இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சந்தைக்கு பல தருணங்களில் மீட்சியை அளித்து வந்த "முக்கிய தடுப்பரண்" (Important Trendline) சென்ற வாரத்தில் முழுமையாக உடைக்கப் பட்டு விட்டது. இந்த தடுமாற்றத்திற்கு என்ன காரணங்கள் என்று முதலில் பார்ப்போம்.
உலக சந்தையில் மளமளவென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை இந்திய ரூபாயின் மதிப்பை குறைத்து விடக் கூடிய நிலை உருவாகும் பட்சத்தில் அந்நிய முதலீடு குறையலாம் என்ற ஒரு அச்சம் சந்தையில் உருவானது. இந்த அச்சத்தை உறுதிப் படுத்தும் வகையில், ருபாய் வீழ்ச்சியின் தொடர்ச்சியாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு பிறகு இந்திய சந்தையில் பங்குகளை விற்றன.
வங்கிகள் கடன் வழங்கும் அடிப்படை வட்டி வீதத்தில் சில மாற்றங்களை மத்திய வங்கி கொண்டு வர விருப்பம் தெரிவித்தது, வங்கிகளின் சுதந்திரத்தை ஒருவகையில் பாதிக்கும் என்ற அச்சத்தை சந்தையில் உருவாக்கியது. இந்த அச்சம் தொடர்ந்து பல நாட்கள் வரை நட்சத்திரங்களாக ஜொலித்த வங்கிப் பங்குகளை சற்று நிலை தடுமாற செய்தது.
கிருஷ்ணா கோதாவரி படுகையின் K6 பகுதி மூடப் பட வேண்டியிருக்கும் என்ற தொனியில் வெளிவந்த செய்திகள், பங்கு குறியீடுகளின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் நிறுவனத்தை தடுமாற செய்தது. மேலும், தொடர்ந்து உயரும் கச்சா எண்ணெய் விலை இந்திய எண்ணெய் விற்பனை பங்குகளை வீழச் செய்தது.
மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான லார்சென் & டூப்ரோவின் காலாண்டு நிதி அறிக்கை சந்தைகளுக்கு திருப்தி அளிக்க வில்லை. சந்தைக் குறியீடுகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் இந்த நிறுவன பங்கின் வீழ்ச்சி மொத்த சந்தையையும் சற்று தடுமாற செய்தது.
அதே சமயம், நுகர்வோர் நிறுவனங்கள் பாதுகாப்பானதாகவும், ஐடிசி போன்ற நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் சிறப்பாக இருந்ததாலும், இந்த துறை பங்குகள் ஓரளவுக்கு முன்னிலை பெற்றன. டிசிஎஸ் நிறுவனத்தின் சிறப்பான காலாண்டு அறிக்கை மற்றும் ருபாய் வீழ்ச்சி மென்பொருட் துறை நிறுவனங்களின் பங்குகளை உயரச் செய்தது.
ஆக மொத்தத்தில் அங்கங்கு சில சிறப்பான பங்கு வளர்ச்சிகள் இருந்தாலும், சந்தையில் வீழ்ச்சியே பெரிதாக காணப் பட்டது.
ஏற்கனவே சொன்னபடி முக்கிய அரண் நிலைக்கு கீழே முக்கிய குறியீடுகள் சரிந்துள்ள நிலையில், பல வர்த்தகர்களின் எதிர்பார்ப்பு சந்தை இன்னும் கூட நிறைய தடுமாற்றங்களை சந்திக்கும் என்றே உள்ளது.
மேலும் வரும் செவ்வாய் கிழமை மத்திய வங்கி அறிவிக்கவுள்ள காலாண்டு நிதிக் கொள்கை சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வட்டி வீத உயர்வுகள் ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப் பட்டாலும், பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பற்றிய மத்திய வங்கியின் கருத்துக்கள் சந்தையில் பெருமளவுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
வரும் வாரத்தில் நிகழக் கூடிய முன்பேர வர்த்தகத்தின் மாதாந்திர நிறைவும் (Monthly F&O Settlement) கூட சந்தையில் பெரிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
உலக வர்த்தக போக்கு முக்கியமாக கச்சா எண்ணெய் விலை நிலவரம், ருபாய் வர்த்தகம் மற்றும் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பொறுத்தே சந்தையின் போக்கு வரும் வாரம் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
நிபிடியை பொறுத்த வரை 4850 -4900 & 4650 -4700 நிலைகள் நல்ல அரண்களாக இருக்கும். 5100-5200 அளவு வலுவான எதிர்ப்பு நிலையாக இருக்கும்.
