Wednesday, March 31, 2010

நீங்கள் ரொம்ப புத்திசாலியா?


நாளை முட்டாள்கள் தினம். ஆனால் உங்களை யாரும் ஏமாற்ற முடியாது, நீங்கள் ரொம்ப புத்திசாலி என்று நம்புகிறீர்களா?



ஆமாம் என்று சொல்பவர்கள் தயவு செய்து உங்கள் கீ போர்டில் உள்ள "F13 கீ "யை ஒரு தடவை அமுக்குங்கள்.


அமுக்கிட்டீங்களா?



அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்!




நாளை ரொம்ப தூரம். இன்னைக்கே ஆரம்பிப்போம்.


"முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!"


நன்றி!

Monday, March 29, 2010

டெக்னிகல் அனாலிசிஸ் - ஒரு அறிமுகம்!


ஏற்கனவே நமது பதிவுகளில் விவாதித்தபடி ஒரு பங்கின் ஏற்றத்தாழ்வுகள் பொதுவாக இருவகையாக ஆராயப் படுகின்றன. ஒரு நிறுவனத்தின் அடிப்படை நிதி நிலைமைகளை வைத்து பங்கின் விலையை கணிக்க முயல்வது அடிப்படை ஆராய்ச்சி அல்லது Fundamental Analysis. இன்னொரு வகையான ஆராய்ச்சின் பங்கின் விலைகளின் போக்கினை (Trends) அடிப்படையாக வைத்துக் கொண்டே அந்த பங்கின் வருங்கால போக்கினை அறிய உதவும் தொழிற்நுட்ப வரைபட ஆராய்ச்சி அல்லது Technical Analysis.

சென்ற பதிவில் நண்பர்கள் பார்வைக்காக ஒரு வரைபடம் வழங்கப் பட்டிருந்தது. அந்த வரைபடத்தை பற்றிய விரிவான குறிப்புக்கள் ஏதும் வழங்கப் படவில்லை என்று திரு.நெற்குப்பை தும்பி ஐயா குறிப்பிட்டிருந்தார். எனவே அந்த பங்கினை பற்றி விவரிக்கும் போதே டெக்னிகல் அனலிசிஸ் பற்றிய சில விளக்கங்களை இந்த பதிவில் அளிக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஏற்கனவே சொன்னபடி ஒரு பங்கின் விலையின் போக்கை வைத்துக் கொண்டே, அந்த நிறுவனத்தில் நிகழும் சில முக்கிய மாற்றங்களை புரிந்து கொள்ள முடியும் என்பதுதான் டெக்னிகல் அனாலிசிசின் அடிப்படை. உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் நிகழும் முக்கிய மாற்றங்கள் வெளியுலகத்திற்கு அறியவருவதற்கு முன்னரே சில முக்கிய புள்ளிகளுக்கு (Insiders) தெரிய வரும் வாய்ப்புள்ளது. அந்த முக்கிய புள்ளிகள் பங்குசந்தையில் நிகழ்த்தும் சில வர்த்தக நடவடிக்கைகளை பங்கின் விலை மற்றும் வர்த்தக அளவில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்பதுதான் டெக்னிகல் அனாலிசிஸ் ஆகும்.

மேலும் ஒரு பங்கு மேலேறும் போதும் கீழிறங்கும் போதும் ஒருவித சீரான போக்கினை (Prices move in trends) கடைப்பிடிக்கிறது. அந்த சீரான போக்கில் தடை வந்தால் அதுவும் அந்த சீரான போக்கில் பெரியதொரு மாற்றம் (Reversal Pattern) நிகழ்ந்தால், அந்த நிகழ்வு இயல்பை மீறிய நிகழ்வாகவும், பங்கின் போக்கினை திசை திருப்பக் கூடியதாகவும் கருதப் படுகிறது.

உதாரணத்திற்கு, சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த அரேவா டி அண்ட் டி பங்கின் வரைபடத்தை கூர்ந்து கவனிப்போம்.



இந்த பங்கு தொடர்ந்து பல நாட்கள் கீழ்த்திசையிலேயே பயணித்து வந்திருக்கிறது. இங்கே கீழ்த்திசையில் (Downtrend ) பயணிக்கும் ஒரு பங்கின் விலையின் அலைகளின் அதிக பட்ச விலைகள் (Connecting the highs of the candles)ஒரு நேர்கோட்டின் மூலம் இணைக்கிறோம். அந்த நேர்க்கோடு எவ்வளவு நீளமாக இருக்கின்றது என்பதையும் அந்த நேர்கோட்டை தாண்ட நடந்த முயற்சிகள் எத்தனை தோல்வி அடைந்திருக்கின்றன என்பதையும் பொறுத்து அந்த நேர்கோடு வலிமையானதா என்பது கணிக்கப் படுகிறது. வலிமையான நேர்கோடு முழுமையாக முறியடிக்கப் பட்டால் (Decisive Breakout), அந்த பங்கின் திசை மாறும் வாய்ப்புக்கள் அதிகம் என்று சொல்லலாம்.

இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை அளவில் கடந்த வியாழனன்று பெரியதொரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. விலை மாற்றம் அதிக வர்த்தக அளவுடன் நிகழ்ந்திருந்தால் (Breakout with high volume) அதனை வலுவான மாற்றமாக கருத முடியும். இங்கேயும் அதிக அளவு வர்த்தகம் நடந்திருப்பதன் மூலம், இந்த பங்கு கீழ்த்திசைப் பயணத்தை முடித்துக் கொள்ளும் என்று நம்பலாம். மேலும் இருநூறு நாட்கள் சராசரி விலை அளவையும் (200-day Moving Average) இந்த பங்கு முறியடித்திருப்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.

பல டெக்னிகல் அனலிஸ்ட்கள் இவ்வாறான பெரிய அளவினான விலை மாற்றம் நிகழும் போது, சில அடிப்படைகளையும் கவனிக்கின்றனர். இந்த பங்கினை பொறுத்த வரை, அரேவா நிறுவனத்திற்கு கிடைத்த பெரியதொரு ஆர்டரும், மின்திட்டங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப் படும் என்று இந்திய பிரதமர் உறுதியளித்ததும் முக்கிய காரணிகளாக கருதப் படுகின்றன.

இந்த பங்கினை வர்த்தகம் செய்ய விரும்புவர்கள் ஸ்டாப் லாஸ் அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

அதாவது ஒருவேளை இந்த பங்கு மீண்டும் தனது பழைய கீழ்த்திசை பயணத்தில் இணைத்துக் கொண்டாலோ (Entering into the downward trend) அல்லது இருநூறு நாள் சராசரி அளவுக்கு கீழேயே தொடர்ந்து இரண்டு மூன்று தினங்கள் முடிவடைந்தாலோ, இந்த பங்கினை விட்டு விலகி விடலாம். இப்போதைக்கு இந்த பங்கு Rs.295 அளவுக்கு கீழே முடிவடைந்தால் (Closing prices) இந்த பங்கினை விற்று விடலாம்.

இந்த பங்கிற்கான இலக்கு என்ன என்று பார்ப்போம்.

