Skip to main content

பங்குச்சந்தை வெற்றிப்பயணம் - முடிவெடுக்க உதவும் மூன்று வழிமுறைகள்

ஒரு பங்கினை வாங்கவும் விற்கவும், பொதுவாக மூன்று விதமான வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. அந்த அணுகுமுறைகளைப் பற்றிய சுருக்கமான விபரங்களை இங்கு பார்ப்போம்.

ஒரு பங்கின் ஏற்றத்தாழ்வுகள் அதை வெளியிட்டுள்ள நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமைகின்றது என்ற கண்ணோட்டத்துடன் முடிவுகளை மேற்கொள்வது முதல் அணுகுமுறையாகும்.

ஒரு பங்கில் நாம் முதலீடு செய்யும் போதே அந்த நிறுவனத்தின் சுக துக்கங்களில் பங்கெடுக்கும் ஒரு பங்குதாரர் நாம் ஆகி விடுகிறோம். எனவே, ஒரு பங்கில் முதலீடு செய்வதற்கு முன்னரே, அந்த நிறுவனத்தின் தற்போதைய நிலை மற்றும் வருங்கால செயல்பாடுகள் பற்றிய நமக்கு ஒரு தெளிவான கண்ணோட்டம் அவசியமாகிறது என்பது இந்த அணுகுமுறை.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், குடியிருப்பதற்காக ஒரு வீட்டை வாங்கச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, அந்த வீட்டின் விலையை தெரிந்து கொள்வதற்கு முன்னரே, அந்த வீடு நாம் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளதா, அந்த பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவு உள்ளதா என்பதையே முதலில் நாம் பார்க்கிறோம். அதற்கு பின்னரே விலை பற்றி யோசிக்கிறோம். எல்லா வசதிகளும் இருக்கும் ஒரு வீட்டின் விலை சற்று முன்பின் இருந்தாலும், விலையை பற்றி அதிகம் கவலைப் படாமல் (நமக்கு கட்டுபடியாகும் பட்சத்தில்) வீட்டை வாங்க வேண்டும் என்று முயற்சிப்போம்.

ஒருவேளை, அந்த வீடு, குறைந்த கால நோக்கில் வாங்கி (பிற்காலத்தில் அதிக விலையில்) விற்பதற்காக இருந்தாலும், நம்மிடம் வாங்க வருபவரும் இது போலவே வீட்டின் தகுதிகளை ஆராய்வார் என்பதை மறக்கக் கூடாது. தரமில்லாத பொருளை லாபத்துடன் விற்பது மிகக் கடினம்.

ஒரு நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடு நன்றாக இருக்கும் பட்சத்தில், அதன் எதிர்காலம் பளிச்சென்று இருக்கும் என்று நம்பும் பட்சத்தில், விலை பற்றி அதிகம் கவலைப் படாமல், நிறுவனத்தை பற்றி அதிகமாக யோசிக்கும் முறைதான் முதல் முறை. அதற்காக விலை அனாவசியம் என்று அர்த்தம் அல்ல. விலையை விட பொருள்தான் முக்கியம், மதிப்பற்ற பொருட்கள் எவ்வளவு விலை குறைவாக இருந்தாலும் ஏறெடுத்தும் பார்க்கப் படாது என்பதுதான் முக்கியப் பொருள்.

அதே சமயம், எவ்வளவுதான் சிறந்த பொருளாக இருந்தாலும், அதன் உண்மையான மதிப்பிற்கும், சொல்லப்படும் விலைக்கும் உள்ள வித்தியாசம் இந்த அணுகுமுறையில் சில கணித முறைகளின் அடிப்படையில் அலசப் படும். ஒருவேளை மதிப்பை விட விலை அதிகமாக இருந்தால், மதிப்பை விட விலை கீழே வரும் வரை முதலீட்டாளர்கள் பொறுமை காக்க வேண்டும்.

இந்த முறை "அடிப்படை அம்சங்கள் ஆராய்ச்சி (Fundamental Analysis)" என்று அழைக்கப் படுகிறது.

