Sunday, May 31, 2009

"பந்தயம்" கட்டும் பங்கு சந்தை!


பந்தயக் குதிரை போல நமது பங்கு சந்தை இப்போது படு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. எந்த அளவுக்கு இந்த ஓட்டம் இருக்கும்? இந்த பந்தயக் குதிரை மீது நாமும் "பந்தயம்" கட்டலாமா? இங்கு சற்று விவாதிப்போம்.

கடந்த இரண்டு மாதங்களில் நமது பங்கு சந்தை வரலாறு காணாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. (இந்திய பங்கு சந்தை மட்டுமல்ல, வேறு பல பங்கு மற்றும் கச்சா எண்ணெய், உலோக சந்தை போன்றவையும் இதே கால கட்டத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.) இந்த முன்னேற்றத்திற்கு கூறப் படும் முக்கிய காரணங்கள்.

அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சில நம்பிக்கை (?) தரும் மாற்றங்கள்.

கூச்சப் படாமல், டாலர் நோட்டுக்களாக அச்சடித்துத் தள்ளும் அமெரிக்க அரசு.

அந்த பணத்தை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மற்றும் பொருட் சந்தைகளில் அதிக ரிஸ்க் (?) எடுத்து முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்.

இந்தியாவில் கூட்டணி கட்சிகளின் தலையீடு இல்லாமல் நிலையான ஒரு மத்திய அரசு அமைந்திருப்பது.

இந்த முறை கம்யூனிஸ்ட் தொந்தரவு (?) இல்லாததால் மன்மோகன் சிங் பல பொருளாதார சீர்த்திருத்தங்களை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை.

கூடிய சீக்கிரமே இந்தியாவின் பொருளாதாரம் வேகமான வளர்ச்சிப் பாதைக்கு செல்லும் என்ற பங்கு சந்தை நிபுணர்களின் திடீர் நம்பிக்கை.

அமெரிக்கா (மக்கள்தொகை 30 கோடி, GDP $ 14 டிரில்லியன், தனி நபர் வருவாய் $ 47000) போன்ற கிட்டத்தட்ட வளர்ச்சி நிறைவு பெற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா (மக்கள் தொகை 110 கோடி, GDP $ 1.2 டிரில்லியன், தனி நபர் வருவாய் $ 2700) எவ்வளவோ பின் தங்கியிருக்கிறது என்ற நிலையில் இன்னும் எவ்வளவோ முன்னேற இந்தியாவிற்கு வாய்ப்புள்ளது என்றாலும் அந்த வளர்ச்சி எவ்வளவு வேகமாக இருக்கும் என்பதும் உலகமே (முக்கியமாக அமெரிக்கா) மந்தமாக இருக்கும் இப்போதைய சூழ்நிலையில் இந்தியாவிற்கு மட்டும் ஒரு வேகமான வளர்ச்சியை புதிய (?) அரசால் தர முடியுமா என்பதும் மிகப் பெரிய கேள்விக் குறிகள்.

ஒருவேளை இந்தியப் பொருளாதாரம் வெகு சீக்கிரத்திலேயே மீண்டாலும் கூட, ஒரு வருடத்திற்கு முன் வரை பல விஷயங்களில் அகலக் கால் வைத்து இப்போது வசமாக சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கும் பல இந்திய நிறுவனங்கள் எந்த அளவிற்கு லாபத்தைக் காட்ட முடியும் என்பதும் கூட சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.

காங்கிரஸ் அரசு மீது மித மிஞ்சிய நம்பிக்கையை வைப்பவர்களுக்கு ஒரு கேள்வி. கடந்த அறுபத்து சொச்ச இந்திய ஜனநாயக வரலாற்றில் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் வரை ஆட்சியில் இருந்தவர்கள் காங்கிரஸ் அரசுதானே? இவர்கள் ஆட்சியில் இந்தியா அப்படி என்ன பெரிய வளர்ச்சியைக் கண்டு விட்டது? இன்றும் கூட பொருளாதார அடிப்படையில் உலகின் தர வரிசையில் கடைசி சில இடங்களில்தானே இந்தியா இருக்கிறது?

பிஜேபி கூட்டணி மற்றும் இதர மைனாரிட்டி அரசுகள் கொண்டு வந்த அளவுக்குக் கூட பொருளாதார சீர்திருத்தங்களை பல ஆண்டுகள் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசால் ஏன் கொண்டு வர முடிய வில்லை? 1991 சீர்த்திருத்தங்களுக்குக் கூட பன்னாட்டு நிதிய மையத்தின் வற்புறுத்தல்களே முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கடந்த அரசின் மந்தப் போக்கிற்கு கம்யூனிஸ்ட் தொந்தரவுதான் காரணம் என்றால் அவர்கள் ஆதரவுடன் ஆட்சி செய்த 1996 தேவே கௌட அரசு கொண்டு வந்த சீர்த்திருத்தங்களை எப்படி எடுத்துக் கொள்வது?

