Sunday, May 31, 2009

"பந்தயம்" கட்டும் பங்கு சந்தை!


பந்தயக் குதிரை போல நமது பங்கு சந்தை இப்போது படு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. எந்த அளவுக்கு இந்த ஓட்டம் இருக்கும்? இந்த பந்தயக் குதிரை மீது நாமும் "பந்தயம்" கட்டலாமா? இங்கு சற்று விவாதிப்போம்.

கடந்த இரண்டு மாதங்களில் நமது பங்கு சந்தை வரலாறு காணாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. (இந்திய பங்கு சந்தை மட்டுமல்ல, வேறு பல பங்கு மற்றும் கச்சா எண்ணெய், உலோக சந்தை போன்றவையும் இதே கால கட்டத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.) இந்த முன்னேற்றத்திற்கு கூறப் படும் முக்கிய காரணங்கள்.

அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சில நம்பிக்கை (?) தரும் மாற்றங்கள்.

கூச்சப் படாமல், டாலர் நோட்டுக்களாக அச்சடித்துத் தள்ளும் அமெரிக்க அரசு.

அந்த பணத்தை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மற்றும் பொருட் சந்தைகளில் அதிக ரிஸ்க் (?) எடுத்து முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்.

இந்தியாவில் கூட்டணி கட்சிகளின் தலையீடு இல்லாமல் நிலையான ஒரு மத்திய அரசு அமைந்திருப்பது.

இந்த முறை கம்யூனிஸ்ட் தொந்தரவு (?) இல்லாததால் மன்மோகன் சிங் பல பொருளாதார சீர்த்திருத்தங்களை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை.

கூடிய சீக்கிரமே இந்தியாவின் பொருளாதாரம் வேகமான வளர்ச்சிப் பாதைக்கு செல்லும் என்ற பங்கு சந்தை நிபுணர்களின் திடீர் நம்பிக்கை.

அமெரிக்கா (மக்கள்தொகை 30 கோடி, GDP $ 14 டிரில்லியன், தனி நபர் வருவாய் $ 47000) போன்ற கிட்டத்தட்ட வளர்ச்சி நிறைவு பெற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா (மக்கள் தொகை 110 கோடி, GDP $ 1.2 டிரில்லியன், தனி நபர் வருவாய் $ 2700) எவ்வளவோ பின் தங்கியிருக்கிறது என்ற நிலையில் இன்னும் எவ்வளவோ முன்னேற இந்தியாவிற்கு வாய்ப்புள்ளது என்றாலும் அந்த வளர்ச்சி எவ்வளவு வேகமாக இருக்கும் என்பதும் உலகமே (முக்கியமாக அமெரிக்கா) மந்தமாக இருக்கும் இப்போதைய சூழ்நிலையில் இந்தியாவிற்கு மட்டும் ஒரு வேகமான வளர்ச்சியை புதிய (?) அரசால் தர முடியுமா என்பதும் மிகப் பெரிய கேள்விக் குறிகள்.

ஒருவேளை இந்தியப் பொருளாதாரம் வெகு சீக்கிரத்திலேயே மீண்டாலும் கூட, ஒரு வருடத்திற்கு முன் வரை பல விஷயங்களில் அகலக் கால் வைத்து இப்போது வசமாக சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கும் பல இந்திய நிறுவனங்கள் எந்த அளவிற்கு லாபத்தைக் காட்ட முடியும் என்பதும் கூட சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.

காங்கிரஸ் அரசு மீது மித மிஞ்சிய நம்பிக்கையை வைப்பவர்களுக்கு ஒரு கேள்வி. கடந்த அறுபத்து சொச்ச இந்திய ஜனநாயக வரலாற்றில் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் வரை ஆட்சியில் இருந்தவர்கள் காங்கிரஸ் அரசுதானே? இவர்கள் ஆட்சியில் இந்தியா அப்படி என்ன பெரிய வளர்ச்சியைக் கண்டு விட்டது? இன்றும் கூட பொருளாதார அடிப்படையில் உலகின் தர வரிசையில் கடைசி சில இடங்களில்தானே இந்தியா இருக்கிறது?

