Sunday, June 6, 2010

அடுத்தது ஹங்கேரி?


கிரீஸ் மற்றும் ஸ்பெயின் கடன் சிக்கல் அலை ஓய்ந்து முடிவதற்குள்ளேயே, ஹங்கேரி அலை இப்போது உலக சந்தைகளை தாக்க ஆரம்பித்துள்ளது. கிரீஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைப் போலவே ஹங்கேரியும் கடன் சிக்கலில் தவிப்பதாக வந்த செய்திகளை அந்த நாட்டின் அரசு அதிகாரபூர்வமாக மறுத்துள்ள போதிலும், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலைமை முன்னர் எதிர்பார்த்ததை விட தற்போது மோசமாகவே உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஐரோப்பிய நாடுகளின் தவறான சமூக பொருளாதார கொள்கைகளே அவற்றின் இப்போதைய சிக்கலுக்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

சென்ற நூற்றாண்டின் மத்திய காலம் வரை உலகின் பெரும்பகுதியை காலனியாதிக்கம் செய்தவை ஐரோப்பிய நாடுகள் ஆகும். தொழிற் புரட்சி மற்றும் காலனியாதிக்கத்தின் சுரண்டல் வாயிலாக செல்வ செழிப்பு நாடுகளாக ஐரோப்பிய நாடுகள் அப்போது விளங்கி வந்தன. ஆனால் இரண்டாவது உலகப் போர் மற்றும் புதிய சுதந்திர நாடுகளின் உதயம் ஆகியவை ஐரோப்பிய நாடுகளின் அரசியல் செல்வாக்கை பெருமளவுக்கு குறைத்தன. இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளின் தொழிற்நுட்ப வளர்ச்சி இன்னும் கூட பலகாலம் வரை அந்த நாடுகளை செல்வந்த நாடுகளாகவே நீடிக்க உதவியது.

சீனா மற்றும் கிழக்காசிய நாடுகள் உலகின் தொழிற்சாலையாக மாற ஆரம்பித்த பிறகு, இந்த நாடுகளில் உள்ள மலிவான மனித மூலதனம் ஐரோப்பிய நாடுகளின் "போட்டியிடும் சக்தியை" வெகுவாக குறைத்தது. அதே சமயம், ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் தனது குடிமக்களுக்கு உயர்தர கட்டுமான வசதிகளையும் சமூகப் பாதுகாப்பையும் வழங்குவதற்காக வெகுவாக செலவு செய்வதை குறைக்காமல் தொடர்ந்தே வந்தன. பொருளாதார தேக்கம் ஏற்பட்ட பின்னரும் கூட இந்த நாடுகளின் மக்களாட்சி அரசாங்கங்கள் தமது செலவினத்தை குறைக்காமல் தொடர்ந்ததால், இவற்றின் கடன் அளவு மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே போனது.

"டாலர் சுழற்சி முறை" சிறப்பாக நடந்து கொண்டிருந்த இந்த நூற்றாண்டின் துவக்க காலம் ஐரோப்பிய நாடுகளின் குறைகளை மூடி மறைக்க வெகுவாக உதவியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நேரிட்ட "பொருளாதார சிக்கல்" காரணமாக, உலகெங்கும் உள்ள அனைத்து அரசாங்கங்களும் அதிக செலவினங்களின் மூலம் பொருளாதார மீட்சியை ஏற்படுத்த முடிவு செய்ததால், ஐரோப்பிய அரசாங்கங்கள் முன்னிலும் அதிகமாக தமது செலவினத்தை தொடர்ந்து வந்தன. ஆனால், அமெரிக்க மற்றும் இந்திய-சீனா போல பொருளாதார மீட்சி ஐரோப்பாவில் சிறப்பாக அமையாததால், ஐரோப்பிய நாடுகள் கடன் சிக்கலில் வெகுவாக மாட்டிக் கொண்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய கடன் சிக்கலை போக்குவதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பு சுமார் ஒரு டிரில்லியன் டாலர் கடன் உதவி திட்டத்தை அறிவித்திருந்தாலும், இந்த திட்டம் சிக்கலை தீர்க்காது என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். ஒரு கடனாளியால் இன்னொரு கடனாளியின் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதே இவர்களின் வாதம். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

ஐரோப்பிய கடன் சிக்கலுடன் அமெரிக்காவின் மோசமான வேலைவாய்ப்பு அறிக்கையும் சேர்ந்து கொள்ள, சென்ற வார இறுதியில் அமெரிக்க பங்கு சந்தைகள் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தன. ஆசிய சந்தைகள் நாளை இந்த வீழ்ச்சியை தொடர வாய்ப்புள்ளது.

