The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Sunday, January 31, 2010
பொருளாதார மீட்சி ஏட்டு சுரைக்காய்தானோ?
கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு அமெரிக்க பொருளாதாரம் வளர்ந்திருப்பதாக அந்நாட்டிலிருந்து வரும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த வளர்ச்சி வெறும் காகித வளர்ச்சி மட்டுமே என்றும் காகிதத்தில் மட்டுமே அமெரிக்கா பொருளாதார தளர்ச்சியில் இருந்து மீண்டிருப்பதாக சில பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களில் உண்மையில்லாமல் இல்லை. அமெரிக்க அரசு வழங்கிய ஏராளமான வரிச்சலுகைகள் மற்றும் மானியங்கள்தான் அந்நாட்டை தற்காலிகமாக பொருளாதார தளர்சசியிலிருந்து விடுபடச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது. கடந்த வாரம் வெளிவந்த மிக மோசமான "வீடு விற்பனை" புள்ளிவிபரம் இந்த கருத்தினை வலுப்படுத்துகின்றது. ஏற்கனவே மிகப் பெரிய கடனாளியாக உள்ள அமெரிக்க அரசாங்கம் வரும் ஆண்டிலும் தனது மானியங்கள் மற்றும் வரிச்சலுகைகளை தொடர முடியாத பட்சத்தில், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் தடைபட வாய்ப்புள்ளது என்ற சந்தேகம் இப்போது உலக சந்தைகளில் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் நிலை இப்படி இருக்க, ஐரோப்பிய நாடுகளின் நிலையோ இன்னும் பலவீனமாக உள்ளது. கிரீஸ் நாட்டின் (திருப்பி செலுத்த முடியாத அளவினாலான) கடன் சுமை, ஸ்பெயின் நாட்டின் கடும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து தரவரிசையில் பின்னேறுவது போன்றவை உலக சந்தைகளை பெருத்த கவலைக்குள்ளாக்கியுள்ளன. ஆசிய நாடுகளில் வளர்ந்த நாடாக கருதப் படும் ஜப்பான் நிலையும் தற்போது சொல்லிக்கொள்வது போல இல்லை. உள்நாட்டு பொருளாதார தளர்ச்சியால் ஏற்கனவே அவதிப்பட்டுவரும் அந்த நாட்டிற்கு டொயோட்டா கார்களின் தரம் பற்றிய சந்தேகங்கள் ஏற்றுமதியிலும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பது ஒரு அதிர்ச்சித் தகவல். இதர ஆசிய நாடுகளின் பொருளாதாரங்கள் தற்போதைக்கு வளர்ந்து வந்தாலும், அவை பெரும்பாலும் அமெரிக்காவையே சார்ந்திருப்பதால் அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளமுடியாது. மேலும் பெரிய ஆசிய நாடுகளான இந்தியா சீனா ஆகியவற்றின் புள்ளிவிபரங்களின் நம்பகத்தன்மை குறைவு என்பதும் இங்கு கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.
மேற்சொன்ன தகவல்களின் அடிப்படையில் கடந்த ஆண்டில் பெரிய அளவு வளர்ச்சி கண்ட சர்வதேச பங்குசந்தைகள் இந்த ஆண்டு துவக்கத்திலேயே பெருத்த சரிவை சந்தித்துள்ளன. நம் நாட்டைப் பொறுத்த வரை உணவுப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கம் ஆகியவை கூடுதல் பலவீனங்களாகும். பெரிய நிறுவனங்களின் காலாண்டு லாப அளவு எதிர்பார்த்த அளவுக்கு உயராமல் போனதும் நமது சந்தையின் தோல்வி இரண்டாவது வாரமும் தொடர்கதையாக முக்கிய காரணமாகும்.
வரும் வாரத்தில் 'கரடியின்' வேகம் தடைபட வாய்ப்புக்கள் அதிகம் என்றாலும், அந்நிய முதலீட்டாளர்களின் "பங்கு-நடவடிக்கைகளே" நமது சந்தையின் போக்கினை தற்போதைக்கு நிர்ணயிக்கும் என்று நம்புகிறேன். அதுவும் குறிப்பாக உள்ளூர் நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகளுக்கான சீசன் முடிவடைந்துள்ள இந்த நேரத்தில், உலக சந்தைகளில் இருந்து பெறப்படும் குறிப்புக்களே நமது சந்தையையும் வழிநடத்த வாய்ப்புள்ளது.
குறுகிய கால நோக்கில், இந்திய பங்குசந்தையின் போக்கைப் பற்றி உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், மூன்று-நான்கு ஆண்டுகால பார்வையில் இந்திய பங்குசந்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்றே நம்பத்தோன்றுகிறது. குறிப்பாக உள்நாட்டு வளர்ச்சியை அதிகம் நம்பியுள்ள துறை சார்ந்த பங்குகள் நன்கு வளர்ச்சியுறும் என்றே நினைக்கிறேன். எனவே நீண்டகால முதலீட்டாளர்கள், இது போன்ற பங்கு சந்தை வீழ்ச்சிகளை பயன்படுத்திக் கொண்டு, 'அடிப்படைகள் சிறப்பாக உள்ள', 'வளர்ச்சி பெற்று வரும்' நிறுவனங்களின் பங்குகளில் 'மெல்ல-மெல்ல' முதலீடு செய்யலாம்.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
நன்றி!
