத்து பின்னர் அதனுடன் கலந்து அடிக்கும் ஒரு நாயர் கடை டீ தரும் திருப்தியை இன்றைய பிஸ்ஸா, பர்ஜர் போன்ற மேற்கத்திய உணவுகள் தருவதில்லையே?

இன்னும் கொஞ்சம் யோசனை செய்கிறேன்.

ஐம்பது கிலோமீட்டருக்கு மேல் தொடர்ந்து ஓட வேண்டுமென்றால், மெக்கானிக்கின் உதவி தேவைப் படுகிற ஒரு ஓட்டை பைக்கில் ஊர் சுற்றிய அளவுக்கு இன்று காரில் பயணம் செய்ய முடிய வில்லையே?

ஒரு ரயிலில் முன்பதிவு செய்யப் படாத பொது பெட்டியில் பொதுஜனத்துடன் பல நூறு கி.மீ. நின்று கொண்டே செய்த பயணத்தை விட இன்றைய வானூர்தி பயணமோ அல்லது குளிர்சாதனப் பெட்டி பயணமோ அதிக மகிழ்ச்சி தருவதில்லையே? அன்று உலகையே சுற்றி பார்த்து விட வேண்டுமென்ற வேட்கை இருக்க இன்றோ எந்த ஊருக்கு போவது என்ற ஒரு ஆயாச உணர்வு தோன்றுகிறதே, ஏன் இப்படி?

வாழ்க்கை மாறி விட்டதா? அல்லது நாம் மாறி விட்டோமோ?

முதன் முதலாக, மொபைல் போன் அதுவும் ப்ரீ பைய்டு கட்டணத்தில் யார் யாருகெல்லாமோ போன் செய்து நம்பர் கொடுத்தோமே? இன்று அலுவலக உபயத்தில் அன்லிமிட்டட் கால் செய்ய வசதியிருந்தும், எத்தனை பேர் நம்பர் நமக்கு ஞாபகமிருக்கிறது?

ஒரு சிறிய நண்பர் வட்டத்திற்குள்ளே கும்மாளமடித்த நாம், இப்போது அலுவலகம், தொழில் ரீதியான நண்பர்கள் என ஒரு ஒரு பெரிய கூட்டத்தின் நடுவே இருந்தாலும் அன்னியமாக உணர்கிறோமே, ஏன்?

ஒரு சிறிய வானத்திற்குள் பருந்தாக வட்டமிட்ட நாம், இன்று நமது வானம் விரிவடைந்து விட அதன் நடுவே ஒரு சின்னஞ்சிறு குருவியாக உணர்கிறோமோ? நம்மை சுற்றியுள்ள வானம் வளர்ந்த அளவிற்கு நமது எண்ணங்கள் விரிவடைய வில்லையோ?

நிதானமாக சிந்திப்போம்.

மீண்டும் சந்திப்போம்.

22 comments:

கபீஷ் said...

//அன்றைய ஒரு நூறு ரூபாய் (கல்லூரியில் திருப்பித் தந்த டெபாசிட் பணம்) தந்த மகிழ்ச்சியை விட இன்றைய பல ஆயிரம் சம்பளம் குறைவான மகிழ்ச்சியையே தருகிறதே, ஏன்?
//

அளவுக்கு அதிகமாகவும், காத்திருத்தல் இல்லாமலும் கிடைப்பதாலும்!!!

வாழ்க்கை ரொம்ப அழகானது!! உங்க பதிவுக்கு பொருத்தமில்லாத கருத்து?

ஷங்கர் Shankar said...

நன்றாக அலசியுள்ளீர்கள் !
வாழ்கையில் எவ்வளவு காசு பணம் சம்பாதித்தாலும் அந்த பழைய (பழகிய) நண்பர்களையும், தெரிந்தவர்களையும் மறந்துவிடக்கூடாது.


