Wednesday, September 16, 2009

பங்குச்சந்தை வெற்றிபயணம் - ஒரு விளையும் பயிர்!


சென்ற வருடம் வங்கிகளுக்கெல்லாம் குறிப்பாக தனியார் வங்கிகளுக்கெல்லாம் போதாத காலமாக இருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். கடினமான சூழ்நிலையிலும் தனது சிறப்பான செயல்பாட்டை தக்க வைத்துக் கொண்ட ஒரு வங்கியைப் பற்றி இங்கு பார்ப்போம்.

ஏற்கனவே சொன்னபடி ஒரு பங்கினை ஆராய்வது எப்படி என்பதை ஒரு நடைமுறை பயிற்சி மூலம் நேரடியாக புரிந்து கொள்வது, எளிமையாகவும் அதே சமயத்தில் மனதில் ஆழமாக பதியும் படி இருக்கவும் வாய்ப்புண்டு. அந்த வகையில் இந்த தொடர்பதிவில் இரண்டாவது முறையாக (முதல் பதிவு இங்கே) ஒரு நிறுவனத்தைப் பற்றி இங்கு ஆராய்வோம். நாம் பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளவிருக்கும் இந்த நிறுவனம் ஒரு வங்கி. பெயர் யெஸ் பேங்க் (Yes Bank Ltd)

ஒரு நிறுவனத்தைப் பற்றி ஆராய்வதற்கு முன்னர், அந்த நிறுவனம் புவியியல் ரீதியாக அமைந்துள்ள நாட்டை (இங்கே இந்தியா) பற்றியும், சார்ந்துள்ள துறையைப் (இங்கே வங்கித்துறை) பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். வாய்ப்புக்களையும் அபாயங்களையும் (opportunities and threats), ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றாலும் நேரமின்மை காரணமாக இங்கு சில மேலோட்டமான தகவல்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

இந்தியா ஒரு வளரும் நாடு. இன்னமும் கூட பல ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை காண முடியும். அதே சமயம், உயரும் பணவீக்கம், குறையான கட்டுமான வளர்ச்சி போன்றவை பலவீனங்கள் ஆகும்.

இந்தியாவில் பல வங்கிகள் இருந்தாலும், இந்திய வங்கித்துறை இன்னமும் அடைய வேண்டிய தூரம் ஏராளமாக உள்ளது. வேகமாக வளரும் தொழிற்துறை மற்றும் மாறி வரும் மக்களின் மனப்பாங்கு (Demographic Change), உயரும் பொருளாதார நிலை ஆகியவை வங்கித் துறைக்கு சாதக அம்சங்கள். அதே சமயம், வாராக் கடன், வலுவற்ற, நிலையற்ற அரசுக் கொள்கைகள் பாதக அம்சங்கள் ஆகும்.

இப்போது யெஸ் பேங்க் பற்றி பார்ப்போம்.

அறிவை நம்பிய (Knowledge Banking) ஒரு தனியார் வங்கியாக வங்கித்துறையில் சிறந்த அனுபவம் கொண்ட ரானா கபூர் அவர்களால் துவங்கப் பட்டது இந்த வங்கி.

இந்த வங்கியில் என்னை கவர்ந்த சில அம்சங்கள் கீழே.

அனுபவம் வாய்ந்த அதே சமயம் குறிப்பிடத்தக்க அளவு துடிப்பாக உள்ள நிர்வாகத் தலைமை.

தொழிற் நுட்பத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் வங்கி இது.

ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள்ளேயே, லாப அளவு பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்ற தனியார் துறை வங்கிகளுக்கெல்லாம் மிகச் சிரமமான வருடமாக இருந்தாலும் கூட, சென்ற வருடமும் கூட இந்த வங்கி சிறப்பான முறையில் லாபம் ஈட்டியது கவனிக்கத் தக்கது.