Labels:
பங்கு சந்தை,
பொருளாதாரம்
Sunday, January 24, 2010
வழியிலே மேடுபள்ளம்!
பெரும்பாலான உலக சந்தைகள் சென்ற வாரம் பெரியதொரு வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தன. சீனா அரசு கொண்டு வந்த கடன் கட்டுப்பாட்டு நடவடிக்கை, ஒபாமா அமெரிக்க வங்கிகளின் சந்தை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவென்று அறிமுகப் படுத்த விரும்பும் சட்ட திருத்த நடவடிக்கை மற்றும் கிரீஸ் அரசின் கடன் தடுமாற்றம் ஆகியவை பங்கு சந்தை மனநிலையை வெகுவாக பாதித்தன.
உள்ளூரை பொறுத்தவரை மிகப் பெரிய கட்டுமானத்துறை நிறுவனமான லார்சென் டூப்ரோ எதிர்பார்ப்புக்கு குறைவாக லாபம் ஈட்டியது அந்த நிறுவனத்தின் பங்கினை மட்டுமல்லாமல், பல கட்டுமானப் பங்குகளையும் கீழே விழச் செய்தது.
இந்தியாவின் புள்ளியியல் துறையின் தலைவர் பணவீக்க விகிதம் இரண்டு இலக்கத்தை தொட வாய்ப்புக்கள் உள்ளன என்று கூறியதும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்ப்பை விட குறைவாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததும் உள்ளூர் சந்தையை தடுமாறச் செய்தன.
அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய தலைமை வங்கி "ரொக்க இருப்பு விகிதத்தை" (CRR) அதிகரிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ரியல் எஸ்டேட், வாகனத் துறை போன்ற Interest Rate Sensitive துறை பங்குகளை வீழ்ச்சி செய்ய அடிகோலியது.
ஒபாமாவின் கட்சி அமெரிக்க மேல்சபையில் சூப்பர் மஜோரிட்டி இழக்கும் பட்சத்தில் ஒபாமா கொண்டு வர விரும்பிய "மருத்துவ நல" மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் இருக்கலாம் என்ற அச்சத்தில் மருந்து துறை பங்குகளும் வீழ்ச்சியடைந்தன. சீனாவின் வளர்ச்சி விகிதம் குறைந்தால் கச்சா எண்ணெய் & உலோகங்களின் தேவை குறையலாம் என்ற அச்சத்தில் குறிப்பிட்ட துறை பங்குகளும் வீழ்ந்தன.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குகளை மிகப் பெரிய அளவில் விற்பனை செய்தன. இந்திய நிதி நிறுவனங்கள் ஓரளவுக்கு பங்குகளை வாங்கியது சந்தையின் வீழ்ச்சியை மட்டுப் படுத்த உதவியது.
இப்போது வரும் வார சந்தை நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
சென்ற வார இறுதியில் அமெரிக்க பங்குகள் பெருமளவுக்கு வீழ்ந்தது நாளைய சந்தை துவக்கத்தை ஓரளவுக்கு பாதிக்க வாய்ப்புள்ளது. வரும் வியாழன்று நிகழவுள்ள "மாதாந்திர எதிர்கால நிலை வர்த்தகத்தின் நிறைவு" சந்தையில் ஏராளமான ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தலாம். அமெரிக்க வங்கிகளை எந்த அளவுக்கு ஒபாமா கட்டுப் படுத்த விரும்புகிறார் என்பதையும் அந்த முயற்சி அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் இந்திய வரவை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதையும் கூர்மையாக கவனிக்க வேண்டியிருக்கும்.
வரும் வெள்ளியன்று இந்திய தலைமை வங்கி, தனது நிதி கொள்கையின் காலாண்டு அறிக்கையை வெளியிடவுள்ளது. அந்த அறிக்கையில் வட்டி வீதங்களை தலைமை வங்கி உயர்த்துமா என்பதையும் சந்தை அச்சத்துடன் கவனித்து கொண்டிருக்கும்.
பாரதிய ஸ்டேட் வங்கி, மகிந்திரா, ஸ்டெரிலைட், ஹிண்டல்கோ, SAIL டாட்டா மோட்டார், டாட்டா ஸ்டீல் போன்ற பெரிய நிறுவனங்கள் வரும் வாரத்தில் தமது காலாண்டு நிதி அறிக்கையை வெளியிடவுள்ளன. இந்த காலாண்டு அறிக்கைகள் சந்தையின் எதிர்பார்ப்புக்களை எந்த அளவுக்கு பூர்த்தி செய்யும் என்பதும் சுவாரஸ்யமான ஒன்றாகும்.
இவை மட்டுமல்லாமல், அடுத்த வாரம் வெளியிடப் படவுள்ள அமெரிக்க தலைமை வங்கியின் வட்டி நிர்ணய முடிவு மற்றும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி போன்றவையும் நமது சந்தையின் போக்கினை பாதிக்கும்.