இப்போது இந்தியாவிற்கு வருவோம்.

ஐரோப்பாவின் கடன் சிக்கல் இந்தியாவின் ஏற்றுமதி துறைகளை ஓரளவுக்கு பாதிக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்தியாவின் கருப்பு பொருளாதாரத்தில் தற்போது குவிந்துள்ள ஏராளமான பணம் இந்தியாவின் வளர்ச்சி பெருமளவு மட்டுப்படாமல் இருக்க உதவும் என்றே நம்புகிறேன். சென்ற வாரம் வெளியிடப் பட்ட பொருளாதார வளர்ச்சி அரசின் முந்தைய எதிர்பார்ப்புக்கும் மேலாக இருந்துள்ளது. மேலும் மே மாத வாகன விற்பனை வளர்ச்சி, குறிப்பாக மாருதி நிறுவன கார்களின் விற்பனை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பது இந்திய பொருளாதாரத்தின் வலிமையை காட்டுகின்றது. பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்திருந்தாலும் மத்திய அரசு அதைப் பற்றி அதிக அக்கறை கொல்லாமல், பொருளாதார வளர்ச்சிக்கே முக்கியம் கொடுப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

ஏற்கனவே சொன்னபடி இந்தியாவின் உள்நாட்டு பொருளாதாரத்தை சார்ந்த (வங்கித்துறை, வாகனத்துறை, பெட்ரோலிய விற்பனைத்துறை) நிறுவனங்களின் பங்குகளில் (சரிவின் போது) முதலீடு செய்யலாம். ஐரோப்பிய நாடுகளுடன் பெருமளவு வணிகத் தொடர்பு உள்ள நிறுவனங்களை தவிர்க்கலாம். (இந்த பதிவில் தவிர்க்கும்படி அறிவுறுத்த பட்ட டாடா ஸ்டீல் பங்கு சென்ற சில வாரங்களில் பெருமளவுக்கு வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது)

ஏற்கனவே சொன்னபடி நிபிட்டி 4950 புள்ளிகளுக்கு அருகே வரும் போது, முதலீட்டாளர்கள் பங்குகளை மெல்ல மெல்ல சேகரிக்கலாம். வர்த்தகத்தில் புதிய நிலை எடுப்பவர்கள் 5150-5200 அளவை நிபிட்டி முழுமையாக கடந்த பிறகு வாங்கும் நிலை எடுக்கலாம். மற்றபடிக்கு எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி!

10 comments:

Btc Guider said...

யானை வருவதற்கு முன்னர் மணியோசை கேட்க ஆரம்பித்துவிட்டது. மீண்டும் ஒரு பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளது. பங்குசந்தையின் போக்கு மேலும் கீழ் நோக்கி நகரும் என்றே நான் நம்புகின்றேன். சரியான நேரத்தில் தங்களின் பதிவில் தெளிவுபடுத்திவிட்டீர்கள்.

பகிர்வுக்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி ரஹ்மான்!

//மீண்டும் ஒரு பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளது. பங்குசந்தையின் போக்கு மேலும் கீழ் நோக்கி நகரும் என்றே நான் நம்புகின்றேன்.//

எவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்பதை துல்லியமாக கணிப்பது கடினம் என்றாலும், பொருளாதார தேக்க நிலை உருவாகும் என்று உறுதியாக நம்புகிறேன். பங்கு சந்தைகள் மீண்டும் ஒரு முறை சரிவை சந்திக்கும் சாத்தியக் கூறுகளும் அதிகமாகவே உள்ளன.

நன்றி!

Maximum India said...

Hi maximumindia,

Congrats!

Your story titled 'அடுத்தது ஹங்கேரி?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 8th June 2010 05:08:55 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/270296

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Maximum India said...

வாக்களித்த அனைத்து தமிழிஷ் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

பொதுஜனம் said...

