ஆதி மனிதனின் தேடல்களும் அந்த தேடல்களுக்கான உந்துதல்களுமே, உலகின் இன்றைய நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படை காரணம் ஆகும். ஒரு சராசரி மனிதனின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு கூட தேடல்களும் தேடல்களுக்கான உந்துதல்களும் மிக அவசியம் இத்தகைய உந்துதல்கள் உருவாகும் விதம் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் இங்கு விவாதிப்போம்.
மனவியல் வல்லுநர், திரு.மாஸ்லொவ் அவர்களால் உருவாக்கப் பட்ட விதிகள் இவை.
மனிதனின் தனது வாழ்க்கைப் படிகளில் முன்னேறும் போது வெவ்வேறு விதமான தேவைகள் உருவாகுகின்றன.
முதலில் அடிப்படைத் தேவைகளை தீர்க்க வேண்டி மன உந்துதல்கள் ஏற்படுகின்றன . அடிப்படைத் தேவைகள் தீர்க்கப் பட்டதும் அதற்கான உந்துதல்கள் மறைந்து போகின்றன. அதே சமயத்தில், வாழ்வின் முன்னேற்றத்தின் காரணமாக புதிய தேவைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான புதிய மன உந்துதல்களும் உருவாகுகின்றன.
சமூக நாகரிக வளர்ச்சிக்கு கூட இது பொருந்தும். உதாரணமாக, இந்தியாவில் உணவு, உடை என்பது ஒரு காலத்தில் மிக அத்தியாவசிய தேவையாக இருந்தது. இப்போது உணவு உடை தேவை என்பது ஓரளவிற்கு தீர்க்கப் பட்டு விட்டதும் அதன் மீதான அக்கறை குறைந்து விட்டது. அதே சமயத்தில் மின்சாரம் என்பது நவீன யுகத்தின் அத்தியாவசிய தேவையாக இப்போது இருக்கிறது. மின் வெட்டு பிரச்சினை பெரியதாக உணரப் படுகிறது. மின்சாரம் தடங்கலின்றி கிடைக்க ஆரம்பித்து விட்டால் அதை பற்றி கவலைகளும் மறந்து போகும். வேறு புதிய உந்துதல்கள் ஏற்படும் .
மாஸ்லொவ் மனிதன் தனது வாழ்வில் அடையும் முன்னேற்றத்திற்கு ஏற்ப ஐந்து வகையான தேவைகளை (படிகளை) கண்டறிந்தார். அதன் வடிவம் கீழே.
௧. அத்தியாவசிய தேவைகள்
உணவு, உடை மற்றும் இதர உடல் ரீதியான தேவைகள் இவற்றில் அடக்கம்.
௨.பாதுகாப்பு தேவைகள்
வேலை, வீடு, காப்பீடு போன்ற தேவைகள் இவற்றில் அடக்கம்.
௩. சமூக தேவைகள்
நட்பு, குடும்பம், அன்பு பாசம், காதல் முதலியவை இவற்றில் அடக்கம்.
௪. புகழ் தேவைகள்
பணி மேன்மை, தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி, சமூகத்தில் மதிப்பு, மரியாதை மற்றும் பாராட்டு ஆகியவை இவற்றில் அடக்கம்.
௫. சுய ஊக்கி (உள்நோக்கும்- Self Actualization) தேவைகள்
வேறு எந்த தேவைகளும் இல்லாமலேயே ஏற்படும் உள் உந்துதல்கள் இவை.
உருவாக்கும் திறன், சமூக சிந்தனைகள், பிரதி பலன் பாரா உதவிகள் போன்றவை.
கவனிக்கப் பட வேண்டிய ஒரு முக்கிய விஷயம். ஒரு சராசரி மனிதன் ஒவ்வொரு படியாக முன்னேறலாம். ஒருசிலரால் மட்டுமே கீழே உள்ள படிகளை ஒரேயடியாக தாவி (skip செய்து) விட்டு நேரடியாக மேலே உள்ள படிகளுக்கு முன்னேற முடியும். அத்தகையோர் மாமனிதர்களாக கருதப் படுகின்றனர்.
