Friday, February 26, 2010

மதமும் மனிதமும் - வாலுக்கு ஒரு கோரிக்கை!


அன்புள்ள வால்!

மதம் முன்னர் வந்ததா அல்லது தீவிரவாதம் முன்னர் வந்ததா என்ற கேள்வி எழுந்தால், தீவிரவாதம் என்பதுதான் உண்மையாக இருக்க முடியும். ஏனென்றால் மனிதர்கள் இயல்பிலேயே வன்முறையாளர்கள்தான். மற்ற விலங்குகளை வேட்டையாடியே தனது வாழ்வைத் தொடங்கியவன்தான் ஆதி மனிதன்.

சற்று யோசிக்கத் தொடங்கியவுடன், மற்றவர்களை தனது ஆளுமைக்கு உட்படுத்த விளைந்த மனிதனின் ராஜதந்திரங்களில் ஒன்றுதான் மதம். எனவே மதத்திற்கு "ஆளுமை விரும்பி" மனிதனே வேராக இருக்கும் போது, மதத்தினை மட்டும் கடிந்து கொண்டு பிரயோஜனம் இல்லை என்றே நினைக்கிறேன். மதம் இல்லை என்று சொல்லிக் கொண்டு பதவிக்கு வந்தவர்களும் கூட மனிதர்கள் மீது வன்முறை மற்றும் அடக்கு முறையை பிரயோகித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். எனவே மதமே உலகத்தில் இல்லாமல் போய்விடினும் வன்முறைகள், தீவிரவாதங்கள் அழிந்து போய் விடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. சட்டங்கள், சமுதாய அமைப்புக்கள், ஜாதிகள், ஒழுக்க முறைகள் (morals) அனைத்துமே ஒருவகையில் தனிப்பட்டவரின் அல்லது குழுக்களின் ஆளுமைக்கான வழிமுறைகள்தான்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அந்நிய நாட்டுடனான போரில் கொலை செய்பவனை வீரன் என்று கொண்டாடும் ஒரு சமூகம், உள்ளூரில் கொலை செய்தவனை கொலையாளி என்று சிறையில் போடுகின்றது. சமூகத்திற்கு கொலை முக்கியமல்ல, கொலை அதற்கு விருப்பமானதா அல்லது இல்லை என்பது மட்டும்தான். (நன்றி ஓஷோ).

ஒருவரை ஒருவர் ஆளுமைப் படுத்தாத சமதர்ம உலகம் வேண்டுவது உங்களின் (வாலின்) ஆசையாக இருந்தாலும், மதத்தினை நீக்குவதால் மட்டுமே வன்முறை பிரச்சினைகள் தீர்ந்து விடாது. சகோதரத்துவத்தை உலகில் வளர்ப்பதுதான் வன்முறைகளை ஒழிப்பதற்கு சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

எனவே மதங்களை பற்றி பேசுவதை குறைத்துக் கொண்டு, மனிதத்தைப் போற்றுவது எப்படி என்று அதிகம் யோசிப்போம்.

"கெட்டதை எதிர்ப்பதை விட நல்லதை ஆதரிப்பதுதான் அதிக பலனைத் தரும்" என்று சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தேன். அதில் உண்மை இருக்கின்றது என்பது போல எனக்குத் தோன்றுகிறது.

உங்களுக்கு?

நன்றி!

25 comments:

வால்பையன் said...

மாற்றி கொண்டிருக்கிறேன் தல!

வெறுமனே கடவுள் மறுப்பு, மத மறுப்பு என்று கூவி கொண்டிருப்பதை விட, அதை ஏன் கடவுள் மறுப்பாளர்கள் செய்கிறார்கள், ஏன் மனித நேயம் கொள்ளசொல்கிறார்கள் என இனி தொடர்கிறேன்!

Maximum India said...

நன்றி வால் மன்னிக்கவும் நன்றி தல !

உங்களின் பதிவுக்காக காத்துக் கொண்டிருப்பேன்.

நன்றி!

தமிழ் உதயம் said...

மனித கண்டுபிடிப்புகளிலேயே, அணுகுண்டை விட மோசமானது... மதம். மதத்தின் முன்னால், அதை கண்டு பிடித்த மனிதன் தோற்று கொண்டிருப்பது தான் கொடுமை.

