Thursday, June 10, 2010

மன்னிப்பு - ஒவ்வொருவரது அகராதியிலும் இருக்க வேண்டிய வார்த்தை!


சென்ற வாரம் முழுதும் தமிழ் கூறும் பதிவுலகம் பரபரப்பாக இருந்தது. பதிவுலகத்தின் வெளிவட்டத்தை மட்டுமே சார்ந்தவன் என்றாலும், "கூட்டமாக இருந்தால் எட்டிப்பார்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையும் உரிமையும் ஆகும்" என்பதால் நானும் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன். தீர்ப்பு அல்லது தீர்வை விடுங்கள், குறைந்த பட்ச கருத்தை சொல்லும் அளவுக்கு கூட, சம்பந்தப் பட்ட பிரச்சனையைப் பற்றிய அறிதல்களும் புரிதல்களும் எனக்கு மிகக் குறைவாக இருந்ததால், "கோட்டுக்கு அந்த பக்கமே" இருந்து விட்டேன். பெண்ணியம், ஆணாதிக்கம், பார்ப்பனியம் என புரிந்து கொள்ள சிக்கலான பல வார்த்தைகளுக்கு இடையே அடிக்கடி உச்சரிக்கப் பட்ட "மன்னிப்பு" என்ற ஒரு வார்த்தை, என்னுள் வேறு சில நினைவுகளை வரவழைத்தது. அந்த நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

டாக்டர்.வேனி டபுள்யு டயர் (Dr.Wayne W Dyer) என்ற அமெரிக்க எழுத்தாளரைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் மிக அதிகமாக விற்பனை செய்யப் பட்ட "ஆளுமை வளர்ச்சி" தொடர்பான புத்தகங்களில் குறிப்பிடத்தக்கதான "Your Erroneous Zones" யை எழுதியவர். இவர் எழுதிய இரண்டாவது புத்தகம் "You 'll See It When You Believe It". இந்த புத்தகத்தின் முன்னுரையில் இவரது வாழ்வில் நிகழ்ந்த சில உண்மை சம்பவங்களைப் பற்றி எழுதி இருக்கிறார். அந்த சம்பவங்களை அவரது சொந்த வரிகளில் (சாராம்சம் மட்டும்) இங்கே பதிகிறேன்.

"எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போதே எனது தந்தை, எங்கள் குடும்பத்தை கை விட்டு விட்டார். மூன்று குழந்தைகளையும் வளர்ப்பதற்கு எனது தாயார் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. என்னுடைய தந்தையைப் பற்றி நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நான் கேள்விப் பட்ட விஷயங்கள் அனைத்தும் தவறானவைதான். குடிகாரர், மனைவியை கொடுமைப் படுத்தியவர், நேர்மையற்றவர், சட்டத்தை மீறியவர், சிறைக்கு சென்றவர் இன்னும் பல. அவரை நேரில் பார்த்திரா விட்டாலும், அவரின் பிம்பம் எனது மனதில் (மற்றவர்களின் வர்ணனை வாயிலாக) ஆழமாக பதிந்து வந்தது. அவரைப் பற்றி அதிகம் கேள்விப் பட, கேள்விப் பட அவர் மீதான வெறுப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. வெறுப்பு அதிகமாக அதிகமாக அவரை பற்றிய (வன்மம் நிறைந்த) ஆர்வமும் அதிகமாகிக் கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில், எனது கனவுகளில் எனது தந்தையின் பிம்பம் வர ஆரம்பித்தது. அந்த பிம்பத்துடன் நான் சண்டையிட ஆரம்பித்தேன். சண்டைக்கு இடையே அலறிக் கொண்டு எழுந்த சம்பவங்களும் உண்டு.

பெரியவனான பின்னரும், கனவுகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவரை என்றாவது ஒரு நாள் சந்தித்து அவரை கேள்விக் கணைகளால் துளைக்க வேண்டும் என்று விரும்பினேன். எத்தனையோ ஊர்கள், வேலைகள், மனைவிகள், குடும்பங்கள் என்று மாறிக் கொண்டே இருந்தவரை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. வாழ்வியல் போராட்டங்களும் அந்த முயற்சிகளுக்கு அதிக நேரம்/ சக்தியை வழங்கவில்லை.