உயரிய அளவில் உள்ளவர்களுக்காக மட்டுமே (Wholesale Banking) அதிகமாக வங்கி சேவையை வழங்கி வந்த இந்த வங்கி இப்போது சிறு நுகர்வோர்களுக்காகவும் (Retail Banking) அதிக அளவில் வங்கி சேவையை வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத் தக்க அம்சம். இதற்காக இந்தியாவின் பல இடங்களிலும் புதிய கிளைகளை துவக்கவுள்ளது.

(மேலும் விபரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும்)

இது போல இளமையான, துடிப்பான, பெரிய அளவில் வளரும் ஆர்வமுள்ள, தொழிற் நுட்பத்தை அதிகம் நம்பும் ஒரு நிறுவனம் பங்கு முதலீட்டுக்கு மிகவும் ஏற்றது என்று நம்புகிறேன்.

அதே சமயத்தில் எவ்வளவுதான் நல்ல நிறுவனம் என்றாலும், அந்த நிறுவனத்தின் பங்குகளை எந்த விலை கொடுத்து வாங்குகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றி அமையும்.

இந்த வங்கியைப் பொறுத்த வரை ஒரு பங்கு ருபாய் நூற்று தொண்ணூறு அளவில் விற்பனையாகிறது. இதன் மொத்த சந்தை மதிப்பு (Total Market Capitalization) சுமார் 5700 கோடி ரூபாய் ஆகும். அதாவது 5700 கோடி ருபாய் முதலீடு கடந்த வருடம் சுமார் முன்னூறு கோடி சம்பாதித்துள்ளது. விலை - வருமான விகிதம் (P/E Ratio) பதினேழாக உள்ளது.

ஒரு நிறுவனம் தனது வாழ்க்கை சுழற்சியில் (life cycle), வயது அதிகமாக அதிகமாக இந்த விலை-வருமான விகிதம் குறைவாகிக் கொண்டே போகும். (ஒரு மனிதனின் உயர வளர்ச்சி (Growth rate) விகிதத்தைப் போல)

அந்த வகையில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இந்த விகிதம் பதினைந்தாக இருக்கும் என்று அனுமானித்துக் கொள்வோம். (இந்த விகிதம் சந்தையின் அப்போதைய மனப்போக்கிற்கு தகுந்தாற் போல மாறக் கூடியது) மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 9000 கோடி ரூபாயாக இருக்க வேண்டுமென்றால், இந்த நிறுவனம் அந்த ஆண்டு குறைந்த பட்சம் அறுநூறு கோடி ருபாய் லாபம் ஈட்ட வேண்டும். சந்தை மதிப்பு உயரும் போது, நமது பங்கின் மதிப்பு கூடவே உயரும். புதிதாக பங்குகள் ஏதும் வெளியிடப் படவில்லையென்றால், ஒரு பங்கின் விலை அப்போது சுமார் 300 ரூபாயாக இருக்க வாய்ப்புண்டு.

மேலே சொன்னவையெல்லாம் ஒரு கணிப்பு மட்டுமே. எல்லாமே தலைகீழாக போகவும் வாய்ப்புக்கள் உண்டு. உதாரணமாக நாட்டின் வளர்ச்சி அல்லது வங்கித் துறையின் வளர்ச்சி தடைபடலாம். நிறுவனத்தின் தலைமையில் மாற்றம் அல்லது நிறுவன செயல்பாடுகளில் குறைபாடு, எதிர்பார்த்த அளவு லாபம் ஈட்ட முடியாமல் போதல் போன்ற அபாயங்களும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக பங்குசந்தையில் ஒரு பெரிய வீழ்ச்சி கூட ஏற்படலாம்.அதனால்தான் பங்கு சந்தை முதலீடுகள் அபாயம் மிக்கவை என்று சொல்கிறார்கள்.

எல்லாமே நல்ல படியாக நடந்தால் மட்டுமே பங்குகள் மேலே செல்ல வாய்ப்புக்களுண்டு.

கடந்த சில நாட்களில் இந்த பங்கு ஏராளமாக உயர்ந்தது இந்த பங்கினை பற்றி எழுத ஒரு தயக்கத்தை கொடுத்தது. இருந்தாலும், பங்கு முதலீட்டுக்கு ஏற்ற ஒரு வளரும் நிறுவனத்தைப் பற்றி எழுதுவது இந்த தொடர்பதிவுக்கு உதவும் என்பதால் இங்கு பதிந்துள்ளேன்.

