Tuesday, September 1, 2009

பங்குச்சந்தை வெற்றிப்பயணம் - எந்த பாதை உங்கள் பாதை?


பங்குசந்தை வெற்றிப் பயணத்திற்கு உதவக் கூடிய மூன்று பாதைகளை இது வரை பார்த்தோம்.

வாரன் பபெட் போல தொலை நோக்குடன் வருங்காலத்தை கணித்து பங்குகளை தேர்வு செய்யும் அறிவுபூர்வமான வழி, அதிரடியாக சந்தையின் அன்றாட நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு அல்லது அதற்கேற்றார் போல வேகமாக காய்களை நகர்த்தும் சாமர்த்திய வழி, பங்குகளை சேமிப்பின் ஒரு பகுதியாக, நீண்டகால முதலீட்டாக மட்டுமே பார்க்கும் பொறுமை வழி என்று மூன்று வழிகளை பற்றிய மேலோட்டமான விளக்கங்களைப் பார்த்தோம். இவை மட்டுமல்லாமல் பங்கு சந்தை ஜாம்பவான்கள் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் அதிபுத்திசாலி (துணை) பாதை ஒன்றையும் பார்த்தோம்.

இந்த மூன்று பாதைகளில் ஒன்றை மட்டுமே விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு அதிலேயே பயணம் செய்ய வேண்டியதில்லை. ஒருவரால் மூன்று பாதைகளிலும் கூட மாறி மாறி பயணிக்க முடியும்.

இந்த பாதைகள் பங்குசந்தைக்கான மூன்று வித அணுகுமுறைகளை பிரித்துக் காட்டவே தவிர ஒன்றுடன் ஒன்று முற்றிலும் வேறுபட்டவை அல்ல.

பல ஜாம்பவான்கள் துவக்கத்தில் எந்த வழியில் பயணித்தாலும் காலம் செல்ல செல்ல முதலாவது பாதைக்கும் அதிபுத்திசாலி துணைப் பாதைக்கும் மாறி விடுகிறார்கள்.

உங்களுக்கான பாதையை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஏன், ஒரு தனிப் பாதையை கூட உருவாக்கலாம்.

போகும் பாதையை விட பயணத்தில் ஒருவர் காட்டும் உறுதியே அவரை வெற்றிக்கு இட்டு செல்கிறது.

பொதுவாகவே முதல் பாதையில் வாரன் பபெட் போன்ற பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்ற மாயை உண்டு. உண்மை என்னவென்றால் அவர்களும் கூட சிறிய முதலீட்டாளர்களாகவோ குறுகிய கால வர்த்தகர்களாகவோ தமது பங்கு சந்தை பயணத்தை தொடங்கினாலும் காலபோக்கில் முதல் பாதைக்கு மாறி விட்டனர்.

ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னபடி, நாமெல்லோரும் அவர்கள் ஒரு கடினமான கணித முறையை பயன்படுத்தி பங்குகளை தேர்வு செய்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்க அவர்களோ எளிமையான முறையிலேயே முதலீடுகளை செய்கிறார்கள்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், சென்ற வருடம் நிதி நெருக்கடியில் இருந்து அமெரிக்காவை மீட்க அந்த நாட்டு அரசு புதிய (சிறிய) கார்களை வாங்குவதற்காக பொதுமக்களுக்கு மானியம் வழங்கியது. ஊடகங்கள் அரசு இவ்வாறு செய்வது அரசின் நிதி நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்று விவாதித்துக் கொண்டிருக்க, பங்கு நிபுணர்கள் பலரும் நிதி சிக்கலை விளக்கும் கலைச் சொற்களை தேடிக் கொண்டிருக்க, வாரன் பபெட்டோ, சீனாவில் உள்ள சிறிய கார் தயாரிக்கும் வாகன நிறுவனம் ஒன்றை விலைக்கு வாங்கி விட்டார். இன்றைய தேதியில் அவருக்கு பல பில்லியன் டாலர் லாபம் என்று தகவல்கள் சொல்கின்றன.

