Wednesday, December 17, 2008

இது ஒரு (வாழ்க்கை) சமையல் குறிப்பு


மூன்று சம அளவு பாத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றிலும் நீரை ஊற்றுங்கள். ஒரு பாத்திரத்தில் கேரட், இன்னொரு பாத்திரத்தில் முட்டை மற்றும் கடைசி பாத்திரத்தில் கொஞ்சம் காஃபி பொடி போடுங்கள். அனைத்து பாத்திரங்களையும் சுமார் பதினைந்து நிமிடங்கள் சூடு படுத்துங்கள். என்னடா இது? புது வகை சமையல் குறிப்பாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இதில் ஒரு சுவையான வாழ்க்கை தத்துவம் அடங்கி உள்ளது.

எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கை பாதை எப்போதுமே எளிமையானதாகவும் சந்தோசமானதாகவும் அமைந்து விடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் கடும் போட்டிகளையும், சில சமயங்களில் பயங்கர விரோதங்களையும் கூட சந்திக்க வேண்டி இருக்கிறது. உதாரணமாக, புதிய அலுவலகம், புதிய தொழில், புதிய உறவுகள் மற்றும் புதிய இருப்பிடங்களில் ஏற்படும் சில கசப்பான அனுபவங்கள். இத்தகைய கடினமான சூழல்களில் நாம் கொதி நீரில் வீழ்ந்து கிடப்பது போல துடித்துப் போகிறோம். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களையும் அவற்றை ஏற்படுத்தும் சுற்றத்தாரையும் (சமூகம்) ஒவ்வொருவரும் மூன்று வகையாக எதிர்கொள்ளலாம்.

முதல் வகையானவர்கள் கேரட் போன்றவர்கள். இவர்கள் சுற்றத்தாருடன் போராடி பிரச்சினைகளைத் தீர்த்து விடலாம் என்று எண்ணும் கடினமான இறுக்கமான மனதுடையவர்கள். ஆனால் சுற்றம் (சமூகம்) இவர்களை விட மிகவும் பெரியது . அவற்றில் உள்ள பிரச்சினைகளும் மிகவும் வலிமையானவை. எனவே அந்த பிரச்சினைகள் பெரும்பாலும் இவர்களைத் தீர்த்து விடுகின்றன. தொடர்ந்து போராடுவதன் மூலம் இவர்கள் துவண்டு போய் விடுகிறார்கள். இறுதியாக உறுதி குலைந்து தோல்வியில் துவண்டு போய் விடுகிறார்கள்.

இரண்டாம் வகை முட்டை போன்றவர்கள். இவர்கள், ஏதோ அட்ஜஸ்ட் செய்து கொண்டு போய் காலத்தை தள்ளி விடலாம் என்று எண்ணும் வழவழ கொளகொள ஆசாமிகள். சுற்றத்தாரை இளகிய மனதுடன் எதிர் கொள்கிறார்கள். ஆனால், பிரச்சினைகளை தீர்க்க இளகின மனது மட்டும் போதாது. பிரச்சினைகளை சரிவர புரிந்து கொள்ளும் திறமை வேண்டும். பெரும்பாலும் சுற்றத்தார் இவர்களது இளகிய மனதை சரிவர புரிந்து கொள்வதில்லை. மாறாக தொடர்ந்து வரும் பிரச்சினைகள் இவர்கள் மனதை இறுக்கி விடுகின்றன. இறுதியாக உலகத்தைக் குறை கூறுபவர்களாக இவர்கள் மாறி விடுகிறார்கள்.

மூன்றாம் வகையினர் காஃபி பொடி போன்றவர்கள். இவர்கள் ஆளுமை குணம் மிக்கவர்கள். சுற்றத்தார் இவர்களின் சொந்த குணத்தை மாற்ற இவர்கள் அனுமதிப்பதில்லை. பிரச்சினைகளின் சந்திக்கும் போது இவர்கள் தன் ஆளுமைத் திறத்தை வெளிப் படுத்துகிறார்கள் (மணம் வீசுகிறார்கள்). சுற்றுப் புற சூழ்நிலையை இவர்கள் (விரும்பும்) குணத்திற்கு மாற்றுகிறார்கள். சுற்றத்தைப் (சமூகத்தை) புரிந்து கொண்டு அதோடு கலந்து வாழ்ந்து, வாழும் சூழலையே இவர்கள் மணம் வீச செய்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?