ஓடும் வரை ஓட்டம் என்பதே எனது பாலிசி. தொடர்ந்து இந்த பங்கு முன்னேறிக் கொண்டே இருக்கும் வரை விற்க வேண்டியதில்லை. மேலே செல்ல செல்ல புதிய புதிய ஸ்டாப் லாஸ் அளவுகள் (Running Stop Loss Limits) வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது தொடர்ந்து சில தினங்கள் கீழ் முகமாக இருந்து கொண்டு நாம் வகுத்துள்ள ஸ்டாப் லாஸ் லிமிட்டுக்கு கீழே வந்தால் மட்டுமே பங்கினை விற்பனை செய்யலாம்.

எனினும் ஒரு குறிப்புக்காக இந்த பங்கின் அடுத்த இலக்குகள் சுமார் Rs . 325 மற்றும் Rs.360 என்றும் இப்போதைக்கு வைத்துக் கொள்ளலாம். பங்கின் விலை மாற்றம் மற்றும் நிறுவனத்தைப் பற்றி வெளிவரும் முக்கிய செய்திகளின் அடிப்படையில் இலக்குகளையும் ஸ்டாப் லாஸ் லிமிட்டுகளையும் அவ்வப்போது மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

நன்றி!

டிஸ்கி: இந்த பதிவு தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. பங்கு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை.

Sunday, March 28, 2010

இது விபத்து பகுதி! கவனம் தேவை!


தொடர்ந்து ஏழாவது வாரமாக நமது பங்கு சந்தை வெற்றிக் கொடியை நாட்டி வந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அதிவேகமான மீட்சி, உலக சந்தைகளின் சாதகமான நிலை மற்றும் மிக முக்கியமாக ஏராளமான அந்நிய முதலீட்டாளர்களின் வரவு ஆகியவை இந்த அதிரடி முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்கள்.

அதே சமயத்தில் தற்போது நம்முடைய பங்குசந்தை 2010 ஆம் ஆண்டின் அதிக பட்ச நிலைக்கு மிக அருகிலே வர்த்தகமாகி வருகின்றது என்பதும் தினந்தோறும் பல சிறிய/இடைநிலை பங்குகள் அதிவேகமான வளர்ச்சியை பெற்று வருகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப் பட வேண்டியவை. எதிர்கால வர்த்தகநிலையின் (F&O Open Position) அளவு தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலேயே காணப் படுவது, நமது பங்குசந்தையில் ஏராளமான வர்த்தக நிலை (Trading Position) எடுக்கப் பட்டதையே வெளிக்காட்டுகின்றது. இந்தியா போன்ற ஒரு வளரும் பொருளாதாரத்தின் பங்கு மதிப்பீடுகள் (Valuation Ratios) அளவுக்கு சற்று அதிகமாகவே காணப் படும் என்றாலும் 2008 இல் நிகழ்ந்தவற்றையும் நாம் மறந்து விட முடியாது.

எனவே புதிய வர்த்தக நிலை எடுப்பவர்கள் சற்று அதிகப் படியான எச்சரிக்கையுடன் சந்தையை அணுகவும். நீண்ட கால முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகள் செய்ய பொறுத்திருக்கலாம்.

நிபிட்டி குறியீடு 5280 -5320 என்ற நிலையில் இன்னும் கூட நல்ல எதிர்ப்பை சந்தித்து வருகின்றது. இந்த நிலை முழுமையாக முறியடிக்கப் பட்டால் இன்னும் நூறு புள்ளிகள் வரை நிபிட்டி வேகமாக முன்னேற வாய்ப்புள்ளது.


குறுகிய கால பங்கு வர்த்தகர்கள், அரேவா டி அண்ட் டி (Areva T&D), சின்டெக்ஸ் (Sintex), டாடா கெமிகல்ஸ், அடானி பவர், ரிலையன்ஸ் பவர் ஆகிய பங்குகளின் போக்கை தொடர்ந்து கவனித்து வரலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

Friday, March 26, 2010

தாடிக்காரன் தப்பு செஞ்சான்! மீசைக்காரன் மாட்டிக்கிட்டான!


மும்பை தாக்குதலில் கைதாகி விசாரனைக்குள்ளாகி வரும் கசாபின் வழக்கறிஞர் கூறிய மராட்டிய கவிதை இது. கசாப் ஏதோ சினிமா ஆசையில் இந்தியாவிற்கு வந்து ஜுஹு கடற்கரையோரம் சுற்றிக் கொண்டிருந்ததாகவும், அவனை அங்கிருந்து போலீசார் பிடித்து வந்து மும்பை தாக்குதல் வழக்கில் சிக்க வைத்து விட்டதாகவும், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது போல உலகிற்கு காட்டவே போலீசார் அவனுக்கு எதிராக பொய் சாட்சியங்களை உருவாக்கியிருப்பதாகவும் திறம்பட வாதிட்ட அந்த வழக்கறிஞர் தன துணைக்கு மேற்சொன்ன மராட்டிய கவிதையும் சேர்த்துக் கொண்டார்.

சிங்க மராட்டியர்தம் கவிதைக்கு கேரளத்து தந்தங்கள் பரிசளிப்போம் என்று பாரதியே சொல்லியிருந்தாலும், தீவிரவாதத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப் பட்ட இந்திய மக்களில் எவரேனும் இந்த மராட்டிய கவிதைக்கு வாய் வழி பாராட்டேனும் அளிப்பாரா என்பது சந்தேகமே . சொல்லப் போனால் கசாப்புக்கு கூட இது கொஞ்சம் ஓவர் எனவே தோன்றியிருக்கும். அனைத்து வீடியோ மற்றும் இதர நேரடி ஆதாரங்களுமே சித்தரிக்கப் பட்டவை என்று ஆவேசமாக வழக்கறிஞர் வாதிட்டாலும் அந்த நேரம் கசாப் தலையை நிமிர்த்தக் கூட இல்லை என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

ஒரு பிரபல மராட்டிய நாடகத்திலிருந்து எடுக்க பட்ட மேற்சொன்ன கவிதையை வழக்கறிஞர் மொழிந்தவுடன், மாண்புமிகு நீதிபதி கேட்டாராம், "இது கூட நாடகமா என்று?"

ஒரு பயங்கரவாதிக்கு கூட தன்னுடைய தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்கவும், ஒரு வழக்கறிஞருக்கு நாட்டின் ஒட்டு மொத்த இறையாண்மையை கையில் எடுத்துக் கொள்ளவும் உரிமை தரும் இந்த தேசத்தின் எல்லையற்ற சுதந்திரம் ஒருபக்கம் புல்லரிக்க வைத்தாலும், இன்னொரு பக்கம் இது போன்ற வாதங்களிலும் உண்மை இருக்குமா என்று ஒரு கணம் யோசிக்க வைக்கும் இந்திய போலீசாரின் மீதான நம்பகத்தன்மையின்மை வேதனையை அளிக்கிறது.

நன்றி!

Tuesday, March 23, 2010

இந்த பதிவிற்கு ஒரு முப்பது வினாடி ஒதுக்குங்கள்!


