Sunday, October 11, 2009

வாண வேடிக்கையா? வெறும் புஸ்வாணமா?


பெரிதாக வெடிக்கப் போகிறது அல்லது வண்ண மயமான ஒளிச்சிதறல்கள் பூக்கப் போகின்றன என்றெல்லாம் பெரிதாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சில பட்டாசுகள் புஸ்வாணமாக போவதுமுண்டு. தீபாவளி தினத்தன்று நமக்கெல்லாம் சில சமயங்களில் ஏற்பட்டு விடும் இது போன்ற ஒரு அனுபவம் சென்ற வாரம் பங்குசந்தையிலும் ஏற்பட்டது. சென்ற வாரம் நம்மை ஏமாற்றிய புஸ்வாணங்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.

முதல் புஸ்வானம் - பாரதி ஏர்டெல்

தென் ஆப்பிரிக்க தொலைபேசி நிறுவனமான எம்டிஎன்-னுடான இணைப்பு இல்லையென்றவுடன் முதலில் துள்ளிக் குதித்த பாரதி பங்கு, வெகு சீக்கிரத்திலேயே ஆடி அடங்கி விட்டது. எம்டிஎன்னுடன் இணையாததால் சில அபாயங்கள் நீங்குகின்றன என்று அந்த பங்கினை அதிக விலையில் வாங்கி வைத்து ஆசையுடன் காத்திருந்த பலருக்கு பாரதி ஒரு பெரிய புஸ்வாணமாகவே அமைந்தது.

இரண்டாவது புஸ்வானம் - ரிலையன்ஸ்

பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு கொடுப்பதாக அறிவித்தது. இந்தியாவின் 'நம்பர்-ஒன்' வணிகத் தாளான எகோநோமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தீபாவளி வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டதாக முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக அறிவித்தது. ஒன்று வாங்கினால் இன்னொன்று என்று அறிவித்து விட்டு பழைய ஸ்டாக்களை (பாதி விலை என்ற பெயரில் ஆனால் அதே விலையில்) வெளியனுப்பும் துணிக்கடைகளின் பாணியில், வெளி வந்த இந்த அறிவிப்பால் கவரப்பட்ட பலரும் அன்றைய தேதியில் ரிலையன்ஸ் பங்கினை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். ஆனால் பங்கோ ஒரே நாளில் பல்லிளித்து விட்டது.

மூன்றாவது புஸ்வாணம் - இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை மிகச் சிறப்பாகவே அமைந்திருந்தது. சிக்கலான உலக பொருளாதார சூழ்நிலையிலும் கூட சிறந்த முறையில் செயலாற்றியிருப்பது பாராட்டத்தக்க விஷயம்தான் என்றாலும் கூட சந்தைகள் இதனை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால் வெடிச்சத்தம் பெரிதாக கேட்க வில்லை. வரும் ஆண்டிற்கான பங்கு வருவாய் நூறு ரூபாயாக இருக்கும் என்று தனது முந்தைய வருவாய் கணிப்பை இன்போசிஸ் நிறுவனம் உயர்த்தியது சந்தோசமான விஷயம்தான் என்றாலும், பொருளாதார சிக்கல்கள் நிறைந்த இந்த காலகட்டத்தில், இந்த பங்கின் மதிப்பு (P/E Ratio) 22 என்று அதிக அளவில் இருப்பதை சந்தைகள் ஏற்றுக் கொள்ள வில்லை என்பதையே பங்கின் விலை போக்கு காட்டுகின்றது. நல்ல நிறுவனம் நல்ல முடிவுகள் என்று நம்பி பங்கினை வாங்கிய வர்த்தகர்கள் முகத்தில் ஒளிச்சிதறல்கள் இல்லை. மாறாக, கரியே பூசப் பட்டது.

நான்காவது புஸ்வாணம் - உலக சந்தைகள்

அமெரிக்காவிற்கு சளி பிடித்தால் இந்தியாவிற்கு இருமல் வரும் என்று சொல்லப் படுவதுண்டு. இதில் உண்மை இல்லாமல் இல்லை. டொவ் ஜோன்ஸ், நாஸ்டாக், எஸ்&பி போன்ற குறியீட்டுக்களின் போக்கின் அடிப்படையிலேயே நம்மவர்களில் பலர் வர்த்தகம் செய்வதுண்டு.