ஒரு கப் காஃபி குடித்துக் கொண்டே யோசியுங்கள்.

நன்றி.

5 comments:

வால்பையன் said...

எனக்கு காப்பி பிடிக்காது என்பதால் நான் மூன்றாம் பிரிவை சேர்ந்தவன் இல்லை என்றாகிவிடுமா?

எனக்கு முட்டை மிகவும் பிடிக்கும் என்பதால் இரண்டாம் வகையை சேர்ந்தவன் ஆகிவிடுவேனா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

இதுவும் ஒரு உளவியல் சார்ந்த பார்வை தான்!

நீங்கள் சொன்ன மூன்று குணங்களுமே எல்லா மனிதர்களிடமும் கலந்து கட்டி இருக்கும்!

தேவையான போது தேவையானது வெளிப்படும்

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//எனக்கு காப்பி பிடிக்காது என்பதால் நான் மூன்றாம் பிரிவை சேர்ந்தவன் இல்லை என்றாகிவிடுமா?

எனக்கு முட்டை மிகவும் பிடிக்கும் என்பதால் இரண்டாம் வகையை சேர்ந்தவன் ஆகிவிடுவேனா?//

காஃபி பிடிக்குமா முட்டை பிடிக்குமா என்பது முக்கியமல்ல. காஃபியின் குணங்கள் பிடிக்குமா அல்லது முட்டையின் குணங்கள் பிடிக்குமா என்பதே முக்கியம்.

நன்றி

Maximum India said...

இதை லேசாக மாற்றிச் சொல்லுலாம். தேவையான (தருணங்களில்) போது தேவையான குனைத்தை நாம் வெளிப்படுத்துவோம்.

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//நீங்கள் சொன்ன மூன்று குணங்களுமே எல்லா மனிதர்களிடமும் கலந்து கட்டி இருக்கும்!//

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எந்த குணம் அதிகம் உள்ளது என்பது முக்கியம்.

//தேவையான போது தேவையானது வெளிப்படும்//

இதை லேசாக மாற்றிச் சொல்லுலாம். தேவையான (தருணங்களில்) போது தேவையான குனைத்தை நாம் வெளிப்படுத்துவோம். இதை ஆங்கிலத்தில் Moments of Truth என்பார்கள்.

இன்றைக்கு எனக்கு ஒரு அனுபவம். தவறு செய்த ஒருவனை தட்டி கேட்ட எனக்கு சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யாருமே ஆதரவு கொடுக்க முன் வரவில்லை. நான் கேள்வி கேட்க அவன் பதில் சொல்ல ஏதோ இருவர் சண்டை போடுகிறார்கள் என்று சுற்றி இருந்தவர்கள் இன்னும் ஆர்வமாக வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது எனக்கு கோபம் வந்தது. "அடப் பாவிகளா உங்களுக்காகதான் நான் குரல் கொடுக்கிறேன். ஆனால் உங்களுக்கு அதைப் பற்றிய எந்த ஒரு உணர்வும் இல்லையே " என்று.

உடனே என் மனதில் "moments of truth" பற்றி நினைத்துக் கொண்டேன். காஃபி போல இருங்கள் என்று நானே பதிவில் சொல்லிவிட்டு நானே காரட் போல மாறலாமா என்று. கோபம் கட்டுக்குள் வந்தது. எப்போதும் போல என் பதிவு எனக்கே ஒரு மிகப் பெரிய பலனை தந்தது. எனவே, மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.

"தேவையான (தருணங்களில்) போது தேவையான குணத்தை நாம் வெளிப்படுத்துவோம்."

Blog Widget by LinkWithin