இப்படி ஒவ்வொரு ஜமீனும் ஜாமீனுக்கு வந்து கொண்டிருந்தால் என்னங்க பண்றது?. புலிகளை புல்லை தின்ன வைத்து விடுவார்கள் போல் இருக்கிறதே?. இருந்தாலும் நான் ஒன்னு சொல்லிகிறேன். நாங்க ரொம்ப நல்லவங்க. எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம். இப்பவும் தாங்கறோம்.விஜய் மல்லையா காந்தி பொருளை ஏலம் எடுத்து காப்பாத்துன மாதிரி எங்களையும் காப்பாத்துவார்..

Maximum India said...

நன்றி பொதுஜனம்!

//இப்படி ஒவ்வொரு ஜமீனும் ஜாமீனுக்கு வந்து கொண்டிருந்தால் என்னங்க பண்றது?. புலிகளை புல்லை தின்ன வைத்து விடுவார்கள் போல் இருக்கிறதே?//

காலச்சக்கரத்தின் வேகத்தில் புலிகள் எல்லாம் இப்போது எலிகளாக மாறிக் கொண்டு இருக்கின்றன. புலிகளைக் காப்பாற்றத்தான் இப்போது எல்லாரும் போராட வேண்டி இருக்கின்றது.

//இருந்தாலும் நான் ஒன்னு சொல்லிகிறேன். நாங்க ரொம்ப நல்லவங்க. எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம். இப்பவும் தாங்கறோம்.விஜய் மல்லையா காந்தி பொருளை ஏலம் எடுத்து காப்பாத்துன மாதிரி எங்களையும் காப்பாத்துவார்.. //

பதிவிலேயே சொன்னபடி நமது கறுப்புப் பொருளாதாரம் மிகப் பெரியது. வெள்ளைப் பொருளாதாரம் தளரும் போதெல்லாம் கறுப்புப் பொருளாதாரம் வளர்ச்சியைத் தந்திருக்கின்றது.

நன்றி!

Itsdifferent said...

I do not understand your point on Blackmoney sustaining out economy. Can you please explain it to me.
Thanks.

Maximum India said...

அன்புள்ள itsdifferent!

சென்ற பொருளாதார வீழ்ச்சியின் போது, இந்தியாவில் ரியல் எஸ்டேட் விலைகள் பெருமளவில் வீழ்ச்சி அடையாமல் போனதற்கும், வீட்டுக் கடன்கள் அதிகமாக வாராக் கடன்களாக மாறாமல் போனதற்கும் முக்கிய காரணம் கறுப்புப் பொருளாதாரம்தான். மேலும், இன்று பலரும் (அரசு ஊழியர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள்) கார், ஆடம்பர பங்களா, திருமணங்கள் மற்றும் சுற்றுலா விஷயங்களில் தாராளமாக செலவு செய்வது கணக்குக்காட்டாத (ஊழல் மற்றும் லஞ்சம் மூலம் பெறப் பட்ட) கறுப்புப் பணத்தின் உதவியால்தான். இத்தகைய செலவினங்கள்தான் இன்று இந்தியாவின் துரித மீட்சிக்கு முக்கிய காரணம். அதே சமயத்தில், இந்தியாவின் மிகப் பெரிய கருப்பு பொருளாதாரம்தான் உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு உள்ள அதிகமான பணவீக்கத்திற்கும் முக்கிய காரணம்.

நன்றி!

வால்பையன் said...

யூ எஸ் டியும் ஏறுது!
தங்கமும் ஏறுது,
ஐ என் ஆரும் ஏறுது,
எனக்கு பிபியும் ஏறுது!

என்ன செய்யலாம் தல!

Maximum India said...

அன்புள்ள வால்பையன்!

ஐரோப்பிய கடன் சிக்கல் என்கிற சுனாமி ஓயும் வரை தங்கத்தின் விலை (டாலர் மதிப்பில்) உயர்ந்து கொண்டுதான் இருக்கும். இந்திய பங்குசந்தையில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு குறைவதும், இந்தியாவின் ஏற்றுமதியை விட இறக்குமதி வெகுவாக உயர்ந்திருப்பதும்தான் ருபாய் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.

மேற்சொன்ன இரண்டு காரணிகளில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில்தான் நீங்கள் தங்கத்தில் வர்த்தகம் செய்ய வேண்டும்.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி!

Blog Widget by LinkWithin