பிஜேபி கூட்டணி மற்றும் இதர மைனாரிட்டி அரசுகள் கொண்டு வந்த அளவுக்குக் கூட பொருளாதார சீர்திருத்தங்களை பல ஆண்டுகள் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசால் ஏன் கொண்டு வர முடிய வில்லை? 1991 சீர்த்திருத்தங்களுக்குக் கூட பன்னாட்டு நிதிய மையத்தின் வற்புறுத்தல்களே முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கடந்த அரசின் மந்தப் போக்கிற்கு கம்யூனிஸ்ட் தொந்தரவுதான் காரணம் என்றால் அவர்கள் ஆதரவுடன் ஆட்சி செய்த 1996 தேவே கௌட அரசு கொண்டு வந்த சீர்த்திருத்தங்களை எப்படி எடுத்துக் கொள்வது?

மன்மோகன் சிங் அரசு இது என்று நம்மால் இந்த புதிய (?) அரசை சொல்ல முடியுமா? தனது அமைச்சர்கள் (முக்கியமாக நிதி) யார் என்பதைக் கூட பிரதமரால் தன்னிச்சையாக முடிவு செய்ய முடியுமா?

இன்றைய சூழலில், இந்த புதிய அரசு, விவசாய கடன் தள்ளுபடி, அரசு ஊழியர் சம்பள உயர்வு போன்ற மக்கள் ஈர்ப்பு திட்டங்களுடன், இங்கும் அங்குமாக சில பொருளாதார சீர்த்திருத்தங்களுடன் தேர்தலை குறி வைத்து செயல்படும் ஒரு வெகுஜன அரசாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. எனவே, தற்போதைய சந்தை வேகம் சற்று ஓவர் எனவே தோன்றுகிறது.

மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துகிறேன். இந்திய பொருளாதாரமும் பங்கு சந்தையும் இன்னும் பல ஆண்டுகளுக்கு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆனால் இது போன்ற வேகமான பங்கு சந்தை பாய்ச்சல், பல சிறிய முதலீட்டாளர்களையும் சிறிய வர்த்தகர்களையும் சிக்கலில் ஆழ்த்தி விடுகிறது என்பதை சரித்திரம் சொல்கிறது.

மேலும், பல பொதுத் துறை நிறுவனங்கள் கூடிய சீக்கிரம் தமது பங்குகளை சந்தையில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த பங்குகளின் ஆரம்ப விலை நிர்ணயம் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பலாம். எனவே, உங்கள் முதலீடுகளை அடிப்படை அம்சங்கள் சிறப்பாக உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் தயக்கமின்றி அப்போது செய்யலாம். அது வரை பொறுத்திருங்கள். தற்போதைக்கு நான் பல முறை ஏற்கனவே சொன்ன படி, அவ்வப்போது சிறிய சிறிய அளவில் மட்டும் சந்தையில் உள்ள நல்ல நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து கொண்டிருங்கள்.

நாளை என்று ஒன்றே இல்லை என்பது போல ஒரே சமயத்தில் எல்லா சேமிப்பையும் பங்கு சந்தையில் போடாதீர்கள். அதுவும் சிறிய பங்குகளில் முதலீடு செய்யும் போது கவனமாக இருங்கள்.

தொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி 4500 மற்றும் 4600 அளவுகளுக்கு இடையே நல்ல எதிர்ப்பை சந்திக்கக் கூடும். டாலர் 47.90 மற்றும் 46.30 க்கு இடையே இருக்கக் கூடும்.

வரும் வாரம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.

நன்றி.

Thursday, May 28, 2009

படைத்தவர்களை விஞ்சும் பாத்திரங்கள்!


கல்கி அவர்களின் பிரபல சரித்திர நாவலான "பொன்னியின் செல்வனை" பலரும் படித்திருப்பீர்கள். அந்த நாவல் சோழப் பேரரசனான ராஜ ராஜ சோழனின் இளமைக் கால சம்பவங்களின் அடிப்படையில் எழுதப் பட்டது.

