Saturday, October 31, 2009

வழியில் மேடு பள்ளம்!


பங்கு சந்தையில் பல வாரங்களுக்குப் பிறகு ஒரு பெரியதொரு வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. சந்தைகளில் ஏராளமான கரன்சிகளை வாரி இறைத்து உலக நாடுகளின் அரசாங்கங்கள் கொண்டு வர விரும்பும் பொருளாதார மீட்சிப் பாதையில் ஏராளமான மேடுபள்ளங்களை சந்திக்க வேண்டியும் இருக்கலாம் என்ற கசப்பான உண்மையை சந்தைகள் புரிந்து கொண்டதே இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். இன்னும் சற்று விரிவாக இங்கே பார்ப்போம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் தொடங்கிய "நிதிச் சிக்கல்" பூகம்பம் பொருளாதார சுனாமியாக மாறி உலகெங்கும் ஆட்டிப் படைத்தது. இந்த சிக்கலில் இருந்து மீள "Keynes" முறையை பின்பற்றலாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் முடிவெடுத்தன. அதாவது தனிநபர்கள் செலவு செய்ய தயங்கும் போது, அரசாங்கம் அதிகமாக செலவு செய்து பொருளாதாரத்தில் ஒரு கிளர்ச்சியை உருவாக்குவது. அரசாங்கம் செலவு செய்ய வேண்டுமென்றால், ஒன்று கடன் வாங்க வேண்டும் அல்லது புதியதாக நோட்டுக்களை அச்சடிக்க வேண்டும். இரண்டு வேலைகளையும் அழகாக செய்த அரசாங்கங்கள் அந்த பணத்தை கொண்டு ஏராளமான வரி மற்றும் மான்ய சலூகைகளை வழங்கின. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்காவில் கார் வாங்கினால், கார் செலவில் ஒரு பங்கை அரசாங்கமே வழங்கும். வீடு வாங்கினாலும் இதே போன்ற நிலைதான். மேலும் நலிவடைந்த வங்கிகள் முறையில்லாமல் செய்த முதலீடுகளை அரசாங்கமே ஒரு விலைக்கு வாங்கிக் கொள்ளும். இது போன்ற அரசாங்க முயற்சிகள் பொருளாதாரத்தில் "உபயோகமற்ற பணத்தை" உருவாக்கின. இந்த பணம் உலக சந்தைகளில் அதாவது, பங்கு, ரியல் எஸ்டேட், உணவு பொருட்கள், ஆயில் மற்றும் இதர உலோக சந்தைகளில் பாய்ந்து பரவி, அனைத்து உலக சந்தைகளையும் உயர செய்தன.

சந்தைகளில் விலை ஏராளமாக உயர்ந்தது, பொருளாதாரத்தில் ஒரு செயற்கையான வளர்ச்சியை உருவாக்கியது. பல புள்ளி விபரங்கள், ஒரு பொருளாதார மீட்சி ஏற்படுகின்ற புறத்தோற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அரசாங்கங்கள் மேலும் பணத்தை வெளியிட்டன.

இப்படி ஏற்பட்டுள்ள பொருளாதார மீட்சி நிரந்தமானதுதானா என்ற சந்தேகம் இப்போது சந்தை நிபுணர்களிடையே ஏற்பட்டுள்ளது. காரணம், பல அரசாங்க திட்டங்கள் நிரந்தமானவை அல்ல. அப்படி நிரந்தமாக சலுகைகள் வழங்குமளவுக்கு அரசாங்கங்களின் நிதி நிலை சிறப்பாக இல்லை. மேலும் இந்த சலுகைகள் பணவீக்கத்தை உருவாக்குகின்றனவே தவிர வளர்ச்சிக்கு உதவவில்லை என்பதும் வருந்துதற்குரிய உண்மையாகும்.

அமெரிக்காவின் பொருளாதார தளர்ச்சி முடிவுக்கு வந்து விட்டது என்று சில புள்ளி விபரங்கள் தெரிவித்தாலும், அமெரிக்கா மீண்டும் பொருளாதார தளர்ச்சி பாதைக்கே செல்லும் என்று வேறு சில புள்ளி விபரங்கள் வெளிக்காட்டுகின்றன.

இந்த சந்தேகமே சென்ற வாரம் சந்தைகளில் ஏற்பட்ட பெரியதொரு தடுமாற்றத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவில் கூட இந்த நிலைதான் தொடர்கிறது. இந்தியாவின் சில பகுதிகள் (துறைகள் அல்லது மக்கள்) மட்டும் பொருளாதார வளர்ச்சியின் லாபத்தை அனுபவிக்க மற்ற பகுதிகள் இன்னமும் தடுமாறிக் கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவில் இத்தனை பேருக்கு வேலை போய் விட்டது என்று உச்சுக் கொட்டும் நம் பெரியவர்கள் இந்தியாவில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கின்றார்கள் என்பதை கணக்கெடுக்கக் கூட முயற்சி செய்வதில்லை. உண்மையான வளர்ச்சி அடிமட்டத்தில் இருந்தே வர வேண்டும். மேலே பெருத்து கீழே சிறுத்திருக்கும் தலைகீழ் பிரமிட் தனது சொந்த எடையின் காரணமாகவே உதிர்ந்து போய் விடும்.

பங்கு சந்தையில் பல வாரங்களுக்குப் பிறகு பெரியதொரு வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. சந்தைகளில் ஏராளமான கரன்சிகளை வாரி இறைத்து உலக நாடுகளின் அரசாங்கங்கள் கொண்டு வர விரும்பும் பொருளாதார மீட்சிப் பாதையில் ஏராளமான மேடுபள்ளங்களை சந்திக்க வேண்டியும் இருக்கலாம் என்ற கசப்பான உண்மையை சந்தைகள் புரிந்து கொண்டதே இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். இன்னும் சற்று விரிவாக இங்கே பார்ப்போம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் தொடங்கிய "நிதிச் சிக்கல்" பூகம்பம், பொருளாதார சுனாமியாக மாறி உலகெங்கும் ஆட்டிப் படைத்தது. இந்த சிக்கலில் இருந்து மீள "Keynes" முறையை பின்பற்றலாம் என்று உலக நாடுகளின் அரசாங்கங்கள் முடிவெடுத்தன. அதாவது தனிநபர்கள் செலவு செய்ய தயங்கும் பொருளாதார தளர்ச்சி காலக் கட்டத்தின் போது, அரசாங்கம் அதிகமாக செலவு செய்து, பொருளாதாரத்தில் ஒரு கிளர்ச்சியை உருவாக்குவது.

