Sunday, June 20, 2010

சீன (யுவான்) நாணயத்தின் சீரமைப்பு - ஒரு இந்திய பார்வை!


உலக பொருளாதார சிக்கலை உருவாக்கியதில் சீனாவுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. கடன் வாங்கி செலவழித்த மேற்கத்திய நாடுகள் ஒரு பக்கம் என்றால், உற்பத்தி பொருட்களின் விலையை செயற்கையாக குறைவாக வைத்திருந்த சீனா மறு பக்கம், உலக வணிக அசமனிலை ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது. தனது ஏற்றுமதி பொருட்களின் விலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க சீனா கையாண்ட பல்வேறு வழிமுறைகளில் முக்கியமானது, தனது தேசிய நாணயத்தின் மதிப்பை (செயற்கையாக) மாற்றாமல் வைத்திருந்தது ஆகும். சீனாவின் இந்த தவறான போக்கினால், மற்ற ஏற்றுமதி நாடுகளின் (கிழக்காசியா மற்றும் இந்தியா) "போட்டியிடும் வலு" வெகுவாக பாதிக்கப் பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், நெசவு தொழில் மற்றும் இதர சிறு ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். உலக அரங்கில் சீனாவிற்கு இருந்த செல்வாக்கும், மேற்கத்திய நாடுகள் குறைந்த விலையில் மற்றவர்களின் சேவைகளை அனுபவித்து வந்த சௌகரியத்தை இழக்க விரும்பாததும், மற்ற ஏற்றுமதி நாடுகளின் குரல் எடுபடாமல் செய்தன.

இப்போது நாணயத்தின் மீதான தனது கட்டுப்பாட்டினை குறைத்துக் கொள்வதாக சீனா அறிவித்திருப்பது, மற்ற நாடுகளின் ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான ஒன்றாகும். அதே சமயம், கட்டுப்பாட்டினை குறைப்பதற்கான கால அட்டவணையை சீன அரசு தெளிவாக வெளியிடாததும், டாலருக்கு எதிராக யூரோ நாணயம் ஏற்கனவே பெருமளவுக்கு சரிந்திருப்பதும் கவனிக்க தக்கவை. எனவே உடனடியாக பெரிய லாபங்களை எதிர்பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். அதே சமயம், சீனா மீதான நிர்பந்தங்களை மற்ற நாடுகள் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், சீனா தனது ஏற்றுமதி விலை சாதகத்தினை பெருமளவுக்கு இழந்து விட வாய்ப்புக்கள் உள்ளன. அப்போது உலக வர்த்தகம் மீண்டும் ஒரு சமநிலையை எய்ய வாய்ப்புக்கள் உள்ளன.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு சில எதிர்வினைகளும் உள்ளன. சீன ஏற்றுமதியாளர்கள் பாதிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கடன் வழங்கியுள்ள சீன வங்கிகள் திவாலாக வாய்ப்புக்கள் உள்ளன. சீன ஏற்றுமதி குறைந்தால் "பொருட்கள் சந்தை"யிலும் பாதிப்புக்கள் ஏற்படலாம். ஏற்கனவே பல பதிவுகளில் கூறியுள்ளபடி, சீனாவின் பொருளாதார வளர்ச்சி பாதித்தால் அந்நாட்டில் (ரத்தகளரியுடன் கூடிய) அரசியல் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த நிலையை சந்தைகள் விரும்பாது என்றே நினைக்கிறேன்.

பொருளாதார ரீதியாக பார்க்கும் போது, சீனாவின் முடிவு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்திதான். அவர்களின் போட்டியிடும் திறமை உலக சந்தைகளில் அதிகமாக நல்வாய்ப்புக்கள் உள்ளன. சீன இறக்குமதி (போட்டி) பொருட்களின் விலை இனி அதிகமாகும் என்பதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கூட ஒருவகையில் மகிழ்ச்சி கொள்ளலாம். அதே சமயம் உள்நாட்டு (சீன பொருட்கள்) நுகர்வோர்களுக்கு விலையேற்ற பாதிப்பு உண்டு.

இப்போது பங்கு சந்தைக்கு வருவோம். உலக சந்தைகளின் சாதகமான போக்கும் அந்நிய முதலீட்டாளர்களின் மீள்வரவும் இந்திய பங்குகளை சென்ற வாரம் வெகுவாக உயர்த்தின. இந்திய நிறுவனங்கள் பெருமளவுக்கு முன்-வருமான வரி செலுத்தியதும் சந்தைகளை மகிழ்ச்சியுற செய்தன. அதே சமயம் ரிலையன்ஸ் பொதுக்குழு கூட்ட அறிவிப்புக்கள் அவ்வளவு மகிழ்ச்சிகரமாக இல்லை.

வரும் வாரம் "மாதாந்திர எதிர்கால வர்த்தக நிலை" முடிவை ஒட்டி, சந்தையில் ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் நிகழலாம். ஏற்கனவே சொன்னபடி, சீனாவின் நாணய சீரமைப்பு முடிவு இருபக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். லார்சன் நிறுவன பங்குகள் புதிய உயரத்தினை காணும் பட்சத்தில், வர்த்தகர்கள் வாங்கும் நிலை எடுக்கலாம். மற்ற ஏற்றுமதி நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் காண வாய்ப்புக்கள் உள்ளன.

