Tuesday, September 30, 2008

அக நானூறு மட்டும் போதுமா?


நான், என்னுடைய சில (வெளி மாநில) நண்பர்களுடன், நமது மாநிலத்தைப் பற்றி விவாதிக்கும் போது சில கருத்துக்கள் வெளியாகின.


அவையாவன.


தமிழ் நாட்டில் மட்டுமே, பெரும் தலைவர்கள், கலை சார்ந்த துறைகளுக்கு (குறிப்பாக சினிமா) மிக அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

தமிழ் நாட்டில் மட்டுமே, சினிமா நடிகர்கள் கொண்டாடப்படுகின்றனர்.


சொல்லப் போனால், குஜராத்துக்கு எண்ணெய் சார்ந்த தொழில்கள், மும்பைக்கு நிதி சார்ந்த துறைகள் மற்றும் கர்நாடகத்திற்கு மென் பொருட்கள் எனக் குறிப்பிடுவது போல தமிழ்நாட்டிற்க்கு என்று இருப்பது சினிமா துறை மட்டுமே என்ற மாயை காணப் படுகிறது.


பிரபல பத்திரிக்கைகள், கலை சார்ந்த செய்திகளுக்கே, முக்கியத்துவம் அளிப்பது போலவும தோன்றுகின்றது.


நான், அவர்களிடம் அதெல்லாம் ஓரளவிற்கே உண்மை, . மற்றபடி தமிழ் நாடு பல துறைகளில் முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்று வாதிட்டாலும், உள் மனதில் ஒரு கேள்வி எழுகிறது.

நம்மிடம் பல திறமைகள் இருந்தும் கூட நாம் ஏன் பெருமளவிற்கு முன்னேற வில்லை.நமது மாநிலம் இந்தியாவில், கல்வியறிவில் மட்டுமே முன்னணி மாநிலமாக இருந்து என்ன பயன்?


சோழர் கால பெருமையை என்றைக்கு மீட்டு எடுப்பது? (தமிழர் பெருமை என்றால் உலகறிய செய்ய வேண்டாமா?)

நான், நுண் கருத்துக்கள் மற்றும் கணிதம் சார்ந்த துறைகளுக்கான கருத்தரங்குகளுக்கு செல்லும் போது பல தமிழர்களை பார்க்கமுடிகிறது. அதே சமயத்தில், பணம் ஈட்டும் துறைகளுக்கான கருத்தரங்குகளில் பெரும்பாலும் மேற்கு மாநிலத்தவரே அதிகம் காணப்படுகின்றனர். அதே சமயத்தில்,அவர்களின் நிறுவனங்களில், பல தமிழர்கள் முக்கியப் பொறுப்புக்களில் பணிபுரிகின்றனர்.

பணம் அதிகம் புழங்கும் பங்கு வர்த்தக துறையில் கூட, பல தமிழர்கள் பணி புரிகின்றனர்.ஒரு நண்பர் வேடிக்கையாக கூறினார். We can manage Money well, but not make it.

இன்றைய தேதியில், இந்தியாவில், மும்பைக்கு பிறகு, தமிழ் நாட்டிலிருந்து மட்டுமே, மிக பெரும் செலவிலான திரைப் படங்கள் வெளியாகின்றன.


உருவாக்கும் திறன் (Creativity) வெகுவாக இருந்தும், இங்கிருந்து ஏன் மிகப் பெரிய தொழில் அதிபர்கள் அதிகம் உருவாகுவதில்லை?

அதே போல, விளையாட்டு துறைகளில் (ஒலிம்பிக்ஸ், டென்னிஸ் போன்றவற்றில்) நம் பெயர்களை அதிகம் காண முடிவதில்லையே.
என்ன காரணம்?


நாம் சற்று அளவுக்கு அதிகமாகவே கலையோடு இயைந்து வாழ்கிறோமோ?


பணம் ஈட்டுவது பற்றி அதிக அக்கறை காட்ட வில்லையோ? அல்லது, வேலை, குடும்பம், நண்பர்கள், இலக்கியம் மற்றும் சினிமா என்ற குறுகிய வட்டமே போதும் என்ற மனப்பான்மையிலேயே வாழ பழகி விட்டோமோ?


ஒரு வகையில் அகம் சார்ந்த துறைகள் அதிக முக்கியத்துவம் பெற்றதால்தான் தமிழ் நாடு பெரும்பாலும் அமைதி மாநிலமாக திகழ்கிறது என்று சிலர் கூறலாம்.


அது மட்டும் போதுமா?

சற்றே யோசியுங்கள்.

நம் சரித்திரத்தில்,எப்போது, நாம் உலகம் முழுக்க தெரிந்தவர்களாக இருந்தோம்?


சோழர் காலத்தில் மட்டும்தானே?

நான் ஒரு முறை, இந்தோனேசிய சரித்திரத்தைப் பற்றி படிக்கும் போது, அதில் எவ்வாறு, சோழர்கள் அன்றைய விஜயப் பேரரசை முறியடித்தனர் என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.


அன்றைக்கு, போர் திறன், நம் புகழ் பரப்பியது.


இன்றைக்கு, பொருளாதார வலிமை மற்றும் உடல் திறன் (பன்னாட்டு விளையாட்டு போட்டிகள்) நம்மை அடையாளம் காட்டும்.


எத்தனை நாட்களுக்கு, இந்த நடிகர் ஆட்சியை பிடிப்பாரா அல்லது அந்த நடிகை முதலிடம் பிடிப்பாரா என்று கவலைப் படுவது?


நிறுத்தி கொள்வோம்.

சற்றே மாற்றி சிந்திப்போம்.


இப்போது, நாம் என்ன செய்தால் நம் இழந்த பெருமைகளை மீட்க முடியும்?


எப்படி, மற்றவரை, தமிழரின் புற நானூறு மீண்டும் ஒரு முறை பாடச் செய்வது?

