Skip to main content

மார்கழியைக் கொண்டாடுவோம்

என் தாயார் தனது சிறுவயதிலிருந்தே மார்கழி மாதம் காலை வேளைகளில் கோயிலுக்கு செல்லும் வழக்கம் கொண்டவர். ஒரு முறை அவரால் போக முடியாத நிலையில் வீட்டிலிருந்து ஒருவராவது மார்கழி மாதத்தின் ஒரு அதிகாலையிலாவது கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில், பதின் வயதில் பகுத்தறிவு பேசித் திரிந்த என்னை கெஞ்சிக் கூத்தாடி ஒரு வழியாக கோயிலுக்கு ஒரு விடிகாலையில் அனுப்பி வைத்தார்.

வெயில், அதிக வெயில், வெயிலோ வெயிலோ என்றே பழக்கப் பட்ட நாம் புதிதாக உணரும் அந்த அதிகாலையின் மிதமான இதமான குளிர், வேர்த்து விறுவிறுத்த முகங்களே அதிகம் பார்க்க முடிகின்ற நம்மூரில் அப்போதே மலர்ந்த மலர்களைப் போன்ற புத்துணர்வு கொண்ட முகங்களின் (கோயில்) தரிசனம், விடிந்தும் விடியாத அந்த காலை வேளையில் சோடியம் விளக்குகளின் வெளிச்சத்தில் இன்னும் அழகாக தெரியும் கோயில், இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என்று ஏங்க வைக்கிற நெய் வடியும் பொங்கல் பிரசாதம், காதுகளுக்குள் நுழைந்து இதயத்தைத் துளைத்து உயிரைத் தொடும் அந்த திருப்பாவை வரிகள், ஏதோ நம்மிடம் சொல்ல வருவது போன்ற ஒரு உணர்வைத் தரும் ஆண்டாள் தாயாரின் முகம், எல்லாவற்றிக்கும் மேலாக எம்பெருமாளின் அந்த விஷ்வரூப தரிசனம், இவை அனைத்தும் ஏதோ கடமைக்கு ஒரு நாளைக்கு மட்டும் என்று கிளம்பிய என்னை அம்மா சொல்லாமலேயே அடுத்த நாள் மட்டுமல்ல அந்த மாதம் முழுதும் கோயிலுக்கு வரச் செய்தன.

மார்கழி மாதத்தின் சிறப்பு பற்றி பல கருத்துகள் சொல்லப் படுகின்றன. நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஒரு நாளின் அதிகாலை வேளையில் மனம் மிகவும் அமைதியானதாகவும் உடல் அதிக வலு உள்ளதாகவும் இருக்கும் என்று கருதப் படுகிறது. ஒரு ஆண்டின் விடிகாலையே இந்த மார்கழி மாதம். அதாவது உத்திராயான நேரம் (அதாவது வடக்கை நோக்கி சூரியன் பார்வை நகர ஆரம்பிக்கும்) என சொல்லப் படும் தை மாதத்திற்கு முந்தின மாதம் இந்த மார்கழி. மேலும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையைத் தரும் மாதமும் இந்த மார்கழி மாதம். ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், கூடார வல்லி (கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கூட இந்த மாதத்திலேதான்) , போகி என வரிசையாக பண்டிகைகள், இசை நிகழ்ச்சிகள், கதா கலாட்சேபங்கள், பஜனைகள், தெருவை அடைக்கும் வண்ணக் கோலங்கள் (கோலப் போட்டிகள் கூட உண்டு) என நம்மூரை ஒரு பூலோக சொர்க்கமாகவே காட்டும் இந்த மார்கழி மாதம் தரும் இன்பத்தில் பங்கு பெறுவதற்காகவே உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் இந்த மாதத்தில் தமிழ் நாடு வருவதுண்டு. இந்த லிஸ்டில் இந்த முறை நானும் உண்டு. மார்கழி மாதத்திற்கு எம்மதமும் சம்மதம். வைணவ மார்க்கம் தொடங்கி வைத்த இந்த மார்கழி கொண்டாட்டத்தில் பின்னர் சைவம் மற்றும் இதர மார்க்கங்களும் பெருமளவு பங்கு கொண்டன.

எனவே நண்பர்களே! எந்த நம்பிக்கையுடைவராயினும் சரி. அதிகாலை வேளையில் எழுந்து உங்கள் நம்பிக்கைக்குரிய வழிபாட்டு தளத்திற்கு சென்று வாருங்கள். இறையிலாக் கொள்கை கொண்டவர்கள் கூட இயற்கை அழகு தவழும் இடங்களுக்கு அதிகாலையில் சென்று வரலாம்.

இந்த வருடம் நம்முடைய கண்களையும், காதுகளையும், இதயங்களையும் கொஞ்சம் அதிகமாக திறந்து வைத்து (சீக்கிரம் எழுந்து) மார்கழி தரும் உணர்வு பூர்வமான இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முயற்சி செய்வோம்.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

நன்றி.

Comments

”பூவிற்கெல்லாம் சிறகு முளைத்தது
எந்தன் தோட்டத்தில்” பாட்டு கேட்டு இருக்கிறீர்களா!

அது போல் தான் எல்லாம் மாதமும் மார்கழியாக தான் இங்கே குளிருகிறது.
//கூர்வேல் நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் //
"கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் " என்றே என் புத்தகம் சொல்கிறது. சரி பார்க்கவும்.
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் கண்ணன் கூறியாதகவும் கேட்டிருக்கிறேன் : வடக்கேயுள்ள ( இதற்கு சமமான) பருவத்தை சொல்லியிருக்கலாம்
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

நீங்கள் சொல்லும் பாடல் நான் கேட்டதில்லை (எந்தப் படம்?). அதனால் உங்கள் கருத்தை முழுமையாக புரிந்துக் கொள்ள முடியவில்லை.

இந்த முறை தமிழகத்தில் அதிக மழை இருந்ததால் அதிக குளிர் இருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே இதுவரை அவ்வளவு குளிர் தெரிய வில்லை.
Maximum India said…
அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா!

பின்னூட்டத்திற்கு நன்றி.

//"கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் " என்றே என் புத்தகம் சொல்கிறது. சரி பார்க்கவும்.//

என் புத்தகத்திலும் "கொடுந்தொழிலன்" என்றே உள்ளது. நான் இது வரை படித்து வந்தது கூட "கொடுந்தொழிலன்" என்றேதான் ஞாபகம். மேற்கண்ட தவறு விக்கிபீடியாவில் copy paste செய்ததால் நேர்ந்தது.

//"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் கண்ணன் கூறியாதகவும் கேட்டிருக்கிறேன் : வடக்கேயுள்ள ( இதற்கு சமமான) பருவத்தை சொல்லியிருக்கலாம்//

முதலாவது எழுதவேண்டும் என்று நினைத்தேன் . தவறி விட்டது. இரண்டாவது எனக்கு தெரிந்த வரை "தனுர் மாதம்" என்று நினைக்கிறேன்.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...