Sunday, October 4, 2009

நேற்றொரு தோற்றம் - இன்றொரு மாற்றம்.


நேற்று நாம் பார்த்த சூரியனும் இன்று பார்க்கும் சூரியனும் ஒன்றேதானா என்ற கேள்விக்கு உங்கள் விடை என்னவாக இருக்கும்? ஒன்றுதான் என்று விடை சொல்லும் அதே உறுதியுடன் ஒன்றில்லை வேறு வேறு என்றும் சொல்ல முடியும். ஒவ்வொரு நிமிடமும் அணு சேர்க்கைகளும் அணு பிளவுகளும் தனது நிலப்பரப்பில் நடத்திக் கொண்டிருக்கும் சூரியன் ஒவ்வொரு நிமிடமும் தனது நிலையில் இருந்து மாறிக் கொண்டேதான் இருக்கின்றது. எனவே நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் என்ற பாடல் வரிகள் சூரியனுக்கும் பொருந்தும். கங்கை நதியோ காவேரியோ, நதிகள் அவைகளேதான் என்றாலும் நேற்றிருந்த நீர் இன்றிருப்பதில்லை. மாற்றம் மட்டுமே நிரந்தரம் என்ற இந்த அறிவியல் சித்தாந்தம் பொருளாதாரத்திற்கும் வெகுவாகவே பொருந்தும். ஒவ்வொரு நாளும் புதிய நிறங்களை வெளிக்காட்டும் உலக பொருளாதார நிலை பற்றி இங்கு பார்ப்போம்.

உலகெங்கும் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட பல அரசாங்கங்கள், சென்ற ஆண்டு துவங்கிய பொருளாதார மந்த நிலையை போக்குவதற்காக ("Trickling Down Economics" எனும் முறையில்) சந்தையில் பெரிய அளவில் பணத்தை இறக்கி விட்டன. பெரிய பணக்காரர்களுக்கு (அல்லது தொழில் நிறுவனங்களுக்கு) அரசாங்கங்கள் ஏராளமான சலுகையை கொடுக்கும் பட்சத்தில், அவர்களை சார்ந்துள்ள எளிய மக்களும் பயன் பெறுவார்கள் என்ற கருத்துள்ளது இந்த முறை. அதாவது, பங்கு சந்தை வர்த்தகர்களுக்கு, முதலீட்டு வங்கிகளில் பணிபுரியும் கனவான்களுக்கு, பெரிய தொழில் அதிபர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்தால் அவர்கள் ஏராளமாக செலவு செய்வார்கள். அப்படி செலவு செய்யும் போது, அவர்களை நம்பியிருக்கும் கார் ஓட்டுனர்கள், வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் இதர சேவைத்துறையினர் (நம்மூர் பிபிஒ உட்பட) என்று பலரும் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்பது இவர்களது நம்பிக்கை.

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற கதையாகி விட்டது இந்த "Trickling Down Economics" முயற்சி. தொழிற்துறை உயரும் என்று நம்பி அரசாங்கங்கள் இரவு பகலாக அச்சடித்து பொருளாதாரத்தில் இறக்கி விட்ட பணம், சந்தைகளுக்குள்ளே பாய்ந்து பரந்து பங்கு சந்தை, பொருட்கள் சந்தைகளை நல்ல உயரத்தில் கொண்டு போய் வைத்துள்ளது. ஆனால், உலக அரசாங்கங்கள் எதிர்பார்த்தபடி பெரிய அளவில் தொழிற் உற்பத்தி அல்லது மக்களின் செலவின அதிகரிப்பு நடைபெற வில்லை. காலங்காலமாக செலவு செய்து மட்டுமே பழக்கப் பட்ட அமெரிக்கர்கள் இப்போது சேமிக்கத் (எதிர்கால அச்சம் காரணமாக இருக்கலாம்) தொடங்கி விட்டனர். வேலை இழப்பும் குறைந்த பாடில்லை. சொல்லப் போனால் சென்ற மாதம் வேலை இழப்பு விகிதம் (Unemployment Rate) அதிகரித்துள்ளது.

சிறிய விலங்கினங்களுக்கு உணவை நேரடியாக கொடுப்பதற்கு பதிலாக யானைக்கு நிறைய உணவை அளித்தால் அது சாப்பிட்டு சிந்தும் உணவை சிறிய விலங்கினங்கள் சாப்பிட்டு பசியாறும் என்று நினைத்தால், யானைகள் தாம் மட்டுமே சாப்பிட்டு விட்டு மிச்சத்தை பதுக்கி வைத்துக் கொள்வது போல ஒரு பொருளாதார நிகழ்வு நடந்தேறி விட்டது.