வாழ்க்கையைப் பற்றி கோகா கோலா தலைவர் (திரு.பிரையன் டைசன்) நிகழ்த்திய முப்பது வினாடி உரை இங்கே.

வாழ்க்கையை ஐந்து பந்துகளுடன் விளையாடும் ஒரு விளையாட்டாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த பந்துகளாவன: வேலை (தொழில்) , குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும் ஆன்மிகம் (அல்லது சுய தேடல்). அனைத்தையும் மாற்றி மாற்றி காற்றில் சுழல வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

வேலை என்பது ரப்பர் பந்து போல. அது தவற விடப் பட்டாலும் துளியும் சேதமடையாமல் திரும்பக் கைக்கு வந்து சேர்ந்து விடும். ஆனால் மற்ற பந்துகள் அப்படியல்ல.

குடும்பம், நட்பு, உடல் நலம் மற்றும் ஆன்மிகம் ஆகியவை கண்ணாடி பந்துகள் போன்றவை. ஒரு முறை தவற விட்டாலும், அவற்றை பழைய நிலையில் திரும்பப் பார்க்க முடியாது. சொல்லப் போனால் சமயத்தில் சிதறி சின்னாபின்னமாக ஆகியும் விடலாம்.

எனவே நண்பர்களே!

வேலை நேரத்தில் சுறுசுறுப்பாக வேலையை கவனியுங்கள். வேலை நேரம் முடிந்தவுடன் வீட்டுக்கு கிளம்புங்கள்.

தேவையான நேரத்தை உங்கள் குடும்பம், நட்பு ஆகியவற்றுக்கு வழங்குங்கள். உடலுக்கு தேவையான ஓய்வை அளியுங்கள்!

டிஸ்கி: என்ன! முப்பது வினாடி நேரம் ஆகவில்லையே?

நன்றி!

Sunday, March 21, 2010

பணவீக்கம் - ஆதாயம் யாருக்கு?


இன்றைய மொத்த விலை பணவீக்கம் (Wholesale Price Index Inflation) பத்து சதவீதத்திற்கு அருகாமையிலும் நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Index Inflation) பதினாறு சதவீதத்திற்கு மேலேயும் உள்ளன. இவை அரசின் கணிப்புக்கள் மட்டுமே. உண்மையான பணவீக்கம் இருபது சதவீதத்திற்கும் மேல் இருக்கும் என்பது பர்ஸ் எவ்வளவு வேகமாக காலியாகிறது என்று அனுபவப் பட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இருந்தாலும் பணவீக்கத்தை கட்டுபடுத்துவதில் அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்க வில்லை. எடுக்கப் பட்ட சிற்சில நடவடிக்கைகள் கூட மிகுந்த கால தாமதத்துடனேயே எடுக்கப் பட்டிருக்கின்றன. உண்மையில் பணவீக்கத்தினால் ஆதாயங்கள் உள்ளனவா அப்படியென்றால் யாருக்கு ஆதாயம் என்பதை இங்கே பார்ப்போம்.

பொதுவாகவே பொருளாதாரத்தில் அளவான பணவீக்கம் என்பது வரவேற்கப் படும் ஒன்று. பணவீக்கம் இருந்தால்தான் தொழில் மற்றும் வணிகத்தில் முதலீடு செய்ய பலரும் முன்வருவார்கள். அவ்வாறு முதலீடு செய்கையில் வேலைவாய்ப்புக்கள் பெருகும். சமூகத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். வளர்ந்த நாடுகள் பணவீக்கத்தை பொருளாதார வளர்ச்சியின் ஆரம்ப அறிகுறியாக கருதுகின்றன. பணவீக்கம் பூஜ்யத்திற்கு அருகாமையில் உள்ள ஜப்பான் போன்ற நாடுகளின் வளர்ச்சி பலவருடங்களாக நின்று போயிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பணவீக்கம் வளர்ந்த நாடுகளின் பணவீக்கத்தினை விட சற்று அதிகமாகவே இருக்கும். இதன் காரணம் இங்கு வளர்ச்சி அதிகம் என்பது மட்டுமல்ல, கட்டுமான வளர்ச்சி குறைவு (Infrastructure Bottlenecks lead to supply based inflation) என்பதும் எளிய மக்களின் தேவைகள் குறித்து அரசாங்கங்கள் கவலைப் படாமல் இருப்பதும் பணக்காரர்களின் சொல்லிற்கு அதிக மரியாதை இருப்பதுமே ஆகும்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணவீக்கம் வளர்வதை அரசு கண்டுகொள்ளாமல் போனால், வளர்ச்சி நின்று போய் பொருளாதாரம் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும். இதற்கு உதாரணமாக ஜிம்பாப்வே, பழைய சீனா மற்றும் பழைய ஜெர்மனி போன்றவற்றை கூறலாம்.

இந்தியாவைப் பொறுத்த வரை பணவீக்கம் தற்போதைக்கு அபாய அளவினை தொட வில்லை என்றாலும், அதிகப் படியான பணவீக்கம் நமது வளர்ச்சியை மட்டுபடுத்தக் கூடியது என்பதில் சந்தேகமில்லை.

பணவீக்கத்தினால் லாபம் யாருக்கு என்று பார்ப்போம்.

பணவீக்கத்தினால் மிக அதிக அளவு ஆதாயம் கிடைப்பது அரசாங்கத்திற்குத்தான். ஏனென்றால், பணவீக்கம் ஒரு மறைமுக வரிவிதிப்பு ஆகும். மேலும் அரசு ஏராளமாக வாங்கிக் குவித்திருக்கும் கடன்களின் பணமதிப்பு நாள்தோறும் குறைந்து கொண்டே போவதால், அரசு திரும்ப தர வேண்டிய கடன் பாக்கியின் உண்மையான அளவும் குறைந்து கொண்டே போகிறது. எனவேதான் அரசாங்கங்கள் பணவீக்கத்தை மறைமுகமாக ஊக்குவிக்கின்றன. பணவீக்கத்தின் காரணமாக பட்ஜெட்டின் அளவு வருடாவருடம் அதிகரிக்கும் போது, அரசியல்வாதிகளின் கையில் அதிக பணம் புழங்குவதும் குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தைப் போலவே நிறைய கடன் வாங்கி இருக்கும் கடனாளிகளுக்கும், திருப்பி தர வேண்டிய பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவது லாபகரமான ஒன்றுதான்.

இரண்டாவதாக அதிக ஆதாயம் அடைபவர்கள், பணவீக்கத்தினால் ஏற்படும் விலை உயர்வை (சற்று கூடுதலாகவே) நுகர்வோர் தலையில் கட்டுமளவுக்கு பலம் படைத்த வர்த்தகர்கள் (Pricing Power). போட்டி குறைந்த (Monopoly) அல்லது கூட்டாக செயல்படும் (Oligopoly) மற்றும் விலைநிர்ணய பலம் படைத்த தொழிற் துறையினர் பெருமளவுக்கு லாபம் சம்பாதிக்கின்றனர். இந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் பணவீக்கத்தினால் ஆதாயமடைகின்றனர்.

