Sunday, November 15, 2009

பங்குசந்தையை பாதிக்கும் இரண்டு முக்கிய காரணிகள்!


இந்திய பங்குசந்தையை பொருத்த வரை, இப்போதைக்கு இரண்டு முக்கிய விஷயங்கள் பங்கு வர்த்தகர்களின் மன நிலையை பாதிக்கின்றன. இந்த இரண்டு விஷயங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பொருத்தே நமது பங்குச்சந்தையில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிகழ்கின்றன.

இந்திய பங்கு சந்தைக்குள் நுழையக் கூடிய வெளிநாட்டின் பணத்தின் அளவு மற்றும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவு ஆகிய இரண்டு காரணிகள் இப்போதைக்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் ஆகும்.

முதல் விஷயத்திற்கு வருவோம்.

இந்திய பங்கு சந்தைக்குள் அதிக வெளிநாட்டு பணம் வர வேண்டுமென்றால், உலக சந்தைகளில் ஏற்றத்தாழ்வு நிலை குறைவாக இருக்க வேண்டும். ஏனென்றால், சற்று அமைதியான சூழ்நிலையில்தான் இந்தியா போன்ற ஒரு "அதிக அபாயம் நிறைந்த பங்குச்சந்தையில்" முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முன்வரும். ஒருவேளை உலக சந்தைகளில் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருந்தால், டாலர் பணம் அமெரிக்காவிற்கே திரும்பி சென்று தஞ்சமடையும். உலக சந்தைகளின் ஏற்றத்தாழ்வு நிலை எவ்வளவு என்பதை CBOE Vix (Chicago Board Of Exchanges Volatility Indicator) இல் ஏற்படும் மாற்றங்களை பார்த்து நாம் அறிந்து கொள்ளலாம். அமெரிக்க சந்தையில் (தொடர்ச்சியாக) அதிக ஏற்றத்தாழ்வு நடக்கும் போதெல்லாம், நமது சந்தை பெரிய அளவு வீழ்ச்சி அடைவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

அடுத்த படியாக, டாலர் கரன்சியின் பலவீனம் ஆவது நமது நாட்டிற்கு அதிக வெளிநாட்டு பணம் உள்வர உதவும். அதாவது, அதிகம் உதவாத டாலர் கரன்சி பணத்தை முடிந்த வரை வெளியே தள்ளி விட்டு, மற்ற சொத்து வகைகளை வாங்கிக் குவிக்க உலக நாடுகள் பலவும் முனைகின்றன. அந்த வகையில் டாலர் பலவீனம் ஆனால் நமது பங்கு சந்தைக்கு அதிக பணம் வர வாய்ப்பு உண்டு என்று நம்பலாம். டாலர் நிலையை தெரிந்து கொள்ள Dollar Index அளவு எவ்வளவு இருக்கின்றது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளளலாம். இந்த டாலர் இன்டெக்ஸ் மேலே சென்றால் டாலர் வலுவாகின்றது என்றும் பங்கு சந்தைகள் வீழ வாய்ப்பு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

டாலர் பலவீனம் அடைவது, அமெரிக்க மத்திய வங்கியின் பணக் கொள்கை மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் "நோட்டு அச்சடிக்கும்" கொள்கை ஆகியவற்றை பொருத்தும் அமையும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி வீதங்களை உயர்த்தும் என்ற வதந்தியின் அடிப்படையில் டாலர் சற்று வலுவடைந்ததை தொடர்ந்து நமது சென்செக்ஸ் குறியீடு இரண்டாயிரம் புள்ளிகள் வரை வீழ்ந்ததும், இன்னும் பல காலம் வரை வட்டி வீதங்கள் உயர்த்தபடாது என்று அமெரிக்க மத்திய வங்கி உறுதி அளித்த சில காலத்திலேயே சென்செக்ஸ் மீண்டும் பெருமளவுக்கு உயர்ந்ததும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