பொருளாதார மீட்சி திட்டத்தை பொருத்த வரை, இந்திய அரசாங்கத்தை ஒருவகையில் பாராட்டியாக வேண்டும். அமெரிக்கா போல ஒரு சிலருக்கு மட்டும் பணத்தை வாரி வழங்காமல், பலருக்கும் பணத்தை தாரை வார்த்திருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா? கோடிக்கணக்கான மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் லட்சக்கணக்கில் வழங்கப் பட்ட நிலுவை தொகை, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, குறைந்த பட்ச வேலை வாய்ப்பு திட்டம் (NREGP) போன்ற (தேர்தலை மனதில் வைத்து தீட்டப் பட்ட இந்த) திட்டங்கள், எந்த அளவுக்கு சரி என்று சொல்ல முடியாவிட்டாலும், அமெரிக்கா போல பணத்தை குறுகிய வட்டத்தில் மட்டுமே முடக்காமல் பலரிடமும் தஞ்சம் புக வைத்தன. இந்த திட்டங்களால் பலனடைந்த லட்சக்கணக்கான இந்தியர்கள் ஓரளவுக்கு அதிகம் செலவு செய்வதனால் ஏற்பட்டுள்ள இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி ஓரளவுக்கு உறுதியாகவும் நிரந்தரமானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

அதே சமயம் உலக பொருளாதாரம் தத்தளித்து வரும் நிலையில் இந்தியா மட்டும் வெகுகாலத்திற்கு தனித்து வளருவது கடினமான காரியம். இது இந்திய பங்கு சந்தைக்கும் பொருந்தும்.

"யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே" என்ற ஒரு பதிவில் "மணி ஓசைக்கு பின்னர் வருவது யானையாகவும் இருக்கலாம் அல்லது ஐஸ் வண்டியாகவும் கூட இருக்கலாம்" என்று கூறி இருந்தேன். பங்கு சந்தைகள் மணி அடித்த பிறகு வரப் போவது யானைதான் என்று பந்தயம் கட்டின. ஆனால் இதுவரை யானை வந்தபாடில்லை. சென்ற இரு வாரங்களாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பொருளாதார தகவல்கள் (கார் வாங்க காசு கொடுத்தனால் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்ற வாகனத் துறையை தவிர), அந்நாடு உறுதியான பொருளாதார வளர்ச்சியை காண இன்னும் பல காலம் பிடிக்கும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளன.

இனிமேலும் அமெரிக்க அரசாங்கம் பணத்தை வாரி இறைப்பது பொருளாதார ரீதியாக கடினமான காரியம். அவ்வாறு செய்தால் பணவீக்கம் பெரிய அளவில் உயரும். அரசாங்கத்தின் ஸ்திர தன்மையும் பாதிக்கப் படும். அரசாங்கத்தால் மேலும் பணத்தை இறக்க முடியாது என்ற பயம் பொருளாதாரத்தை மேலும் பின் தங்க செய்து விடக் கூடும்.

(உலக பொருளாதாரத்தின் என்ஜினாக இன்னமும் கூட அமெரிக்காவே இருந்து வருகிறது என்பதை மறுப்பது கடினம். இந்த பதவிக்காக சீனா முட்டி மோதினாலும், அமெரிக்காவிற்கு சேவை செய்துதான் அது பிழைத்து வருகிறது என்ற உண்மையை அந்த நாடே விருப்பபட்டாலும், மறைக்கவோ மறுக்கவோ முடியாது.)

இந்த சூழ்நிலையானது உலக சந்தைகளை சென்ற இருவாரங்களாக பெருமளவில் கவலை கொள்ள செய்திருக்கிறது. உலக சந்தைகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு வீழ்ச்சியையும் கண்டுள்ளன. ஆனால் இந்திய சந்தையானது இன்னமும் கூட வலுவாகவே தனித்து நடை போட்டு கொண்டிருக்கிறது. அதே சமயம், ஏற்கனவே சொன்னபடி, உலக போக்கில் இருந்து வெகுகாலத்திற்கு விடுபட்டுக் கொள்வது மிகவும் கடினமான காரியம். சொல்லப் போனால் ஒவ்வொரு முறையும் துவக்கத்தில் தனி வழியில் செல்லும் நமது சந்தை, காலப் போக்கில் மற்ற உலக சந்தைகளை விட அதிக ரியாக்சன் காட்டியுள்ளது என்பது சரித்திர உண்மை.