குறிப்பு:நான் கூட தலைப்பை பார்த்தவுடன் நம்ம ஐ.டி துறையை பற்றிய பதிவோ என்று நினைத்தேன்.

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

கருத்துரைக்கு நன்றி

//அளவுக்கு அதிகமாகவும், காத்திருத்தல் இல்லாமலும் கிடைப்பதாலும்!!!//

நீங்கள் சொல்வது சரிதான். தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் குறைவாக உள்ள நாட்களில் கிடைப்பவை மிகுந்த சந்தோசத்தை கொடுக்கின்றன.

//வாழ்க்கை ரொம்ப அழகானது!! உங்க பதிவுக்கு பொருத்தமில்லாத கருத்து?//

நிச்சயமாக. ஆனால் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் வாழ்க்கை ஒரே மாதிரி சீராக செல்வதில்லை. ஒரு வேளை, அப்படி இருப்பதால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக உள்ளதோ என்னவோ?

உங்கள் கருத்து இந்த பதிவுக்கு மிகவும் பொருத்தமானதே. எனவே சந்தேகம் தேவையில்லை.

Maximum India said...

அன்புள்ள ஷங்கர்

கருத்துரைக்கு நன்றி

//வாழ்கையில் எவ்வளவு காசு பணம் சம்பாதித்தாலும் அந்த பழைய (பழகிய) நண்பர்களையும், தெரிந்தவர்களையும் மறந்துவிடக்கூடாது. //

ஒரு முறை எம்.ஜி.ஆர். சொன்னது. "உங்களது உயர்வில் நீங்களே அடையும் சந்தோசத்தை விட நீங்கள் அடைந்த உயர்வில் மகிழ்ச்சிக் கொள்ளக் கூடிய நண்பர்களும் உறவினர்களும் இருந்தால் உருவாக கூடிய சந்தோசமே பெரியது".

இந்த உலகில் நாம் மேற்கொள்ளும் எல்லா பயணங்களும் கடைசியில் நம் வீட்டில்தான் முடிவடைகின்றன. முடிவடைய வேண்டும். நம் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும்.

//குறிப்பு:நான் கூட தலைப்பை பார்த்தவுடன் நம்ம ஐ.டி துறையை பற்றிய பதிவோ என்று நினைத்தேன்.//

ஐ. டி துறைக்கு மட்டுமல்ல இன்னும் பல விஷயங்களுக்கு இந்த தலைப்பு பொருந்தும்.

உதாரணம்: அமெரிக்கா, உலக வங்கிகள், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, ரோஜர் பெடெரெர் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

கபீஷ் said...

ஒரு புல் தானாகவே வளர்கிறது - ஒஷோ
இதுவரை படிக்காவிட்டால், முடிந்தால் படியுங்கள். நிறைய பேர் week-end ஐ எதிர்பார்த்து weekdays ஐ கடனே என்று கடத்தும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். அடிக்கடி பழைய நண்பர்களை தொலைபேசியில் அழைத்து பேசுவது புத்துணர்ச்சியை கொடுக்கும், ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக் கொள்வது , இன்னும் நிறைய ............

Maximum India said...

ஒரு புல் தானாகவே வளர்கிறது - ஒஷோ
இதுவரை படிக்காவிட்டால், முடிந்தால் படியுங்கள். நிறைய பேர் week-end ஐ எதிர்பார்த்து weekdays ஐ கடனே என்று கடத்தும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். அடிக்கடி பழைய நண்பர்களை தொலைபேசியில் அழைத்து பேசுவது புத்துணர்ச்சியை கொடுக்கும், ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக் கொள்வது , இன்னும் நிறைய ............

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

//ஒரு புல் தானாகவே வளர்கிறது - ஒஷோ இதுவரை படிக்காவிட்டால், முடிந்தால் படியுங்கள்.//

ஓஷோ படிக்கிறேனோ இல்லையோ "கபீஷோ" நிறைய படிக்கிறேன்.:)

உங்கள் பின்னூட்டங்கள் புத்துணர்ச்சியை அளிக்கின்றன. நன்றி

மங்களூர் சிவா said...

