
'எந்த புற்றில் எந்த பாம்போ' என்ற அச்சம் மேலும் மேலும் வலுவடைந்து மார்ச் மாத வாக்கில் சந்தை பல ஆண்டுகளுக்கான கீழ்நிலையை தொட்டது. "ஓவரான அவநம்பிக்கையில்தான் காளை ஓட்டம் துவங்குகிறது' என்ற சந்தை பொன் மொழிக்கேற்ப, மார்ச் மாதம் துவங்கிய காளை ஓட்டம் டிசம்பர் இறுதி வரையுமே தொடர்ந்து வந்தது மட்டுமல்லாமல், வருடத்தின் அதிக பட்ச நிலையிலேயே சந்தையின் முக்கிய குறியீடுகள் முடிந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த (கிட்டத்தட்ட) தனிப் பெரும்பான்மை, அசாதாரண அளவிலான அந்நிய முதலீடுகள், இந்திய நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடு ஆகியவையே இந்த அசத்தல் வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன். இந்த வெற்றி புதிய ஆண்டிலும் தொடருமா என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
முதலில் சாதக அம்சங்கள்
கடந்த இருபது ஆண்டுகளின் பொருளாதார சீர்திருத்தங்களின் பலன்கள் நமது கண்முன்னே தெரிய ஆரம்பித்துள்ளன. திறந்த நிலை பொருளாதாரத்தின் சாதக அம்சங்களை இந்திய நிறுவனங்கள் சிறப்பாகவே பயன்படுத்தி வருகின்றன. பெரிய நிறுவனங்களின் லாப விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நெருக்கடியான காலகட்டத்தில் கூட இந்திய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியது, உலக முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவை திரும்பி பார்க்க செய்தது. அந்நிய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை பெருமளவு கையகப் படுத்திய காலங்கள் மறைந்து இந்திய நிறுவனங்கள் தைரியமாக அந்நிய நிறுவனங்களை கையகப் படுத்த முனைந்து வருகின்றன. உலக பொருளாதாரத்தில் இந்திய நிறுவனங்களின் முத்திரை தெளிவாக பதிந்து வருவதுடன், உலக முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவை ஒரு முக்கிய முதலீட்டு தளமாக கருதுவதும் குறிப்பிடத்தக்கது.
கூட்டணி குழப்பங்கள் குறைந்துள்ளதும், பொருளாதார சீர்திருத்தங்களில் பெரும்பாலான அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள ஒருமித்த கருத்துக்களும் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று நினைக்கிறேன். சிறப்பாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு சந்தைக்கு கொண்டு வரும் பட்சத்தில், முதலீட்டாளர்களுக்கு நல்ல முதலீட்டு வாய்ப்புக்கள் கிடைப்பதுடன், சந்தையின் மீதான ஈர்ப்பும் அதிகமாக வாய்ப்புள்ளது.
உலக அளவில் கூட பொருளாதார குழப்பங்கள் குறைந்து, புதிய நம்பிக்கைகள் உதித்திருப்பது இந்தியாவின் ஏற்றுமதி உயர உதவும். குறிப்பாக தகவல் தொழிற்நுட்ப துறை, ஆடை உற்பத்தித் துறை மற்றும் ஆபரண துறை ஆகியவை சிறப்பாக செயல்படக் கூடும். பொருளாதார மீட்சி, கணிமத்துறைக்கும் உதவும்.
அரசு ஊழியர்களுக்கான சம்பள நிலுவை தொகை பட்டுவாடா, விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடிகள், அந்நிய முதலீடுகள் மற்றும் அரசாங்கத்தின் ஏராளமான பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் ஆகியவை இந்திய பொருளாதாரத்தில் ஏராளமான பணவரவை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே அதிக பணம் புழங்குவது மற்றும் மத்திய வர்க்கத்தின் புதிய ஆர்வங்கள் நுகர்வோர் பொருட்சந்தையில் அதிக தேவைகளை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாக வாகனத்துறை, ரியல் எஸ்டேட், சுற்றுலாத்துறை போன்ற துறைகள் மேலும் செழிப்புற வாய்ப்புக்கள் உள்ளன.