நிபிட்டி 5200 க்கு மேல் இருக்கும் வரை வாங்கும் நிலை எடுக்கலாம். அடுத்த எதிர்ப்பு 5400 க்கு அருகாமையில் இருக்கும். மற்றபடிக்கு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

Friday, June 18, 2010

பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது எப்படி?


பொதுவாக பங்குகளில் நேரடி முதலீடு செய்வது என்பது சற்று நேரம் பிடிக்கும் வேலை. மேலும் நிறுவனங்களை பற்றிய, பங்குகளைப் பற்றிய சில தொழிற்நுட்ப தகவல்களையும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் முதலீட்டாளர்களுக்கு உண்டு. நேரடியாக பங்குகளில் முதலீடு செய்ய வாய்ப்பில்லாதவர்களுக்கும், இந்திய பொருளாதார வளர்ச்சியின் பயன்களை அடைய பரஸ்பர நிதி முதலீடுகள் ஒரு நல்வாய்ப்பினை வழங்குகின்றன. அதே சமயம், பங்குகளின் எண்ணிக்கையை விட பரஸ்பர நிதி திட்டங்களின் எண்ணிக்கை அதிகமோ என்று மலைப்புற செய்யுமளவுக்கு இன்று பரஸ்பர நிதி திட்டங்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகி விட்டன. நாளுக்கு நாள் புதிய புதிய திட்டங்களைப் பற்றிய ஏராளமான விளம்பரங்களும் வந்த வண்ணம் உள்ளன. ஒரு நல்ல பரஸ்பர நிதி திட்டத்தினை தேர்ந்தெடுக்க உதவும் சில வழிமுறைகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

முதலில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது. புதிய திட்டங்களில் முதலீடு செய்வதை தவிருங்கள். காரணங்கள் கீழே.

1. புதிய திட்டங்களில், விளம்பர செலவினம், தரகு போன்ற செலவின தொகைகள் அதிகமாக இருக்கும். அந்த செலவினத்தொகைகள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்பவர்களின் மீதுதான் சுமத்தப் படும். எனவே நிதியின் செயல்பாடு வெகுவாக பாதிக்கும்.
2. புதிய திட்டங்களுக்கு எந்த ஒரு வரலாறும் கிடையாது. பழைய வெற்றிகள் வருங்காலத்திற்கு உத்திரவாதம் அளிக்காது என்றாலும், குறிப்பிட்ட திட்டத்தின், பரஸ்பர நிதியின் மற்றும் நிதி மேலாளரின் திறமை பற்றி கணிக்க "வரலாறு ரொம்பவும் முக்கியம்" நண்பர்களே!
3. நடப்பு பரஸ்பர நிதித் திட்டங்களில் நாம் முதலீடு செய்யும் போது, அந்த பணம் கால தாமதம் இல்லாமல் பங்கு சந்தைக்கு போகின்றது. ஆனால் புதிய திட்டங்களில் முதலீடு செய்யும் பணம் பங்கு சந்தைக்கு போக சிறிது கால அவகாசம் பிடிக்கின்றது.
4. தரகர்கள் ஆசைக் காட்டுவது போல புதிய நலத்திட்டங்கள் மலிவான விலையில் ஒருபோதும் கிடைப்பதில்லை. அதே போல ஒரு திட்டத்தின் உள்ளிருப்பு மதிப்பு (NAV), அது எவ்வளவு குறைவு அதிகமாக இருந்தாலும், நிதியின் செயல்பாட்டை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.

ஆக மொத்தத்தில், நிருபிக்கப் பட்ட நடப்பு திட்டங்களில் (Existing Schemes with Proven Track Record) முதலீடு செய்வதையே நான் இங்கு பரிந்துரைக்கின்றேன்.

சந்தையில் ஏராளமாக உள்ள நடப்பு நிதி திட்டங்களில் நாம் ஒரு நிதி திட்டத்தை தேர்ந்தெடுப்பது எப்படி என்று இனிமேல் பார்ப்போம்.

ஏற்கனவே சொன்னபடி வரலாறு ரொம்பவும் முக்கியம். ஒரு திட்டம் கடந்த சில ஆண்டுகளில், எவ்வளவு லாபத்தை ஈட்டியிருக்கிறது என்பதை பார்ப்பதை, வருமான அளவு எவ்வளவு சீராக உள்ளது (Consistent Performance) என்பதை ஆராய்வதே சிறந்தது. உதாரணத்திற்கு, சந்தை சிறப்பாக இருக்கும் போது அந்த நிதியின் செயல்பாட்டை விட, சந்தை சரிவின் போது நிதியின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதே முக்கியம்.

அதே போல, நிதி மேலாளரின் முன்னனுபவம் எவ்வளவு, அந்த அனுபவம் சிறப்பானதா என்பதையும் பார்க்க வேண்டும். குறுகிய காலத்தில் வேகமான வளர்ச்சி காண முனையும் நிதி மேலாளர்களை தவிர்ப்பது நல்லது. மேலும், நிதியின் செலவினங்கள் எவ்வளவு என்பதையும் பார்க்க வேண்டும். (இந்த தகவல்களை எளிதாக இணையத்தில் சேகரிக்க முடியும்).