கபீஷ் said...

//"கெட்டதை எதிர்ப்பதை விட நல்லதை ஆதரிப்பதுதான் அதிக பலனைத் தரும்" என்று சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தேன். அதில் உண்மை இருக்கின்றது
என்பது போல எனக்குத் தோன்றுகிறது//

எனக்கும் :-)

Saravanakumar said...

<<உங்களுக்கு?
எனக்கும் தான் :) !

Maximum India said...

நன்றி தமிழ் உதயம்!

//மனித கண்டுபிடிப்புகளிலேயே, அணுகுண்டை விட மோசமானது... மதம். மதத்தின் முன்னால், அதை கண்டு பிடித்த மனிதன் தோற்று கொண்டிருப்பது தான் கொடுமை.//

சரியாக சொன்னீர்கள்!

:)

Maximum India said...

நன்றி கபீஷ்!

நன்றி ஜோ!

Thomas Ruban said...

மதம் ஆரம்பத்தில் நன்மை செய்யவே உண்டாக்கப்பட்டது. ஆனால் சில சுயநலவாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக அதில் வேண்டாத நிபந்தனைகளை கொண்டு வந்து மதத்தின்(கடவுள்) மீது வெறுப்பை உண்டாக்கிவிட்டார்கள்.எனவே தப்பு மனிதன் மேல்தான் மதத்தின் மேல் இல்லை.எந்தமதமும் தீயவற்றை போதிப்பதில்லை.

//எனவே மதங்களை பற்றி பேசுவதை குறைத்துக் கொண்டு, மனிதத்தைப் போற்றுவது எப்படி என்று அதிகம் யோசிப்போம். "கெட்டதை எதிர்ப்பதை விட நல்லதை ஆதரிப்பதுதான் அதிக பலனைத் தரும்" மதத்தினை நீக்குவதால் மட்டுமே வன்முறை பிரச்சினைகள் தீர்ந்து விடாது//

இதில் ஆணித்தரமான உண்மை இருக்கின்றது சார்.

பதிவுக்கு நன்றி சார்.

நாளும் நலமே விளையட்டும் said...

மதம் மனிதனால் கண்டுபிடிக்கப் பட்டது.
அந்த மதத்தின் மூலம் தான் கடவுள் என்னும் கரு உருவானது.
அந்தக் கரு தான் வளர்க்கப் பட்டு பல்வேறு சித்தாந்தங்களை உள்வாங்கி இன்று பலக் கிளை கொண்டு விரிந்து நிற்கிறது.
மதம் என்ற கருத்தாக்கம், சங்கம் மனிதனை விட்டு நீங்கினால் நம்மிடை உள்ள பெரும்பாலான வேற்றுமைகள் கதிரவன் கண்ட
பனி போல் காணாமல் போய் விடும்.

மதம் மட்டும் வைத்துக் கொண்டு ? கடவுள் மட்டும் வைத்துக் கொண்டு?
எதுவும் நம்மால் விளக்க முடியாது.
ஆதியை நீக்க முயல்வோம்.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//மதம் ஆரம்பத்தில் நன்மை செய்யவே உண்டாக்கப்பட்டது. ஆனால் சில சுயநலவாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக அதில் வேண்டாத நிபந்தனைகளை கொண்டு வந்து மதத்தின்(கடவுள்) மீது வெறுப்பை உண்டாக்கிவிட்டார்கள்.எனவே தப்பு மனிதன் மேல்தான் மதத்தின் மேல் இல்லை.எந்தமதமும் தீயவற்றை போதிப்பதில்லை.//

உங்கள் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே. அதே சமயம், மதங்கள் அணு சக்தியைப் போன்றவை என்று நினைக்கிறேன். அவற்றை நன்மைக்காகவும் பயன்படுத்தலாம். அழிவுக்காகவும் பயன்படுத்தலாம். சரி அல்லது தவறு என்பது அணுசக்தியை கண்டுபிடித்தவர் மீதோ அல்லது அணுசக்தியின் மீதோ இல்லை. அதை உபயோகிப்பவரின் நோக்கங்களை சார்ந்தே உள்ளது. இப்போதுள்ள பல மதவாதிகள் மற்றும் மத எதிர்ப்புவாதிகள் மதத்தை அரசியல் மற்றும் ஆளுமைக் காரணங்களுக்காக பயன்படுத்துவது மதங்களின் மீது பலருக்கும் வெறுப்பினை வரவழைக்கின்றது. இவர்கள் கையில் இருந்து மதம் விடுபட்டாலே போதும். பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

நன்றி!

