Sunday, February 7, 2010

இந்தமுறையும் கணிப்பு பலிக்குமா?


ஏற்கனவே பலமுறை இந்த பதிவுவலையில் குறிப்பிட்டிருந்தபடி, பங்குசந்தை வணிகர்கள் பொருளாதாரத்தினை முன்கூட்டியே கணித்து அதற்கேற்றார் போலவே வர்த்தகம் செய்து வருகின்றனர். குறிப்பாக பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் "பொருளாதார கணிப்பில்" சிறப்பாக செயல்படுகின்றன. அவற்றின் "பல நாட்டு அனுபவம்" மற்றும் "சிறப்பான தொழிற்நுட்ப கட்டமைப்பு வசதி" இந்த விஷயத்தில் துணை நிற்கின்றன என்றே சொல்ல வேண்டும். பொதுவாகவே இந்திய உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் சிறுமுதலீட்டாளர்கள் இந்த விஷயத்தில் சற்று பின்தங்கியே உள்ளனர். நம் நாட்டினர் அவ்வப்போதுக்கான பொருளாதாரப் போக்கின்படியே அதிகம் முதலீடு செய்கின்றனர். பெரும்பாலான உள்ளூர்காரர்கள் வருங்காலத்தை கணிப்பதில், நம்மூர் வானிலை நிபுணர்கள் போலவே பலமுறை கோட்டை விட்டிருக்கின்றனர்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், கடந்த 2007 ஆம் ஆண்டு இறுதி வாக்கிலேயே அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் பங்குகளை விற்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் 2008 ஆம் ஆண்டு முற்பகுதி முடியும்வரை இந்திய பொருளாதார புள்ளிவிபரங்கள் சிறப்பாகவே அமைந்திருந்தன. அப்போது பல இந்திய பங்குசந்தை நிபுணர்கள் இந்திய பொருளாதாரத்தின் வருங்காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் 2008 ஆம் ஆண்டு இறுதி முதல் 2009 ஆம் ஆண்டு முற்பகுதி வரை இந்திய பொருளாதாரம் மிகுந்த தளர்ந்த நிலைக்கு மாறியது பலரையும் ஆச்சரியப் படுத்தியதுடன், இந்தியாவின் வருங்காலம் பற்றிய பல புதிய சந்தேகங்களையும் ஏற்படுத்தியது.

ஆனால், அப்போதைய பொருளாதார சூழ்நிலைகள் மிகவும் மோசமாக இருந்த போது கூட, அந்நிய முதலீட்டாளர்கள் ஏப்ரல் 2009 முதல் இந்திய பங்குசந்தையில் மீண்டும் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். ஆனால் நம்மில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருந்து வந்தன. குறிப்பாக நம்மூர் பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மை யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லாத நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் பல ஆண்டுகள் மந்தநிலையிலேயே இருக்கும் என்று பல இந்திய பொருளாதார நிபுணர்கள் கருதி வந்தனர். அந்த ஆண்டின் மிகப் பெரிய ஆச்சரியமாக காங்கிரஸ் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததும் பங்கு சந்தை மடமடவென்று உயர ஆரம்பித்தது. எப்போதும் போலவே பல இந்தியர்கள் பங்குசந்தையில் குறைந்த விலையில் முதலீடு செய்யும் வாய்ப்பை இழந்தனர்.

இன்றைய தேதியில் இந்திய பொருளாதார புள்ளிவிபரங்கள் மீண்டும் சிறப்பான நிலையை எட்டி உள்ளன. தொழிற் உற்பத்தி சாதனை அளவை எட்டி உள்ளது. ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் சிறப்பாக உள்ளது. இந்திய நிறுவனங்களின் லாப விகிதம் நன்கு உயர்ந்துள்ளது. உலக அளவில் குறிப்பாக அமெரிக்க பொருளாதாரம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. இந்திய பங்கு சந்தை நிபுணர்கள் பல பங்குகளை பரிந்துரைத்து வருகின்றனர். ஆனால், மீண்டும் ஒருமுறை நம்மை குழப்பும் விதமாக அந்நிய நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தையில் தமது பங்குகளை அதிக அளவில் விற்று வருகின்றன. அவர்களது விற்பனைக்கு சில தொழிற்நுட்ப விவகாரங்களே காரணம் என்றும் தற்போதைய விலையில் பங்குகளை துணிந்து வாங்கலாம் என்று பல பங்கு சந்தை நிபுணர்கள் கூறினாலும், எனக்கு கொஞ்சம் சந்தேகமாகவே உள்ளது. ஒருவேளை இன்னும் ஆறுமாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பொருளாதார மந்த நிலையை உலகம் குறிப்பாக இந்தியா சந்திக்குமா என்ற கேள்வியும் கூடவே எழுகின்றது.

ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளின் கடன் விவகாரங்கள் மற்றும் அமெரிக்காவின் அதிகப் படியான அரசு செலவினங்கள் உலகப் பொருளாதார நிலையை இன்னும் கொஞ்ச காலத்திற்கு மந்த நிலையிலேயே வைத்திருக்கும் என்றே தோன்றுகிறது. இந்தியா ஒரு தனிக்கதை என்று பல இந்திய நிபுணர்கள் சொன்னாலும் உலகப் பொருளாதார சுழல்களிலிருந்து இந்தியா முழுமையாக விடுபட முடியாது என்றே தோன்றுகிறது. ஒருவேளை இந்த வருடமும் இந்தியாவில் பருவமழை தவறிப்போனால், உலக பொருளாதாரத்தை விட நமது பொருளாதாரம் மிகவும் பின்தங்கிப் போய்விடவும் கூடும். சரித்திரத்தில் இல்லாத அளவாக இருக்கும் பணவீக்க விகிதமும் நம்மை பெரிய அளவில் பாதிக்கக் கூடும்.

இவையெல்லாம் பங்கு சந்தை நிபுணர்களின் குறிப்பாக பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களின் இப்போதைக்கான கணிப்புத்தான். ஏற்கனவே ஒருமுறை சொன்னது போல மணியடித்த பிறகு யானையும் வரலாம் அல்லது பூனையும் வரலாம்.

நமது வாசகர்களைப் பொறுத்த வரை சந்தையின் வீழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பென்றே கருதுகிறேன். இது வரை அதிகம் முதலீடு செய்ய வாய்ப்பில்லாதவர்கள் தற்போது ஓரளவுக்கு முதலீடு செய்யலாம். ஒவ்வொரு வீழ்ச்சியின் போதும் அடிப்படை சிறப்பாக உள்ள பங்குகளை மெல்ல மெல்ல சேகரித்து வரலாம்.

வருமான வரியை தவிர்க்க விரும்புவர்கள் சிறப்பாக செயல்படும் HDFC Tax Saver Fund அல்லது Fidility Tax Advantage Fund போன்ற பரஸ்பர நிதிகளில், சரிவுகளின் போது முதலீடு செய்யலாம். இவற்றில் முதலீடு செய்தால் மூன்றாண்டுகள் வரை முதலீட்டை திரும்பிப் பெறமுடியாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். பங்குசந்தை முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை ( :) ) என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

தொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி 4680-4730 அளவுகளில் நல்ல அரணைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அந்நிய முதலீட்டாளர்களின் நடவடிக்கைகளைப் பொறுத்து ஒரு குறுகிய கால முன்னேற்றத்தையும் காண வாய்ப்புள்ளது. கனிமங்கள் போன்று அதிக ஏற்றத்தாழ்வு கொண்ட பங்குகள் வேகமாக முன்னேறவும் வாய்ப்புள்ளது. ஆனால் ஸ்டாப் லாஸ் லிமிட்டை மறக்காமல் இருப்பது இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானது.

வரும் வாரம் மிகவும் சிறப்பாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

நன்றி.

4 comments:

Thomas Ruban said...

பதிவுக்கு நன்றி சார்.

Maximum India said...

உங்களுடைய தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி தாமஸ் ரூபன்!

அகில் பூங்குன்றன் said...

நல்ல பதிவு. ஒரு வித பயத்துடன் தான் சந்தையில் முதலீடு செய்ய வேண்டி இருக்கிறது. நன்றாக இந்த கால கட்டம் கடக்கும் என்று நம்புவோம்.

Itsdifferent said...

http://www.joshuaproject.net/countries.php?rog3=IN
I think it is important to know what is the Christian groups are doing in our country. They are doing such an atrocity, that our MSM will never report. If we let them continue this way, India becoming a christian nation is not too far.
I am requesting all the Tamil Bloggers to raise awareness among our population, and fight against such acts of conversion, which is nothing but exploitation of poor of their condition.
See how much advanced data collection they have here.
http://www.joshuaproject.net/countries.php?rog3=IN

Blog Widget by LinkWithin