அரசாங்கம் செலவு செய்ய வேண்டுமென்றால், ஒன்று கடன் வாங்க வேண்டும் அல்லது புதியதாக நோட்டுக்களை அச்சடிக்க வேண்டும். இரண்டு வேலைகளையுமே அழகாக செய்த அரசாங்கங்கள், அச்சடித்த மற்றும் கடன் வாங்கிய பணத்தை கொண்டு ஏராளமான வரி மற்றும் மான்ய சலூகைகளை வழங்கின. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்காவில் கார் வாங்கினால், கார் செலவில் ஒரு பங்கை அரசாங்கமே வழங்கும். வீடு வாங்கினாலும் இதே போன்ற நிலைதான். மேலும், முறையற்ற முறையில் முதலீடுகள் செய்து நலிவடைந்த வங்கிகளின் முதலீடுகளை அரசாங்கமே ஒரு நல்ல விலைக்கு வாங்கிக் கொள்ளும்.

இது போன்ற அரசாங்க முயற்சிகள் பொருளாதாரத்தில் "உபயோகமற்ற பணத்தை" (Unproductive Money) உருவாக்கின. இந்த பணம், உலக சந்தைகளில் அதாவது, பங்கு, ரியல் எஸ்டேட், உணவு பொருட்கள், ஆயில் மற்றும் இதர உலோக சந்தைகளில் பாய்ந்து பரவி, அனைத்து உலக சந்தைகளையும் உயர செய்தன.

இவ்வாறு சந்தைகள் ஏராளமாக உயர்ந்தது, பொருளாதாரத்தில் ஒரு செயற்கையான வளர்ச்சியை உருவாக்கியது. இதற்கிடையே பல அரசு புள்ளி விபரங்கள், ஒரு பொருளாதார மீட்சி ஏற்படுகின்ற புறத்தோற்றத்தை ஏற்படுத்தின. இதனால் மகிழ்ச்சி அடைந்த அரசாங்கங்கள், மேலும் மேலும் பணத்தை வெளியிட்டன.

இப்படி ஏற்பட்டுள்ள பொருளாதார மீட்சி நிரந்தமானதுதானா என்ற பலமான சந்தேகம் இப்போது சந்தை நிபுணர்களிடையே ஏற்பட்டுள்ளது. காரணம், பல அரசாங்க திட்டங்கள் எப்போதுமே நிரந்தமானவை அல்ல. அப்படி நிரந்தமாக சலுகைகள் வழங்குமளவுக்கு அரசாங்கங்களின் நிதி நிலை சிறப்பாகவும் இல்லை. மேலும் இந்த சலுகைகள் ஒருவித பணவீக்கத்தை உருவாக்குகின்றனவே தவிர தொழிற் வளர்ச்சிக்கு உதவவில்லை என்பதும் வருந்துதற்குரிய உண்மையாகும்.

அமெரிக்காவின் பொருளாதார தளர்ச்சி முடிவுக்கு வந்து விட்டது என்று சில புள்ளி விபரங்கள் இப்போதைக்கு தெரிவித்தாலும், அமெரிக்கா மீண்டும் பொருளாதார தளர்ச்சி பாதைக்கே செல்லும் என்று வேறு சில புள்ளி விபரங்கள் வெளிக்காட்டுகின்றன.

இந்த சந்தேகமே, சென்ற வாரம் சந்தைகளில் ஏற்பட்ட பெரியதொரு தடுமாற்றத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவில் கூட இந்த நிலைதான் தொடர்கிறது. இந்தியாவின் சில பகுதிகள் (துறைகள் அல்லது மக்கள்) மட்டும் பொருளாதார வளர்ச்சியின் லாபத்தை அனுபவிக்க மற்ற பகுதிகள் இன்னமும் தடுமாறிக் கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவில் இத்தனை பேருக்கு வேலை போய் விட்டது என்று உச்சுக் கொட்டும் நம் பெரியவர்கள் இந்தியாவில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கின்றார்கள் என்பதை கணக்கெடுக்கக் கூட முயற்சி செய்வதில்லை. உண்மையான வளர்ச்சி அடிமட்டத்தில் இருந்தே வர வேண்டும். மேலே பெருத்து கீழே சிறுத்திருக்கும் தலைகீழ் பிரமிட் (Reverse Pyramid) தனது சொந்த எடையின் காரணமாகவே உதிர்ந்து போய் விடும்.

உண்மையான பொருளாதார வளர்ச்சி தொழிற் துறையிலும், பொது மக்களின் வேலை வாய்ப்பு மற்றும் அவர்களின் செலவிடும் திறன் உயர்வதிலேயே அடங்கி இருக்கின்றது. என்னடா இது, முதலாளித்துவ பங்கு சந்தையை பற்றி எழுதும் போது, கம்யூனிசம் பேசுகிறான் என்று எண்ண வேண்டாம். என்னைப் பொறுத்த வரை பங்கு சந்தைகளின் நிரந்தர வளர்ச்சி தொழிற் துறையின், பொருளாதாரத்தின் முறையான வளர்ச்சியில்தான் அடங்கி இருக்கின்றதே, இப்போது நடப்பது போன்ற அதிகப்படியான பணப்போக்குவரத்தில் இல்லை.

இப்போது பங்கு சந்தையைப் பற்றி பார்ப்போம்.