ரீஜண்ட்டா கண்ணாலம் ஆச்சோ!? ஏன்னா எனக்கும் இப்பிடித்தான் :(

மங்களூர் சிவா said...

ரீஜண்ட்டா கண்ணாலம் ஆச்சோ!? ஏன்னா எனக்கும் இப்பிடித்தான் :(

Maximum India said...

அன்புள்ள சிவா

பின்னூட்டத்திற்கு நன்றி

//ரீஜண்ட்டா கண்ணாலம் ஆச்சோ!? ஏன்னா எனக்கும் இப்பிடித்தான் :(//

இல்ல. சில வருடங்கள் ஆகி உள்ளன. அதனால் பழகி விட்டது உங்களுக்கும் கூட பழகி விடும். :)

நன்றி.

Sam said...

நண்பரே,

மகிழ்ச்சி என்பது, கடந்தகால மகிழ்ச்சியான நிகழ்வுகளை நினைப்பதும், நிகழ்காலத்தின் நிகழ்வுகளை உற்சாகத்துடன் ஏற்பதும்தான்.

சத்தியமூர்த்தி
http://www.sathyamurthy.com/2009/02/08/yes-i-screwed-up/

வால்பையன் said...

நிறைய கேல்விகள் கேட்டிருக்கிறீர்கள்!

யோசித்து பார்த்தால் இது வரை இதைப்பற்றி நான் யோசிக்கவே இல்லை என்றே தோன்றுகிறது.

குடும்ப பொறுப்பு காரணமாக இருக்குமோ!

Maximum India said...

அன்புள்ள சத்யமுர்த்தி

//மகிழ்ச்சி என்பது, கடந்தகால மகிழ்ச்சியான நிகழ்வுகளை நினைப்பதும், நிகழ்காலத்தின் நிகழ்வுகளை உற்சாகத்துடன் ஏற்பதும்தான்.//

மிகச் சரியாக சொன்னீர்கள். நிகழ்காலத்தின் நிகழ்வுகளை உற்சாகத்துடன் ஏற்க எதையும் புதிதாக பார்க்கும் ஒரு குழந்தையின் மனம் வேண்டும் என்று நினைக்கிறேன்.

நன்றி.

malar said...

பழசை அப்படியே நினயுட்டியது ...........

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

//நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள்!//

இன்னும் கூட நிறைய இருக்கிறது. இன்னொரு தரம் விரிவாக விவாதிக்கலாம். :)

//யோசித்து பார்த்தால் இது வரை இதைப்பற்றி நான் யோசிக்கவே இல்லை என்றே தோன்றுகிறது.//

என்னோட சேந்துட்டீங்கள்ள! நிறைய யோசிப்பீங்க :)

//குடும்ப பொறுப்பு காரணமாக இருக்குமோ!//

குடும்ப பொறுப்பு மட்டுமல்ல, ஒரு வளர்ந்த மனிதன் (அலுவலகம், சமூகம் என்று பல வகைகளில்) என்ற பொறுப்பு பாரமாக மனதை அழுத்துகிறது. இந்த அழுத்தத்தால், இயல்பான சந்தோசங்களை அனுபவிப்பது சற்று கடினமான காரியமாகவே உள்ளது.

Maximum India said...

அன்புள்ள மலர்

பின்னூட்டத்திற்கு நன்றி

Advocate Jayarajan said...

அய்யா, நேற்று இருந்த வாழ்கையும், அதனால் பெற்ற சந்தோஷமும் இன்று இருப்பதில்லை. இது ஓர் தொடர் கதை.

இந்த கணம் சந்தோசமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களை சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் கஷ்டப்படுத்த கூடாது. இந்த கொள்கையை நான் தற்போது மிக கண்டிப்பாக கடைபிடித்து வருகின்றேன்.
எனினும் கடந்த கால மகிழ்ச்சி, நிகழ் கால அயாசத்திற்கு நிழல்.