இப்படி ஒரு தகவலை எப்படி, எந்த கோணத்தில், அதிகம் சிரமப் படுத்திக் கொள்ளாமல், நேரடியாக, எளிமையாக பார்க்கிறோம் என்பதில்தான் புத்திசாலிதனத்தின் ரகசியம் அடங்கியிருக்கிறது.

ஆங்கிலத்தில் சொல்வார்கள் "Common sense is not that common"

இன்று இரண்டாவது பாதையில் அதிகம் பயணிக்கும் இந்திய பங்கு வர்த்தகர்களும் சாமான்யப் பட்டவர்கள் அல்ல. நடப்பு காளை ஓட்டத்தின் முதல் பாதியில் சற்று தடுமாறினாலும், இரண்டாவது கட்டத்தில் வெளுத்து வாங்கி விட்டார்கள். குறைந்த முதலீட்டில் அதிக வர்த்தகம் செய்ய உதவும் எதிர்கால நிலைகளை பொறுத்தவரை இந்திய பங்கு சந்தைகள் மேற்குலக பங்குசந்தைகளையும் (எண்ணிக்கை சதவீதத்தில்) விஞ்சியவை.

பங்கு சந்தையில் ஒரு சொல்வழக்கு உண்டு. காளைகள் வெற்றி பெறுகிறார்கள் தோல்வி பெறுகிறார்கள். அதேபோல கரடிகள் வெற்றி பெறுகிறார்கள் தோல்வி பெறுகிறார்கள். இடையில் மாட்டிக் கொள்ளும் பன்றிகளோ உருத்தெரியாமல் நசுக்கப் படுகிறார்கள். எனவே பங்கு சந்தைக்கு வருபவர்கள் காளையாகவோ கரடியாகவோ இருக்கலாம். கண்டிப்பாக பன்றியாக மட்டும் இருக்கக் கூடாது.

மூன்றாவது பாதையும் சிறந்த பாதையே! அதிகம் அலட்டிக் கொள்ளாமல், பங்குகளை நீண்ட கால முதலீடுகளாக மட்டுமே பார்த்தவர்கள் மிகப் பெரிய வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள். பல தலைமுறைகளாக, சொத்தின் ஒரு பகுதியாக பங்குகள் கைமாறிய கதைகள் கூட உண்டு. அதே சமயம், சந்தையில் பெரிய சாதனைகள் செய்ய வேண்டும், பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்க்கு இந்த பாதை உகந்தது இல்லை என்பது போல தோன்றினாலும், இந்த பாதையில் பயணிப்பவரின் பொறுமையும் அதிகம் அலட்டிக் கொள்ளாத தன்மையும் வெற்றியின் அடிப்படை அவசியம் ஆகும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

பங்குசந்தையை பொறுத்தவரை இங்கு சொன்ன மூன்று பாதைகளில் எந்த பாதையில் பயணித்தாலும் வெற்றி நிச்சயம். ஆழம் தெரியாமல் காலை விடுபவர்கள் மட்டுமே மூழ்கி போய் விடுகிறார்கள். பங்குசந்தையின் ஆழத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று பின் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

இந்த பதிவை முடிப்பதற்கு முன்னர் ஒருவிஷயம்.

அருமை நண்பர் தாமஸ் ரூபன் அவர்கள் முந்தைய பதிவுகளின் முக்கிய கருத்துக்களை தொகுத்து கொடுத்துள்ளார். அவருக்கு நன்றிகள் பல தெரிவிப்பதுடன் அந்த கருத்துக்களை உங்கள் பார்வைக்காக இங்கு சமர்ப்பிக்கிறேன்.

"மூன்று பாதைகளும் நன்றாக உள்ளது. அதில் எனக்குப்பிடித்த சில அறிவுரைகள் (கருத்துகள்) பயனுள்ளதாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.

பங்குசந்தைகள் பற்றி மட்டுமல்ல பங்கினை சார்ந்த நிறுவனத்தைப் பற்றியும் அதன் துறையைப் பற்றியும் ஓரளவுக்கு நல்ல ஞானம் இருக்க வேண்டும்.

