Sunday, May 24, 2009

பாதிக் கிணறு தாண்டியாச்சு! மீதிக் கிணறு?


கடந்த பாராளுமன்ற தேர்தலில் நம் மக்கள் அளித்த உறுதியான தீர்ப்பு மற்றும் பொருளாதார சீர்த்திருந்தங்களின் தந்தையாக கருதப் படும் மன்மோகன் சிங் அவர்கள் மீது பங்கு சந்தை வைத்திருக்கும் நம்பிக்கை ஆகியவை கடந்த வாரம் சரித்திரம் காணாத அளவு முன்னேற்றத்தை பங்குகளுக்கு தந்தன. இந்த முன்னேற்றம் நீடிக்குமா? அல்லது "இதெல்லாம் கொஞ்சம் ஓவர்" கதையா? சற்று சிந்திப்போம்.

நாட்டின் முன்னேற்றத்தைப் பொறுத்த வரையில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எப்போதுமே ஒரு பெரிய வித்தியாசம் இருந்து வந்துள்ளது. அதாவது சீனாவில் இருப்பது போல இந்தியாவில் (சமீப காலத்தில்) ஒரு நிலையான உறுதியான மத்திய அரசு இருந்ததில்லை. சீனா தனது இரும்புக் கரங்களின் உதவியுடன் வெகு வேகமான கடினமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள, உள்ளூர் கூட்டணி சிக்கல்களால் இந்திய அரசு ஒரு சிறிய சீர்திருத்தம் செய்யக் கூட தடுமாறியே வந்துள்ளது. இதை நாமே கூடே இதே பதிவு வலையில் பல முறை விவாதித்துள்ளோம்.

இப்போது அந்தக் குறை ஓரளவு (ஓரளவு மட்டுமே) தீர்ந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் ஒரு வலுவான நிலையை அடைந்துள்ளது. இத்துடன், இடது சாரிகளின் ஆதரவு தேவையில்லை என்ற நிலையும், இனிமேல் சீர்திருத்தங்கள் விரைவு பெறும் என்ற நம்பிக்கையை வரவழைக்கின்றன.

அதே சமயம் நடப்பு காளை ஓட்டம் எந்த அளவுக்கு நாட்டின் பொருளாதார (அல்லது வருங்கால) நிலையை பிரதிபலிக்கின்றது என்பது ஆய்வு செய்ய வேண்டிய விஷயம்.

சரித்திர ரீதியாக, காங்கிரஸ் கட்சி சோஷலிச சிந்தனைகள் அதிகம் கொண்ட ஒரு நடு நிலை கட்சியாகவே இருந்து வந்துள்ளது. இப்போது பிரதமராக வந்துள்ள மன்மோகன் சிங் அவர்கள் பொருளாதார சீர்த்திருந்தங்களின் தந்தையாக கருதப் பட்டாலும், அவர் 1991 இல் அறிமுகப்படுத்திய பெரும்பாலான சீர்த்திருத்தங்கள் பன்னாட்டு நிதியத்தின் கட்டாயத்தின் பேரிலேயே என்பதை நாம் மறந்து விட முடியாது. இப்போது நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிரணாப் முகர்ஜீ அவர்கள் இந்திரா காந்தி அம்மையாரின் சோஷலிச சிந்தனைகளின் தாக்கம் அதிகம் உள்ளவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு முக்கிய காரணம் "குறைந்த பட்ச வேலை வாய்ப்பு திட்டம்", "அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு" மற்றும் "விவசாய கடன் தள்ளுபடி" போன்ற பாப்புலர் திட்டங்கள் என்பதையும் சென்ற தேர்தலில் பிஜேபி அடைந்த தோல்விக்கு முக்கிய காரணம் அந்த கட்சி பெரும் தொழில் அதிபர்களுக்கு ஆதரவான ஒன்று என்பது போன்ற தோற்றமும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதை காங்கிரஸ் நன்கு புரிந்து வைத்திருப்பதாலேயே, நிதி அமைச்சர் பொறுப்பை மோன்டேக் சிங், ப.சிதம்பரம் போன்ற மேலை நாட்டு சிந்தனைவாதிகளிடம் கொடுக்காமல் பிரணாப் முகர்ஜி போன்ற பழைய காங்கிரஸ்காரரிடம் கொடுத்துள்ளது என்று நான் நினைக்கிறேன். எனவே, சந்தைகளின் இந்த அபரிமிதமான உயர்வு கொஞ்சம் ஓவர்தான் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை, பிஜேபி ஆட்சிக்கு வந்திருந்தால் இந்த உயர்வு நியாயமானதாக இருந்திருக்கும்.