இந்த பங்கினை வாங்க விரும்புபவர்கள், இந்த நிறுவனத்தின் இணையதளத்தை பார்த்து அதிகப் படியான விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த வங்கியின் கிளைகளுக்கு நேரில் சென்று கூட (வாடிக்கையாளர்களிடம் விசாரித்தும் கூட), வங்கியின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

சந்தையின் வேகம் (பங்கின் வேகமும் கூட) இப்போது அதிகமாக இருப்பதால், நீண்ட கால முதலீடு செய்ய விரும்புவர்கள், ஒரே சமயத்தில் வாங்காமல் இடைவெளி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வேறு வேறு விலைகளில் (Accumulation at periodic intervals at various levels) வாங்கலாம்.

ஒரு முதலீடு என்பது நீண்ட கால தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது ஆகும். எனவே, முதலீட்டுக்கு பிறகு நிறுவனம், துறை மற்றும் நாட்டின் பொருளாதாரம் (உலகமயமாக்கலுக்கு பின்னர் மற்ற நாடுகளைப் பற்றியும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியிருக்கிறது) ஆகியவற்றை பற்றிய செய்திகளை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நமது கணிப்புக்கள் தவறானவை அல்லது தவறுகின்றன என்று தெரிய வந்தால், இந்த நிறுவனத்தை பற்றி மீண்டும் ஒரு முறை (உடனடியாக, காலந்தாழ்த்தாமல்) பரிசீலித்து (Review the performance and the environment) தகுந்தாற்போல முடிவெடுக்கலாம்.

ஒரு பங்கினை எப்படி ஆராய வேண்டும், அதன் விலை எவ்வளவு உயரும் என்பதை எப்படி கணிக்க வேண்டும், கணிப்புகள் தலைகீழாக போக வாய்ப்புக்கள் யாவை, அப்படியானால் என்ன செய்வது என்றெல்லாம் மேலோட்டமாக இங்கே பார்த்தோம். இன்னும் கூட விரிவாக பின்வரும் பதிவுகளில் விவாதிப்போம்.

பயணம் தொடரும்.

டிஸ்கி: இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.

4 comments:

ரஹ்மான் said...

நானும் பல நாட்கள் yes bank நோட்டமிட்டுக் கொண்டு இருக்கிறேன்.தங்களின் இந்த பதிவு எனக்கு மிகவும் பேருதவியாக இருக்கிறது.
//கடந்த சில நாட்களில் இந்த பங்கு ஏராளமாக உயர்ந்தது இந்த பங்கினை பற்றி எழுத ஒரு தயக்கத்தை கொடுத்தது. இருந்தாலும், பங்கு முதலீட்டுக்கு ஏற்ற ஒரு வளரும் நிறுவனத்தைப் பற்றி எழுதுவது இந்த தொடர்பதிவுக்கு உதவும் என்பதால் இங்கு பதிந்துள்ளேன்.//
எந்த ஒரு பங்கும் தொடர்ந்து ஏறினால் நம்மை பயம் கொள்ளச் செய்வது இயற்கைதானே.

இன்றைய தினத்தில் சந்தை ரிலையன்ஸ் பங்கு எவ்வாறு இருக்கின்றதோ அதன்படியே இருக்கும் காளைகளுக்கு ஒரு சின்ன தடையாக இருக்கக்கூடும் எனவே பங்குகள் வாங்குபவர்கள் இன்னும் சிறிது காலம் தாழ்த்தலாம் என் நினைக்கின்றேன்,

தங்கள் பதில் என்ன குரு?

மேலும் எனக்கு இன்று ஒரு சின்ன sms கிடைத்தது.
தங்கள் பார்வைக்காக
Nifty closed above 4930 at 4958.It has triggered a change in moods.Global
> markets are supporting the move. Our second target in Nifty 5388 is in
> view.............
> Preferred strategy:Go long in good counters so long as Nifty is above
> 4900.Stay away when Nifty is between 4700-4900.Short below 4700.
> Remember trend is our friend and do not try to short at the top-It need
> not be the top.Let the market start falling to short.Market may rally
> beyond imagination in last leg.Take benefit out of it and think about
> short after clear signals.It's being mentioned because lot of retail
> clients are trying to outsmart market anticipating a correction.
> So go long above 4900.

