Monday, July 5, 2010

பொறுமையின் எல்லை எதுவரை?


ஒரு பந்த் வெற்றி பெற வேண்டுமானால் மக்களின் ஆதரவு கட்டாயம் தேவைப் படும். கடந்த பல வருடங்களாக இந்தியாவில் நடைபெற்ற பல முழு அடைப்பு போராட்டங்கள் (மேற்கு வங்கம் மற்றும் கேரளா நீங்கலாக) தோல்வி பெற்றதற்கு மக்களின் ஆதரவு இல்லாமல் போனது ஒரு முக்கிய காரணமாகும். மேலும், அரசியல் கட்சி இரட்டை நிலைப்பாடும், நீதி மன்றங்களின் தலையீடும் இந்த போராட்டங்கள் நீர்த்துப் போகச் செய்த இதர காரணங்களாக அமைந்தன. நான் மும்பையில் வசிக்கும் ஐந்து வருடங்களில் (எதிர்கட்சிகள் சார்பில்) முழுமையான பந்த் போராட்டத்தை ஒரு தடவை கூட சந்தித்தது இல்லை. ஆனால், முழு அடைப்பு போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசாங்கம் செய்த பல முயற்சிகளையும் மீறி இன்றைய போராட்டம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றி பெற்றதற்கு காரணம் என்ன என்று சற்று யோசித்தேன். எதிர்கட்சிகளின் செல்வாக்கு, கலவரம் குறித்த மக்களின் அச்சம் ஆகியவற்றையும் மீறி, மத்திய அரசின் மீது பொதுமக்களுக்கு குறிப்பாக தொழிலாளர் சமூகத்திற்கு இருக்கும் அதிருப்தியே இதற்கு முக்கிய காரணமாக தோன்றுகிறது. நிர்பந்தங்கள் இல்லாமலேயே பல தொழிலாளர் மற்றும் சிறு வணிகர் அமைப்புக்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .

ஏற்கனவே விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் குறிப்பாக எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப் பட்டுள்ள இன்றைய நிலையில், பணவீக்கம் காகித அளவில் குறைவதை கூட மத்திய அரசு விரும்ப வில்லை என்றே மனதில் படுகின்றது. உலக சந்தையில் பெட்ரோல் விலை மிகக் குறைவாக இருக்கும் இன்றைய சூழலில் மீண்டும் மீண்டும் உள்ளூர் பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்துவது அரசின் நோக்கங்களின் மீது சந்தேகத்தை உருவாக்குகிறது. அதுவும் பணவீக்கத்தை கட்டுபடுத்த இந்திய மத்திய வங்கி எடுத்த நடவடிக்கைகள் பெரிய அளவில் பலனளிக்காது போன இப்போதைய சூழலில் மத்திய அரசு ஒரு செயற்கையான விலைவாசி உயர்வை உருவாக்குவது எளிய மக்களுக்கு மனசோர்வையே அளிக்கின்றது.

சில வாரங்களுக்கு முன்னர் பத்திரிக்கைகளிலும், இணைய உலகிலும் ஐரோப்பிய தொழிற் கூட்டமைப்பினர் சிலரின் இந்தியா மீதான கருத்துக்கள் வலம் வந்தன. இந்திய அரசு பணக்காரர்களின் கரத்தை வலுப்படுத்துவதற்காக எளிய மக்களின் மீது அதிக சுமையை ஏற்றுவதாகவும் எளிய மக்கள் தெருவில் இறங்கி போராடுவதற்கு அதிக காலம் பிடிக்காது என்ற தொனியில் அந்த கருத்துக்கள் அமைந்திருந்தன. வேகமாக முன்னேறி வரும் இந்தியாவின் மீது, பொருளாதார தளர்ச்சியில் உள்ள அவர்களுக்கு பொறாமை என்று கூட நான் சந்தேகப் பட்டேன். ஆனால் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்த எதிர்கட்சிகளின் பந்த் அழைப்பு இன்று குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற்றிருப்பது அவர்களின் கருத்தின் பின்புலத்தை உறுதிப் படுத்துகின்றது.

பொதுமக்களின் துன்பங்களை தொடர்ந்து மத்திய அரசாங்கங்கள் அலட்சியம் செய்தால் இந்தியாவில் பெரிய போராட்டங்கள் தோன்றும் அபாயங்கள் உள்ளன என்பதை கட்டியம் கூறும் நிகழ்வாகவே இன்றைய முழு அடைப்பு போராட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். கூடிய சீக்கிரம் தனது தவறுகளை திருத்திக் கொண்டு, எளிய மக்களின் துயரை தீர்க்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்த பட்சம் அவர்களின் துயரத்தை அதிகப் படுத்தாமல் இருப்பது நம் நாட்டிற்கு இந்த அரசாங்கம் செய்யும் பெரிய தொண்டு என்றே நினைக்கிறேன்.

நன்றி!

5 comments:

Thomas Ruban said...

முழு அடைப்பு போராட்டம் இந்தியா முழுவதும்(தமிழ்நாடு உட்பட) வெற்றி பெற்றுள்ளது.

//உலக சந்தையில் பெட்ரோல் விலை மிகக் குறைவாக இருக்கும் இன்றைய சூழலில் மீண்டும் மீண்டும் உள்ளூர் பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்துவது அரசின் நோக்கங்களின் மீது சந்தேகத்தை உருவாக்குகிறது.//

உண்மை தான் சார் அதுவும் பெட்ரோல் நிறுவனங்களே உலக கச்சா எண்ணை விலையை பொறுத்து தன்னிச்சியாக விலை நிர்னித்துக்கொள்ளாம் என்பது அநியாயம்.

ஐந்து ஆண்டு காலம் யாரும் நம்மை அசைக்க முடியாது என்று ஆணவத்தில் ஆடுகிறார்கள்.இப்படி ஆணவத்தில் அழிந்தவர்கள் பலபேர்...

வரவர சோனியாவின் மீது பொதுமக்கள் வைத்துயிருக்கும் மதிப்பும்,நம்பிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

பதிவுக்கு நன்றி சார் ஏன் இந்த வார சந்தை நிலவரம் பற்றி எழுதவில்லை.

Muthuramalingam said...

நீங்க சொல்வது நூறு சதவிதம் உண்மை. இந்திய அரசாங்கம் சாதரண மக்களை பற்றி கவலை படுவதே இல்லை.

Muthuramalingam said...

நீங்க சொல்வது நூறு சதவிதம் உண்மை. இந்திய அரசாங்கம் சாதரண மக்களை பற்றி கவலை படுவதே இல்லை.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//ஏன் இந்த வார சந்தை நிலவரம் பற்றி எழுதவில்லை.//

வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் இருந்ததால், சில வாரங்களாக சந்தை நிலவரத்தைப் பற்றி பதிய முடிய வில்லை. மேலும் எனக்கு இப்போது பணியிட மாறுதல் இருப்பதால் இன்னும் கூட சில வாரங்கள் வரை பதிவுலகில் அடிக்கடி தலை காட்ட முடியாமல் இருக்க நேரிடலாம். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.

நன்றி!

Maximum India said...

நன்றி முத்துராமலிங்கம்!

Blog Widget by LinkWithin