இப்போது பாதக அம்சங்கள்
மக்களின் வருவாயில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், தீவிரவாத தாக்குதல் அச்சங்கள், தற்போது ஆந்திராவில் உள்ளது போன்ற சமூக அமைதியின்மை, பெருகி வரும் ஊழல், கட்டுமான தேவைகள், விண்ணை முட்டும் விலைவாசிகள், தவறிப் போன பருவமழை மற்றும் கடனில் தவிக்கும் அரசு ஆகியவை பாதக அம்சங்கள் ஆகும்.
மத்திய அரசின் தற்போதைய மோசமான நிதி நிலவரத்தின் அடிப்படையில், தனது (பல) மீட்சி திட்டங்களை விரைவில் திரும்பி பெற வேண்டியிருக்கும். சந்தையில் உள்ள ஏராளமான பணவரவினால் உருவாகியுள்ள பணவீக்கத்தை கட்டுபடுத்துவதற்காக மத்திய வங்கி தனது வட்டி வீதங்களை விரைவில் உயர்த்த வேண்டியிருக்கும். இந்த வருடமும் பருவமழை தவறினால் (ஒரு ஆஸ்திரேலிய ஆராய்ச்சி நிறுவனம், எல்நினோ பாதிப்பினால் இந்த வருடமும் இந்தியாவில் பருவமழை பொய்க்கும் என்று கணித்துள்ளது. நம்மூர் வானிலை அறிக்கைகளை போலில்லாமல் இந்த கணிப்பு ஓரளவுக்கு சரியாக இருக்கும் என்று நம்பலாம்) நமது பொருளாதாரம் ஒரு பெரிய அதிர்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் உணவு பொருட்களில் ஏற்படக்கூடிய பெரிய அளவிலான விலைவாசி உயர்வு (Hyper Inflation) நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும்.
மொத்தத்தில் பொருளாதாரத்தில் காணப்படும் சாதக பாதக அம்சங்கள் சரிக்கு சமமாகவே அமைந்துள்ள இன்றைய சூழ்நிலையில் சந்தைகளின் நிலையை பற்றி இப்போது பார்ப்போம்.
பங்குகளின் விலை நிலவரங்கள், பல நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சியை கிட்டத்தட்ட சரியான அளவிலேயே உள்வாங்கி உள்ளன. சிறிய பங்குகளின் விலைகள் மட்டுமே சற்று குறைவாக இருந்தாலும், அவற்றின் வருங்கால செயல்பாடுகளின் மீது சந்தைக்கு உள்ள சந்தேகத்தின் அடிப்படையிலேயே விலை குறைவாக உள்ளது என்பதையும் நினைவு கொள்ள வேண்டும்.
தற்போதைக்கு அந்நிய முதலீடுகள்தான் சந்தையை மேலும் மேலும் உயர செய்துள்ளன. சந்தை அடிப்படைகள் சற்று பின்னேயே தள்ளப் பட்டுள்ளன. அந்நிய முதலீடுகள் இதே ரீதியில் தொடர்ந்து வரும் பட்சத்தில், நமது சந்தையின் முக்கிய குறியீடுகள் புதிய சரித்திரத்தை படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
நமது பதிவுலக நண்பர்களுக்கான கருத்துரைகள் கீழே.
ஏற்கனவே பல முறை இந்த பதிவு வலையில் கூறியுள்ள படி, முதலீட்டை ஒரு தனி முடிவாக (Instant Decision) எடுக்காமல், தொடர் செயல்பாடாக (Process) வைத்துக்கொள்ளவும். தனது சேமிப்பின் ஒரு பகுதியை (அதாவது உடனடி தேவைகள் இல்லாத பணத்தை) பங்கு சந்தையில் சிறப்பாக செயல்படும் அடிப்படைகள் வலுவாக அமைந்துள்ள நிறுவனங்களில் அவ்வப்போது தொடர்ச்சியாக முதலீடு செய்து வரவும். தொடர்ச்சியாக செய்யப் படும் முதலீடுகளில், பங்குகளின் விலை பற்றியோ சந்தையின் அளவு பற்றியோ கவலைப் படத் தேவையில்லை. தனிப்பட்ட நிறுவனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவகாசம் இல்லாதவர்கள் பரஸ்பர நிதிகளின் மாதாந்திர முதலீடுகள் (SIP) அல்லது NIFTY BEES, JUNIOR NIFTY BEES போன்ற நிதிகளில் (ETF) மாதாமாதம் முதலீடு செய்யலாம். அடுத்த பத்தாண்டுகளில் இந்திய பொருளாதாரம் மூன்று மடங்கு உயரும் பட்சத்தில் முக்கிய குறியீடுகளும் மூன்று மடங்கு உயர வாய்ப்புள்ளது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஓரளவுக்கு பிரதிபலிக்கக் கூடிய முக்கிய குறியீடு நிதிகளில் (NIFTY BEES, JUNIOR NIFTY BEES, SENSEX) மாதாமாதம் முதலீடு செய்வது சாலச் சிறந்தது என்று நினைக்கிறேன். தங்க நிதிகளில் கூட அவ்வப்போது (மொத்த முதலீட்டில் 5-10%) முதலீடு செய்து வரலாம்.
