Saturday, September 5, 2009

பூனைக்கு யார் மணி கட்டுவது?


சென்ற வாரத்தில் வெளியிடப் பட்ட இந்திய பொருளாதார வளர்ச்சி அளவு கிட்டத்தட்ட எதிர்பார்த்த அளவிலேயே அமைந்து விட சந்தைக்கு பெரிய அளவில் சந்தோஷ ஆச்சரியங்கள் கிடைக்காமல் போனது. உலக சந்தைகளும் குறிப்பாக அமெரிக்க சந்தைகள் அதிக அளவில் முன்னேறாமல் போகவே , 4750 என்ற நிபிட்டி நிலையை முறியடிக்க நமது சந்தைக்கு வலுவில்லாமல் போய் விட்டது.

நிபிட்டி 4750 என்ற நிலையை முழுமையாக முறியடிக்க வேண்டுமென்றால், சந்தையின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் பெருமளவு முன்னேற வேண்டியிருக்கும் . ஆனால் கிருஷ்ணா-கோதாவரி எரிவாயு பங்கீட்டு விஷயத்தில் முன்னுக்குப்பின் முரணான மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி ஆகியவை ரிலையன்ஸ் பங்கினை அதிகம் முன்னேற விடாமல் செய்து விட்டன. எனவே நிபிட்டி சென்ற வாரத்தின் பெரும்பாலான நாட்களில் வலுவிழந்தே காணப் பட்டது.

வாரத்தின் கடைசி நாளன்று வெளியாகவிருந்த அமெரிக்க வேலை இழப்பு விகிதம் எதிர்பார்ப்பை விட குறைவாக இருக்கும் என்ற யூகம் சந்தையை வீறு கொண்டு எழ உதவியது. இருந்தாலும் கூட, சந்தையால் சென்ற வாரத்தின் முழு இழப்பையும் ஈடு கட்ட முடியாமல் போனது.

நமது சந்தை முடிவடைந்த பின்னர் வெளியிடப் பட்ட அமெரிக்க வேலை இழப்பு விகிதம் எதிர்பார்ப்புக்கு மாறாக மிக அதிகமாகவே இருந்தது. வேடிக்கை என்னவெனில், மிகவும் எதிர்பார்க்கப் பட்ட இந்த தகவல், எதிர்ப்பார்ப்புக்கு மாறாகவே இருந்தாலும் ஏதோ ஒரு சப்பைக் கட்டு கட்டி விட்டு அமெரிக்க சந்தைகள் பெருமளவு முன்னேறி விட்டன.

அதே சமயம், சென்ற வாரம் உலக சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததும், தங்க விலை கிடுகிடுவென்று உயர்ந்து ஆயிரம் டாலருக்கு அருகில் முடிந்ததும், பாதுகாப்பான நாணயமாக கருதப் படும் ஜப்பானிய யென் தொடர்ந்து நான்காவது வாரமாக உயர்ந்ததும் கவனிக்கப்பட வேண்டியவை. பொதுவாக இது போன்ற நிகழ்வுகள், பங்கு சந்தையின் உயர்வு கிட்டத்தட்ட முடிவை நெருங்கி விட்டன என்பதை குறிப்பனவாகும்.

பொருளாதார மீட்சி ஓரளவுக்கு உறுதியாகி விட்டாலும், முழுமையான மீட்சிக்கு அதிக காலம் பிடிக்கும் என்று கருதப் படுகிறது. அமெரிக்கா உலக சந்தைகளில் டாலர் பணத்தை இறக்கி விடுவது இப்போதைக்கு நிற்காது என்றும் யூகிக்கப் படுகிறது. எனவே டாலர் பணத்திற்கு அதிக மதிப்பில்லாமல் போகும் என்ற பயத்தினாலும், பங்கு சந்தைகளும் அதிக அளவில் ஏற்கனவே உயர்ந்து விட்டதனாலும், உலகின் நிரந்தர கரன்சியாக கருதப் படும் தங்கத்தில் சர்வதேச நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் சந்தைகளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதையும் நாம் மறக்கக் கூடாது. நமது பங்கு சந்தையின் வேகமான உயர்வு கிட்டத்தட்ட இறுதிகட்டத்திற்கு வந்து விட்டாலும், இந்த இறுதிகட்டத்தின் நீளம் எவ்வளவு என்று அறுதியிட்டு சொல்ல முடியாது.

ஒருவேளை, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் சம்பந்தமாக ஏதேனும் பெரிய நல்ல செய்தி வந்து விட்டாலோ அல்லது ஊடகங்களால் புதிதாக உருவாக்கப் பட்டுவிட்டாலோ, நிபிட்டி 4750 நிலையை முழுமையாக முறியடித்து விட்டு அடுத்த இலக்கான 4900-5000 நோக்கி முன்னேறலாம்.