எல்லாவகையிலும் சோழ சாம்ராஜ்யத்தின் அரசு பதவிக்கு தகுதியானவனாகவும் மக்கள் செல்வாக்கு மிகுந்தவனாகவும் இருந்த போதும் தனக்கு வந்த அரியணை வாய்ப்பை தனது சித்தப்பனுக்கு விட்டுக் கொடுத்த மேலான குணத்தை விளக்குவதையே அடிப்படை நோக்கமாக கொண்டு, ராஜராஜ சோழனின் பல பெயர்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் என்ற தலைப்பிலேயே, அந்த நாவல் எழுதப் பட்டது. நாவலின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காக மட்டுமே, கோமாளித்தனமும் குறும்பும் நிறைந்த ஒரு இளம் வீரனாக வந்தியத் தேவன் கதாபாத்திரம் அறிமுகப் படுத்தப் பட்டாலும், பின்னர் கதை போகும் போக்கில் நாவலின் ஆசிரியரே ஒரு கட்டத்தில், "நமது கதையின் நாயகனாகிய வந்தியத் தேவன்" என்று சொல்லும் அளவுக்கு அந்த பாத்திரம் வெற்றி பெற்று விடுகிறது. மேலும் இன்றளவும் அந்த கேரக்டர் நம் மனதில் அழியாமல் நிலை கொண்டுள்ளது.

சமீபத்தில் வெளி வந்து சக்கைப் போடு போட்ட பைரேட்ஸ் ஆப் கரீபியன் என்ற தொடர் சினிமாவில், ஜானி டெப் ஒரு கோமாளி துணை கதாப் பாத்திரமாகவே படைப்பாளிகளால் அறிமுகப் படுத்தப் பட்டாலும், அந்த பாத்திரத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்குப் பின்னர் அவரே அந்த சினிமாவின் கதாநாயகன் ஆக அறியப் படுகிறார். இது அந்த கதாபாத்திரத்தின் வெற்றி மற்றும் அதை ஏற்று நடித்தவரின் வெற்றியும் ஆகும்.

இப்படி இன்னும் கூட பல உதாரணங்கள் சொல்ல முடியும். தமிழ் திரையுலகில் கூட ரஜினி, சத்தியராஜ், பிரகாஷ் ராஜ் போன்றவர்கள், அவர்களின் ஆரம்ப கால திரைப்படங்களில் சிறிய பாத்திரங்களாகவும் வில்லன்களாகவும் அறிமுகமானாலும் அந்தந்த படங்களில் நடித்த கதாநாயகர்களை விட அதிகப் புகழ் பெற்றுள்ளனர். இதற்கும் அவர்களின் தனித் திறமையும் கடும் உழைப்புமே காரணம் ஆகும்.

இந்த எதிர்வினைகள் நிழல் வாழ்வுக்கு மட்டுமல்ல, நிஜ வாழ்வுக்கும் பொருந்தும்.

கடவுள் ஒரு மனிதனை எப்படி படைத்திருந்தாலும் சரி, எந்த நோக்கத்திற்காக எங்கு படைத்திருந்தாலும் சரி அல்லது சமூகம் அவனை எங்கே வைத்தாலும் சரி எப்படி சுரண்டினாலும் சரி, அவனால் தனித்து நிற்க முடியும் ஜெயிக்கவும் முடியும்.

ஆப்ரகாம் லிங்கன், எடிசன், அம்பேத்கர், போன்ற மாபெரும் சாதனையாளர்கள் சாதனையாளர்கள் முதல் நாம் இன்று பார்க்கும் எத்தனையோ வெற்றியாளர்கள் இந்த கருத்தினை உறுதி செய்கிறார்கள்.

உங்கள் பெற்றோர் வசதி வாய்ப்பில்லாதவர்களா? பரவாயில்லை, உங்களுக்கு இளமையில் நல்ல கல்வி மற்றும் இதர வாய்ப்புக்கள் கிடைக்க வில்லையா? பரவாயில்லை, உங்கள் தகுதிக்கு ஏற்ற வாய்ப்புக்களை இந்த சமூகம் கொடுக்காமல் ஒதுக்கி வைக்கிறதா? கவலையில்லை. சுற்றமிருப்போர் உங்களை வஞ்சிக்கிறார்ககளா? வருத்தமில்லை.