நிதி திட்டத்தின் நோக்கங்கள் (Objectives and Investment Strategy) யாவை என்பதையும் கவனிக்க வேண்டும். நிதி திட்டத்தின் நோக்கங்கள் முதலீட்டாளரின் நோக்கங்களுடன் ஒத்துப் போக வேண்டும். உதாரணத்திற்கு, ரிஸ்க் குறைவாக எடுக்க விரும்புபவர்கள் விரிவார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் (Diversified Schemes) முதலீடு செய்யலாம். ரிஸ்க் அதிகம் எடுக்க விரும்புபவர்கள் சிறிய நிறுவன பங்கு திட்டங்களில் (Small & Mid Cap Funds) முதலீடு செய்யலாம். ஒரு குறிப்பிட்ட துறை (உதாரணத்திற்கு மென்பொருள்) சிறப்பாக செயல் படும் என்று நம்புபவர்கள், துறை சார்ந்த திட்டங்களில் (Sector Funds) முதலீடு செய்யலாம். வருமான வரி தவிர்க்க விரும்புபவர்கள் பங்கு சிறுசேமிப்பு திட்டங்களில் (ELSS) முதலீடு செய்யலாம். முக்கிய பங்குக் குறியீடுகளின் வளர்ச்சியின் லாபத்தை நேரடியாக பெற விரும்புபவர்கள் குறியீட்டு நிதி திட்டங்களில் (Index Funds/Exchange Traded Funds) முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் தங்க நிதிகளில் முதலீடு செய்யலாம்.

மேலும், அந்த பரஸ்பர நிதியில் தற்போதைக்கு உள்ள பங்குகள் யாவை என்பதையும் பார்க்க வேண்டும். அந்த பங்குகளின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் ஒரு தோராய கணிப்பு முக்கியம். மேலும் மிக அதிகமான பங்குகளின் இருப்போ அல்லது மிகக் குறைந்த பங்குகளின் இருப்போ, ஆக இரண்டுமே பரஸ்பர நிதியின் செயல்பாட்டை பாதிக்கும்.

இப்போது ஒருவர் எத்தனை நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம்.

ஒருவர் ஏராளமான நிதி திட்டங்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. ஒரே நிதி மேலாளர் நிர்வகிக்கும் இரண்டு திட்டங்கள் தேவையில்லை. அதே போல ஒரே நோக்கத்துடன் உள்ள இரண்டு நிதிகளும் அனாவசியம். ஒருவர் நான்கு முதல் ஐந்து வரையிலான திட்டங்களில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு ஒன்று அல்லது இரண்டு விரிவடைந்த நிதி திட்டங்கள், ஒரு சிறிய பங்கு நிதித்திட்டம் (ரிஸ்க் விருப்பத்தைப் பொருத்து), ஒரு துறை சார்ந்த திட்டம், ஓரிரண்டு வரி தவிர்ப்பு திட்டங்கள், ஒரு குறியீட்டு திட்டம் என்று நாம் திட்டமிட்டு செயல்படலாம்.

இப்போது எப்போது முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம்.

பங்கு சந்தையின் போக்கை ஓரளவுக்கு துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள், ஒவ்வொரு சரிவின் போதும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். சந்தையின் போக்கை தொடர்ந்து கவனிக்க முடியாதவர்களுக்கு வரப்ரசாதமாக அமைந்தவை மாதாந்திர சேமிப்பு திட்டங்கள் (Systematic Investment Plan ) ஆகும். இவற்றில் முதலீடு செய்வது நீண்ட கால நோக்கில் நல்ல பலனைத் தர மிக அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன.

என்னுடைய கணிப்பின் படி எந்தெந்த திட்டங்கள் (இப்போதைக்கு) நன்றாக செயல் படுகின்றன என்பதையும் நான் இங்கு பதிய விரும்புகிறேன்.

1. விரிவார்ந்த பரஸ்பர (பெரிய பங்குகள்) நிதி திட்டங்கள் - HDFC Equity Fund அல்லது HDFC Top 200 Fund
2. விரிவார்ந்த பரஸ்பர (சிறிய பங்குகள்) நிதி திட்டங்கள் - IDFC Premier Equity Plan A
3. வருமான வரி திட்டங்கள் - Fidelity Tax Advantage Plan
4. முக்கிய குறியீடுகளின் திட்டங்கள் - Nifty BeES & Junior Nifty BeES.

உங்களுடைய முதலீடுகள் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்!

நன்றி!

டிஸ்கி: பங்கு சந்தை முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன்னர், பரஸ்பர நிதி திட்ட விண்ணப்பத்தில் உள்ள மற்ற டிஸ்கிகளை படிக்கவும்.

