Skip to main content

சீன (யுவான்) நாணயத்தின் சீரமைப்பு - ஒரு இந்திய பார்வை!

உலக பொருளாதார சிக்கலை உருவாக்கியதில் சீனாவுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. கடன் வாங்கி செலவழித்த மேற்கத்திய நாடுகள் ஒரு பக்கம் என்றால், உற்பத்தி பொருட்களின் விலையை செயற்கையாக குறைவாக வைத்திருந்த சீனா மறு பக்கம், உலக வணிக அசமனிலை ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது. தனது ஏற்றுமதி பொருட்களின் விலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க சீனா கையாண்ட பல்வேறு வழிமுறைகளில் முக்கியமானது, தனது தேசிய நாணயத்தின் மதிப்பை (செயற்கையாக) மாற்றாமல் வைத்திருந்தது ஆகும். சீனாவின் இந்த தவறான போக்கினால், மற்ற ஏற்றுமதி நாடுகளின் (கிழக்காசியா மற்றும் இந்தியா) "போட்டியிடும் வலு" வெகுவாக பாதிக்கப் பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், நெசவு தொழில் மற்றும் இதர சிறு ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். உலக அரங்கில் சீனாவிற்கு இருந்த செல்வாக்கும், மேற்கத்திய நாடுகள் குறைந்த விலையில் மற்றவர்களின் சேவைகளை அனுபவித்து வந்த சௌகரியத்தை இழக்க விரும்பாததும், மற்ற ஏற்றுமதி நாடுகளின் குரல் எடுபடாமல் செய்தன.

இப்போது நாணயத்தின் மீதான தனது கட்டுப்பாட்டினை குறைத்துக் கொள்வதாக சீனா அறிவித்திருப்பது, மற்ற நாடுகளின் ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான ஒன்றாகும். அதே சமயம், கட்டுப்பாட்டினை குறைப்பதற்கான கால அட்டவணையை சீன அரசு தெளிவாக வெளியிடாததும், டாலருக்கு எதிராக யூரோ நாணயம் ஏற்கனவே பெருமளவுக்கு சரிந்திருப்பதும் கவனிக்க தக்கவை. எனவே உடனடியாக பெரிய லாபங்களை எதிர்பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். அதே சமயம், சீனா மீதான நிர்பந்தங்களை மற்ற நாடுகள் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், சீனா தனது ஏற்றுமதி விலை சாதகத்தினை பெருமளவுக்கு இழந்து விட வாய்ப்புக்கள் உள்ளன. அப்போது உலக வர்த்தகம் மீண்டும் ஒரு சமநிலையை எய்ய வாய்ப்புக்கள் உள்ளன.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு சில எதிர்வினைகளும் உள்ளன. சீன ஏற்றுமதியாளர்கள் பாதிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கடன் வழங்கியுள்ள சீன வங்கிகள் திவாலாக வாய்ப்புக்கள் உள்ளன. சீன ஏற்றுமதி குறைந்தால் "பொருட்கள் சந்தை"யிலும் பாதிப்புக்கள் ஏற்படலாம். ஏற்கனவே பல பதிவுகளில் கூறியுள்ளபடி, சீனாவின் பொருளாதார வளர்ச்சி பாதித்தால் அந்நாட்டில் (ரத்தகளரியுடன் கூடிய) அரசியல் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த நிலையை சந்தைகள் விரும்பாது என்றே நினைக்கிறேன்.

பொருளாதார ரீதியாக பார்க்கும் போது, சீனாவின் முடிவு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்திதான். அவர்களின் போட்டியிடும் திறமை உலக சந்தைகளில் அதிகமாக நல்வாய்ப்புக்கள் உள்ளன. சீன இறக்குமதி (போட்டி) பொருட்களின் விலை இனி அதிகமாகும் என்பதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கூட ஒருவகையில் மகிழ்ச்சி கொள்ளலாம். அதே சமயம் உள்நாட்டு (சீன பொருட்கள்) நுகர்வோர்களுக்கு விலையேற்ற பாதிப்பு உண்டு.

இப்போது பங்கு சந்தைக்கு வருவோம். உலக சந்தைகளின் சாதகமான போக்கும் அந்நிய முதலீட்டாளர்களின் மீள்வரவும் இந்திய பங்குகளை சென்ற வாரம் வெகுவாக உயர்த்தின. இந்திய நிறுவனங்கள் பெருமளவுக்கு முன்-வருமான வரி செலுத்தியதும் சந்தைகளை மகிழ்ச்சியுற செய்தன. அதே சமயம் ரிலையன்ஸ் பொதுக்குழு கூட்ட அறிவிப்புக்கள் அவ்வளவு மகிழ்ச்சிகரமாக இல்லை.