வரும் வாரத்திலும் பங்கு சந்தை தடுமாற வாய்ப்புள்ளது என்றாலும், கடந்த முறை பங்குகளை வாங்க தவறி விட்டோம் என்று எண்ணுபவர்கள் புதிதாக வாங்கவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே சொன்ன படி நிபிட்டி 4600-4700 அளவுகளில் நல்லதொரு அரண் கொண்டிருக்கும்.

கடந்த எட்டு மாதங்களாக இந்தியாவில் ஏராளமாக முதலீடு செய்து அந்நிய நிறுவனங்கள் தங்கள் பணத்தை வெளியேற்ற நினைத்தால் சந்தை வீழ்ச்சி இன்னும் கூட பெரிதாக இருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க மத்திய வங்கி, அமெரிக்க பொருளாதார மீட்சியைப் பற்றி எண்ண கூறவுள்ளது என்பதை வர்த்தகர்கள் கூர்மையாக கவனிப்பார்கள். இந்தியாவில் பொறுத்த வரை, பல பெரிய நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள் சிறப்பாக இல்லாத நிலையில், இனி வெளிவரவுள்ள நிதி அறிக்கைகளும் கவனிக்கப் படும்.

நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய விரும்புவர்கள் சற்று பொறுத்திருக்கலாம். அல்லது அடிப்படை சிறப்பாக உள்ள பங்குகளில் (உதாரணத்திற்கு எஸ்பிஐ, மாருதி, இன்போசிஸ் மற்றும் ஐடிசி போன்ற நிறுவனங்களில்) சிறிது சிறிதாக முதலீடு செய்யலாம். எந்த பங்கை வாங்குவது என்று தடுமாறுபவர்கள், நிபிட்டி பீஸ் போன்ற நிதிகளை (Nifty BEES) சேகரிக்கலாம். குறுகிய கால நோக்கில் முதலீடு செய்ய விரும்புவர்கள் 4600-4650 அளவுகளில் பங்குகளை வாங்கலாம். அதே சமயம் குறைந்த கால நோக்கில் முதலீடு செய்பவர்கள் தகுந்த ஸ்டாப் லாஸ் அளவுடன் செயல்படுவது நல்லது.

வரும் வாரம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி.

Sunday, October 25, 2009

தீபாவளி கஷாயம்!


தீபாவளிக்கு ஏராளமான இனிப்புக்களை சாப்பிட்டு விட்டு பின்னர் வயிறு கெட்டுப் போய் கஷாயத்தை தேடி அலையும் கதை சந்தைக்கும் ஏற்பட்டு உள்ளது. தீபாவளி வரை அதிரடியாக முன்னேறி பல புதிய உயரங்களை தொட்ட பங்கு சந்தை சென்ற வாரம் மிகவும் தடுமாறியது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சந்தைக்கு பல தருணங்களில் மீட்சியை அளித்து வந்த "முக்கிய தடுப்பரண்" (Important Trendline) சென்ற வாரத்தில் முழுமையாக உடைக்கப் பட்டு விட்டது. இந்த தடுமாற்றத்திற்கு என்ன காரணங்கள் என்று முதலில் பார்ப்போம்.

உலக சந்தையில் மளமளவென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை இந்திய ரூபாயின் மதிப்பை குறைத்து விடக் கூடிய நிலை உருவாகும் பட்சத்தில் அந்நிய முதலீடு குறையலாம் என்ற ஒரு அச்சம் சந்தையில் உருவானது. இந்த அச்சத்தை உறுதிப் படுத்தும் வகையில், ருபாய் வீழ்ச்சியின் தொடர்ச்சியாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு பிறகு இந்திய சந்தையில் பங்குகளை விற்றன.

வங்கிகள் கடன் வழங்கும் அடிப்படை வட்டி வீதத்தில் சில மாற்றங்களை மத்திய வங்கி கொண்டு வர விருப்பம் தெரிவித்தது, வங்கிகளின் சுதந்திரத்தை ஒருவகையில் பாதிக்கும் என்ற அச்சத்தை சந்தையில் உருவாக்கியது. இந்த அச்சம் தொடர்ந்து பல நாட்கள் வரை நட்சத்திரங்களாக ஜொலித்த வங்கிப் பங்குகளை சற்று நிலை தடுமாற செய்தது.

கிருஷ்ணா கோதாவரி படுகையின் K6 பகுதி மூடப் பட வேண்டியிருக்கும் என்ற தொனியில் வெளிவந்த செய்திகள், பங்கு குறியீடுகளின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் நிறுவனத்தை தடுமாற செய்தது. மேலும், தொடர்ந்து உயரும் கச்சா எண்ணெய் விலை இந்திய எண்ணெய் விற்பனை பங்குகளை வீழச் செய்தது.

மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான லார்சென் & டூப்ரோவின் காலாண்டு நிதி அறிக்கை சந்தைகளுக்கு திருப்தி அளிக்க வில்லை. சந்தைக் குறியீடுகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் இந்த நிறுவன பங்கின் வீழ்ச்சி மொத்த சந்தையையும் சற்று தடுமாற செய்தது.

அதே சமயம், நுகர்வோர் நிறுவனங்கள் பாதுகாப்பானதாகவும், ஐடிசி போன்ற நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் சிறப்பாக இருந்ததாலும், இந்த துறை பங்குகள் ஓரளவுக்கு முன்னிலை பெற்றன. டிசிஎஸ் நிறுவனத்தின் சிறப்பான காலாண்டு அறிக்கை மற்றும் ருபாய் வீழ்ச்சி மென்பொருட் துறை நிறுவனங்களின் பங்குகளை உயரச் செய்தது.

ஆக மொத்தத்தில் அங்கங்கு சில சிறப்பான பங்கு வளர்ச்சிகள் இருந்தாலும், சந்தையில் வீழ்ச்சியே பெரிதாக காணப் பட்டது.