நீண்ட கால நோக்கில், இந்தியாவின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும் மற்றும் சந்தைகள் இன்னும் பல சிகரங்களை எட்டும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை என்றாலும், குறுகிய மற்றும் இடைப்பட்ட கால நோக்கில் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் கீழே.

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit)
இந்திய பொருளாதாரத்தின் முக்கியமாக தொழிற்துறையின் தளர்ச்சி.
கட்டுமான வளர்ச்சியில் இந்த அரசு காட்டுகின்ற அக்கறை (சென்ற முறை கவனிப்பாரற்று போன துறைகளில் இது முக்கியமான ஒன்று என்பது நினைவு கூற தக்கது)
வட்டி வீதத்தின் போக்கு மற்றும் கடன் தட்டுப்பாடு
ஏற்றுமதி சேவைகளின் வீழ்ச்சி
இந்த ஆண்டிற்கான மழை அளவு.
உலக (முக்கியமாக அமெரிக்கா) பொருளாதாரத்தின் மீட்சி
இந்திய நிறுவனங்களின் லாப விகிதம் மற்றும் வணிக நியமங்கள் (Corporate Governance) கடைப்பிடிக்கும் முறை.

மொத்தத்தில், இப்போதைய நிபிட்டி அளவு சராசரி சந்தை விலை-வருமான விகிதத்தின் (Average Price-Earnings Multiples) அடிப்படையில் ஓரளவுக்கு நியாயப் படுத்தக் கூடியது என்றாலும், இனிமேலும் (குறைந்த கால நோக்கில்) வேகமாக உயருமானால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதே சமயம் நாம் ஏற்கனவே பல முறை குறிப்பிட்டுள்ளபடி, நீண்ட கால நோக்கில், சிறந்த அடிப்படை அம்சங்கள் உள்ள பங்குகளை மெல்ல மெல்ல சேகரித்து வரலாம்.

இப்போது குறுகிய காலத்திற்கான சந்தை நிலவரம்.

நிபிட்டி 4500 புள்ளி அளவில் வலுவான எதிர்ப்பை சந்திக்கிறது. இந்த நிலை முறியடிக்கப் பட்டால் 4800 வரை உயர வாய்ப்பு உள்ளது. அதே போல 4150 அளவில் நல்ல அரண் கொண்டுள்ளது. இந்த நிலை உடைந்து போனால் 3900 புள்ளிகள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

குறுகிய கால அடிப்படையில் சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் நல்ல முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது என்றாலும் இந்த பங்குகளில் எச்சரிக்கையுடன் தக்க ஆலோசனை பெற்று முதலீடு செய்வது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

6 comments:

Naresh Kumar said...

பல பயனுள்ள விவரங்கள்...

பொருளாதார சவால்களின் உச்சகட்டத்தில் பொறுப்பேற்றிருக்கும் அரசு என்ன செய்யப்போகிறது என்பது எல்லார் மனதிலும் இருக்கிற பெரிய கேள்வி!!!

நாடிருக்கும் நிலையில் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை ஓட்டு வங்கி அடிப்படையில் தீர்வைத் தர முயல்வது தொலைநோக்கு பார்வையில் பயனற்றதாகிப் போய்விடும்...

எல்லாவற்றுக்கும் பொதுவாக கடன் தள்ளுபடி, இலவசங்கள்னு போறதுக்குப் பதிலாக, தீர்வுக்கான வழிகளை எப்ப தருவாங்கன்னு தெரியலை...

பிரணாப் பொருளாதார சீர்திருதத்தில் இந்திராவை ஒத்திருப்பது போல், ஈழ விஷயத்திலும் ஒத்திருந்தாலும் நன்றாயிருந்திருக்கும்...

தொடருங்கள்!!!

கார்த்திக் said...

எப்படியும் 5வருசம் நிலையானா ஆட்சிங்கர செய்தியே மார்கட்டுக்கு ஒரு ஆரோக்கியமான விசையம் தானங்க.