அடிப்படை அம்சங்கள் அனாவசியம். சந்தைக்கு வந்த பின்னர், ஒரு பொருளின் விலையை வர்த்தகர்களே முடிவு செய்கிறார்கள். ஒரு பங்கின் அத்தனை அம்சங்களும், அந்த பங்கு சம்பந்தமாக ஏற்கனவே வந்த அல்லது வருங்காலத்தில் வரப் போகிற அத்தனை செய்திகளும் அதன் விலைக்குள்ளேயே அடங்கி உள்ளன. எனவே ஒரு பங்கின் ஏற்றத்தாழ்வுகளை கூர்மையாக கவனித்து, பங்குகளின் போக்கில் ஏற்படும் திடீர் மாற்றங்களின் அடிப்படையில் பங்கு வர்த்தகம் செய்யலாம் என்பது இரண்டாவது அணுகுமுறை.

உதாரணமாக எல்லா நாட்களும் சிடுமூஞ்சியாக இருக்கும் மேலதிகாரி ஒருநாள் மட்டும் அன்புடன் நடந்து கொள்கிறார் என்றால் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண் டுமல்லவா?

அதே போல, எப்போதுமே தொகுதி பக்கம் திரும்பி பார்க்காத ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் திடீரென வீட்டு வாசல் முன்வந்து நின்றால், தேர்தல் வரப் போகிறது என்று பத்திரிக்கை பார்க்காமலேயே சொல்லி விடலாம் அல்லவா?

மேற்சொன்னவை போல, ஒரு பங்கின் போக்கில் ஏற்படும் மாற்றங்களின் உள்ளர்த்தங்களை, புரிந்து கொள்ள முயற்சிப்பதே இந்த அணுகுமுறை.

உதாரணத்திற்கு, ஒரு நிறுவனம் எதிர்பார்ப்புக்கும் மேலாக மிக அதிக லாபம் சம்பாதித்துள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஊடகங்களில் அதிகாரபூர்வமாக வெளிவருவதற்கு முன்னரே, இந்த செய்தி அந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்புக்களில் பணியாற்றும் பலருக்கும் தெரிந்திருக்கும். இவர்கள் மூலம் முக்கிய வெளியாட்கள் சிலருக்கும் இந்த செய்தி கிடைத்திருக்கும். இவர்கள் அந்த நிறுவனத்தின் பங்கினை சந்தையில் மெல்ல மெல்ல சேகரிப்பார்கள். (அதே போல அரசு தரப்பில் இருந்து வெளி வர வேண்டிய முக்கிய தகவல்களும் கசிய வாய்ப்புண்டு). உள்ளாட்களின் நடவடிக்கைகள் பங்குகளின் போக்கின் மூலமே அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறது இந்த வழிமுறை.

மேலும், ஒரு பங்கு மேலே அல்லது கீழே வரும் போது, ஏற்கனவே வாங்கியவர்கள் இந்த விலையில் விற்க முயற்சிப்பார்கள் அல்லது கீழே வரும் போது இந்த விலையில் வாங்க முயற்சிப்பார்கள் என்றெல்லாம் கணிக்க முயலுவதும் இந்த அணுகுமுறை.

இந்த வழிமுறையின் பெயர் "தொழிற்நுட்ப (வரைபட) ஆராய்ச்சி (Technical Analysis)" எனப் படும்.

ஒரு பங்கின் அடிப்படை அம்சங்கள் எல்லாம் ஒருவித மாயைதான். பச்சைக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்த்தால் எல்லாமே பச்சையாக தெரியும். சிவப்புக் கண்ணாடி போட்டால் சிவப்பாக தெரியும். எல்லாமே மனதில்தான் இருக்கிறது என்கிறது மூன்றாவது அணுகுமுறை.

உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், இரண்டு வருடங்களுக்கு முன்னர், இந்தியாவின் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கிறது என்றார்கள் வல்லுனர்கள். ஒரு வருடத்திற்கு முன்னர் எல்லாமே இருண்டு போய் விட்டது என்றார்கள் நிபுணர்கள். இப்போதோ பச்சை முளைகள் அங்கங்கே தென்படுகின்றது என்கிறார்கள் இவர்கள். ஒரு காலத்தில் இந்திய பங்குகளின் விலைகளை விட மதிப்பு குறைவு என்றார்கள். பின்னர் அதிகம் என்றார்கள். இப்படி ஏதேதோ சொல்லி கொண்டு இவர்கள் பங்குகளை வாங்கி விற்றாலும், இந்தியாவின் நிலைமையோ அல்லது நிறுவனங்களின் நிலைமையோ தன்பாட்டில்தான் சென்று கொண்டிருக்கின்றன.