ஏற்கனவே சொன்னபடி முக்கிய அரண் நிலைக்கு கீழே முக்கிய குறியீடுகள் சரிந்துள்ள நிலையில், பல வர்த்தகர்களின் எதிர்பார்ப்பு சந்தை இன்னும் கூட நிறைய தடுமாற்றங்களை சந்திக்கும் என்றே உள்ளது.

மேலும் வரும் செவ்வாய் கிழமை மத்திய வங்கி அறிவிக்கவுள்ள காலாண்டு நிதிக் கொள்கை சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வட்டி வீத உயர்வுகள் ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப் பட்டாலும், பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பற்றிய மத்திய வங்கியின் கருத்துக்கள் சந்தையில் பெருமளவுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

வரும் வாரத்தில் நிகழக் கூடிய முன்பேர வர்த்தகத்தின் மாதாந்திர நிறைவும் (Monthly F&O Settlement) கூட சந்தையில் பெரிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

உலக வர்த்தக போக்கு முக்கியமாக கச்சா எண்ணெய் விலை நிலவரம், ருபாய் வர்த்தகம் மற்றும் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பொறுத்தே சந்தையின் போக்கு வரும் வாரம் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நிபிடியை பொறுத்த வரை 4850 -4900 & 4650 -4700 நிலைகள் நல்ல அரண்களாக இருக்கும். 5100-5200 அளவு வலுவான எதிர்ப்பு நிலையாக இருக்கும்.

கடந்த ஆறு மாதங்களாக பங்குகளை வாங்கி வைத்திருக்கும் நண்பர்கள், தங்கள் மொத்த வர்த்தக நிலையை சற்றுக் குறைத்துக் கொள்ளலாம். இந்த பதிவுவலையில் பரிந்துரைக்கப் பட்ட யெஸ் பேங்க் மற்றும் மைத்தாஸ் நிறுவனங்களின் பங்குகள், மிகக் குறைந்த காலத்திலேயே, மிகச் சிறப்பான வளர்ச்சியை கண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். இந்த பங்குகள் இன்னும் கூட மேலே செல்ல வாய்ப்புக்கள் உள்ளன என்றாலும் கூட, மொத்த முதலீட்டை கொஞ்சம் குறைத்துக் கொள்வது (Partial profit booking is desirable) நல்லது என்று நினைக்கிறேன்.

வரும் வாரம் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி.

Friday, October 16, 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


இந்த தீபாவளி அனைவரது வாழ்விலும் தீப ஒளி ஏற்றட்டும்!



நம்மைச் சுற்றி உள்ள இருள் விலகட்டும்!




உலகெங்கும் ஆனந்த ஒளி பரவட்டும்!










அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Sunday, October 11, 2009

வாண வேடிக்கையா? வெறும் புஸ்வாணமா?


பெரிதாக வெடிக்கப் போகிறது அல்லது வண்ண மயமான ஒளிச்சிதறல்கள் பூக்கப் போகின்றன என்றெல்லாம் பெரிதாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சில பட்டாசுகள் புஸ்வாணமாக போவதுமுண்டு. தீபாவளி தினத்தன்று நமக்கெல்லாம் சில சமயங்களில் ஏற்பட்டு விடும் இது போன்ற ஒரு அனுபவம் சென்ற வாரம் பங்குசந்தையிலும் ஏற்பட்டது. சென்ற வாரம் நம்மை ஏமாற்றிய புஸ்வாணங்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.

முதல் புஸ்வானம் - பாரதி ஏர்டெல்

தென் ஆப்பிரிக்க தொலைபேசி நிறுவனமான எம்டிஎன்-னுடான இணைப்பு இல்லையென்றவுடன் முதலில் துள்ளிக் குதித்த பாரதி பங்கு, வெகு சீக்கிரத்திலேயே ஆடி அடங்கி விட்டது. எம்டிஎன்னுடன் இணையாததால் சில அபாயங்கள் நீங்குகின்றன என்று அந்த பங்கினை அதிக விலையில் வாங்கி வைத்து ஆசையுடன் காத்திருந்த பலருக்கு பாரதி ஒரு பெரிய புஸ்வாணமாகவே அமைந்தது.

இரண்டாவது புஸ்வானம் - ரிலையன்ஸ்

பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு கொடுப்பதாக அறிவித்தது. இந்தியாவின் 'நம்பர்-ஒன்' வணிகத் தாளான எகோநோமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தீபாவளி வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டதாக முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக அறிவித்தது. ஒன்று வாங்கினால் இன்னொன்று என்று அறிவித்து விட்டு பழைய ஸ்டாக்களை (பாதி விலை என்ற பெயரில் ஆனால் அதே விலையில்) வெளியனுப்பும் துணிக்கடைகளின் பாணியில், வெளி வந்த இந்த அறிவிப்பால் கவரப்பட்ட பலரும் அன்றைய தேதியில் ரிலையன்ஸ் பங்கினை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். ஆனால் பங்கோ ஒரே நாளில் பல்லிளித்து விட்டது.

மூன்றாவது புஸ்வாணம் - இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை மிகச் சிறப்பாகவே அமைந்திருந்தது. சிக்கலான உலக பொருளாதார சூழ்நிலையிலும் கூட சிறந்த முறையில் செயலாற்றியிருப்பது பாராட்டத்தக்க விஷயம்தான் என்றாலும் கூட சந்தைகள் இதனை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால் வெடிச்சத்தம் பெரிதாக கேட்க வில்லை. வரும் ஆண்டிற்கான பங்கு வருவாய் நூறு ரூபாயாக இருக்கும் என்று தனது முந்தைய வருவாய் கணிப்பை இன்போசிஸ் நிறுவனம் உயர்த்தியது சந்தோசமான விஷயம்தான் என்றாலும், பொருளாதார சிக்கல்கள் நிறைந்த இந்த காலகட்டத்தில், இந்த பங்கின் மதிப்பு (P/E Ratio) 22 என்று அதிக அளவில் இருப்பதை சந்தைகள் ஏற்றுக் கொள்ள வில்லை என்பதையே பங்கின் விலை போக்கு காட்டுகின்றது. நல்ல நிறுவனம் நல்ல முடிவுகள் என்று நம்பி பங்கினை வாங்கிய வர்த்தகர்கள் முகத்தில் ஒளிச்சிதறல்கள் இல்லை. மாறாக, கரியே பூசப் பட்டது.

