உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு நம் பாரத நாடு. வெறுமனே வாக்காளர்களின் எண்ணிக்கையை வைத்து மட்டும் நம் நாடு இவ்வாறு சொல்லப் படுவதில்லை. ஜனநாயகத்தின் உச்சகட்டமான நாடாளுமன்ற தேர்தலில் நின்று வென்று நம்மை ஆள்வதற்கு அனைவருக்கும் (அனைவருக்குமென்றால் வேறுபாடில்லாமல் அனைவருக்கும்) வாய்ப்பு கொடுத்ததனாலேயே இந்த பெருமை நமக்கு கிடைத்துள்ளது. பல நாடுகளில் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப் பட கடும் நிபந்தனைகள் இருக்கும் போது நம் புண்ணிய தேசத்திலேயோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் இதர சமூக விரோத குற்றம் சாட்டப்பட்ட ரொம்ப நல்லவங்க (புதிய யுக சமூக சீர்திருத்தவாதிகள் என்றும் கூட சொல்லலாம்) பலரையும் நாடாளுமன்றம் அனுப்பி வைக்க நாம் இது வரை சந்தோசமாக ஓட்டு போட்டிருக்கிறோம். இது வரைக்கும் நமக்கு கிடைக்காத ஒரு பொன்னான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. பயங்கரவாதத்திற்கு துணை போனவர் என்ற தேச விரோத குற்றம் அதுவும் தடாவில் குற்றம் சாட்டப் பட்ட ஒருவருக்கு ஓட்டு போட்டு நமது ஜனநாயகத்தின் பெருமையை மீண்டுமொருமுறை நிலை நாட்ட நமக்கு புதியதொரு வாய்ப்பு தருவதற்காகவே அப்பாவியான (அப்பாவின்னா படு அப்பாவி - விளக்கமே தேவையில்ல) தேச தியாகி ஒருவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முன் வந்துள்ளார்.
அவர் அப்பாவி என்ற வார்த்தையை பல வருடங்களாகவே ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்தவர். கல்லூரியில் படிக்கிற வயசுல கூட போதைப் பொருளை ஏதோ சாக்லேட்டுன்னு மட்டுமே நினச்சு சாப்பிட்ட ஒரு குழந்தைத் தனமான மனசு அவருக்கு இருக்குதுங்க. அப்புறம் சினிமாவில் துப்பாக்கி எல்லாம் எடுத்து நிழல் பயாங்கரவாதிகளை (உண்மையான அப்பாவி வில்லன் நடிகர்கள்) குடுக்கிற கூலிக்கு வஞ்சனையில்லாமல் (டூப் நடிகர்களின் உதவியுடன்) தேசபக்தியுடன் புரட்டி எடுத்தாலும் நிஜ வாழ்வில் உண்மையான பயங்கரவாதிகளுடன் ரொம்பவே அப்பாவித்தனமாக நட்பு வைத்திருந்து அவர்கள் கொடுத்த ஆயுதங்களை விளையாட்டு பொம்மைகள் என்று எண்ணி ஒளித்து வைத்திருந்து விளையாடிய ஒரு பச்சை மண் அவர். அந்த சின்னப் பிள்ளைத் தனமான மனதை சரியாக கண்டுபிடித்த நமது நீதிக் காவலர்கள் அவர தேச விரோத தண்டனையில் (தடாவில்) இருந்து விடுவிச்சுட்டு அவருக்கு இந்த விவகாரத்தில் ஆயுதங்களை ஒளித்து வைக்க உதவி செய்த அவரது நண்பர (எல்லாருக்கும் சின்னப் பிள்ளைத் தனமான மனசுன்னா நாடு என்ன ஆகிறது) மட்டும் தடாருன்னு உள்ள போட்டுட்டாங்க.
சானா தானாவோட குடும்பம் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்த ஒரு பழம் பெரும் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தாலும் கூட சானா தானா விவகாரத்துல அவர்கள் மதுரை மண்ணையும் மிஞ்சும் பாசக் கார பயலுக. அண்ணனுக்கு பெயில் வாங்கித் தர கடுமையாக போராடிய அவரோடைய தங்கையோட போட்டி போட்டா பாசமலர் சாவித்திரியே தோத்துப் போயிடுவாங்க. ஜெயில்ல இருந்து பெயில்ல வெளி வந்த உடனேயே மூனாவது முறையா கண்ணாலம் முடிச்சிக்கிட்டு, இவர பெயில்ல வெளிய கொண்டு வர பிரசவ தேதியை முன் வைத்து பாசப் பறவையா போராடிய தங்கைய பார்த்து, கல்யாணத்திற்கு அப்புறம் அப்பா பேர பின்னாடி வச்சுக்கக் கூடாதுன்னு கண்டிஷனா சொல்லி ஆம்பளைங்க கௌரதைய காபாத்தினவரு நம்ம தன்மான சிங்கம்.