முப்பது வயதுகளில் உள்ள திரைப் பட கதாநாயகர்கள் கல்லூரி மாணவர்களாக நடித்துக் கொண்டிருக்க, அதே வயது ஒத்தவர்கள் ஓரளவிற்கு கல்வி வேலை, குடும்பம் மற்றும் குழந்தை என்று அமைந்த பிறகு வாழ்வில் அடைய மேலும் ஏதுமில்லை என்று உற்சாகம் இழந்து போகிறார்கள்
ஐம்பது வயதுகளில் உள்ள அரசியல்வாதிகள் இளைய தலைவர்களாக உணரப் படும் வேளையில் அவரது வயது ஒத்தவர்கள் பணி ஓய்வை எதிர்பார்த்துக் கொண்டும் பணி ஓய்வு பெற்ற பிறகு மீதம் உள்ள வாழ்வை எப்படி கடத்துவது என்றும் குழம்பி போகிறார்கள்.
இந்தியாவின் பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் 70-80 வயதுகளில் அரசியல் மற்றும் அரசுப் பணிகளை திறம் பட கவனித்துக் கொண்டு இருக்க, அவர்களின் வயதை ஒத்தவர்கள் கிழம் அல்லது பெரிசு என்று மற்றவரால் அழைக்கப் பட்டு தனது உயிர் நீப்பு எப்போது என்று மட்டுமே வருத்தத்துடன் எதிர் நோக்கி உள்ளனர்.
முதலில் குறிப்பிடப்பட்டு உள்ளவர்களுக்கும் இரண்டாவதாக குறிப்பிடப்பட்டு உள்ளவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
முதலில் குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் பெரும்பாலும் (வாழ்வின்) நான்காவது மற்றும் ஐந்தாவது படிகளில் உற்சாகமாக வாழ்ந்து கொண்டிருக்க நம்மில் பலரும் அன்றாட சமூக பொருளாதார பிரச்சினைகளினால் இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது படியிலேயே நின்று போகிறோம்.
வாழ்கை முழுக்க உற்சாகமாக இருக்க ஒரே வழி, முடிந்த வரை வேகமாக ஐந்தாவது படிக்கு முன்னேறி விடுவதுதான்.
இப்போது சொல்லுங்கள். நீங்கள் இருப்பது எந்த படியில்? எவ்வளவு வேகமாக ஐந்தாம் படிக்கு செல்லப் போகிறீர்கள்?
நன்றி
24 comments:
படிக்கும் போது படிகளின் உயரம் குறைவாக தான் உள்ளது,
முயற்சி செய்தால் எளிதில் தாண்டி விடலாம் போல
அன்புள்ள வால்பையன்
பின்னூட்டத்திற்கு நன்றி
//முயற்சி செய்தால் எளிதில் தாண்டி விடலாம் போல//
நிச்சயமாக :)
///தேடல்களும் தேடல்களுக்கான உந்துதல்களும் மிக அவசியம் ///
மொத்தத்தில் ஒரு உற்சாகமான பதிவு ...வாழ்த்துக்கள்..
//இந்தியாவின் பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் 70-80 வயதுகளில் அரசியல் மற்றும் அரசுப் பணிகளை திறம் பட கவனித்துக் கொண்டு இருக்க, அவர்களின் வயதை ஒத்தவர்கள் கிழம் அல்லது பெரிசு என்று மற்றவரால் அழைக்கப் பட்டு தனது உயிர் நீப்பு எப்போது என்று மட்டுமே வருத்தத்துடன் எதிர் நோக்கி உள்ளனர்.//
உங்களது பதிவுகள் பெரும்பாலும் positive approach உள்ளது பாராட்டத்தக்கது.இருந்தும் அடைப்பானுக்குள் இருக்கும் அரசியல் அங்கங்கள்தான் உங்கள் கண்ணுக்கு உதாரணமாகத் தெரிகிறார்களா?உங்களுக்குத் தெரிந்த பெரியவர் யாரையாவது அறிமுகப் படுத்துங்கள்.