சிந்திப்போம்.

மீண்டும் சந்திப்போம்.

Sunday, September 28, 2008

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி - ஒரு இந்திய பார்வை - பகுதி 2


கடந்த வாரத்தில், நமது பங்கு சந்தை மிகப் பெரும் சரிவை சந்தித்தது.



இது தொடக்கத்தின் முடிவா அல்லது முடிவின் தொடக்கமா?


சரிவிற்கான முக்கிய காரணிகள்-


* அமெரிக்க வங்கிகளின் தொடரும் வீழ்ச்சி.



* அவற்றை மீட்பதற்க்காக தாக்கல் செய்யப் பட்ட மசோதா, அமெரிக்க பாராளுமன்றத்தில், ஒப்புதல் பெற தாமதம்.



* மேற்கண்ட பிரச்சினைகளினால், அமெரிக்க-இநதிய அணு சக்தி ஒப்பந்தத்தின் ஒப்புதலும் கால தாமதம் ஆவது



* அமெரிக்க வங்கிகள், இந்திய பங்கு சந்தையில், தொடர்ந்து தங்களது முதலீட்டுகளை திரும்ப பெறுவது.


நமது சந்தை தற்போது வாழ்வா அல்லது சாவா என்ற நெருக்கடி நிலையில் உள்ளது.


சென்செக்ஸ், 12500 (approx), என்ற அளவில் நல்ல அரணின் (Support) மிக அருகாமையில் உள்ளது. கடந்த சில நாட்களில், இரு முறை இந்த அளவிலிருந்து மீண்டு எழுந்துள்ளது.


இந்த முறை கூட, மேற்குறிப்பிட்டுள்ள அளவுகளுக்கு அருகே செல்ல அதிக வாய்ப்புள்ளது. அந்த "அரண்" முறிக்கப் பட்டால் , பத்தாயிரம் புள்ளிகளுக்கும் கீழ் செல்லவும் வாய்ப்புள்ளது.




குறுகிய கால கண்ணோட்டத்தில், நோக்கும் போது, சந்தையின் நிலை மிகவும் தடுமாற்றமாகவே இருக்கும்.


கீழ் காணும் சில கேள்விகளுக்கு பதில் அளிப்பது மிக கடினமாகவே இருக்கும்.


இன்னும் எத்தனை அமெரிக்க வங்கிகள் மூடப்படும்? (மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கையை கேட்பதா அல்லது மூடப்படாத வங்கிகளின் எண்ணிக்கையை கேட்பதா என்று புரிய வில்லை)


மற்றும், இந்த வங்கிகளை மீட்டெடுக்க அமெரிக்க அரசு மேற்க்கொள்ளும் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு வெற்றி பெரும்?


மேலும் இந்த வங்கிகள், இந்தியாவில் இருந்து இன்னும் கொண்டு செல்ல வேண்டிய பணம் (நேரடியாக மற்றும் மறைமுகமாக) எவ்வளவு?


வர்த்தகர்கள் (முதலீட்டாளர்கள் அல்ல) இந்த சூழலை கூர்ந்து கவனித்து முடிவு செய்வது நல்லது.



12500 என்ற அளவிற்கு மேல் முழுமையாக அரண் காக்கப்பட்ட பிறகு அல்லது அமெரிக்காவில் இருந்து தெளிவு பிறந்த பிறகு மட்டுமே புதிய வர்த்தக நிலை (Trading Position) எடுப்பது நல்லது.


இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் நிறைவேறும் பட்சத்தில் ஆதார பொருட்கள் (Capital Goods), சக்தி, சிமெண்ட் மற்றும் கட்டுமான துறைகளின் பங்குகள் உயரும் வாய்ப்பு உள்ளது.


இப்போது முதலீட்டாளர்களின் நிலைப்பாடு குறித்து ஆராய்வோம்.


ஒரு முக்கிய விஷயம்.


பங்கு சந்தை வேறு பொருளாதாரம் வேறு.


பங்கு சந்தை என்பது பொருளாதாரம் போகும் போக்கைக் காட்டும் ஒரு கருவி மட்டுமே. அதே சமயத்தில், இது ஒரு கட்டிய காரணி (Leading Indicator).


பங்கு சந்தையில் ஏற்படும் அளவிற்கு பொருளாதார பாதிப்பு ஏற்படாது.


காரணம், பங்கு சந்தைகள் அமெரிக்க வங்கிகளை (அல்லது அமெரிக்காவை) நம்பியுள்ள அளவிற்கு, நமது பொருளாதாரம் மற்ற நாடுகளை போல (சீனா மற்றும் இதர ஆசிய நாடுகள்) அமெரிக்காவை சார்ந்ததில்லை.


சொல்லப் போனால், நாம் ஒரு இறக்குமதி சார்ந்த (Import-Oriented) நாடு. நமது பொருளாதார வளர்ச்சி, நமது சொந்த செலவுகளை (Consumption- Oriented) சார்ந்தது.


அமெரிக்காவிலிருந்து இங்கு நாம் பெறுவது மூலதனம் மட்டுமே. அது கூட நிரந்தரமில்லாத மூல தனம் (Flight Capital).


தற்போது அது கூட நமக்கு தேவை இல்லை. ஏனெனில், நம்முடைய சேமிப்பு விகிதமும் முதலீட்டு விகிதமும், கடந்த சில வருடங்களாகவே, நன்கு உயர்ந்து உள்ளது.


எனவே, தலால் தெரு, வால் தெருவின் நிலையைப் பற்றி, ஒரு அளவிற்கு மேல், கவலைப் பட வேண்டியது இல்லை.



சொல்லப் போனால் அமெரிக்கப் பொருளாதாரம் கீழ் நோக்கி செல்லும் போது, அங்கு ஏற்படும் செலவினங்கள் குறையும் பட்சத்தில், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான, சக்தி மூல பொருட்கள் (Oil, Coal and Uranium) மற்றும் கனிம பொருட்கள் குறைந்த விலையில் நமக்கு கிடைக்கும்.


