Sunday, September 28, 2008

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி - ஒரு இந்திய பார்வை - பகுதி 2


கடந்த வாரத்தில், நமது பங்கு சந்தை மிகப் பெரும் சரிவை சந்தித்தது.



இது தொடக்கத்தின் முடிவா அல்லது முடிவின் தொடக்கமா?


சரிவிற்கான முக்கிய காரணிகள்-


* அமெரிக்க வங்கிகளின் தொடரும் வீழ்ச்சி.



* அவற்றை மீட்பதற்க்காக தாக்கல் செய்யப் பட்ட மசோதா, அமெரிக்க பாராளுமன்றத்தில், ஒப்புதல் பெற தாமதம்.



* மேற்கண்ட பிரச்சினைகளினால், அமெரிக்க-இநதிய அணு சக்தி ஒப்பந்தத்தின் ஒப்புதலும் கால தாமதம் ஆவது



* அமெரிக்க வங்கிகள், இந்திய பங்கு சந்தையில், தொடர்ந்து தங்களது முதலீட்டுகளை திரும்ப பெறுவது.


நமது சந்தை தற்போது வாழ்வா அல்லது சாவா என்ற நெருக்கடி நிலையில் உள்ளது.


சென்செக்ஸ், 12500 (approx), என்ற அளவில் நல்ல அரணின் (Support) மிக அருகாமையில் உள்ளது. கடந்த சில நாட்களில், இரு முறை இந்த அளவிலிருந்து மீண்டு எழுந்துள்ளது.


இந்த முறை கூட, மேற்குறிப்பிட்டுள்ள அளவுகளுக்கு அருகே செல்ல அதிக வாய்ப்புள்ளது. அந்த "அரண்" முறிக்கப் பட்டால் , பத்தாயிரம் புள்ளிகளுக்கும் கீழ் செல்லவும் வாய்ப்புள்ளது.




குறுகிய கால கண்ணோட்டத்தில், நோக்கும் போது, சந்தையின் நிலை மிகவும் தடுமாற்றமாகவே இருக்கும்.


கீழ் காணும் சில கேள்விகளுக்கு பதில் அளிப்பது மிக கடினமாகவே இருக்கும்.


இன்னும் எத்தனை அமெரிக்க வங்கிகள் மூடப்படும்? (மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கையை கேட்பதா அல்லது மூடப்படாத வங்கிகளின் எண்ணிக்கையை கேட்பதா என்று புரிய வில்லை)


மற்றும், இந்த வங்கிகளை மீட்டெடுக்க அமெரிக்க அரசு மேற்க்கொள்ளும் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு வெற்றி பெரும்?


மேலும் இந்த வங்கிகள், இந்தியாவில் இருந்து இன்னும் கொண்டு செல்ல வேண்டிய பணம் (நேரடியாக மற்றும் மறைமுகமாக) எவ்வளவு?


வர்த்தகர்கள் (முதலீட்டாளர்கள் அல்ல) இந்த சூழலை கூர்ந்து கவனித்து முடிவு செய்வது நல்லது.



12500 என்ற அளவிற்கு மேல் முழுமையாக அரண் காக்கப்பட்ட பிறகு அல்லது அமெரிக்காவில் இருந்து தெளிவு பிறந்த பிறகு மட்டுமே புதிய வர்த்தக நிலை (Trading Position) எடுப்பது நல்லது.


இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் நிறைவேறும் பட்சத்தில் ஆதார பொருட்கள் (Capital Goods), சக்தி, சிமெண்ட் மற்றும் கட்டுமான துறைகளின் பங்குகள் உயரும் வாய்ப்பு உள்ளது.


இப்போது முதலீட்டாளர்களின் நிலைப்பாடு குறித்து ஆராய்வோம்.


ஒரு முக்கிய விஷயம்.


பங்கு சந்தை வேறு பொருளாதாரம் வேறு.


பங்கு சந்தை என்பது பொருளாதாரம் போகும் போக்கைக் காட்டும் ஒரு கருவி மட்டுமே. அதே சமயத்தில், இது ஒரு கட்டிய காரணி (Leading Indicator).