அவர் ஏற்கனவே சினிமா துறை மூலம் மக்களுக்கு பல நன்மைகளைச் செய்தவர் என்பதாலும், கரடு முரடா இருக்கற இந்திய அரசியலுக்கு இவர மாதிரி ஒரு அப்பாவி தேவை என்பதாலும், சாதி மத ஒற்றுமையை மட்டுமே முன் வைத்து அரசியல் செய்யும் ஒரு சமூக நீதி கட்சி தற்போது அவரை லக்கினோ தேர்தலில் நிறுத்த முடிவு செய்துள்ளது. பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்த வழக்கில் தண்டனை பெற்ற (எதுக்காவது ஒரு விஷயத்திற்காகவது தண்டனை வாங்க வில்லையென்றால் நீதி தேவதை கோபித்துக் கொள்ளும் அல்லவா?) அண்ணார் தேர்தலில் போட்டியிட ஏதேனும் சட்ட சிக்கல் ஏற்பட்டால் அவரது மூன்றாவது மனைவியான நமது அண்ணியாரை தேர்தலில் நிறுத்தி சமூக நீதியை நிலை நிறுத்த சினிமாத் துறையினரின் மீது அளவிலாத தனிப் பாசம் வைத்திருக்கும் நம் அன்பு அண்ணன் ஆனா சீனா தெரிவித்துள்ளார்.
விஷயம் இப்படி ஸ்மூத்தாப் போயிட்டு இருக்கும் போது, முன்னாள் சட்ட அமைச்சரும், மிகப் பிரபலமான வக்கீலும், நமது சானா தானாவின் தந்தையின் நெருங்கிய நண்பரும், சானா தானாவிற்கு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் பெயில் பெற்று தந்தவருமான ரானா ஜானா மானா தற்போது சில திடுக்கிடும் (இந்த திடுக்கிடல் இந்திய ஜனநாயகத்தில் இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள சில இதய நோயாளிகளுக்கு மட்டும்) தகவல்களைத் தந்துள்ளார்.
அதாவது, சானா தானாவின் உண்மையான பக்கம் குறித்து தனக்கு அவரது வக்கீல் என்ற முறையில் நன்கு தெரியும் (அப்ப ஏன் அவருக்காக வாதாடுநீங்க?) என்றும் அவருக்கு விடுதலை கிடைத்திருப்பது, அரசு தரப்பில் சரியான ஆதாரத்தை முன் வைக்காததே (எப்பதான் வச்சுருக்காங்க? ) என்றும் கூறியுள்ளார். மேலும், தனக்கு தெரிந்த உண்மைகளை வெளியிடாதது தனக்கும் சானா தானாவின் தந்தைக்கும் உள்ள நட்பினாலும் (அப்ப நாட்ட விட நட்புதான் பெரிசு இல்ல?) வக்கீல் தொழில் தர்மத்தினாலும் (ஒரு வேளை உங்க கட்சி சார்பா சானா தானா போட்டியிட்டு இருந்தா, கட்சி தர்மம் அடிப்படையில இதக் கூட தெரிவிச்சு இருக்க மாட்டீங்களோ?) அந்த உண்மைகளை வெளியிட விரும்ப வில்லை என்றும் தெரிவித்துள்ளார். இவரே சானா தானாவிற்கு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் பெயில் வாங்கி கொடுத்திருந்தாலும் சானா தானா பாராளுமன்றம் போக ரானா ஜானா விரும்ப வில்லையாம். நம்ம ஆறடி உசர அப்பாவி அண்ணாத்தே மேலே இப்படி சேத்த வாரி இரச்சிருந்தாலும் இவருக்கு தெரியாமலேயே ஒரு புகழ்ச்சியையும் விட்டு சென்றுள்ளார். அதாவது, நம் சானா தானா, நீதி மன்றத்தில் எப்படி கேட்டாலும், இவருக்கு ஆயுதங்களை கொடுத்த பயங்கரவாதிகளின் பெயர்களை மட்டும் வெளியிடவே இல்லையாம். பின்னே அவரென்ன எட்டப்பன் பரம்பரையில வந்தவரா?