எனவே, நாம் அமெரிக்காவைப் பற்றிய கவலைகளை விட்டு விடுவோம். அது அவர்கள் பாடு.


நம்மை பற்றிப் பார்போம்.


நமது நாடு ஓர் இளைய நாடு.


வாழ்வு முறைகள் வேகமாக மாறி வருகிறது. போதும் என்ற மனப்பான்மை குறைந்து, இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் மற்றும் இன்னும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனப்போக்கு வளர்ந்து வருகிறது.


இந்திய பெரு நகரங்களில் மட்டுமல்ல, மற்ற பகுதிகளிலும் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது.


இதை உறுதி செய்ய நிபுணர்கள் தேவை இல்லை. நாம் ஒரு முறை, நம் ஊர்ப் பக்கம் போய் வந்தாலே போதும்.


சொகுசு கார்களை பெருமளவில் இந்தியா இறக்குமதி செய்து, சிறு கார்களை மேல்நாட்டினருக்கு ஏற்றுமதி செய்யும் காலமிது.


மேலும், அமெரிக்காவில் பத்து வருடம் வேலை (அதுவும் Goldman Sachs இல்) பார்த்து தற்போது திரும்பியுள்ள ஒரு நண்பர் கூறிய கருத்து இது.


நீங்கள் உங்கள் குழந்தையை தினமும் பார்ப்பதினால் அதன் வளர்ச்சி புரிவதில்லை.


அதே சமயத்தில், பத்து ஆண்டுகள் கழித்து ஒரு குழந்தையை பார்த்தால் தெரியும், அது எவ்வளவு வளர்ந்து இருக்கிறது என்று.


அதே போல, இந்தியாவும் கடந்த பத்து வருடங்களில் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது.


"கல்கி" அவர்கள் வரிகளில் கூற வேண்டுமானால், இது ஆடி மாத காவேரி. இன்னும் பல மாதங்கள் வற்றாமல் இந்நதி செல்லும்.


வேகம் குறையலாம். ஆனால் ஆடிக்குப் பின்னாலும் இந்த நதியில் (இந்தியா) நீர்ப் போக்கு தொடரும்.


உலக நாடுகள் (சில நாடுகளை தவிர) பின்னே செல்லும் போது நாம் மட்டுமே முன்னேறும் கூட்டத்தில்.


அதே சமயத்தில் நம் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய விரோதிகள்.


1. சக்தி தட்டுப்பாடு.


2. கட்டுமான வளர்ச்சிக் குறைவு.


3. உயரும் பணவீக்கம்.


4. உயரத்தில் வட்டி வீதம்


5. தீவிரவாதம்.


இந்த பிரச்சினைகளை நமது அரசு தீர்ப்பது, நமக்கு அமெரிக்க வங்கிகள் பிரச்சினையை (Subprime Crisis) விட முக்கியமானது.


முதலீட்டாளர்க்களுக்கான எனது கருத்துரை.



அடுத்த இரண்டு ஆண்டுகள் (குறைந்தது) நமது பங்கு சந்தை, பல ஏற்ற இறக்கங்களுடன், தடுமாற்றமாகவே இருக்கும்.


தற்போது தாங்கள் செய்ய வேண்டியது, கடின காலங்களிலும் நன்கு செயல் படக் கூடிய திறன் படைத்த, நிறுவனங்களை மட்டும் தேர்வு செய்து, அவர்களது பங்குகளில், ஒரே சமயத்தில் அல்ல, சிறிது சிறிதாக (Over a period of time) முதலீடு செய்வதே.


பொருளாதாரத்தின் குழப்பமான கால கட்டங்களில், தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது. ஆனால், தங்கம் நீண்ட கால முதலீடாக நிபுணர்களால் கருதப் படுவதில்லை. உலகப் பொருளாதாரம் (முக்கியமாக அமெரிக்கா) மீண்டு வந்ததால் தங்கத்தின் போக்கு மாறி விடும்.


தமிழ் நண்பர்களுக்கு, ஒரு கருத்து.


தங்கத்தில் முதலீடு, தங்க சந்தை வளர்ச்சி நிதிக் கூறுகள் (Gold Exchange Trade Fund Units) வழியாகவும் செய்யலாம். இம்முதலீட்டு முறையினால், செய்கூலி, சேதாரம் இல்லாமல், முழு தங்க விலை உயர்வின் பயனையும் அடையலாம். இம்முறை பாதுகாப்பானதும் கூட.



தங்கத்தில் ஓரளவிற்கு முதலீடு செய்வது உங்களது மொத்த முதலீட்டுப் பையின் சந்தை விலை அபாயங்களை குறைக்கும். (Investment in Gold to some extent of your total portfolio will reduce the valuation risks)



கடைசியாக ஒரு குரல்.


இந்தியாவில் முதலீடு செய்யும் போது இந்திய பொருளாதாரத்தினை ஆய்வு செய்யுங்கள். இந்திய நிறுவனங்களின் தனிப் பட்ட திறன்களையும் வளர்ச்சி வாய்ப்புக்களையும் ஆராய்ச்சி செய்யுங்கள். அமெரிக்காவைப் பற்றி ஒரு அளவிற்கு மேல் அக்கறை காட்டாதீர்கள்.


ஏனெனில், நமக்கு இங்கே நிறைய வேலை காத்து கிடக்கிறது.



நன்றி.

Saturday, September 27, 2008

இ(தயத்)தையும் கொஞ்சம் கவனியுங்கள்!


நேற்றைய தினத்தாள்களை படித்து கொண்டிருக்கும் போது, ஒரு அதிர்ச்சி தரக் கூடிய செய்தி தொகுப்பை பார்த்தேன். அதில், இந்தியாவில் மரணம் ஏற்படுத்தக் கூடிய வியாதிகளில் இதய நோயே முன்னணி வகிக்கிறது என்று குறிப்படப் பட்டிருந்தது.