நிறுவனத்தின் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை ஓரளவுக்கு துல்லியமாக கணிக்கும் திறமும் தேவைப் படும்.

அதிகாரபூர்வமான அல்லது ஒரிஜினல் தகவல்களை மட்டுமே அதிகம் உபயோகிக்கிறார்கள். நிறுவனத்தின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்றி, கடும் உழைப்பின் விளைவு. பொறுமை எனும் தவத்திற்கு கிடைத்த வரம்.

சந்தையில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைப்பவர்கள். செய்திகளை சந்தைக்கு முந்தியே அறிந்து கொள்வதில் அல்லது புரிந்து கொள்வதில்தான் இவர்களின் பலம் அடங்கி இருக்கிறது.

இவர்களுடைய முதலீடு இவர்கள் சொந்த பணத்தின் உதவியுடனேயே அமைகிறது. அதுவும் தனது சொந்த பணத்தின் ஒரு பகுதி, அதாவது முழுதும் இழந்தாலும் தனது சாதாரண வாழ்க்கையை பெருமளவுக்கு பாதிக்காது என்ற அளவில் மட்டுமே இவர்கள் சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.

முதலீடுகளை ஒரே நாளில் செய்யாமல், தன்னிடம் காசு சேரும் போதெல்லாம் அதில் ஒரு பகுதியை மட்டுமே சந்தையில் முதலீடு செய்கிறார்கள். நம்பகமான துறை/நிறுவனங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஒருவித முதலீட்டுக் கொள்கையை ஆரம்பத்திலேயே தேர்ந்தெடுத்து அதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இவர்களின் பொறுமை அலாதியானது.இவர்களுடைய பொறுமை பங்குகளை நீண்ட கால முதலீடுகளாக மட்டுமே பார்க்கும் இயல்பிலானது.

இவர்களின் பொறுமை அலாதியானது.இவர்களுடைய பொறுமை பங்குகளை நீண்ட கால முதலீடுகளாக மட்டுமே பார்க்கும் இயல்பிலானது.

"நல்ல" நிறுவனங்களின் பங்குகளை மட்டும் அவற்றின் பங்கு வெளியீடுகளில் (IPO) மட்டும் முதலீடு செய்ய வேண்டும்.

ரிலையன்ஸ், லார்சென், பெல் போன்ற லாஜ்கேப் பங்குகளில் முதிலீடு செய்ய வேண்டும்.

நீங்கள் கூறிய இவற்றை கடைப்பிடித்தால் வெற்றிகரமான முதிலீட்டாளர் ஆகலாம்.(முதல் மற்றும் மூன்றாவது பாதையில்)

பதிவுக்கு நன்றி தொடருங்கள்.""

பயணம் தொடரும்.

பின்குறிப்பு: பலநாட்கள் கவனிப்பாரின்றி கிடந்த மைத்தாஸ் பங்கு, இன்று பல ஊடகங்களிலும் காட்சியளித்ததை கவனித்திருப்பீர்கள். இது போன்ற பங்குகளை எப்படி முன்கூட்டியே கண்டுபிடிப்பது என்பது பற்றிய தொழில் ரகசியம் விரைவில் இந்த பதிவில் வெளிவரும்.

நன்றி.

16 comments:

tataindiaxenon said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com

வால்பையன் said...

அனைத்துமே பயனுள்ள தகவல்கள்!

Thomas Ruban said...

//அருமை நண்பர் தாமஸ் ரூபன் அவர்கள் முந்தைய பதிவுகளின் முக்கிய கருத்துக்களை தொகுத்து கொடுத்துள்ளார். அவருக்கு நன்றிகள்//

என் மேல் நீங்கள் வைத்துள்ள அன்புக்கும் , நட்புக்கும் நன்றி சார்.