யாரோ என்னவோ சொல்லிக்கிட்டு போகட்டும். இந்திய மக்கள் ஒரு புதிய சரித்திரத்தை ஏற்படுத்த அருமையான வாய்ப்பு இது. என்னவோ ஒபாமாவ தேர்ந்தெடுத்துப் புட்டு, பல நூற்றாண்டுகள் பின் தங்கியிருந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுத்து சாதன பண்ணிட்டோம்னு அமெரிக்காகாரங்க பெரும அடுச்சுக்கறாங்க. இதிலேன்னங்க பெரும வேண்டிக் கிடக்கு? சிறந்த பொருளாதார அறிவு, வாதத் திறமை, ஒழுக்கமான சீரிய வாழ்வு கொண்ட ஒருவரை எந்த இனத்தவராக இருந்தாலும் எளிதாக தேர்ந்தெடுக்க முடியும். ஆனால், போத மருந்துக்கும் சாக்கலேட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு பிஞ்சு மனச, பயங்கரவாதத்திற்கும் நட்புக்கும் வேறுபாடு பாராட்டாத ஒரு சின்ன பிள்ளைய , உண்மை துப்பாக்கியையும் ஒளிச்சு விளையாடும் ஒரு பச்ச மன்ன தேர்தலில் நிறுத்தி அவர ஜெயிக்கவும் வச்சாக்க நம்ம இந்திய ஜனநாயகத்தின் புகழ் எங்கயோ போயிடுங்க. அதனாலே, நம்ம ஜனநாயகத்த வாழ வளர வைக்க எல்லோரும் சானா தானாவுக்கு வோட்டுப் போடுங்கோ.
பின் குறிப்பு: பின்னாடி யாரோ மும்பையில குண்டு வெடிச்சு பலியானவங்களுக்கு என்ன நீதின்னு முனகற மாதிரி இருக்கு. அட அவங்கள யாருங்க குண்டு வெடிக்கும் போது பக்கத்துல நிக்க சொன்னது?
இது பத்தி இன்னும் தகவல் வேண்டுவோர் பார்க்கவும்.
Comments
பின்னூட்டத்திற்கு நன்றி
//Its our birth right to involve our self in pooling and put a vote for the righgt candidate....But, I think this post is for comedy only...//
இந்த பதிவு நகைச்சுவைக்காக மட்டுமல்ல.நமது ஜனநாயகம் எங்கே போய் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டவே இந்த பதிவு. மிக கடுமையான தேச விரோத குற்றச் சாட்டிலிருந்து ஒருவர் சரிவர மீள்வதற்கு முன்னரே அவரை அரியணையில் ஏற்றத் துடிக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். அவருக்கு தேர்தலில் நிற்க சட்ட ரீதியாக தடை ஏற்பட்டால், அவருடைய மனைவியை நிறுத்துவோம் என்று மக்களை கிள்ளுக் கீரைகளாக நினைக்கும் ஒரு சிலரின் எகத்தாளத்திற்கு முடிவு கட்ட வேண்டும். செய்வார்களா நமது வாக்காளர்கள்?
பின்னூட்டத்திற்கு நன்றி.
//அய்யா அவருக்கு நம்ம காந்தி தாத்தாவே கண்ணுக்கு தெரிஞ்சார் இல்ல? பின்ன அவருக்கு உண்மைய தவிர வேற ஒண்ணுமே தெரியாது. ரொம்ப நல்லவர்னு சொல்லிகிட்டாங்க.//
நிழல் திரையில் அஹிம்சா மூர்த்தி காந்தியுடனும் நிஜ வாழ்வில் பயங்கரவாதி அபு சலேமுடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த "ரொம்ப ரொம்ப நல்லவரு" அவரு.
இதனாலதான் அடிக்கடி பல பேருக்கு இதய வலி வ்ருதோ !
பின்னூட்டத்திற்கு நன்றி
//இதனாலதான் அடிக்கடி பல பேருக்கு இதய வலி வ்ருதோ !//
உண்மைதான். உலகிலேயே அதிக இதய நோயாளிகள் இந்தியாவில்தான் என்பதும் கூட கவனிக்கத் தக்கது. இதிலிருந்தே இந்திய ஜனநாயகத்தின் பெருமை தெரிகிறதல்லவா?
//சர்வதிகாரம் இரு முனைகள் கொண்ட இரும்பு கத்தி என்றால் ஜனநாயகம் எல்லோராலும் வளைக்கப்பட கூடிய ரப்பர் கத்தி .//
அருமையான உதாரணம்.
//மக்களுக்கு ஜனநாயகத்தின் உண்மையான பரிமாணம் முழுதாக தெரியும் வரை இது நடக்கும்.//
கண்டிப்பாக
//யாராவது மும்பை சூட்டிங் புகழ் கசப் க்கு எம்பி சீட் வழங்க முன் வந்தாலும் வரலாம். //
சொல்ல முடியாது. சரியான ஆதாரங்கள் என்று சொல்லி அவர் விடுதலை செய்யப் படலாம். மாலேகான் குண்டு வெடிப்புக்கும் இவருக்கும் தொடர்பு உண்டாக்கி இவரை தியாகி ஆக்கலாம். அப்புறம் அண்ணன் ஆனா சீனா போன்றவர்கள் இவரை எம்.பி தேர்தலில் நிறுத்தலாம். நம் மக்கள் சாதி மத இன மற்றும் கருணை அடிப்படையில் ஓட்டும் கூட போடலாம். ம்ம் .. என்னமோ ஆகட்டும். சீக்கிரமா ஆபீஸ் கிளம்பனும்.
:)
நன்றி :)