மேலும் WHO வின் ஒரு அறிக்கையில், வருங்காலத்தில், மேலை நாடுகளில், இதய நோய் வாய்ப்புக்கள் குறையும் போது, இந்தியாவில் மட்டும், இதய நோய் மரணங்கள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகி உள்ளது என்றும் குறிப்படப் பட்டிருந்தது. .

ஏற்கனவே, விவாதித்த படி, நல்ல இதயம் மட்டும் இருந்தால் போதாது. அதை வல்லமையானதாகவும், பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, நம்மை சார்ந்தது.

இதயத்தை பாதுகாக்க சில குறிப்புகள்.

30 நிமிட உடற்பயிற்சி, எளிமையானதே போதும். ஆனால் ரெகுலராக இருக்க வேண்டும்.

உற்சாக நடை அல்லது மெல்லிய ஓட்டம் (jogging) நல்லது.

அது மட்டுமில்லாது அலுவலகத்திலும் தொடர்ந்து உட்கார்ந்தே இருக்காமல், குறிப்பிட்ட இடைவெளிகளுக்கு ஒருமுறை நடந்து வருவது நல்லது.

புகை பிடித்தல் அறவே கூடாது.

மது வகைகள் குறைக்கப் பட வேண்டும்.

காபி மற்றும் தேநீர் குறையுங்கள்.

சத்தற்ற உணவுகள் (Junk Foods like pizza, burger, carbonated drinks etc) கூடவே கூடாது.

கவனம்.

உணவின் அளவை குறைப்பதை விட உணவு பழக்க முறை மாற்றுவது நல்லது.

தமிழர்க்கு ஒரு கெட்ட பழக்கம். வயிறு நிறைய சாப்பிட வேண்டும். அதுவும் அரிசி உணவே எப்போதும். சாதம், இட்லி, தோசை (ம) ஆப்பம் என ஒரே அரிசி வகையறாதான்.

40-50 வருடங்களுக்கு (அதாவது பசுமை புரட்சிக்கு முன்) இவ்வளவு அரிசி உபயோகம் இல்லை.

அரிசி உபயோகத்தை குறைப்பது நல்லது. அதற்க்கு பதிலாக, கோதுமை, கம்பு, கேழ்வரகு, பருப்பு வகைகள் அதிகம் சேர்ப்பது நல்லது. மேலும் வயிறு இன்னும் கொஞ்சம் கேட்கும் போதே நிறுத்தி கொள்வது நல்லது.

காலையில் அதிகம், மதியம் சற்றே குறைவு மற்றும் இரவில் மிக குறைவு என்ற வழக்கம் ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

ஜெய்னர்களுக்கு ஒரு பழக்கம் இருந்தது. அதாவது, சூரியன் மறைவுக்கு பின் சாப்பிட மாட்டார்கள்.

அதன் சாராம்சம். இரவில் வயிற்றில் குறைந்த அளவு எனில் இருதயத்துக்கு குறைந்த பளு மற்றும் வேலை.

கொழுப்பு குறைந்த மாமிச உணவுகளை குறைத்து மீன் போன்ற உணவை அதிகம் சேருங்கள்.

பழம், காய்கறி மற்றும் கீரைகள் நல்லது.

உப்பு, எண்ணெய் அளவு குறையுங்கள்.

எடை அளவாக இருப்பது நல்லது (உயரத்திற்கு தகுந்தால் போல்). அதற்காக ஒரேயடியாக, ஒரே வேகத்தில் குறைப்பது நல்லது அல்ல.

மன சமநிலை முக்கியம்.

அலுவலக சிந்தனைகளை வீட்டில் உலவ விடாதீர்கள், குழந்தைகளுடன், அதிக நேரம் செலவிடுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். வருத்தப் படுவதில் எந்த ஒரு உபயோகமும் இல்லை.

தியானம் நல்லது. கடவுள் பக்தி உதவும்.


நாளை (28.09.2008), உலக இருதய நாள்.

நாளை, நாம் அனைவரும் ஒரு உறுதி மொழி எடுத்து கொள்வோம்.

அனைவர்க்கும் சொல்வோம்!


இதயத்தைப் பாதுகாப்போம்!


வருமுன் காப்போம்!


உலக இருதய நாள் வாழ்த்துக்கள்!

Friday, September 26, 2008

இந்தியாவிற்கு வயது இப்போ 61!


நேற்றைய பதிவின், பின் குறிப்பில் சொல்லியிருந்த கருத்து கீழே:

21 வயதில் சோசலிசம் பேசாதவனுக்கு இதயம் இல்லை.

50 வயதில் காபிடலிசம் பேசாதவனுக்கு மூளை இல்லை.

இதை எனக்கு நேற்று சொன்ன எனது மரியாதைக்குரிய நண்பர், இன்று மேற்சொன்ன வழக்கு மொழிக்கு புதிய விளக்கம் கூறினார்.

எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கும் கூட பிடிக்கும் என நம்புகிறேன்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது 1947 இல்.

தனது இளமை வயதில் இதே நாடு (1980 கள் வரை), சோசலிசம் பேசியது. 29 ஆவது வயதில் (1976), இந்திய அரசியல் சட்ட முன்னுரையில் (Preamble) "SOCIALIST" என்ற வார்த்தை சேர்க்கப் பட்டது.

(ஆதாரம்:Introduction to the Constitution of India, by Durga Das Basu, பக்கம் 26, 42 ஆவது அரசியல் சட்ட திருத்தம், 1976)

சுதந்திர இந்தியாவிற்கு வயது இப்போ 61.

நமது நாடு 43 வயதிலிருந்து காபிடலிசம் பேசுகிறது (1990 களில் இந்திய பொருளாதாரம் மேற்கத்திய பாணியை பின் பற்ற ஆரம்பித்தது.)