பங்கு சந்தையில் ஏற்படும் அளவிற்கு பொருளாதார பாதிப்பு ஏற்படாது.


காரணம், பங்கு சந்தைகள் அமெரிக்க வங்கிகளை (அல்லது அமெரிக்காவை) நம்பியுள்ள அளவிற்கு, நமது பொருளாதாரம் மற்ற நாடுகளை போல (சீனா மற்றும் இதர ஆசிய நாடுகள்) அமெரிக்காவை சார்ந்ததில்லை.


சொல்லப் போனால், நாம் ஒரு இறக்குமதி சார்ந்த (Import-Oriented) நாடு. நமது பொருளாதார வளர்ச்சி, நமது சொந்த செலவுகளை (Consumption- Oriented) சார்ந்தது.


அமெரிக்காவிலிருந்து இங்கு நாம் பெறுவது மூலதனம் மட்டுமே. அது கூட நிரந்தரமில்லாத மூல தனம் (Flight Capital).


தற்போது அது கூட நமக்கு தேவை இல்லை. ஏனெனில், நம்முடைய சேமிப்பு விகிதமும் முதலீட்டு விகிதமும், கடந்த சில வருடங்களாகவே, நன்கு உயர்ந்து உள்ளது.


எனவே, தலால் தெரு, வால் தெருவின் நிலையைப் பற்றி, ஒரு அளவிற்கு மேல், கவலைப் பட வேண்டியது இல்லை.



சொல்லப் போனால் அமெரிக்கப் பொருளாதாரம் கீழ் நோக்கி செல்லும் போது, அங்கு ஏற்படும் செலவினங்கள் குறையும் பட்சத்தில், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான, சக்தி மூல பொருட்கள் (Oil, Coal and Uranium) மற்றும் கனிம பொருட்கள் குறைந்த விலையில் நமக்கு கிடைக்கும்.


எனவே, நாம் அமெரிக்காவைப் பற்றிய கவலைகளை விட்டு விடுவோம். அது அவர்கள் பாடு.


நம்மை பற்றிப் பார்போம்.


நமது நாடு ஓர் இளைய நாடு.


வாழ்வு முறைகள் வேகமாக மாறி வருகிறது. போதும் என்ற மனப்பான்மை குறைந்து, இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் மற்றும் இன்னும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனப்போக்கு வளர்ந்து வருகிறது.


இந்திய பெரு நகரங்களில் மட்டுமல்ல, மற்ற பகுதிகளிலும் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது.


இதை உறுதி செய்ய நிபுணர்கள் தேவை இல்லை. நாம் ஒரு முறை, நம் ஊர்ப் பக்கம் போய் வந்தாலே போதும்.


சொகுசு கார்களை பெருமளவில் இந்தியா இறக்குமதி செய்து, சிறு கார்களை மேல்நாட்டினருக்கு ஏற்றுமதி செய்யும் காலமிது.


மேலும், அமெரிக்காவில் பத்து வருடம் வேலை (அதுவும் Goldman Sachs இல்) பார்த்து தற்போது திரும்பியுள்ள ஒரு நண்பர் கூறிய கருத்து இது.


நீங்கள் உங்கள் குழந்தையை தினமும் பார்ப்பதினால் அதன் வளர்ச்சி புரிவதில்லை.


அதே சமயத்தில், பத்து ஆண்டுகள் கழித்து ஒரு குழந்தையை பார்த்தால் தெரியும், அது எவ்வளவு வளர்ந்து இருக்கிறது என்று.


அதே போல, இந்தியாவும் கடந்த பத்து வருடங்களில் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது.


"கல்கி" அவர்கள் வரிகளில் கூற வேண்டுமானால், இது ஆடி மாத காவேரி. இன்னும் பல மாதங்கள் வற்றாமல் இந்நதி செல்லும்.


வேகம் குறையலாம். ஆனால் ஆடிக்குப் பின்னாலும் இந்த நதியில் (இந்தியா) நீர்ப் போக்கு தொடரும்.


