
80-20 என்ற தங்க விதியை (The Pareto principle , also known as the 80-20 rule , the law of the vital few, and the principle of factor sparsity) பற்றி பலரும் கேள்விபட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். கேள்விபடாதவர்களுக்காக இங்கே ஒரு சிறிய விளக்கம்.
எண்பது சதவீத விளைவுகள் இருபது சதவீத காரணங்களாலேயே வருகின்றது என்ற இந்த வணிக தத்துவம் பரேடோ என்ற பொருளாதார நிபுணர், 1906 இல் இத்தாலியின் மொத்த நிலப் பரப்பில் எண்பது சதவீத நிலம் இருபது சதவீதத்தினரிடம்தான் உள்ளது என்று கணித்ததின் அடிப்படையில் உருவானது. பரேடோ விதி என்று அழைக்கப் படும் இந்த விதி பல கணித முறைகளிலும் வணிக தத்துவங்களிலும் உதவுகிறது.
அதாவது ஒரு நிறுவனத்தின் எண்பது சதவீத விற்பனை இருபது சதவீத வாடிக்கையாளர்களிடம் இருந்துதான் வருகின்றது. ஒருவரது முதலீட்டின் எண்பது சதவீத வருமானம் அவரது இருபது சதவீத பங்குகளில் இருந்துதான் வருகின்றது.
சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூட இருபது சதவீத முக்கிய பிரச்சினைகள்தான் ஒரு கணினியின் செயல் இழப்புக்கான எண்பது சதவீத காரணங்களாக இருக்கின்றன என்று கண்டறிந்துள்ளது.
80-20 என்ற விகிதம் இன்னும் கூட பல இடங்களில் சிறப்பாக பொருந்தும்.
உலகில் எண்பது சதவீத சொத்துக்கள் இருபது சதவீதத்தினரிடம்தான் உள்ளன. வேறு வகையாக சொல்ல வேண்டுமென்றால் எண்பது சதவீதம் பேர் உழைப்பதை இருபது சதவீதம் பேர் சாப்பிடுகின்றனர். இன்னும் கூட சொல்லப் போனால், செல்வந்தர்களிடையே கூட, எண்பது சதவீத சொத்துக்கள் இருபது சதவீதத்தினர் மட்டும்தான் உள்ளது.
எண்பது இருபது என்பது ஒரு இளகிய தத்துவம். இந்த விகிதம் லேசாக மாறி கூட இருக்கலாம். சமீபத்திய பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் ஒரு சதவீதத்தினரிடம் மட்டும்தான் சேர்ந்துள்ளன என்று சொல்பவர்களும் உண்டு.
எல்லாம் சரி! தீபாவளி கோரிக்கைக்கும் இந்த தங்க விதிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?
இணையத்தில் உள்ள நம்மில் பலரும் வசதியுள்ள முதல் இருபது சதவீதத்திற்குள்தான் இருப்போம் என்று நம்புகிறேன். நம்மை இந்த நிலையில் வைத்திருப்பது, நமக்கு பல வகையிலும் சேவை செய்யும், மீதமுள்ள எண்பது சதவீதத்தினர்தான். அவர்களுக்கு ஏதாவது பதிலுக்கு செய்வது நமது கடமையாகும்.
நம்மால் என்ன செய்ய முடியும் என்று கேட்கிறீர்களா?
நமது தீபாவளி செலவினத்திற்கான மொத்த பட்ஜெட்டில் இருபது சதவீதத்தை மட்டும் தனியாக ஒதுக்கி விடுவோம். அந்த பணத்தில் நம்மை விட எளியவர்களாக இருப்பவர்களுக்கு ஏதாவது செய்வோம். அவர்கள் நம் வீட்டு வேலைக்காரர்களாக இருக்கலாம். வழியில் சந்திப்பவராக இருக்கலாம். ஏன், அவர்கள் முகம் தெரியாதவர்களாக கூட இருக்கலாம். எளியவர்கள் யாருக்காகவாவது அந்த பணத்தை செலவு செய்வோம்.
80-20 தங்க விதி இங்கேயும் கூட அழகாக பொருந்தும். அதாவது உங்கள் மொத்த பட்ஜெட்டில் இருபது சதவீதத்தை மட்டுமே, மற்றவர்களுக்கு உதவுவதற்காக நீங்கள் ஒதுக்கினாலும், இந்த பணத்தின் மூலமாக உங்களுக்கு கிடைக்கப் போவது எண்பது சதவீத மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
நன்றி!