ஆக மொத்தத்தில், வரும் வாரத்தில் நமது சந்தை பல மேடு பள்ளங்களை சந்திக்கும் என்றே இப்போதைக்கு தோன்றுகிறது. குறுகிய கால வர்த்தகர்கள் தகுந்த ஸ்டாப் லாஸ் லிமிட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடவும். நீண்ட கால முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பெரிய சரிவின் போதும் வலுவான பங்குகளை மெல்ல மெல்ல சேகரித்து வரலாம்.
வரைபட தொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி இன்டெக்ஸ் 4950 & 4780 அளவுகளில் நல்ல அரணை கொண்டிருக்கும் வாய்ப்புள்ளது. 5180 புள்ளிகள் எதிர்ப்பாக இருக்கக் கூடும்.
வரும் வாரம் எல்லாவகையிலும் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!
நன்றி.
Labels:
பங்கு சந்தை
Sunday, January 17, 2010
இந்தியா மீண்டும் வளர்ச்சி பாதையில்?
இந்தியாவின் தொழிற் உற்பத்தி கடந்த ஒரு வருடங்களாக இல்லாத அளவிற்கு (11.7%) முன்னேறி இருப்பதாக சென்ற வாரம் வெளிவந்த அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முன்னேற்றத்தின் பெரும்பகுதி, "புள்ளியல் மாயத்தின்" (Statistical Illusion) விளைவுதான் என்றாலும், இந்திய தொழிற் துறையில் மெல்ல மெல்ல நம்பிக்கை உயர்ந்து வருவதை மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி துறை சிறப்பான முன்னேற்றத்தை கண்டிருப்பது கவனிக்கத் தக்கது. பிரதமர் இந்தியா வெகு விரைவில் அதிவேக வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். இதை ஒரு "பேச்சினால் உயர்த்தும் (Talking up Economy) உத்தி" என்பது ஒருபக்கம் இருந்தாலும், இந்த நம்பிக்கையில் ஓரளவுக்கேனும் உண்மையில்லாமல் இல்லை.
உலகப் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இந்தியா மிக விரைவாக மீண்டிருப்பது குறிப்பிடத் தக்கது. சொல்லப் போனால் இந்தியாவின் வளர்ச்சி சீனாவை மிஞ்சும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பல பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். சீனாவின் பலம் அரசின் கட்டுப்பாடுகளிலேயே அமைந்திந்திருபபதால், அது நிரந்தரமானது இல்லை என்றும் இந்தியாவின் பலம் மக்களின் தொழிற் திறன் மற்றும் வணிகத் திறன் ஆகியவற்றை சார்ந்திருப்பதால் இந்தியாவின் முன்னேற்றம் இன்னும் பல ஆண்டுகள் வரை நீடித்திருக்கும் என்றும் கூறுகின்றனர்.
புலியின் (சீனா) வேகம் எப்போதுமே அதிகம் என்றாலும், எட்டு-ஒன்பது சதவீத வேகத்தில் முன்னேறும் பெரிய யானையையும் குறைத்து மதிப்பிட முடியாது அல்லவா?
இந்தியாவின் பெரிய பலங்களாக "இளைய சமுதாயம்", "உயர்வில் அதிக ஆர்வம்", "இயல்பாகவே அமைந்திருக்கும் வணிகத் திறன்", "வலுவான ஜனநாயக அமைப்பு" மற்றும் "பொருளாதார சீர்த்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள ஒருமித்த மனப்பான்மை" ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அதே சமயம், இந்தியாவின் வளர்ச்சிக்கு சில முட்டுக் கட்டைகளும் உள்ளன. அவையாவன, ஊழல் மலிந்த அரசாங்கம், கட்டுமான குறைபாடுகள், வருமான ஏற்றத்தாழ்வுகள், விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம்.
இந்த முட்டுக்கட்டைகள் தகர்க்கப்படும் பட்சத்திலேயே இந்தியா மீண்டும் ஒரு அதிவிரைவு வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்று உறுதியாக கூற முடியும்.
இப்போது நமது பங்குசந்தைக்கு வருவோம்.
திங்கட்கிழமை வெளிவந்த அதிவேக தொழிற்வளர்ச்சி தகவல் பங்குசந்தையை சந்தோசப் படுத்தினாலும், இந்த தகவல் ஏற்கனவே அறிந்திருக்கப் பட்டதால், சந்தையில் பெரிய ஒரு ரியாக்சன் காணப்படவில்லை. அதே சமயம் இன்போசிஸ் நிறுவனத்தின் சிறப்பான "வளர்ச்சி எதிர்பார்ப்புக்கள்" (Guidance) தகவல் தொழிற்நுட்ப பங்குகள் சிறப்பான முன்னேற்றம் காண உதவியது.