மூன்றாவதாக விலைவாசி உயர்வுக்கேற்ப "பஞ்சப் படி" பெறக் கூடிய நிலையில் அரசு ஊழியர்களும் பணவீக்கத்தினால் பலனடைகின்றனர். அதுவும் செலவின அதிகரிப்பை விட பஞ்சப் படி அதிகரிப்பு அதிகம் இருக்கும் உயர்மட்ட அரசு அதிகாரிகள் பணவீக்கத்தினால் அதிக பலன் பெறுகின்றனர். அரசு ஊழியர் மட்டுமல்லாமல், பணவீக்கத்தை காரணமாக காட்டி சம்பள உயர்வு அல்லது விலை உயர்வு செய்யக் கூடிய செல்வாக்கு படைத்த தனி ஊழியர்கள் மற்றும் சிறு வியாபாரிகளும் பணவீக்கத்தினால் ஆதாயம் பெறுகின்றனர். உணவுப் பொருட்கள் விலை உயர்வினால் விவசாயிகளுக்கும் குறைந்த ஆதாயமும் இடைத்தரர்களுக்கு பெரிய ஆதாயமும் கிடைக்கின்றது.

பலவான் வாழ்வான் (Survival of the fittest) என்ற இயற்கையின் நிதிப் படி செல்வாக்கு படைத்த பலருக்கும் பணவீக்கம் என்பது ஆதாயமான ஒன்றாகவே இருக்கின்றது. இருந்தாலும் சமூகத்தில் பலம் குறைந்த பலருக்கு பணவீக்கம் கடுமையான சவாலாகவே இருக்கின்றது.

உதாரணத்திற்கு, கடும் போட்டியின் காரணமாக பணவீக்கத்தை காரணமாக வைத்து விலையை உயர்த்த முடியாதவர்கள் பணவீக்கத்தினால் பாதிக்கப் படுகின்றனர். ஓய்வூதிய பணத்தை வங்கியில் இட்டு வட்டியில் வாழும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர். வருவாயின் பெரும்பகுதியை உணவுக்கே செலவிட வேண்டிய நிலையில் உள்ள குறைந்த வருவாய் பிரிவினரின் நிலைமையைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

பணவீக்கம் ஆரம்பத்தில் பலருக்கும் பலனளிப்பதாக இருந்தாலும் பொருளாதார சுழற்சியின் (Economic Cycle) பின்பகுதியில் அனைவருக்குமே வில்லனாக அமைகிறது. பணவீக்கத்தை கட்டுபடுத்த மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் போது தொழிற் துறைகள் பாதிக்கப் படுகின்றன. பணவீக்கம் பொதுமக்களின் வாங்கும் சக்தியை (Purchasing Power) குறைக்கும் போது வணிகர்களும் இதர உற்பத்தியாளர்களும் பாதிக்கப் படுகின்றனர். பாதிக்கப் பட்ட தொழிற் நிறுவனங்கள் தமது செலவினத்தை கட்டுபடுத்த முனையும் போது வேலைவாய்ப்புக்கள் அல்லது அதிக சம்பளங்கள் பாதிக்கப் படுகின்றன. அரசாங்கத்திற்கான வரி வருமானம் குறைவதனால் அரசும் தனது செலவினத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

இப்படி ஆரம்பத்தில் இனிப்பாக இருக்கும் பணவீக்கம் அளவிற்கு அதிகமாக உயரும் போது கசப்பாக முடிகிறது.

இப்போது நமது பங்கு சந்தைக்கு வருவோம்.

பணவீக்கத்தை கட்டுபடுத்துவதற்காக, இந்திய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது, பங்கு சந்தைக்கு ஒரு கசப்பான செய்தியாகும். எனவே நாளை (22.03.2010) பங்கு சந்தை இழப்புடன் வாரக்கணக்கை துவங்கும் என்று எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில், வட்டி வீதங்கள் உயர்த்தப் படுவது இந்திய பொருளாதாரம் இப்போது வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு முக்கிய ஆதாரமாகும். எனவே துவக்கத்தில் சரிவு ஏற்பட்டாலும், பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உயரா விட்டால் சந்தை மீண்டும் நல்ல வளர்ச்சியை பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

உலக நிலவரத்தைப் பொறுத்த வரை, கிரீஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கிடையே நிலவி வரும் அரசியல் மோதல்கள் யூரோ நாணயத்தை பாதிப்பதுடன் இந்திய சந்தைகளிலும் ஒருவித மனநிலை தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

இந்த வாரத்தில் நிகழ உள்ள மாதாந்திர எதிர்கால நிலைகளின் முடிவு (F&O Expiry) சந்தையில் அதிக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். நிபிட்டியின் அடுத்த எதிர்ப்பு நிலை 5280-5320 ஆகிய புள்ளிகளுக்கு அருகில் இருக்கும்.

உலக சந்தையில் எண்ணெய் விலை மேலும் உயருவதைப் பொருத்து ரிலையன்ஸ் பங்குகள் குறுகிய கால முன்னேற்றம் அடையும். 3-G ஏலம் மற்றும் பாரதியின் ஆப்ரிக்க முதலீடுகள் தொலை தொடர்பு நிறுவனங்களின் பங்குகளின் மீது அதிக ஆர்வத்தினை உருவாக்கும்.

வட்டி வீத உயர்வினால் வாகனம், வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் ஓரளவுக்கு சரிவை சந்திக்கலாம்.

மொத்தத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாரமாகவே வரும் வாரம் இருக்கும் என்று நம்புகிறேன். நிபிட்டி 5320 அளவுகளை உறுதியாக முறியடித்த பின்னர் பங்குகளை வாங்கும் நிலை எடுக்கலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி!

Friday, March 19, 2010

ஹை! இது கூட நல்லாருக்கே?


பொதுவாக அமெரிக்காவில் சளி பிடித்தால் இந்தியாவில் தும்மல் வரும் என்று சொல்லப் படுவதுண்டு. அமெரிக்க சந்தைகளின் போக்கை குறிவைத்தே இந்திய சந்தைகள் நகருவதாகவும் ஒரு பொதுவான கருத்து உண்டு. ஆனால் இன்று இந்தியாவில் நிகழ்ந்துள்ள ஒரு மாற்றம் (இந்திய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி வீதத்தை அதிகப் படுத்தியது) அமெரிக்காவின் சந்தையை பெருமளவு பாதித்ததாக அந்த நாட்டின் முக்கிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது உலக அரங்கில் இந்தியா இப்போது எவ்வளவு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை காட்டுகின்றது.

ஜெய் ஹிந்த்!

Thursday, March 18, 2010

பெர்சிஸ்டேன்ட் சிஸ்டம்ஸ் - முதலீடு செய்யலாம்.


மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான "பெர்சிஸ்டேன்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட்" தனது பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது. நாளைய தேதியில் (19.03.2010) முடிவடையும் இந்த வெளியீட்டின் (IPO) விலை Rs.290-310 என்ற அளவில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மென்பொருட்களை அவுட்சோர்சிங் (Outsoruced Software Product Development - OPD) செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் மற்ற தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து சற்று மாறுபட்டு காணப் படுகிறது. இந்த நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கைகள் சிறப்பாகவே (உலகப் பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட 2009 ஆம் ஆண்டை தவிர) காணப் படுகிறது. இதன் விலை நிர்ணயமும் ஏற்கனவே வணிகமாகி வரும் மற்ற பெரிய மென்பொருள் நிறுவனங்களை விடவும் கவரக் கூடிய வகையில் உள்ளது.

ஓரளவுக்கு மதிப்பில் சிறந்த இந்த நிறுவனத்தின் மிகச் சிறிய அளவிலான புதிய பங்கு வெளியீடு பலமடங்கு வரவேற்பை பெறும் என்று நம்புகின்றேன். சந்தையிலும் மென்பொருட் நிறுவனங்களின் பங்குகளுக்கு தற்போது நல்ல வரவேற்பு காணப் படுவதும், இந்திய மென்பொருட் நிறுவனங்கள் பெருமளவுக்கு சார்ந்திருக்கும் அமெரிக்க பொருளாதாரம் சற்று மேம்பட்டு வருவதும் நல்ல விஷயங்கள். அதே சமயத்தில் ருபாய் மதிப்பு அதிகரித்து வருவதும், மென்பொருட் நிறுவனங்களுக்கான வரிச்சலுகைகள் (Tax Holidays for Software Technology Parks) திரும்பப் பெறப் படக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகரித்து வருவதும் எதிர்மறை விஷயங்கள்.

ஆக மொத்தத்தில் சிறப்பியல் கூறுகள் கொண்ட இந்த நிறுவனத்தில் தொலை தூர நோக்கிலும் அல்லது லிஸ்டிங் லாபங்களை கருத்தில் கொண்டும் முதலீடு செய்யலாம் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்கள்!

நன்றி.

Tuesday, March 9, 2010

"முதல் உறுதி" நிதிகளில் முதலீடு செய்யலாமா?


பொதுவாக பங்குசந்தையில் முதலீடு செய்வதென்றால் பலருக்கும் வரும் முதல் பயம் "போட்ட முதல் முழுமையாக திரும்பி வருமா?" என்பதுதான். இது நியாயமான பயம்தான் என்பதில் சந்தேகில்லை. அதே சமயம், இந்த பயத்தினை தமக்கு சாதகமாக பயன்படுத்த விரும்பும் சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் (சில காப்பீட்டு நிறுவனங்கள் கூட) புதிய பங்கு திட்டங்களை (Capital Protection Schemes) அறிமுகப் படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட பங்கு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் போட்ட பணம் போகாது (நுண்ணிய எழுத்துக்களில் "போட்ட பணம் போகாமலிருக்க முயற்சி செய்வோம்" என்ற டிஸ்கியுடன்) என்றும் விளம்பரம் செய்கின்றனர். இந்த திட்டங்களில் முதலீடு செய்வதினால் என்ன லாபம் அல்லது என்ன நஷ்டம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏற்கனவே சொன்னபடி "பங்கு சந்தையில் பங்கெடுக்க வேண்டும்", அதே சமயம் "முதலுக்கு மோசமாக கூடாது", "கொஞ்சம் குறைவான வருமானம் பங்குசந்தையில் இருந்து வந்தாலும் போதும்" என்றெல்லாம் விரும்புபவர்கள் ஏற்கும் வண்ணம் இந்த பங்கு நிதி திட்டங்கள் வடிவமைக்கப் படுகின்றன. முதலீட்டாளர்களின் பணத்தில் ஒரு குறிப்பிட்ட பெரிய பகுதி "கடன் சொத்துக்களிலும் (Debt Instruments)" மீதமுள்ள சிறிய பகுதி பங்குகளிலும் முதலீடு செய்யப் படுகின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், ஐந்து வருட முதல் உறுதி திட்டத்தில் சுமார் எழுபது சதவீத பணம் சுமார் ஏழு சதவீத வட்டி பெறுமளவுக்கு முதலீடு செய்யப் படும். ஐந்து வருடங்கள் கழித்த பின்னர் இந்த நிதி முதலீட்டு அளவை எட்ட வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும். ஒருவேளை பங்குகளில் முதலீடு செய்த பணம் முழுமையாக இழக்கப் பட்டாலும், முதலீட்டாளர்களின் பணம் (கடன் முதலீட்டின் வாயிலாக) முழுமையாக திரும்ப வாய்ப்புக்கள் உண்டு. அதே சமயம் ஐந்து ஆண்டுக்கு பணத்தை முடக்கி வைத்ததற்கு எந்த ஒரு பெரிய பலனும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்காது. ஒருவேளை பங்குகள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே முதலீட்டாளருக்கு ஓரளவுக்கு "ரிடர்ன்" இருக்கும். நீங்கள் செய்யும் முதலீட்டின் ஒருபகுதி எஜெண்டுக்கான கமிஷனாகவும் இன்னொரு பகுதி பரஸ்பர நிதி அமைப்பு செலவினங்களுக்காகவும் செலவழிக்கப் படும்.

எனவே முதலுக்கு மோசமில்லாமல் அதே சமயம் பங்குசந்தை முன்னேற்றத்திலும் பங்கெடுக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட திட்டத்தை பரிசீலிக்கலாம்.

நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையை முடிவு செய்து கொள்ளுங்கள். முதலீடு எத்தனை வருடங்களுக்கு என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு மொத்தப் பணம் ஒரு லட்சம் என்று வைத்துக் கொள்வோம். மொத்த முதலீட்டுக் காலம் ஆறு வருடங்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

மொத்தப் பணத்தில் எழுபத்தைந்தாயிரம் ரூபாயினை அஞ்சலக சேமிப்புத் திட்டத்தில் (NSC) இடலாம். ஆறு வருடங்களில் திரும்பக் கிடைக்கும் பணம் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து இருபதாயிரமாக இருக்கும்.

மீதமுள்ள இருபத்தைந்தாயிரத்தை அனுபவம் வாய்ந்த ஒரு பங்கு பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாம். பங்கு பரஸ்பர நிதியில் போட்ட பணம் முழுமையாக போனாலும் கூட, அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் மூலமாக நமக்கு முதலீட்டை விட அதிகமாக இருபதனாயிரம் கிடைக்க வாய்ப்புக்கள் இங்கே உள்ளது.

ஒருவேளை பங்கு சந்தைகள் சிறப்பாக அமையும் பட்சத்தில், பரஸ்பர நிதியில் இருந்து திரும்பக் கிடைக்கும் பணம் கிட்டத்தட்ட அறுபதினாயிரம் வரை கூட இருக்கலாம். அப்படி பட்ட நிலையில், நமக்கு மொத்தமாக திரும்பக் கிடைக்கக் கூடிய பணம் ஒரு லட்சத்து எண்பதினாயிரம் வரை இருக்க வாய்ப்புக்கள் உண்டு.