Maximum India said...

நன்றி நலம் நாளும் விளையட்டும்!
//மதம் மனிதனால் கண்டுபிடிக்கப் பட்டது.
அந்த மதத்தின் மூலம் தான் கடவுள் என்னும் கரு உருவானது.
அந்தக் கரு தான் வளர்க்கப் பட்டு பல்வேறு சித்தாந்தங்களை உள்வாங்கி இன்று பலக் கிளை கொண்டு விரிந்து நிற்கிறது.
மதம் என்ற கருத்தாக்கம், சங்கம் மனிதனை விட்டு நீங்கினால் நம்மிடை உள்ள பெரும்பாலான வேற்றுமைகள் கதிரவன் கண்ட
பனி போல் காணாமல் போய் விடும்.

மதம் மட்டும் வைத்துக் கொண்டு ? கடவுள் மட்டும் வைத்துக் கொண்டு?
எதுவும் நம்மால் விளக்க முடியாது.
ஆதியை நீக்க முயல்வோம்.//

பதிவிலேயே சொன்னபடி மதம் என்பது மனிதன் கையில் உள்ள ஒரு ஆயுதம் மட்டுமே. சாதி, இனம், சட்டம், சமூக அமைப்பு என்று பல பிரிவினை மற்றும் ஆளுமை ஆயுதங்கள் மனிதனின் கைவசம் உள்ளன. மதத்தினை எதிர்க்கிறோம் என்று சொன்ன பல அரசியல்வாதிகள் எடுத்துக் கொண்டுள்ள மற்றவகை ஆயுதங்கள், சாதி, இனம், சமூக அமைப்பு, ஒழுக்க முறை, வர்க்கப் போராட்டம் மற்றும் மொழி போன்றவை. எனவே மதத்தினை அழிக்கிறோம் என்று கிளம்பும் போது அங்கு ஒரு புதிய வன்முறைதான் துவங்குகிறது.

எல்லாவற்றுக்கும் மூலமானது "மனிதனின் ஆளுமை அல்லது அடக்குமுறை வெறிதான்" என்று நம்புகிறேன். ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமானவன். ஆளுமை அல்லது அடக்குமுறைக்கு அப்பாற்பட்டவன். மற்றவர் சுதந்திரத்தை பாதிக்காத அளவுக்கு ஒவ்வொருவராலும் தனது சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என்பதை மனித சமூகம் ஒப்புக் கொண்டு விட்டால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று நினைக்கிறேன்.

நன்றி!

Btc Guider said...

சில விசயங்களில் விவாதம் செய்வது பலருடைய மனதைப் புண்படுத்தலாம். விவாதம் என்பது சூனியத்தைப் போன்றது. நல்ல பேசக்கொடிய ஒருவர் உண்மையை பொய்யாக்க முடியும், பொய்யை உண்மையாக்க முடியும். எவன் கேட்டவன் என்று யோசிப்பதை விட எவன் நல்லவன் என்று யோசித்தால் மனம் கோபபடாது.
வன்முறையை யாரும் ஆதரிப்பது இல்லை, ஏன்? வன்முறை செய்கின்றவனே தீவிரவாதத்தை விரும்புவதில்லை. உங்களுக்கு சரி என்று பட்டது எனக்கு தப்பாக படலாம்,எனக்கு சரி என்று பட்டது உங்களுக்கு தப்பாக படலாம். இதுதான் மனிதனின் இயற்க்கை.

உலகிலேயே சக்தி வாய்ந்த ஆயுதம் எது தெரியுமா?
நாக்குதான். அதற்க்கு அடுத்து பேனா.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் பேனாவை விட சக்தி வாய்ந்த ஆயுதமாக இணையம் வந்துவிட்டது. மக்களிடம் வேகமாக சென்றடையும் இணையத்தை நீங்கள் கூறியதுபோல் //நன்மைக்காகவும் பயன்படுத்தலாம். அழிவுக்காகவும் பயன்படுத்தலாம். // எனவே மனக்கசப்பு ஏற்படாத வகையில் எழுதுவது நன்றாக இருக்கும்.