நான்காவது புஸ்வாணம் - உலக சந்தைகள்

அமெரிக்காவிற்கு சளி பிடித்தால் இந்தியாவிற்கு இருமல் வரும் என்று சொல்லப் படுவதுண்டு. இதில் உண்மை இல்லாமல் இல்லை. டொவ் ஜோன்ஸ், நாஸ்டாக், எஸ்&பி போன்ற குறியீட்டுக்களின் போக்கின் அடிப்படையிலேயே நம்மவர்களில் பலர் வர்த்தகம் செய்வதுண்டு.

சென்ற வாரம் அமெரிக்க சந்தைகளில் உண்மையான தீபாவளி கொண்டாட்டம் இருந்தது. அங்கிருந்து வெளிவரும் முக்கிய பொருளாதார குறியீடுகள் எல்லாம் அமெரிக்க பொருளாதாரம் இன்னும் தடுமாற்றத்திலேயே இருக்கின்றது என்பதை தொடர்ந்து வெளிக்காட்டி வரும் இந்த வேளையில், முக்கிய தகவல்கள் ஏதும் வெளிவராத ஒரு "முக்கிய புள்ளி விவர விடுமுறை வாரமாக" அமைந்த சென்ற வாரம் அமெரிக்க பங்கு வர்த்தகர்களுக்கு அள்ளித்தரும் ஒரு வாரமாக இருந்தது ஆச்சரியமான விஷயமாக இல்லை. ஆனால் அமெரிக்க பங்கு சந்தைகளை நம்பி வர்த்தகம் செய்த நம்மவர்களுக்கு கிடைத்தது என்னவோ கடைசியில் நசுங்கிப் போன சொம்புதான்.

ஐந்தாவது புஸ்வாணம் - ருபாய் வர்த்தகம்

ருபாய் வலிமை பெற்றால் ஏராளமான அந்நிய முதலீட்டு பணம் வருகிறது என்ற ஒரு அர்த்தமும் உண்டு. ருபாய் மதிப்பு உயர்வதின் தொடர்ச்சியாக டாலர் பணத்தை நம்மிடம் (RBI) கொடுத்து விட்டு அதற்கு பதிலாக ரூபாயை வாங்கி வைத்திருக்கும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நமது பங்கு சந்தை விலைகள் உயராவிடினும் ருபாய் மதிப்பு உயர்வதன் மூலம் மட்டுமே கூட லாபம் ஈட்ட முடியும். எனவே, ருபாய் உயர்ந்தால் அதிக அந்நிய முதலீட்டாளர்கள் வருவார்கள் என்பது சந்தைகளின் பொதுவான நம்பிக்கை.

சென்ற வாரம் ருபாய் ஏராளமாக உயர்ந்தது. ஆனால், பலகாரத்தை தேடி ஈக்கள் வர வில்லை. பலகாரத்தில் இருந்த இனிப்புச்சத்து முழுமையாக உறிஞ்சப்பட்டு விட்டதுதான் காரணமா என்று தெரிய வில்லை. "ஈக்கள்" வரும் என்று பலகாரங்களை ஏகப்பட்ட விலையில் வாங்கி காத்திருந்த பல கடைக்காரர்கள் ஏமாற்றத்துடனேயே கடைகளை சாத்த வேண்டியிருந்தது.

இப்படி ஒவ்வொரு நாளும், நம்பிக்கை எனும் வாண வேடிக்கைகளும் ஏமாற்றம் எனும் புஸ்வாணங்களுமாகவே சென்ற வாரம் கழிந்தது.

வரும் வாரம் வாணவேடிக்கைகள் இருக்குமா அல்லது சென்ற வாரத்தைப் போல இன்னொரு புஸ்வாண வாராமாக போய் விடுமா என்பதே இப்போதைய கேள்வி.

தொழிற்நுட்ப வரைபட கணிப்புக்களின் படி சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி ஆகியவை 16500 & 4920 என்ற முக்கிய நிலைகளின் மிக அருகே அமைந்துள்ளன. இந்த நிலைகளை அரண்களாக வைத்துக் கொண்டு சந்தை மேலே செல்லுமானால் இரண்டு அல்லது மூன்று தினங்களில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் அளவுக்கு மேலே கூட உயர வாய்ப்புள்ளது என்று சில பங்குசந்தை வல்லுனர்கள் கருதுகின்றனர். மாறாக இந்த அரண் நிலைகள் முழுமையாக முறியடிக்கப் பட்டால் சந்தை ஒரு பெரிய வீழ்ச்சியை சந்திக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

பங்குசந்தையில் குறுகிய கால அடிப்படையில் வர்த்தகம் செய்வோர் மேற்சொன்ன நிலைகளை மையப் புள்ளிகளாக அமைத்துக் கொண்டு வர்த்தகம் செய்வது நல்லது.

காலாண்டு அறிக்கைகளை மட்டுமே நம்பிக் கொண்டு பங்குகளை வாங்கும் வர்த்தக நிலை எடுக்க வேண்டாம். அதே போல நல்ல நிறுவனம் என்பதனால் மட்டும் முதலீடு செய்யும் முடிவையும் எடுக்க வேண்டாம். இன்றைய நிலையில் பல பங்குகள் தமது விலையில் பல நல்ல செய்திகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டுதான் (Prices have discounted many many good news) வர்த்தகம் ஆகி வருகின்றன.

மேலும், ஏற்கனவே பல மடங்கு உயர்ந்து விட்ட பங்குகளை, "அடிப்படையில் மிகவும் சிறந்தவை, நீண்ட கால நோக்கில் பத்து-பதினைந்து சதவீதம் வரை வருமானம் அளிக்கும்" என்றெல்லாம் சொல்லி பங்கு ஆலோசகர்கள் பரிந்துரைத்தால் கண்டிப்பாக புறந்தள்ளி விடுங்கள்.