கட்டுரை படி த்தேன் . நீங்கள் சொன்ன படி தன் பெரும்பாலான வர்களுக்கு வாழ்க்கை உள்ளது. சின்ன வயசில் படி க்கிறோம். நாம் உருப்ப் படி யாக , ஒழுங்காய் படி க்க வேண்டிஉள்ளது.அடுத்த படி யாக வேலை கிடைக்க பல படி ஏற வேண்டி உள்ளது. வேலை கிடைத்து பின் நல்ல படி யாக திருமணம் செய்து மாமனார் வீட்டு படி ஏற வேண்டும்.. பின் குழந்தைகள் பிறந்து அட்மிசன் கிடைக்க ஸ்கூல் படி ஏற வேண்டும்.நடுவில் அலுவலகத்தில் படி படி யாய் ஏற வேண்டும். வயதான பின் பாவத்தை போக்க கோயில் படி.. கஷ்டம் வந்தால் கடன் வாங்க நண்பர் வீட்டு படி.வியாதி வந்தால் ஆஸ்பத்ரி படி. தமிழ் நாட்டில் சில பெண்களுக்கு அடுப் படி. பல ஆண்களுக்கு டாஸ்மாக் படி. நீங்க சொன்னது அஞ்சு படி.நான் சொன்னது வாழ்க்கை படி. நூறாவது ப்ளாக்குக்கு வாழ்த்தி மென் மேலும் சிறப்பாக செய்ய வாழ்த்து படி.சாரி பார் திஸ் கடுப்படி.
கட்டுரை படி த்தேன் . நீங்கள் சொன்ன படி தன் பெரும்பாலான வர்களுக்கு வாழ்க்கை உள்ளது. சின்ன வயசில் படி க்கிறோம். நாம் உருப்ப் படி யாக , ஒழுங்காய் படி க்க வேண்டிஉள்ளது.அடுத்த படி யாக வேலை கிடைக்க பல படி ஏற வேண்டி உள்ளது. வேலை கிடைத்து பின் நல்ல படி யாக திருமணம் செய்து மாமனார் வீட்டு படி ஏற வேண்டும்.. பின் குழந்தைகள் பிறந்து அட்மிசன் கிடைக்க ஸ்கூல் படி ஏற வேண்டும்.நடுவில் அலுவலகத்தில் படி படி யாய் ஏற வேண்டும். வயதான பின் பாவத்தை போக்க கோயில் படி.. கஷ்டம் வந்தால் கடன் வாங்க நண்பர் வீட்டு படி.வியாதி வந்தால் ஆஸ்பத்ரி படி. தமிழ் நாட்டில் சில பெண்களுக்கு அடுப் படி. பல ஆண்களுக்கு டாஸ்மாக் படி. நீங்க சொன்னது அஞ்சு படி.நான் சொன்னது வாழ்க்கை படி. நூறாவது ப்ளாக்குக்கு வாழ்த்தி மென் மேலும் சிறப்பாக செய்ய வாழ்த்து படி.சாரி பார் திஸ் கடுப்படி.
அன்புள்ள தங்கராசா ஜீவராஜ்
//மொத்தத்தில் ஒரு உற்சாகமான பதிவு ...வாழ்த்துக்கள்..//
பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
தொடர்ந்து உற்சாகப்படுத்தும் உங்களைப் போன்றோருக்கு வந்தனங்கள்.
அன்புள்ள ராஜ நடராஜன்
பின்னூட்டத்திற்கு நன்றி.