பதிவுலகில் எழுத தூண்டிய உங்களின் ஆதரவு என்றென்றும் மறக்கமாட்டேன்.
தங்களின் கருத்து நன்றாக இருக்கின்றது.
பகிர்வுக்கு நன்றி சார்.

Maximum India said...

அன்புள்ள ரஹ்மான்!

//சில விசயங்களில் விவாதம் செய்வது பலருடைய மனதைப் புண்படுத்தலாம். விவாதம் என்பது சூனியத்தைப் போன்றது. நல்ல பேசக்கொடிய ஒருவர் உண்மையை பொய்யாக்க முடியும், பொய்யை உண்மையாக்க முடியும். எவன் கேட்டவன் என்று யோசிப்பதை விட எவன் நல்லவன் என்று யோசித்தால் மனம் கோபபடாது.
வன்முறையை யாரும் ஆதரிப்பது இல்லை, ஏன்? வன்முறை செய்கின்றவனே தீவிரவாதத்தை விரும்புவதில்லை. உங்களுக்கு சரி என்று பட்டது எனக்கு தப்பாக படலாம்,எனக்கு சரி என்று பட்டது உங்களுக்கு தப்பாக படலாம். இதுதான் மனிதனின் இயற்க்கை.
உலகிலேயே சக்தி வாய்ந்த ஆயுதம் எது தெரியுமா?
நாக்குதான். அதற்க்கு அடுத்து பேனா.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் பேனாவை விட சக்தி வாய்ந்த ஆயுதமாக இணையம் வந்துவிட்டது. மக்களிடம் வேகமாக சென்றடையும் இணையத்தை நீங்கள் கூறியதுபோல் //நன்மைக்காகவும் பயன்படுத்தலாம். அழிவுக்காகவும் பயன்படுத்தலாம். // எனவே மனக்கசப்பு ஏற்படாத வகையில் எழுதுவது நன்றாக இருக்கும்.//

அருமையாக சொல்லியுள்ளீர்கள்.

உலகில் எத்தனையோ தீமைகள் நடந்து வரும் அதே வேளையில் பல நன்மைகளும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன. குற்றம் கூற குதித்தெழும் நாம் நல்லவைகளை பாராட்ட முன்வருவதில்லை என்ற வருத்தம் எனக்குமிருக்கின்றது. நமது பதிவுப் பொருளான மதத்தில் கூட எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. கெட்டவற்றை குறை கூறும் அதே சமயத்தில் நல்லவற்றை உதாசீனப் படுத்தக் கூடாது என்ற எண்ணம் எனக்கும் உள்ளது.

எனது பதிவு வலையில் கூட இனிமேல் குற்றச்சாட்டுக்களை விட அதிகம் பாராட்டுக்களை கொண்டு வர வேண்டும் என்று நான் இப்போது சிந்தித்துக் கொண்டுள்ளேன்.

//பதிவுலகில் எழுத தூண்டிய உங்களின் ஆதரவு என்றென்றும் மறக்கமாட்டேன்.//

பல வேலைப் பளுக்களுக்கும் இடையே நானும் பதிவுலகில் தொடர்ந்து கொண்டிருப்பது உங்களைப் போன்றவர்களின் ஆதரவினால்தான் என்பதையும் நான் இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

நன்றி!

Naresh Kumar said...

நல்ல கட்டுரை...

//"கெட்டதை எதிர்ப்பதை விட நல்லதை ஆதரிப்பதுதான் அதிக பலனைத் தரும்" என்று சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தேன். அதில் உண்மை இருக்கின்றது
என்பது போல எனக்குத் தோன்றுகிறது//

ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது!!!

தன்னுடைய 5 வயது குழந்தையின் பிறந்த நாளுக்காக ஒரு விழாவினை தம்மப்தியினர் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது அவர்களுடைய நெருங்கிய நண்பர் குழந்தைக்கு பரிசளிக்க வேண்டுமென்று மூன்று குரங்குகள் கண், காது, வாயை மூடிக் கொண்டிருக்கும் பொம்மையை வாங்கி வந்திருக்கிறார்...