Sunday, June 13, 2010

பொருளாதார வளர்ச்சி Vs பணவீக்கம்


உலக பொருளாதார சிக்கலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், இந்திய பொருளாதார (GDP) வளர்ச்சி பிரமிக்க தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்ற காலாண்டில் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி எட்டு சதவீதத்திற்கு மேல் இருந்திருக்கிறது. பணவீக்கமான பத்து சதவீதத்தையும் சேர்த்துக் கொண்டால், நடப்பு விலைவாசியின் படி பொருளாதார வளர்ச்சி (GDP at current Prices) பதினெட்டு சதவீதத்திற்கும் மேல். ஓரிரண்டு சதவீதத்திற்கு மேல் வளர்வதற்கே மூச்சு முட்டும் மற்ற பல நாடுகளுக்கு மத்தியில் இந்த வளர்ச்சி அசாதாரணமானதுதான். மற்ற புள்ளி விபரங்களும் இந்தியாவின் பொருளாதார மீட்சியை தெளிவாகவே பறை சாற்றுகின்றன. ஏப்ரல் மாதத்திற்கான இந்திய தொழிற் வளர்ச்சியோ (Industrial Production) பதினேழுக்கும் மேலே இருந்திருக்கிறது. தொழிற் நம்பிக்கை குறியீடு (Manufacturing Confidence) ஐம்பதுக்கும் மேல். உள்நாட்டின் கார் விற்பனை முப்பது சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. அலைவரிசை விற்பனையில் மத்திய அரசுக்கு ஒரு லட்சம் கோடிக்கும் மேல் வருவாய் கிட்டியுள்ளது.

இப்படி பல பொருளாதார புள்ளி விபரங்களும் இந்தியாவின் முன்னேற்றத்தை புடம் போட்டுக் காட்டுகின்றன. அன்றாட வாழ்வில் கூட, நம்மால் இந்த வளர்ச்சியை கண்கூடாக பார்க்க முடிகிறது. முன்போல குறைந்த ஊதிய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. பொது மக்கள் கையில் பணபுழக்கம் அதிகமாகி வருகிறது. இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் மூன்று வேளை சாப்பிடுகிறார்கள். மூன்று வேளை சாப்பிட்டவர்கள் உணவின் தரத்தை அதிகப் படுத்துகிறார்கள். இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது.

மேற்சொன்ன நல்ல விஷயங்களுக்காக சந்தோசப் படும் அதே நேரத்தில், இந்தியாவில் வளர்ச்சிக்கு வில்லன்களாக நான் இப்போதைக்கு கருதுபவை, சமூகமெங்கும் புரையோடிப் போயுள்ள ஊழல், அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அடிப்படை கட்டுமான வசதிகள் குறைபாடு, அதிகரித்து வரும் பயங்கரவாதம், உலக பொருளாதார தளர்ச்சி மற்றும் விஷம் போல ஏறி வரும் பணவீக்கம். இவற்றோடு, இவற்றின் மீது அதிகாரத்தில் உள்ளோரின் அக்கறையின்மையையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு இந்த பதிவின் தலைப்பான பணவீக்கத்தை பற்றி மட்டும் இங்கு பார்ப்போம்.

பணவீக்கத்தினால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி விரிவாக இந்த பதிவில் அலசப் பட்டுள்ளது. நேர அவகாசமிருந்தால் இந்த பதிவை படித்து விட்டு வாருங்கள்.

மேற்சொன்ன பதிவில் குறிப்பிட்டுள்ளபடி பணவீக்க சுழற்சியின் முதல் பாதி பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக அமைந்திருப்பதை நம்மால் இப்போது கண்கூடாக பார்க்க முடிகிறது. பொதுமக்களின் கைகளில் அதிக பணபுழக்கம், நுகரும் பொருட்களின் தேவையை அதிகப் படுத்தி உற்பத்தியை ஊக்குவித்துள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் குறைவான வட்டிவீதம், தொழில் அதிபர்கள் அதிகம் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட வைத்துள்ளது. அரசாங்கமும் தனது மீட்சி நடவடிக்கைகள் சிறப்பாக செயல்பட்டதாக எண்ணிக் கொண்டு மகிழ்ச்சியாக உள்ளது.

இப்போது பணவீக்க சுழற்சியின் இரண்டாவது விரும்பத்தகாத பாகம் ஆரம்பித்துள்ளது என்று நினைக்கிறேன். அடிப்படை பொருட்களின் விலை உயர்வு (Primary Articles Inflation) பதினேழு சதவீதத்திற்கும் மேல் என சென்ற வார புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு மட்டுமே அதிகமாக இருப்பதாகவும், உணவுப் பொருட்களின் விலை நல்ல பருவமழைக்கு பின்னே கட்டுக்குள் வந்து விடும் என்றும் இதுவரை சொல்லிக் கொண்டிருந்த மத்திய வங்கி மற்றும் அரசுக்கு இந்த தகவல் ஒரு எச்சரிக்கை மணி என்று கருதுகிறேன். இன்றைய பணவீக்கத்தின் உயர்வுக்கு காரணம், உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மட்டுமல்ல, பொதுமக்கள் புழக்கத்தில் மற்றும் பதுக்கல் பேர்வழிகள் கையில் உள்ள ஏராளமான பண இருப்பும்தான் என்பதை மத்திய வங்கி புரிந்து கொள்ள வேண்டிய கட்டம் வந்து விட்டது என்றும் நினைக்கிறேன்.

