The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Thursday, September 3, 2009
கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!
மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன.
ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன்.
இப்போது புனைவு !
ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு மத்திய பஞ்சாயத்திடம் ஒப்படைத்து விட்டு விலகி விட்டாராம்.
முதல் பஞ்சாயத்து தலைவர் பெயர் "பேரு" வாம். அவருக்கு பக்கத்து ஊர்களான ருஷ்யப்பட்டி, சீனாப்பேட்டை ஆகியவற்றின் மீது தனி ஈடுபாடாம். அந்த ஊர்கள் போல நம்மூரும் முன்னேற வேண்டும். அதற்கு அந்த ஊர்கள் பின்பற்றிய வளர்ச்சிப் பாதையையே நாமும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினாராம். அந்த ஊர்களில் அவர் கண்டது, ஒரு "வலிமையான மத்திய பஞ்சாயத்து" முறையாம். அது மட்டுமல்லாமல், உள்ளூர் கணக்கு வழக்குகளை கவனித்துக் கொள்ள அவர்கள் சொந்த கால்குலேடர்களையே பயன்படுத்தி வந்ததையும் கவனித்தாராம். அதே போல நம்மூரிலும் அனைவரும் சொந்த கால்குலேட்டர் அதுவும் அதிகம் பேர் பயன்படுத்துகிற கால்குலேட்டர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பஞ்சாயத்து கட்டளை போட்டாராம்.
அந்த ஊரில் மொத்தம் நான்கு தெருக்கள் இருந்தனவாம். வடமாசி வீதி, தென்மாட வீதி, மேல் வீதி மற்றும் கீழ் வீதி. இவற்றில் தென்மாட வீதியில் ஒரு பெரிய அறிவாளி இருந்தாராம். அவர் பெயர் ஜாஜாஜியாம். அவரும் கூட முதலில் அனைவரும் கால்குலேட்டர்தான் உபயோகிக்க வேண்டும் என்று சொன்னாராம். அதே சமயம், அவருக்கு ருஷ்யப்பட்டி, சீனாப்பேட்டை ஊர்கள் அவ்வளவாக பிடிக்காதாம். குமேரிக்காபாளையம் போன்ற ஊர்கள் அதிக வளர்ச்சி பெற்றவை மற்றும் பெறப் போகிறவை. எனவே அவற்றை நாம் முன்மாதிரியாக வைத்துக் கொள்வோம் என்றாராம். ஆனால் வலிமையான மத்திய் பஞ்சாயத்து கனவில் இருந்த பேருவுக்கு இதெல்லாம் காதில் விழ வில்லையாம்.
அந்த ஊரில் முன்பு ஆட்சி செய்த துரை ராஜா கம்ப்யூட்டர் பயன்படுத்தி வந்தாராம். . அவர் காலத்திலேயே தென்மாட வீதிக்காரர்கள் நன்கு கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டார்களாம். கம்ப்யுட்டரின் வேகம் கால்குலேடருக்கு இல்லை. மேலும் கம்ப்யுட்டரில் கணக்கு வழக்குகளை எளிதாக பார்த்துக் கொள்ளலாம். உலகின் வாசலான கம்ப்யுட்டர் இருக்கும் போது, லோக்கல் கால்குலேட்டர் எதற்கு என்று தென்மாட வீதியின் வளரும் தலைவரான "சின்னா" கேட்டாராம். அது மட்டுமல்லாமல், கம்ப்யூட்டரில் இன்டர்நெட் வாயிலாக உலக நடப்பையும் நன்கு புரிந்து கொள்ளலாம் என்றும் சொன்னாராம். (உலக நடப்பை அனைவரும் புரிந்து கொண்டால், நம் பருப்பு வேகாது என்று அப்போதைய மத்திய பஞ்சாயத்து தலைவர்கள் நினைத்தார்களோ என்னவோ?)
தென்மாட வீதியின் கடும் எதிர்ப்பின் காரணமாக பேருவின் கனவு முழுமையாக நிறைவேறாமல் போனது என்றாலும், மற்ற மூன்று வீதிகளிலும் கால்குலேடர் உபயோகம் மிக அதிகமாகவே இருந்ததாம்.