செப்டம்பர் வரை முடிவடைந்த காலாண்டு காலத்திற்கான இந்திய நிறுவனங்களின் நிதி அறிக்கைகளுக்காக நமது சந்தை கொஞ்ச காலத்திற்கு பொறுத்திருக்கும் என்றாலும், உலக சந்தைகள் வரும் காலத்திலும் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தால், நமது சந்தையும் தன்னை உலக போக்குடன் இணைத்துக் கொள்ளும் என்று நம்பலாம்.

ஏற்கனவே முதல் பத்தியில் சொன்ன படி மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்ற தத்துவத்தை மனதில் நிறுத்தி கொண்டு, தொடர்ந்து நிகழும் பொருளாதார மாற்றங்களில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு சந்தைகளில் வர்த்தகம் செய்வது நல்லது.

"Bulls have no resistance. Bears have no support" என்ற பங்கு சந்தை தங்க விதியையும் மனதில் வைத்துக் கொள்ளவும். உலக அளவில் பெரியதொரு பொருளாதார மாறுதல் ஏற்பட்டால் எந்த தொழிற்நுட்ப வரைபட விதியும் (Technical charts ) நம்மை காப்பாற்றாது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

15 comments:

கார்த்திக் said...

// கோடிக்கணக்கான மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் லட்சக்கணக்கில் வழங்கப் பட்ட நிலுவை தொகை, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, குறைந்த பட்ச வேலை வாய்ப்பு திட்டம் //

ஆஹா இத இப்படியும் சொல்லலாம்ல :-))

அருமையான பதிவுங்க.

Thomas Ruban said...

//நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற கதையாகி விட்டது இந்த "Trickling Down Economics" முயற்சி. தொழிற்துறை உயரும் என்று நம்பி அரசாங்கங்கள் இரவு பகலாக அச்சடித்து பொருளாதாரத்தில் இறக்கி விட்ட பணம், சந்தைகளுக்குள்ளே பாய்ந்து பரந்து பங்கு சந்தை, பொருட்கள் சந்தைகளை நல்ல உயரத்தில் கொண்டு போய் வைத்துள்ளது. ஆனால், உலக அரசாங்கங்கள் எதிர்பார்த்தபடி பெரிய அளவில் தொழிற் உற்பத்தி அல்லது மக்களின் செலவின அதிகரிப்பு நடைபெற வில்லை.காலங்காலமாக செலவு செய்து மட்டுமே பழக்கப் பட்ட அமெரிக்கர்கள் இப்போது சேமிக்கத் (எதிர்கால அச்சம் காரணமாக இருக்கலாம்) தொடங்கி விட்டனர். வேலை இழப்பும் குறைந்த பாடில்லை. சொல்லப் போனால் சென்ற மாதம் வேலை இழப்பு விகிதம் (Unemployment Rate) அதிகரித்துள்ளது.//

மிகச்சரியாக சொன்னீர்கள். ஓபமாவுக்கு அதனால்தான் முதலில் இருந்த ஆதரவு குறைந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது (ஓபமா கொல்லப்படவேண்டியவரா?! என பேஸ்ப்புக் ல் வாக்கெடுப்பு நடத்தும் அளவுக்கு )

//மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்ற தத்துவத்தை மனதில் நிறுத்தி கொண்டு, தொடர்ந்து நிகழும் பொருளாதார மாற்றங்களில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு சந்தைகளில் வர்த்தகம் செய்வது நல்லது.//

இப்போது உள்ள சந்தைகளில் (கொஞ்ச நாட்களுக்கு )வர்த்தகம் செய்வதை விட வேடிக்கை பார்ப்பதே நல்லது என்பது என்னுடைய கருத்து.

பதிவுக்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி கார்த்திக்!

//ஆஹா இத இப்படியும் சொல்லலாம்ல :-))//

உண்மைதான் கார்த்திக். சில நூறு தொழில் அதிபர்களுக்கு பல ஆயிரம் கோடி சலுகைகள் (பொதுநலனுக்காக அல்ல. தனிப்பட்ட லாபம் அடைவதற்காக) அரசு வழங்கும் போது கண்டு கொள்ளாத ஊடகங்கள், மாதம் சில ஆயிரம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், மண்ணில் போட்ட முதலை திருப்பி எடுக்க முடியாத விவசாயிகள், அதிக விலை கொடுத்து தனியார் மளிகை கடையில் அரிசி, பருப்பு வாங்க முடியாத ஏழை எளிய மக்கள் போன்றவர்களுக்கு அரசு ஏதேனும் எப்போதாவது செய்தாலும் கூட கூப்பாடு போடுகின்றன. கேட்டால் விரயம் மானியம் என்பார்கள். எல்லாம் ஏமாற்று வேலை.