பணவீக்கம் இதற்கு மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், மத்திய வங்கி தனது வட்டி வீதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அவ்வாறு வட்டி வீதம் உயர்த்தப் பட்டால், நிறுவனங்களின் உற்பத்தி செலவினங்கள் உயரும் வாய்ப்புள்ளது. உற்பத்தி பொருட்களின் விலைவாசி அதிகரிக்கும் போது பொதுமக்களின் தேவைகள் குறையும். அதிகப் படியான பணப்புழக்கம், கையிருப்பு பணத்தின் மதிப்பை வெகுவாக குறைத்து விடும். பதுக்கல் இன்னமும் அதிகமாகும். செயற்கையான பொருள் தட்டுப்பாடுகள் உருவாக்கப் படும். மொத்தத்தில் அதிகப் படியான, கட்டுக்கடங்காத பணவீக்கம் பொருளாதாரத்திற்கு ஏராளமான பாதிப்புக்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் உள்ளது. சொல்லப் போனால் பொருளாதார வளர்ச்சி பெருமளவுக்கு பாதிக்கும்.

எனவே, பங்கு சந்தையின் கவனம் இப்போதைக்கு, பணவீக்கத்தின் போக்கு மற்றும் மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுப் படுத்த எடுக்கின்ற நடவடிக்கைகளின் பக்கம் திரும்பும் என்று எதிர்பார்கிறேன். அதே சமயம், எப்போதும் போல உலக சந்தைகளின் போக்கு, குறிப்பாக ஐரோப்பிய கடன் விவகாரம் ஆகியவற்றின் தாக்கம் இந்திய சந்தைகளின் மீது தொடரும்.

சென்ற பதிவிலேயே சொன்னபடி நிபிட்டி 4950 க்கு அருகே அரணைக் கொண்டிருக்கும். 5150-5200 அளவுகளில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும். நிபிட்டி 4950 புள்ளிகளுக்கு அருகே நிபிட்டி வரும் போது, முதலீட்டாளர்கள் பங்குகளை மெல்ல மெல்ல சேகரிக்கலாம். வர்த்தகத்தில் புதிய நிலை எடுப்பவர்கள் 5150-5200 அளவை நிபிட்டி முழுமையாக கடந்த பிறகு வாங்கும் நிலை எடுக்கலாம். மற்றபடிக்கு எச்ச்சரிகையை தொடர்வது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி!

Saturday, June 12, 2010

தமிழகம்! ஜாக்கிரதை!


இந்தியாவை பொறுத்த வரை பயங்கரவாதத்தினால் அதிகமாக பாதிக்கப் படாத மாநிலமாகத்தான் தமிழகம் இருந்து வந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டுள்ளதாக இன்று வந்த செய்தி உண்மையிலேயே அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ரயில்வே துறை ஊழியர்களின் சமயோசிதமான செயல்பாடுகள்தான் மலைகோட்டை எக்ஸ்பிரஸ் சந்திக்கவிருந்த மிகப் பெரிய விபத்தினை தவிர்த்து ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரை காப்பாற்றி உள்ளது. அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டு தெரிவிக்கும் அதே நேரத்தில், தமிழகம் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டம் இது என்பதையும் இங்கு பதிய விரும்புகிறேன்.

ராஜபக்சேயின் இந்திய வருகையை எதிர்த்து அச்சிடப் பட்ட நோட்டிஸ்கள் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது. இது உறுதிபடுத்த முடியாத தகவல் என்பதால் உடனடியாக யார் மீதும் குற்றம் சாட்டி விட முடியாது என்றாலும், சதி வேலையில் ஈடுபட்டவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அது எவ்வளவு உயர்வாக இருந்தாலும், அவர்கள் கண்டிக்கப் படவேண்டியவர்கள் மற்றும் சட்டத்தினால் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.

வட மாநிலங்களில் வாழ்ந்தவன் என்ற முறையில் பயங்கரவாதத்தின் வலியை நேரடியாக உணர்ந்தவன் நான். அந்த வகையில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, எந்த காரணத்தினை முன்னிட்டும், பயங்கரவாதத்திற்கு தமிழகத்தில் இடமளித்துவிடக் கூடாது. சதிக்கும்பலை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்திடம் ஒப்படைக்க வேண்டியது அரசின் கடமை. அரசின் உறுதியான நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் எதிர்கட்சிகளும் துணை நிற்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

நன்றி!

Thursday, June 10, 2010

மன்னிப்பு - ஒவ்வொருவரது அகராதியிலும் இருக்க வேண்டிய வார்த்தை!


சென்ற வாரம் முழுதும் தமிழ் கூறும் பதிவுலகம் பரபரப்பாக இருந்தது. பதிவுலகத்தின் வெளிவட்டத்தை மட்டுமே சார்ந்தவன் என்றாலும், "கூட்டமாக இருந்தால் எட்டிப்பார்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையும் உரிமையும் ஆகும்" என்பதால் நானும் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன். தீர்ப்பு அல்லது தீர்வை விடுங்கள், குறைந்த பட்ச கருத்தை சொல்லும் அளவுக்கு கூட, சம்பந்தப் பட்ட பிரச்சனையைப் பற்றிய அறிதல்களும் புரிதல்களும் எனக்கு மிகக் குறைவாக இருந்ததால், "கோட்டுக்கு அந்த பக்கமே" இருந்து விட்டேன். பெண்ணியம், ஆணாதிக்கம், பார்ப்பனியம் என புரிந்து கொள்ள சிக்கலான பல வார்த்தைகளுக்கு இடையே அடிக்கடி உச்சரிக்கப் பட்ட "மன்னிப்பு" என்ற ஒரு வார்த்தை, என்னுள் வேறு சில நினைவுகளை வரவழைத்தது. அந்த நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

