முகரம் பண்டிகையை முன்னிட்டு கர்நாடகத்தின் வடபகுதியில் உள்ள எனது அலுவலகத்தில் இந்த வாரம் பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டனர். அங்குள்ள ஒரு தமிழ் நண்பரிடம் இது பற்றி விவாதிக்கும் போது, அவருடைய தொழிற்சாலையில் கூட பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டதாகவும், இந்த பகுதியில் முகரம் வெகு விசேஷமாக கொண்டாடப் படுவதாகவும் கூறினார். முகரத்தை ஒரு இஸ்லாமிய திருநாளாக மட்டுமே அறிந்திருந்த நான், "முஸ்லிம்கள் மட்டும் விடுப்பு எடுத்திருந்தால் கூட பரவாயில்லை, பல இந்து ஊழியர்களும் கூட முகரத்தை முன்னிட்டு விடுப்பு எடுத்துக் கொண்டது ஆச்சரியமாக உள்ளது" என்று அவரிடம் வினவினேன். அதிலும் ஒரு இந்து பெண் ஊழியர், தீபாவளிக்கு ஊருக்கு போவதை விட முகரத்திற்கு சொந்த ஊருக்கு போவது மிகவும் முக்கியம் என்று என்னிடம் விடுமுறைக்காக மன்றாடியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்ததாக கூறினேன். அதற்கு அவர், இந்த பகுதியில் முகரம் இந்துக்களால் மிக விசேஷமாக கொண்டாடப் படுகிறதாக கூறினார். முகரத்தின் போது தீமிதிப்பது, பூ தேங்காய் பழங்களுடன் மசூதிக்கு சென்று வழி படுவது போன்ற பழக்கங்கள் உண்டு என்று வேறு சில உள்ளூர் நண்பர்களும் க...