சென்ற மாதத்திற்கான பணவீக்கம் மிகப் பெரிய அளவில் உயர்ந்திருந்தது, இந்திய மத்திய வங்கி விரைவில், தனது வட்டி வீதங்களை உயர்த்தும் என்ற ஒரு அச்சத்தை விளைவித்தது. மேலும் இந்திய வங்கிகளின் இணைப்பில் மத்திய அரசு பெருமளவில் ஆர்வம் காட்டாததும், வாரக் கடன்களின் எண்ணிக்கை என்ற சந்தேகமும் வங்கிப் பங்குகளை பெருமளவில் வீழ்ச்சி அடைய செய்தன. உலக பங்குசந்தைகள் விரைவாக முன்னேறி இருப்பது இன்னமும் ஓரளவுக்கு தடுமாற்றத்திலேயே காணப் படும் உலகப் பொருளாதாரத்தின் உண்மையான நிலையை பிரதி பலிக்க வில்லை என்ற சந்தேகத்தின் காரணமாக உலக சந்தைகளில் ஒருவித தேக்கம் நிலவியதும், அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடுகள் சற்று குறைவாக காணப் பட்டதும் சென்ற வாரம் நமது பங்குசந்தையின் முக்கிய குறியீடுகளின் தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தன. அதே சமயத்தில் பல சிறிய மற்றும் மத்திய ரக பங்குகள் மிகப் பெரிய அளவில் உயர்ந்தன.
நிபிட்டி 5300-5350 என்ற அளவுகளில் நல்ல எதிர்ப்பை சந்தித்து வருகிறது. வெள்ளிக் கிழமை இரவு வெளிவந்த அமெரிக்க புள்ளிவிவரங்கள், அந்த நாட்டின் பங்கு சந்தையில் சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. டாலர் மேலும் வலுப் பெறுவது இந்திய பங்கு சந்தையினையும் பாதிக்க வாய்ப்புள்ளது. கிரீஸ் நாட்டின் நிதி நிலை மாற்றங்களும் நமது பங்கு சந்தையில் தாக்கத்தினை உருவாக்கும்.
அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்யும் பட்சத்தில் நிபிட்டி கீழ் நோக்கி நகரும். 5180 புள்ளிகள் பங்கு சந்தைக்கு முதல் அரணாக இருக்க வாய்ப்புள்ளது. சிறிய பங்குகளில் வர்த்தகம் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது.
ஏபிபி நிறுவனத்தின் பங்குகள், சென்ற வாரம் தொழிற்நுட்ப ரீதியாக தமது எதிர்ப்பு நிலையை முறியடித்துள்ளன. (பார்க்க வரைபடம்). இந்த பங்கு குறுகிய கால வர்த்தகத்திற்கு ஏற்றது என்று நம்புகிறேன். சந்தை கீழே வரும் பட்சத்தில் ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா பங்குகளை 2040 என்ற ஸ்டாப் லாஸ் லிமிட் வைத்துக் கொண்டு குறுகிய கால வர்த்தகத்திற்காக வாங்கலாம்.
வரும் வாரம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!
Labels:
பங்கு சந்தை,
பொருளாதாரம்
Wednesday, January 13, 2010
என்னால் என்ன முடியும்?
விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி அவர்கள் சொன்ன கதை இது!
முன்னொரு காலத்தில் ஸ்காட்லாந்தில் பிளெமிங் என்ற ஒரு ஏழை விவசாயி வாழ்ந்து வந்தார். ஒரு முறை வயலுக்கு சென்று திரும்பும் அவர் ஒரு அலறல் சத்தத்தை கேட்டார். விரைந்து சென்ற பார்த்த போது, அங்கே ஒரு சிறுவன் புதைகுழியில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கவனித்தார். நிதானமான, ஆனால் நிச்சயமான அந்த மரண பயங்கரத்தில் இருந்து அந்த சிறுவனை அவர் மீட்டெடுத்தார்.
அடுத்த நாள் அந்த விவசாயி வீட்டின் முன்னே ஒரு அலங்கார வண்டி வந்து நின்றது. அதில் இருந்து ஒரு கனவான் இறங்கி வந்து, தன்னை அந்த சிறுவனின் தந்தை என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். தான் நம் விவசாயிக்கு மிகுந்த கடன் பட்டிருப்பதாகவும், அவருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ விரும்புவதாகவும் கூறினார்.
அவருக்கு பிளெமிங் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார்.
"நன்றி ஐயா! நீங்கள் எனக்கு ஏதேனும் உதவி செய்ய விரும்பினால், என் மகனை உங்களுடன் அழைத்து செல்லுங்கள். அவனை படிக்க வையுங்கள். ஒருவேளை அவன் என்னைப் போலவே இருந்தால், ஒருநாள் நிச்சயமாக உங்களை பெருமை அடைய செய்வான்"
அந்த சிறுவனை அழைத்துச் சென்ற கனவான், தான் வாக்களித்தது போலவே நன்கு படிக்க வைத்தார்.
அந்த சிறுவனும் தனது தந்தையின் வாக்கை காப்பாற்றினான். சொல்லப் போனால், அந்த கனவானின் மகனின் உயிரை இரண்டாவது முறையாக காப்பாற்றினான்.
அந்த சிறுவன்தான், மனித குலத்தின் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பான பென்சிலின் மருந்தை கண்டு பிடித்த அலெக்சாண்டர் பிளெமிங்.
நிம்மோனியா வியாதியில் இருந்து அவர் காப்பாற்றிய அந்த கனவானின் மகனும் சாதாரண ஆள் இல்லை. பிரிட்டனில் பெரும் சமூக தொண்டாற்றிய ருடால்ப் சர்ச்சில். அவருடைய மகன்தான், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற பிரதமர்களில் ஒருவரான வின்ஸ்டன் சர்ச்சில்.
இப்படி விவசாயி மற்றும் அந்த கனவான் செய்த இரண்டு நல்ல காரியங்கள் இந்த உலகிற்கே பெரிய பலன்களை தந்திருக்கின்றன.