சந்தை பொருளாதாரத்தின் தாயாக கருதப் படும் அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் ஏராளமானவர்கள் வேலை இழந்தார்கள் என்ற செய்தி வந்தாலும் வேலை இழக்கும் விகிதம் குறைந்து விட்டது என்று சந்தைகள் சந்தோசப் பட்டுக் கொண்டு பெருமளவுக்கு உயர்கின்றன. நேற்று வரை நூற்றி நான்கு டிகிரி காய்ச்சலில் இருந்தவருக்கு இன்று இன்னுமொரு அரை டிகிரி அதிகமானால் சந்தோசப் படுவார்கள் போல.

அதே போல, ஏதேதோ பெயர் வைத்துக் கொண்டாலும் தொழிற்நுட்ப வரைபடங்கள் மேகங்கள் போலத்தான். "Bull Markets have no resistance. Bear Markets have no support" என்றும் சொல்லப் படுகிறது.. ஒரு பெண்ணின் அழகு அவளை பார்ப்பவர் கோணத்தில்தான் (Beauty lies in the eyes of the beholder) என்று மூன்றாவது அணுகுமுறை சொல்கிறது.

பங்குசந்தை என்பது பல கோடி வர்த்தகர்களின் மனநிலையை பொறுத்துத்தான் அமைகிறது. இன்றைக்கு பலருக்கும் ரிலையன்ஸ் பிடித்திருந்தால் அதன் பங்கு மேலேறுகிறது. நாளை பிடிக்க வில்லையென்றால் கீழிறங்குகிறது. வர்த்தகர்களின் மனநிலை எப்படி மாறுகிறது என்பதை கணிக்க உதவுவதே மூன்றாவது அணுகுமுறை (Behavioural Science).

பல வெற்றியாளர்கள், இந்த மூன்று அணுகுமுறைகளையும் வெவ்வேறு விகிதங்களில் ஒருங்கிணைத்து பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் இந்த அணுகுமுறைகளின் அடிப்படைகளை முறைப்படி கற்றறியாத போதும் கூட, இந்த முறைகளை சார்ந்தே காய்களை நகர்த்துகிறார்கள்.

எனவே, ஒருவர் பங்குசந்தையில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டுமானால் இந்த மூன்று அணுகுமுறைகள் பற்றியும் ஓரளவுக்கேனும் அறிந்திருக்க வேண்டும். இந்த அணுகுமுறைகளைப் பற்றிய விளக்கங்களை பின்வரும் பதிவுகளில் பார்ப்போம்.

பயணம் தொடரும்.

Comments

மீண்டும் நன்றி - சுலப சொற்களுக்கும், எளிமையான எடுத்துக் காட்டல்களுக்கும்.
அன்புடன்
கௌதமன்.
Thomas Ruban said…
விரிவான, விளக்கமான பதிவுக்கு நன்றி சார்.

//ஒரு பங்கின் அடிப்படை அம்சங்கள் எல்லாம் ஒருவித மாயைதான். பச்சைக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்த்தால் எல்லாமே பச்சையாக தெரியும். சிவப்புக் கண்ணாடி போட்டால் சிவப்பாக தெரியும். எல்லாமே மனதில்தான் இருக்கிறது//

மிகச சரியாக சொன்னீர்கள் சார்.

//அமெரிக்காவில் ஏராளமானவர்கள் வேலை இழந்தார்கள் என்ற செய்தி வந்தாலும் வேலை இழக்கும் விகிதம் குறைந்து விட்டது என்று சந்தைகள் சந்தோசப் பட்டுக் கொண்டு பெருமளவுக்கு உயர்கின்றன. நேற்று வரை நூற்றி நான்கு டிகிரி காய்ச்சலில் இருந்தவருக்கு இன்று இன்னுமொரு அரை டிகிரி அதிகமானால் சந்தோசப் படுவார்கள் போல.//

வந்திருப்பது பன்றி காய்ச்சல் தான். மலேரியாகாய்ச்சல் இல்லையென்று சந்தோசப்படுவார்கள் போல(டாலர் என்னும் மருந்து இருப்பதால்) இருக்கிறது.

பங்குச்சந்தை,கச்சாஎண்ணெய், தங்கம், மூன்றில் ஏதாவது ஒன்று ஏறினால் ஒன்று விலை இறங்கும். ஆனால் இப்போது மூன்றும் விலை அதிகரித்து காணப்படுகிறதே. காரணம் என்ன சார்? இந்த நிலைமையில் சிறுமுதலீட்டார்கள் என்ன செய்ய வேண்டும்.