மத்திய பஞ்சாயத்து அலுவலக வேலை வாய்ப்புக்களில் கால்குலேட்டர் பயிற்சி பெற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்கப் பட்டதாம். பஞ்சாயத்து அலுவலகத்திலும் அதிகமாக கால்குலேட்டர் மட்டுமே உபயோகப் படுத்தப் பட்டதாம்.
தென்மாட வீதிக்காரர்கள் மற்ற வீதிகளுக்கு சென்றாலோ, மத்திய பஞ்சாயத்தில் வேலைவாய்ப்பு பெற்றாலோ மிகவும் சிரமப் பட்டார்களாம். கம்ப்யூட்டரை விட கால்குலேடர்தான் உசத்தியோ என்ற மயக்கங்கள் கூட அவர்களுக்கு ஏற்பட்டனவாம்.
ஊருக்கு சுதந்திரம் வந்த புதிதில், ஊர் மக்களுக்கான முக்கியமான வேலைவாய்ப்பு மத்திய பஞ்சாயத்து அலுவலகமாகவே இருந்ததாம். எனவே, வேலை வாய்ப்பு குறைந்தற்கு கால்குலேட்டர் அறிவு இல்லாததே காரணம் என்று தென்மாட வீதிக்காரர்களில் சிலர் புலம்பினார்களாம். தென்மாட வீதிக்காரர்களில் ஒரு சில வீட்டுகாரர்கள் கால்குலேடரும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்களாம்.
பொருளாதாரத்திற்கு மத்திய பஞ்சாயத்தையே நம்பி இருந்த காலம் மெல்லமெல்ல மாறியதாம், முதல் தலைவர் பெருவின் கனவு ஊர்களாக இருந்த ருஷ்யப்பட்டி சிதைந்து போனதாம். சீனாப்பேட்டையோ குமேரிக்காபாளையத்திற்கு சேவை செய்துதான் காலத்தை தள்ள வேண்டியிருந்ததாம். அங்கே கம்ப்யூட்டர் படிப்புக்கு சிறப்பு மானியங்கள் கூட கொடுத்தார்களாம்.
இங்கே துரை ராஜாவின் உறவினர்கள், நகரத்தில் இருந்து வந்து பரதம் பட்டியில் தொழில் துவங்கினார்களாம். கம்ப்யூட்டர் அறிவு அதிகம் இருந்த தென்மாட வீதி அவர்களுக்கு ரொம்ப சௌகரியமாக இருந்ததாம்.
வடக்கு வாழ்ந்த கதை போய் தெற்கு வளர ஆரம்பித்ததாம். அது மட்டுமல்லாமல், குமேரிக்காபாளையத்தின் மீது பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டதாம்.
வதவதவென்று கூட்டம் அதிகமாகப் போன வடமாசி வீதியில் கால்குலேட்டர் படிப்பு பயன்பட வில்லையாம். எத்தனைப் பேருக்குத்தான் பஞ்சாயத்தே வேலை கொடுக்க முடியும்?
அங்கேயும் கம்ப்யூட்டர் பள்ளிகள் உருவாக்கப் பட்டனவாம். கம்ப்யூட்டர் படித்தவர்கள் தென்மாட வீதிக்கும் மேல்வீதிக்கும் வந்து நல்ல உத்தியோகம் தேடிக் கொண்டனராம். கால்குலேட்டர் படித்தவர்கள் இந்த இரண்டு வீதியிலும் வீட்டு வேலை செய்தார்களாம். அதிலேயும் ஒரு வேடிக்கை என்னவென்றால், பிழைப்புக்காக வந்த இவர்களில் ஒரு சிலர், வந்த இடத்தில் அனைவரும் கால்குலேடர்தான் பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்களாம்.
இன்னொரு வேடிக்கை என்னவென்றால், கால்குலேட்டர் படித்தால் அதிக வேலைகள் கிடைக்கும் என்று எந்த வீட்டுக்காரர்கள் நினைத்தார்களோ அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சின்ன வேலையை கூட வடமாசி வீதிக் காரர்கள் பிடுங்கிக் கொண்டார்களாம்.
எதிர்த்துக் கேட்டால், ஊர் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கிறார்கள், "வீதி அரசியல்" செய்கிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டினார்களாம்.
