Sunday, September 13, 2009

யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!


வெளிப்பார்வைக்கு சாதாரணமாக தெரியக் கூடிய, நாம் அனைவரும் அறிந்த இந்த சொல்வழக்கில் ஒரு முக்கிய பொருளாதார தத்துவம் அடங்கியிருக்கிறது. பொதுவாக, பொருளாதாரத்தில் நடைபெறவுள்ள மாறுதல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் கருவியாகவே பங்குசந்தை இருந்து வருகிறது. உதாரணமாக, பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தை பொதுமக்கள் புரிந்து கொண்டது கடந்த செப்டம்பர் மாதம்தான். ஆனால் பங்கு சந்தைகள், சென்ற ஜனவரி மாதத்தில் இருந்தே தமது வீழ்ச்சியை ஆரம்பித்து விட்டன. பொருளாதார வீழ்ச்சியின் முழு வீச்சும் உணரப் பட்ட (நடப்பு ஆண்டு) மார்ச் மாதத்திலோ பங்கு சந்தைகள் மெல்ல மெல்ல மீண்டு எழ ஆரம்பித்து விட்டன.

பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் இப்போதுதான் அங்கங்கே தெரிய ஆரம்பித்துள்ளன என்றாலும், பங்கு சந்தைகளின் பொற்காலமான 2007 அளவுகளுக்கு அருகேயே பங்குசந்தைகள் இப்போது சென்று விட்டன. பல பங்குகள் தமது பழைய உயர்வு நிலையை எட்டிவிட, சில பங்குகளோ பழைய நிலைக்கும் மேலேயே சென்று விட்டன.

இப்போதைய பங்குசந்தையின் கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில், உலகின் பொருளாதார நிலையும் கிட்டத்தட்ட பொருளாதார உச்ச காலமான 2007 நிலைக்கு வெகு சீக்கிரமே வந்து விட வேண்டும்.

அதாவது மணி ஓசை கேட்ட பின்னர் வர வேண்டியது யானையாகத்தான் இருக்க வேண்டும் என்பது பங்குசந்தையின் கணிப்பு. சில சமயங்களில் வருவது குச்சி ஐஸ் வண்டியாகவோ அல்லது மணி கட்டிய பூனையாக கூட இருக்கலாம் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. சந்தையின் கணிப்புக்கள் எப்போதுமே சரியாக இருந்தது கிடையாது என்பதை சரித்திரம் சொல்கிறது.

மேற்சொன்னதை மனதில் வைத்துக் கொண்டுதான் நாம் இனிமேல் பங்குசந்தையை அணுக வேண்டும். ஒவ்வொருடைய முதலீடும், முழுமையான பொருளாதார மீட்சிக்கான வாய்ப்பு, நிறுவனத்தின் (அதுவரைக்கும்) தாக்குபிடிக்கும் தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு பின்னர் ஒரு நிறுவனம் சம்பாதிக்க கூடிய லாப அளவு ஆகியவற்றின் மீதான சொந்த கணிப்பின் பேரிலேயே அமைய வேண்டும்.

சென்ற வாரத்தில், பங்கு சந்தைகளில் ஒரு அசாதாரண நிலை நிலவியதை பலரும் கவனித்திருப்பீர்கள். நிபிட்டி பல மாதங்களாக சந்தித்து வந்த 4730 எதிர்ப்பு நிலையை சென்ற வாரத்தில் எளிதாக முறியடித்தது. ஏற்கனவே சொன்னபடி ரிலையன்ஸ் போன்ற பெரிய பங்குகளின் முன்னேற்றம் இந்த வெற்றிக்கு சாதகமாக இருந்தது. தொடர்ந்து வரும் வெளிநாட்டு முதலீடுகள், உலக சந்தைகளில் நிலவிய சாதகமான போக்கு, உலோகப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவையும் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாக விளங்கின.

அதே சமயம், 4730 என்ற நிலை முறியடிக்கப் பட்டதற்கு பின்னர் பலரும் எதிர்பார்த்தபடி பெரிய அளவு முன்னேற்றங்கள் சந்தையில் தென்பட வில்லை. குறிப்பாக சிறிய மற்றும் இடைநிலை பங்குகளில் பெரியதொரு வீழ்ச்சி காணப் பட்டது. ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஐஸிஐஸிஐ வங்கி போன்ற பெரிய பங்குகள் மட்டுமே மேலேற, வெளியிலோ ஏதோ ஒட்டு மொத்த சந்தையே முன்னேறுவது போன்ற ஒரு மாயத்தோற்றம் காணப் பட்டது.