மற்ற முதலீடுகளுக்கும் பங்கு முதலீட்டிற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. அதாவது, முதலீட்டுப் பணம் முழுமையாக கூட மூழ்கிப் போய் விடும் அபாயம் பங்கு முதலீட்டில் உள்ளது. எனவே, ஒரு பங்கு குறைந்த பட்சம் 25-30 சதவீதம் (ஒரு ஆண்டுக்கு) வருவாய் தரும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே முதலீட்டைப் பற்றி யோசிக்க வேண்டும். அதுவும் அந்த நிறுவனம் 'அடிப்படையில் மிகச் சிறப்பானதாக வளரும் நிறுவனமாக' (rising star growth companies) இருந்தால் அல்லது 'ஒரு கடுமையான சூழலில் இருந்து மீண்டு வருவதாக (recovery stocks)' இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

பின்குறிப்பு: பொதுவாகவே, தீபாவளியை விட தீபாவளிக்கு முந்தைய வாரம்தான் அதிக மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய உடைகள், பட்டாசுகள், பலகாரங்கள், பரிசுப் பொருட்கள் என பலவற்றையும் தீபாவளி 'பர்ச்சேஸ்' செய்வது (பர்ஸை பற்றி கவலைப் பட வில்லையென்றால்) ஒரு சந்தோசமான அனுபவம். தீபாவளிக்காக சொந்த ஊருக்கு பலரும் செல்வதும் வருகின்ற வாரத்தில்தான். ஏராளமான கொண்டாட்ட எதிர்பார்ப்புக்களுடன் நகரக் கூடிய இந்த வாரம் பலருடைய முகத்திலும் புன்னகை பூக்கச் செய்ய வேண்டுமென்று மனதார வாழ்த்துகின்றேன்.

அப்படியே தீபாவளிக்கும் இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என் தரப்பிலிருந்து.

நன்றி!

Friday, October 9, 2009

தீபாவளியும் தங்க விதியும்!


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளியை முன்னிட்டு ஒரு பணிவான கோரிக்கை.

80-20 என்ற தங்க விதியை (The Pareto principle , also known as the 80-20 rule , the law of the vital few, and the principle of factor sparsity) பற்றி பலரும் கேள்விபட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். கேள்விபடாதவர்களுக்காக இங்கே ஒரு சிறிய விளக்கம்.

எண்பது சதவீத விளைவுகள் இருபது சதவீத காரணங்களாலேயே வருகின்றது என்ற இந்த வணிக தத்துவம் பரேடோ என்ற பொருளாதார நிபுணர், 1906 இல் இத்தாலியின் மொத்த நிலப் பரப்பில் எண்பது சதவீத நிலம் இருபது சதவீதத்தினரிடம்தான் உள்ளது என்று கணித்ததின் அடிப்படையில் உருவானது. பரேடோ விதி என்று அழைக்கப் படும் இந்த விதி பல கணித முறைகளிலும் வணிக தத்துவங்களிலும் உதவுகிறது.

அதாவது ஒரு நிறுவனத்தின் எண்பது சதவீத விற்பனை இருபது சதவீத வாடிக்கையாளர்களிடம் இருந்துதான் வருகின்றது. ஒருவரது முதலீட்டின் எண்பது சதவீத வருமானம் அவரது இருபது சதவீத பங்குகளில் இருந்துதான் வருகின்றது.

சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூட இருபது சதவீத முக்கிய பிரச்சினைகள்தான் ஒரு கணினியின் செயல் இழப்புக்கான எண்பது சதவீத காரணங்களாக இருக்கின்றன என்று கண்டறிந்துள்ளது.

80-20 என்ற விகிதம் இன்னும் கூட பல இடங்களில் சிறப்பாக பொருந்தும்.

உலகில் எண்பது சதவீத சொத்துக்கள் இருபது சதவீதத்தினரிடம்தான் உள்ளன. வேறு வகையாக சொல்ல வேண்டுமென்றால் எண்பது சதவீதம் பேர் உழைப்பதை இருபது சதவீதம் பேர் சாப்பிடுகின்றனர். இன்னும் கூட சொல்லப் போனால், செல்வந்தர்களிடையே கூட, எண்பது சதவீத சொத்துக்கள் இருபது சதவீதத்தினர் மட்டும்தான் உள்ளது.

எண்பது இருபது என்பது ஒரு இளகிய தத்துவம். இந்த விகிதம் லேசாக மாறி கூட இருக்கலாம். சமீபத்திய பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் ஒரு சதவீதத்தினரிடம் மட்டும்தான் சேர்ந்துள்ளன என்று சொல்பவர்களும் உண்டு.

எல்லாம் சரி! தீபாவளி கோரிக்கைக்கும் இந்த தங்க விதிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?

இணையத்தில் உள்ள நம்மில் பலரும் வசதியுள்ள முதல் இருபது சதவீதத்திற்குள்தான் இருப்போம் என்று நம்புகிறேன். நம்மை இந்த நிலையில் வைத்திருப்பது, நமக்கு பல வகையிலும் சேவை செய்யும், மீதமுள்ள எண்பது சதவீதத்தினர்தான். அவர்களுக்கு ஏதாவது பதிலுக்கு செய்வது நமது கடமையாகும்.

நம்மால் என்ன செய்ய முடியும் என்று கேட்கிறீர்களா?

நமது தீபாவளி செலவினத்திற்கான மொத்த பட்ஜெட்டில் இருபது சதவீதத்தை மட்டும் தனியாக ஒதுக்கி விடுவோம். அந்த பணத்தில் நம்மை விட எளியவர்களாக இருப்பவர்களுக்கு ஏதாவது செய்வோம். அவர்கள் நம் வீட்டு வேலைக்காரர்களாக இருக்கலாம். வழியில் சந்திப்பவராக இருக்கலாம். ஏன், அவர்கள் முகம் தெரியாதவர்களாக கூட இருக்கலாம். எளியவர்கள் யாருக்காகவாவது அந்த பணத்தை செலவு செய்வோம்.