//உங்களது பதிவுகள் பெரும்பாலும் positive approach உள்ளது பாராட்டத்தக்கது.//
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
//இருந்தும் அடைப்பானுக்குள் இருக்கும் அரசியல் அங்கங்கள்தான் உங்கள் கண்ணுக்கு உதாரணமாகத் தெரிகிறார்களா?.//
பெரும்பாலும் ஊடகங்கள் வாயிலாகவே உலகத்தைப் பார்க்கும் எனக்கு எளிதில் உதாரணம் காட்டக் கூடியவர்களாக அரசியல்வாதிகளே தென்படுகிறார்கள். மேலும், என்னால் அரசியல்வாதிகளை (மற்ற பலரைப் போல) தீயவர்களாக மட்டுமே பார்க்க முடிவதில்லை. எளிய நிலையிலிருந்து மிகப் பெரும் பொறுப்புகளுக்கு உயர்ந்த சாதனையாளர்களாகவே அரசியல்வாதிகள் என்னால் (அதிக அளவில்) உணரப் படுகிறார்கள். அரசியல்வாதிகளில் பலர் தமது இளம் வயதில் நல்ல சமூக நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் கொண்டிருந்தும், பிற்காலத்தில் பதவி வெறி, ஈகோ, குடும்ப பாசம் மற்றும் பணத்தாசை காரணமாக தவறான வழியில் சென்று விடுகிறார்கள். சாதாரண மக்களுக்கும் கூட இது போன்ற மாற்றங்கள் பொருந்தும் என்றாலும், அதிக உயரத்தில் இருந்து பெரிய தவறுகள் புரிவதால் அரசியல்வாதிகளின் தீய செயல்கள் மக்களால் அதிகம் உணரப் படுகின்றன என்பது எனது தாழ்மையான கருத்து.
//உங்களுக்குத் தெரிந்த பெரியவர் யாரையாவது அறிமுகப் படுத்துங்கள்//
என்னுடைய நண்பரின் பெரியப்பா ஒருவர் சேலத்தில் இருக்கிறார். தனது (கிட்டத்தட்ட) தொண்ணூறு வயதிலும் அவர் இன்னமும் ஓய்வெடுத்துக் கொள்ளாமல் பணிக்கு செல்கிறார். பல மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே நான் அவரைக் காணச் சென்றாலும் என்னை சரியாக நினைவு வைத்துக் கொண்டு, எனக்கு நம்மூர் பக்கமே பணி மாறுதல் பெற்றுத் தர முயற்சிப்பதாக வாக்குக் கொடுக்கிறார். தனக்கென குழந்தைகள் இல்லையென்றாலும் தனது தம்பியின் பிள்ளைகளை வாழ்வில் உயர்த்துவதையே லட்சியமாக கொண்டு இந்த வயதிலும் கடுமையாக உழைக்கும் அவர் என் கண்ணுக்கு ஒரு மகானாகவே காட்சி கொடுக்கிறார். அது போன்று தன்னலம் பாரா மனிதர்கள் எவ்வளவு வயதானாலும் என்றும் உற்சாகமாகவே இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
நன்றி.
அன்புள்ள பொதுஜனம்
பின்னூட்டத்திற்கு நன்றி.
நீங்கள் சொன்ன பல படிகளை ஒரேயடியாக தாண்டி வாழ்வின் உச்சிக்கு சென்ற பலர் சரித்திரத்தில் உண்டு. அந்த லிஸ்டில் நம் பெயர்கள் வருமாறு செய்வது நமது லட்சியமாக இருக்கட்டும்.
மேலும் உங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
முப்பது வயதுகளில் உள்ள திரைப் பட கதாநாயகர்கள் கல்லூரி மாணவர்களாக நடித்துக் கொண்டிருக்க, அதே வயது ஒத்தவர்கள் ஓரளவிற்கு கல்வி வேலை, குடும்பம் மற்றும் குழந்தை என்று அமைந்த பிறகு வாழ்வில் அடைய மேலும் ஏதுமில்லை என்று உற்சாகம் இழந்து போகிறார்கள்
உதாரணம் புதியதாக உள்ளது. வரிசை எண்களுக்கு தமிழ் எண்களை பயன்படுத்தியிருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
அன்ப,
கட்டுரை உள்ளபடியே உற்சாகத்தை தருகிறது. பாராட்டுகள். இதை உங்கள் அனுமதியுடன் எனது மாத இதழில் வெளியிட உள்ளேன். சனவரி இதழில் வெளி வரும்.