சென்ற வாரம் அமெரிக்க சந்தைகளில் உண்மையான தீபாவளி கொண்டாட்டம் இருந்தது. அங்கிருந்து வெளிவரும் முக்கிய பொருளாதார குறியீடுகள் எல்லாம் அமெரிக்க பொருளாதாரம் இன்னும் தடுமாற்றத்திலேயே இருக்கின்றது என்பதை தொடர்ந்து வெளிக்காட்டி வரும் இந்த வேளையில், முக்கிய தகவல்கள் ஏதும் வெளிவராத ஒரு "முக்கிய புள்ளி விவர விடுமுறை வாரமாக" அமைந்த சென்ற வாரம் அமெரிக்க பங்கு வர்த்தகர்களுக்கு அள்ளித்தரும் ஒரு வாரமாக இருந்தது ஆச்சரியமான விஷயமாக இல்லை. ஆனால் அமெரிக்க பங்கு சந்தைகளை நம்பி வர்த்தகம் செய்த நம்மவர்களுக்கு கிடைத்தது என்னவோ கடைசியில் நசுங்கிப் போன சொம்புதான்.

ஐந்தாவது புஸ்வாணம் - ருபாய் வர்த்தகம்

ருபாய் வலிமை பெற்றால் ஏராளமான அந்நிய முதலீட்டு பணம் வருகிறது என்ற ஒரு அர்த்தமும் உண்டு. ருபாய் மதிப்பு உயர்வதின் தொடர்ச்சியாக டாலர் பணத்தை நம்மிடம் (RBI) கொடுத்து விட்டு அதற்கு பதிலாக ரூபாயை வாங்கி வைத்திருக்கும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நமது பங்கு சந்தை விலைகள் உயராவிடினும் ருபாய் மதிப்பு உயர்வதன் மூலம் மட்டுமே கூட லாபம் ஈட்ட முடியும். எனவே, ருபாய் உயர்ந்தால் அதிக அந்நிய முதலீட்டாளர்கள் வருவார்கள் என்பது சந்தைகளின் பொதுவான நம்பிக்கை.

சென்ற வாரம் ருபாய் ஏராளமாக உயர்ந்தது. ஆனால், பலகாரத்தை தேடி ஈக்கள் வர வில்லை. பலகாரத்தில் இருந்த இனிப்புச்சத்து முழுமையாக உறிஞ்சப்பட்டு விட்டதுதான் காரணமா என்று தெரிய வில்லை. "ஈக்கள்" வரும் என்று பலகாரங்களை ஏகப்பட்ட விலையில் வாங்கி காத்திருந்த பல கடைக்காரர்கள் ஏமாற்றத்துடனேயே கடைகளை சாத்த வேண்டியிருந்தது.

இப்படி ஒவ்வொரு நாளும், நம்பிக்கை எனும் வாண வேடிக்கைகளும் ஏமாற்றம் எனும் புஸ்வாணங்களுமாகவே சென்ற வாரம் கழிந்தது.

வரும் வாரம் வாணவேடிக்கைகள் இருக்குமா அல்லது சென்ற வாரத்தைப் போல இன்னொரு புஸ்வாண வாராமாக போய் விடுமா என்பதே இப்போதைய கேள்வி.

தொழிற்நுட்ப வரைபட கணிப்புக்களின் படி சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி ஆகியவை 16500 & 4920 என்ற முக்கிய நிலைகளின் மிக அருகே அமைந்துள்ளன. இந்த நிலைகளை அரண்களாக வைத்துக் கொண்டு சந்தை மேலே செல்லுமானால் இரண்டு அல்லது மூன்று தினங்களில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் அளவுக்கு மேலே கூட உயர வாய்ப்புள்ளது என்று சில பங்குசந்தை வல்லுனர்கள் கருதுகின்றனர். மாறாக இந்த அரண் நிலைகள் முழுமையாக முறியடிக்கப் பட்டால் சந்தை ஒரு பெரிய வீழ்ச்சியை சந்திக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

பங்குசந்தையில் குறுகிய கால அடிப்படையில் வர்த்தகம் செய்வோர் மேற்சொன்ன நிலைகளை மையப் புள்ளிகளாக அமைத்துக் கொண்டு வர்த்தகம் செய்வது நல்லது.

