Monday, February 9, 2009

சில்லறை வணிக நிறுவனங்கள் இப்போது சிக்கலில்?


அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவிலும் பல சங்கிலித் தொடர் சில்லறை வணிக நிறுவனங்கள் உருவாகின. ரிலையன்ஸ், பாரதி, டாட்டா என பெரிய தொழில் குழுமங்கள் கூட இநத தொழிலில் ஆர்வம் காட்டினாலும், பிக் பஜார் (பேண்டலூன் குழுமம்), ஸ்பென்செர் (ஆர்.பி.ஜி குழுமம்) போன்ற சில வணிக நிறுவனங்களே அவற்றில் குறிப்பிடத் தக்க வெற்றியைப் பெற்றவை. கடந்த சில வருடங்களில் இந்தியாவில் ஏற்பட்ட அசுர பொருளாதார வளர்ச்சியின் போதே பெருமளவு லாபம் சம்பாதிக்க முடியாத இநத துறையைச் சார்ந்த நிறுவனங்கள் இப்போதைய தளர்ச்சிக் காலத்தில் தடுமாறி வருகின்றன. இந்த சிக்கலான நிலைக்கு காரணங்கள் யாவை என்று இப்போது பார்ப்போம்.

முதல் காரணம், இப்போது நேரிட்டுள்ள பொருளாதார தளர்ச்சியின் காரணமாக நுகர்வோரின் வாங்கும் திறன் பெருமளவு குறைந்து போனது. அத்தியாவசியப் பொருட்களின் விலையை (தள்ளுபடி என்ற பெயரில்) சற்று குறைத்து, பல அத்தியாவசியமற்ற கவர்ச்சிப் பொருட்களை (பொருந்தாத விலையில்) மக்களின் தலையில் கட்டும் சில்லறை வணிக நிறுவனங்களின் வியாபாரத் தந்திரம் இன்றைய சூழ்நிலையில் பெருமளவில் பலிக்காமல் போகிறது. காரணம், பொருளாதார வளர்ச்சிக் காலத்தில் கண்ணில் படுகின்றவையையெல்லாம் வாங்கும் மக்கள், தளர்ச்சிக் காலத்தில், அத்தியாவசமற்ற பொருட்களை வாங்க சற்று தயங்குகிறார்கள். எனவே இநத நிறுவனங்களின் லாப விகிதம் பெருமளவு குறைந்து போய் விட்டது.

ரியல் எஸ்டேட் விலைகள் (வாடகைகள்) இன்னமும் கூட பெருமளவில் குறையாத நிலையில் நகரின் மையப் பகுதியில் பெரிய இடப் பரப்பில் (வாகனம் நிறுத்தும் வசதியுடன்) வணிக தளங்களை அமைக்க வேண்டியிருப்பது அதிக "முதல்" தேவையை உருவாக்கி பொருளாதார ரீதியாக இநத நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. மேலும், முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப் பட்ட அரங்குகள், அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள், சேமிப்பு கிடங்கு என இவர்களுடைய அமைப்பு ரீதியான செலவுக் கணக்கு கூடிய அளவுக்கு வருமானம் பெருக வில்லை.

சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் நுழைந்த போது, சிறு வணிகர்கள் (நமது தெருவோர அண்ணாச்சி கடைகள்) பெருமளவு பயந்தனர். இநத நிறுவனங்களுக்கு எதிராக சில போராட்டங்கள் கூட நடத்தப் பட்டன. ஆனால், உண்மையில் இநத பெரிய நிறுவனங்களால், சிறு வணிகர்களுக்கு எதிராக (சிறிய நகரங்களில் மட்டுமல்ல, பெரிய நகரங்களில் கூட) பெரிய நிறுவனங்களால் போட்டி போட இயல வில்லை என்றுதான் கூற வேண்டும். சிறு வணிகர்களின் தாக்குப் பிடிக்கும் திறனுக்கு முக்கிய காரணங்களில் சில கீழே.

"நுகர்வோருக்கு அருகாமையிலேயே இருத்தல், சிறிய கடன் வசதி அளித்தல், சிறிய அளவில் பொருட்கள் கிடைப்பது, அமைப்பு ரீதியான செலவினங்கள் குறைவு."