தவிர, நான் நேற்று ஒரு மேற்கோளைப் படித்தேன். "வெற்றியை வெளியில் தேடாதே. அது உன்னுள் உள்ளது". இதற்கும் படிக்கட்டுக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது. என்ன அது? நமது மூளையிலும் மனதிலும் சில வேதியியல் சமன்பாடுகள் மாறுவதே காரணம். சிலர் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்கின்றனர். வேறு சிலர் "திரை கடலோடியும் திரவியம் தேடு" என்கின்றனர். இன்னும் பலரோ, "மனித முயற்சிக்கு முடிவு எது?" என்கின்றனர்.
பல சமயங்களில், அடித்தளம் நன்றாக அமைந்து விடுகின்ற மனிதனுக்கு, படிகளை தாவிச் செல்வதில் தடை ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆனால், "இதுதான் ஆரம்பம்" என்று பிள்ளையார் சுழி போட்டு கிளம்புகிற மனிதன் எல்லாவற்றையும் சிந்திக்க வேண்டி உள்ளது. "தோற்று விட்டால் அவ்வளவுதான்!" என்ற பயமும் கூடவே ஒட்டிக் கொண்டு வருகிறது. எனவே அவன் படிகளில் ஏறினாலும் கிழே விழுந்து விடுவோமோ என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு படியாக ஏறி, மூன்று அல்லது நான்காம் படியை அடைந்தவுடன் அவனுக்கு போதும் என்று ஆகி விடுகிறது. அதற்கு இடையில், அவனை நம்பி உள்ளவர்கள் (அதாவது குடும்பத்தினர் என்று சொல்லலாம்) கொடுக்கும் தொந்தரவுகள், பிரச்சனைகள் ஆகியன வளத்த வரை போதும் என்ற மனநிலையை ஏற்படுத்தி விடுகிறது.
வீட்டில் சுகப்படுகிறவன் வெளியை வசப்படுத்துகிறான். எனவே படியில் ஏற அல்லது தாவ பல்வேறு காரணிகள் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
எனினும் தாவ வேண்டும் என்ற மன நிலையை உறுதியுடன் கொண்டிருந்தால், நிச்சயம் தாவி விடலாம். மனதிலிருந்து பிறந்தவன் தானே மனிதன். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
என்றும் அன்புடன்,
பி ஆர் ஜெயராஜன்.
அன்புள்ள மதியரசு
பின்னூட்டத்திற்கு நன்றி.
//முப்பது வயதுகளில் உள்ள திரைப் பட கதாநாயகர்கள் கல்லூரி மாணவர்களாக நடித்துக் கொண்டிருக்க, அதே வயது ஒத்தவர்கள் ஓரளவிற்கு கல்வி வேலை, குடும்பம் மற்றும் குழந்தை என்று அமைந்த பிறகு வாழ்வில் அடைய மேலும் ஏதுமில்லை என்று உற்சாகம் இழந்து போகிறார்கள்
உதாரணம் புதியதாக உள்ளது..//
உதாரணத்திற்கு வேறு எங்கும் செல்ல வில்லை. எனது சொந்த கதையே உண்டு. எனது பள்ளிப் பருவத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஆமிர் கான் (அப்போதே அவருக்கு திருமணம் ஆகி விட்டது என்பது குறிப்பிடத் தக்கது) இன்னும் இளமைத் துள்ளலுடன் கஜினியில் நடிக்கிறார். நேரில் பார்க்கும் போது ஒரு கல்லூரி மாணவன் போல தோற்றம் தருகிறார் (அவரை மிக அருகில் பார்க்க ஒரு முறை வாய்ப்பு கிடைத்தது). அவரை விட பல வருடங்கள் குறைந்த நானோ அவருக்கு பெரிய அண்ணன் போலத்தான் காட்சியளிக்கிறேன்.
நன்றி.
அன்புள்ள அட்வகேட் ஜெயராஜன் ஐயா!
//கட்டுரை உள்ளபடியே உற்சாகத்தை தருகிறது. பாராட்டுகள். இதை உங்கள் அனுமதியுடன் எனது மாத இதழில் வெளியிட உள்ளேன். சனவரி இதழில் வெளி வரும்.//
பாராட்டுக்களுக்கு நன்றி. உங்கள் இதழில் எனது கட்டுரைகள் வெளிவருவது எனக்கு பெருமை தரும் விஷயமாகும்.