உங்கள் கேரக்டர், உங்கள் பண்புகள் உங்கள் கடும் உழைப்பு மட்டும் போதும். வாழ்க்கை நாடகத்தில் உங்களை ஒரு பாத்திரமாக படைத்தவர்களையும் படுத்துபவர்களையும் விஞ்சலாம்.

நிழல் பாத்திரங்கள் செய்து காட்டியதை, உயிருள்ள நிஜ பாத்திரங்களாகிய நம்மால் செய்ய முடியாதா என்ன?

நன்றி.

Sunday, May 24, 2009

பாதிக் கிணறு தாண்டியாச்சு! மீதிக் கிணறு?


கடந்த பாராளுமன்ற தேர்தலில் நம் மக்கள் அளித்த உறுதியான தீர்ப்பு மற்றும் பொருளாதார சீர்த்திருந்தங்களின் தந்தையாக கருதப் படும் மன்மோகன் சிங் அவர்கள் மீது பங்கு சந்தை வைத்திருக்கும் நம்பிக்கை ஆகியவை கடந்த வாரம் சரித்திரம் காணாத அளவு முன்னேற்றத்தை பங்குகளுக்கு தந்தன. இந்த முன்னேற்றம் நீடிக்குமா? அல்லது "இதெல்லாம் கொஞ்சம் ஓவர்" கதையா? சற்று சிந்திப்போம்.

நாட்டின் முன்னேற்றத்தைப் பொறுத்த வரையில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எப்போதுமே ஒரு பெரிய வித்தியாசம் இருந்து வந்துள்ளது. அதாவது சீனாவில் இருப்பது போல இந்தியாவில் (சமீப காலத்தில்) ஒரு நிலையான உறுதியான மத்திய அரசு இருந்ததில்லை. சீனா தனது இரும்புக் கரங்களின் உதவியுடன் வெகு வேகமான கடினமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள, உள்ளூர் கூட்டணி சிக்கல்களால் இந்திய அரசு ஒரு சிறிய சீர்திருத்தம் செய்யக் கூட தடுமாறியே வந்துள்ளது. இதை நாமே கூடே இதே பதிவு வலையில் பல முறை விவாதித்துள்ளோம்.

இப்போது அந்தக் குறை ஓரளவு (ஓரளவு மட்டுமே) தீர்ந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் ஒரு வலுவான நிலையை அடைந்துள்ளது. இத்துடன், இடது சாரிகளின் ஆதரவு தேவையில்லை என்ற நிலையும், இனிமேல் சீர்திருத்தங்கள் விரைவு பெறும் என்ற நம்பிக்கையை வரவழைக்கின்றன.

அதே சமயம் நடப்பு காளை ஓட்டம் எந்த அளவுக்கு நாட்டின் பொருளாதார (அல்லது வருங்கால) நிலையை பிரதிபலிக்கின்றது என்பது ஆய்வு செய்ய வேண்டிய விஷயம்.