நியூ ஓர்லேன்ஸ் என்ற ஊரில் அவர் இறந்து விட்டதாக உறுதிபடுத்த முடியாத தகவல் வந்தது. ஆனால், தனிப்பட்ட வாழ்வில் சிக்கல்கள் நிறைந்த அன்றைய சூழலில் இந்த விஷயத்தை உறுதிப்படுத்த நான் முனைய வில்லை. ஆனால் வன்மங்களும், போராட்ட கனவுகளும் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. சொல்லப் போனால் சிக்கலான கால கட்டங்களில் கனவின் வருகை அதிகமானது. மனதின் துன்பமும் அதிகரித்துக் கொண்டே போனது.

சில வருடங்கள் கழித்து, நியூ ஓர்லேன்ஸ் நகரத்திற்கு அருகே எனது அலுவல் தொடர்பாக செல்ல வேண்டியிருந்தது. கல்லறை நிர்வாகியிடம், புதைக்கப் பட்டது அவர்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு, அங்கே சென்றேன். கல்லறையின் முன்னர் அமர்ந்து கொண்டு அடுத்த இரண்டரை மணி நேரம் "உயிரற்ற அந்த மனிதரிடம்" உரையாடினேன். சுற்றுப்புறத்தை மறந்து சத்தம் போட்டு அழுதேன். "ஒரு கல்லறை மனிதரை" பதில்கள் தர வேண்டி கட்டாயப் படுத்தினேன்.

நேரம் செல்ல செல்ல எனது மனது இளகியது. ஒரு வித நிச்சலன நிலை அங்கே நிலவியது. எனது தந்தையே அருகில் இருப்பது போல ஒரு உணர்வு அப்போது தோன்றியது.

மீண்டும் "இல்லாத அவரிடம்" பேச ஆரம்பித்தேன்.

"உன்னிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த நிமிடத்துடன் எல்லாம் முடிவடைந்து விட்டது. உன்னுடைய வாழ்க்கையை ஏன் அப்படி வாழ்ந்தாய் என்று எனக்குத் தெரியாது. அந்த (கேடுகெட்ட) வாழ்க்கைக்காக நீ என்றாவது வருந்தினாயா என்றும் தெரியாது. உன்னுடைய எண்ணங்கள் எப்படி இருந்திருந்தாலும், உன்னைப் பற்றிய தீய எண்ணங்களை இன்றுடன் நான் முடித்துக் கொள்ள விரும்புகிறேன். உன்னுடைய வாழ்வை (அந்த கால சூழ்நிலைகளுக்கேற்ப) எப்படி வழி நடத்த நேரிட்டதோ, அதன்படியே நீ வாழ்ந்தாய் என்று எனது மனதில் சொல்லிக் கொள்கிறேன். உன்னைப் பற்றிய தவறான நினைவுகள் நம்மிடையே இனி தடையாக இருக்க வேண்டாம். உன்னிடம் நான் காட்ட விரும்புவது என்னுடைய உண்மையான அன்பை மட்டுமே. இப்போது உனக்கு எனது அன்பை தருகிறேன். நீ எனது களங்கமற்ற அன்பை பெற்றுக் கொள்"

அந்த கணத்தில் "மன்னிப்பின்" மகத்துவத்தை என்னால் உணர முடிந்தது. அது வரை மன்னிப்பை பற்றி அறிந்திராத நான் எனது வாழ்வின் மிகப் புதிய அனுபவத்தை உணர்ந்தேன். மனம் முழுக்க தூய்மை அடைந்தது போலவும், மனம் இலவம் பஞ்சு போல எடையற்றுப் போனது போலவும் உணர்ந்தேன்.

இந்த அனுபவத்திற்கு பின்னர் என் வாழ்வில் நிகழ்ந்தது எல்லாம் சரித்திரம். அமெரிக்க புத்தக வரலாற்றில் சரித்திரம் படைத்த "Your Erroneous Zones" புத்தகத்தை இலகுவாக எழுதி முடித்தேன். மேடைப் பேச்சுகளின் போது குறிப்புகளின் அவசியம் இல்லாமல் போனது. எனது மேடை பேச்சுக்கள் மக்களை ஈர்த்தன. தனிப்பட்ட வாழ்விலும் முன்னேற்றம் நேரிட்டது.

இன்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். வன் உணர்வுகளால் துன்பப் பட்டுக் கொண்டிருந்த, வெகுவாக பாதிக்கப் பட்டிருந்த என்னை முழுமையாக மாற்றியதும் வாழ்வில் உயர்த்தியதும், நான் "மன்னிக்க" முன் வந்த அந்த தருணம்தான்."