இப்படி எல்லாம் ஒருவழியாக போய்க் கொண்டிருக்கும் போது, பபில் கிபில் என்ற ஒரு பஞ்சாயத்து சீனியர் கிளார்க் சொன்னாராம். "ஊரு ஒத்துமையா இருக்கணும்னா எல்லாரும் கால்குலேட்டர் படிக்கணும். இன்றைய தேதியில் கால்குலேட்டர் கம்ப்யூட்டரை விட வேகம், உபயோகம் எல்லாமே கம்மியா இருக்கலாம். ஆனா, கால்குலேடரை கம்ப்யூட்டர் போல மாத்த வேண்டியது நம் எல்லோரின் கடமை"
கால்குலேட்டர் என்னைக்காவது கம்ப்யூட்டர் ஆகுமான்னு கேட்டாக்க ஆகும்னு நம்பணும்னு சொன்னாராம். நம்பறதுதான் ஊர்ப்பற்றுன்னும் சொன்னாராம்.
கம்ப்யூட்டர் படிச்சா நம்ம பொழப்பு நல்லதா மாறும்னு நினைச்ச வடமாசி வீதிகாரங்களுக்கே இது கொஞ்சம் திகைப்பா இருந்துச்சாம்.
இதுல கம்ப்யூட்டர் படிச்சதனாலேயே நல்ல வேலை தேடிக் கொண்ட தென்மாட வீதி கனவான்களும் கம்ப்யூட்டர்ல "எல்லாரும் கம்ப்யூட்டர் படிப்பு கூட கால்குலேட்டர் படிப்பும் படிக்கணும்"னு "பதிவு" போட்டாங்களாம்.
அதுல, மத்த வீதிக்கு போகும் போதெல்லாம், கால்குலேட்டர் தெரியலன்னு எவ்வளவு அவமானப் பட்டோம்னும் விவரிச்சாங்களாம்.
தென்மாட வீதி பெரிசுங்க நம்மள கம்ப்யூட்டர் மட்டும் படிக்க வச்சு வாழ்க்கையையே கெடுத்துட்டாங்கன்னு புலம்புனாங்களாம்.
கால்குலேட்டர் கூட தெரியாம நீங்க ஏன் பரதம் பட்டியில இருக்கீங்கன்னு வடமாசி வீதிகாரங்க கிண்டல் செஞ்சதையும் சொன்னாங்களாம்.
தென்மாட வீதியில் பிறந்து வளர்ந்தவன், பரதம்பட்டியை ஓரளவுக்கு சுற்றிப்பார்த்தவன், இப்போதைக்கு மேலவீதியில் வாழ்ந்து வருபவன் , கம்ப்யூட்டர் படிப்பு அதுவும் இளவயதிலேயே கிடைக்கும் முழுமையான கம்ப்யூட்டர் படிப்பு ஒருவரை வாழ்வில் எவ்வளவு தூரம் முன்னேற்றும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன், கம்ப்யூட்டரில் கற்றுக் கொள்ளும் துறை நுணுக்கங்கள்தான் வாழ்வாதாரம், கால்குலேட்டர் படிப்பெல்லாம் யாரோ சிலரின் ஈகோவை காப்பாற்றவும், எளியவர்களின் "வாழ்வியல் முன்னேற்றத்தை (Class Mobility) தடுக்கவும் உதவும் ஏமாற்று வேலை என்பதையும் புரிந்தவன் ஒருவன் இருந்தானாம். அவன் மனதில் சில கேள்விகள் எழுந்தனவாம்.
"கம்ப்யூட்டர் காலத்துல கால்குலேட்டர் என்ன அவ்வளவு முக்கியமா? அல்லது தெரிஞ்சுக்க முடியாத அளவு கம்ப சூத்திரமா?
கால்குலேட்டர் பத்தி தெரிஞ்சுக்க எதுக்கு தனி படிப்பு?
ஒரு முப்பது ரூபா இருந்தா ஒரு சீனா கால்குலேட்டர் வாங்கி வீட்டுல இருந்தே அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு மேஞ்சுடலாமே?
