
உலகப் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இந்தியா மிக விரைவாக மீண்டிருப்பது குறிப்பிடத் தக்கது. சொல்லப் போனால் இந்தியாவின் வளர்ச்சி சீனாவை மிஞ்சும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பல பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். சீனாவின் பலம் அரசின் கட்டுப்பாடுகளிலேயே அமைந்திந்திருபபதால், அது நிரந்தரமானது இல்லை என்றும் இந்தியாவின் பலம் மக்களின் தொழிற் திறன் மற்றும் வணிகத் திறன் ஆகியவற்றை சார்ந்திருப்பதால் இந்தியாவின் முன்னேற்றம் இன்னும் பல ஆண்டுகள் வரை நீடித்திருக்கும் என்றும் கூறுகின்றனர்.
புலியின் (சீனா) வேகம் எப்போதுமே அதிகம் என்றாலும், எட்டு-ஒன்பது சதவீத வேகத்தில் முன்னேறும் பெரிய யானையையும் குறைத்து மதிப்பிட முடியாது அல்லவா?
இந்தியாவின் பெரிய பலங்களாக "இளைய சமுதாயம்", "உயர்வில் அதிக ஆர்வம்", "இயல்பாகவே அமைந்திருக்கும் வணிகத் திறன்", "வலுவான ஜனநாயக அமைப்பு" மற்றும் "பொருளாதார சீர்த்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள ஒருமித்த மனப்பான்மை" ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அதே சமயம், இந்தியாவின் வளர்ச்சிக்கு சில முட்டுக் கட்டைகளும் உள்ளன. அவையாவன, ஊழல் மலிந்த அரசாங்கம், கட்டுமான குறைபாடுகள், வருமான ஏற்றத்தாழ்வுகள், விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம்.
இந்த முட்டுக்கட்டைகள் தகர்க்கப்படும் பட்சத்திலேயே இந்தியா மீண்டும் ஒரு அதிவிரைவு வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்று உறுதியாக கூற முடியும்.
இப்போது நமது பங்குசந்தைக்கு வருவோம்.
திங்கட்கிழமை வெளிவந்த அதிவேக தொழிற்வளர்ச்சி தகவல் பங்குசந்தையை சந்தோசப் படுத்தினாலும், இந்த தகவல் ஏற்கனவே அறிந்திருக்கப் பட்டதால், சந்தையில் பெரிய ஒரு ரியாக்சன் காணப்படவில்லை. அதே சமயம் இன்போசிஸ் நிறுவனத்தின் சிறப்பான "வளர்ச்சி எதிர்பார்ப்புக்கள்" (Guidance) தகவல் தொழிற்நுட்ப பங்குகள் சிறப்பான முன்னேற்றம் காண உதவியது.
சென்ற மாதத்திற்கான பணவீக்கம் மிகப் பெரிய அளவில் உயர்ந்திருந்தது, இந்திய மத்திய வங்கி விரைவில், தனது வட்டி வீதங்களை உயர்த்தும் என்ற ஒரு அச்சத்தை விளைவித்தது. மேலும் இந்திய வங்கிகளின் இணைப்பில் மத்திய அரசு பெருமளவில் ஆர்வம் காட்டாததும், வாரக் கடன்களின் எண்ணிக்கை என்ற சந்தேகமும் வங்கிப் பங்குகளை பெருமளவில் வீழ்ச்சி அடைய செய்தன. உலக பங்குசந்தைகள் விரைவாக முன்னேறி இருப்பது இன்னமும் ஓரளவுக்கு தடுமாற்றத்திலேயே காணப் படும் உலகப் பொருளாதாரத்தின் உண்மையான நிலையை பிரதி பலிக்க வில்லை என்ற சந்தேகத்தின் காரணமாக உலக சந்தைகளில் ஒருவித தேக்கம் நிலவியதும், அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடுகள் சற்று குறைவாக காணப் பட்டதும் சென்ற வாரம் நமது பங்குசந்தையின் முக்கிய குறியீடுகளின் தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தன. அதே சமயத்தில் பல சிறிய மற்றும் மத்திய ரக பங்குகள் மிகப் பெரிய அளவில் உயர்ந்தன.
நிபிட்டி 5300-5350 என்ற அளவுகளில் நல்ல எதிர்ப்பை சந்தித்து வருகிறது. வெள்ளிக் கிழமை இரவு வெளிவந்த அமெரிக்க புள்ளிவிவரங்கள், அந்த நாட்டின் பங்கு சந்தையில் சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. டாலர் மேலும் வலுப் பெறுவது இந்திய பங்கு சந்தையினையும் பாதிக்க வாய்ப்புள்ளது. கிரீஸ் நாட்டின் நிதி நிலை மாற்றங்களும் நமது பங்கு சந்தையில் தாக்கத்தினை உருவாக்கும்.
அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்யும் பட்சத்தில் நிபிட்டி கீழ் நோக்கி நகரும். 5180 புள்ளிகள் பங்கு சந்தைக்கு முதல் அரணாக இருக்க வாய்ப்புள்ளது. சிறிய பங்குகளில் வர்த்தகம் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது.
