Sunday, June 13, 2010

பொருளாதார வளர்ச்சி Vs பணவீக்கம்


உலக பொருளாதார சிக்கலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், இந்திய பொருளாதார (GDP) வளர்ச்சி பிரமிக்க தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்ற காலாண்டில் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி எட்டு சதவீதத்திற்கு மேல் இருந்திருக்கிறது. பணவீக்கமான பத்து சதவீதத்தையும் சேர்த்துக் கொண்டால், நடப்பு விலைவாசியின் படி பொருளாதார வளர்ச்சி (GDP at current Prices) பதினெட்டு சதவீதத்திற்கும் மேல். ஓரிரண்டு சதவீதத்திற்கு மேல் வளர்வதற்கே மூச்சு முட்டும் மற்ற பல நாடுகளுக்கு மத்தியில் இந்த வளர்ச்சி அசாதாரணமானதுதான். மற்ற புள்ளி விபரங்களும் இந்தியாவின் பொருளாதார மீட்சியை தெளிவாகவே பறை சாற்றுகின்றன. ஏப்ரல் மாதத்திற்கான இந்திய தொழிற் வளர்ச்சியோ (Industrial Production) பதினேழுக்கும் மேலே இருந்திருக்கிறது. தொழிற் நம்பிக்கை குறியீடு (Manufacturing Confidence) ஐம்பதுக்கும் மேல். உள்நாட்டின் கார் விற்பனை முப்பது சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. அலைவரிசை விற்பனையில் மத்திய அரசுக்கு ஒரு லட்சம் கோடிக்கும் மேல் வருவாய் கிட்டியுள்ளது.

இப்படி பல பொருளாதார புள்ளி விபரங்களும் இந்தியாவின் முன்னேற்றத்தை புடம் போட்டுக் காட்டுகின்றன. அன்றாட வாழ்வில் கூட, நம்மால் இந்த வளர்ச்சியை கண்கூடாக பார்க்க முடிகிறது. முன்போல குறைந்த ஊதிய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. பொது மக்கள் கையில் பணபுழக்கம் அதிகமாகி வருகிறது. இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் மூன்று வேளை சாப்பிடுகிறார்கள். மூன்று வேளை சாப்பிட்டவர்கள் உணவின் தரத்தை அதிகப் படுத்துகிறார்கள். இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது.

மேற்சொன்ன நல்ல விஷயங்களுக்காக சந்தோசப் படும் அதே நேரத்தில், இந்தியாவில் வளர்ச்சிக்கு வில்லன்களாக நான் இப்போதைக்கு கருதுபவை, சமூகமெங்கும் புரையோடிப் போயுள்ள ஊழல், அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அடிப்படை கட்டுமான வசதிகள் குறைபாடு, அதிகரித்து வரும் பயங்கரவாதம், உலக பொருளாதார தளர்ச்சி மற்றும் விஷம் போல ஏறி வரும் பணவீக்கம். இவற்றோடு, இவற்றின் மீது அதிகாரத்தில் உள்ளோரின் அக்கறையின்மையையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு இந்த பதிவின் தலைப்பான பணவீக்கத்தை பற்றி மட்டும் இங்கு பார்ப்போம்.

பணவீக்கத்தினால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி விரிவாக இந்த பதிவில் அலசப் பட்டுள்ளது. நேர அவகாசமிருந்தால் இந்த பதிவை படித்து விட்டு வாருங்கள்.

மேற்சொன்ன பதிவில் குறிப்பிட்டுள்ளபடி பணவீக்க சுழற்சியின் முதல் பாதி பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக அமைந்திருப்பதை நம்மால் இப்போது கண்கூடாக பார்க்க முடிகிறது. பொதுமக்களின் கைகளில் அதிக பணபுழக்கம், நுகரும் பொருட்களின் தேவையை அதிகப் படுத்தி உற்பத்தியை ஊக்குவித்துள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் குறைவான வட்டிவீதம், தொழில் அதிபர்கள் அதிகம் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட வைத்துள்ளது. அரசாங்கமும் தனது மீட்சி நடவடிக்கைகள் சிறப்பாக செயல்பட்டதாக எண்ணிக் கொண்டு மகிழ்ச்சியாக உள்ளது.

இப்போது பணவீக்க சுழற்சியின் இரண்டாவது விரும்பத்தகாத பாகம் ஆரம்பித்துள்ளது என்று நினைக்கிறேன். அடிப்படை பொருட்களின் விலை உயர்வு (Primary Articles Inflation) பதினேழு சதவீதத்திற்கும் மேல் என சென்ற வார புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு மட்டுமே அதிகமாக இருப்பதாகவும், உணவுப் பொருட்களின் விலை நல்ல பருவமழைக்கு பின்னே கட்டுக்குள் வந்து விடும் என்றும் இதுவரை சொல்லிக் கொண்டிருந்த மத்திய வங்கி மற்றும் அரசுக்கு இந்த தகவல் ஒரு எச்சரிக்கை மணி என்று கருதுகிறேன். இன்றைய பணவீக்கத்தின் உயர்வுக்கு காரணம், உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மட்டுமல்ல, பொதுமக்கள் புழக்கத்தில் மற்றும் பதுக்கல் பேர்வழிகள் கையில் உள்ள ஏராளமான பண இருப்பும்தான் என்பதை மத்திய வங்கி புரிந்து கொள்ள வேண்டிய கட்டம் வந்து விட்டது என்றும் நினைக்கிறேன்.