அந்த நேரத்துல கம்ப்யூட்டர் பத்தியே இன்னும் நாலு விஷயம் தெரிஞ்சுக்கலாமே? ஓரக்கிள், ஜாவான்னு ஏதாவது படிச்சுக்கிட்டாக் கூட இன்னும் கொஞ்சம் முன்னேறலாமே?
கால்குலேட்டர் படிச்சவனோட நிலம இன்னைக்கு என்ன? சபைக்கு மத்தியில கால்குலேட்டர் படிப்புத்தான் முக்கியம்னு நெஞ்ச நிமித்தினாலும், தனியா வந்து "உங்களைப் போல கம்ப்யூட்டர் படிச்சிருந்தா நாங்களும் இன்னைக்கு நல்லா இருந்திருப்போம்னு" வடமாசி வீதிக்காரங்களே எத்தனைப் பேரு சொல்றாங்க தெரியுமா?
பரதம்பட்டிக்காரங்க எல்லாருமே முன்னுக்கு வரணும்.
அதுக்கு நவீன படிப்புத்தான்யா முக்கியம். நான்தான் உசத்தி. என் பாஷயதான் நிறைய பேரு பேசறாங்கன்னு பின்னாடி போகாதீங்கய்யா!
கீழே விழுந்து கிடக்கரவங்கள எழுப்பி விட வேண்டும். அவர்களும் வாழ்வில் உயர வழி காட்ட வேண்டும். அவங்களுக்கு நவீன படிப்பு வழங்க வேண்டும். கம்ப்யூட்டர்க்குள்ளேயே கால்குலேடரும் உண்டு என்ற உண்மையை உணர்த்த வேண்டும். அதை விடுத்து இருபதாம் நூற்றாண்டுக்கு கூட அல்ல பத்தொம்பதாம் நூற்றாண்டுக்கு போக யாரும் ஆசைப் பட வேண்டாம்.
கம்ப்யூட்டரா இருந்தா என்ன கால்குலேடரா இருந்தா என்ன? கணக்கு சீக்கிரமாக போட முடிந்தால் போதும்.
குண்டு சட்டியில், அடுத்தவனை ஆட்டி படைக்கும் ஆசையை விட அனைவருக்குமான அடுத்த வேளை சோறுதான் முக்கியம் என்று பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த டிங்கப்பூர், குமேரிக்காபாளையம் போன்ற ஊர்களின் சரித்திரத்தையும், பெரும்பான்மையினருக்கு தெரிந்த கால்குலேட்டர் படிப்பைத்தான் அனைவருமே படிக்க வேண்டும் என்று ஆசைப் பட்ட கிலங்காபுரி போன்ற ஊர்களின் சரித்திரத்தையும் ஒருமுறை திரும்பிப் பாருங்கள்
அப்புறம் சொல்லுங்கள். கம்ப்யூட்டர் தேவையா கால்குலேட்டர் தேவையா?
ஐயா! ப்பில் கிபில் அவர்களே! தாய்மொழி உயர வேண்டும் என்ற உங்கள் ஆசை தப்பில்லை. முதலில் கம்ப்யுட்டரில் உள்ள எல்லா விஷயங்களையும் கால்குலேடருக்குள் கொண்டு வாருங்க. அப்புறம் பரதம் பட்டி மட்டுமல்ல. உலகமே கால்குலேட்டர் படிப்பு படிக்கும்.
ஒண்ணாங்கிளாஸ் தாண்டறதுக்கு முன்னரே டாக்டர் ஆகி வைத்தியம் செய்ய ஆசைப்படாதீர்கள்.
நன்றி.
Labels:
அரசியல்,
கதை,
சமூகம்,
செய்தியும் கோணமும்
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
:) :) :)
சான்ஸே இல்ல தல!
அருமையான பதிவு!
ஒருபக்கம் சிரிப்பு வந்தாலும் நாள் கணக்கா உட்கார்ந்து சிந்திக்க வேண்டிய பதிவு!
மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு கால்குலேட்டர் கத்துக்கோங்கிறான், எல்லோரும் கால்குலேட்டரே கத்துகிட்டா, பின்ன ஏன் கம்பியூட்டர் கத்துகுலேன்ம்பா!