காலாண்டு அறிக்கைகளை மட்டுமே நம்பிக் கொண்டு பங்குகளை வாங்கும் வர்த்தக நிலை எடுக்க வேண்டாம். அதே போல நல்ல நிறுவனம் என்பதனால் மட்டும் முதலீடு செய்யும் முடிவையும் எடுக்க வேண்டாம். இன்றைய நிலையில் பல பங்குகள் தமது விலையில் பல நல்ல செய்திகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டுதான் (Prices have discounted many many good news) வர்த்தகம் ஆகி வருகின்றன.

மேலும், ஏற்கனவே பல மடங்கு உயர்ந்து விட்ட பங்குகளை, "அடிப்படையில் மிகவும் சிறந்தவை, நீண்ட கால நோக்கில் பத்து-பதினைந்து சதவீதம் வரை வருமானம் அளிக்கும்" என்றெல்லாம் சொல்லி பங்கு ஆலோசகர்கள் பரிந்துரைத்தால் கண்டிப்பாக புறந்தள்ளி விடுங்கள்.

மற்ற முதலீடுகளுக்கும் பங்கு முதலீட்டிற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. அதாவது, முதலீட்டுப் பணம் முழுமையாக கூட மூழ்கிப் போய் விடும் அபாயம் பங்கு முதலீட்டில் உள்ளது. எனவே, ஒரு பங்கு குறைந்த பட்சம் 25-30 சதவீதம் (ஒரு ஆண்டுக்கு) வருவாய் தரும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே முதலீட்டைப் பற்றி யோசிக்க வேண்டும். அதுவும் அந்த நிறுவனம் 'அடிப்படையில் மிகச் சிறப்பானதாக வளரும் நிறுவனமாக' (rising star growth companies) இருந்தால் அல்லது 'ஒரு கடுமையான சூழலில் இருந்து மீண்டு வருவதாக (recovery stocks)' இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

பின்குறிப்பு: பொதுவாகவே, தீபாவளியை விட தீபாவளிக்கு முந்தைய வாரம்தான் அதிக மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய உடைகள், பட்டாசுகள், பலகாரங்கள், பரிசுப் பொருட்கள் என பலவற்றையும் தீபாவளி 'பர்ச்சேஸ்' செய்வது (பர்ஸை பற்றி கவலைப் பட வில்லையென்றால்) ஒரு சந்தோசமான அனுபவம். தீபாவளிக்காக சொந்த ஊருக்கு பலரும் செல்வதும் வருகின்ற வாரத்தில்தான். ஏராளமான கொண்டாட்ட எதிர்பார்ப்புக்களுடன் நகரக் கூடிய இந்த வாரம் பலருடைய முகத்திலும் புன்னகை பூக்கச் செய்ய வேண்டுமென்று மனதார வாழ்த்துகின்றேன்.

அப்படியே தீபாவளிக்கும் இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என் தரப்பிலிருந்து.

நன்றி!

21 comments:

ச.சங்கர் said...

நல்ல அலசல்

உங்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

பொதுஜனம் said...

வெடிகள் புஸ் ஆவது இந்தியர்களுக்கு ஒன்றும் புதிது அல்ல.ரெண்டாயிரம் வருடமாக எல்லா அடியும் வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள் (ரொம்ப நல்லவங்க). பங்கு சந்தையை பொறுத்த வரை நிச்சய தன்மை இல்லாத நிலையே நம்மை தடுமாற வைக்கிறது.இன்னும் கொஞ்சம் கிடைத்தால் பரவாயில்லை என்று மேலும் மேலும் மோதுகிறார்கள்.சராசரியாக பத்து முதல் பதினைந்து சதவீதம் லாபம் வந்தால் போதும் என திருப்தி அடைவது இல்லை. பெரிதாக வெடிக்கும் என எதிர்பார்த்து அது புஸ்வானம் ஆகி ஏமாந்து போகிறார்கள்.இதில் தவறாமல் லாபம் அனுபவிப்பது என்னவோ கும்பாணி போன்ற பட்டாசு வியாபாரிகள் தான். இருந்தாலும் எல்லோரும் கொண்டாடுவோம். எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

Thomas Ruban said...