அதேபோல் இன்னொரு முக்கியமான் செய்தி
Swine flue க்கு மருந்து கண்டுபிடிக்க இருப்பதாகவும் அதன் விலை எவ்வளவு இருந்தாலும் வாங்குங்கள் 20 ரூபாயை நெருங்கும் எந்த விதத்திலும் நஷ்டம் கிடையாது.
தங்கள் இந்த sms பற்றி கருத்து என்ன?
மேலும் உங்கள் தொடர் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி சார்..

Thomas Ruban said...

இது நல்ல சிறந்த நிறுவனம் தான் சார்.உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி சார் இதில் எந்த விலையில் உள்ளே போகலாம்.ஏன் என்றால்,
52 week low=41/-(9-3-09)
52 week high=202/-(17-9-09)
All time high=277/-(10-1-09)
இப்போது விலையில் 192/-உள்ளதே.

இந்த நிறுவனத்தின் இயக்குனரில் ஒருவர் மும்பை தாஜ் ஹோட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதலின்ப் போது இறந்தார் அல்லவா, அந்த பிரச்சனைகள் முடிந்ததா ?

அரசாங்கம் வங்கியில் உள்ள விவசாயிகளின் கடனை சுமார் 65,oooகோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்தார்களே அதை அரசாங்கம் வங்கிகளுக்கு திரும்ப கொடுத்தா?

வங்கிகள் கூறும் வாராக்கடன்களின் புள்ளிவிவரங்கள் சரியானதா?

வங்கி பங்குகள் எல்லாம் அதிகம் உயர்ந்து உள்ளதால், அதிகம் உயராத,ஹோட்டல்(HOTELLEELA,INDHOTEL), டெக்ஸ்டைல்ஸ்(BOMDYEING,SKUMARSYNF), ஏர்வேஸ்(KFA ,JETAIRWAYS ) பங்குகள் வாங்கலாமா?(2010 ல் காமன்வெல்த் போட்டிகள் நடப்பதால் உயருமா?)

உங்களுடைய ஆலோசனை என்ன சார் (தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்).

பதிவுக்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி சார்..

//இன்றைய தினத்தில் சந்தை ரிலையன்ஸ் பங்கு எவ்வாறு இருக்கின்றதோ அதன்படியே இருக்கும் காளைகளுக்கு ஒரு சின்ன தடையாக இருக்கக்கூடும் எனவே பங்குகள் வாங்குபவர்கள் இன்னும் சிறிது காலம் தாழ்த்தலாம் என் நினைக்கின்றேன்,

தங்கள் பதில் என்ன குரு?//

பொதுவாகவே ஒரு பங்கினை பரிந்துரை செய்வது நம்மை தார்மீக நிர்பந்தங்களுக்கு உள்ளாக்குகிறது. டெக்னிகல் அனாலிசிஸ் என்றால் ஒரு ஸ்டாப் லாஸ் கொடுத்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அடிப்படை சிறப்பம்சங்கள் பேரில் பரிந்துரை என்றால் அந்த நிறுவனத்தை follow செய்ய வேண்டிய கட்டாயங்கள் ஏற்படுகின்றன. சொல்லப் போனால், இந்த நிறுவனத்தின் பங்குகள் ஏற்கனவே என்வசம் இருந்தாலும், பதிவை பார்த்தவர்களும் வாங்குவதற்கு வசதியாக விலை கீழே வர வேண்டும் என்றே இன்று விரும்பினேன். ஆனால் கீழே வந்த மாதிரி வந்து விட்டு மேலே சென்று விட்டது

//மேலும் எனக்கு இன்று ஒரு சின்ன sms கிடைத்தது.
தங்கள் பார்வைக்காக
Nifty closed above 4930 at 4958.It has triggered a change in moods.Global
> markets are supporting the move. Our second target in Nifty 5388 is in
> view.............
> Preferred strategy:Go long in good counters so long as Nifty is above
> 4900.Stay away when Nifty is between 4700-4900.Short below 4700.
> Remember trend is our friend and do not try to short at the top-It need
> not be the top.Let the market start falling to short.Market may rally
> beyond imagination in last leg.Take benefit out of it and think about
> short after clear signals.It's being mentioned because lot of retail
> clients are trying to outsmart market anticipating a correction.
> So go long above 4900.

