Sunday, January 31, 2010

பொருளாதார மீட்சி ஏட்டு சுரைக்காய்தானோ?


கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு அமெரிக்க பொருளாதாரம் வளர்ந்திருப்பதாக அந்நாட்டிலிருந்து வரும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த வளர்ச்சி வெறும் காகித வளர்ச்சி மட்டுமே என்றும் காகிதத்தில் மட்டுமே அமெரிக்கா பொருளாதார தளர்ச்சியில் இருந்து மீண்டிருப்பதாக சில பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களில் உண்மையில்லாமல் இல்லை. அமெரிக்க அரசு வழங்கிய ஏராளமான வரிச்சலுகைகள் மற்றும் மானியங்கள்தான் அந்நாட்டை தற்காலிகமாக பொருளாதார தளர்சசியிலிருந்து விடுபடச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது. கடந்த வாரம் வெளிவந்த மிக மோசமான "வீடு விற்பனை" புள்ளிவிபரம் இந்த கருத்தினை வலுப்படுத்துகின்றது. ஏற்கனவே மிகப் பெரிய கடனாளியாக உள்ள அமெரிக்க அரசாங்கம் வரும் ஆண்டிலும் தனது மானியங்கள் மற்றும் வரிச்சலுகைகளை தொடர முடியாத பட்சத்தில், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் தடைபட வாய்ப்புள்ளது என்ற சந்தேகம் இப்போது உலக சந்தைகளில் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் நிலை இப்படி இருக்க, ஐரோப்பிய நாடுகளின் நிலையோ இன்னும் பலவீனமாக உள்ளது. கிரீஸ் நாட்டின் (திருப்பி செலுத்த முடியாத அளவினாலான) கடன் சுமை, ஸ்பெயின் நாட்டின் கடும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து தரவரிசையில் பின்னேறுவது போன்றவை உலக சந்தைகளை பெருத்த கவலைக்குள்ளாக்கியுள்ளன. ஆசிய நாடுகளில் வளர்ந்த நாடாக கருதப் படும் ஜப்பான் நிலையும் தற்போது சொல்லிக்கொள்வது போல இல்லை. உள்நாட்டு பொருளாதார தளர்ச்சியால் ஏற்கனவே அவதிப்பட்டுவரும் அந்த நாட்டிற்கு டொயோட்டா கார்களின் தரம் பற்றிய சந்தேகங்கள் ஏற்றுமதியிலும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பது ஒரு அதிர்ச்சித் தகவல். இதர ஆசிய நாடுகளின் பொருளாதாரங்கள் தற்போதைக்கு வளர்ந்து வந்தாலும், அவை பெரும்பாலும் அமெரிக்காவையே சார்ந்திருப்பதால் அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளமுடியாது. மேலும் பெரிய ஆசிய நாடுகளான இந்தியா சீனா ஆகியவற்றின் புள்ளிவிபரங்களின் நம்பகத்தன்மை குறைவு என்பதும் இங்கு கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.

மேற்சொன்ன தகவல்களின் அடிப்படையில் கடந்த ஆண்டில் பெரிய அளவு வளர்ச்சி கண்ட சர்வதேச பங்குசந்தைகள் இந்த ஆண்டு துவக்கத்திலேயே பெருத்த சரிவை சந்தித்துள்ளன. நம் நாட்டைப் பொறுத்த வரை உணவுப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கம் ஆகியவை கூடுதல் பலவீனங்களாகும். பெரிய நிறுவனங்களின் காலாண்டு லாப அளவு எதிர்பார்த்த அளவுக்கு உயராமல் போனதும் நமது சந்தையின் தோல்வி இரண்டாவது வாரமும் தொடர்கதையாக முக்கிய காரணமாகும்.