//வரும் வாரம் வாணவேடிக்கைகள் இருக்குமா அல்லது சென்ற வாரத்தைப் போல இன்னொரு புஸ்வாண வாராமாக போய் விடுமா என்பதே இப்போதைய கேள்வி. //

மொத்தத்தில் எப்படி இருந்தாலும் வேடிக்கை பார்த்து சந்தோசப் பட்டுக்கவேண்டியதுதான் சார்!!!

வரும் வாரத்தில் தேர்தலை முன்னிட்டு செவ்வாய்கிழமை பங்குசந்தைக்கு விடுமுறை நான்கே வர்த்தக தினங்கள் உள்ளது.

பதிவுக்கு நன்றி சார் ..

Thomas Ruban said...

நாம் புஸ்வானம் என நினைத்துக் கொண்டு இருக்கும் இரண்டாவது புஸ்வானம்!! சிறிது நேரம் கழித்து வெடித்தாலும் வெடிக்கலாம்!!. காலம் பதில் சொல்லும்.

நன்றி சார்..

nerkuppai thumbi said...

நீண்ட கால முதலீட்டார்களுக்கு கடந்த ஆறு மாத ஏற்றம் மிக வேகமாக வந்திருக்கிறதோ, அது நல்லதா இல்லையா என்ற ஐயம் இருக்கிறது. பட்டாசுகள், மத்தாப்புகள் இல்லாமல், சிறிது காலம் 15000 - 18000 இருந்து விட்டு மேலே போவது நல்லது எனத் தோன்றுகிறது. நான் பெரிய chaartist அல்லன்.

Maximum India said...

நன்றி சங்கர்!

உங்களுக்கும் தீபாவளி வார வாழ்த்துக்கள்!

Maximum India said...

நன்றி பொதுஜனம்!

//ரெண்டாயிரம் வருடமாக எல்லா அடியும் வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள் (ரொம்ப நல்லவங்க). //

அப்படியும் சொல்ல முடியாது. மேலே இருந்து அடி வாங்கினாலும், தமக்கு கீழே யாராவது அடி வாங்குமளவுக்கு இருக்கிறார்களா என்பதை பார்த்து அவர்களை அடித்த (வஞ்சனை செய்த) வண்ணமே இருக்கிறார்கள்.

அடி வாங்கவும் வேண்டாம்! யாரையும் அடிக்கவும் வேண்டாம் என்ற முடிவுக்கு இந்தியர்கள் வரும் வரை இப்படித்தான் "பல ஆண்டுகள் பின்தங்கிய நிலையிலேயே" இந்தியா இருக்கும்.

//இன்னும் கொஞ்சம் கிடைத்தால் பரவாயில்லை என்று மேலும் மேலும் மோதுகிறார்கள்.சராசரியாக பத்து முதல் பதினைந்து சதவீதம் லாபம் வந்தால் போதும் என திருப்தி அடைவது இல்லை. //

உண்மைதான்.

ஆசை லாபத்தை கொடுக்கிறது. ஆனால் பேராசை நஷ்டத்தைக் கொடுக்கிறது.

ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை சரியாக உணர்ந்து செயல்படுபவர்களே சந்தையில் பெரிய அளவுக்கு வெற்றி பெறுகிறார்கள்.

//இருந்தாலும் எல்லோரும் கொண்டாடுவோம். எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.//

நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் முக்கியமாக உங்கள் வீட்டு புதுவரவுக்கும் தீபாவளி நல வாழ்த்துக்கள்!

Maximum India said...

//வரும் வாரத்தில் தேர்தலை முன்னிட்டு செவ்வாய்கிழமை பங்குசந்தைக்கு விடுமுறை நான்கே வர்த்தக தினங்கள் உள்ளது. //

தகவலுக்கு நன்றி தாமஸ் ரூபன்!

Maximum India said...

