ஒரு பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னே உருவாகும் பணவீக்க சுழற்சியின் முதல் பகுதி எப்பொழுதுமே விரும்பக் கூடியதாகத்தான் இருக்கும். பொருளாதார மந்த நிலையில் இருந்து விடுதலை, அதிகப் படியான பண புழக்கம், அதிக வேலை வாய்ப்புக்கள், ரியல் எஸ்டேட் உயர்வு, தொழிற் வளர்ச்சியில் முன்னேற்றம் என பல வகையிலும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். அதிகப் படியான விலை அளவுகள் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளின் லாபத்தை உயர்த்தும். அரசாங்கத்தின் வரி வசூலும் அதிகமாகும். மக்களிடையே உருவாகும் அதிகப் படியான பணபுழக்கம் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளையும் குஷிப் படுத்தும். அதிகப்படியான வேலை வாய்ப்புக்கள் மற்றும் சம்பள உயர்வு நடுத்தர வர்க்கத்தினையும் மகிழ்ச்சிப் படுத்தும்.
அதே சமயத்தின் பணவீக்க சுழற்சியின் இரண்டாம் பகுதி சற்று கசப்பாகத்தான் இருக்கும். விலைவாசிகள் விண்ணை முட்டும் பட்சத்தில் நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட் வெகுவாக பாதிக்க படும். அதிகப் படியான கடன் வட்டி வீதங்கள் உற்பத்தியாளர்களை நஷ்டத்தில் தள்ளும். புதிய முதலீடுகள் குறையும். நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு மந்த நிலை உருவாகும்.
இப்போதைய சூழ்நிலையில், மேலோட்டமாக பார்க்கும் போது பணவீக்கம் ஒரு கட்டுக்குள் இருப்பது போல தோன்றினாலும், அடிப்படை பணவீக்கம் தொடர்ந்து மிக அதிக அளவிலேயே இருந்து வருகிறது. இந்திய மத்திய வங்கி வட்டி வீதங்களை தொடர்ந்து அதிகரித்து வருவது, விலைவாசியை கட்டுப் படுத்த ஓரளவு உதவும் என்றாலும், கடன் வட்டி வீதங்களின் உயர்வு புதிய முதலீடுகளை மந்த படுத்துவதுடன் இந்திய பொருளாதார வளர்ச்சியையும் வெகுவாக பாதிக்கும்.

வரும் வாரம் சிறப்பானதாக இருக்க அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
நன்றி!