ஆனால் அவ்வாறான முன்னேற்றத்தில், வர்த்தகர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஆக மொத்தத்தில், தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றம், டாலர் நிலை, சீனா சந்தைகளின் போக்கு ஆகியவற்றை பொறுத்தே நமது சந்தைகளின் முன்னேற்றம் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி!

8 comments:

ரஹ்மான் said...

/நிபிட்டி 4750 என்ற நிலையை முழுமையாக முறியடிக்க வேண்டுமென்றால், சந்தையின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் பெருமளவு முன்னேற வேண்டியிருக்கும் . ஆனால் கிருஷ்ணா-கோதாவரி எரிவாயு பங்கீட்டு விஷயத்தில் முன்னுக்குப்பின் முரணான மத்திய அரசின் நடவடிக்கைகள்//
காங்கிரஸ் மற்றும் பி,ஜே,பி.யின் கரிசனம் முகேஷுக்கு எப்போதுமே உண்டு, ஆனால் அணிலோ எதிர்கட்சியான முலாயம் சிங் பக்கம்,காங்கிரஸும் முலாயமும் இப்போது கூட்டாகச் சேர்ந்து ஆட்சி அமைத்திருந்தால் இந்த பிரச்சினை இவ்வளவு பெரிதாக வெடித்திருக்காது,ஆனால் காங்கிரஸும் முலாயமும் எதிரும் புதிருமாக இருப்பதால் பிரச்சினை உக்கிரமாகிக் கொண்டே செல்கிறது.
//பொருளாதார மீட்சி ஓரளவுக்கு உறுதியாகி விட்டாலும், முழுமையான மீட்சிக்கு அதிக காலம் பிடிக்கும் என்று கருதப் படுகிறது. அமெரிக்கா உலக சந்தைகளில் டாலர் பணத்தை இறக்கி விடுவது இப்போதைக்கு நிற்காது என்றும் யூகிக்கப் படுகிறது. எனவே டாலர் பணத்திற்கு அதிக மதிப்பில்லாமல் போகும் என்ற பயத்தினாலும், பங்கு சந்தைகளும் அதிக அளவில் ஏற்கனவே உயர்ந்து விட்டதனாலும், உலகின் நிரந்தர கரன்சியாக கருதப் படும் தங்கத்தில் சர்வதேச நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன என்று நினைக்கிறேன்.//
இதன் தாக்கம் ஏற்றுமதியாளர்களுக்கும் ஐ,டி.கம்பனிகளுக்கும் மிக அதிகமாக இருக்கும்.
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.பதிவுக்கு நன்றி சார்.

Maximum India said...

//இதன் தாக்கம் ஏற்றுமதியாளர்களுக்கும் ஐ,டி.கம்பனிகளுக்கும் மிக அதிகமாக இருக்கும். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.//

உண்மைதான் ரஹ்மான்!

இன்னும் சிறிது காலத்தில் அமெரிக்காவில் ஏராளமான வங்கிகள் மூடப் படும் என்று சொல்கிறார்கள். பார்ப்போம்! என்ன நடக்கிறதென்று?

நன்றி.

Thomas Ruban said...

//தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றம், டாலர் நிலை, சீனா சந்தைகளின் போக்கு ஆகியவற்றை பொறுத்தே நமது சந்தைகளின் முன்னேற்றம் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.//

சரியாக சொன்னீர்கள் சார்.

பதிவுக்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

DG said...

//ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் சம்பந்தமாக ஏதேனும் பெரிய நல்ல செய்தி வந்து விட்டாலோ அல்லது ஊடகங்களால் புதிதாக உருவாக்கப் பட்டுவிட்டாலோ, நிபிட்டி 4750 நிலையை முழுமையாக முறியடித்து விட்டு அடுத்த இலக்கான 4900-5000 நோக்கி முன்னேறலாம்.

ஆனால் அவ்வாறான முன்னேற்றத்தில், வர்த்தகர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். //
எச்சரிக்கைக்கு நன்றி சார்

Maximum India said...

நன்றி DG!

வால்பையன் said...

கச்சா எண்ணை பார்த்தீர்களா?
நான் எதிர்பார்த்த மாதிரியே 67$ வரை வந்தது

Maximum India said...

//கச்சா எண்ணை பார்த்தீர்களா?
நான் எதிர்பார்த்த மாதிரியே 67$ வரை வந்தது//

நீங்க யாரு தல?

கமாடிட்டி கிங்'காச்சே?

:-)

Blog Widget by LinkWithin