சரித்திர ரீதியாக, காங்கிரஸ் கட்சி சோஷலிச சிந்தனைகள் அதிகம் கொண்ட ஒரு நடு நிலை கட்சியாகவே இருந்து வந்துள்ளது. இப்போது பிரதமராக வந்துள்ள மன்மோகன் சிங் அவர்கள் பொருளாதார சீர்த்திருந்தங்களின் தந்தையாக கருதப் பட்டாலும், அவர் 1991 இல் அறிமுகப்படுத்திய பெரும்பாலான சீர்த்திருத்தங்கள் பன்னாட்டு நிதியத்தின் கட்டாயத்தின் பேரிலேயே என்பதை நாம் மறந்து விட முடியாது. இப்போது நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிரணாப் முகர்ஜீ அவர்கள் இந்திரா காந்தி அம்மையாரின் சோஷலிச சிந்தனைகளின் தாக்கம் அதிகம் உள்ளவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு முக்கிய காரணம் "குறைந்த பட்ச வேலை வாய்ப்பு திட்டம்", "அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு" மற்றும் "விவசாய கடன் தள்ளுபடி" போன்ற பாப்புலர் திட்டங்கள் என்பதையும் சென்ற தேர்தலில் பிஜேபி அடைந்த தோல்விக்கு முக்கிய காரணம் அந்த கட்சி பெரும் தொழில் அதிபர்களுக்கு ஆதரவான ஒன்று என்பது போன்ற தோற்றமும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதை காங்கிரஸ் நன்கு புரிந்து வைத்திருப்பதாலேயே, நிதி அமைச்சர் பொறுப்பை மோன்டேக் சிங், ப.சிதம்பரம் போன்ற மேலை நாட்டு சிந்தனைவாதிகளிடம் கொடுக்காமல் பிரணாப் முகர்ஜி போன்ற பழைய காங்கிரஸ்காரரிடம் கொடுத்துள்ளது என்று நான் நினைக்கிறேன். எனவே, சந்தைகளின் இந்த அபரிமிதமான உயர்வு கொஞ்சம் ஓவர்தான் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை, பிஜேபி ஆட்சிக்கு வந்திருந்தால் இந்த உயர்வு நியாயமானதாக இருந்திருக்கும்.

நீண்ட கால நோக்கில், இந்தியாவின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும் மற்றும் சந்தைகள் இன்னும் பல சிகரங்களை எட்டும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை என்றாலும், குறுகிய மற்றும் இடைப்பட்ட கால நோக்கில் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் கீழே.

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit)
இந்திய பொருளாதாரத்தின் முக்கியமாக தொழிற்துறையின் தளர்ச்சி.
கட்டுமான வளர்ச்சியில் இந்த அரசு காட்டுகின்ற அக்கறை (சென்ற முறை கவனிப்பாரற்று போன துறைகளில் இது முக்கியமான ஒன்று என்பது நினைவு கூற தக்கது)
வட்டி வீதத்தின் போக்கு மற்றும் கடன் தட்டுப்பாடு
ஏற்றுமதி சேவைகளின் வீழ்ச்சி
இந்த ஆண்டிற்கான மழை அளவு.
உலக (முக்கியமாக அமெரிக்கா) பொருளாதாரத்தின் மீட்சி
இந்திய நிறுவனங்களின் லாப விகிதம் மற்றும் வணிக நியமங்கள் (Corporate Governance) கடைப்பிடிக்கும் முறை.

மொத்தத்தில், இப்போதைய நிபிட்டி அளவு சராசரி சந்தை விலை-வருமான விகிதத்தின் (Average Price-Earnings Multiples) அடிப்படையில் ஓரளவுக்கு நியாயப் படுத்தக் கூடியது என்றாலும், இனிமேலும் (குறைந்த கால நோக்கில்) வேகமாக உயருமானால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதே சமயம் நாம் ஏற்கனவே பல முறை குறிப்பிட்டுள்ளபடி, நீண்ட கால நோக்கில், சிறந்த அடிப்படை அம்சங்கள் உள்ள பங்குகளை மெல்ல மெல்ல சேகரித்து வரலாம்.

இப்போது குறுகிய காலத்திற்கான சந்தை நிலவரம்.

நிபிட்டி 4500 புள்ளி அளவில் வலுவான எதிர்ப்பை சந்திக்கிறது. இந்த நிலை முறியடிக்கப் பட்டால் 4800 வரை உயர வாய்ப்பு உள்ளது. அதே போல 4150 அளவில் நல்ல அரண் கொண்டுள்ளது. இந்த நிலை உடைந்து போனால் 3900 புள்ளிகள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

குறுகிய கால அடிப்படையில் சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் நல்ல முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது என்றாலும் இந்த பங்குகளில் எச்சரிக்கையுடன் தக்க ஆலோசனை பெற்று முதலீடு செய்வது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Friday, May 22, 2009

எடை குறைய வேண்டுமா?