அடுத்த பத்தாண்டுகள் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஆண்டாக இருக்கும் என்று சொல்லப் படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பலனை நம் போன்ற எளியவர்கள் பெற ஒரு சிறந்த வழித்துணை பங்கு சந்தைகள் ஆகும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, சிறுதுளி பெருவெள்ளம் போன்ற தமிழ் பொன்மொழிகளையும், அவநம்பிக்கையில் காளை தொடங்குவது போல அபரிமிதமான நம்பிக்கையில்தான் கரடி ஓட்டம் துவங்குகிறது என்ற பங்கு சந்தை தங்க மொழியையும் நினைவில் வைத்துக் கொண்டு பங்கு சந்தையில் ஈடுபடும் படி அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
வரும் ஆண்டு நமது பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக விளங்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
மீண்டுமொருமுறை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
8 comments:
Wish you a happy new year to you and your family. looking more posts from you this year
நல்ல பதிவு. இந்த ஆண்டு உங்களக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக விளங்க எல்லாம் வல்லஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
இந்திய பங்கு சந்தையில் அந்நிய முதலீடுகள் மட்டுமே நம்பிருந்த காலம் போய், இப்போது L.I.C போன்ற நிறுவனங்களும் முக்கிய பங்கு அளிக்கிறது.
பதிவுக்கு நன்றி சார்.
நன்றி பூங்குன்றன்!
//looking more posts from you this year //
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்!
நன்றி!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தாமஸ் ரூபன்!
//இந்திய பங்கு சந்தையில் அந்நிய முதலீடுகள் மட்டுமே நம்பிருந்த காலம் போய், இப்போது L.I.C போன்ற நிறுவனங்களும் முக்கிய பங்கு அளிக்கிறது.//
உண்மைதான் தாமஸ் ரூபன். அதே சமயத்தில் இந்திய நிறுவனங்களின் முதலீட்டு வேகம் குறைவாக இருப்பதனால், பாதிப்பு பெரிதாக தென்படுவதில்லை. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டு அளவு குறைவாக இருந்தாலும் வேகம் அதிகமாக இருப்பதனால் (சிறு புல்லட் உயிரை பறிப்பது போல) சந்தைகளில் பெரிய தாக்கம் ஏற்படுகிறது.
நன்றி.
புத்தாண்டை நல்ல பதிவுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள்!!! வாழ்த்துக்கள்...
நன்றி நரேஷ் குமார்!
ஐயா,உங்களுக்கு நன்றிகள் பல.இந்த பதிவுகளின் மூலம் நான் பலவற்றை தெரிந்து கொள்கிறேன்.ஒரு சிறு வேண்டுகோள் .
அன்னிய செலாவணி பற்றி உங்களுக்கு நேரம் இருப்பின் விரிவாக ஒரு பதிவு இட்டால் என்னை போன்றோருக்கு புரிந்துகொள்ள உதவும்.
நன்றி தரிசு!
//அன்னிய செலாவணி பற்றி உங்களுக்கு நேரம் இருப்பின் விரிவாக ஒரு பதிவு இட்டால் என்னை போன்றோருக்கு புரிந்துகொள்ள உதவும்//
கண்டிப்பாக.
இந்த பதிவு வலையில் கூட அந்நிய செலவாணி மாற்றங்கள் பற்றிய பல பதிவுகள் இட்டுள்ளேன். நேரம் கிடைப்பின் பாருங்கள்.
நன்றி.
Post a Comment