எதுக்கு நமக்கு இந்த பிரச்சனை,
கம்பியூட்டரே போதும்! எங்கிருந்தாலும் நாம பிழைச்சுகுவோம்!
இந்த பதிவைப்படித்த நண்பர்கள் தயவுசெய்து தமிழ்மணத்திலும், தமிழிலும் ஓட்டளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்!
இரண்டு தடவை வசித்த பிறகு தான் புரிந்தது,
உண்மையான தகவல் நல்ல இருக்கு
நன்றி,
ஜோசப்
www.sirippuulagam.com
கம்ப்யூட்டர், கால்குலேட்டர் புனைவில் நம்ம கையெழுத்து கணக்குப்பிள்ளையை சேர்க்காம விட்டுட்டீங்களே? :(
அப்போ கணக்குப்பிள்ளையை வீட்டுக்கு அனுப்பிட வேண்டியதுதானா?
(பட்.. உங்க டீல் எனக்கு பிடிச்சிருக்கு)
நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்
நன்றி டாக்டர்!
//இந்த பதிவைப்படித்த நண்பர்கள் தயவுசெய்து தமிழ்மணத்திலும், தமிழிலும் ஓட்டளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்!//
பரிந்துரைக்கு நன்றி தல!
//இரண்டு தடவை வசித்த பிறகு தான் புரிந்தது,
உண்மையான தகவல் நல்ல இருக்கு //
நன்றி ஜோசப்!
புனைவு என்றாலும் சரித்திரத்தை தழுவியே எழுதப் பட்டது.
உபயம்: இமேஜினிங் இந்தியா புத்தகம் - எழுத்தாளர் - நந்தன் நிலேகேணி
நன்றி.
நன்றி பீர்!
//கம்ப்யூட்டர், கால்குலேட்டர் புனைவில் நம்ம கையெழுத்து கணக்குப்பிள்ளையை சேர்க்காம விட்டுட்டீங்களே? :(//
கணக்கு பிள்ளை என்று நீங்கள் தாய்மொழியை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
என்னைப் பொருத்த வரை தாய்மொழியை புற உபகரணங்களுடன் ஒப்பிட முடியாது. தாய்மொழி என்பது மனக்கணக்கு (logic) போல. எத்தனை கம்ப்யூட்டர் இருந்தாலும், கால்குலேட்டர் இருந்தாலும் ஒருவனுக்கு மனக்கணக்கு (logic) தெரிந்திருக்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டரை செம்மையாக பயன்படுத்தவும் மனக்கணக்கு மிகவும் முக்கியம்.
ஒருவனின் சுயசிந்தனை வளர அவனுக்கு தாய்மொழி கல்வி அவசியம். அதற்கடுத்தாற்போல அவனது வாழ்வாதாரம் உயர கம்ப்யூட்டர் முக்கியம். மற்ற மொழிகளை கற்றுக் கொள்வது அவரவர் தனிப்பட்ட தேவை அல்லது விருப்பத்தை பொறுத்தது.
பதிவுலகில் ஒருசிலர் கருதுவது போல மொழி தெரியாத மாநிலங்களில் பயணிப்பது அல்லது பணி புரிவது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. அந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு முன்னர் கொஞ்சம் பிளான் செய்து கொள்ள வேண்டும். "முப்பது நாட்களில் ----- பாஷை" போன்ற புத்தகங்களின் உதவியோடு சில அடிப்படை வார்த்தைகளை கற்றுக் கொண்டால் போதுமானது. மற்றபடிக்கு நாம் எப்படி தமிழ் நாட்டில் தமிழிஷில் பேசுகிறோமோ அப்படி 'இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம்" மிக்ஸ் செய்து அடித்து விடலாம்.
இந்த சிறு விஷயத்திற்காக, கம்ப்யூட்டர் படிக்க வேண்டிய குழந்தைகளை கபீர்நாமாவும் துளசி நாமாவும் மனனம் செய்ய வைக்க ஆசைப் படாதீர்கள் ப்ளீஸ்!
புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
(உங்களுக்கு கண்டிப்பாக தேவை என்றால் மூன்று நாட்களில் வொர்கிங் ஹிந்தி என்ற தொடர் பதிவை நான் இடத் தயார்!)