இப்போது நமது பதிவுக்கு மீண்டும் வருவோம்.

கோபம் அல்லது வன்மம் அவற்றை "கொண்டவருக்குத்தான்" அதிக (மனரீதியான) துன்பங்களை விளைவிக்கின்றன. மன்னிப்பு என்பது அதுவரை வலியுடன் சுமந்து வந்த ஒரு (மன) பாரத்தை இறக்கி வைத்து விடும் ஒரு செயல் என்றே கருதுகிறேன். மன்னிப்பின் போது மன்னிக்கப் பட்டவரை விட மன்னிப்பவருக்கே மனரீதியான அதிக பலன்கள் கிடைக்கின்றது என்பது நடைமுறை உண்மை.

இதை உணர வேண்டுமானால் உடனடியாக மன்னிக்க ஆரம்பியுங்கள்.

(இந்த பதிவில் ஏதேனும் குறைகள் இருப்பது போல உணர்ந்தீர்கள் என்றால், மன்னிப்பை இந்த பதிவரிடமிருந்தே கூட ஆரம்பிக்கலாம்)

நன்றி!

24 comments:

மதுரை சரவணன் said...

மன்னிப்பு மனித நேயத்திற்க்கான மருந்து.சரியான விளக்கங்களூடன் அருமை. வாழ்த்துக்கள்

சினிமா ரசிகன் said...

வாவ் என்ன ஆழமான கருத்துக்கள் உங்கள் நற்பணியை தொடரவும்

சினிமா ரசிகன் said...
This comment has been removed by a blog administrator.
Bruno said...

நல்ல கருத்து சார்
பகிந்தமைக்கு நன்றி

--

மறப்போம் மன்னிப்போம் என்ற சொற்தொடருக்கு பின்னால் ஆழ்ந்த அர்த்தம் உள்ளது

--

எங்களுக்கெதிராக தீமை செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல் எங்கள் பாவங்களை மன்னியும் என்று சொல்வதும் இதைத்தான்

--

I choose love என்று ஏ.ஆர்.ஆர் சொன்னதையும் இங்கு பொருத்தி பார்க்க வேண்டும்

Advocate P.R.Jayarajan said...

அந்தப் புத்தகம் ஒரு அருமையான, மௌனமான நினைவுகளை சுற்றி வரும், ஆழ்ந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப் படமாக எடுத்தல் மிக நன்றாக இருக்கும். நிச்சயம் தேசிய விருது கூட கிடைக்கலாம். மன்னிப்பு என்பது ஒரு மிகப் பெரிய வார்த்தை. எல்லாப் பிரச்சனைகளையும் சுலபமாக தீர்த்து விடக் கூடியது. தவறுகள் இல்லாமல் எதுவும் இல்லை. வாழ்க்கையும் அதற்க்கு விதிவிலக்கு அல்ல. தவறுகள் தெரியும் போதுதான் சரி என்பது எது என்பதும் புலனாகும். ஆனால் தவறு என்பது எது என்று தெரிந்து கொண்ட பிறகு அத்தவறால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க மனம் வர வேண்டும். அது போல மன்னிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இந்த இரண்டுக்கும் பெரிய மனது அல்லது விட்டுகொடுக்கும் மனது இருக்க வேண்டும். மன்னிப்பு கேட்டு விட்டார் என்பதால் அதை மன்னிக்க முன் வராமல் மன்னிப்பு கேட்டவரை வேறு வகையில் பழி வாங்க அல்லது இளக்காரமாக நினைக்க ஆரம்பித்தால் அங்கு மீண்டும் ஒரு தவறு நடக்க இருக்கிறது என்று பொருள். 'மன்னிப்போம்' என்பதுடன் 'மறப்போம்' என்ற உணர்வும் தோன்றினால்தான் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று நான் கருதுகிறேன்.

வால்பையன் said...

அருமையான கருத்துக்கள்!

Thomas Ruban said...

ஆழமான,அருமையான கருத்துக்கள் நன்றி சார்.

ஒரு சந்தேகம்,
மன்னிப்பு என்ற வார்த்தை அகராதியில் உள்ளதால்,திரும்பதிரும்ப அதே தவறுகளை செய்பவர்களை மன்னிக்கலமா,கூடாத?

Btc Guider said...