இந்த நிலை வரும் வாரமும் தொடர வாய்ப்புள்ளதால், ஏற்கனவே அதிக அளவு முன்னேறி விட்ட சிறிய மற்றும் இடைநிலை பங்குகளில் வர்த்தகம் செய்யும் நண்பர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். 4700 என்ற நிலையை மையப் புள்ளியாக வைத்துக் கொண்டு பெரிய பங்குகளில் வர்த்தகம் செய்யலாம்.

வரும் வாரம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.

நன்றி.

14 comments:

கௌதமன் said...

சுருக்கமான - ஆனால் விளக்கமான பதிவு - நன்றி.

Thomas Ruban said...

இப்போது உள்ள பொருளாதார மீட்சி எப்படி உள்ளது என்றால் (என் பார்வையில்)

சன் T.V சேனல் பல திரைப்படங்களை வெறும் விளம்பரம் மூலமே படத்தை வெற்றி பெற செய்யலாம் என நினைப்பது போல் உள்ளது. திரையரங்களில் கூட்டமே இருக்காது. ஆனால் இவர்கள் விளம்பரத்தில் வசூல் மழை கொட்டியிருக்கும். (கந்தல் சாமீ, நினைதாலே கசக்குது ) பல படங்களை திருட்டு CD யில் கூட யாரும் பார்க்கமாட்டார்கள்.(சன் தயாரிப்பு என்றால்).

இவர்கள்க்கு நல்லகதை மீது நப்பிக்கை இல்லை விளம்பரத்தில் மட்டுமே நம்பிக்கை.

மக்களை இன்னம் எத்தனை நாளுக்கு முட்டளகவே நினைத்துக் கொண்டு இருப்பார்கள் என்று தெரியவில்லை.

சந்தையில் வல்யூமே இல்லை ஆனால் பல பங்கு விலைகள் உச்சத்தில் உள்ளது.



//ஏற்கனவே அதிக அளவு முன்னேறி விட்ட சிறிய மற்றும் இடைநிலை பங்குகளில் வர்த்தகம் செய்யும் நண்பர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். 4700 என்ற நிலையை மையப் புள்ளியாக வைத்துக் கொண்டு பெரிய பங்குகளில் வர்த்தகம் செய்யலாம்.//

உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி சார்.

MCX Gold Silver said...

எச்சரிக்கைக்கு நன்றி சார்

Maximum India said...

நன்றி கௌதமன்!

பீர் | Peer said...

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு பங்குசந்தையும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுவது சரியா?

Maximum India said...

//சன் T.V சேனல் பல திரைப்படங்களை வெறும் விளம்பரம் மூலமே படத்தை வெற்றி பெற செய்யலாம் என நினைப்பது போல் உள்ளது. திரையரங்களில் கூட்டமே இருக்காது. ஆனால் இவர்கள் விளம்பரத்தில் வசூல் மழை கொட்டியிருக்கும். (கந்தல் சாமீ, நினைதாலே கசக்குது ) பல படங்களை திருட்டு CD யில் கூட யாரும் பார்க்கமாட்டார்கள்.(சன் தயாரிப்பு என்றால்).

இவர்கள்க்கு நல்லகதை மீது நப்பிக்கை இல்லை விளம்பரத்தில் மட்டுமே நம்பிக்கை.

மக்களை இன்னம் எத்தனை நாளுக்கு முட்டளகவே நினைத்துக் கொண்டு இருப்பார்கள் என்று தெரியவில்லை. //

சரியாக சொன்னீர்கள். கந்தசாமி பார்த்து நொந்த சாமிகளில் நானும் ஒருவன்.

சன் தயாரிப்பு என்றாலே மக்கள் பயந்து ஓடும் அளவுக்கு செய்து விடுவார்கள் போல.

:)

நன்றி தாமஸ் ரூபன்!

Maximum India said...

நன்றி DG!

@ தாமஸ் ரூபன்

//உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி சார்.//

@DG

//எச்சரிக்கைக்கு நன்றி சார்.//

உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்றாலும், என் தரப்பில் இருந்தும், ஒரு விஷயத்தை இங்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.

இப்போதைக்கு சந்தையில் பங்குவர்த்தகத்திற்கு ஏராளமான வாய்ப்புக்களை கொடுக்கிறது. ஆனால் வர்த்தகத்தின் போது, சில பொருளாதார அடிப்படைகளையும் தெரிந்திருப்பது, சரியான நேரத்தில் வெளிவந்து விட உதவுகிறது.

