நீண்ட காலத்திற்கு பின்னர் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் சென்ற வாரம் பெருமளவு விற்பனை செய்துள்ளனர். இந்த அதிரடி விற்பனை காரணமாக சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் மிகப் பெரிய ஊழலான 2G விவகாரம் இந்தியாவின் நம்பகத்தன்மையை பெருமளவில் பாதித்துள்ளததால் அந்நிய முதலீட்டாளர்கள் இவ்வாறு விற்பனை செய்கின்றனர் என்று சில பங்கு சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியா ஒரு ஊழல் தேசம் என்பதையும் அதனால்தான் இங்கு குறுகிய கால லாப வாய்ப்புக்கள் அதிகம் என்பதையும் நன்கு உணர்ந்தே இந்தியாவிற்குள் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதால், 2G ஊழல் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதே சமயத்தில் சிறு நிதி துறையை கட்டுப் படுத்த ஆந்திர அரசு எடுத்த முயற்சியும் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து ஸ்பெக்ட்ரத்தை திரும்பி பெற வேண்டும் என்று எழும்பும் சில கருத்துக்களும் அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் லேசான அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சீனா தனது வங்கி கையிருப்பு விகிதத்தை அதிகரித்திருப்பதும் அயர்லாந்து விவகாரம் ஐரோப்பிய நிதி சிக்கல் இன்னும் தீர்ந்து விட வில்லை என்பதை வெளிக் கொணர்ந்திருப்பதும் கூட இந்த விற்பனைக்கான இதர காரணங்கள் என்று கூறப் படுகின்றன. கிட்டத்தட்ட நூறு சதவீத லாபத்தை கொடுத்திருக்கும் இந்திய பங்கு சந்தைகளில் நிகழும் இப்போதைய விற்பனை, அந்நிய முதலீட்டாளர்களின் லாபத்தை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகவும் இருக்கக் கூடும். அமெரிக்க பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதும் டாலர் மேலேறுவதும் கூட இதர காரணங்களாக இருக்கலாம்.
ஆக மொத்தத்தில், இந்திய பங்கு சந்தை புதிய உயரத்தை எட்டும் வாய்ப்பு இப்போதைக்கு பறி போயுள்ளது மட்டுமல்லாமல், முக்கிய குறியீடுகள் வலுவான அரண் நிலைகளுக்கு கீழேயும் (நிபிட்டி 5930, சென்செக்ஸ் 19800) முடிவடைந்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும் .

குறுகிய கால வர்த்தகர்கள் நிபிட்டி அளவு 5850 க்கு அருகே ஸ்டாப் லாஸ் வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்யலாம். 6050க்கு மேலே சந்தையில் வாங்கும் நிலை எடுக்கலாம் (இலக்கு 6400) .
நீண்ட கால முதலீட்டாளர்கள் நிபிட்டி 5700க்கு கீழே அடிப்படையில் சிறந்த பங்குகளை சேகரிக்க ஆரம்பிக்கலாம்.
வரும் வாரம் சிறந்த வாரமாக அமைந்திட அனைவரும் நல்வாழ்த்துக்கள்!
நன்றி!