//பல சமயங்களில், அடித்தளம் நன்றாக அமைந்து விடுகின்ற மனிதனுக்கு, படிகளை தாவிச் செல்வதில் தடை ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆனால், "இதுதான் ஆரம்பம்" என்று பிள்ளையார் சுழி போட்டு கிளம்புகிற மனிதன் எல்லாவற்றையும் சிந்திக்க வேண்டி உள்ளது. "தோற்று விட்டால் அவ்வளவுதான்!" என்ற பயமும் கூடவே ஒட்டிக் கொண்டு வருகிறது. எனவே அவன் படிகளில் ஏறினாலும் கிழே விழுந்து விடுவோமோ என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு படியாக ஏறி, மூன்று அல்லது நான்காம் படியை அடைந்தவுடன் அவனுக்கு போதும் என்று ஆகி விடுகிறது. அதற்கு இடையில், அவனை நம்பி உள்ளவர்கள் (அதாவது குடும்பத்தினர் என்று சொல்லலாம்) கொடுக்கும் தொந்தரவுகள், பிரச்சனைகள் ஆகியன வளத்த வரை போதும் என்ற மனநிலையை ஏற்படுத்தி விடுகிறது. //
சத்தியமான வார்த்தைகள். அதே சமயம் பிரச்சினை கொடுப்பவர்கள் குடும்பத்தினர் மட்டுமல்ல பொறாமைப் படும் சுற்றத்தினர் கூட என்று நினைக்கிறேன்.
//வீட்டில் சுகப்படுகிறவன் வெளியை வசப்படுத்துகிறான். எனவே படியில் ஏற அல்லது தாவ பல்வேறு காரணிகள் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
எனினும் தாவ வேண்டும் என்ற மன நிலையை உறுதியுடன் கொண்டிருந்தால், நிச்சயம் தாவி விடலாம். மனதிலிருந்து பிறந்தவன் தானே மனிதன். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.//
ஊக்கம் தரும் வார்த்தைகள்.
ஒரு கட்டுரையைப் படித்த திருப்தி கொடுத்த உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
மாஸ்லொவ் மனிதன் தனது வாழ்வில் அடையும் முன்னேற்றத்திற்கு ஏற்ப ஐந்து வகையான தேவைகளை (படிகளை) கண்டறிந்தார். அதன் வடிவம் கீழே.
௧. அத்தியாவசிய தேவைகள்
உணவு, உடை மற்றும் இதர உடல் ரீதியான தேவைகள் இவற்றில் அடக்கம்.
௨.பாதுகாப்பு தேவைகள்
வேலை, வீடு, காப்பீடு போன்ற தேவைகள் இவற்றில் அடக்கம்.
௩. சமூக தேவைகள்
நட்பு, குடும்பம், அன்பு பாசம், காதல் முதலியவை இவற்றில் அடக்கம்.
௪. புகழ் தேவைகள்
பணி மேன்மை, தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி, சமூகத்தில் மதிப்பு, மரியாதை மற்றும் பாராட்டு ஆகியவை இவற்றில் அடக்கம்.////
அப்படியே சேமித்து அடிக்கடி படிக்கவேண்டிய பகுதி!!!
தேவா..
அன்புள்ள தேவா
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. வளம் பெற வாழ்த்துக்கள்.
தங்களின் மீள்வருகைக்கு நன்னி.
பயணம் நல்லபடிய அமஜ்சிருக்கும்ன்னு நம்புரேன்.