உடற்பயிற்சி செய்யாமல், சாப்பாடு அளவை குறைக்காமல், கண்ட கண்ட மருந்துகளை சாப்பிடாமல், சிறப்பு வைத்தியம் என்று காசைக் கரைக்காமலேயே மிகப் பெரிய அளவில் எடையை குறைக்க ஒரு அருமையான யோசனை இங்கே!



மேலே உள்ள படி தலைகீழாக எடை பாருங்கள் போதும். எடை கன்னாபின்னாவென்று குறைந்து காணப் படும்.

இந்த யோசனை இத்தனை நாளாக தெரியாமல் போயிற்றே என்கிறீர்களா?

நன்றி!

Saturday, May 16, 2009

தாஜ்மகாலின் மதிப்பு ஒரு ரூபாய்!


இது ஏதோ பொம்மை தாஜ்மகாலின் விலை மதிப்பு அல்ல. ஆக்ராவில் யமுனா நதிக் கரையில் அமைந்துள்ள உண்மையான தாஜ்மகாலின் மதிப்புத்தான் ஒரு ரூபாய். ஆச்சரியப் படாதீர்கள்! குதுப்மினார் போன்ற இதர கலைச்சின்னங்களும் ஒரு ரூபாய் அளவிற்கு மதிப்பிடப் பட்டுள்ளன. சற்று விவரமாக பார்ப்போம்.

தற்போது மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகள் நடப்பு கணக்கியல் முறையில் (Cash Method) தயாரிக்கப் படுகின்றன. அதை மாற்றி சொத்து சேரும் முறைப் படி (Accrual Method) நிதிநிலை அறிக்கைகள் தயார் செய்ய புதிய முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன் படி, அரசின் கைவசம் உள்ள சொத்துக்களை மதிப்பிடும் முயற்சியில் இப்போது மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அந்த முயற்சியின் முதல் படியாக, தாஜ் மகால், குதுப்மினார் போன்ற கலைச் சின்னங்களின் மதிப்பு ரூபாய் ஒன்று என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

புதிய கணக்கியல் முறையின் படி, இருபத்து ஐந்து வருடங்களுக்கு உட்பட்ட அரசு சொத்துக்களின் மதிப்பு அவற்றின் முதலீட்டு செலவாக இருக்கும். அதே சமயத்தில் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முந்தைய சொத்துக்களின் மதிப்பினை அரசே நிர்ணயிக்கும். இந்த முறையில் தாஜ் மகால் விலை ஒரு ரூபாய் என்று மத்திய அரசினால் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் கட்டப் பட்ட சில சாதாரண அரசு கட்டிடங்களின் மதிப்பு பல லட்சம் அல்லது பல கோடியாக இருக்கும் போது, தாஜ் மகால் போன்ற ஒரு அரிய பொக்கிஷத்தின் மதிப்பு ஒரு ரூபாயாக கணக்கிடுவது ஒரு வினோதம்தான்.

அதே சமயத்தில், பலே கில்லாடியான நமது அரசியல்வாதிகள், தனியார் மயமாக்கம் என்ற பெயரில், அரசு சொத்துக்களை லாபத்தில் விற்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தாஜ் மகால் இரண்டு ரூபாய், தஞ்சை கோயில் மூன்று ரூபாய், செங்கோட்டை நான்கு ரூபாய் என்று கூறு போட்டு விற்று விட்டு விடக் கூடாது. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் நமக்கு ஏற்கனவே நல்ல முன் அனுபவம் இருக்கிறது அல்லவா?

நன்றி.

Thursday, May 14, 2009

வாதாடாமல் வழக்கை முடித்தவர்! போரிடாமல் வென்றவர்!


சாலை சந்திப்பு ஒன்றில் சிக்னலுக்காக காத்திருந்த போது கவனித்த நிகழ்வு இது.