இங்கே பரஸ்பர நிதியின் விண்ணப்பத்தில் இருப்பது போல நுண்ணிய எழுத்துக்களிலான டிஸ்கிகள் கிடையாது. கமிஷன், நிதி செலவுகள் (இருபத்தைந்தாயிரம் ருபாய் பரஸ்பர நிதி முதலீட்டிற்கானது தவிர) கிடையாது. சொல்லப் போனால் சில அஞ்சலக முகவர்கள் அவர்களுக்கான கமிஷனில் ஒரு பகுதியை முதலீட்டாளர்களுக்கு திருப்பி தருகின்ற சம்பவங்கள் கூட நடைபெறுவதாக கேள்வி பட்டதுண்டு.

இன்றைய பங்குசந்தை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கிறதே? எப்படி எல்லா பணத்தையும் ஒரே நாளில் முதலீடு செய்ய முடியும் என்று கவலைப் படுபவர்களுக்கு இன்னொரு வழியும் இருக்கின்றது. முதலீட்டு பணமான ஒரு லட்சம் ரூபாயை அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மாதாமாதம் வருகின்ற வட்டித் தொகையினைக் கொண்டு பரஸ்பர நிதிகளின் மாதாந்திர வருவாய் திட்டங்களில் (SIP) முதலீடு செய்யலாம். தொடர்ந்து பங்கு சந்தையில் பல மாதங்கள் முதலீடு செய்யும் போது பங்குசந்தையின் ஏற்றாத்தாழ்வுகள் நம்மை அதிகம் பாதிக்காது. ஆறு வருடங்கள் முடிவடைந்தவுடன் நம்முடைய அசல் (குட்டி போனசும் உண்டு) முழுமையாக திரும்புவதோடு பங்கு சந்தையிலும் நமது முதலீடு (இங்கே கிட்டத்தட்ட நாற்பத்தெட்டாயிரம் ருபாய்) குறிப்பிட்ட அளவுடையதாக இருக்கும்.

இங்கும் கூட "போட்ட முதல்" உறுதியாக திரும்புமா இல்லையா என்பதற்கு நுண்ணிய டிஸ்கிகளை தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

காப்பீட்டு திட்டங்களுக்கும் இதே போன்ற ஒரு பாணியை பின்பற்றலாம். மாதா மாதம் ஒரு சிறுதொகையை கால காப்பீட்டு திட்டத்தில் (Term Insurance) இட்டு விட்டு மீத பணத்தை பங்கு அல்லது அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

முதலுக்கு மோசமில்லாமல் அதே சமயத்தில் பங்குசந்தையிலும் பங்கு பெற உதவுகின்ற இந்த திட்டங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நன்றி!

Sunday, March 7, 2010

பட்ஜெட் பாத்திரம் ஏந்தி வந்தே!


பட்ஜெட் பாத்திரம் ஏந்தி வந்தே!

பொதுவாக பட்ஜெட் என்பது ஒரு அரசாங்கத்தின் வரவு செலவு அறிக்கையாக மட்டுமே அறியப்படுகிறது. பல நாடுகளில் இதற்கு மேலே எந்த ஒரு முக்கியத்துவமும் பட்ஜெட்டிற்கு வழங்கப் படுவதில்லை. அதே சமயத்தில் இந்தியாவில் பட்ஜெட் மீது எப்போதுமே ஏராளமான எதிர்பார்ப்புக்கள் இருந்து வந்திருக்கின்றன. இந்த முறையும் எதிர்பார்ப்புக்களுக்கு பஞ்சமில்லை. இந்திய சமூகத்தின் ஒவ்வொரு பகுதியினரும் அரசாங்கத்திடமிருந்து ஏதேனுமொன்றை எதிர்பார்த்த வண்ணமே இருக்கின்றனர். பெரும் தொழில் அதிபர்கள் விரும்புவது முதலீட்டு சலுகைகள் மற்றும் வரிச்சலுகைகள். பங்குசந்தையின் விருப்பத்திற்கேற்ப பட்ஜெட் அமைய வேண்டுமென்று பங்கு வர்த்தகர்கள் விரும்புகின்றனர். மத்திய தர மக்கள் விரும்புவது வருமான வரி உயர்வு சலுகைகள் மற்றும் விலைவாசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள். எளிய மக்கள் விரும்புவது தள்ளுபடிகள், மானியங்கள் மற்றும் விலைவாசி குறைப்பு நடவடிக்கைகள்.

சென்ற வாரம் வணிக தொலைகாட்சிகளில் பெரும் தனவந்தர்கள் பட்ஜெட் தொடர்பாக தமது விருப்பங்களை முன்வைத்த போது, எனக்கு ஒரு பழைய கதை ஞாபகத்திற்கு வந்தது. ஒரு பெரிய அரசனிடம் ஏதேனும் பெற்று திரும்பலாம் என்று அவனது நண்பன் வருகின்றான். அவன் வந்த போது, அரசன் பிரார்த்தனைக் கூடத்தில் இருப்பதாக அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு சென்ற அந்த நண்பனுக்கு ஆச்சரியமே காத்திருந்ததாம். இறைவனிடம் அதைக் கொடு, இதைக் கொடு, இன்னும் கொடு என்றெல்லாம் வேண்டிக் கொண்டிருந்த அந்த அரசனைப் பார்த்த இந்த ஏழை நண்பன் கூறினானாம், " ஒரு பிச்சைக்காரனிடம் பிச்சை எடுப்பது ரொம்ப கேவலமான விஷயம், நான் திரும்பிச் செல்கிறேன்" என்று. அதைப் போலத்தான், எவ்வளவு பெரிய தனவந்தர்களாக இருந்தாலும், அரசாங்கத்திடம் அவர்களின் தேவை அடங்குவதில்லை போல.

ஒரு வகையில் எல்லாருமே பிச்சைக்காரர்கள் என்ற கருத்தை முன்வைத்த ஒரு திரைப்பட பாடலும் கூட என் சிந்தையில் ஓடியது.

அரசின் பொறுப்பும் கூட சற்று சிக்கலானதே என்று நினைக்கிறேன். சட்டியில் ஒன்றுமில்லை என்றாலும் ஆப்பையில் நிறைய இருப்பது போல காட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு. பட்ஜெட் உதவியினால் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நிதி ஆதாரத்தை மாற்றியமைக்க முடியுமே தவிர அனைவரது விருப்பத்தையும் நிறைவேற்றுவது என்பது இயலாத காரியமே.

மேற்கு வங்கத்தைத் தவிர மற்றபடிக்கு எளிய மக்களை எதிர்கொள்ள வேண்டிய தேர்தல் அவசியம் இந்த முறை இல்லாமல் போனது மத்திய அரசிற்கு ஒரு வகையில் உதவியாக இருந்தது என்றே நினைக்கிறேன். எளிய மக்கள் மற்றும் மத்திய தர மக்களின் உடனடி தேவையான விலைவாசி குறைப்பு மற்றும் குறைந்த ஊதியம் பெறுவோருக்கான வருமான வரிக்குறைப்பை பற்றி இந்த பட்ஜெட்டில் அரசு அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. சொல்லப்போனால், விலைவாசிகளை இன்னும் மேலே உயரச்செய்யக் கூடிய எரிபொருள் வரி உயர்வு பட்ஜெட்டிலும், விலை உயர்வு பட்ஜெட்டிற்கு வெளியேயும் செய்யப் பட்டது, விலைவாசி குறைப்பை பற்றிய அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது. அதே சமயம், மேல்தட்டு மக்களுக்கு சற்று வரிகுறைப்பும், தொழில் நிறுவனங்களுக்கான மேல்வரி குறைப்பும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டன. குறிப்பாக, உற்பத்தி வரி எதிர்பார்ப்பை விட மிகக்குறைவாக உயர்த்தப் பட்டது பங்குசந்தை வர்த்தகர்களை மகிழ்ச்சியுறச் செய்தது.