நன்றி.
நன்றி சின்ன அம்மிணி!
ஆழமான சிந்தனை; தெளிவான வெளியிடல். என்னைக் கொஞ்சம் மாற்றி யோசிக்க வைத்தது. உங்கள் கருத்துகள் - ஒரு வகையில் உண்மையாகவும் இருக்கக் கூடும். கால்குலேட்டர் கற்கச் சொல்லியது க. சி அல்லாமல் - நீங்கள் மிகவும் மதிக்கும் - அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒருவராக இருந்தால் - உங்கள் கருத்து இதேவாக இருக்குமா - ?
//மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார் இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார்.//
வளர்ச்சி என்பது தேவைதான் ஆனால், இன்னொருவரை (இன்னொன்றை)மிதித்து (அழித்து) விட்டு தான் வளர்ச்சி என்றால் அது நல்லதல்ல, ஆபத்தானது என்று, மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் சீக்கிரத்தில் புரிந்து கொள்வார். (உடம்பில் உள்ள எல்லா பாகங்களும் சீரான வளர்ச்சி இருந்தால்தான் நல்லது. வலதுகால் மட்டும், வளர்ந்தால் போதும் என நினைக்கிறார்).
ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக" மாற்ற முடியும் என்பது கண்களை விற்றுவிட்டு ஓவியத்தை வாங்குவதுபோல்.
//சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன்.//
சீரியஸான ஒரு விஸயத்தை கதை! (புனைவு)வடிவில், அருமையாக சொல்லியிருக்கிர்கள். யாதார்த்தத்தை முழுமையாக பிரதிபலிக்கிறது.
கால ஓட்டத்திற்கு ஏற்ப பல கதாபாத்திரங்களை உருவாக்கி, சொல்லவந்த விசியத்தின் கனத்தைக் குறைக்காமல், சிதைக்காமல் சொல்லியிருக்கிர்கள். (மகாபாரதமும், ராமாயணமும் எப்போதும் விரும்பப்படுவதற்குக் காரணமும் அதுதான்).
அருமையான,சிரிக்க,சிந்திக்க வைத்த பதிவு!.
பதிவுக்கு நன்றி அய்யா.
இந்த பதிவு படிக்க படிக்க கொஞ்சம் புரியாத மாதிரி இருந்தது.முழுதும் படித்தபின் நன்றாக புரிந்தது.
மிக்க நன்றி சார்.
நன்றி கௌதமன்!
//கால்குலேட்டர் கற்கச் சொல்லியது க. சி அல்லாமல் - நீங்கள் மிகவும் மதிக்கும் - அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒருவராக இருந்தால் - உங்கள் கருத்து இதேவாக இருக்குமா - ?//
நல்ல கேள்வி. கபில் சிபல் போன்ற அரசியல்வாதிகள் அள்ளிவிடும் கருத்துக்களையெல்லாம் நான் அதிகம் பொருட்படுத்துவதில்லை. அப்படி இருந்திருந்தால் அவர் சொன்னவுடனேயே இந்த பதிவை இட்டிருப்பேன். பதிவுலக நண்பர்கள் ஹிந்தி திணிப்பு - எதிர்ப்பு பற்றி கொண்டிருந்த கருத்துக்கள் வெறும் உணர்வு பூர்வமானதாக மட்டுமே இருந்தன போல தோன்றியதால் ஒரு சரித்திர பொருளாதார விளக்கமாக இந்த பதிவை இட்டேன்.
என்னுடைய தாயாரின் விருப்பத்திற்காக நான் பள்ளிப்படிப்பின் போதே, ஹிந்தி தனியாக டியூஷன் வைத்துக் கற்றுக் கொண்டேன். ஹிந்தியை விட, தனியாக காசு வாங்காமலேயே ஆங்கிலம், அரசியல் மற்றும் பொருளாதாரம் கற்றுக் கொடுத்த ஹிந்தி பண்டிட்டின் விசால அறிவு பிடித்திருந்ததால் நானும் சில காலம் ஹிந்தி கற்றுக் கொள்ளும் சாக்கில் அவர் வீட்டுக்கு சென்று வந்தேன்.