டாக்டர்.வேனி டபுள்யு டயர் (Dr.Wayne W Dyer) என்ற அமெரிக்க எழுத்தாளரைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் மிக அதிகமாக விற்பனை செய்யப் பட்ட "ஆளுமை வளர்ச்சி" தொடர்பான புத்தகங்களில் குறிப்பிடத்தக்கதான "Your Erroneous Zones" யை எழுதியவர். இவர் எழுதிய இரண்டாவது புத்தகம் "You 'll See It When You Believe It". இந்த புத்தகத்தின் முன்னுரையில் இவரது வாழ்வில் நிகழ்ந்த சில உண்மை சம்பவங்களைப் பற்றி எழுதி இருக்கிறார். அந்த சம்பவங்களை அவரது சொந்த வரிகளில் (சாராம்சம் மட்டும்) இங்கே பதிகிறேன்.

"எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போதே எனது தந்தை, எங்கள் குடும்பத்தை கை விட்டு விட்டார். மூன்று குழந்தைகளையும் வளர்ப்பதற்கு எனது தாயார் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. என்னுடைய தந்தையைப் பற்றி நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நான் கேள்விப் பட்ட விஷயங்கள் அனைத்தும் தவறானவைதான். குடிகாரர், மனைவியை கொடுமைப் படுத்தியவர், நேர்மையற்றவர், சட்டத்தை மீறியவர், சிறைக்கு சென்றவர் இன்னும் பல. அவரை நேரில் பார்த்திரா விட்டாலும், அவரின் பிம்பம் எனது மனதில் (மற்றவர்களின் வர்ணனை வாயிலாக) ஆழமாக பதிந்து வந்தது. அவரைப் பற்றி அதிகம் கேள்விப் பட, கேள்விப் பட அவர் மீதான வெறுப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. வெறுப்பு அதிகமாக அதிகமாக அவரை பற்றிய (வன்மம் நிறைந்த) ஆர்வமும் அதிகமாகிக் கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில், எனது கனவுகளில் எனது தந்தையின் பிம்பம் வர ஆரம்பித்தது. அந்த பிம்பத்துடன் நான் சண்டையிட ஆரம்பித்தேன். சண்டைக்கு இடையே அலறிக் கொண்டு எழுந்த சம்பவங்களும் உண்டு.

பெரியவனான பின்னரும், கனவுகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவரை என்றாவது ஒரு நாள் சந்தித்து அவரை கேள்விக் கணைகளால் துளைக்க வேண்டும் என்று விரும்பினேன். எத்தனையோ ஊர்கள், வேலைகள், மனைவிகள், குடும்பங்கள் என்று மாறிக் கொண்டே இருந்தவரை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. வாழ்வியல் போராட்டங்களும் அந்த முயற்சிகளுக்கு அதிக நேரம்/ சக்தியை வழங்கவில்லை.

நியூ ஓர்லேன்ஸ் என்ற ஊரில் அவர் இறந்து விட்டதாக உறுதிபடுத்த முடியாத தகவல் வந்தது. ஆனால், தனிப்பட்ட வாழ்வில் சிக்கல்கள் நிறைந்த அன்றைய சூழலில் இந்த விஷயத்தை உறுதிப்படுத்த நான் முனைய வில்லை. ஆனால் வன்மங்களும், போராட்ட கனவுகளும் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. சொல்லப் போனால் சிக்கலான கால கட்டங்களில் கனவின் வருகை அதிகமானது. மனதின் துன்பமும் அதிகரித்துக் கொண்டே போனது.

சில வருடங்கள் கழித்து, நியூ ஓர்லேன்ஸ் நகரத்திற்கு அருகே எனது அலுவல் தொடர்பாக செல்ல வேண்டியிருந்தது. கல்லறை நிர்வாகியிடம், புதைக்கப் பட்டது அவர்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு, அங்கே சென்றேன். கல்லறையின் முன்னர் அமர்ந்து கொண்டு அடுத்த இரண்டரை மணி நேரம் "உயிரற்ற அந்த மனிதரிடம்" உரையாடினேன். சுற்றுப்புறத்தை மறந்து சத்தம் போட்டு அழுதேன். "ஒரு கல்லறை மனிதரை" பதில்கள் தர வேண்டி கட்டாயப் படுத்தினேன்.

நேரம் செல்ல செல்ல எனது மனது இளகியது. ஒரு வித நிச்சலன நிலை அங்கே நிலவியது. எனது தந்தையே அருகில் இருப்பது போல ஒரு உணர்வு அப்போது தோன்றியது.

மீண்டும் "இல்லாத அவரிடம்" பேச ஆரம்பித்தேன்.