எளிய மக்களின் மீதான மறைமுக வரிவிதிப்பாக கருதப் படும் "நிதிப்பற்றாக்குறையை (Fiscal Deficit) அடுத்த நிதியாண்டில் குறைப்பதை பற்றி ஏராளமான அறிவிப்புக்கள் இந்த பட்ஜெட்டில் இருந்தாலும், நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை அரசின் எதிர்ப்பார்ப்பை விட அதிகம் இருப்பது, அடுத்த ஆண்டின் நிதிப்பற்றாக்குறை பற்றிய அரசின் அறிவிப்புக்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்த உதவவில்லை.

இந்தியாவின் இரண்டு முக்கிய நிதி சந்தைகளான பங்கு சந்தை மற்றும் கடன் சந்தை (Debt Market ) ஆகியவை "நிதி பற்றாக்குறை (Fiscal Deficit)" விஷயத்தில் நேரெதிர் நிலையை எடுத்துக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் கடந்த கால செயல்பாடுகள் அதன் வெற்று அறிவிப்புக்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்த உதவ வில்லை என்ற நிலைப்பாட்டுடன் கடன் சந்தை இறங்குமுகமாக இருந்த அதே வேளையில் குறைந்த பட்சம் முனைப்பையாவது காட்டுகின்றார்களே என்ற சந்தோசத்தில் பங்கு சந்தை இந்த வருடத்தின் மிகப் பெரிய வாராந்திர உயர்வை சந்தித்தது.

இது குறித்து இந்தியாவின் ஒரு மிகப் பெரிய பரஸ்பர நிதி மேலாளர் கூறிய ஒரு குஜராத்திய பழமொழி பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். "குறி எப்போதுமே தவறித்தான் வந்திருக்கிறது என்ற நிலையில் குறியை சற்று உயர்த்தி நட்சத்திரங்களின் மீதுதான் வைக்கலாமே? " எப்போதும் போல தவறினாலும் நட்சத்திரத்திற்கு குறி வைத்துத்தான் தோற்றிருக்கிறோம் என்ற சந்தோசமாவது மிஞ்சுமல்லவா? இந்த சந்தோசமே பங்கு வணிகர்களின் தீவிரத்திற்கு காரணம் என்று அவர் கூறினார்.

என்னைப் பொறுத்த வரை, (முந்தைய பதிவுகளில் சொன்னபடி) இந்திய பங்கு சந்தை உள்ளூர் விவகாரங்களை விட அசலூர் செய்திகளுக்குத்தான் (குறைந்த கால நோக்கில்) அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறது. பட்ஜெட்டிற்கு முன்னர் கிரீஸ் விவகாரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதையும் அமெரிக்க பொருளாதார தகவல்கள் சிறப்பாக இருந்ததையும் உலக சந்தைகள் கொண்டாடிய அதே சமயத்தில் உள்ளூர் பட்ஜெட் பயங்களின் காரணமாக நம் சந்தை சற்று அடக்கியே வாசித்து வந்தது. பட்ஜெட்டில் பங்கு வணிகர்களுக்கு பிடிக்காத விஷயங்கள் அதிகம் இல்லை என்று தெரிய வந்தவுடன், விட்டதை திருப்பி பிடிக்கும் நோக்கத்தில் நமது சந்தை வேகமாக முன்னேறியது என்று நினைக்கிறேன்.

சென்ற காலாண்டிற்கான இந்திய பொருளாதார வளர்ச்சி மிகக் குறைவாக இருந்ததையும் சந்தை பொருட்படுத்த வில்லை என்பதையும் இங்கு குறிப்பிட விழைகிறேன். அதே போல பணவீக்கத்தின் உயர்வையும் வட்டிவீதங்கள் உயரக் கூடிய அபாயத்தையும் "கடன் சந்தை" பெரிதளவில் உள்வாங்கிய அதே சமயத்தில் பங்கு சந்தை கொஞ்சம் கூட பொருட்படுத்தவே இல்லை. அடுத்த காலாண்டில் எல்லாம் சரியாகி விடும் என்ற ஒரே நம்பிக்கையில் பங்குகள் வெகுவாக உயர்ந்தன. மூன்று நாட்களில் மூவாயிரம் கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகள் வந்ததும் பங்குசந்தையின் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம். நிபிட்டி 5000 புள்ளிகளை அனாயசமாக கடந்ததும் சென்செக்ஸ் 17000 புள்ளிகளுக்கு அருகேயே முடிவடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்க விஷயங்கள். முன்னேற்றம் பெரிய பங்குகளில் மட்டும் அமையாமல் ஒட்டுமொத்த சந்தையும் முன்னேறியது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம்.

இப்போது வரும் வார சந்தை நிலவரத்தைப் பற்றி பார்ப்போம்.

சந்தையின் மனநிலை இப்போதைக்கு பாசிட்டிவாகவே அமைந்துள்ளது. கிரீஸ் பற்றிய கவலைகள் குறைந்தது, தொடர்ச்சியான அந்நிய முதலீடுகள், நடப்பு காலாண்டிற்கான நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மற்றும் அமெரிக்க பொருளாதார முன்னேற்றம் ஆகியவை சந்தையை ஊக்குவித்து வருகின்றன. ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதும் பங்குசந்தைக்கு சாதகமான ஒரு அம்சமாக கருதப் படுகிறது. பணவீக்கம் மற்றும் வட்டிவீத உயர்வு போன்றவற்றை பற்றிய கவலைகள் இப்போதைக்கு சற்றே பின்தள்ளப் பட்டுவிட்டன என்றே தோன்றுகிறது.

குறுகிய கால வர்த்தகர்கள் நிபிட்டி 5200 என்ற இலக்குடனும் 4990 என்ற ஸ்டாப் லாஸ் லிமிட்டுடனும் வர்த்தகம் செய்யலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் அடிப்படை சிறப்பான பங்குகளை ஒவ்வொரு வீழ்ச்சியின் போதும் வாங்கி வரலாம்.

முதலீட்டாளர்கள் தனிக்கவனத்திற்கு:

நீண்ட கால நோக்கில் கிரீஸ், பட்ஜெட் போன்ற விவகாரங்கள் தனிப்பட்ட பங்குகளின் மீது குறைந்த அளவு தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. காலப்போக்கில் பங்கின் விலையில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துவது நிறுவனத்தின் செயல்பாடு மட்டுமே. ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டின் அடிப்படையில் அதன் பங்குகளில் முதலீடு செய்வது எப்படி என்பதை கூடிய விரைவில் ஒரு தனிப்பதிவின் மூலம் விளக்க முயற்சிக்கிறேன்.