வரும் வாரத்தில் 'கரடியின்' வேகம் தடைபட வாய்ப்புக்கள் அதிகம் என்றாலும், அந்நிய முதலீட்டாளர்களின் "பங்கு-நடவடிக்கைகளே" நமது சந்தையின் போக்கினை தற்போதைக்கு நிர்ணயிக்கும் என்று நம்புகிறேன். அதுவும் குறிப்பாக உள்ளூர் நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகளுக்கான சீசன் முடிவடைந்துள்ள இந்த நேரத்தில், உலக சந்தைகளில் இருந்து பெறப்படும் குறிப்புக்களே நமது சந்தையையும் வழிநடத்த வாய்ப்புள்ளது.

குறுகிய கால நோக்கில், இந்திய பங்குசந்தையின் போக்கைப் பற்றி உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், மூன்று-நான்கு ஆண்டுகால பார்வையில் இந்திய பங்குசந்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்றே நம்பத்தோன்றுகிறது. குறிப்பாக உள்நாட்டு வளர்ச்சியை அதிகம் நம்பியுள்ள துறை சார்ந்த பங்குகள் நன்கு வளர்ச்சியுறும் என்றே நினைக்கிறேன். எனவே நீண்டகால முதலீட்டாளர்கள், இது போன்ற பங்கு சந்தை வீழ்ச்சிகளை பயன்படுத்திக் கொண்டு, 'அடிப்படைகள் சிறப்பாக உள்ள', 'வளர்ச்சி பெற்று வரும்' நிறுவனங்களின் பங்குகளில் 'மெல்ல-மெல்ல' முதலீடு செய்யலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி!

6 comments:

Thomas Ruban said...

//மூன்று-நான்கு ஆண்டுகால பார்வையில் இந்திய பங்குசந்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்றே நம்பத்தோன்றுகிறது. குறிப்பாக உள்நாட்டு வளர்ச்சியை அதிகம் நம்பியுள்ள துறை சார்ந்த பங்குகள் நன்கு வளர்ச்சியுறும் என்றே நினைக்கிறேன். எனவே நீண்டகால முதலீட்டாளர்கள், இது போன்ற பங்கு சந்தை வீழ்ச்சிகளை பயன்படுத்திக் கொண்டு, 'அடிப்படைகள் சிறப்பாக உள்ள', 'வளர்ச்சி பெற்று வரும்' நிறுவனங்களின் பங்குகளில் 'மெல்ல-மெல்ல' முதலீடு செய்யலாம்.//

உங்களுடைய அறிவுரைக்கு நன்றி சார்.

பதிவுக்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

பொதுஜனம் said...

அனுமானங்கள் ஆட்டிபடைக்கும் பங்கு சந்தையில் உள்நாட்டு குழப்பங்களை விட வெளிநாட்டு விஷயங்களே அதிகம் ஆதிக்கம் செய்வதாக விஷயம் தெரிந்தவர் ஒருவர் சொன்னார். ஒபாமா மூக்கில் சளி பிடித்தால் இங்கே தும்ம வேண்டி இருக்கிறது . இந்தியா என்ற பெரும் மக்கள் சக்தி கொண்ட பெரும் எந்திரம் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் , தீவிரவாதம் , மதவாதம், இனவாதம் உள்ளிட்டவற்றை தாங்கி கொண்டே பயணம் செய்கிறது. மெதுவாக சென்றாலும் இலக்கை அடையும் . இந்த மாதிரி குழப்பமான சூழ்நிலை வரும் என்றும் மக்கள் உழைக்க விரும்பினாலும் முன்னேற முடியாது என்றும் தெரிந்தே நம் அரசாங்கம் இலவசங்களை அள்ளி வீசுகிறது போல் இருக்கிறது. இவ்வளவு பெரிய நாட்டில் அதுவும் அதிக அளவில் விவசாயிகளை பெற்றுள்ள நாட்டில் உணவு பற்றாக்குறை என்றால் கொடுமை. விவசாய நிலங்கள் தொடர்ந்து வேறு பயன்பாட்டிற்கு விற்கப்பட்டு வருவது நல்லதற்கல்ல. அட்சய பாத்திரம் இருந்தால்தானே அமுதம் வழங்க.

CM ரகு said...

நன்றி... நல்ல பதிவு

Maximum India said...

நன்றி பொதுஜனம்!

Maximum India said...

நன்றி ரகு!

Blog Widget by LinkWithin