நன்றி. வணக்கம்.

Thursday, September 25, 2008

கம்யூனிச அமெரிக்காவும் முதாலாளித்துவ சீனாவும் - ஓர் அலசல்.


தற்போது உலக நாடுகள், முன் எப்போதும் சந்தித்திராத அளவிற்கு, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களை சந்தித்து வருகின்றன.


அவற்றில் மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டியவை - அமெரிக்கா கம்யூனிச நாடாகவும் சீனா முதலாளித்துவ நாடாகவும் மாறி வருவது ஆகும்.


அது குறித்து சற்றே இங்கு அலசுவோம்.


கார்ல் மார்க்ஸ் கண்ட கம்யூனிச சித்தாந்தந்தின் அடிப்படை கூறுகளாவன.

1. Egalitarian Society - எல்லாரும் சமம் என்ற சமுதாயம்
2. Classless Society - ஏற்ற தாழ்வற்ற நிலை
3. Stateless Society - அரசாங்கத்தின் தலையீடு குறைவான சமூகம்.
4. மேலும் உற்பத்தி மற்றும் இதர சொத்துக்கள் பொது உடைமையாக இருத்தல்.


கார்ல் மார்க்ஸ், உழைக்கும் மக்களே மூல தனம் என்றும், கம்யூனிசம், தனி மனித சுதந்திரத்தின் முழுமையை அடைய உதவும் என்றும் நம்பினார்.



கம்யூனிச சித்தாந்தம் உலகம் ஒன்றே என்றே கூறுகிறது. உலக வரைபட எல்லைக்கோடுகளை எப்போதும் நம்புவதில்லை.


அமெரிக்கா, கடந்த சிலகாலமாகவே கம்யூனிச பாதையில் சென்று வருகிறது.



அமெரிக்காவின் கம்யூனிச போக்கிற்கு, சில உதாரணங்கள், கீழே கொடுக்க பட்டு உள்ளன.



அமெரிக்கா WTO இல் ஏற்படும் பல வழக்குகளில் தன்நாட்டு உழவர்களுக்கு கொடுக்கப்படும் மிக அதிகமான மானியங்களை குறைக்க மறுத்து போராடி வருகிறது. காரணம், அந்நாட்டு உழவர்களுக்கு கொடுக்கப்படும் மிக அதிகமான மானியங்களை குறைக்க அந்நாடு விரும்பவில்லை.(இந்தியா போன்ற பேரளவில் சோஷலிச நாடுகள் இதனை கொள்கை அளவில் ஒப்பு கொண்டு விட்டன).



ஒவ்வொருவருக்கும் வேலை என்பது அமெரிக்காவில் உறுதி இல்லை என்ற போதிலும், வேலை இல்லாத பலர்க்கு , அரசின் சார்பில் உதவித் தொகை (Subsistence Allowance) வழங்கப் படுகிறது. (அந்த தொகை நமது சம்பளத்தை விட மிகவும் அதிகம்). மேலும் ஓய்வுதியம், மருத்துவ உதவி போன்ற பல சலுகைகள் (ஓரளவிற்காவது ) உண்டு. யாராவது மனதளவில் சற்று சோர்வு அடைந்திருந்தாலும் கூட, மன நல ஆலோசகர் (Counsellor) வீடு தேடி வரும் பழக்கம் கூட பார்க்கலாம்.



மார்க்ஸ் காண விரும்பிய தனி மனித சுதந்திரம், எந்த ஒரு (இதர) நாட்டையும் விட, அமெரிக்காவில் அதிகம் உண்டு.



அமெரிக்கா ஒரு முழுமையான ஜனநாயக நாடு.



இந்திய காம்ரேடுகளுக்கு மிகவும் பிடித்த, வேலை நிறுத்த உரிமை கூட அமெரிக்காவில் (அத்தியாவசிய துறைகளை தவிர) உண்டு.



வேடிக்கையாக சொன்னால், கம்யூனிஸ்ட்டுக்கு பிடித்தது "Strike". அமெரிக்கர்களுக்கு பிடித்தது "Air Strike"



மிக முக்கியமான ஒரு விஷயம். அமெரிக்கா மற்ற நாடுகளைப் பொறுத்த வரையில், சுரண்டல் பேர்வழியாக இருக்கலாம். ஆனால், அது தம் சொந்த மக்களை ஒருபோதும் சுரண்டுவதில்லை.



கார்ல் மார்க்சின் அதி முக்கிய கொள்கையாகும் இது.



கம்யுனிசம் போலவே அமெரிக்காவும் உலக வரைபட எல்லைகளை நம்புவது இல்லை. (எங்கு வேண்டுமானாலும் புகுந்து அடிப்பார்கள். அது ஈராக் ஆகட்டும் அல்லது பாகிஸ்தான் ஆகட்டும்),



Subprime பற்றிய என்னுடைய பகுதியை அனைவரும் படித்து இருப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.



அதில் உள்ளபடி, அமெரிக்கா தற்போது வங்கிகளை தேசிய மயமாக்கி கம்யுனிசத்தின் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது.



அதே சமயம் சீனா!


மார்க்சியத்தை விட மாவோசியத்தை அதிகம் நம்பிய நாடு.



மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படாத அரசால், வழி நடத்த நடத்தப் படும் நாடு சீனா.



சீன கம்யூனிச தந்தை, மாவோ கூறுகிறார்.


1. தனி மனிதன், அமைப்புக்கு கீழே
2. சிறுபான்மையினர், பெரும்பான்மையினருக்கு கீழே
3. கீழ் நிலையில் உள்ளோர், மேல் நிலையில் உள்ளோருக்கு கீழே.
4. அனைத்து உறுப்பினரும், (கட்சி) தலைமை குழுவுக்கு கீழே.

இக்கருத்துக்கு கீழ் படியதோர் கட்சி ஒற்றுமையை குலைப்பவராவோர்.