80-20 தங்க விதி இங்கேயும் கூட அழகாக பொருந்தும். அதாவது உங்கள் மொத்த பட்ஜெட்டில் இருபது சதவீதத்தை மட்டுமே, மற்றவர்களுக்கு உதவுவதற்காக நீங்கள் ஒதுக்கினாலும், இந்த பணத்தின் மூலமாக உங்களுக்கு கிடைக்கப் போவது எண்பது சதவீத மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

நன்றி!

பின்குறிப்பு: இந்த கோரிக்கை ஏதேனும் பெரிய மனுஷத்தனமாக இருந்தால் மன்னிக்கவும். மனதில் தோன்றியதை இணைய நண்பர்களிடம் முன்வைப்போம் என்ற ஆர்வத்தில் மட்டுமே இந்த பதிவு.

Sunday, October 4, 2009

நேற்றொரு தோற்றம் - இன்றொரு மாற்றம்.


நேற்று நாம் பார்த்த சூரியனும் இன்று பார்க்கும் சூரியனும் ஒன்றேதானா என்ற கேள்விக்கு உங்கள் விடை என்னவாக இருக்கும்? ஒன்றுதான் என்று விடை சொல்லும் அதே உறுதியுடன் ஒன்றில்லை வேறு வேறு என்றும் சொல்ல முடியும். ஒவ்வொரு நிமிடமும் அணு சேர்க்கைகளும் அணு பிளவுகளும் தனது நிலப்பரப்பில் நடத்திக் கொண்டிருக்கும் சூரியன் ஒவ்வொரு நிமிடமும் தனது நிலையில் இருந்து மாறிக் கொண்டேதான் இருக்கின்றது. எனவே நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் என்ற பாடல் வரிகள் சூரியனுக்கும் பொருந்தும். கங்கை நதியோ காவேரியோ, நதிகள் அவைகளேதான் என்றாலும் நேற்றிருந்த நீர் இன்றிருப்பதில்லை. மாற்றம் மட்டுமே நிரந்தரம் என்ற இந்த அறிவியல் சித்தாந்தம் பொருளாதாரத்திற்கும் வெகுவாகவே பொருந்தும். ஒவ்வொரு நாளும் புதிய நிறங்களை வெளிக்காட்டும் உலக பொருளாதார நிலை பற்றி இங்கு பார்ப்போம்.

உலகெங்கும் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட பல அரசாங்கங்கள், சென்ற ஆண்டு துவங்கிய பொருளாதார மந்த நிலையை போக்குவதற்காக ("Trickling Down Economics" எனும் முறையில்) சந்தையில் பெரிய அளவில் பணத்தை இறக்கி விட்டன. பெரிய பணக்காரர்களுக்கு (அல்லது தொழில் நிறுவனங்களுக்கு) அரசாங்கங்கள் ஏராளமான சலுகையை கொடுக்கும் பட்சத்தில், அவர்களை சார்ந்துள்ள எளிய மக்களும் பயன் பெறுவார்கள் என்ற கருத்துள்ளது இந்த முறை. அதாவது, பங்கு சந்தை வர்த்தகர்களுக்கு, முதலீட்டு வங்கிகளில் பணிபுரியும் கனவான்களுக்கு, பெரிய தொழில் அதிபர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்தால் அவர்கள் ஏராளமாக செலவு செய்வார்கள். அப்படி செலவு செய்யும் போது, அவர்களை நம்பியிருக்கும் கார் ஓட்டுனர்கள், வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் இதர சேவைத்துறையினர் (நம்மூர் பிபிஒ உட்பட) என்று பலரும் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்பது இவர்களது நம்பிக்கை.

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற கதையாகி விட்டது இந்த "Trickling Down Economics" முயற்சி. தொழிற்துறை உயரும் என்று நம்பி அரசாங்கங்கள் இரவு பகலாக அச்சடித்து பொருளாதாரத்தில் இறக்கி விட்ட பணம், சந்தைகளுக்குள்ளே பாய்ந்து பரந்து பங்கு சந்தை, பொருட்கள் சந்தைகளை நல்ல உயரத்தில் கொண்டு போய் வைத்துள்ளது. ஆனால், உலக அரசாங்கங்கள் எதிர்பார்த்தபடி பெரிய அளவில் தொழிற் உற்பத்தி அல்லது மக்களின் செலவின அதிகரிப்பு நடைபெற வில்லை. காலங்காலமாக செலவு செய்து மட்டுமே பழக்கப் பட்ட அமெரிக்கர்கள் இப்போது சேமிக்கத் (எதிர்கால அச்சம் காரணமாக இருக்கலாம்) தொடங்கி விட்டனர். வேலை இழப்பும் குறைந்த பாடில்லை. சொல்லப் போனால் சென்ற மாதம் வேலை இழப்பு விகிதம் (Unemployment Rate) அதிகரித்துள்ளது.

சிறிய விலங்கினங்களுக்கு உணவை நேரடியாக கொடுப்பதற்கு பதிலாக யானைக்கு நிறைய உணவை அளித்தால் அது சாப்பிட்டு சிந்தும் உணவை சிறிய விலங்கினங்கள் சாப்பிட்டு பசியாறும் என்று நினைத்தால், யானைகள் தாம் மட்டுமே சாப்பிட்டு விட்டு மிச்சத்தை பதுக்கி வைத்துக் கொள்வது போல ஒரு பொருளாதார நிகழ்வு நடந்தேறி விட்டது.