பழயதை நினைக்க வைத்து இன்பமூட்டிய நல்ல பதிவு.

Maximum India said...

அன்புள்ள ஐயா!

பின்னூட்டத்திற்கு நன்றி.

//அய்யா, நேற்று இருந்த வாழ்கையும், அதனால் பெற்ற சந்தோஷமும் இன்று இருப்பதில்லை. இது ஓர் தொடர் கதை. //

உண்மைதான். இன்றைய தேதியின் அருமை வருங்காலத்திலேயே உணர முடியும்.

//இந்த கணம் சந்தோசமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களை சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் கஷ்டப்படுத்த கூடாது. இந்த கொள்கையை நான் தற்போது மிக கண்டிப்பாக கடைபிடித்து வருகின்றேன். //

கண்டிப்பாக. உங்களுடையது நல்ல கொள்கை. வாழ்த்துக்கள்.

//எனினும் கடந்த கால மகிழ்ச்சி, நிகழ் கால அயாசத்திற்கு நிழல். //

நிஜம்தான். ஆனால், அன்றாட சமூக பொருளாதார போராட்டங்களுக்கு மத்தியில் பழயதை நினைக்க அவகாசம் குறைவாகவே உள்ளது.

//பழயதை நினைக்க வைத்து இன்பமூட்டிய நல்ல பதிவு.//

நன்றி ஐயா.

கபீஷ் said...

MI,
IT's to make you refresh more.

//உங்கள் பின்னூட்டங்கள் புத்துணர்ச்சியை அளிக்கின்றன.//

To be honest most of the time I'm happy whatever the situation may be. It became possible by practice. :-) My life partner sometimes feels as you mentioned in the post. As i never felt so i couldn't comment properly. There was one good example in that book 'புல் தானாகவே வளர்கிறது ' Being unable to express as it is i told you to read that book if you have. I really hate giving suggestions like this, as it seems over smart. (And i dont like to receive the same :-)
Please do bear with that.

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

//To be honest most of the time I'm happy whatever the situation may be. It became possible by practice. :-)//

நல்ல பழக்கம். நானும் கடைப் பிடிக்க முயற்சிக்கிறேன்.

//There was one good example in that book 'புல் தானாகவே வளர்கிறது ' Being unable to express as it is i told you to read that book if you have.//

என்னிடம் சில ஓஷோ புத்தகங்கள் உண்டு. ஆனால் இது இல்லை. வாங்கி படிக்க முயற்சி செய்வேன்.

//I really hate giving suggestions like this, as it seems over smart. (And i dont like to receive the same :-)
Please do bear with that.//

இதில் நான் ஒத்துப் போக மாட்டேன். நமக்கு தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது பயனளிக்கக் கூடிய ஒன்று என்பது என் கருத்து. உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள். எனக்கு தேவையானதை நான் எடுத்துக் கொள்வேன்.

நன்றி. :)

அசோசியேட் said...

ரொம்ப சரியா சொல்லிட்டிங்க ! வந்த பாதையை மறக்காதவங்களுக்கு புதிய வாழ்க்கை சூழல் அவ்வளவு சீக்கிரம் இணைந்து போகாது என்பதுதான் என்னோட கருத்து.!!

Maximum India said...

அன்புள்ள அசோசியேட்

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

//ரொம்ப சரியா சொல்லிட்டிங்க ! வந்த பாதையை மறக்காதவங்களுக்கு புதிய வாழ்க்கை சூழல் அவ்வளவு சீக்கிரம் இணைந்து போகாது என்பதுதான் என்னோட கருத்து.!!//

உண்மைதான். ஆனால், புதிய வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க பழைய வாழ்கை தடையாக இருக்கக் கூடாது என்பது நான் கற்றுக் கொண்ட பாடம்.

நன்றி.

Blog Widget by LinkWithin