(நன்றி. Billion of Enterpreneurs - தருண் கண்ணா)

வலை தளம் - http://www.marxists.org/reference/archive/mao/selected-works/volume-2/mswv2_10.htm


இந்த சித்தாந்தத்தை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள்.


(we must affirm anew the discipline of the Party,

namely:

(1) the individual is subordinate to the organization;
(2) the minority is subordinate to the majority;
(3) the lower level is subordinate to the higher level; and
(4) the entire membership is subordinate to the central Committee.

Whoever violates these articles of discipline disrupts Party unity.)



படித்தால் சில இந்திய காம்ரேடுகளின் போக்கின் சாராம்சத்தினை புரிந்து கொள்ள முடியும்.



மற்றொரு முக்கிய கோட்பாடு, "உறுதிச் சமநிலை எல்லாவற்றுக்கும் மேலே" (Stability Overrules Every Thing), சீனாவில் அனைத்துக்கும் ஆதாரமானது.



மேல் கண்ட கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த சீனா அரசு (கட்சி தலைமை குழு!), சீன மக்களின் சுதந்திரங்களை முழுமையாக பறித்தது எதிர்ப்புகள் நசுக்கப் பட்டன.



தியான்மென் சதுக்கம்! சற்றே திரும்பி பாருங்கள்!



நண்பர்களே, ஒரு விஷயம் இங்கு.




மார்க்ஸியம் வேறு மாவோயிசம் வேறு.




மார்க்ஸ் விரும்பியது சுதந்திரம். மாவோ விதித்தது கட்டுப்பாடு.




மாவோ அரசின் கீழ் சீன மக்கள் நிலங்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட்டன.




1980 க்கு பிறகு மாவோயிசம் கூட மாற்றிப் போனது.




அவரது மரணத்துக்கு பிறகு அந்நிலங்கள் மீண்டும் பிரித்தளிக்க பட்டன.




ஆனால் சாதரண மக்களுக்கு அல்ல.





தனியாருக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அரசு நிலங்கள் தாரை வார்க்கப் பட்டன.




பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டு கம்பளம் விரிக்க பட்டது.





அவர்களுக்கு, அனைத்து சலுகைகளும் (பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் ) வழங்கப் பட்டது.




தன்னாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில், பணி புரிவோருக்கு, அரசு (கட்சி குழு?) கூறுவதே ஊதியம் மற்றும் பணி குறித்த இதர கட்டுபாடுகள். (வேலை நிறுத்த உரிமை அறவே கிடையாது).




சீனா, உலகிற்கே தொழிற்சாலை ஆனது. அதனால் மிக குறைந்த விலையில், தனது பொருட்களை, உலக சந்தையில் விற்பனை செய்ய முடிந்தது.




அரசு நிறுவனங்களின் பங்குகள் சந்தைக்கு வந்தன.




தனியார் முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் அங்கு செழித்தனர். கட்சியினரை பற்றி கேட்கவே வேண்டாம்.




மார்க்ஸ் மிகவும் வெறுத்த bourgeois (மேல் தட்டு மக்கள் ஆட்சி) சமுதாயம் அங்கு தற்போது உருவாகும் சூழ் நிலை உள்ளது.




மார்க்ஸ் சித்தாந்த அடிப்படையில், சிலர் (bourgeois), பலரை, வெகு காலமாக அடக்கி (சுரண்டலுடன்) ஆளும் போது புரட்சி உருவாகும்.





ரஷிய மற்றும் பிரெஞ்சு புரட்சிகளின் அடிப்படை மேல் கண்ட கோட்பாடாகவே இருந்தது.




ஆக மொத்தத்தில், சீனா ஒரு (அரசு) முதலாளித்துவ நாடு (State Capitalism).




அதாவது அரசே மக்களை சுரண்டுவதாக உள்ள சமூகமாகும்.




இந்த கதை சில இந்திய காம்ரேடுகளால் படிக்கப் பட வேண்டியதாகும்.




சீனா இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தினை தனது சொந்த காரனங்களுக்காக (ill - motivated reasons) எதிர்க்கிறது. நடு இரவில் காம்ரேட் புஷ் சீன அதிபரை எழுப்பி அணு மூல பொருட்கள் அளிக்கும் குழுவின் (NSG) ஒப்புதலை பெற வைத்தது வேறு விஷயம்.




அணு ஒப்பந்தத்தின் சாதக பாதகங்கள் ஆராய்ந்து அலச பட வேண்டிய விஷயம். அதை வேறு ஒரு கட்டுரையில் பார்க்கலாம்.





சீனா கம்யூனிசம் வாழுமிடம் என்றும் நினைத்துக் கொண்டு, சீனாவை திருப்தி படுத்துவதற்காக, அணு ஒப்பந்தத்தை எதிப்பவர்கள், ஒன்று புரிந்து கொள்ளட்டும்.




சீனா ஒரு (அரசு) முதலாளித்துவ நாடு. அமெரிக்கா ஒரு மக்கள் கம்யூனிச நாடு.



பின் குறிப்பு: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு Socialist உம் வாழ்கிறான். Capitalist உம் வாழ்கிறான்.



21 வயதில் சோசலிஷம் பேசாதவன் மனிதன் இல்லை.



50 வயதில் கேபிடலிசம் பேசாதவன் புத்திசாலி இல்லை.

Wednesday, September 24, 2008

பங்கு சந்தை 2008 - புதிய கலை சொல் அகராதி


தமிழ் வாசகர்களே!

பங்கு சந்தைக்கான புதிய கலை சொல் அகராதியை பார்க்க வேண்டுமா?

இதற்க்கான ஆங்கில பதிப்பினை பாருங்கள்.

http://maximumindia.blogspot.com/2008/09/new-investment-vocabulary.ஹ்த்ம்ல்

நன்றி.

வணக்கம்.