//நாம் புஸ்வானம் என நினைத்துக் கொண்டு இருக்கும் இரண்டாவது புஸ்வானம்!! சிறிது நேரம் கழித்து வெடித்தாலும் வெடிக்கலாம்!!. காலம் பதில் சொல்லும். //

உண்மைதான் தாமஸ் ரூபன்! எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

நன்றி.

Maximum India said...

நன்றி நெற்குப்பை தும்பி ஐயா!

//நீண்ட கால முதலீட்டார்களுக்கு கடந்த ஆறு மாத ஏற்றம் மிக வேகமாக வந்திருக்கிறதோ, அது நல்லதா இல்லையா என்ற ஐயம் இருக்கிறது.
பட்டாசுகள், மத்தாப்புகள் இல்லாமல், சிறிது காலம் 15000 - 18000 இருந்து விட்டு மேலே போவது நல்லது எனத் தோன்றுகிறது. //

நிச்சயமாக நல்லது இல்லை. இது போன்ற வேகமான சந்தை போக்கு, சிறிய முதலீட்டாளர்களுக்கு எந்த ஒரு வாய்ப்பையும் கொடுப்பதில்லை. வலுவான கட்டமைப்பு கொண்ட, வேகமாக செயல்படும் திறமை கொண்ட மிகப் பெரிய வர்த்தகர்கள் மட்டுமே பெரிய அளவு பலன் பெறுகின்றனர். இனிமேல் கிடைக்கக் கூடிய சிறிய அளவு லாபத்திற்காக சிறிய முதலீட்டாளர்கள் அதிக ரிஸ்க் எடுக்கக் கூடாது என்றே தோன்றுகிறது.

//நான் பெரிய chaartist அல்லன்.//

வரைபடங்கள் வர்த்தகர்களின் மனநிலையை கணிக்க உதவுகின்ற ஒருவித கருவிகள் மட்டுமே. உங்களைப் போன்ற அனுபவஸ்தர்களால் வரைபடங்கள் இல்லாமலேயே சந்தை போக்கை ஓரளவுக்கு சரியாக கணிக்க முடியும்.

நன்றி ஐயா!

ரஹ்மான் said...

//மற்ற முதலீடுகளுக்கும் பங்கு முதலீட்டிற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. அதாவது, முதலீட்டுப் பணம் முழுமையாக கூட மூழ்கிப் போய் விடும் அபாயம் பங்கு முதலீட்டில் உள்ளது. எனவே, ஒரு பங்கு குறைந்த பட்சம் 25-30 சதவீதம் (ஒரு ஆண்டுக்கு) வருவாய் தரும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே முதலீட்டைப் பற்றி யோசிக்க வேண்டும். அதுவும் அந்த நிறுவனம் 'அடிப்படையில் மிகச் சிறப்பானதாக வளரும் நிறுவனமாக' (rising star growth companies) இருந்தால் அல்லது 'ஒரு கடுமையான சூழலில் இருந்து மீண்டு வருவதாக (recovery stocks)' இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.//
சரியாக சொன்னீர்கள்.பொதுவாக தீபாவளியை முன்னிட்டு பங்கு சந்தை மேலேறும்.(குஜராத்தியர்கள் தீபாவளி சமயத்தில்தான் சந்தையில் அதிக முதலீட்டு செய்வார்களாம்,முதலீட்டிற்கு ஏற்ற தருணம் என்று அவர்கள் கருதுகிறார்கள்)
நீங்கள் கூறியதுபோல் இதுவும் புஷ்வானம் ஆகக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றது.

//அப்படியே தீபாவளிக்கும் இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என் தரப்பிலிருந்து.//
உங்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Maximum India said...

தகவலுக்கு நன்றி ரஹ்மான்!