டாக்ஸி ஒன்று எந்த ஒரு சைகையும் காட்டாமல் ஒரு சாலைக்குள் முரட்டுத்தனமாக வளைந்து நுழைந்த போது, பின்னே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் திடீரென்று குறுக்கே வந்த டாக்ஸியால் நிலை தடுமாறி வண்டியுடன் கீழே விழுந்து விட்டார். அவரிடம் இருந்த மொபைல் போன்ற பொருட்கள் எல்லாம் சாலையில் சிதறி விழுந்தன. நல்ல வேளையாக அவருக்கு பெரிய அடி ஒன்றும் பட வில்லை.

சைகை அல்லது இண்டிகேட்டர் போட்டுக் கொண்டு சாலையில் திரும்பி இருக்கலாம் அல்லவா என்று மோட்டார் சைக்கிள் மனிதர் கேட்க, வண்டியை விட்டு வெளியில் வந்த டாக்ஸி டிரைவர் (தவறு அவர் மீதே இருந்த போதும்) சத்தம் போட ஆரம்பித்தார். ஒழுங்காக முன்னே பார்த்து வண்டியை ஒட்டி வர வேண்டியதுதானே என்று மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மீதே குற்றத்தை சுமத்தினார். இத்தனைக்கும் அவர் வண்டியில் (டாக்ஸி) எந்த ஒரு பாதிப்பும் இல்லை. குற்ற மனப்பான்மையை மறைக்கவே அப்படி சத்தம் போடுகிறார் என்று உணர முடிந்தது.

அப்போது மோட்டார் சைக்கிள் நண்பரின் நடவடிக்கை என்னை கவர்ந்தது. அமைதியாக சென்று கீழே விழுந்த பொருட்களை சேகரித்தார். எந்த ஒரு வார்த்தையும் பேசாமல், நிறுத்தாமல் தொடர்ந்து இரைந்து கொண்டே இருந்த டாக்ஸி ஓட்டுனரைப் பார்த்து புன்னகைத்தார். பின்னர் அவருக்கு ஒரு பெரிய சல்யூட் வைத்து "சென்று வாருங்கள்" என்று சைகை செய்தார். இப்போது டாக்ஸி டிரைவர் மூச்சடைத்துப் போய் ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

அந்த மோட்டார் சைக்கிள் நண்பர் எனக்கும் கூட பேசாமலேயே ஏதோ உணர்த்தியது போல இருந்தது,

"குற்ற மனப்பான்மை இல்லாதவருக்குத்தான் சமாதானம் பேச முன்வரும் தைரியம் இருக்கும். விட்டுக் கொடுப்பவர்தான் வெற்றி பெற்றவராகிறார் ."

இந்த உண்மை அனைவருக்கும் புரிந்தால் இன்று எத்தனை பிரச்சினைகள் எளிதாக தீர்ந்து போய் இருக்கக் கூடும்?

அப்போது அவருக்கு நான் கூட ஒரு பெரிய சல்யூட் அடிக்க வேண்டும் என்று தோன்றியது.

நன்றி.

Tuesday, May 12, 2009

நெருக்கடி = வாய்ப்பு?


ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடுகிறது. சில சந்தர்ப்பங்களில், பிரச்சினையின் வீச்சு அவனை நிலைகுலைய செய்யும் அளவுக்குக் கூட அமைந்து விடுகிறது. அந்த சந்தர்ப்பங்களில் அவனுக்கு இரண்டு சாய்ஸ் உண்டு.

ஒன்று, தோல்வி மனப்பான்மை. வருத்தமடைவது, புலம்பித் தீர்ப்பது, மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவது மற்றும் சுய பச்சாதாபம் கொள்வது.

அடுத்தது, வெற்றி மனப்பான்மை. எங்கே தவறு நடந்தது என்று ஆராய்ச்சி செய்வது. இந்த நெருக்கடியிலிருந்து எப்படி மீள்வது என்று யோசிப்பது மற்றும் இந்த சோதனையை எப்படி வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வது பற்றி சிந்திப்பது.