எனவே, எனது எச்சரிக்கைகள் கண்களையும் காதுகளையும் இன்னும் சற்று கூர்மையாக வைத்துக் கொள்ளவே மட்டுமே தவிர, வர்த்தகத்தை குறைத்துக் கொள்ளவோ அல்லது விலகி இருப்பதற்கோ அல்ல என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

Thomas Ruban said...

//எனது எச்சரிக்கைகள் கண்களையும் காதுகளையும் இன்னும் சற்று கூர்மையாக வைத்துக் கொள்ளவே மட்டுமே தவிர, வர்த்தகத்தை குறைத்துக் கொள்ளவோ அல்லது விலகி இருப்பதற்கோ அல்ல என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.//

நன்றி சார்.

Maximum India said...

நன்றி பீர்!

//பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு பங்குசந்தையும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுவது சரியா?//

பதிவிலேயே சொன்னபடி பொருளாதாரம் யானை என்றால் பங்குச்சந்தை அதன் கழுத்தில் உள்ள மணி மட்டுமே. வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு நாட்டின் பொருளாதார வளத்தின் நாடி துடிப்பை அறிந்து கொள்ள உதவும் ஒரு கருவி மட்டுமே பங்குசந்தை. மேலும் சிறப்பாக செயல்படும் ஒரு பங்குச்சந்தை பலவகையிலும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. சிலசமயங்களில், கருவியில் உள்ள குறைபாடுகள் நாடித்துடிப்பை தவறாக காட்டி தவறான மருந்தை கொடுத்து விட காரணமாகின்றன என்பதும் உண்மை.

அதே சமயம், பல சமயங்களில் தற்போதைய ஒபாமா அரசு போன்ற பல அரசாங்கங்கள் பங்குசந்தையை ஓரக்கண்ணில் பார்த்தவாறே பொருளாதார முடிவுகளை எடுப்பது அவ்வளவு சரியல்ல. பொருளாதாரம்தான் ஒரு நாட்டிற்கு, அதன் அரசாங்கத்திற்கு முக்கியம். பொருளாதாரம் செழிப்படைந்தால் பங்குச்சந்தை தானாகவே முன்னேறும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக புரிய வேண்டியவர்களுக்கு இது புரிய வில்லை. அல்லது புரியாதது போல நடிக்கிறார்கள்.

நன்றி.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

Btc Guider said...

எச்சரிக்கைக்கு நன்றி சார்.
//ஒரு நாட்டின் பொருளாதார வளத்தின் நாடி துடிப்பை அறிந்து கொள்ள உதவும் ஒரு கருவி மட்டுமே பங்குசந்தை.//
நாடித்துடிப்பு சரியாக வேலை சில சமயம் கோக்கு மாக்காக ஆகிவிடுகிறதே.(கோக்கு மாக்கு நவீன தமிழிலக்கியம்)
பதிவுக்கு நன்றி சார்.

வால்பையன் said...

கமாடிடி பற்றி எதாவது தகவல்கள் உண்டா!?

Maximum India said...

//நாடித்துடிப்பு சரியாக வேலை சில சமயம் கோக்கு மாக்காக ஆகிவிடுகிறதே.(கோக்கு மாக்கு நவீன தமிழிலக்கியம்).//

எனக்கு தெரிந்த தமிழ் இலக்கியங்கள் எல்லாம் கொஞ்சம் பழையவை. தொல்காப்பியம் முதல் கல்கி, முவ வரை மட்டுமே. நவீன தமிழ் இலக்கியம் அல்லது பின்நவீனத்துவம் எல்லாம் வராது! அவ்வ்வ்வ்!

:)

நன்றி.

Maximum India said...

//கமாடிடி பற்றி எதாவது தகவல்கள் உண்டா//

சென்ற வாரம் டாலர் எக்கச்சக்கமாக விழுந்ததால் கமாடிடி விலை பெருமளவு உயர்ந்தது. இந்த வாரம், தொழிற்நுட்ப ரீதியாக, டாலர் கொஞ்சம் மீட்சியை சந்திக்கும் என்று சொல்லப் படுகிறது.

அப்புறம் தல!

மன்னை பட்டறை பற்றி எதுவுமே எழுதல? சீக்கிரமாக எழுதுங்க! ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்!

நன்றி.

Blog Widget by LinkWithin