கடந்த ஆறு மாதங்களாக பங்குகளை வாங்கி வைத்திருக்கும் நண்பர்கள், தங்கள் மொத்த வர்த்தக நிலையை சற்றுக் குறைத்துக் கொள்ளலாம். இந்த பதிவுவலையில் பரிந்துரைக்கப் பட்ட யெஸ் பேங்க் மற்றும் மைத்தாஸ் நிறுவனங்களின் பங்குகள், மிகக் குறைந்த காலத்திலேயே, மிகச் சிறப்பான வளர்ச்சியை கண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். இந்த பங்குகள் இன்னும் கூட மேலே செல்ல வாய்ப்புக்கள் உள்ளன என்றாலும் கூட, மொத்த முதலீட்டை கொஞ்சம் குறைத்துக் கொள்வது (Partial profit booking is desirable) நல்லது என்று நினைக்கிறேன்.
வரும் வாரம் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
நன்றி.
Comments
//இந்த பதிவுவலையில் பரிந்துரைக்கப் பட்ட யெஸ் பேங்க் மற்றும் மைத்தாஸ் நிறுவனங்களின் பங்குகள், மிகக் குறைந்த காலத்திலேயே, மிகச் சிறப்பான வளர்ச்சியை கண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். இந்த பங்குகள் இன்னும் கூட மேலே செல்ல வாய்ப்புக்கள் உள்ளன என்றாலும் கூட, மொத்த முதலீட்டை கொஞ்சம் குறைத்துக் கொள்வது (Partial profit booking is desirable) நல்லது என்று நினைக்கிறேன்.//
மைத்தாஸ் நிறுவன பங்குகள் கிட்டதட்ட 60சதவீதமும், யெஸ் பேங்க் பங்குகள் கிட்டதட்ட 30சதவீதமும் லாபம் தந்துயுள்ளது. சரியான நேரத்தில் பரிதுரைத்த உங்களுக்கு நன்றிகள் சார். இந்த பங்குகளில் 50சதவீத பங்குகளை விற்று லாபம் பார்கலமா சார்?
சந்தையை பற்றிய பகிர்வுக்கு நன்றிகள் சார்.
//மைத்தாஸ் நிறுவன பங்குகள் கிட்டதட்ட 60சதவீதமும், யெஸ் பேங்க் பங்குகள் கிட்டதட்ட 30சதவீதமும் லாபம் தந்துயுள்ளது. சரியான நேரத்தில் பரிதுரைத்த உங்களுக்கு நன்றிகள் சார். இந்த பங்குகளில் ௫௦ சதவீத பங்குகளை விற்று லாபம் பார்கலமா சார்///
நிச்சயமாக! அவ்வப்போது லாபம் பார்த்துக் கொள்வது நல்லதுதான்.
தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். கணினியில் சில தொழிற்நுட்ப கோளாறுகள் இருந்ததால், இரண்டு நாட்களாக இணைய தொடர்பு இல்லாமல் போய் விட்டது.
நன்றி.
//கச்சா எண்ணெய் வாங்கலாமா தல!?//
தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். ஏற்கனவே சொன்னபடி, சில தொழிற்நுட்ப காரணங்கள் தடங்களை ஏற்படுத்தி விட்டன.
கச்சா எண்ணெயை பொறுத்த வரை, $78 எதிர்ப்பு நிலையை முறியடித்துள்ளது கவனிக்கப் பட வேண்டியது. பங்கு சந்தைகள் சரியாக செயல்படாத நிலையில், வர்த்தகர்களின் கவனம் கச்சா எண்ணெயின் மீது திரும்பி உள்ளது என்று நினைக்கிறேன். அதே சமயம், பொருளாதார வளர்ச்சியில் காணும் பின்னடைவு, கச்சா எண்ணெயின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கலாம்.
இருந்தாலும் தொழிற் நுட்ப ரீதியாக, கச்சா எண்ணெய், $78 க்கு கீழே செல்லா விட்டால் நூறு டாலர் வரை உயர வாய்ப்புள்ளது.
நன்றி.
இது மேலும் தொடர என் அவா!
One share has been split into 5 shares. Accordingly the price has come down. But the investor has nothing to loss because of split.
Thank you
இது மேலும் தொடர என் அவா//
சிறப்பாக ஊக்குவித்து வரும் உங்களுக்கும் எனது நன்றி ரஹ்மான்!