பொதுவாக இரண்டாவது சாய்ஸ் கடினமான ஒன்று என்று சிலர் நினைக்கக் கூடும். ஆனால் உண்மையில் அதுதான் எளிமையான சாய்ஸ்தான் என்பதை சரித்திரம் சொல்கிறது. எந்த ஒரு கடினமான தருணமும் வெகுகாலம் நீடித்திருப்பதில்லை. ஒவ்வொரு இருளுக்குப் பின்னர் ஒளி மறைந்திருக்கிறது. ஒவ்வொரு இரவுக்குப் பின்னரும் பகல் காத்திருக்கிறது.

எனவே நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்பிக்கையை தளர விடாமல் இருப்பது, அடுத்து நாம் செய்ய வேண்டியதைப் பற்றி யோசிப்பது மற்றும் அந்த இருளில் மறைந்திருக்கும் ஒளியை வெளிக் கொண்டு வர முயற்சிப்பது.

ஒரு பரவலான சீன நம்பிக்கையின் படி, அந்த மொழியில் உள்ள நெருக்கடி என்ற சொல்லினை ஆபத்து மற்றும் வாய்ப்பு என்று இரண்டாகப் பிரிக்க முடியும். அதாவது நெருக்கடி என்பது ஆபத்தினை வாய்ப்பாக மாற்ற உதவும் ஒரு கருவி என்ற பொருள்.

இது ஏதோ வேடிக்கையான நம்பிக்கை என்று நாம் உதறித் தள்ளி விட முடியாது. எத்தனையோ மாமனிதர்கள், பெரிய நகரங்கள், வளமான நாடுகள் நெருக்கடிகளின் உதவியுடனேயே உருவாகி இருக்கின்றன.

உதாரணத்திற்கு சொல்லப் போனால், மோகன்தாஸ் கரம்சந்த காந்தி என்ற சாதாரண நபர் தென்னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து வெளியே தள்ளப் பட்ட பின்னர்தான் மகாத்மா ஆனார். தனது சொந்த ஊரிலிருந்து விரட்டப் பட்டதால்தான் பாபர் என்ற நாடோடி இந்தியாவில் ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். கைவிடப் பட்ட ஒரு உருக்காலையில் இருந்துதான் (ஒருகாலத்தில் விளையாட்டுப் பிள்ளையாக அறியப் பட்ட) ஒரு லக்ஷ்மி மிட்டல் தோன்றினார்.

ப்ளேக் நோயால் பாதிக்கப் பட்ட சூரத் தூய்மையான நகரமானது. ஜப்பான், பிரிட்டன், மலேசியா என மாறி மாறி மாற்றார் வசம் இருந்த சிங்கப்பூர் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறியது. அணுகுண்டால் அழிக்கப் பட்ட ஜப்பான் தொழிற் துறையின் முன்னோடி நாடாக மாறியது.

நம்புவோம் நாமும்!

நமக்கு வரும் ஒவ்வொரு நெருக்கடியும் நமக்கு கிடைத்துள்ள ஒரு பெரிய வாய்ப்பு என்று!

நம்புவோம், நெருக்கடிகள் மேலும் நம்மை மேலும் செம்மைப் படுத்த வரும் வாழ்க்கைப் பாடத்திட்டங்கள் என்று!

நம்புவோம், சோதனைகள் நம்மை மேலும் மெருகேற்றும் தீப்பிழம்புகள் என்று!

நம்புவோம், நெருக்கடிகள் நம்மை பட்டை தீட்டி மென்மேலும் ஜொலிக்க வைக்கும் அறுப்பு இயந்திரங்கள் என்று!

எனவே நண்பர்களே! ஒவ்வொரு நெருக்கடியையும் மகிழ்ச்சியோடு, உற்சாகத்தோடு சந்திப்போம். நிச்சயம் ஒருநாள் வெற்றி வாகை சூடுவோம்.

நன்றி.

பின்குறிப்பு: இவை ஏதோ மேலோட்டமான கருத்துக்கள் அல்ல. வாழ்வில் எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்க விரும்பாத ஒருவனின் டயரிக் குறிப்பு என்று கொள்ளலாம்.
Blog Widget by LinkWithin