Tuesday, September 23, 2008

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி - ஒரு இந்திய பார்வை பகுதி 1.


அமெரிக்கா தற்போது கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.



பங்கு மற்றும் இதர சந்தைகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றன.



பழம்பெருமை மிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன.



ற்ற வங்கிகளும் கடும் நிதி நெருக்கடியினை சந்தித்து வருகின்றன.




பல வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டுள்ளன.


வங்கிகளை மீட்டெடுக்க அரசு சுமார் $1.8 trillion டாலர் (அதாவது 82 லட்சம் கோடி ரூபாய்) செலவு செய்து உள்ளது. இந்திய ஒட்டுமொத்த உள்நாட்டு பொருளாதார உற்பத்தியை (GDP) போல சுமார் 2 மடங்கு.


பல்லாயிரக்கணக்கனோர் வேலை இழந்து உள்ளனர்.


இத்தகைய வீழ்ச்சிக்கான காரணிகள் யாவை மற்றும் இவற்றினால் இந்தியாவிற்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து இங்கு ஆராயலாம்.



கடந்த சில காலமாக Subprime Crisis (தரம் குறைந்த கடன் நெருக்கடி) குறித்து பல நிபுணர்களும் பல்வேறு ஊடகங்களில் விவாதித்து வருகின்றன.


Subprime Crisis (தரம் குறைந்த கடன் நெருக்கடி) ஆதி மூலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள 2008 களின் துவக்கத்திற்கு செல்ல வேண்டும்.


ஏற்கனவே பொருளாதார சரிவை சந்தித்து கொண்டிருந்த அமெரிக்காவை செப்டம்பர் 11, 2001 இடியென தாக்கியது. மனதளவில் பெரிதும் பாதிக்க பட்டிருந்த அமெரிக்கர்களை உற்சாக ப்படுத்த புஷ் ஒரு உணர்ச்சி மிகு உரை நிகழ்த்தினார்.


அதில் அமெரிக்கர்களே! மகிழ்ச்சியாக இருந்து, உலகிற்கு அமெரிக்கர்கள் யாரென்று காட்டுங்கள் என்று முழங்கினார்.


அதிக செலவு செய்வது, நாட்டு பற்றினை வெளிப்படுத்துவதற்கான வழி என எதிர்க் கட்சியினரும் வழி மொழிந்தனர்.


செலவு செய்வதை உற்சாக படுத்த அமெரிக்க தலைமை வங்கி (பெடெரல் ரிசர்வ்) வங்கி கடன் வட்டி வீதத்தினை மிகவும் குறைத்தது (1.00%).



வங்கி கடன் விதி முறைகள் தளர்த்தப் பட்டன. இதுவரை தகுதி இல்லை என கருத பட்டவர்களுக்கும் (Subprime borrowers) கடன் வழங்கப் பட்டன. மேலும் வங்கிகள் (Adjustable Rate Mortgage ) மாற்று வட்டி வீத கடன்களை கொடுக்க ஆரம்பித்தன. அதாவது முதலில் குறைந்த வட்டி. சற்று காலத்திற்கு பிறகு அதிக வட்டி.



மக்கள் கடன் வாங்க ஆரம்பித்தனர். ரியல் எஸ்டேட் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். வீடு வாங்க கடன் பிறகு வீட்டின் மேல் பல கடன்கள் என்று கடன் சுமை ஆரம்பித்தது. வீட்டு சொத்து விலைகள் கடுமையாக உயர்ந்தது. மக்கள் லாபம் பார்த்தனர். அந்த லாப பணம் கண்மூடித்தனமாக செலவு செய்யப் பட்டது.


அமெரிக்க பொருளாதாரம் உயர்ந்தது.



முதலீட்டு வங்கிகள் இக்கடன்களை கடன் பிணைய பகுத்தல் (Securitization) செய்தன. புதிய முதலீடுக்கான உபகரணங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. புதிய உபகரணங்கள் சந்தைக்கு வந்தன. அவற்றில் பல வங்கிகளும் நிதி நிறுவனங்களும் முதலீடு செய்தனர். அனைவர்க்கும் லாபம் கிடைத்தது.


லட்சம் கோடி ஆனது. கோடி பல்லாயிரக்கணக்கான கோடி ஆனது.


பணம் அமெரிக்காவிலிருந்து பல்வேறு சந்தைகளுக்கு பாய்ந்தது. (இப்பணத்தில் இந்திய சந்தைக்கும் சில ஆயிரம் கோடி கிடைத்தது. சென்செக்ஸ் 3000 புள்ளிகளில் இருந்து 21000 புள்ளிகளுக்கு உயர்ந்தது.) இந்திய நிபுணர்கள் இத்தகைய உயர்வுக்கு பல வடிவம் கொடுத்தனர். (Structural Bull Market”, “Super Power by 2050”, “Most Happening Place”, “Strong Fundamentals driving growth”, “ Long term Growth story” etc etc.)


உலக நாடுகள் அமெரிக்கர்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தன.


ரஷ்ய அரேபியா நாடுகள் பெட்ரோல் வழங்கினர். தென் அமெரிக்க நாடுகள் கனிமம் அளித்தன.


ஆஸ்திரேலியா மற்றும் நியூ ஜெலாந்து பழ காய்கறிகள் அளித்தன.


ஆசியா நாடுகள் குறிப்பாக சீனா உற்பத்தி தொழிற்சாலை ஆயின.


இந்தியா BPO அலுவலகம் (back office) ஆனது.


ஒட்டு மொத்த உலக நாடுகளும் அமெரிக்க சேவகர்கள் ஆயின. ஏற்றுமதியில் கிடைத்த டாலர்கள் அமெரிக்க கடன் சந்தையிலேயே முதலீடு செய்யப் பட்டன.