அதேபோல் இன்னொரு முக்கியமான் செய்தி
Swine flue க்கு மருந்து கண்டுபிடிக்க இருப்பதாகவும் அதன் விலை எவ்வளவு இருந்தாலும் வாங்குங்கள் 20 ரூபாயை நெருங்கும் எந்த விதத்திலும் நஷ்டம் கிடையாது.
தங்கள் இந்த sms பற்றி கருத்து என்ன?
மேலும் உங்கள் தொடர் பயணம் தொடர வாழ்த்துக்கள்//

இது போன்று, தவறினால் பறந்து விடும். ஆனால் மாட்டிக் கொண்டால் அதல பாதாளத்திற்கு வீழ்ந்து விடும் என்ற நிலையில் வர்த்தகம் செய்வது மிகவும் கடினமான காரியமே.

எனக்கு தெரிந்த வரை இப்போதைய காளை ஓட்டம் நிற்க வேண்டுமென்றால் ஒரு மிகப் பெரிய கெட்ட செய்தி வர வேண்டும். ஒருவேளை அப்படி ஒரு செய்தி வந்து விட்டால் எந்த ஒரு ஸ்டாப் லாஸும் நம்மைக் காப்பாற்றாது.

என்னுடய பாணியையும் இங்கே சொல்லி விடுகிறேன்.

ஒவ்வொரு நாளும் என்னிடம் உள்ள சிறப்பாக செயல் படும் பங்குகளை (மிக) கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக் கொண்டே போகிறேன். செயல்படாத பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே போகிறேன். பங்குகள் விற்ற லாபத்தில் அவ்வப்போது தங்க நிதிகளையும் வாங்குகிறேன். மொத்த முதலீட்டு அளவு அதிகம் மாறாமல் பார்த்துக் கொள்கிறேன்.

சந்தையில் தொடர்ந்து மேலேறும், அடிப்படையில் சிறந்த பங்குகளை மட்டுமே கைவசம் வைத்திருக்க வேண்டும். அதாவது எவ்வளவு வீழ்ந்தாலும், இன்னும் வாங்கவே விரும்புகிற பங்குகளை அடிப்படையில் சிறந்த பங்குகளை மட்டுமே கைவசம் வைத்திருக்க வேண்டும்.

காற்றில் கிடைக்கும் செய்திகளை நம்பி வாங்குவதை தவிர்க்கவும். சொந்த ஆராய்ச்சியை அதிகம் நம்பவும்.

தோல்வி பற்றிய பயமில்லாமல், அதே சமயம் தோல்வியை பற்றிய விழிப்புணர்வுடன் வர்த்தகம் செய்யவும்.

Be aware of the maximum possible losses. Trade within maximum risk limits. But trade without any fear.

வாழ்த்துக்கள்

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//இது நல்ல சிறந்த நிறுவனம் தான் சார்.உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி சார் இதில் எந்த விலையில் உள்ளே போகலாம்.ஏன் என்றால்,
52 week low=41/-(9-3-09)
52 week high=202/-(17-9-09)
All time high=277/-(10-1-09)
இப்போது விலையில் 192/-உள்ளதே. //

இங்கேயும் என்னுடைய பாணியை சொல்லி விடுகிறேன்.

ஒரு நிறுவனம் எனக்குப் பிடித்திருந்தால், நான் விலைகளை பற்றி அதிகம் கவலைப் படுவதில்லை. கவனம். எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே பங்குகளை வாங்குவேன். மற்றவர்களின் பரிந்துரையால் அல்ல.