அதுலையும் இந்ததடவ 80க்கும் அதிகமானா இளரத்தம் வந்திருக்காங்க.
அதே சமயம் கிரிமினல் பின்னனி உள்ள MPகளின் எண்ணிக்கையும் அதிகமாயிருக்கு.பாப்போம் நல்லதே நடக்கும்னு நம்புவோம்.

Maximum India said...

நன்றி நரேஷ்!

//பொருளாதார சவால்களின் உச்சகட்டத்தில் பொறுப்பேற்றிருக்கும் அரசு என்ன செய்யப்போகிறது என்பது எல்லார் மனதிலும் இருக்கிற பெரிய கேள்வி!!!//

மிக அதிக அளவில் நிதி பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் (அதற்கும் காங்கிரஸ் அரசுதான் காரணம்) இந்த அரசால் என்ன செய்ய முடியும் என்பது கூட ஒரு பெரிய கேள்விதான்.

//நாடிருக்கும் நிலையில் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை ஓட்டு வங்கி அடிப்படையில் தீர்வைத் தர முயல்வது தொலைநோக்கு பார்வையில் பயனற்றதாகிப் போய்விடும்...

எல்லாவற்றுக்கும் பொதுவாக கடன் தள்ளுபடி, இலவசங்கள்னு போறதுக்குப் பதிலாக, தீர்வுக்கான வழிகளை எப்ப தருவாங்கன்னு தெரியலை...//

இது போன்ற இலவசங்களைத் தருவதை விட நியாயமான முறையில் உழைத்து முன்னேற அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதே அரசின் கடமையாக இருக்க வேண்டும்.

மக்களும், இலவசங்கள் என்பது அவர்கள் பாக்கட்டில் இருந்து எடுத்து அவர்களுக்கே தருவதுதான், யாரும் சொந்த காசு செலவு செய்வதில்லை என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணம் சேவை வரி, வாட் போன்ற வரிகள். இவற்றை அதிகப் படுத்தி ஏதோ சில இலவசங்களைத் தருவதைப் போல போக்கு காட்டுவதே அரசாங்கங்களின் வேலை.

//பிரணாப் பொருளாதார சீர்திருதத்தில் இந்திராவை ஒத்திருப்பது போல், ஈழ விஷயத்திலும் ஒத்திருந்தாலும் நன்றாயிருந்திருக்கும்...//

உண்மைதான். நேரு ஒரு முறை கூறினார். ஜனநாயக அரசு நல்லதாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பதை மற்ற நாடுகளை அடிமைப் படுத்திய பிரிட்டிஷ் அரசிடம் இருந்து புரிந்து முடியும் என்று.

அதே போல புத்தர், காந்தி போன்ற பல மகான்கள் பிறந்த புண்ணிய பூமி இந்தியாவா இது என்ற கேள்வி எழும் அளவுக்கு ஈழ விவாகரத்தில் நமது அரசு நடவடிக்கைகள் இருந்தது வெட்கப் பட வேண்டிய விஷயம்.

அதிலும், தாய்த் தமிழகம், தமிழினத் தலைவர் என்றெல்லாம் கூவிக் கொண்டு கடைசியில் பதவிக்காக நம் தொல் உறவுகளை கை கழுவியது தமிழ்நாட்டின் தமிழர் அனைவரையும் தலை குனிய செய்த விஷயம்.

நன்றி.

Maximum India said...

நன்றி கார்த்திக்!

இளரத்தங்கள் நிறைய வந்திருப்பது நல்ல விஷயம்தான் என்றாலும், அவற்றில் பல ரத்தங்கள் பழைய ரத்தங்களின் சொந்த ரத்தங்கள்தான் என்பது வேதனைக்குரிய விஷயம். எனவே இவையெல்லாம் புதிய குடுவையில் பழைய பானகம் என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும்,

இருந்தாலும் கூட, நீங்கள் சொன்னபடி ஒரு நம்பிக்கை வைப்போம். இந்திய அரசியலில் இவர்கள் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று.

நன்றி!

வால்பையன் said...

முதலீடு செய்ய நல்ல இடம்னு தான் சொல்றாங்க!

Maximum India said...

நன்றி வால்பையன்

//முதலீடு செய்ய நல்ல இடம்னு தான் சொல்றாங்க!//

முதலீடு செய்யலாம். ஆனால் கொஞ்சம் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

Blog Widget by LinkWithin