//முப்பது வயதுகளில் உள்ள திரைப் பட கதாநாயகர்கள் கல்லூரி மாணவர்களாக நடித்துக் கொண்டிருக்க, அதே வயது ஒத்தவர்கள் ஓரளவிற்கு கல்வி வேலை, குடும்பம் மற்றும் குழந்தை என்று அமைந்த பிறகு வாழ்வில் அடைய மேலும் ஏதுமில்லை என்று உற்சாகம் இழந்து போகிறார்கள் //
நான் இன்னும் 2ம் நிலையையே முழுமையாக கடக்கவில்லை ((-:
// சாரி பார் திஸ் கடுப்படி.//
பொதுஜனம் என்னங்க இப்படி கடுப்படின்னு சொல்லிட்டீங்க.உங்கள் பின்னூட்டத்துக்கு நான் ரசிகன்ங்க.
// அவரை விட பல வருடங்கள் குறைந்த நானோ அவருக்கு பெரிய அண்ணன் போலத்தான் காட்சியளிக்கிறேன்.//
ஆமாம்ணா அவருக்கு ஒரு 21வயசு ஒருக்குமா உங்கலுக்கு 22 இருக்கும் இந்தவயசுல இதெல்லாம் சகஜம் தானே.
கஜினி பாத்தீங்களா எப்படி இருக்கு.
ஏன்னா நான் தமிழ்ல கமல் ரசிகன்.
ஹிந்தில அமீர் ரசிகன் :-))
அன்புள்ள கார்த்திக்
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.
//பயணம் நல்லபடிய அமஜ்சிருக்கும்ன்னு நம்புரேன்.//
உள்ளபடியே பயணம் மிக நன்றாக இருந்தது. தடுக்கினால் மனிதர்கள் மீதே விழக் கூடிய அளவுக்கு ஜனத்தொகை கொண்ட இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் மேற்கொள்ளப் படும் பயணங்கள் எப்போதுமே சுவாரஸ்யமாகவே இருக்கும். அக்கறையான விசாரிப்புக்கு மிக்க நன்றி.
//நான் இன்னும் 2ம் நிலையையே முழுமையாக கடக்கவில்லை ((-://
எந்த படியில் நீங்கள் இருந்தாலும், முழு வீச்சில் அனைத்து படிகளையும் கடக்கும் சக்தியை மட்டும் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பிற்காலத்தில் உபயோகப் படும்.
//பொதுஜனம் என்னங்க இப்படி கடுப்படின்னு சொல்லிட்டீங்க.உங்கள் பின்னூட்டத்துக்கு நான் ரசிகன்ங்க.//
நான் கூட. அவருடைய பின்னூட்டங்கள் என்னுடைய பதிவுகளுக்கு மேலும் அழகு கூட்டுகின்றன.
//ஆமாம்ணா அவருக்கு ஒரு 21வயசு ஒருக்குமா உங்கலுக்கு 22 இருக்கும் இந்தவயசுல இதெல்லாம் சகஜம் தானே.//
ஆமீரை சொல்லுங்கள். ஒப்புக் கொள்ளலாம். மிக அருகில் நேரில் பார்த்த போது கூட ஒரு கல்லூரி மாணவன் போலவே இளமையான தோற்றத்துடனும் உற்சாகத்துடனும் இருந்தார். அதே சமயம் நம்ம கத? பதிவிலேயே சொன்ன படி, இளம் வயதில் ஏற்படும் சமூக பொருளாதார போராட்டங்கள் நமக்கு விரைவில் தளர்ச்சியைத் தந்து விடுகின்றன.
//கஜினி பாத்தீங்களா எப்படி இருக்கு.
ஏன்னா நான் தமிழ்ல கமல் ரசிகன்.
ஹிந்தில அமீர் ரசிகன் :-))//
ஒரிஜினல் கஜினி எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னதான் ஆமீர் இருந்தாலும் ரீமேக் படம் அதுவும் வேறு மொழியில் பார்க்க இஷ்டம் இல்லை. ஆனால் என் நண்பர்கள் பார்த்து இருக்கிறார்கள். தமிழ் தெலுங்கு படங்கள் போல அரங்குகள் ஆரவாரம் நிறைந்து காணப்படுவதாக கூறினார்கள் . தமிழ் டைரக்டரும் தெலுங்கு தயாரிப்பாளரும் இணைந்து இந்த படத்தின் மூலம் ஹிந்தி திரை உலகிற்கு புதிய பாதையை (ஆக்ஷன் , வன்முறை மற்றும் பிரமாண்டம்) காட்டி உள்ளனர். (ஹிந்தியில் ஏற்கனவே சிவாஜி ஒரு சிறு ஆரம்பமாக இருந்தது.) இனி வரும் காலங்களில் இது போன்ற பல படங்களை ஹிந்தியில் எதிர்பார்க்கலாம்.
பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி.
நல்லா எழுதியிருக்கீங்க வழக்கம்போல. தாமதமான பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன்.
உங்கள் பெரியப்பாவைப் பத்தி இன்னும் சற்று விரிவாக எழுதலாமே, பதிவாக. வாழும் உதாரண புருஷர்களைப் பற்றி படிப்பது நல்ல உற்சாகத்தைத் தரும்
அன்புள்ள கபீஷ்
//நல்லா எழுதியிருக்கீங்க வழக்கம்போல. தாமதமான பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன்.//
தாமதமாக வந்தாலும் தவறாமல் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.
better late than never.
//உங்கள் பெரியப்பாவைப் பத்தி இன்னும் சற்று விரிவாக எழுதலாமே, பதிவாக. வாழும் உதாரண புருஷர்களைப் பற்றி படிப்பது நல்ல உற்சாகத்தைத் தரும்//
மன்னிக்கவும். அவர் என் பெரியப்பா அல்ல. எனது நண்பரின் பெரியப்பா என்றே பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன். அவரை பற்றி நான் எழுதலாம். ஆனால் அவரை பற்றி எனது நண்பர் (அவரும் ஒரு புதிய பதிவர்தான்) எழுதுவது அதிக பொருத்தமாக இருக்கும். எனவே பொதுஜனம் (voyeger) அவர்களின் காதில் இதைப் போட்டு வைக்கிறேன். அவர் பதிவில் போட்டதும் உங்களுக்கு தகவல் அளிக்கிறேன்.
நன்றி.
ஆமாம். நான் ஒரு வார்த்தையை தட்டச்சு செய்யும் போது முழுங்கி விட்டேன்.:-( சின்ன வயதிலிருந்தே இப்படித்தான் பேசும்போதும் அதே...
இனிமேல் சிரத்தையுடன் இருக்கப் பழக வேண்டும் :-)
better late than never.
எனக்குத் தெரிஞ்சு கொஞ்சம் பேர் இருக்காங்க. அதை எழுத மேலிடத்திலிருந்து அனுமதி கிடைக்கவில்லை. சுயதம்பட்டம் மாதிரி இருக்கும்னு சொல்லிட்டாங்க. கை துறுதுறுங்குது. :-):-)
அன்புள்ள கபீஷ்
//ஆமாம். நான் ஒரு வார்த்தையை தட்டச்சு செய்யும் போது முழுங்கி விட்டேன்.:-( சின்ன வயதிலிருந்தே இப்படித்தான் பேசும்போதும் அதே...
இனிமேல் சிரத்தையுடன் இருக்கப் பழக வேண்டும் :-)
better late than never.//
எனக்கும் கூட இப்படி ஒரு பழக்கம் இருந்தது. ஆனால், தவறு நேர்ந்து விடக் கூடாது என்ற அக்கறையில் திரும்ப திரும்ப படித்து குறைகளை நிவர்த்தி செய்து வந்தேன். இப்போது ஓரளவிற்கு சரியாகி விட்டது. நீங்கள் கூட சற்று கவனம் அதிகம் செலுத்தினால் இது போன்ற குறையத் தவிர்க்க முடியும்.
//எனக்குத் தெரிஞ்சு கொஞ்சம் பேர் இருக்காங்க. அதை எழுத மேலிடத்திலிருந்து அனுமதி கிடைக்கவில்லை. சுயதம்பட்டம் மாதிரி இருக்கும்னு சொல்லிட்டாங்க. கை துறுதுறுங்குது. :-):-)//
கண்டிப்பாக எழுதுங்கள். நல்ல விஷயங்களை எழுத தயங்கக் கூடாது.
Post a Comment