இப்போது இரண்டாவது விஷயத்திற்கு வருவோம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏழு சதவீதமாக இருக்கும் பட்சத்தில் பங்கு சந்தையில் ஒரு பெரிய அளவு முன்னேற்றம் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. ஆனால், பருவ மழை தவறியது இந்த ஆண்டு ஏழு சதவீத முன்னேற்றம் இருக்காது என்ற ஒருவித அவ நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டன. அதே சமயத்தில் அடுத்த ஆண்டு ஏழு சதவீத முன்னேற்றம் இருக்கும் என்று பிரதமரும் நிதி அமைச்சரும் தொடர்ந்து கூறி வருவது சந்தையில் அவ்வப்போது எழுச்சியை ஏற்படுத்த உதவுகின்றது. மேலும் சிறப்பான இந்திய தொழிற்துறை முன்னேற்றம் (9.1%) மற்றும் மக்கள் உபயோக சாதனங்கள் (கார், பைக், டிவி போன்றவை) அதிகம் விற்பனை ஆவதும் சந்தையில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இருந்தாலும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்கள் பங்குசந்தையில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மேற்சொன்ன இரண்டு காரணிகளை தொடர்ந்து கவனித்து வந்தால், நமது சந்தைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும். இதுவரை சொன்னது, மொத்த பங்கு சந்தையில் ஏற்படும் பொதுவான மாற்றங்களைப் பற்றியது மட்டுமே. தனிப்பட்ட பங்குகளில் ஏற்படும் மாற்றங்கள், அந்தந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பொருத்தே அமைகின்றன.

இப்போது வரும் வார சந்தை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பற்றிப் பார்ப்போம்.

தொடரும் டாலர் பலவீனம் மற்றும் இந்திய பொருளாதாரத்தைப் பற்றி வெளிவரும் நல்ல தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நமது சந்தை இன்னும் கூட மேலே உயர வாய்ப்புக்கள் உள்ளன. வரும் வாரம் நமது பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் குறித்த சில சட்டத்திருத்தங்கள் ஏற்படலாம் என்ற நம்பிக்கையில் இந்த துறை பங்குகள் இன்னும் கூட மேலே செல்ல வாய்ப்புக்கள் உண்டு.

அதே சமயத்தில், நிபிட்டி 5150-5200 அளவுகளில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. குறுகிய கால முதலீட்டாளர்கள் 4950-5000 அளவுகளை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்யலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் சற்று பொறுமையாக இருக்கலாம். சென்ற பதிவில் கூறிய படி 4650 -4700 அளவுகளில் வாங்கியவர்கள், வாங்கிய பங்குகளில் ஒரு பகுதியை 5150-5200 அளவுகளில் விற்று விடலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி!

5 comments:

Thomas Ruban said...

//டாலர் இன்டெக்ஸ் மேலே சென்றால் டாலர் வலுவாகின்றது என்றும் பங்கு சந்தைகள் வீழ வாய்ப்பு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். //

சரியாக சொன்னீர்கள் சார்.

கடந்த வார பங்குசந்தையின் திடீர் உயர்வனை கண்டு,பங்குச்சந்தை வல்லுனர்களும் கூட குழம்பிபோய் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

பதிவுக்கு நன்றி சார்.

MCX Gold Silver said...

பதிவுக்கு நன்றி சார்.

வால்பையன் said...

தங்கம் எங்க தல போய் நிக்கும்!?

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

நன்றி DG

Maximum India said...

நன்றி வால்பையன்!

//தங்கம் எங்க தல போய் நிக்கும்!?//

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் டாலருக்கு மாற்றாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது இந்த தங்க விலையேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம். 1200 டாலர் வரை விலை ஏறக் கூடிய வாய்ப்பு உண்டு என்று சொல்லுகிறார்கள். இப்போதைக்கு அமெரிக்கா டாலர் அச்சடிப்பதை குறைத்தால்தான் தங்க விலை உயர்வு நிற்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி.

Blog Widget by LinkWithin