"உன்னிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த நிமிடத்துடன் எல்லாம் முடிவடைந்து விட்டது. உன்னுடைய வாழ்க்கையை ஏன் அப்படி வாழ்ந்தாய் என்று எனக்குத் தெரியாது. அந்த (கேடுகெட்ட) வாழ்க்கைக்காக நீ என்றாவது வருந்தினாயா என்றும் தெரியாது. உன்னுடைய எண்ணங்கள் எப்படி இருந்திருந்தாலும், உன்னைப் பற்றிய தீய எண்ணங்களை இன்றுடன் நான் முடித்துக் கொள்ள விரும்புகிறேன். உன்னுடைய வாழ்வை (அந்த கால சூழ்நிலைகளுக்கேற்ப) எப்படி வழி நடத்த நேரிட்டதோ, அதன்படியே நீ வாழ்ந்தாய் என்று எனது மனதில் சொல்லிக் கொள்கிறேன். உன்னைப் பற்றிய தவறான நினைவுகள் நம்மிடையே இனி தடையாக இருக்க வேண்டாம். உன்னிடம் நான் காட்ட விரும்புவது என்னுடைய உண்மையான அன்பை மட்டுமே. இப்போது உனக்கு எனது அன்பை தருகிறேன். நீ எனது களங்கமற்ற அன்பை பெற்றுக் கொள்"

அந்த கணத்தில் "மன்னிப்பின்" மகத்துவத்தை என்னால் உணர முடிந்தது. அது வரை மன்னிப்பை பற்றி அறிந்திராத நான் எனது வாழ்வின் மிகப் புதிய அனுபவத்தை உணர்ந்தேன். மனம் முழுக்க தூய்மை அடைந்தது போலவும், மனம் இலவம் பஞ்சு போல எடையற்றுப் போனது போலவும் உணர்ந்தேன்.

இந்த அனுபவத்திற்கு பின்னர் என் வாழ்வில் நிகழ்ந்தது எல்லாம் சரித்திரம். அமெரிக்க புத்தக வரலாற்றில் சரித்திரம் படைத்த "Your Erroneous Zones" புத்தகத்தை இலகுவாக எழுதி முடித்தேன். மேடைப் பேச்சுகளின் போது குறிப்புகளின் அவசியம் இல்லாமல் போனது. எனது மேடை பேச்சுக்கள் மக்களை ஈர்த்தன. தனிப்பட்ட வாழ்விலும் முன்னேற்றம் நேரிட்டது.

இன்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். வன் உணர்வுகளால் துன்பப் பட்டுக் கொண்டிருந்த, வெகுவாக பாதிக்கப் பட்டிருந்த என்னை முழுமையாக மாற்றியதும் வாழ்வில் உயர்த்தியதும், நான் "மன்னிக்க" முன் வந்த அந்த தருணம்தான்."

இப்போது நமது பதிவுக்கு மீண்டும் வருவோம்.

கோபம் அல்லது வன்மம் அவற்றை "கொண்டவருக்குத்தான்" அதிக (மனரீதியான) துன்பங்களை விளைவிக்கின்றன. மன்னிப்பு என்பது அதுவரை வலியுடன் சுமந்து வந்த ஒரு (மன) பாரத்தை இறக்கி வைத்து விடும் ஒரு செயல் என்றே கருதுகிறேன். மன்னிப்பின் போது மன்னிக்கப் பட்டவரை விட மன்னிப்பவருக்கே மனரீதியான அதிக பலன்கள் கிடைக்கின்றது என்பது நடைமுறை உண்மை.

இதை உணர வேண்டுமானால் உடனடியாக மன்னிக்க ஆரம்பியுங்கள்.

(இந்த பதிவில் ஏதேனும் குறைகள் இருப்பது போல உணர்ந்தீர்கள் என்றால், மன்னிப்பை இந்த பதிவரிடமிருந்தே கூட ஆரம்பிக்கலாம்)

நன்றி!

Sunday, June 6, 2010

அடுத்தது ஹங்கேரி?


கிரீஸ் மற்றும் ஸ்பெயின் கடன் சிக்கல் அலை ஓய்ந்து முடிவதற்குள்ளேயே, ஹங்கேரி அலை இப்போது உலக சந்தைகளை தாக்க ஆரம்பித்துள்ளது. கிரீஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைப் போலவே ஹங்கேரியும் கடன் சிக்கலில் தவிப்பதாக வந்த செய்திகளை அந்த நாட்டின் அரசு அதிகாரபூர்வமாக மறுத்துள்ள போதிலும், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலைமை முன்னர் எதிர்பார்த்ததை விட தற்போது மோசமாகவே உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஐரோப்பிய நாடுகளின் தவறான சமூக பொருளாதார கொள்கைகளே அவற்றின் இப்போதைய சிக்கலுக்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

சென்ற நூற்றாண்டின் மத்திய காலம் வரை உலகின் பெரும்பகுதியை காலனியாதிக்கம் செய்தவை ஐரோப்பிய நாடுகள் ஆகும். தொழிற் புரட்சி மற்றும் காலனியாதிக்கத்தின் சுரண்டல் வாயிலாக செல்வ செழிப்பு நாடுகளாக ஐரோப்பிய நாடுகள் அப்போது விளங்கி வந்தன. ஆனால் இரண்டாவது உலகப் போர் மற்றும் புதிய சுதந்திர நாடுகளின் உதயம் ஆகியவை ஐரோப்பிய நாடுகளின் அரசியல் செல்வாக்கை பெருமளவுக்கு குறைத்தன. இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளின் தொழிற்நுட்ப வளர்ச்சி இன்னும் கூட பலகாலம் வரை அந்த நாடுகளை செல்வந்த நாடுகளாகவே நீடிக்க உதவியது.