சந்தை பொருளாதாரத்தின் தாயாக கருதப் படும் அமெரிக்காவில் (பொருளாதார மீட்சியிலும்) மாதம் பத்து வங்கிகள் மூடப்படுகிறேதே ஏன்?

அமெரிக்காவின் கிரெடிட் கார்ட் பூதம் எப்போது வெளியே வரும்?

இப்போது பங்குச்சந்தையில் ஒரு அசாதாரண சூழலே நிலவுகிறது என நான் நினைக்கிறேன்.


பதிவுக்கு நன்றி சார்.
Maximum India said…
//மீண்டும் நன்றி - சுலப சொற்களுக்கும், எளிமையான எடுத்துக் காட்டல்களுக்கும்.
அன்புடன் கௌதமன்//

நன்றி கௌதமன்!

உங்களுடைய வார்த்தைகள் உற்சாகம் அளிக்கின்றன..

மிக்க நன்றி.
Maximum India said…
//புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம்//

கூடிய சீக்கிரமே!

நன்றி.
Maximum India said…
//நம்ம சைட்ல டார்கெட் ஹிட்//

உண்மைதான் வால்பையன்!

வாழ்த்துக்கள்!
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

உங்களுடைய கேள்விகளுக்கு விரிவான பதில் அளிக்க வேண்டியிருப்பதால் தனிப் பதிவாகவே இட்டு விடுகிறேன்.

கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.

நன்றி.
MCX Gold Silver said…
மூன்று விதமான வழிமுறைகளையும் தெளிவாக விளக்கியதிற்கு நன்றி சார்.


ஒரு சந்தேகம் சார்


இன்றைய நிப்டி டோட்டல் கால் ஆப்சன்,
டோட்டல் புட் ஆப்சன் ஓப்பன் இன்ரஸ்ட்
எப்படி,எந்த லிங்க்கில் பார்பது?

நன்றி
DG
Maximum India said…
நன்றி DG

//இன்றைய நிப்டி டோட்டல் கால் ஆப்சன்,
டோட்டல் புட் ஆப்சன் ஓப்பன் இன்ரஸ்ட்
எப்படி,எந்த லிங்க்கில் பார்பது?//

http://www.nseindia.com/ இணையதளத்தில் F&O பிரிவில் இந்த தகவல்கள் உள்ளன.

நன்றி.

Popular posts from this blog

வாண வேடிக்கையா? வெறும் புஸ்வாணமா?

பெரிதாக வெடிக்கப் போகிறது அல்லது வண்ண மயமான ஒளிச்சிதறல்கள் பூக்கப் போகின்றன என்றெல்லாம் பெரிதாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சில பட்டாசுகள் புஸ்வாணமாக போவதுமுண்டு. தீபாவளி தினத்தன்று நமக்கெல்லாம் சில சமயங்களில் ஏற்பட்டு விடும் இது போன்ற ஒரு அனுபவம் சென்ற வாரம் பங்குசந்தையிலும் ஏற்பட்டது. சென்ற வாரம் நம்மை ஏமாற்றிய புஸ்வாணங்களைப் பற்றி முதலில் பார்ப்போம். முதல் புஸ்வானம் - பாரதி ஏர்டெல் தென் ஆப்பிரிக்க தொலைபேசி நிறுவனமான எம்டிஎன்-னுடான இணைப்பு இல்லையென்றவுடன் முதலில் துள்ளிக் குதித்த பாரதி பங்கு, வெகு சீக்கிரத்திலேயே ஆடி அடங்கி விட்டது. எம்டிஎன்னுடன் இணையாததால் சில அபாயங்கள் நீங்குகின்றன என்று அந்த பங்கினை அதிக விலையில் வாங்கி வைத்து ஆசையுடன் காத்திருந்த பலருக்கு பாரதி ஒரு பெரிய புஸ்வாணமாகவே அமைந்தது. இரண்டாவது புஸ்வானம் - ரிலையன்ஸ் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு கொடுப்பதாக அறிவித்தது. இந்தியாவின் 'நம்பர்-ஒன்' வணிகத் தாளான எகோநோமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தீபாவளி வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டதாக முதல் பக்கத்தில் தலைப்ப...

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...