வரும் வாரம் "மாதாந்திர எதிர்கால வர்த்தக நிலை" முடிவை ஒட்டி, சந்தையில் ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் நிகழலாம். ஏற்கனவே சொன்னபடி, சீனாவின் நாணய சீரமைப்பு முடிவு இருபக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். லார்சன் நிறுவன பங்குகள் புதிய உயரத்தினை காணும் பட்சத்தில், வர்த்தகர்கள் வாங்கும் நிலை எடுக்கலாம். மற்ற ஏற்றுமதி நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் காண வாய்ப்புக்கள் உள்ளன.

நிபிட்டி 5200 க்கு மேல் இருக்கும் வரை வாங்கும் நிலை எடுக்கலாம். அடுத்த எதிர்ப்பு 5400 க்கு அருகாமையில் இருக்கும். மற்றபடிக்கு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

Comments

Thomas Ruban said…
சீனாவின் நாணயமான யுவான்னின் மறு மதிப்பீட்டால் ஏற்படும் சாதக, பாதககளை அருமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றி.
//நிபிட்டி 5200 க்கு மேல் இருக்கும் வரை வாங்கும் நிலை எடுக்கலாம்.//

இதுதான் புரியவில்லை.

இந்த நிலையில் நிஃப்டியை (அ) நிஃப்டியில் உள்ள நல்ல பங்குகளையும் வாங்கலாமா?

பருவமழையின் அளவு சாராசரியை விட எட்டு சதவிதம் குறைவாகவே இருக்கும் என்கிறார்களே,இது சந்தையை எந்தளவுக்கு பாதிக்கும்?.
//ரிலையன்ஸ் பொதுக்குழு கூட்ட அறிவிப்புக்கள் அவ்வளவு மகிழ்ச்சிகரமாக இல்லை.//

ரிலையன்ஸ் குருப் நடத்தும் நாடகங்கள் நாம் பார்க்காதாத! எவ்வளவுவோ பாத்தாச்சி!

பதிவுக்கு நன்றி சார்.
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

////நிபிட்டி 5200 க்கு மேல் இருக்கும் வரை வாங்கும் நிலை எடுக்கலாம்.//

//இதுதான் புரியவில்லை.////

நிபிட்டி 5200 க்கு மேல் இருக்கும் வரை சந்தையில் பாசிட்டிவ் செண்டிமெண்ட் இருக்கும் என்று நினைக்கிறேன்.

//இந்த நிலையில் நிஃப்டியை (அ) நிஃப்டியில் உள்ள நல்ல பங்குகளையும் வாங்கலாமா?//

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிபிட்டியின் நிலையை பொறுத்தே மற்ற பங்குகளின் நிலையும் மாறும். சந்தையின் ஒட்டு மொத்த மனநிலை இப்போதைக்கு பாசிட்டிவாக இருக்கின்றது. ஆனால் நிபிட்டி 5200 க்கு கீழே செல்லும் போது பய உணர்ச்சி வரும் என்றே நினைக்கிறேன்.

//பருவமழையின் அளவு சாராசரியை விட எட்டு சதவிதம் குறைவாகவே இருக்கும் என்கிறார்களே,இது சந்தையை எந்தளவுக்கு பாதிக்கும்?.//

பருவமழை இப்போதுதான் துவங்கி உள்ளது. இப்போதைய அளவைக் கொண்டு முடிவெடுப்பது கடினம். எனவே சந்தை இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புக்கள் குறைவு.

நன்றி!
நாணயத்தின் மீதான தனது கட்டுப்பாட்டினை குறைத்துக் கொள்வதாக சீனா அறிவித்திருப்பது எவ்வகையில் மற்றவர்களுக்கு சாதகம் என்பதை விரிவாக விளக்குவீர்களா?

ஏன்னா நம்ம நாட்டுல நாணயத்தின் மதிப்பு குறைஞ்சா ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படறாங்க அப்படின்னு சொல்லறாங்க அதான் குழப்பம். கொஞ்சம் புரிந்தாலும் தெளிவில்லை.
Muthuramalingam said…
நான் உங்களது வெப் சைட் வெகு காலமா பின் தொடர்கிறேன்.
மிகவும் நல்ல இருக்கு எனது பாராட்டுகள்


முத்து
Maximum India said…
நன்றி குறும்பன்!

//நாணயத்தின் மீதான தனது கட்டுப்பாட்டினை குறைத்துக் கொள்வதாக சீனா அறிவித்திருப்பது எவ்வகையில் மற்றவர்களுக்கு சாதகம் என்பதை விரிவாக விளக்குவீர்களா?