அமெரிக்க தரம் தாழ்ந்த (Subprime) கடனாளிகள் எப்போதும் போல ரியல் எஸ்டேட் பிரச்சனைகளில் மாட்டி கொண்டனர். கடன் திருப்புவதில் பிரச்சனை ஏற்பட்டது.


2007 துவக்கத்தில் Subprime இல் பிரச்சினைகள் உள்ளன என பெடெரல் ரிசர்வ் முதன் முறையாக ஒத்துக் கொண்டது. சில காலம் உலக சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தன.


ஆனால் புதிய இந்தியஎருதுகள் (Bulls) இதை ஒத்துக் கொள்ள மறுத்தன. அமெரிக்க வங்கிகளின் நிபுணத்துவம், புதிய வடிவான பிணயங்களாக (Credit Default Swaps) வெளிப் பட்டன.


அமெரிக்க தரம் தாழ்ந்த கடன் பிரச்சனைகள் விஸ்வ ரூபம் எடுத்தன. கடனாளிகள் கடன் திருப்ப முடிய வில்லை. தலை கீழ் பிரமிடு அதன் பளு தாங்காமல் அதுவே சரிய ஆரம்பித்தது.


முதல் நிதி நெருக்கடி ஜனவரி 2008 இல் ஏற்பட்டது. உலக சந்தைகள் பெரும் வீழ்ச்சியினை சந்தித்தன. (இந்திய எருதுகள் இதற்க்கு தொழில் நுட்ப கோளாறு என்ற பெயர் கொடுத்தனர்) (Technical Problems due to Reliance Power IPO).


Societe Generale காணாமல் போனது. Bear Sterns முழுகியது.


அமெரிக்க தலைமை வங்கி எரியும் நெருப்பில் எண்ணையாக வட்டி வீதத்தினை குறைத்தது.


அமெரிக்க வங்கிகள் எளிதாக கிடைக்கும் பணத்தினை எண்ணையில் (Crude Oil) முதலீடு செய்தனர். எண்ணெய் விலை ஏறியது. நிபுணர்கள் பல்வேறு காரணங்களை (ஈரான் முதல் இந்திய தேவை வரை) அடுக்கினர்.


எதுவும் பலிக்கவில்லை. அமெரிக்க வங்கிகள் மூடப்பட்டன. அரசு உதவி (முதல் பத்தி) போத வில்லை. கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. மற்ற சந்தைகளும் சரிய ஆரம்பித்தன.


இறுதியில் பலூன் வெடித்தது. பல வங்கிகள் மூடப்பட்டன.


பல்லாயிரக்கணக்கனோர் வேலை இழந்தனர்.


இந்திய சந்தைகளும் பெரும் சரிவினை சந்தித்து உள்ளன.


இந்த கதையிலிருந்து நாம் (இந்தியர்கள்) கற்று கொள்ள வேண்டியது என்ன?

சரிவு தொடருமா? அல்லது மீளுமா?


மீண்டும் சந்திப்போம்.


(தயவு செய்து ஆங்கில பதிப்பிற்கு http://maximumindia.blogspot.com/2008/09/subprime-crisis-indian-perspective-part.html இல் பார்க்கவும்)


Sunday, September 21, 2008

சந்தை நிலவரம் 22.09.2008


அன்புள்ள தமிழ் வாசகர்களே!

அமெரிக்க அரசாங்கம் சென்ற வார இறுதியில் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

1. பாதிக்கபட்ட நிதி நிறுவனங்களை அரசுடமை ஆக்குதல்
2. விற்று பின் வாங்கும் வியாபாரம் - சில நிறுவனங்களின் பங்குகளில் தடை செய்தல்.
3. நிதி தட்டுபாட்டை நீக்க புதியதொரு நிதிய கூட்டமைப்பை உருவாக்குதல்.

இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக சென்ற வார இறுதியில் அனைத்து உலக சந்தைகளிலும் பங்கு வர்த்தகம் உயர்ந்து காணப்பட்டது.

ஆனால் என்னை பொறுத்த வரையிலும் இது குறுகிய கால முன்னேற்றம் மட்டுமே.

வரும் வார துவக்கம் சிறப்பாக இருந்தாலும் கூட, வாசகர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சென்ற வாரம் வாங்கிய பங்குகள் நன்கு உயர்ந்து இருக்கும் பட்சத்தில் விற்று விடுவது நல்லது. பாரதி 835 , ரிலையன்ஸ் 2140, இன்போசிஸ் 1685, டாடா கன்சல்டன்சி 845 அளவுகளில் லாபத்தில் விற்கலாம்.

ரூபாய் 47 லில் கடும் எதிர்ப்பை சந்திக்கிறது. பங்கு சந்தை மற்றும் கச்சா ஆயில் நிலவரத்தை பொறுத்து ரூபாய் வியாபாரம் இருக்கும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

எச்சரிக்கை: பங்கு முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. இங்கு தரப்படும் விவரங்கள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.

Sunday, September 14, 2008

தற்போதைய சந்தை மதிப்பீடு 15.09.2008


சந்தையில் தற்போது இலக்கற்ற நிலையே நிலவுகிறது. எனவே முதலீட்டாளர்கள் சற்றே விலகி இருப்பது நல்லது. இருப்பினும் தொலைநோக்கில் பெரிய நிறுவனங்களின் பங்குகள் மேலும் சற்று விலை குறையும் பட்சத்தில் வாங்கலாம். ரிலையன்ஸ் பங்கு சுமார் ரூ 1900 க்கு கீழ் மற்றும் பாரதி ரூ.730 க்கு கீழ் வரும் போதும் வாங்கலாம். அதேபோல் டாட்டா கன்சல்டன்சி பங்கினை 800 அளவிலும் இன்போசிஸ் 1575 அளவிலும் தொலை நோக்கு இலக்குடன் வாங்கலாம்.

எச்சரிக்கை: பங்கு முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. இங்கு தரப்படும் விவரங்கள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.
Blog Widget by LinkWithin