பிறகு துளசி நாமாவை விட கபீர் நாமாவை விட அல்ஜீப்ராவும், பிதாகரஸ் தீரமும் அதிக சுவாரஸ்யமாக தோன்றியதால் ஹிந்திக்கு ஒரு முழுக்கு போட்டு விட்டேன்.
உண்மையில் மொழிப் பாடங்கள் (பிரத்யேக விருப்பம் இல்லாத பட்சத்தில்) ரொம்ப போர்.
என்னுடைய சில கன்னட நண்பர்கள் கூறி இருக்கின்றனர். ஹிந்தி அவர்களது கல்வி நேரத்தில் எவ்வளவு பகுதியை தின்று விட்டது என்று. அந்த கல்வியால் அவர்களுக்கு பெரிய உபயோகம் என்றுமே இருந்ததில்லை என்றும் கூறினார்கள். ஆட்டோ டிரைவருடன் பேசுவதற்கும், அட்ரஸ் விசாரிப்பதற்கும், சாலையோர கடையில் பேரம் பேசுவதற்கும், ஒருவர் ஹிந்தி பல வருடங்கள் படிக்க வேண்டியதில்லை. இதையும் என்னால் அழுத்தம் திருத்தமாக சொல்ல முடியும்.
அதே சமயத்தில் ஆங்கில புலமை ஒருவருக்கு தேவையில்லை என்றாலும், ஆங்கிலத்தில் ஒருவர் பெறும் சிறந்த அறிவு பல புதிய துறைகள் பற்றிய அறிவை மேம்படுத்துகிறது. ஒருவரது வாழ்வியல் மாற்றத்திற்கு (Class Mobility) எப்படி ஆங்கில கல்வி உதவுகிறது என்பதையும் எனது நேரடி அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
நந்தன் நிலகேனி இது பற்றி எழுதிய 'இமேஜினிங் இந்தியா'வும் எனக்குள்ளே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
நன்றி.
//வளர்ச்சி என்பது தேவைதான் ஆனால், இன்னொருவரை (இன்னொன்றை)மிதித்து (அழித்து) விட்டு தான் வளர்ச்சி என்றால் அது நல்லதல்ல, ஆபத்தானது என்று, மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் சீக்கிரத்தில் புரிந்து கொள்வார். (உடம்பில் உள்ள எல்லா பாகங்களும் சீரான வளர்ச்சி இருந்தால்தான் நல்லது. வலதுகால் மட்டும், வளர்ந்தால் போதும் என நினைக்கிறார்). //
சரியாக சொன்னீர்கள் தாமஸ் ரூபன்!
நன்றி.
நன்றி ரஹ்மான்!
நல்ல கதை!!!
அவரு பாவம் நானும் இருக்கறேன்னு நிரூபிக்கறதுக்காக அப்படி ஒரு அறிக்கை விட்டாரான்னு தெரியலை....நம்மாளுங்க திருத்தறதுக்கு இன்னும் நிறைய விஷயம் இருக்கு....
கவுன்சிலிங்ல மதிப்பெண்கள் ஒண்ணா இருந்தா அடுத்து வயதை வைத்துதான் முடிவு செய்கிறார்கள், அதுக்கு பதிலா தமிமிழ் வாங்கிய மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரலாம், தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு அடுத்த முக்கியத்துவம் என்றெல்லாம் செய்யலாம்...தமிழை செம்மொழியாக்கிவிட்டோம் என்று கொண்டாடுஅவர்கள் இதெல்லாம் செய்தால் பரவாயில்லை...
நான் என் அலுவலக விஷயமாக அடிக்கடி, மும்பை, டெல்லி என்றெல்லாம் சென்றிருக்கிறேன், சற்றே கடினமாக இருந்ததென்னமோ உண்மைதான், ஆனால் இவர்கள் அலட்டிக் கொள்வது போல் பெரிதாக ஒன்றும் இல்லை.. இத்தனைக்கும் நான் சில சமயம் சென்றது மிக மிக இண்டீரியர் (பிலாஸ்பூர், கோர்பா, சிங்ரோலி, ஜபல்பூர்.... அதியே சமாளித்தொம் எனும் போது நகரங்களில் சமாளிக்க முடியாதா????