நன்றி!

Friday, March 5, 2010

ஏமாறாதே! ஏமாற விடாதே!


இரண்டு நாட்களாக பதிவுலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நித்யானந்தா செய்தது தவறா அல்லது ரஞ்சிதா செய்தது தவறா அல்லது இவர்கள் அந்தரங்கத்தை வெட்ட வெளிச்சமயமாக்கியது தவறா என்றெல்லாம் ஏராளமான பதிவுகள்/பின்னூட்டங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த பதிவில் இந்த தவறுகளைப் பற்றி அலசும் அளவுக்கு எனக்கு ஆன்மிகம், சாமியார்கள், திரை (நிழல்) உலக வாழ்க்கை போன்றவற்றைப் பற்றி அதிகம் பரிச்சயமில்லை என்றாலும் எனக்கு தோன்றிய சில பொதுவான கருத்துக்களை மட்டும் இங்கு முன்வைக்க விழைகிறேன்.

எத்தனையோ முறை போலி நிதி நிறுவனங்களிடம் ஏமாந்தாலும் திரும்ப திரும்ப அவற்றில் பணம் போட்டு ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர் நமது இந்திய மக்கள். சொல்லப் போனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட போன்சி என்ற பெயரில் ஏமாறுபவர் ஏராளம். அதே போலத்தான் ஆன்மீகவாதிகளிடம் ஏமாறும் பொதுமக்களின் தொடர்கதையும். பல சாமியார்களின் மோசடிகளைப் பற்றிய ஊடகங்களில் தகவல்கள் வந்து கொண்டே இருந்தாலும், இந்த சாமியார் அப்படியல்ல என்று ரொம்பவும் அப்பாவித்தனமாக மீண்டும் மீண்டும் ஏமாறும் கதைகள் புதிது புதிதாக வந்த வண்ணமே உள்ளன. இவ்வாறு தொடர்ந்து ஏமாறுவதற்கு மக்களின் பேராசை அல்லது குறைந்த கல்வியறிவு மட்டுமே காரணம் என்று சொல்லி விட்டு நாம் ஒதுங்கி போய் விட முடியாது. போலிகளைப் பற்றிய விழிப்புணர்ச்சியினை ஊட்ட வேண்டியது சமூகம் மற்றும் அரசாங்கத்தின் கடமையாகும். தவறுகள் நடந்தேறிய பின்னர் தலையைக் காட்டாமல், தவறு நடப்பதற்கு முன்னரே தடுப்பதும் அரசின் முக்கிய கடமையாகும்.

என்னுள் இன்னொரு கேள்வியும் எழுகின்றது.

இந்தியா போன்ற அடிப்படை வசதிகள் குறைந்த ஒரு நாட்டில், வறுமைக் கோட்டிற்கு கீழே பல கோடி பேர் வாழும் ஒரு நாட்டில், சாமியார் மடங்கள் தேவைதானா? மத வேறுபாடில்லாமல் அனைத்து சாமியார் மடங்களையும் ஏன் அரசாங்கம் மூடி விடக் கூடாது? அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டின் வளர்ச்சிக்காக ஏன் பயன்படுத்தக் கூடாது? மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் கதையல்ல இது. ஒரு சில நல்லவர்களுக்காக பலநூறு தீய சக்திகளை அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்வியிது.

இது ஏதோ கோபத்தில் எழுந்த கருத்துக்கள் அல்ல.

பொதுவாக கோயில் இல்லாத ஊரே இந்தியாவில் இல்லை என்ற நிலை இருக்கும் போது, எதற்காக புதிது புதிதாக மடங்கள்? உலகிலேயே அதிக வழிபாட்டு தளங்கள் கொண்ட நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆன்மீக தேவை இருப்பவர்கள் இத்தனை வழிபாட்டு தளங்களிலும் சென்று பிரார்த்தனை செய்யலாமே?

ஆன்மீகத்தேடலுக்கு குருவின் துணை அவசியம் என்று நினைப்பது ஒருவேளை நியாயமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் உண்மையான குருக்கள் மடத்தில் சாமியார் வடிவில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையே? ஒருவரின் குரு தனது தந்தையாக இருக்கலாம். உறவினராக இருக்கலாம், ஆசிரியராக இருக்கலாம், ஏன் தோழனாக கூட இருக்கலாம், இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லவா? அவரை தேடி கண்டுபிடிக்க வேண்டியது உண்மையான மாணாக்கனின் கடமைதானே? தவிரவும் உண்மையான குரு தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொண்டு அமர்ந்திருக்க மாட்டார் என்றே ஜென் தத்துவங்கள் கூட சொல்கின்றன அல்லவா? மேலும் எல்லாவற்றிலும் சிறந்த ஆன்மீக தேடல் சுயதேடல்தான் என்பதை இந்த மண்ணில் வாழ்ந்த எத்தனையோ மகான்கள் சொல்லி சென்றுள்ளனர் அல்லவா?

இந்தியாவின் ஆன்மீக சொத்துக்களாக கருதப் படும், யோகா, தியானம் போன்றவற்றை விருப்பபடுபவர்களுக்கு கற்றுக் கொடுக்க முறைப்படுத்த பட்ட பள்ளிகளை அரசாங்கமே அமைக்கலாமே? இவற்றை சிறப்பாக கற்றவர்கள் என்றே ஒரே காரணத்திற்காக மட்டுமே இந்த சாமியார்களை தரிசிக்க இவ்வளவு காசு, கால் கழுவ இவ்வளவு பணம் என்று கொள்ளை லாபம் அடிக்க ஏன் அனுமதிக்க வேண்டும்? மந்திர சக்தி அல்லது மகத்தான சக்தி இருக்கிறது என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களை அறிவியல் ரீதியாக அவர்களின் மந்திர சக்தியை நிரூபிக்கச் கட்டாயப் படுத்தலாமே? தவறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கலாமே?

இந்த நித்தியானந்தத்தை கைது செய்வதால் மட்டுமே பிரச்சினை முடியப் போவதில்லை. புதிய புதிய போலிகள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். சொல்லப் போனால், இவரே கூட மீண்டு வந்து புதிய கூடாரத்தை அமைத்தாலும் அமைக்கலாம். எனவே புரையோடிப் போன இந்த தொடர்வியாதிக்கு மேலோட்டமான சிகிச்சையை விட அறுவை சிகிச்சையே சிறந்தது என்று நினைக்கிறேன்.

ஆக மொத்தத்தில், தான் ஏமாறுவதை தவிர்க்க வேண்டிய பொறுப்பில் பெரும்பகுதி பொது ஜனத்திற்குத்தான் உள்ளது என்றாலும், தனது குடிமக்களை இந்த உள்நாட்டு பகைவர்களிடம் இருந்து காக்க வேண்டிய பெரிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் உள்ளது என்றே நினைக்கிறேன்.

நன்றி!
Blog Widget by LinkWithin