Friday, May 6, 2011

ஒழியட்டும் ஊழல் எனும் பயங்கரவாதம்!


உலகின் பல்வேறு பகுதிகளில் காலம் காலமாக பல பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருந்தாலும், பயங்கரவாதத்தின் உச்சக்கட்ட தாக்குதலாக கருதப் படுவது, அமெரிக்க இரட்டை கோபுரங்களின் மீது நடந்த விமான தாக்குதல்தான். ஏனென்றால், அதுவரையில் இந்தியா போன்ற வலு குறைந்த நாடுகளை குறி வைத்தே பழக்கப் பட்ட பயங்கரவாதிகள், உலக வல்லரசான அமேரிக்கா மீது குறிவைத்தது பலரையும் வியப்பில் உள்ளாக்கியதுடன், பயங்கரவாதிகளின் வெளிப்படையான தைரியத்தையும் பறை சாற்றியது.

இந்தியாவில் ஊழல் புரையோடிப் போனது அனைவரும் ஒப்புக் கொண்ட ஒன்றுதான் என்றாலும், இன்னும் சொல்லப் போனால் இந்திய மக்கள் ஊழலுடன் ஒத்துப் போய் வாழப் பழகி பல ஆண்டுகள் ஆகி விட்டாலும், இரண்டு அலைக்கற்றை ஊழலின் பரிமாணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சொல்லப் போனால் பல ஊழல் பெருச்சாளிகளையும் கூட அந்த ஊழல் திகைப்பில் ஆழ்த்தியது. ஊழல் பணம் வெளிப்படையாக கைமாறியது, தம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஊழல்வாதிகளின் அதி தைரியத்தையும் காட்டியது.

பயங்கரவாதத்தின் தீமைகளுக்கு சற்றும் குறைவில்லாதது ஊழல் தரும் தேசிய இழப்புக்கள். ஊழல்வாதிகளும் பயங்கரவாதிகளைப் போலவே தண்டிக்கப் படவேண்டியவர்கள்தான்.

உலக பயங்கரவாதத்தின் பிம்பமாக கருதப் படும் பின் லாடனின் அழிவு பயங்கரவாதத்திற்கு வைக்கப் பட்ட முற்றுப் புள்ளி அல்ல என்றாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு முக்கிய வெற்றியாகும். அதே போல இரண்டு அலைற்றை ஊழல்வாதிகள் தண்டிக்கப் பட்டால், இந்தியாவில் ஊழலுக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியாக இருக்கும்.

இரண்டு அலைகற்றை அலைவரிசை மீதான விசாரணை உச்ச நீதி மன்றம் முதல் சாதாரண மக்கள் வரை அனைவராலும் கூர்மையாக கவனிக்கப் படும் இந்த வேளையில், ஊழல்வாதிகள் மீதான நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டால், இந்திய அரசியல் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கை வெகுவாக பாதிக்கப் படும்.

நிரா ராதியா டேப்புகள் மற்றும் கலைஞர் டிவி பணமாற்ற விவகாரங்கள், இரண்டு அலைகற்றை ஊழலில் கனிமொழியின் பங்கினை வெளிப்படையாக காட்டுகின்றன. அவரை தி மு க வெளிப்படையாக ஆதரிப்பதும் கனிமொழி விவகாரத்தினை மாநில ஆட்சியில் பங்கெடுப்பதற்கான மாஸ்டர் ஆயுதமாக காங்கிரஸ் கையில் எடுத்திருப்பதும் ஊழல் அரசியல்வாதிகளின் உண்மையான முகத்தை தோலுரித்து காட்டுகின்றன. இப்போதைக்கு பொது மக்களுக்கு மிச்சமுள்ள நம்பிக்கையெல்லாம் நீதி மன்றங்களின் மீதுதான்.

திமுகவின் தாக்கத்தையும் மீறி, காங்கிரஸின் இரட்டை நாடகங்களையும் தாண்டி, கனிமொழி கைது செய்யப் பட்டால், அந்த நிகழ்வு இந்திய அரசியல் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை மீட்பதுடன் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று நம்புகிறேன்.

மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

கனிமொழியின் கைது ஊழலுக்கு வைக்கப் படும் முற்றுப் புள்ளியாக அமையாவிடினும், ஊழலுக்கான சாவு மணியின் முதலோசையாக இருக்கும்.

நன்றி!

2 comments:

periyannan said...

உங்க‌ள் வ‌ருகைக்கு ந‌ன்றி சார்.

"ஒழியட்டும் ஊழல் எனும் பயங்கரவாதம்!"

மிக‌ அருமையான ஒப்பீடு. இந்தியாவில் ஊழ‌ல், ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை போல் ப‌ல‌வேர்க‌ளைவிட்டு ப‌ர‌ந்துவிரிந்துள்ள‌து. ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தின் ஒரு வேரை வெட்டிய‌துபோல் (ஆணிவேர் என்று கூற‌முடிய‌வில்லை அது ப‌ல‌வேர்க‌ளை உருவாக்கி ப‌ல‌ப்ப‌டுத்திவிட்ட‌து),ஊழ‌லின் அனைத்துவேர்க‌ளையும் வெட்ட‌முடியாவிட்டாழும், இந்த வ‌ழுவான‌ வேர்க‌ளை வெட்டினாலே (த‌ண்டித்தால்) போதும்.

"கனிமொழியின் கைது ஊழலுக்கு வைக்கப் படும் முற்றுப் புள்ளியாக அமையாவிடினும், ஊழலுக்கான சாவு மணியின் முதலோசையாக இருக்கும்."

க‌ண்டிப்பாக‌, ஊழலுக்கான சாவு மணியின் முதலோசையாக இருக்கும்.

உங்களின் தொட‌ர்ப‌திவை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறேன்.

பதிவுக்கு ந‌ன்றி.

Maximum India said...

நன்றி வாசு!

நன்றி பெரியண்ணன்!

Blog Widget by LinkWithin