"பெரிய அளவில் புரையோடிப் போய் இந்த சமுதாயத்தில் என்னால் மட்டும் என்ன மாற்றத்தை கொண்டு வந்து விட முடியும்?" என்ற ஒரு கேள்வி இன்று நம்மில் பலருக்கும் தோன்றிய வண்ணமே உள்ளது.
ஒரு துளி நீர், சமுத்திரத்தை விட மிக சிறிதாக இருக்கலாம்.
ஆனால் சமுத்திரம் சமுத்திரமாகவே இருப்பதற்கு அந்த துளி நீர்தான் முக்கிய காரணமாக இருக்கிறது.
பட்டாம் பூச்சி விளைவு பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு பட்டாம் பூச்சியின் மென்மையான சிறகடிப்பினால் கூட பூகம்பங்கள் உருவாகும் என்பதுதான் அந்த தத்துவம்.
மற்றவரைப் பற்றி கவலைப் படாமல் சமுதாயத்தின் மீதான நமது மாற்றங்களை கொண்டுவர துவங்குவோம். அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி.
புத்தரின் சிஷ்யர் ஒருமுறை கேட்டாராம், "நான் எங்கே இருந்து ஞானத்திற்கான வழியை தேடுவது?" என்று. புத்தரின் பதில் "இங்கேயிருந்தே தொடங்குங்கள்" என்பதுதான்.
புத்தரின் வாக்கின்படி நாமும் இங்கிருந்தே, இப்போதிலிருந்தே நம்மால் இயன்ற மாற்றங்களை கொண்டுவருவோம். யாருக்கு தெரியும்? அவற்றின் பலன்கள் மிகப் பெரிதாக கூட இருக்கலாம்.
நாளைய பொங்கல் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கச் செய்யட்டும்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
நன்றி!
Labels:
சமூகம்
Monday, January 11, 2010
ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகளா?
திருட்டு டிவிடியில் சினிமா படம் பார்த்தால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் படுவர் என்று ஒரு சட்டம் வரப் போவதாக பத்திரிக்கை செய்தியில் பார்த்தவுடன் என்னுள் பல கேள்விகள் எழுந்தன. அவற்றை இங்கே பதிய விரும்புகின்றேன்.
இந்த திருட்டு டிவிடி சட்டம் உள்ளூர் படங்களுக்கு மட்டும்தானா அல்லது உலகப் படங்களுக்குமா?
ஒருவேளை உலக படங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தினால் நிறைய ஜாம்பவான்கள் சிறையில்தானே தமிழ் படம் தயாரிக்க வேண்டியிருக்கும்?
அப்படி சிறையில் இருந்துகொண்டே திரைப்படம் எடுப்பவர்கள் சிறைஞானி என்று அழைக்கப் படுவார்களா?
இன்றைய தேதியில் வெளிவரும் பல தமிழ் படங்களை பார்ப்பதே ஒரு பெரிய தண்டனைதானே?
இதற்கும் மேல் ஒரு குண்டர் சட்டம் தேவையா?
ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகள் வழங்கும் சட்டம் செல்லாது என்று அரசியல் சாசனம் சொல்கின்றதே?
தீவிரவாதிகள் எல்லோரும் கூவிக் கூவி திருட்டு டிவிடி விற்கிறார்கலாமே? அதனால்தான் கொஞ்ச நாட்களாக குண்டு சத்தம் குறைவாக கேட்கின்றதோ?
அப்படியே அவர்களை திரைப்படங்களையும் தயாரிக்க சொல்லி விடுங்களேன். கைதாகாமலேயே நிறைய பேரை வதைக்கலாமல்லவா?
இன்றைய தேதியில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களைக் கொண்டே வீட்டில் "சிவனே என்று" தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் கூட கைது செய்ய முடியுமே?
இப்போதிருக்கும் சட்டங்களைக் கொண்டு, பலர் பேர் முன்னிலையில், ஏன் வீடியோ ஆதாரத்துடன் தவறு செய்தாலும் கூட தண்டிக்க முடியாதுதானே?
அப்படியிருக்கும் போது எதற்கு ஒரு இன்னொரு புதிய சட்டம்?
ஏதோ செய்வது போல காட்டிக் கொள்ளத்தானோ?
ஒரு திரைப்படம் அரங்கில் வெளிவருவதற்கு முன்னரே திருட்டு டிவிடியில் வெளிவருகின்றது என்றால் அது உள்ளாட்கள் உதவியின்றி நடக்காது என்பது சினிமா சூப்பர் ஸ்டார்களுக்கு தெரியாதா?
தொலைத்த இடத்தில் தேடாமல், வெளிச்சம் இருக்கும் வேறொரு இடத்தில் ஒன்றும் கிடைக்காது என்பது அந்த சகலகலா வல்லவர்களுக்கு தெரியாதோ?
எல்லாம் ஒரு விளம்பரம்தானோ?
ஆக மொத்தத்தில் எல்லாருக்கும் பொழுது நன்றாகவே போயிற்று. எனக்கும் ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு வெகுஜன பதிவு ஆயிற்று.