ஏன்னா நம்ம நாட்டுல நாணயத்தின் மதிப்பு குறைஞ்சா ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படறாங்க அப்படின்னு சொல்லறாங்க அதான் குழப்பம். கொஞ்சம் புரிந்தாலும் தெளிவில்லை.//

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பொருட்கள் ஏற்றுமதியாவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று "விலை மலிவு" (Price Competitiveness) தன்மை ஆகும். அதாவது ஒரு நாட்டில் இரண்டு டாலருக்கு கிடைக்கும் (தரம் சரி சமம் என்று வைத்துக் கொள்ளுங்கள்) பொருளை மறு நாட்டில் இருந்து இரண்டு டாலர் அல்லது அதை விட குறைந்த விலையில் மட்டுமே விற்பனை செய்ய முடியும்.

இப்போது இந்தியாவில் அந்த பொருளின் உற்பத்தி மொத்த செலவு எண்பது ருபாய் என்று வைத்துக் கொள்வோம். டாலர் மதிப்பு நாற்பத்தைந்து ரூபாயாக இருந்தால், ஏற்றுமதியாளருக்கு இந்திய மதிப்பில் (2 x 45) தொண்ணூறு ருபாய் கிடைக்கும்.லாபம் பத்து ருபாய். ஒருவேளை டாலர் மதிப்பு ஐம்பதானால் லாபம் இருபது ருபாய். அதே சமயம் டாலர் மதிப்பு நாற்பதுக்கு கீழே இறங்கினால் ஏற்றுமதியாளருக்கு நஷ்டம் ஏற்பட்டு விடும். அவரால் ஏற்றுமதி செய்ய முடியாது. நீங்கள் இங்கே புரிந்து கொள்ள வேண்டியது உள்ளூர் நாணய மதிப்பு உயர்ந்து அந்நிய செலவாணி மதிப்பு குறைந்தால் ஏற்றுமதியாளர்களுக்கு சிரமம் என்பது ஆகும்.

இது போன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காகத்தான் சீனா தனது நாணயத்தை செயற்கையாக குறைந்த மதிப்பில் வெகுகாலம் வைத்திருந்தது. இப்போது அதன் உள்ளூர் நாணய மதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், அந்த நாட்டின் பொருட்கள் அந்நிய நாடுகளில் அதிக விலையில் விற்க வேண்டியிருக்கும். இந்தியா போன்ற மற்ற நாடுகளின் ஏற்றுமதியாளர்கள் தமது விற்பனைப் பொருட்களின் விலையை சற்று தாராளமாக நிர்ணயிக்க முடியும்.

எனவேதான் சீனாவின் இந்த முடிவு இந்தியா போன்ற மற்ற நாடுகளின் ஏற்றுமதியாளர்களுக்கு நல்வாய்ப்பு என்று பதிவில் தெரிவித்திருந்தேன்.

நன்றி!
Maximum India said…
//நான் உங்களது வெப் சைட் வெகு காலமா பின் தொடர்கிறேன்.
மிகவும் நல்ல இருக்கு எனது பாராட்டுகள் //

ரொம்பவும் சந்தோஷம்.

நன்றி முத்து!
//வணிக அசமனிலை//

நல்ல தமிழாக்கம். வாழ்த்துகள்..
எனக்கு கடந்த சில நாட்களாக தமிழ் மணம் தளத்தை திறக்க முடியவில்லை .. என்ன காரணம்?
இது நாள் வரை அமெரிக்கா அளவுக்கு அதிகமாக நாணயத்தை உற்பத்தி செய்து வந்துள்ளது. அதனால் ஏற்பட கூடிய பண வீக்கத்தை தவிர்க்க சீனாவிடமிருந்து பொருளை இறக்குமதி செய்தது. அதாவது தனது பணவீக்கத்தை சீனாவிற்கு ஏற்றுமதி செய்தது. இனி சீனாவின் நாணயத்தின் மதிப்பு உயர்ந்தால் அமெரிக்கா சிறிதளவாவது பொருட்களின் விலையேற்றத்தை ஏற்று கொள்ள வேண்டும்.

அமெரிக்கா தனது trade deficit குறைய சீனாவின் நாணய மதிப்பை குறைக்க வேண்டும் என்று சொல்கிறது.சீனாவின் நாணய மதிப்பை உயர்த்தினாலும், சீனா தற்போது உற்பத்தி செய்யும் உற்பத்தி சார்ந்த தொழிலை மீண்டும் அமெரிக்காவில் தொடங்கி சீனாவிற்கு போட்டியாக அந்த தொழிலில் இறங்குவார்களா என்பது சந்தேகமே.

நீங்கள் சொல்வது போல் இந்திய ஏற்றுமதி தொழிலுக்கு இது சாதகமாக இருக்கலாம்.

ஆனால் சீனா இப்போதைக்கு தன் நாணய மதிப்பை குறிபிட்ட அளவு உயர்த்தும் என்று தோன்ற வில்லை.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...