Wednesday, January 13, 2010

என்னால் என்ன முடியும்?


விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி அவர்கள் சொன்ன கதை இது!

முன்னொரு காலத்தில் ஸ்காட்லாந்தில் பிளெமிங் என்ற ஒரு ஏழை விவசாயி வாழ்ந்து வந்தார். ஒரு முறை வயலுக்கு சென்று திரும்பும் அவர் ஒரு அலறல் சத்தத்தை கேட்டார். விரைந்து சென்ற பார்த்த போது, அங்கே ஒரு சிறுவன் புதைகுழியில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கவனித்தார். நிதானமான, ஆனால் நிச்சயமான அந்த மரண பயங்கரத்தில் இருந்து அந்த சிறுவனை அவர் மீட்டெடுத்தார்.

அடுத்த நாள் அந்த விவசாயி வீட்டின் முன்னே ஒரு அலங்கார வண்டி வந்து நின்றது. அதில் இருந்து ஒரு கனவான் இறங்கி வந்து, தன்னை அந்த சிறுவனின் தந்தை என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். தான் நம் விவசாயிக்கு மிகுந்த கடன் பட்டிருப்பதாகவும், அவருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ விரும்புவதாகவும் கூறினார்.

அவருக்கு பிளெமிங் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார்.

"நன்றி ஐயா! நீங்கள் எனக்கு ஏதேனும் உதவி செய்ய விரும்பினால், என் மகனை உங்களுடன் அழைத்து செல்லுங்கள். அவனை படிக்க வையுங்கள். ஒருவேளை அவன் என்னைப் போலவே இருந்தால், ஒருநாள் நிச்சயமாக உங்களை பெருமை அடைய செய்வான்"

அந்த சிறுவனை அழைத்துச் சென்ற கனவான், தான் வாக்களித்தது போலவே நன்கு படிக்க வைத்தார்.

அந்த சிறுவனும் தனது தந்தையின் வாக்கை காப்பாற்றினான். சொல்லப் போனால், அந்த கனவானின் மகனின் உயிரை இரண்டாவது முறையாக காப்பாற்றினான்.

அந்த சிறுவன்தான், மனித குலத்தின் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பான பென்சிலின் மருந்தை கண்டு பிடித்த அலெக்சாண்டர் பிளெமிங்.

நிம்மோனியா வியாதியில் இருந்து அவர் காப்பாற்றிய அந்த கனவானின் மகனும் சாதாரண ஆள் இல்லை. பிரிட்டனில் பெரும் சமூக தொண்டாற்றிய ருடால்ப் சர்ச்சில். அவருடைய மகன்தான், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற பிரதமர்களில் ஒருவரான வின்ஸ்டன் சர்ச்சில்.

இப்படி விவசாயி மற்றும் அந்த கனவான் செய்த இரண்டு நல்ல காரியங்கள் இந்த உலகிற்கே பெரிய பலன்களை தந்திருக்கின்றன.

"பெரிய அளவில் புரையோடிப் போய் இந்த சமுதாயத்தில் என்னால் மட்டும் என்ன மாற்றத்தை கொண்டு வந்து விட முடியும்?" என்ற ஒரு கேள்வி இன்று நம்மில் பலருக்கும் தோன்றிய வண்ணமே உள்ளது.

ஒரு துளி நீர், சமுத்திரத்தை விட மிக சிறிதாக இருக்கலாம்.

ஆனால் சமுத்திரம் சமுத்திரமாகவே இருப்பதற்கு அந்த துளி நீர்தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

பட்டாம் பூச்சி விளைவு பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு பட்டாம் பூச்சியின் மென்மையான சிறகடிப்பினால் கூட பூகம்பங்கள் உருவாகும் என்பதுதான் அந்த தத்துவம்.

மற்றவரைப் பற்றி கவலைப் படாமல் சமுதாயத்தின் மீதான நமது மாற்றங்களை கொண்டுவர துவங்குவோம். அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி.

புத்தரின் சிஷ்யர் ஒருமுறை கேட்டாராம், "நான் எங்கே இருந்து ஞானத்திற்கான வழியை தேடுவது?" என்று. புத்தரின் பதில் "இங்கேயிருந்தே தொடங்குங்கள்" என்பதுதான்.

புத்தரின் வாக்கின்படி நாமும் இங்கிருந்தே, இப்போதிலிருந்தே நம்மால் இயன்ற மாற்றங்களை கொண்டுவருவோம். யாருக்கு தெரியும்? அவற்றின் பலன்கள் மிகப் பெரிதாக கூட இருக்கலாம்.

நாளைய பொங்கல் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கச் செய்யட்டும்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

நன்றி!

10 comments:

ரஹ்மான் said...

பொங்கல் வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி ரஹ்மான்!

உங்களுக்கும் கூட இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

ரகு said...

பொங்கல் வாழ்த்துக்கள்...
பதிவுகள் அனைத்தும் அருமை....
தொடரட்டும் உங்கள் சேவை...
நன்றியுடன்
ரகு

வால்பையன் said...

நல்ல கதை!

Maximum India said...

உங்கள் முதல் பின்னூட்டத்திற்கு நன்றி ரகு!

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Maximum India said...

நன்றி வால்பையன்!

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Naresh Kumar said...

கதை நல்லாயிருக்கு...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!!

Maximum India said...

நன்றி நரேஷ் குமார்!

கார்த்திக் said...

அட்டகாசமான கதை :-))

Maximum India said...

நன்றி கார்த்திக்!

Blog Widget by LinkWithin