பூவோடு சேர்ந்த,நாறும் மணக்கும் என்பதற்கு ஏற்ப உங்கள் பதிவின் மூலமாக உங்கள் கருத்துகளை படித்து நாங்களும் முன்னேறிக்கொண்டு உள்ளோம். அதற்கு உங்களுக்கு தான் அய்யா கோடானகோடி நன்றிகள் கூற கடமை பட்டுள்ளோம்.

//பலநாட்கள் கவனிப்பாரின்றி கிடந்த மைத்தாஸ் பங்கு, இன்று பல ஊடகங்களிலும் காட்சியளித்ததை கவனித்திருப்பீர்கள்//

மைத்தாஸ் பங்கு வாங்க திங்கள்கிழமை வாய்ப்பு கிடைத்தது பயன் படுத்திக்கொண்டேன்.(110Rsவிலையில்100nos வந்ததால் மலை போனால் ----என்று ஆலோசித்து வாங்கினேன்) 5% தினமும் அதிகரித்து ப்ப்ரிஸ்யாகிவிடுகிறது.

சரியான நேரத்தில் சரியான (தக்க)அறிவுரைகளுடன் பரிந்துரைத்த உங்களுக்கு நன்றி.(கடவுள் காட்டுவார், ஊட்டமாட்டார் - என்பதை நம்புபவன் நான்).

//இது போன்ற பங்குகளை எப்படி முன்கூட்டியே கண்டுபிடிப்பது என்பது பற்றிய தொழில் ரகசியம் விரைவில் பதிவில் வெளிவரும்.//

தொழில் ரகசியத்தை அறிய ஆவலோடு உள்ளேன்.

NHPC அதிகம் விலை ஏறாததற்கு காரணம் அதிகபடியான பிரிமியம் மட்டுமில்லை, அதிகபடியான பங்கு எண்ணிக்கையும் ஒரு காரணம் என நான் நினைக்கிறேன்.

வரப்போகிற OIL-IPO அதிகபடியான பங்கு எண்ணிக்கை(2.64கோடி) கொண்டுள்ளதே. சரியான விலைதானா? இந்த OIL-IPO பற்றி விரிவான பதிவை (நண்பர் அகில்க்கும் நன்றி) எதிர்பார்க்கிறேன் சார்.

உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்குவதர்க்கு மனம்மார்ந்த நன்றிகள் சார்..

Joe said...

Very useful post!

Keep up the good work.

Maximum India said...

நன்றி வால்பையன்!

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//பூவோடு சேர்ந்த,நாறும் மணக்கும் என்பதற்கு ஏற்ப உங்கள் பதிவின் மூலமாக உங்கள் கருத்துகளை படித்து நாங்களும் முன்னேறிக்கொண்டு உள்ளோம். அதற்கு உங்களுக்கு தான் அய்யா கோடானகோடி நன்றிகள் கூற கடமை பட்டுள்ளோம்.//

நாம் எல்லோரும் சேர்ந்தே முன்னேறுவோம்! அதுதான் இந்த தொடர் பதிவின் முக்கிய நோக்கம்.

//மைத்தாஸ் பங்கு வாங்க திங்கள்கிழமை வாய்ப்பு கிடைத்தது பயன் படுத்திக்கொண்டேன்.(110Rsவிலையில்100nos வந்ததால் மலை போனால் ----என்று ஆலோசித்து வாங்கினேன்) 5% தினமும் அதிகரித்து ப்ப்ரிஸ்யாகிவிடுகிறது.

சரியான நேரத்தில் சரியான (தக்க)அறிவுரைகளுடன் பரிந்துரைத்த உங்களுக்கு நன்றி.(கடவுள் காட்டுவார், ஊட்டமாட்டார் - என்பதை நம்புபவன் நான்). //

ரொம்ப சந்தோஷம். அதே சமயம் இது போன்ற பங்குகள் அபாயம் நிறைந்தவை. பங்கினையும் நிறுவனம் தொடர்பான செய்திகளையும் தொடர்ந்து கவனித்து வருவது உங்கள் பொறுப்பு.