மொத்தத்தில் ஏதேனும் ஒன்று செய்து தமிழர்களின் சினிமா பார்க்கும் நேரத்தை குறைத்தால் சரிதான்.
ஆகா! ஒரு மெசேஜும் ஆயிற்று.
நன்றி!
Labels:
செய்தியும் கோணமும்
Sunday, January 10, 2010
அளவுக்கு மிஞ்சினால்?
இன்று காலையில் பிசினெஸ் லைன் (Business Line) பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி எனக்குள் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் இதுவரை செய்துள்ள முதலீட்டின் அளவு சுமார் 85 பில்லியன் டாலர்கள். அந்த முதலீட்டின் சந்தை மதிப்பு (செப்டம்பர் 2009) சுமார் 154 பில்லியன் டாலர்கள். கடைசியாக வந்த மத்திய வங்கி (RBI) தகவலின் படி இந்தியாவின் மொத்த அந்நிய செலவாணி கையிருப்பு சுமார் 284 பில்லியன் டாலர்கள். இந்த கையிருப்பில், அந்நிய பங்கு முதலீடுகள் மட்டுமல்லாமல் ஏற்றுமதி வருவாய், அந்நிய நாடுகளிடம் கடனாக பெற்ற தொகை, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தாய் நாட்டுக்கு அனுப்பிய பணம் அனைத்தும் அடங்கும்.
மிக எளிதில் வெளியேறக் கூடிய பங்கு முதலீட்டு பணமானது (portfolio investment) மொத்த அந்நிய செலவாணி கையிருப்பில் ஐம்பது சதவீதத்திற்கும் மேலே இருப்பது, பொருளாதார ரீதியாக இந்தியாவை ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வைத்திருப்பதாகவே கருதுகிறேன். ஒருவேளை அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவை விட்டு திடீரென்று வெளியேற முற்பட்டால், முன்னொரு காலத்தில் தங்கத்தை அடகு வைத்த நிலை கூட திரும்பக் கூடும். அவர்கள் உடனடியாக வெளியேறாமல் தடுப்பதற்காக அரசாங்கம் அவர்களுக்கு தேவையற்ற (நீண்ட கால முதலீட்டு வரி விலக்கு போன்றவை) சலூகைகளை வழங்க வேண்டி இருக்கிறது என்பதும் அது போன்ற சலுகைகள் நாட்டை இன்னொரு மேலை நாட்டு சுரண்டல் காலத்திற்கு இட்டுச் செல்கிறது என்றும் நினைக்கிறேன்.
இப்போது நமது பங்கு சந்தைக்கு வருவோம்.
மிகுந்த ஆரவாரத்துடன் ஆண்டுக் கணக்கை துவங்கிய நமது பங்கு சந்தை, வாரத்தின் இறுதி பகுதியில் சற்று தடுமாற்றத்தை சந்திக்க நேரிட்டது. சீன நாணயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், உலக பொருளாதாரத்தின் நிலை பற்றிய குழப்பமான தகவல்கள், லாப விற்பனை மற்றும் பங்குகளின் மதிப்பு பற்றிய வினாக்கள் ஆகியவை சந்தையை பெரிய அளவில் முன்னேறவிடாமல் தடுக்கின்றன. அதே சமயத்தில் அடிப்படைகள் வலுவில்லாத பல நிறுவனங்களின் பங்குகள் பெரிய அளவில் முன்னேறியது, சந்தை இப்போது பெரிய வணிகர்களின் (Operators) கையில் மீண்டுமொருமுறை சிக்கி உள்ளது என்பதையே காட்டுகின்றது.
தொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி 5160 மற்றும் 5080 ஆகிய நிலைகளில் நல்ல அரணைக் கொண்டிருக்கும். 5320 மற்றும் 5400 அளவுகள் எதிர்ப்பு நிலையாக இருக்கும். டாடா டீ பங்கு பல வருடங்களாக சந்தித்து வந்த 1000 என்ற வலுவான எதிர்ப்பு நிலையை(Chart) முறியடித்துள்ளது. 920 ருபாய் என்ற நிலையை ஸ்டாப் லாஸ் லிமிட் ஆக வைத்துக் கொண்டு ஒரு வருடத்திற்கான வர்த்தக நிலையை (Trading Position) எடுக்கலாம். ஒரு வருடத்தில் இந்த பங்கு 1400-1500 வரை உயர வாய்ப்புள்ளது.
மற்றபடிக்கு அடிப்படை வலுவில்லாத சிறிய பங்குகளில் வர்த்தக நிலை எடுப்பவர்கள் வதந்திகளை நம்பாமல் இருப்பது நல்லது. முதலீட்டாளர்கள் சென்ற பதிவில் கூறியது போன்ற நீண்டகால முதலீட்டு நிலை எடுப்பது நல்லது.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
Labels:
பங்கு சந்தை,
பொருளாதாரம்
Sunday, January 3, 2010
புத்தாண்டே வருக! வளமான வாழ்வு தருக!
எப்போதும் போலவே கடந்த ஆண்டும் சந்தை ஏராளமான ஆச்சரியங்களை உள்ளடக்கி இருந்தது. உலக பொருளாதார சிக்கல், வலுவிழந்த இந்திய நாணயம், தெளிவில்லாத அரசியல் சூழ்நிலை ஆகியவற்றுக்கும் இடையேயும் நம்பிக்கையுடனேயே தனது கணக்கை துவங்கிய இந்திய பங்கு சந்தைக்கு ஆரம்பத்திலேயே சத்யம் எனும் அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது.