//அருமையான பதிவுங்க.//

நன்றி கார்த்திக்!

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//ஓபமாவுக்கு அதனால்தான் முதலில் இருந்த ஆதரவு குறைந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது (ஓபமா கொல்லப்படவேண்டியவரா?! என பேஸ்ப்புக் ல் வாக்கெடுப்பு நடத்தும் அளவுக்கு ) //

உண்மைதான். மாற்றம் தேவை என்று சொல்லி பதவிக்கு வந்தவர் செய்த முதல் தவறு. பங்கு சந்தையின் மீது கரிசனம் கொண்ட புஷ் நிர்வாகத்தின் முன்னாள் அதிகாரிகளை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டதுதான். இந்தியாவில் நடப்பது போல, தப்பி தவறி அரசியல்வாதிகள் நல்லது செய்யலாம் என்று நினைத்தாலும் கூட அதிகாரிகள் விடாத நிலை அமெரிக்காவிலும் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ள ஒபாமாவால் பங்குசந்தைகளை தவிர வேறெங்கும் உண்மையான பொருளாதார மாற்றத்தை கொண்டு வர முடியாது என்றே தோன்றுகிறது. அமெரிக்காவின் மிக மோசமான ஜனாதிபதி இவராக இருப்பார் என்று சில பொருளாதார மேதைகள் கணித்தது உண்மையாகிவிடக் கூடாது என்பதே நமது கவலை.

//இப்போது உள்ள சந்தைகளில் (கொஞ்ச நாட்களுக்கு )வர்த்தகம் செய்வதை விட வேடிக்கை பார்ப்பதே நல்லது என்பது என்னுடைய கருத்து. //

உண்மைதான் தாமஸ் ரூபன்!

பாய்வதைப் போல பதுங்குவதும் ஒரு சிறப்பான யுத்த தந்திரம்தான். ஏற்கனவே சொன்னது போல, லாபம் ஈட்டுவதைப் போலவே நஷ்டம் அடையாமல் இருப்பதும் அவசியமான ஒன்று.

நன்றி.

Itsdifferent said...

Lets ask everyone to spend 20% of their expected Diwali spend to those who are in real need.
Lets light up someone's life. Your maid, laundry man, plumber, watchman, driver, a vendor you see on your travel, a blind man entertaining your travel anyone who think they deserve it.

Maximum India said...

//Lets ask everyone to spend 20% of their expected Diwali spend to those who are in real need.
Lets light up someone's life. Your maid, laundry man, plumber, watchman, driver, a vendor you see on your travel, a blind man entertaining your travel anyone who think they deserve it.
//

Definitely!

we will do it.

Thank you

வால்பையன் said...

விளக்கிய விதம் அருமை!

Naresh Kumar said...

அருமையான பதிவு மேக்ஸிமம் இந்தியா!!!

இப்போதைக்கு ஐஸ் வண்டி மாதிரிதான் இருக்கு...வாழ்த்துக்கள்

kggouthaman said...

max I one doubt.
சில வாரங்களுக்கு முன் வரை Nasdaq, Dow Jones எவ்வளவு சதவிகிதம் ஏறுகிறதோ அல்லது இறங்குகிறதோ - அதே சதவிகிதம் ஏற்றம் / இறக்கம் - மறுநாள் நம் BSE & NSE சந்தித்து வந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சமீபக் காலங்களில் அந்த வகை சதவிகித ஏற்றம் / இறக்கம் இந்தியப் பங்குச்சந்தையில் reflect ஆவது இல்லையே - சில சமயங்களில் - எதிர் திசை மாற்றங்கள் கூடக் காணப்படுகிறதே - இது ஏன்?

Maximum India said...

நன்றி வால்பையன்!

Maximum India said...

நன்றி நரேஷ் குமார்!

//இப்போதைக்கு ஐஸ் வண்டி மாதிரிதான் இருக்கு...வாழ்த்துக்கள்//

பலருக்கும் இப்போது அப்படித்தான் தோன்றுகிறது.

நன்றி.

Maximum India said...

அன்புள்ள கௌதமன் சார்!