உங்கள் பதிவை படிக்கும்போது சில சமயம் பாக்யா இதழை படிப்பது போன்று உள்ளது. திரு பாக்யராஜ் அவர்கள்தான் ஒரு விஷயத்தை விளக்க சுவாரசியமானகுட்டி கதையுடன் கூறுவார். எனவே அந்த விஷயம் அப்படியே மனதில் நன்றாக பதிந்துவிடும். அதுபோன்று தங்களுடைய பதிவும் மனதில் இலகுவாக பதிந்துவிடுகின்றது.

சில தவறுகளை சில முறை மன்னிக்கலாம்.தொடர்ந்து மன்னிப்பது என்பது இளிச்சவாய்த்தனம்(என்னைப் போன்றவர்களுக்கு)

ஏதேனும் தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள்.

நாங்களும் மன்னிப்பு கேப்போம்ல.............!

பதிவு மிக அருமை சார்.

Riyas said...

நல்ல கருத்துக்கள்..

அருவி said...

அருமையான் விடயம்

Maximum India said...

நன்றி மதுரை சரவணன்!

//மன்னிப்பு மனித நேயத்திற்க்கான மருந்து.//

உண்மைதான் நண்பரே!

Maximum India said...

நன்றி சினிமா ரசிகன்!

Maximum India said...

நன்றி ப்ருனோ சார்!

//மறப்போம் மன்னிப்போம் என்ற சொற்தொடருக்கு பின்னால் ஆழ்ந்த அர்த்தம் உள்ளது//

உண்மைதான் ஐயா!

//I choose love என்று ஏ.ஆர்.ஆர் சொன்னதையும் இங்கு பொருத்தி பார்க்க வேண்டும்//

அருமையான உதாரணம்.

நன்றி!

Maximum India said...

நன்றி ஜெயராஜன் ஐயா!

//அந்தப் புத்தகம் ஒரு அருமையான, மௌனமான நினைவுகளை சுற்றி வரும், ஆழ்ந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப் படமாக எடுத்தல் மிக நன்றாக இருக்கும். நிச்சயம் தேசிய விருது கூட கிடைக்கலாம். //

வேனி டயர் அவர்களின் சொந்த வரிகளில், பதிவில் சொன்ன கருத்து இன்னும் அழகாக இருக்கும். சொல்லப் போனால் அந்த புத்தகத்தின் முன்னுரையே பல புத்தங்களுக்கு சமமானது.

//மன்னிப்பு என்பது ஒரு மிகப் பெரிய வார்த்தை. எல்லாப் பிரச்சனைகளையும் சுலபமாக தீர்த்து விடக் கூடியது. தவறுகள் இல்லாமல் எதுவும் இல்லை. வாழ்க்கையும் அதற்க்கு விதிவிலக்கு அல்ல. தவறுகள் தெரியும் போதுதான் சரி என்பது எது என்பதும் புலனாகும். ஆனால் தவறு என்பது எது என்று தெரிந்து கொண்ட பிறகு அத்தவறால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க மனம் வர வேண்டும். அது போல மன்னிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இந்த இரண்டுக்கும் பெரிய மனது அல்லது விட்டுகொடுக்கும் மனது இருக்க வேண்டும். மன்னிப்பு கேட்டு விட்டார் என்பதால் அதை மன்னிக்க முன் வராமல் மன்னிப்பு கேட்டவரை வேறு வகையில் பழி வாங்க அல்லது இளக்காரமாக நினைக்க ஆரம்பித்தால் அங்கு மீண்டும் ஒரு தவறு நடக்க இருக்கிறது என்று பொருள். 'மன்னிப்போம்' என்பதுடன் 'மறப்போம்' என்ற உணர்வும் தோன்றினால்தான் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று நான் கருதுகிறேன்.//

சரியாக சொன்னீர்கள். மன்னிப்பதைப் போலவே மறப்பதும் மிக முக்கியமானது.

நன்றி ஐயா!

Maximum India said...

நன்றி வால்பையன்!

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!
நன்றி ரஹ்மான்!

