Tuesday, May 12, 2009

நெருக்கடி = வாய்ப்பு?


ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடுகிறது. சில சந்தர்ப்பங்களில், பிரச்சினையின் வீச்சு அவனை நிலைகுலைய செய்யும் அளவுக்குக் கூட அமைந்து விடுகிறது. அந்த சந்தர்ப்பங்களில் அவனுக்கு இரண்டு சாய்ஸ் உண்டு.

ஒன்று, தோல்வி மனப்பான்மை. வருத்தமடைவது, புலம்பித் தீர்ப்பது, மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவது மற்றும் சுய பச்சாதாபம் கொள்வது.

அடுத்தது, வெற்றி மனப்பான்மை. எங்கே தவறு நடந்தது என்று ஆராய்ச்சி செய்வது. இந்த நெருக்கடியிலிருந்து எப்படி மீள்வது என்று யோசிப்பது மற்றும் இந்த சோதனையை எப்படி வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வது பற்றி சிந்திப்பது.

பொதுவாக இரண்டாவது சாய்ஸ் கடினமான ஒன்று என்று சிலர் நினைக்கக் கூடும். ஆனால் உண்மையில் அதுதான் எளிமையான சாய்ஸ்தான் என்பதை சரித்திரம் சொல்கிறது. எந்த ஒரு கடினமான தருணமும் வெகுகாலம் நீடித்திருப்பதில்லை. ஒவ்வொரு இருளுக்குப் பின்னர் ஒளி மறைந்திருக்கிறது. ஒவ்வொரு இரவுக்குப் பின்னரும் பகல் காத்திருக்கிறது.

எனவே நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்பிக்கையை தளர விடாமல் இருப்பது, அடுத்து நாம் செய்ய வேண்டியதைப் பற்றி யோசிப்பது மற்றும் அந்த இருளில் மறைந்திருக்கும் ஒளியை வெளிக் கொண்டு வர முயற்சிப்பது.

ஒரு பரவலான சீன நம்பிக்கையின் படி, அந்த மொழியில் உள்ள நெருக்கடி என்ற சொல்லினை ஆபத்து மற்றும் வாய்ப்பு என்று இரண்டாகப் பிரிக்க முடியும். அதாவது நெருக்கடி என்பது ஆபத்தினை வாய்ப்பாக மாற்ற உதவும் ஒரு கருவி என்ற பொருள்.

இது ஏதோ வேடிக்கையான நம்பிக்கை என்று நாம் உதறித் தள்ளி விட முடியாது. எத்தனையோ மாமனிதர்கள், பெரிய நகரங்கள், வளமான நாடுகள் நெருக்கடிகளின் உதவியுடனேயே உருவாகி இருக்கின்றன.

உதாரணத்திற்கு சொல்லப் போனால், மோகன்தாஸ் கரம்சந்த காந்தி என்ற சாதாரண நபர் தென்னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து வெளியே தள்ளப் பட்ட பின்னர்தான் மகாத்மா ஆனார். தனது சொந்த ஊரிலிருந்து விரட்டப் பட்டதால்தான் பாபர் என்ற நாடோடி இந்தியாவில் ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். கைவிடப் பட்ட ஒரு உருக்காலையில் இருந்துதான் (ஒருகாலத்தில் விளையாட்டுப் பிள்ளையாக அறியப் பட்ட) ஒரு லக்ஷ்மி மிட்டல் தோன்றினார்.

ப்ளேக் நோயால் பாதிக்கப் பட்ட சூரத் தூய்மையான நகரமானது. ஜப்பான், பிரிட்டன், மலேசியா என மாறி மாறி மாற்றார் வசம் இருந்த சிங்கப்பூர் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறியது. அணுகுண்டால் அழிக்கப் பட்ட ஜப்பான் தொழிற் துறையின் முன்னோடி நாடாக மாறியது.

நம்புவோம் நாமும்!

நமக்கு வரும் ஒவ்வொரு நெருக்கடியும் நமக்கு கிடைத்துள்ள ஒரு பெரிய வாய்ப்பு என்று!

நம்புவோம், நெருக்கடிகள் மேலும் நம்மை மேலும் செம்மைப் படுத்த வரும் வாழ்க்கைப் பாடத்திட்டங்கள் என்று!

நம்புவோம், சோதனைகள் நம்மை மேலும் மெருகேற்றும் தீப்பிழம்புகள் என்று!

நம்புவோம், நெருக்கடிகள் நம்மை பட்டை தீட்டி மென்மேலும் ஜொலிக்க வைக்கும் அறுப்பு இயந்திரங்கள் என்று!

எனவே நண்பர்களே! ஒவ்வொரு நெருக்கடியையும் மகிழ்ச்சியோடு, உற்சாகத்தோடு சந்திப்போம். நிச்சயம் ஒருநாள் வெற்றி வாகை சூடுவோம்.

நன்றி.

பின்குறிப்பு: இவை ஏதோ மேலோட்டமான கருத்துக்கள் அல்ல. வாழ்வில் எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்க விரும்பாத ஒருவனின் டயரிக் குறிப்பு என்று கொள்ளலாம்.

5 comments:

வால்பையன் said...

நம்பிக்கை,
எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளும் பக்குவம்,
தோல்வியை ஏற்று கொள்ளும் மனநிலை!

வெற்றியின் வாசற்படிகள்! மேலுள்ளவைகள் என நினைக்கிறேன்!

biskothupayal said...

உண்மையாகவே நேற்றுதான் பாஸிடிவ்/ நெகடிவ் பற்றி பதிவு போடலாம் நினைத்தேன் நீங்கள் அதை பற்றி நான் நினைத்ததை விட இன்னும் செம்மையாக எழுதி இருக்குரிர் பதிவு மிக மிக அருமை

Maximum India said...

நன்றி வால்பையன்!

Maximum India said...

நன்றி பிஸ்கொத்துபயல்!

//உண்மையாகவே நேற்றுதான் பாஸிடிவ்/ நெகடிவ் பற்றி பதிவு போடலாம் நினைத்தேன் நீங்கள் அதை பற்றி நான் நினைத்ததை விட இன்னும் செம்மையாக எழுதி இருக்குரிர் பதிவு மிக மிக அருமை//

நேற்று எனக்கு நானே ஊக்குவித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில் எழுதப் பட்டதுதான் இந்த பதிவு.

நன்றி.

Maximum India said...

நன்றி பிஸ்கொத்துபயல்!

//உண்மையாகவே நேற்றுதான் பாஸிடிவ்/ நெகடிவ் பற்றி பதிவு போடலாம் நினைத்தேன் நீங்கள் அதை பற்றி நான் நினைத்ததை விட இன்னும் செம்மையாக எழுதி இருக்குரிர் பதிவு மிக மிக அருமை//

நேற்று எனக்கு நானே ஊக்குவித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில் எழுதப் பட்டதுதான் இந்த பதிவு.

நன்றி.

Blog Widget by LinkWithin