பொருளாதார மீட்சி திட்டத்தை பொருத்த வரை, இந்திய அரசாங்கத்தை ஒருவகையில் பாராட்டியாக வேண்டும். அமெரிக்கா போல ஒரு சிலருக்கு மட்டும் பணத்தை வாரி வழங்காமல், பலருக்கும் பணத்தை தாரை வார்த்திருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா? கோடிக்கணக்கான மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் லட்சக்கணக்கில் வழங்கப் பட்ட நிலுவை தொகை, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, குறைந்த பட்ச வேலை வாய்ப்பு திட்டம் (NREGP) போன்ற (தேர்தலை மனதில் வைத்து தீட்டப் பட்ட இந்த) திட்டங்கள், எந்த அளவுக்கு சரி என்று சொல்ல முடியாவிட்டாலும், அமெரிக்கா போல பணத்தை குறுகிய வட்டத்தில் மட்டுமே முடக்காமல் பலரிடமும் தஞ்சம் புக வைத்தன. இந்த திட்டங்களால் பலனடைந்த லட்சக்கணக்கான இந்தியர்கள் ஓரளவுக்கு அதிகம் செலவு செய்வதனால் ஏற்பட்டுள்ள இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி ஓரளவுக்கு உறுதியாகவும் நிரந்தரமானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

அதே சமயம் உலக பொருளாதாரம் தத்தளித்து வரும் நிலையில் இந்தியா மட்டும் வெகுகாலத்திற்கு தனித்து வளருவது கடினமான காரியம். இது இந்திய பங்கு சந்தைக்கும் பொருந்தும்.

"யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே" என்ற ஒரு பதிவில் "மணி ஓசைக்கு பின்னர் வருவது யானையாகவும் இருக்கலாம் அல்லது ஐஸ் வண்டியாகவும் கூட இருக்கலாம்" என்று கூறி இருந்தேன். பங்கு சந்தைகள் மணி அடித்த பிறகு வரப் போவது யானைதான் என்று பந்தயம் கட்டின. ஆனால் இதுவரை யானை வந்தபாடில்லை. சென்ற இரு வாரங்களாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பொருளாதார தகவல்கள் (கார் வாங்க காசு கொடுத்தனால் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்ற வாகனத் துறையை தவிர), அந்நாடு உறுதியான பொருளாதார வளர்ச்சியை காண இன்னும் பல காலம் பிடிக்கும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளன.

இனிமேலும் அமெரிக்க அரசாங்கம் பணத்தை வாரி இறைப்பது பொருளாதார ரீதியாக கடினமான காரியம். அவ்வாறு செய்தால் பணவீக்கம் பெரிய அளவில் உயரும். அரசாங்கத்தின் ஸ்திர தன்மையும் பாதிக்கப் படும். அரசாங்கத்தால் மேலும் பணத்தை இறக்க முடியாது என்ற பயம் பொருளாதாரத்தை மேலும் பின் தங்க செய்து விடக் கூடும்.

(உலக பொருளாதாரத்தின் என்ஜினாக இன்னமும் கூட அமெரிக்காவே இருந்து வருகிறது என்பதை மறுப்பது கடினம். இந்த பதவிக்காக சீனா முட்டி மோதினாலும், அமெரிக்காவிற்கு சேவை செய்துதான் அது பிழைத்து வருகிறது என்ற உண்மையை அந்த நாடே விருப்பபட்டாலும், மறைக்கவோ மறுக்கவோ முடியாது.)

இந்த சூழ்நிலையானது உலக சந்தைகளை சென்ற இருவாரங்களாக பெருமளவில் கவலை கொள்ள செய்திருக்கிறது. உலக சந்தைகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு வீழ்ச்சியையும் கண்டுள்ளன. ஆனால் இந்திய சந்தையானது இன்னமும் கூட வலுவாகவே தனித்து நடை போட்டு கொண்டிருக்கிறது. அதே சமயம், ஏற்கனவே சொன்னபடி, உலக போக்கில் இருந்து வெகுகாலத்திற்கு விடுபட்டுக் கொள்வது மிகவும் கடினமான காரியம். சொல்லப் போனால் ஒவ்வொரு முறையும் துவக்கத்தில் தனி வழியில் செல்லும் நமது சந்தை, காலப் போக்கில் மற்ற உலக சந்தைகளை விட அதிக ரியாக்சன் காட்டியுள்ளது என்பது சரித்திர உண்மை.

செப்டம்பர் வரை முடிவடைந்த காலாண்டு காலத்திற்கான இந்திய நிறுவனங்களின் நிதி அறிக்கைகளுக்காக நமது சந்தை கொஞ்ச காலத்திற்கு பொறுத்திருக்கும் என்றாலும், உலக சந்தைகள் வரும் காலத்திலும் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தால், நமது சந்தையும் தன்னை உலக போக்குடன் இணைத்துக் கொள்ளும் என்று நம்பலாம்.

ஏற்கனவே முதல் பத்தியில் சொன்ன படி மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்ற தத்துவத்தை மனதில் நிறுத்தி கொண்டு, தொடர்ந்து நிகழும் பொருளாதார மாற்றங்களில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு சந்தைகளில் வர்த்தகம் செய்வது நல்லது.

"Bulls have no resistance. Bears have no support" என்ற பங்கு சந்தை தங்க விதியையும் மனதில் வைத்துக் கொள்ளவும். உலக அளவில் பெரியதொரு பொருளாதார மாறுதல் ஏற்பட்டால் எந்த தொழிற்நுட்ப வரைபட விதியும் (Technical charts ) நம்மை காப்பாற்றாது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Thursday, October 1, 2009

உன்னை போலவே வேற ஒருத்தன்!



செய்யிரதத்தான் நாங்க சொல்லுவோமில்லே?


அதுவும் டயட்டிலே இருக்காம்.

டைம்தானே முக்கியம்?


வயித்துக்குள்ளேயே போனாலும் வழி முக்கியமில்லையா?


இதத்தான் 'சீக்கிரம் கணக்க முடி'க்கறதுன்னு சொல்றாங்களா?


சாரி! டாங் கொஞ்சம் ஸ்லிப்பாயிடுச்சு!


உன்னை போலவே வேற ஒருத்தன் கூட இப்படித்தான் முடியாதுன்னு சொன்னான்!


நன்றி!
Blog Widget by LinkWithin