சீனா மற்றும் கிழக்காசிய நாடுகள் உலகின் தொழிற்சாலையாக மாற ஆரம்பித்த பிறகு, இந்த நாடுகளில் உள்ள மலிவான மனித மூலதனம் ஐரோப்பிய நாடுகளின் "போட்டியிடும் சக்தியை" வெகுவாக குறைத்தது. அதே சமயம், ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் தனது குடிமக்களுக்கு உயர்தர கட்டுமான வசதிகளையும் சமூகப் பாதுகாப்பையும் வழங்குவதற்காக வெகுவாக செலவு செய்வதை குறைக்காமல் தொடர்ந்தே வந்தன. பொருளாதார தேக்கம் ஏற்பட்ட பின்னரும் கூட இந்த நாடுகளின் மக்களாட்சி அரசாங்கங்கள் தமது செலவினத்தை குறைக்காமல் தொடர்ந்ததால், இவற்றின் கடன் அளவு மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே போனது.

"டாலர் சுழற்சி முறை" சிறப்பாக நடந்து கொண்டிருந்த இந்த நூற்றாண்டின் துவக்க காலம் ஐரோப்பிய நாடுகளின் குறைகளை மூடி மறைக்க வெகுவாக உதவியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நேரிட்ட "பொருளாதார சிக்கல்" காரணமாக, உலகெங்கும் உள்ள அனைத்து அரசாங்கங்களும் அதிக செலவினங்களின் மூலம் பொருளாதார மீட்சியை ஏற்படுத்த முடிவு செய்ததால், ஐரோப்பிய அரசாங்கங்கள் முன்னிலும் அதிகமாக தமது செலவினத்தை தொடர்ந்து வந்தன. ஆனால், அமெரிக்க மற்றும் இந்திய-சீனா போல பொருளாதார மீட்சி ஐரோப்பாவில் சிறப்பாக அமையாததால், ஐரோப்பிய நாடுகள் கடன் சிக்கலில் வெகுவாக மாட்டிக் கொண்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய கடன் சிக்கலை போக்குவதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பு சுமார் ஒரு டிரில்லியன் டாலர் கடன் உதவி திட்டத்தை அறிவித்திருந்தாலும், இந்த திட்டம் சிக்கலை தீர்க்காது என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். ஒரு கடனாளியால் இன்னொரு கடனாளியின் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதே இவர்களின் வாதம். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

ஐரோப்பிய கடன் சிக்கலுடன் அமெரிக்காவின் மோசமான வேலைவாய்ப்பு அறிக்கையும் சேர்ந்து கொள்ள, சென்ற வார இறுதியில் அமெரிக்க பங்கு சந்தைகள் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தன. ஆசிய சந்தைகள் நாளை இந்த வீழ்ச்சியை தொடர வாய்ப்புள்ளது.

இப்போது இந்தியாவிற்கு வருவோம்.

ஐரோப்பாவின் கடன் சிக்கல் இந்தியாவின் ஏற்றுமதி துறைகளை ஓரளவுக்கு பாதிக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்தியாவின் கருப்பு பொருளாதாரத்தில் தற்போது குவிந்துள்ள ஏராளமான பணம் இந்தியாவின் வளர்ச்சி பெருமளவு மட்டுப்படாமல் இருக்க உதவும் என்றே நம்புகிறேன். சென்ற வாரம் வெளியிடப் பட்ட பொருளாதார வளர்ச்சி அரசின் முந்தைய எதிர்பார்ப்புக்கும் மேலாக இருந்துள்ளது. மேலும் மே மாத வாகன விற்பனை வளர்ச்சி, குறிப்பாக மாருதி நிறுவன கார்களின் விற்பனை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பது இந்திய பொருளாதாரத்தின் வலிமையை காட்டுகின்றது. பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்திருந்தாலும் மத்திய அரசு அதைப் பற்றி அதிக அக்கறை கொல்லாமல், பொருளாதார வளர்ச்சிக்கே முக்கியம் கொடுப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

ஏற்கனவே சொன்னபடி இந்தியாவின் உள்நாட்டு பொருளாதாரத்தை சார்ந்த (வங்கித்துறை, வாகனத்துறை, பெட்ரோலிய விற்பனைத்துறை) நிறுவனங்களின் பங்குகளில் (சரிவின் போது) முதலீடு செய்யலாம். ஐரோப்பிய நாடுகளுடன் பெருமளவு வணிகத் தொடர்பு உள்ள நிறுவனங்களை தவிர்க்கலாம். (இந்த பதிவில் தவிர்க்கும்படி அறிவுறுத்த பட்ட டாடா ஸ்டீல் பங்கு சென்ற சில வாரங்களில் பெருமளவுக்கு வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது)

ஏற்கனவே சொன்னபடி நிபிட்டி 4950 புள்ளிகளுக்கு அருகே வரும் போது, முதலீட்டாளர்கள் பங்குகளை மெல்ல மெல்ல சேகரிக்கலாம். வர்த்தகத்தில் புதிய நிலை எடுப்பவர்கள் 5150-5200 அளவை நிபிட்டி முழுமையாக கடந்த பிறகு வாங்கும் நிலை எடுக்கலாம். மற்றபடிக்கு எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி!
Blog Widget by LinkWithin