இப்போது ஐ.எல்.எப்.எஸ். நிறுவனம் இந்த பங்கை சுமார் 112 அளவில் சந்தையில் வாங்க முன் வந்திருப்பதால் இப்போதைக்கு இந்த விலைக்கு கீழே போவது கடினம். நீங்களும் நூற்றி பத்தை ஸ்டாப் லாசாக வைத்துக் கொண்டு, முதலீட்டை தொடருங்க. இன்னும் கூட மேலே போக வாய்ப்பு உண்டு. பின்னர் உங்களுக்கு விருப்பமான அளவில் லாபம் பண்ணிக் கொள்ளுங்கள்

//தொழில் ரகசியத்தை அறிய ஆவலோடு உள்ளேன்.//

ஒரு பங்கு செய்திகளில் வருவதற்கு முன்னரே தேர்வு செய்து முதலீடு செய்வது சற்று கடினமான காரியம். சந்தையில் ஓரளவுக்கு அனுபவம் இருந்தால் மட்டுமே இப்படி முதலீடு செய்ய முடியும். இந்த தொடர் பதிவின் இறுதிக் கட்டத்தில் இந்த ரகசியம் தெளிவாக்கப் படும்.

//NHPC அதிகம் விலை ஏறாததற்கு காரணம் அதிகபடியான பிரிமியம் மட்டுமில்லை, அதிகபடியான பங்கு எண்ணிக்கையும் ஒரு காரணம் என நான் நினைக்கிறேன். //

சரியாக சொன்னீர்கள்.

//வரப்போகிற OIL-IPO அதிகபடியான பங்கு எண்ணிக்கை(2.64கோடி) கொண்டுள்ளதே. சரியான விலைதானா? இந்த OIL-IPO பற்றி விரிவான பதிவை (நண்பர் அகில்க்கும் நன்றி) எதிர்பார்க்கிறேன் சார்.//

விரிவாக சொல்ல முயற்சிக்கிறேன்.

//உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்குவதர்க்கு மனம்மார்ந்த நன்றிகள் சார்..//

உங்களுடைய அன்பும் ஆதரவும் பெருத்த உற்சாகத்தை கொடுக்கிறது. மேலும் பதிவுக்காக நான் REFER செய்யும் புத்தகங்கள் மற்றும் வரைபடங்கள் எனது அறிவையும் விசாலமாக்குகிறது.

நன்றி.

Maximum India said...

நன்றி ஜோ!

பொதுஜனம் said...

அந்த கடைசியில் சொல்லும் ரகசியத்தை இப்பவே சொன்னால் என்ன ? ரகசியம் அறிய விரும்பும் நண்பருக்கு ஒரு ரகசியம்.. பங்கு மார்கட்டில் எந்த ரகசியமும் ஒரு நாள் கூட உயிர் வாழ்ந்ததில்லை. பட்டு திருந்தி தெளிந்தவர்களே அதிகம். நடைமுறையில் செய்து தெரிந்து புரிந்து கொண்டு அடுத்த அடி வைப்பது தான் ரகசியம். இதுக்காக ஏழுமலை கடல் தாண்டி பூதத்திடம் சண்டை எல்லாம் போட வேண்டாம். ஏன் என்றால் அப்படி ஒன்று இல்லவே இல்லை.

Thomas Ruban said...

//ரொம்ப சந்தோஷம். அதே சமயம் இது போன்ற பங்குகள் அபாயம் நிறைந்தவை. பங்கினையும் நிறுவனம் தொடர்பான செய்திகளையும் தொடர்ந்து கவனித்து வருவது "உங்கள் பொறுப்பு."//

நன்றாக ஆலோசித்து தான் வாங்கினேன்.உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி சார்.

//விரிவாக சொல்ல முயற்சிக்கிறேன்.//

நன்றி சார்.

//உங்களுடைய அன்பும் ஆதரவும் பெருத்த உற்சாகத்தை கொடுக்கிறது. மேலும் பதிவுக்காக நான் REFER செய்யும் புத்தகங்கள் மற்றும் வரைபடங்கள் எனது அறிவையும் விசாலமாக்குகிறது.//

நன்றி சார்.