பின்குறிப்பு: இந்த கோரிக்கை ஏதேனும் பெரிய மனுஷத்தனமாக இருந்தால் மன்னிக்கவும். மனதில் தோன்றியதை இணைய நண்பர்களிடம் முன்வைப்போம் என்ற ஆர்வத்தில் மட்டுமே இந்த பதிவு.
Comments
தங்கம் டாலரில் லைஃப் டைம் ஹைய்!
தொடரட்டும் உங்கள் பணி.
நன்றி சார்.
நல்ல கருத்து.கண்டிப்பாக செய்திடுவோம்...
//உங்கள் மொத்த பட்ஜெட்டில் இருபது சதவீதத்தை மட்டுமே, மற்றவர்களுக்கு உதவுவதற்காக நீங்கள் ஒதுக்கினாலும், இந்த பணத்தின் மூலமாக உங்களுக்கு கிடைக்கப் போவது எண்பது சதவீத மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.//
நூறு சதவீத உண்மை சார்.
பதிவுக்கு நன்றி சார்.
//தங்க விதி, தங்கத்துக்கும் உதவுமா தல!?//
தங்கத்திற்கு இல்லாத தங்க விதியா? உலகின் எண்பது சதவீத தங்கம் இருபது சதவீத மக்களிடம்தான் இருக்கும். இந்த தங்க விதி எல்லா சொத்துக்களுக்கும் பொருந்தும்.
//தங்கம் டாலரில் லைஃப் டைம் ஹைய்!//
பார்த்தேன். டாலர் மதிப்பில் தங்கம் உயரும் அதே சமயத்தில், டாலர் மற்ற கரன்சிகளுக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருவதால், தங்கத்தின் டாலர் விலை உயர்வு மற்ற நாடுகளில் அதிகம் எதிரொலிக்க வில்லை.
நன்றி.
//Thank you for the wonderful post. I could not have said it better. Hope the messages reaches few folks.//
உங்களுடைய பின்னூட்டம்தான் இந்த பதிவுக்கான வித்து. அதற்கு உங்களுக்குத்தான் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும். உங்கள் பின்னூட்டம் என்னில் ஏற்படுத்திய தாக்கம் இந்த பதிவை படித்த ஒரு சிலருக்கு ஏற்பட்டால் கூட நல்லதுதானே என்ற விருப்பத்தில்தான் இந்த பதிவு வெளிவந்தது. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உங்களது உண்மையான விருப்பம் மொத்த பணக்காரர்களில் வெறும் இருபது சதவீதத்தினருக்கு மட்டும் இருந்தால் கூட உலகின் இன்றைய பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
நன்றி!
//ஆமாம் பதிவுலகின் என்பது சதவீதப் பதிவுகள் இருபது சதவீதப் பதிவர்களால்தான் இடப் படுகிறது. என்பது சதவீத பின்னூட்டங்கள் இருபது சதவீதப் பதிவுகளுக்கே கிடைக்கின்றன//
உண்மைதான்!
அந்த பதிவுகள் & பின்னூட்டங்களில் கூட எண்பது சதவீதம் மொக்கைகளாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
நன்றி.
//Done. Thanks for idea //
வருகிற தீபாவளி பலருடைய வாழ்விலும் குறிப்பாக எளியவர்கள் வாழ்வில் விளக்கேற்றும் விழாவாக இருக்கட்டும். அதற்கு உதவி செய்யும் வலிமையினையும் வாய்ப்பினையும் உரியவர்கள் பெறட்டும்.
நன்றி.
//புதிய முயற்சி மனிதாபிமானத்தை வளர்த்துக்கொள்ள சரியான சந்தர்பம்,//
உண்மையில், உதவி செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதற்கு நாம்தான் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நன்றி!
//நல்ல கோரிக்கை .....செய்திடுவோம்...//
வருகிற தீபாவளி பலருடைய வாழ்விலும் குறிப்பாக எளியவர்கள் வாழ்வில் விளக்கேற்றும் விழாவாக இருக்கட்டும். அதற்கு உதவி செய்யும் வலிமையினையும் வாய்ப்பினையும் உரியவர்கள் பெறட்டும்.
நன்றி.
உதவும் கரங்கள் அதிகமானால் உதவி கேட்கும் கரங்கள் குறைந்து விடும்.
நன்றி.
நாட்ல உள்ள 80% படிச்சவங்க 20% படிக்காதவங்ககிட்ட தான் வேல பாக்குராங்கன்னு சொல்லுராங்களே அது கூட இந்த கணக்குதானோ
Done na