'எந்த புற்றில் எந்த பாம்போ' என்ற அச்சம் மேலும் மேலும் வலுவடைந்து மார்ச் மாத வாக்கில் சந்தை பல ஆண்டுகளுக்கான கீழ்நிலையை தொட்டது. "ஓவரான அவநம்பிக்கையில்தான் காளை ஓட்டம் துவங்குகிறது' என்ற சந்தை பொன் மொழிக்கேற்ப, மார்ச் மாதம் துவங்கிய காளை ஓட்டம் டிசம்பர் இறுதி வரையுமே தொடர்ந்து வந்தது மட்டுமல்லாமல், வருடத்தின் அதிக பட்ச நிலையிலேயே சந்தையின் முக்கிய குறியீடுகள் முடிந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த (கிட்டத்தட்ட) தனிப் பெரும்பான்மை, அசாதாரண அளவிலான அந்நிய முதலீடுகள், இந்திய நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடு ஆகியவையே இந்த அசத்தல் வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன். இந்த வெற்றி புதிய ஆண்டிலும் தொடருமா என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
முதலில் சாதக அம்சங்கள்
கடந்த இருபது ஆண்டுகளின் பொருளாதார சீர்திருத்தங்களின் பலன்கள் நமது கண்முன்னே தெரிய ஆரம்பித்துள்ளன. திறந்த நிலை பொருளாதாரத்தின் சாதக அம்சங்களை இந்திய நிறுவனங்கள் சிறப்பாகவே பயன்படுத்தி வருகின்றன. பெரிய நிறுவனங்களின் லாப விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நெருக்கடியான காலகட்டத்தில் கூட இந்திய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியது, உலக முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவை திரும்பி பார்க்க செய்தது. அந்நிய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை பெருமளவு கையகப் படுத்திய காலங்கள் மறைந்து இந்திய நிறுவனங்கள் தைரியமாக அந்நிய நிறுவனங்களை கையகப் படுத்த முனைந்து வருகின்றன. உலக பொருளாதாரத்தில் இந்திய நிறுவனங்களின் முத்திரை தெளிவாக பதிந்து வருவதுடன், உலக முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவை ஒரு முக்கிய முதலீட்டு தளமாக கருதுவதும் குறிப்பிடத்தக்கது.
கூட்டணி குழப்பங்கள் குறைந்துள்ளதும், பொருளாதார சீர்திருத்தங்களில் பெரும்பாலான அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள ஒருமித்த கருத்துக்களும் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று நினைக்கிறேன். சிறப்பாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு சந்தைக்கு கொண்டு வரும் பட்சத்தில், முதலீட்டாளர்களுக்கு நல்ல முதலீட்டு வாய்ப்புக்கள் கிடைப்பதுடன், சந்தையின் மீதான ஈர்ப்பும் அதிகமாக வாய்ப்புள்ளது.
உலக அளவில் கூட பொருளாதார குழப்பங்கள் குறைந்து, புதிய நம்பிக்கைகள் உதித்திருப்பது இந்தியாவின் ஏற்றுமதி உயர உதவும். குறிப்பாக தகவல் தொழிற்நுட்ப துறை, ஆடை உற்பத்தித் துறை மற்றும் ஆபரண துறை ஆகியவை சிறப்பாக செயல்படக் கூடும். பொருளாதார மீட்சி, கணிமத்துறைக்கும் உதவும்.
அரசு ஊழியர்களுக்கான சம்பள நிலுவை தொகை பட்டுவாடா, விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடிகள், அந்நிய முதலீடுகள் மற்றும் அரசாங்கத்தின் ஏராளமான பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் ஆகியவை இந்திய பொருளாதாரத்தில் ஏராளமான பணவரவை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே அதிக பணம் புழங்குவது மற்றும் மத்திய வர்க்கத்தின் புதிய ஆர்வங்கள் நுகர்வோர் பொருட்சந்தையில் அதிக தேவைகளை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாக வாகனத்துறை, ரியல் எஸ்டேட், சுற்றுலாத்துறை போன்ற துறைகள் மேலும் செழிப்புற வாய்ப்புக்கள் உள்ளன.
இப்போது பாதக அம்சங்கள்
மக்களின் வருவாயில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், தீவிரவாத தாக்குதல் அச்சங்கள், தற்போது ஆந்திராவில் உள்ளது போன்ற சமூக அமைதியின்மை, பெருகி வரும் ஊழல், கட்டுமான தேவைகள், விண்ணை முட்டும் விலைவாசிகள், தவறிப் போன பருவமழை மற்றும் கடனில் தவிக்கும் அரசு ஆகியவை பாதக அம்சங்கள் ஆகும்.
