நவீன இலக்கியத்தின் சிறந்த படைப்புக்களில் ஒன்றாக கருதப் படும் "ஆல்கெமிஸ்ட் (The Alchemist)" புதினத்தில் இருந்து ஒரு சிறிய கதையை பதிவுலக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
முன்னொரு காலத்தில், ஒரு வியாபாரி தன் மகனை "மகிழ்ச்சியின் ரகசியத்தை" அறிந்து கொள்வதற்காக, ஒரு மகாஞானியிடம் அனுப்பி வைத்தார். அவனும் பல நாட்கள் அலைந்து திரிந்து அந்த மகாஞானியின் இருப்பிடத்தை கண்டறிந்தான். அங்கே துறவியின் எளிமையான கோலத்துடன் மகாஞானி இருப்பார் என்று எதிர்பார்த்த வியாபாரியின் மகனுக்கு ஆச்சரியமே காத்திருந்தது. ஒரு ஆடம்பரமான மாளிகையில் ஏராளமானோர் வந்து சென்று கொண்டிருக்க ஒரு மூலையில் இன்னிசையுடன் மிகப் பெரிய விருந்தும் நடந்து கொண்டிருந்தது. பலருடனும் உரையாடிக் கொண்டிருந்த அந்த ஞானியுடன் பேசுவதற்கான வாய்ப்பே இரண்டு மணி நேரம் கழித்துத்தான் நமது ஹீரோவுக்கு கிடைத்தது.
நம் ஹீரோ தன்னை தேடி வந்த காரணத்தை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட ஞானி, அவனிடத்தில் ஒரு டீ ஸ்பூனைக் கொடுத்து அந்த ஸ்பூனில் இரண்டு சொட்டு எண்ணெய்யை விட்டு விட்டு, "முதலில் இந்த இடத்தை சுற்றிப் பார்த்து விட்டு வா! அதே சமயத்தில் எண்ணெய் கீழே சிந்தாமல் பார்த்துக் கொள்" என்று கூறினார்.
அந்த மாளிகை மிகவும் பெரியதாக இருந்தது. மாளிகையில் பல அடுக்குமாடிகள், நந்தவனங்கள், நூலங்கள், கேளிக்கை கூடங்கள் என்று பல பகுதிகளிலும் சுற்றினாலும், இளைஞனின் கவனம் முழுதும் ஸ்பூனில் இருந்த எண்ணெய் மீதே இருந்தது.
ஒருவழியாக பத்திரமாக எண்ணெய்யை திருப்பிக் கொண்டு வந்த இளைஞனிடம் ஞானி கேட்டாராம், "என்னுடைய மாளிகையில் உலகப் புகழ் வாய்ந்த பல அம்சங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் கண்டு மகிழ்ந்தாயா?"
தன்னுடைய கவனம் முழுதும் எண்ணெய் மீதே இருந்ததால், ஒன்றையும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்ட இளைஞனிடம், "மீண்டும் ஒரு முறை சென்று அனைத்தையும் ஆசை தீர அனுபவித்து வா" என்று பணித்தாராம்.
மனம் லேசாகிய இளைஞன், இந்த முறை ஸ்பூனைப் பற்றி கவலைப் படாமல், மாளிகை முழுதும் சுற்றிப் பார்த்து விட்டு ஆனந்தமாக திரும்ப, அந்த ஞானி கேட்டாராம், "உன்னை நம்பி நான் கொடுத்த எண்ணெய் எங்கே?" என்று.
திகைத்துப் போன இளைஞன் ஸ்பூனை பார்க்க அதில் எண்ணெய் இல்லை.
அப்போது ஞானி சொன்னாராம், "உனக்கு ஒரே ஒரு அறிவுரையை சொல்ல விரும்புகிறேன்! மகிழ்ச்சியின் ரகசியம் உலகத்தின் அனைத்து சந்தோசங்களையும் அனுபவிக்கும் அதே சமயம் தன்னுடைய கடமையிலும் கவனமாக இருப்பதுதான்"
எனக்கு மிகவும் பிடித்த இந்த கருத்தை இரண்டு வரிகளில் சொல்ல வேண்டுமென்றால்
"வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஜாலியாக இருப்போம்! அதே சமயம் வருங்காலத்திலும் அந்த ஜாலி நிலைத்திருக்கும்படி ஜாக்கிரதையாகவும் இருப்போம்!"
நன்றி
டிஸ்கி: இந்த பதிவு எய்ட்ஸ் தினத்தன்று வெளியிடப் பட்டாலும், அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.