உலக நாடுகள் (சில நாடுகளை தவிர) பின்னே செல்லும் போது நாம் மட்டுமே முன்னேறும் கூட்டத்தில்.


அதே சமயத்தில் நம் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய விரோதிகள்.


1. சக்தி தட்டுப்பாடு.


2. கட்டுமான வளர்ச்சிக் குறைவு.


3. உயரும் பணவீக்கம்.


4. உயரத்தில் வட்டி வீதம்


5. தீவிரவாதம்.


இந்த பிரச்சினைகளை நமது அரசு தீர்ப்பது, நமக்கு அமெரிக்க வங்கிகள் பிரச்சினையை (Subprime Crisis) விட முக்கியமானது.


முதலீட்டாளர்க்களுக்கான எனது கருத்துரை.



அடுத்த இரண்டு ஆண்டுகள் (குறைந்தது) நமது பங்கு சந்தை, பல ஏற்ற இறக்கங்களுடன், தடுமாற்றமாகவே இருக்கும்.


தற்போது தாங்கள் செய்ய வேண்டியது, கடின காலங்களிலும் நன்கு செயல் படக் கூடிய திறன் படைத்த, நிறுவனங்களை மட்டும் தேர்வு செய்து, அவர்களது பங்குகளில், ஒரே சமயத்தில் அல்ல, சிறிது சிறிதாக (Over a period of time) முதலீடு செய்வதே.


பொருளாதாரத்தின் குழப்பமான கால கட்டங்களில், தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது. ஆனால், தங்கம் நீண்ட கால முதலீடாக நிபுணர்களால் கருதப் படுவதில்லை. உலகப் பொருளாதாரம் (முக்கியமாக அமெரிக்கா) மீண்டு வந்ததால் தங்கத்தின் போக்கு மாறி விடும்.


தமிழ் நண்பர்களுக்கு, ஒரு கருத்து.


தங்கத்தில் முதலீடு, தங்க சந்தை வளர்ச்சி நிதிக் கூறுகள் (Gold Exchange Trade Fund Units) வழியாகவும் செய்யலாம். இம்முதலீட்டு முறையினால், செய்கூலி, சேதாரம் இல்லாமல், முழு தங்க விலை உயர்வின் பயனையும் அடையலாம். இம்முறை பாதுகாப்பானதும் கூட.



தங்கத்தில் ஓரளவிற்கு முதலீடு செய்வது உங்களது மொத்த முதலீட்டுப் பையின் சந்தை விலை அபாயங்களை குறைக்கும். (Investment in Gold to some extent of your total portfolio will reduce the valuation risks)



கடைசியாக ஒரு குரல்.


இந்தியாவில் முதலீடு செய்யும் போது இந்திய பொருளாதாரத்தினை ஆய்வு செய்யுங்கள். இந்திய நிறுவனங்களின் தனிப் பட்ட திறன்களையும் வளர்ச்சி வாய்ப்புக்களையும் ஆராய்ச்சி செய்யுங்கள். அமெரிக்காவைப் பற்றி ஒரு அளவிற்கு மேல் அக்கறை காட்டாதீர்கள்.


ஏனெனில், நமக்கு இங்கே நிறைய வேலை காத்து கிடக்கிறது.



நன்றி.

2 comments:

Maximum India said...

One more thing.

In Warren Buffet's words<

Others' greed is your fear and
Others' fear is your greed.

Itsdifferent said...

I think it is very true that Dont worry about US. Just concentrate on what can be done to India.
I am very interested in partnering with someone, who wants to do Microfinancing to folks in India. I have been a supporter of kiva.org for some time now, and strongly believe microfinance is the best way to eliminate poverty in India. The small vendors and other such folks have lots of energy and honesty, and if we can support them with little more funding at zero or low interest I am sure they can shine well, and enhance their lives. Please write to me at vgopinat (at) gmail (dot) com if interested to create a structure for this. I am based in the US so need a strong support from the ground somewhere in India.

Blog Widget by LinkWithin