மத்திய அரசின் தற்போதைய மோசமான நிதி நிலவரத்தின் அடிப்படையில், தனது (பல) மீட்சி திட்டங்களை விரைவில் திரும்பி பெற வேண்டியிருக்கும். சந்தையில் உள்ள ஏராளமான பணவரவினால் உருவாகியுள்ள பணவீக்கத்தை கட்டுபடுத்துவதற்காக மத்திய வங்கி தனது வட்டி வீதங்களை விரைவில் உயர்த்த வேண்டியிருக்கும். இந்த வருடமும் பருவமழை தவறினால் (ஒரு ஆஸ்திரேலிய ஆராய்ச்சி நிறுவனம், எல்நினோ பாதிப்பினால் இந்த வருடமும் இந்தியாவில் பருவமழை பொய்க்கும் என்று கணித்துள்ளது. நம்மூர் வானிலை அறிக்கைகளை போலில்லாமல் இந்த கணிப்பு ஓரளவுக்கு சரியாக இருக்கும் என்று நம்பலாம்) நமது பொருளாதாரம் ஒரு பெரிய அதிர்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் உணவு பொருட்களில் ஏற்படக்கூடிய பெரிய அளவிலான விலைவாசி உயர்வு (Hyper Inflation) நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும்.
மொத்தத்தில் பொருளாதாரத்தில் காணப்படும் சாதக பாதக அம்சங்கள் சரிக்கு சமமாகவே அமைந்துள்ள இன்றைய சூழ்நிலையில் சந்தைகளின் நிலையை பற்றி இப்போது பார்ப்போம்.
பங்குகளின் விலை நிலவரங்கள், பல நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சியை கிட்டத்தட்ட சரியான அளவிலேயே உள்வாங்கி உள்ளன. சிறிய பங்குகளின் விலைகள் மட்டுமே சற்று குறைவாக இருந்தாலும், அவற்றின் வருங்கால செயல்பாடுகளின் மீது சந்தைக்கு உள்ள சந்தேகத்தின் அடிப்படையிலேயே விலை குறைவாக உள்ளது என்பதையும் நினைவு கொள்ள வேண்டும்.
தற்போதைக்கு அந்நிய முதலீடுகள்தான் சந்தையை மேலும் மேலும் உயர செய்துள்ளன. சந்தை அடிப்படைகள் சற்று பின்னேயே தள்ளப் பட்டுள்ளன. அந்நிய முதலீடுகள் இதே ரீதியில் தொடர்ந்து வரும் பட்சத்தில், நமது சந்தையின் முக்கிய குறியீடுகள் புதிய சரித்திரத்தை படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
நமது பதிவுலக நண்பர்களுக்கான கருத்துரைகள் கீழே.
ஏற்கனவே பல முறை இந்த பதிவு வலையில் கூறியுள்ள படி, முதலீட்டை ஒரு தனி முடிவாக (Instant Decision) எடுக்காமல், தொடர் செயல்பாடாக (Process) வைத்துக்கொள்ளவும். தனது சேமிப்பின் ஒரு பகுதியை (அதாவது உடனடி தேவைகள் இல்லாத பணத்தை) பங்கு சந்தையில் சிறப்பாக செயல்படும் அடிப்படைகள் வலுவாக அமைந்துள்ள நிறுவனங்களில் அவ்வப்போது தொடர்ச்சியாக முதலீடு செய்து வரவும். தொடர்ச்சியாக செய்யப் படும் முதலீடுகளில், பங்குகளின் விலை பற்றியோ சந்தையின் அளவு பற்றியோ கவலைப் படத் தேவையில்லை. தனிப்பட்ட நிறுவனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவகாசம் இல்லாதவர்கள் பரஸ்பர நிதிகளின் மாதாந்திர முதலீடுகள் (SIP) அல்லது NIFTY BEES, JUNIOR NIFTY BEES போன்ற நிதிகளில் (ETF) மாதாமாதம் முதலீடு செய்யலாம். அடுத்த பத்தாண்டுகளில் இந்திய பொருளாதாரம் மூன்று மடங்கு உயரும் பட்சத்தில் முக்கிய குறியீடுகளும் மூன்று மடங்கு உயர வாய்ப்புள்ளது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஓரளவுக்கு பிரதிபலிக்கக் கூடிய முக்கிய குறியீடு நிதிகளில் (NIFTY BEES, JUNIOR NIFTY BEES, SENSEX) மாதாமாதம் முதலீடு செய்வது சாலச் சிறந்தது என்று நினைக்கிறேன். தங்க நிதிகளில் கூட அவ்வப்போது (மொத்த முதலீட்டில் 5-10%) முதலீடு செய்து வரலாம்.
அடுத்த பத்தாண்டுகள் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஆண்டாக இருக்கும் என்று சொல்லப் படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பலனை நம் போன்ற எளியவர்கள் பெற ஒரு சிறந்த வழித்துணை பங்கு சந்தைகள் ஆகும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, சிறுதுளி பெருவெள்ளம் போன்ற தமிழ் பொன்மொழிகளையும், அவநம்பிக்கையில் காளை தொடங்குவது போல அபரிமிதமான நம்பிக்கையில்தான் கரடி ஓட்டம் துவங்குகிறது என்ற பங்கு சந்தை தங்க மொழியையும் நினைவில் வைத்துக் கொண்டு பங்கு சந்தையில் ஈடுபடும் படி அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
வரும் ஆண்டு நமது பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக விளங்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
மீண்டுமொருமுறை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Labels:
பங்கு சந்தை,
பொருளாதாரம்
Subscribe to:
Posts (Atom)