@ தாமஸ் ரூபன்

//ஒரு சந்தேகம்,
மன்னிப்பு என்ற வார்த்தை அகராதியில் உள்ளதால்,திரும்பதிரும்ப அதே தவறுகளை செய்பவர்களை மன்னிக்கலமா,கூடாத?//

@ ரஹ்மான்
//சில தவறுகளை சில முறை மன்னிக்கலாம்.தொடர்ந்து மன்னிப்பது என்பது இளிச்சவாய்த்தனம்(என்னைப் போன்றவர்களுக்கு)//

திரும்ப திரும்ப தவறு செய்பவர்களின் நோக்கங்களை கவனியுங்கள். நோக்கங்கள் உங்களை காயப் படுத்த வேண்டும் என்பதாக இருந்தால், உங்களை தற்காத்துக் கொள்வது உங்களது கடமை. அதே சமயம், உங்களது முடிவுகள் கோபம் அல்லது வன்மம் ஆகியவற்றை புறந்தள்ளி விட்டு எடுக்கப் பட்டதாக இருக்க வேண்டும். உங்களை தற்காத்து கொள்ளும் அளவுக்கு வலுவானவராக எப்போதும் இருங்கள். ரிஷி பாம்புக்கு சொன்ன அறிவுரையைப் போல, தற்காப்புக்காக கொட்டாதீர்கள், ஆனால் பயமுறுத்துங்கள்.

உறுதியானவர்களாலும் வலிமையானவர்களாலும்தான் மன்னிக்க முடியும் என்பதால் நீங்கள் முடிந்த வரை மன்னியுங்கள். மன்னித்துக் கொண்டே இருங்கள்.

"அவன் தந்தையை இவன் வெட்டினான்.
இவனை அவன் வெட்டினான்
அவனை இவன் மகன் வெட்டுவான்"

என்ற தொடர் எங்காவது ஒரு இடத்தில் நிறுத்தப் பட்டுத்தான் ஆக வேண்டும். யாராவது ஒருவர் இதனை நிறுத்த ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தத்தான் வேண்டும். அந்த ஒருவர் நாமாக இருந்து விட்டுப் போகலாமே? இந்த கருத்து சாதாரண வரப்பு தகராறுகளுக்கு மட்டுமல்ல, இன, மத நாடுகளுக்கிடையே உள்ள தகராறுகளுக்கும் பொருந்தும்.

நன்றி!

Maximum India said...

நன்றி ரியாஸ்!

நன்றி அருவி!

பொதுஜனம் said...

உங்களது படைப்பில் இது(வும்) ஒரு அற்புதம். சிறந்த எழுத்தாளர்க்கு உரிய எழுத்து நடையை பிடித்து விட்டீர்கள் என நினைக்கிறேன். முக்கியமாக வேன் டயர் ஆங்கிலத்தில் சொன்னதை அழகான தமிழில் சொன்னதற்காக.வாழ்த்துக்கள்.

Maximum India said...

நன்றி பொதுஜனம்!

//முக்கியமாக வேன் டயர் ஆங்கிலத்தில் சொன்னதை அழகான தமிழில் சொன்னதற்காக.வாழ்த்துக்கள் //

சுயமாக எழுதுவதை விட மொழிபெயர்ப்பது என்பது கடினமான ஒன்று. குறிப்பிட்ட எழுத்தாளரின் நோக்கம் அப்படியே பிரதி பலிக்க செய்வது கொஞ்சம் சிரமமானதுதான். இதை நான் உணர்வதற்கு இந்த பதிவு உதவியது.

நன்றி!

Naresh Kumar said...

மிக அருமையான தேவையான பதிவு!!!

கருத்துக்கள் மிக நன்று...

Maximum India said...

நன்றி நரேஷ் குமார்!

Unknown said...

ஐயா,
கழகத்தின் கருப்பு சட்டை வெறி நாய்க்ளையும் மன்னித்துவிடலாமா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பகிர்விற்கு நன்றி

\\மன்னிப்பை இந்த பதிவரிடமிருந்தே கூட ஆரம்பிக்கலாம்)//

இது ரொம்ப நல்லாருக்கே..:)

Unknown said...

ஆழமான,அருமையான கருத்துக்கள் நன்றி.
அதே நேரம் மன்னிப்பை உரிய இடத்தில மட்டுமே கொடுக்க வேண்டும் இல்லையெனில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்பது என் கருத்து.

மேலும் உங்களின் கல்வி,தொழில்,வேலைவாய்ப்பு மற்றும் திருமண யோகம் பற்றி முழுதுமாக தெரிந்துகொள்ள ஒரு அருமையான மற்றும் உண்மையான இணையத்தளம் ஒன்றின் வலைதள விலாசத்தை தந்துள்ளேன் அதன் மூலம் நீங்கள் பெரிதும் (என்னை போல) பயனடைய என் வாழ்த்துக்கள். www.yourastrology.co.in

Blog Widget by LinkWithin