ஏபிபி நிறுவனத்தின் பங்குகள், சென்ற வாரம் தொழிற்நுட்ப ரீதியாக தமது எதிர்ப்பு நிலையை முறியடித்துள்ளன. (பார்க்க வரைபடம்). இந்த பங்கு குறுகிய கால வர்த்தகத்திற்கு ஏற்றது என்று நம்புகிறேன். சந்தை கீழே வரும் பட்சத்தில் ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா பங்குகளை 2040 என்ற ஸ்டாப் லாஸ் லிமிட் வைத்துக் கொண்டு குறுகிய கால வர்த்தகத்திற்காக வாங்கலாம்.
வரும் வாரம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!
Comments
நல்ல தகவல் சார். புதியவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பயனுள்ளது.
பதிவுக்கு நன்றி சார்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பதிவிலேயே குறிப்பிட்டிருப்பது போல், இந்தியா சீனாவை முந்தும் என்பது என் தனிப்பட்ட கருத்து அல்ல. ஏனென்றால் நான் இன்னும் இந்தியாவை பற்றியே முழுமையாக அறிந்தவன் அல்ல எனும் போது சீனாவைப் பற்றி குறிப்பாக அதன் பொருளாதாரத்தைப் பற்றி பெரிதாக கருத்து சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். அதே சமயம், இந்தியா மற்றும் சீனா பொருளாதாரங்களை ஒப்பிடும் பல பன்னாட்டு பொருளாதார நிபுணர்களின் கருத்தைத்தான் இங்கு பதிந்திருக்கிறேன்.
சீனா பொருளாதாரம் அரசு தலையீட்டாலும், இந்திய பொருளாதாரம் தனி நபர் தொழிற் முனைவோராலும் வளர்ச்சி பெறுவது முதல் கருத்து.
supply அடிப்படையிலானது சீனா பொருளாதாரம். demand அடிப்படையிலானது இந்திய பொருளாதாரம் என்பது இரண்டாவது முக்கிய கருத்து.
இந்தியாவின் பலவீனங்கள் அதிகம் என்றாலும், சுதந்திரமான வளர்ச்சியே அதிக நாளுக்கு நிலைக்கும் என்பதே பல பன்னாட்டு குறிப்பாக மேலைநாட்டு பொருளாதார கருத்து என்று நினைக்கிறேன். இதனாலேயே சீனாவை விட இந்தியாவிற்கு அதிக பங்கு முதலீடுகள் வந்து குவிகின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
நன்றி.
இந்தியா எப்போதுமே ஒருவித "Free Society" ஆகத்தான் இருந்திருக்கிறது. இங்கே ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கூட பல்வேறு மதங்கள், மத எதிர்ப்பாளர்கள், புரட்சிக்காரர்கள் என எல்லோரும் ஒன்றாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் ஒரே குடும்பத்தில் கூட ஆத்திகர் நாத்திகர் மற்றும் வேறு வேறு கட்சிக்காரர்களை இப்போதும் பார்க்க முடியும். சீனாவைப் போல ஒரு பட்டனை தட்டி பொருளாதார மாற்றங்களை கொண்டு வர எப்போதுமே முடிந்ததில்லை. இதுவே நமது பலமாகவும் பலவீனமாகவும் இருந்து வருகிறது.
அங்கே இருப்பது போன்ற சர்வாதிகாரங்கள் (அவை எவ்வளவு நல்லவையாக இருந்தாலும் கூட) இங்கே நிலைத்து இருந்தது இல்லை. பிரதமரை, முதல்வரை ஏன் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தாக கருதப் படும் காந்தியைக் கூட வெளிப்படையாக விமர்சிக்கும் அளவுக்கு இங்கு சுதந்திரம் ஏராளமாக உள்ளது. இப்படிப்பட்ட சுதந்திரத்தினால் ஏராளமான தொல்லைகள் இருந்தாலும் இதை நம்மால் முழுமையாக விட்டுக் கொடுத்துவிடவும் முடியாது. சுதந்திரமில்லாத வேகமான வளர்ச்சியை விட சுதந்திரமான நிதானமான வளர்ச்சியையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை கடந்த இருபது ஆண்டுகால இந்திய சரித்திரம் சொல்கிறது.
நன்றி.
1.China big natural hazards. And stop to progress.
2.India follow china ways to prosper except one party rule.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை ஜனநாயகமாக இருந்தால் மட்டுமே அந்த வளர்ச்சி நீடித்து நிலைக்க முடியும் என்பது என் கருத்து. இல்லையென்றால் "பில்டிங் ஸ்ட்ரோங் - பேஸ்மென்ட் வீக்" கதைதான். உதாரணங்களாக ரஷ்யா, கிழக்கு ஜெர்மெனி, செக் குடியரசு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். நீங்கள் சொன்ன இரண்டு வாய்ப்புக்களுடன் மூன்றாவது ஒன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
"சீனா அரசு மக்களை வளர்ச்சி என்ற மாயவலைக்குள் வைத்திருக்கிறது. என்றைக்கு சீனாவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து போகிறதோ, அன்றைக்கு அங்கே ஒரு மிகப் பெரிய ரத்த புரட்சி ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்"
இந்த ரிஸ்க் இந்தியாவில் கொஞ்சம் குறைவு. காரணம் இந்தியா என்றென்றைக்குமே ஒரு "ஓபன் சொசைடி" ஆகவே இருந்திருக்கிறது. ஆனால் சீனா ஒரு பிரஷர் குக்கர். அழுத்தம் அதிகமானாலோ அல்லது "செக் வெய்ட்" சரியாக வேலை செய்யாவிட்டாலோ வெடித்து சிதறி விடும்.
நன்றி.