யதேச்சையாக இதைப் பார்த்த தந்தை, அந்த பொம்மையை கொடுக்க வேண்டாமென்று வேண்டிக் கேட்கிறார்...

மனம் குழம்பிய நண்பர், இது நல்ல பொம்மை, கருத்துள்ள பொம்மை என்றெல்லாம் சொல்கிறார்...

அதற்கு தந்தை சொல்கிறார், இதைக் கொடுத்தால் என் குழந்தை, ஏன் இந்தக் குரங்குகள் வாய், கண் எல்லாம் மூடிக் கொண்டிருக்கின்றன என கேட்கும். நான் தீயவை பேசாதே, தீயவை கேட்காதே, தீயவை பார்க்காதே என அறிவுறுத்த என சொல்வேன். உடனே என் குழந்தையும் தீயவை என்ரால் என்ன என கேட்கும்!!! தீயதெல்லாம் என்ன என்று சொல்லி, பின்பு அதனைக் கேட்காதே, பார்க்காதே பேசாதே என சொல்லுவதற்குப் பதில், நல்லவை சொல், நல்லவை பேசு, நல்லவை பார் என சொல்லிக் கொடுப்பது மேல் அல்லவா...குழந்தைப் பருவத்தில் நாம் சொல்வது எளிதில் மனதில் பதியும் வய்து. அப்போது செய்யக் கூடாதவைகளைப் பேசுவதை விட, செய்ய வேண்டியவைகளைப் பற்றி சொல்வது மிக அவசியம் என்றாராம்....

மதுரை சரவணன் said...

நேர்மறை எண்ணங்கள் உடன் வாழ்வேம். மதம் மறந்து மனிதம் நேசிப்போம். மதம் மதமாக்காமல் மனிதனாக்கினால் நன்று.

Maximum India said...

அருமையாக சொன்னீர்கள் நரேஷ் குமார்!

நீங்கள் சொன்ன கதை ஒரு புதிய கோணத்தை காட்டுகின்றது.

மிக்க நன்றி!

Maximum India said...

நன்றி மதுரை சரவணன்!

Radhakrishnan said...

உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது கண்டு மகிழ்ச்சி. இதுவே மனிதம் போற்றப்படும் விதத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.

வால்பையன் said...

இப்ப தெரியுதா!

நான் ஏன் மதவாதிகள் டவுசரை கிழிக்கிறேன்னு!

:)

நாளும் நலமே விளையட்டும் said...

தன்னை சுற்றி நல்லது மட்டுமே நடக்கிறது என்று கற்பிப்பது குழந்தைக்கு மிகத் தீமையானது.
இது சமூகம். இங்கு பாம்பும், தேளும், எல்லாமும் இருக்கும்.

குழந்தைக்கு நிச்சயமா நல்லது எது என்று தெரிந்திருக்க வேண்டும். அதைவிடத் தீயது எது எனச் சொல்வது முக்கியம்!
குழந்தை அப்பா மருத்தவமனை எதற்கு எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள்?
காப்பீடு எதற்கு என்றால் என்ன சொல்வீர்கள்?

நாம் விரும்புவது நாளும் நலமே விளையட்டும் என!
ஆனால் நம்மை சுற்றியும், நமக்கும் துன்பம் வரலாம் என சொல்ல நாம் கடமைப் பட்டுள்ளோம் குழந்தைக்கு .

Maximum India said...

நன்றி ராதாகிருஷ்ணன்!

Maximum India said...

அன்புள்ள வால்பையன்!

//இப்ப தெரியுதா!

நான் ஏன் மதவாதிகள் டவுசரை கிழிக்கிறேன்னு!//

உங்களுடைய பகுத்தறிவு மற்றும் பரிணாம கருத்துக்கள் எப்போதுமே எனக்குப் பிடிக்கும். இதை பலமுறை பின்னூட்டங்கள் வாயிலாகவும் தொலைபேசியிலும் சொல்லியிருக்கிறேன்.