பணவீக்கம் இதற்கு மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், மத்திய வங்கி தனது வட்டி வீதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அவ்வாறு வட்டி வீதம் உயர்த்தப் பட்டால், நிறுவனங்களின் உற்பத்தி செலவினங்கள் உயரும் வாய்ப்புள்ளது. உற்பத்தி பொருட்களின் விலைவாசி அதிகரிக்கும் போது பொதுமக்களின் தேவைகள் குறையும். அதிகப் படியான பணப்புழக்கம், கையிருப்பு பணத்தின் மதிப்பை வெகுவாக குறைத்து விடும். பதுக்கல் இன்னமும் அதிகமாகும். செயற்கையான பொருள் தட்டுப்பாடுகள் உருவாக்கப் படும். மொத்தத்தில் அதிகப் படியான, கட்டுக்கடங்காத பணவீக்கம் பொருளாதாரத்திற்கு ஏராளமான பாதிப்புக்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் உள்ளது. சொல்லப் போனால் பொருளாதார வளர்ச்சி பெருமளவுக்கு பாதிக்கும்.

எனவே, பங்கு சந்தையின் கவனம் இப்போதைக்கு, பணவீக்கத்தின் போக்கு மற்றும் மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுப் படுத்த எடுக்கின்ற நடவடிக்கைகளின் பக்கம் திரும்பும் என்று எதிர்பார்கிறேன். அதே சமயம், எப்போதும் போல உலக சந்தைகளின் போக்கு, குறிப்பாக ஐரோப்பிய கடன் விவகாரம் ஆகியவற்றின் தாக்கம் இந்திய சந்தைகளின் மீது தொடரும்.

சென்ற பதிவிலேயே சொன்னபடி நிபிட்டி 4950 க்கு அருகே அரணைக் கொண்டிருக்கும். 5150-5200 அளவுகளில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும். நிபிட்டி 4950 புள்ளிகளுக்கு அருகே நிபிட்டி வரும் போது, முதலீட்டாளர்கள் பங்குகளை மெல்ல மெல்ல சேகரிக்கலாம். வர்த்தகத்தில் புதிய நிலை எடுப்பவர்கள் 5150-5200 அளவை நிபிட்டி முழுமையாக கடந்த பிறகு வாங்கும் நிலை எடுக்கலாம். மற்றபடிக்கு எச்ச்சரிகையை தொடர்வது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி!

9 comments:

சதுக்க பூதம் said...

சரியான நேரத்தில் தேவையான பதிவு
India uses wholsaleprice index to calculate inflation. It it uses consumer price index as in most developed countries, real infalation rate will be more

Thomas Ruban said...

பொருளாதார வளர்ச்சி சரிசமமாக இல்லை இது மிகவும் வருத்தப்படும் விசயம்.


//நிபிட்டி 4950 க்கு அருகே அரணைக் கொண்டிருக்கும். 5150-5200 அளவுகளில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும். நிபிட்டி 4950 புள்ளிகளுக்கு அருகே நிபிட்டி வரும் போது, முதலீட்டாளர்கள் பங்குகளை மெல்ல மெல்ல சேகரிக்கலாம். வர்த்தகத்தில் புதிய நிலை எடுப்பவர்கள் 5150-5200 அளவை நிபிட்டி முழுமையாக கடந்த பிறகு வாங்கும் நிலை எடுக்கலாம். மற்றபடிக்கு எச்ச்சரிகையை தொடர்வது நல்லது.//

உங்கள் எச்சரிக்கைக்கும்,பதிவுக்கும் நன்றி சார்.

Maximum India said...

தகவலுக்கு நன்றி சதுக்க பூதம் அவர்களே!

Maximum India said...

//பொருளாதார வளர்ச்சி சரிசமமாக இல்லை இது மிகவும் வருத்தப்படும் விசயம்.//

உண்மைதான் தாமஸ் ரூபன்!

நன்றி!

Itsdifferent said...

I also felt the development first hand on my two week visit to India. I also saw the carelessness, absolutely no maintenance of existing infrastructure (telephone and electric wires hanging around dangerously is an example), no efforts to improve the life of ordinary workers - still using broom stick and hands to collect garbage, worst yet, manual labor cleaning sewage. So what is the use of 3g and 4g if the Govt cannot buy these minimum equipments and most importantly maintain it for long term use.

vasu said...

equity மற்றும் dividend இவற்றுக்கான வித்தியாசத்தை விளக்கவும்.... please.......

Maximum India said...

//I also felt the development first hand on my two week visit to India. I also saw the carelessness, absolutely no maintenance of existing infrastructure (telephone and electric wires hanging around dangerously is an example), no efforts to improve the life of ordinary workers - still using broom stick and hands to collect garbage, worst yet, manual labor cleaning sewage. So what is the use of 3g and 4g if the Govt cannot buy these minimum equipments and most importantly maintain it for long term use.//

இந்தியா இப்போது ஒரு கேபிடலிச நாடாக உருமாற ஆரம்பித்துள்ளது. அமெரிக்க வரலாற்றின் ஆரம்ப நாட்கள் போல இந்தியாவிலும் இப்போது யாருக்கும் எவர் மீதும் அக்கறையில்லை. பணம் என்பது பெரிய போதையாக உள்ளது. இது தெளிய கொஞ்ச கால அவகாசம் தேவை.

நன்றி!

Maximum India said...

வாங்க வாசு!

//equity மற்றும் dividend இவற்றுக்கான வித்தியாசத்தை விளக்கவும்.... please.......//

ரொம்பவே சிம்பிள். equity என்பது ஒரு நிறுவனத்தின் பங்கு. dividend என்பது அந்த நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு தரும் "லாபத்திலான பங்கு"

நன்றி!

vasu said...

விளக்கமளித்ததற்கு மிக்க நன்றி

Blog Widget by LinkWithin