இவ்வாறு சிறு வணிகர்கள் கடும் போட்டி அளிப்பதால், பெரிய சில்லறை நிறுவனங்களால் எதிர்பார்த்த அளவுக்கு தனி ஆதிக்கம் செலுத்தவோ, பெரிய அளவுக்கு வாடிக்கையாளர்களை பெறவோ முடிய வில்லை.

மேலும், தமது சங்கிலி தொடர் கிளைகளை அதி வேகமாக விரிவு படுத்திய இநத வணிக நிறுவனங்கள் இப்போது கடும் நிதிச் சிக்கலில் சிக்கி கொண்டன. வட்டி வீத உயர்வு மற்றும் வீழ்ச்சியடைந்த பங்கு சந்தைகள், புதிய முதல் திரட்டுவதற்கு இந்த நிறுவனங்களுக்கு பெரும் தடையாக உள்ளன. பல தொடர் சங்கிலி சில்லறை நிறுவனங்கள் கடந்த காலாண்டில் (அதுவும் பண்டிகை காலத்தில்)பெரும் இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத் தக்கது. பெரிய அளவில் தள்ளுபடி என்று செய்யப் பட்ட வியாபார தந்திரங்கள் பெருமளவிற்கு எடுபடவில்லை

ஆக மொத்தத்தில், கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள இநத நிறுவனங்கள், தமது கிளைகளை மூடுவது, ஆட்குறைப்பு, வைத்திருக்கும் பொருட்களின் எண்ணிக்கை குறைப்பு, குறிப்பிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு என போர்க்கால அடிப்படையில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆனால் இநத நடவடிக்கைகள் எந்த அளவுக்கு இநத நிறுவனங்களை காப்பாற்றும் என்று இப்போதைக்கு சொல்வது கடினம். இதே பொருளாதார தளர்ச்சி நிலை நீடிக்கும் பட்சத்தில், இன்னும் கூட பல கிளைகள் ஏன் சில பெரிய நிறுவனங்கள் கூட மூடப் படுவதை நாம் பார்க்க முடியும்.

நன்றி.

6 comments:

வால்பையன் said...

நந்து அண்ணாவிடம் குறைந்தவிலையில் ஒரு குளிர்சாதன பெட்டி வேணும்னு சொல்லியிருந்தேன்.

கொஞ்சம் பொறு இன்னும் கொஞ்ச நாள்ல நிறை செகண்ட் கேன்ட் அயிட்டங்கள் மார்கெட்டுக்கு வரும், வேண்டியதை அள்ளி கொள்ளலாம் என்றார்.

:)

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

//கொஞ்சம் பொறு இன்னும் கொஞ்ச நாள்ல நிறை செகண்ட் கேன்ட் அயிட்டங்கள் மார்கெட்டுக்கு வரும், வேண்டியதை அள்ளி கொள்ளலாம் என்றார்.//

குளிர்சாதன பேட்டிகள் மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்கள் தள்ளுபடியில் மார்கெட்டுக்கு வரப் போகின்றன. பொறுமையாக இருங்கள். :)

தமிழ்நெஞ்சம் said...

சுபிக்‌ஷா மூடிட்டாங்களாம்லோ அப்படியா?

Maximum India said...

அன்புள்ள தமிழ்நெஞ்சம்

பின்னூட்டத்திற்கு நன்றி.

சுபிக்ஷா இப்போதைக்கு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க மற்றும் புதிய பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளது. அதே சமயம் இந்த நிலை தற்காலிகமானதே என்றும் கடன் மற்றும் புதிய மூலதனம் பெற முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளார். விஷால் ரீடைல் எனும் நிறுவனம் கூட இதே போல கடும் நெருக்கடியில் உள்ளதாக தெரிகிறது.

நன்றி.

Anonymous said...

எப்படியோ, சில்லறை வணிக நிறுவனங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் சரிதான்...

Maximum India said...

அன்புள்ள நரேஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி

//எப்படியோ, சில்லறை வணிக நிறுவனங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் சரிதான்...//

பொதுவாகவே இப்போது அனைத்து சில்லறை வணிக நிறுவனங்களுக்கும் போதாத காலம்தான்.

நன்றி

Blog Widget by LinkWithin