//max I one doubt.
சில வாரங்களுக்கு முன் வரை Nasdaq, Dow Jones எவ்வளவு சதவிகிதம் ஏறுகிறதோ அல்லது இறங்குகிறதோ - அதே சதவிகிதம் ஏற்றம் / இறக்கம் - மறுநாள் நம் BSE & NSE சந்தித்து வந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சமீபக் காலங்களில் அந்த வகை சதவிகித ஏற்றம் / இறக்கம் இந்தியப் பங்குச்சந்தையில் reflect ஆவது இல்லையே - சில சமயங்களில் - எதிர் திசை மாற்றங்கள் கூடக் காணப்படுகிறதே - இது ஏன்?//

இதற்கு சற்று விரிவாகவே பதில் சொல்ல வேண்டியிருக்கும். இருந்தாலும் என்னால் முடிந்த வரை சுருக்கமாக சொல்கிறேன்.

உலகமயமாகி விட்ட இன்றைய சூழ்நிலையில் மற்ற நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலிக்கின்றன. உலகப் பொருளாதாரம் இன்று பெருமளவுக்கு அமெரிக்காவை சார்ந்திருப்பதால் அவ்வாறு இருக்கலாம். ஆனால் ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இந்த பாதிப்பு இல்லை. தாக்க வீதம் (Correlation) 0.90 ஆக மட்டுமே இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஒவ்வொருநாளும் (குறிப்பாக உள்ளூர் விஷயங்கள் பெரிதாக தெரியும் போது) இந்த Correlation இருக்காது. வருங்காலத்தில் அமெரிக்க கரன்சி மேலும் வலுவிழக்கும் பட்சத்தில் அமெரிக்காவின் பாதிப்பு உலகநாடுகளில் பெருமளவுக்கு குறையவும் வாய்ப்புள்ளது.

ஆந்திராவை தாக்கும் புயல் தமிழகத்தில் மழை பொழிய செய்யலாம். வெறும் மேகமூட்டத்துடன் மட்டுமே கூட விட்டும் விடலாம். அது போலவே அமெரிக்காவை பாதிக்கும் ஒவ்வொரு விஷயமும் முழுவீச்சில் இந்தியாவையும் பாதிக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும் dow jones மற்றும் nasdaq ஆகிய குறியீடுகள் சில குறிப்பிட்ட துறைகளை சார்ந்த நிறுவனங்களை மட்டுமே குறிப்பவை ஆகும். அமெரிக்க சந்தைகளின் முழுமையான நிலையை அறிந்து கொள்ள S&P 500 குறியீட்டை தொடருங்கள்.

நன்றி.

அகில் பூங்குன்றன் said...

ஒரு சந்தேகம், ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதன் காரணம், விழாக்காலம் என்பதாலா(Spending is increasing).. இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளாதா.. இரு மாதங்களில் 50 லிருந்து 46 க்கு ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக உயர்ந்துள்ளது.... விளக்கமுடியுமா.

Maximum India said...

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் அகில்!

//ஒரு சந்தேகம், ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதன் காரணம், விழாக்காலம் என்பதாலா(Spending is increasing).. இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளாதா.. இரு மாதங்களில் 50 லிருந்து 46 க்கு ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக உயர்ந்துள்ளது.... விளக்கமுடியுமா.//

ரூபாயின் மதிப்பு அதிகரித்திருக்கிறது என்பதை விட டாலரின் மதிப்பு குறைந்திருக்கிறது என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். டாலர் அளவுக்கதிமாக அச்சடிக்கப் படுவதால், அதனுடைய மதிப்பு உலக சந்தைகளில் மற்ற கரன்சிகளுக்கு எதிராக கூட வெகுவாக குறைந்து வருகிறது. இந்திய அரசும் கூட புதிய ரூபாய்களை வெளியிட்டாலும், இரவு பகலாக பல லட்சம் கோடி டாலர் நோட்டுக்கள் வரை அச்சடிக்கும் அமெரிக்காவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடிய வில்லை. எனவேதான் டாலர் மதிப்பு ரூபாய்க்கு எதிராக குறைந்து வருகிறது. இதுவே முக்கிய காரணமாக இருந்தாலும், வேறு சில காரணங்களும் உண்டு. அவையாவன:

தொடரும் இந்திய பொருளாதார வளர்ச்சி, பெருகிவரும் அந்நிய முதலீடுகள், உலக அளவில் இந்திய ரூபாய்க்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம் போன்றவை.

நன்றி!

அகில் பூங்குன்றன் said...

விளக்கத்திற்கு நன்றி.

Blog Widget by LinkWithin