மன்மோகன் சிங் அரசு இது என்று நம்மால் இந்த புதிய (?) அரசை சொல்ல முடியுமா? தனது அமைச்சர்கள் (முக்கியமாக நிதி) யார் என்பதைக் கூட பிரதமரால் தன்னிச்சையாக முடிவு செய்ய முடியுமா?

இன்றைய சூழலில், இந்த புதிய அரசு, விவசாய கடன் தள்ளுபடி, அரசு ஊழியர் சம்பள உயர்வு போன்ற மக்கள் ஈர்ப்பு திட்டங்களுடன், இங்கும் அங்குமாக சில பொருளாதார சீர்த்திருத்தங்களுடன் தேர்தலை குறி வைத்து செயல்படும் ஒரு வெகுஜன அரசாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. எனவே, தற்போதைய சந்தை வேகம் சற்று ஓவர் எனவே தோன்றுகிறது.

மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துகிறேன். இந்திய பொருளாதாரமும் பங்கு சந்தையும் இன்னும் பல ஆண்டுகளுக்கு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆனால் இது போன்ற வேகமான பங்கு சந்தை பாய்ச்சல், பல சிறிய முதலீட்டாளர்களையும் சிறிய வர்த்தகர்களையும் சிக்கலில் ஆழ்த்தி விடுகிறது என்பதை சரித்திரம் சொல்கிறது.

மேலும், பல பொதுத் துறை நிறுவனங்கள் கூடிய சீக்கிரம் தமது பங்குகளை சந்தையில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த பங்குகளின் ஆரம்ப விலை நிர்ணயம் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பலாம். எனவே, உங்கள் முதலீடுகளை அடிப்படை அம்சங்கள் சிறப்பாக உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் தயக்கமின்றி அப்போது செய்யலாம். அது வரை பொறுத்திருங்கள். தற்போதைக்கு நான் பல முறை ஏற்கனவே சொன்ன படி, அவ்வப்போது சிறிய சிறிய அளவில் மட்டும் சந்தையில் உள்ள நல்ல நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து கொண்டிருங்கள்.

நாளை என்று ஒன்றே இல்லை என்பது போல ஒரே சமயத்தில் எல்லா சேமிப்பையும் பங்கு சந்தையில் போடாதீர்கள். அதுவும் சிறிய பங்குகளில் முதலீடு செய்யும் போது கவனமாக இருங்கள்.

தொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி 4500 மற்றும் 4600 அளவுகளுக்கு இடையே நல்ல எதிர்ப்பை சந்திக்கக் கூடும். டாலர் 47.90 மற்றும் 46.30 க்கு இடையே இருக்கக் கூடும்.

வரும் வாரம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.

நன்றி.

2 comments:

பொதுஜனம் said...

நிபுணரின் கருத்து ஏற்க கூடியது.ஜட்டி தவிர எல்லாவற்றையும் நிப்டியில் முதலீடு செய்து கோமணம் கூட கிடைக்காத நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது.யோசித்து மெல்ல அடி எடுத்து வைப்பதே புத்திசாலித்தனம்.காளை கரடிகள் விளையாடும் இடத்தில் நரிகளும் குடி கொண்டு உள்ளன. உட்கார்ந்து யோசிக்கவும். இல்லையென்றால் மொத்தமாக படுக்க வேண்டி வரும்.

Maximum India said...

//நிபுணரின் கருத்து ஏற்க கூடியது.ஜட்டி தவிர எல்லாவற்றையும் நிப்டியில் முதலீடு செய்து கோமணம் கூட கிடைக்காத நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது.யோசித்து மெல்ல அடி எடுத்து வைப்பதே புத்திசாலித்தனம்.//

நிபுணரின் கருத்து மட்டுமல்ல. பொதுஜனத்தின் கருத்தும் ஏற்கக் கூடியதே.

//காளை கரடிகள் விளையாடும் இடத்தில் நரிகளும் குடி கொண்டு உள்ளன. //

உண்மைதான். அதுவும் சாதாரண நரிகள் அல்ல. மலை முழுங்கிகள்.

//உட்கார்ந்து யோசிக்கவும். இல்லையென்றால் மொத்தமாக படுக்க வேண்டி வரும்.//

சரிதான்.

நன்றி.

Blog Widget by LinkWithin