என் ஐடியா என்னான்னா இன்னும் நிறையா முயற்சி செஞ்சா தமிழ்நாட்டுக்கு எல்லாரும் பொழப்பு தேடி வரவழைக்க செய்வோம்... அப்புறம் எல்லாரும் தமிழை கத்துக்கனும்னு அழிச்சாட்டியம் பண்லாம்....
நreeஷ்
www.nareshin.wordpress.com
நன்றி நரேஷ்!
//கவுன்சிலிங்ல மதிப்பெண்கள் ஒண்ணா இருந்தா அடுத்து வயதை வைத்துதான் முடிவு செய்கிறார்கள், அதுக்கு பதிலா தமிமிழ் வாங்கிய மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரலாம், தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு அடுத்த முக்கியத்துவம் என்றெல்லாம் செய்யலாம்...தமிழை செம்மொழியாக்கிவிட்டோம் என்று கொண்டாடுஅவர்கள் இதெல்லாம் செய்தால் பரவாயில்லை...//
உண்மைதான். ஊரையெல்லாம் தமிழ் படிக்க சொல்லி விட்டு தன பிள்ளைகளை மட்டும் கான்வென்டில் படிக்க வைக்கிறார்கள். அனைவருக்கு சமமான வாய்ப்புக்கள் வழங்கப்படாத நிலையில். மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே வேலைவாய்ப்பு அல்லது உயர்கல்வி என்ற நிலை கூட "வாழ்வியல் உயர்வுக்கான ஒரு தடைதான் (BARRIER ON CLASS MOBILITY)
//நான் என் அலுவலக விஷயமாக அடிக்கடி, மும்பை, டெல்லி என்றெல்லாம் சென்றிருக்கிறேன், சற்றே கடினமாக இருந்ததென்னமோ உண்மைதான், ஆனால் இவர்கள் அலட்டிக் கொள்வது போல் பெரிதாக ஒன்றும் இல்லை.. இத்தனைக்கும் நான் சில சமயம் சென்றது மிக மிக இண்டீரியர் (பிலாஸ்பூர், கோர்பா, சிங்ரோலி, ஜபல்பூர்.... அதியே சமாளித்தொம் எனும் போது நகரங்களில் சமாளிக்க முடியாதா????//
நீங்கள் சொல்வது சரிதான் நரேஷ்! எனக்கும் கூட இது போன்ற அனுபவங்கள் உண்டு. தட்டு தடுமாறி மற்ற மொழியை பேசுவதை விட , வெளியூரில் கூட, சொந்த மொழி (அல்லது ஆங்கிலம்)பேசுவதே பல சமயங்களில் நம்மைக் காப்பாற்றுகிறது.
//என் ஐடியா என்னான்னா இன்னும் நிறையா முயற்சி செஞ்சா தமிழ்நாட்டுக்கு எல்லாரும் பொழப்பு தேடி வரவழைக்க செய்வோம்... அப்புறம் எல்லாரும் தமிழை கத்துக்கனும்னு அழிச்சாட்டியம் பண்லாம்....//
சூப்பர் ஐடியா!
ஆங்கிலம் LINGUA FRANCA ஆனதற்கு முக்கிய காரணம், ஆங்கிலேயர்களின் பொருளாதார வலிமைதான்.
தமிழ் கூட, ஹிந்தியின் ஆதிக்கத்தின் மத்தியிலும், தனது தனித்துவத்தை இழக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தென்னிந்தியா குறிப்பாக தமிழகம் பொருளாதார ரீதியாக வட மாநிலங்களை விட அதிக உயரத்தில் இருப்பதுதான்.
இந்த இடத்தை நாம் வருங்காலத்திலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், தமிழகத்தை இன்னும் பொருளாதார ரீதியாக வளப்படுத்த வேண்டும்.
காதல் கவிதை, கதை, அரசியல், சினிமா போன்ற விஷயங்களை மட்டுமே அதிகம் எழுதிக் கொண்டிராமல், பொருளியல் விஷயங்களிலும் தமிழின் ஆதிக்கத்தை வளர்க்க வேண்டும்.
நன்றி.
Post a Comment