சிறப்பாக செயல்படும் சில நிறுவனங்களை own செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவேன். அது போன்ற ஒரு நிறுவனம் இது.

அதே சமயம், மிக அதிக விலையில் ஒரு நிறுவனத்தை வாங்கி விட்டு பின்னர் விலை வீழ்ச்சி ஏற்பட்டால், அது எவ்வளவு நல்ல நிறுவனமாக இருந்தாலும் சரி, மனதில் சில சஞ்சலங்கள் ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக நான் துவக்கத்தில் மிக குறைந்த அளவு பங்குகளை மட்டுமே வாங்குவேன். சில சமயங்களில் அது ஒன்றிரண்டாக கூட இருக்கும்.

ஒரு பங்கை நாம் வாங்கிய பிறகு அந்த நிறுவனத்தை மனதளவில் தொடர ஆரம்பிக்கிறோம். அதற்கு பின்னர் வரும் செய்திகள், சந்தையின் ஓட்டம் ஆகியவை சாதகமாக இருந்தால் பத்து பத்து சதவீதமாக வாங்குவேன். சந்தையின் மேலோட்டம் வேகமாக இருக்கும் போது, இந்த முறை குறைந்த லாபத்தையே கொடுக்கும் என்றாலும், சிக்கி கொள்வதில் இருந்து தப்பிக்க முடியும்.

ஒரு பெரிய பங்குச்சந்தை வித்தகர் கூறி இருக்கிறார்.

"It is very important to remain solvent in a market"

அதாவது, பங்குச்சந்தையில் லாபம் சம்பாதிக்கலாம் அல்லது நஷ்டமாகலாம். ஆனால் ஒருபோதும் ஓட்டாண்டியாகக் கூடாது. ஏனென்றால், அப்புறம் திரும்பி வர முடியாது.

//அரசாங்கம் வங்கியில் உள்ள விவசாயிகளின் கடனை சுமார் 65,oooகோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்தார்களே அதை அரசாங்கம் வங்கிகளுக்கு திரும்ப கொடுத்தா?

வங்கிகள் கூறும் வாராக்கடன்களின் புள்ளிவிவரங்கள் சரியானதா?

வங்கி பங்குகள் எல்லாம் அதிகம் உயர்ந்து உள்ளதால், அதிகம் உயராத,ஹோட்டல்(HOTELLEELA,INDHOTEL), டெக்ஸ்டைல்ஸ்(BOMDYEING,SKUMARSYNF), ஏர்வேஸ்(KFA ,JETAIRWAYS ) பங்குகள் வாங்கலாமா?(2010 ல் காமன்வெல்த் போட்டிகள் நடப்பதால் உயருமா?)//

இந்திய வங்கிகளின் அடிப்படை அம்சங்கள் ஓரளவுக்கு சிறப்பாகவே உள்ளன. அதே சமயம், பொருளாதாரம் வேகமான வளர்ச்சி காணாவிடில் பெரிய அளவு எதிர்பார்க்க முடியாது.

சந்தைகள் இப்போது ஒரு சுழற்சி முறையில் செல்வதைப் போல தோன்றினாலும், அடிப்படை சரியில்லாத நிறுவனங்களை அல்லது துறைகளை முதலீட்டாளர்கள் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. அதாவது பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மென்ட் வீக் போன்ற நிறுவனங்கள் வேண்டவே வேண்டாம்.

அதே சமயத்தில் குறுகிய கால வர்த்தகம் செய்பவர்கள், சந்தையின் மனநிலையை சரியாக கணிக்க முடிந்தால் மட்டுமே இது போன்ற அடிப்படை வலுவில்லாத நிறுவனங்களை தொட விரும்பலாம் .

பங்குச்சந்தையில் வெற்றி பெற்றவர்களில் பலர் உயரும் பங்குகளையே வாங்குகிறார்கள். கீழே வரும் பங்குகளை வாங்குவது, விழுகின்ற கத்தியை கரம் நீட்டி பிடிப்பது போல என்று கூட சொல்லலாம்.

நன்றி.

Blog Widget by LinkWithin