Thomas Ruban said...

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி நலமுடன் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

DG said...

//காளைகள் வெற்றி பெறுகிறார்கள் தோல்வி பெறுகிறார்கள். அதேபோல கரடிகள் வெற்றி பெறுகிறார்கள் தோல்வி பெறுகிறார்கள். இடையில் மாட்டிக் கொள்ளும் பன்றிகளோ உருத்தெரியாமல் நசுக்கப் படுகிறார்கள். எனவே பங்கு சந்தைக்கு வருபவர்கள் காளையாகவோ கரடியாகவோ இருக்கலாம். கண்டிப்பாக பன்றியாக மட்டும் இருக்கக் கூடாது.//
super வ்

DG

Naresh Kumar said...

மிகுந்த பயனுள்ள பதிவு சந்தை நிலவரம் (வழக்கம் போல)

அதில் தாமஸ் ரூபணின் கருத்துக்கள் இன்னும் அழகு சேர்க்கின்றன...

மிக்க நன்றி!!!

Maximum India said...

நன்றி பொதுஜனம்!

//அந்த கடைசியில் சொல்லும் ரகசியத்தை இப்பவே சொன்னால் என்ன ? ரகசியம் அறிய விரும்பும் நண்பருக்கு ஒரு ரகசியம்.. பங்கு மார்கட்டில் எந்த ரகசியமும் ஒரு நாள் கூட உயிர் வாழ்ந்ததில்லை. பட்டு திருந்தி தெளிந்தவர்களே அதிகம். நடைமுறையில் செய்து தெரிந்து புரிந்து கொண்டு அடுத்த அடி வைப்பது தான் ரகசியம். இதுக்காக ஏழுமலை கடல் தாண்டி பூதத்திடம் சண்டை எல்லாம் போட வேண்டாம். ஏன் என்றால் அப்படி ஒன்று இல்லவே இல்லை.//

உங்கள் கேள்வியிலேயே விடையும் அடங்கி இருக்கிறது. அனுபவத்தை மிஞ்சிய பாடம் எதுவும் இல்லை என்றாலும் அந்த அனுபவத்திற்காக நாம் கொடுக்கும் விலையும் எடுத்துக் கொள்ளும் கால அவகாசமும் குறைவாக இருக்க வேண்டும். இல்லையென்றால், தலை சொட்டையான பின்னர் கிடைக்கும் சீப்பு போல ஆகி விடும் அனுபவம்.

இந்த பதிவு மற்றும் முந்தைய பதிவில் சொன்னது போல, "அடிபட்ட பங்குகளில்" இருந்து ஒரு மைத்தாஸ் போன்ற பங்கை தேர்ந்தெடுக்க சற்று அதிகமாகவே அனுபவம் தேவைப் படுகிறது. ஏற்கனவே சில பங்குகளை தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றதன மூலம் கிடைத்த துணிச்சலால்தான் நான் இந்த பங்கின் பெயரை (ஊடகங்களில் தகவல் வரும் முன்னரே) வெளியிட்டேன்.

இந்த தொடர்பதிவில் முதலில் பங்கு சந்தைகள் பற்றிய அடிப்படை அம்சங்களை வெளியிட்ட பின்னர், கடைசி உபபாதை பற்றிய அதிக விளக்கங்களை கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

நன்றி.

Maximum India said...

//ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி நலமுடன் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.//

கண்டிப்பாக!

நன்றி.

Maximum India said...

நன்றி DG!

Maximum India said...

//மிகுந்த பயனுள்ள பதிவு சந்தை நிலவரம் (வழக்கம் போல) //

நன்றி நரேஷ் குமார்! உங்கள் பதிவுகளை கூட நான் தொடர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். சமூக அக்கறையுடன் நீங்கள் இடும் பதிவுகள் பாராட்டத் தக்கவை.

//அதில் தாமஸ் ரூபணின் கருத்துக்கள் இன்னும் அழகு சேர்க்கின்றன...//

நானும் வழிமொழிகிறேன்.

நன்றி.

Blog Widget by LinkWithin