என்னைப் பொறுத்த வரை மருந்து உடலுக்கு நல்லது என்றாலும் அது மிகவும் கசப்பாக அமைந்து விட்டால் உடல் உள்வாங்க மறுக்கும். மருந்து உள்ளே செல்ல வேண்டுமென்பதுதான் நமது நோக்கம் என்பதால் அதனை சற்று இனிப்பாக்கி கொடுப்பது நமது நோக்கத்தை எளிதில் நிறைவேற்றுமல்லவா? எனவே கடுமையான நேரடி சாடல்களைக் குறைத்துக் கொண்டால் உங்கள் கருத்துக்கள் இன்னும் பல இடங்களை சென்றடையும் என்ற ஆர்வத்தினாலேயே உருவானது இந்த பதிவு.

மற்றபடிக்கு சாமியார்களைப் பற்றிய எனது அறிவு பூஜ்யத்திற்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. எனது வீட்டின் பெரியவர்கள் கடவுள் பக்தி மிகுந்தவர்களாக இருந்தாலும் "தனிமனித வழிபாட்டை (அவர் எவ்வளவு பெரியவர் அல்லது புகழ் வாய்ந்தவராக இருந்தாலும் சரி) " வெறுத்தும் கண்டித்தும் வந்தனர். எனவே எனக்கு எப்போதுமே சாமியார்கள் மீது பற்று அல்லது அவர்களது நடவடிக்கைகள் மீது ஆர்வம் வந்ததில்லை. சமீபத்தில் சில ஆன்மிக பெரியவர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்த போது அவர்கள் மீது எனக்கு கொஞ்சம் மரியாதை வந்தது. ஆனால் இப்போது அதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த பதிவுக்கு மரியாதை கொடுத்து பின்னூட்டங்கள் இட்ட உங்கள் நட்புக்கும் பெருந்தன்மைக்கும் மிக்க நன்றி!

:)

Maximum India said...

//தன்னை சுற்றி நல்லது மட்டுமே நடக்கிறது என்று கற்பிப்பது குழந்தைக்கு மிகத் தீமையானது.
இது சமூகம். இங்கு பாம்பும், தேளும், எல்லாமும் இருக்கும்.

குழந்தைக்கு நிச்சயமா நல்லது எது என்று தெரிந்திருக்க வேண்டும். அதைவிடத் தீயது எது எனச் சொல்வது முக்கியம்!
குழந்தை அப்பா மருத்தவமனை எதற்கு எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள்?
காப்பீடு எதற்கு என்றால் என்ன சொல்வீர்கள்?

நாம் விரும்புவது நாளும் நலமே விளையட்டும் என!
ஆனால் நம்மை சுற்றியும், நமக்கும் துன்பம் வரலாம் என சொல்ல நாம் கடமைப் பட்டுள்ளோம் குழந்தைக்கு .//

நீங்கள் சொல்வது ஒருவகையில் உண்மைதான் நண்பரே (நாளும் நலமே விளையட்டும்)!

கெட்ட (சினிமா, கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற) செய்திகள் நிறைய வருகின்றன என்பதால் "குறிப்பிட்ட சில தமிழ் செய்தித்தாள்களை" கல்லூரிப் பருவத்தில் முழுமையாக தவிர்த்து வந்த எனக்கு ஒரு நண்பர் கூறிய அறிவுரையும் இதே போலத்தான் இருந்தது.

நன்றி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனது பதிவு வலையில் கூட இனிமேல் குற்றச்சாட்டுக்களை விட அதிகம் பாராட்டுக்களை கொண்டு வர வேண்டும் என்று நான் இப்போது சிந்தித்துக் கொண்டுள்ளேன். /
/

நல்ல விசயங்களை முன்னிலைப்படுத்துவது வரவேற்கப்படவேண்டிய விசயம் ..

எங்கோ படித்த ஞாபகம்..செய்தித்தாள்களில் பாராட்டுக்களை நல்ல விசயங்க்ளை முதல் பக்கத்துலயும் மோசமான விசயங்களை பின்பும் சொல்லலாமே என்று.. எப்பவும் மோசமான நிகழ்ச்சிகளைத்தான் செய்திகளிலும் பேப்பரிலும் பரபரப்பாக்க்குவது நடக்கிறது. ஒரு நல்ல செய்தி பலரது மனதில் நல்ல விதையை விதைக்கலாம்..

உங்களுக்கு பாராட்டுக்கள்.

Maximum India said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி!

Blog Widget by LinkWithin