//பொதுவாக தீபாவளியை முன்னிட்டு பங்கு சந்தை மேலேறும்.(குஜராத்தியர்கள் தீபாவளி சமயத்தில்தான் சந்தையில் அதிக முதலீட்டு செய்வார்களாம்,முதலீட்டிற்கு ஏற்ற தருணம் என்று அவர்கள் கருதுகிறார்கள்)//

//நீங்கள் கூறியதுபோல் இதுவும் புஷ்வானம் ஆகக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றது.//

நீங்கள் சொல்வது உண்மையென்றாலும், தீபாவளி (குஜராத்தியர்களுக்கு வருடப் பிறப்பு) அன்று நடக்கும் ஒரு மணி நேர வர்த்தகத்தில் மிக குறைந்த அளவு மட்டுமே அவர்கள் பங்குகளை வாங்குவார்கள். அதன் காரணமாக மட்டுமே பங்கு சந்தை மேலே போவது கடினம். பதிவிலேயே சொன்னபடி, சந்தை ஒரு முக்கிய அரண் நிலைக்கு அருகே இருக்கின்றது. சந்தை சரியாமல் தடுப்பதற்காக சில பெரிய வர்த்தகர்கள் முக்கிய பங்குகளை வாங்கி சென்செக்ஸ், நிபிட்டி குறியீடுகளை கீழே விழாமல் தடுக்க முயற்சி செய்வதுண்டு. இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில், ஆயிரம் புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வளர்ச்சியில் பெரிய பங்குகள் மட்டுமே அதிகம் இடம் பெறக் கூடும். இந்த வளர்ச்சியில் பங்கு பெற்று லாபம் சம்பாதிப்பதைக் காட்டிலும், மாட்டிக் கொள்ளவே அதிக வாய்ப்புள்ளது. எனவேதான் சிறிய வர்த்தகர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்யுமாறு பதிவிட்டிருந்தேன்.

மற்றபடிக்கு, உரிய ஸ்டாப் லாஸ் லிமிட் வைத்து வர்த்தகம் செய்பவர்கள் தொடர்ந்து எப்போதும் போல வர்த்தகம் செய்யலாம்.

உங்களுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நன்றி.

வால்பையன் said...

தீபாவளி புஸ்வானம் முதல் வாரத்திலேயே ஆரம்பிச்சிருச்சா தல!

Maximum India said...

நன்றி வால்பையன்!

சென்ற வாரம் புஸ்வாண வாரமாக இருந்தாலும், இந்த வாரம் ஆயிரம் சர வெடியுடன் ஆரம்பித்துள்ளது. மிச்சமுள்ள மூன்று வர்த்தக தினங்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

நன்றி.

Thomas Ruban said...

//சென்ற வாரம் புஸ்வாண வாரமாக இருந்தாலும், இந்த வாரம் ஆயிரம் சர வெடியுடன் ஆரம்பித்துள்ளது//

தேர்தல் வெடிப் போல் உள்ளது.(நேரம் கிடைத்தால் இதை கொஞ்சம் கேளுங்கள் சார் உலக பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் ஏற்பட்ட தாக்கம் http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/09/090914_aftershock.shtml)
பாதிப்பு இன்னம் சரியாகவில்லை என்பது எண்பது சதவித உண்மை சார்.
நன்றி சார்.

அகில் பூங்குன்றன் said...

தீபாவளி வாழ்த்துகள்...

அகில் பூங்குன்றன் said...

தீபாவளி வாழ்த்துகள்...

Maximum India said...

அன்புள்ள தாமஸ் ரூபன்!

//பாதிப்பு இன்னம் சரியாகவில்லை என்பது எண்பது சதவித உண்மை சார். //

பொருளாதாரத்தில் குறிப்பாக ஏற்றுமதி துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு இன்னமும் சரியாக வில்லை என்பது முழுக்க முழுக்க உண்மைதான். பங்குசந்தைகள் தற்போதைய பொருளாதார நிலையை பிரதிபலிப்பதை விட வருங்காலத்தின் நம்பிக்கைகளையே அதிகமாக பிரதிபலிக்கின்றன. ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லிய படி நம்பிக்கைகள் எந்த அளவுக்கு நிஜமாகும் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

நன்றி!

Maximum India said...

உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அகில் பூங்குன்றன்!

Thomas Ruban said...

உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தார்,ந‌ண்ப‌ர்க‌ள் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள். ஸ்பெசலாக இளம் படைப்பாளி (ஓவியர்)வித்யா அவர்களுக்கு தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்.

Maximum India said...

மிக்க நன்றி தாமஸ் ரூபன்!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கூட மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Blog Widget by LinkWithin