Friday, March 5, 2010

ஏமாறாதே! ஏமாற விடாதே!


இரண்டு நாட்களாக பதிவுலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நித்யானந்தா செய்தது தவறா அல்லது ரஞ்சிதா செய்தது தவறா அல்லது இவர்கள் அந்தரங்கத்தை வெட்ட வெளிச்சமயமாக்கியது தவறா என்றெல்லாம் ஏராளமான பதிவுகள்/பின்னூட்டங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த பதிவில் இந்த தவறுகளைப் பற்றி அலசும் அளவுக்கு எனக்கு ஆன்மிகம், சாமியார்கள், திரை (நிழல்) உலக வாழ்க்கை போன்றவற்றைப் பற்றி அதிகம் பரிச்சயமில்லை என்றாலும் எனக்கு தோன்றிய சில பொதுவான கருத்துக்களை மட்டும் இங்கு முன்வைக்க விழைகிறேன்.

எத்தனையோ முறை போலி நிதி நிறுவனங்களிடம் ஏமாந்தாலும் திரும்ப திரும்ப அவற்றில் பணம் போட்டு ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர் நமது இந்திய மக்கள். சொல்லப் போனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட போன்சி என்ற பெயரில் ஏமாறுபவர் ஏராளம். அதே போலத்தான் ஆன்மீகவாதிகளிடம் ஏமாறும் பொதுமக்களின் தொடர்கதையும். பல சாமியார்களின் மோசடிகளைப் பற்றிய ஊடகங்களில் தகவல்கள் வந்து கொண்டே இருந்தாலும், இந்த சாமியார் அப்படியல்ல என்று ரொம்பவும் அப்பாவித்தனமாக மீண்டும் மீண்டும் ஏமாறும் கதைகள் புதிது புதிதாக வந்த வண்ணமே உள்ளன. இவ்வாறு தொடர்ந்து ஏமாறுவதற்கு மக்களின் பேராசை அல்லது குறைந்த கல்வியறிவு மட்டுமே காரணம் என்று சொல்லி விட்டு நாம் ஒதுங்கி போய் விட முடியாது. போலிகளைப் பற்றிய விழிப்புணர்ச்சியினை ஊட்ட வேண்டியது சமூகம் மற்றும் அரசாங்கத்தின் கடமையாகும். தவறுகள் நடந்தேறிய பின்னர் தலையைக் காட்டாமல், தவறு நடப்பதற்கு முன்னரே தடுப்பதும் அரசின் முக்கிய கடமையாகும்.

என்னுள் இன்னொரு கேள்வியும் எழுகின்றது.

இந்தியா போன்ற அடிப்படை வசதிகள் குறைந்த ஒரு நாட்டில், வறுமைக் கோட்டிற்கு கீழே பல கோடி பேர் வாழும் ஒரு நாட்டில், சாமியார் மடங்கள் தேவைதானா? மத வேறுபாடில்லாமல் அனைத்து சாமியார் மடங்களையும் ஏன் அரசாங்கம் மூடி விடக் கூடாது? அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டின் வளர்ச்சிக்காக ஏன் பயன்படுத்தக் கூடாது? மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் கதையல்ல இது. ஒரு சில நல்லவர்களுக்காக பலநூறு தீய சக்திகளை அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்வியிது.

இது ஏதோ கோபத்தில் எழுந்த கருத்துக்கள் அல்ல.

பொதுவாக கோயில் இல்லாத ஊரே இந்தியாவில் இல்லை என்ற நிலை இருக்கும் போது, எதற்காக புதிது புதிதாக மடங்கள்? உலகிலேயே அதிக வழிபாட்டு தளங்கள் கொண்ட நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆன்மீக தேவை இருப்பவர்கள் இத்தனை வழிபாட்டு தளங்களிலும் சென்று பிரார்த்தனை செய்யலாமே?

ஆன்மீகத்தேடலுக்கு குருவின் துணை அவசியம் என்று நினைப்பது ஒருவேளை நியாயமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் உண்மையான குருக்கள் மடத்தில் சாமியார் வடிவில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையே? ஒருவரின் குரு தனது தந்தையாக இருக்கலாம். உறவினராக இருக்கலாம், ஆசிரியராக இருக்கலாம், ஏன் தோழனாக கூட இருக்கலாம், இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லவா? அவரை தேடி கண்டுபிடிக்க வேண்டியது உண்மையான மாணாக்கனின் கடமைதானே? தவிரவும் உண்மையான குரு தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொண்டு அமர்ந்திருக்க மாட்டார் என்றே ஜென் தத்துவங்கள் கூட சொல்கின்றன அல்லவா? மேலும் எல்லாவற்றிலும் சிறந்த ஆன்மீக தேடல் சுயதேடல்தான் என்பதை இந்த மண்ணில் வாழ்ந்த எத்தனையோ மகான்கள் சொல்லி சென்றுள்ளனர் அல்லவா?

இந்தியாவின் ஆன்மீக சொத்துக்களாக கருதப் படும், யோகா, தியானம் போன்றவற்றை விருப்பபடுபவர்களுக்கு கற்றுக் கொடுக்க முறைப்படுத்த பட்ட பள்ளிகளை அரசாங்கமே அமைக்கலாமே? இவற்றை சிறப்பாக கற்றவர்கள் என்றே ஒரே காரணத்திற்காக மட்டுமே இந்த சாமியார்களை தரிசிக்க இவ்வளவு காசு, கால் கழுவ இவ்வளவு பணம் என்று கொள்ளை லாபம் அடிக்க ஏன் அனுமதிக்க வேண்டும்? மந்திர சக்தி அல்லது மகத்தான சக்தி இருக்கிறது என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களை அறிவியல் ரீதியாக அவர்களின் மந்திர சக்தியை நிரூபிக்கச் கட்டாயப் படுத்தலாமே? தவறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கலாமே?

இந்த நித்தியானந்தத்தை கைது செய்வதால் மட்டுமே பிரச்சினை முடியப் போவதில்லை. புதிய புதிய போலிகள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். சொல்லப் போனால், இவரே கூட மீண்டு வந்து புதிய கூடாரத்தை அமைத்தாலும் அமைக்கலாம். எனவே புரையோடிப் போன இந்த தொடர்வியாதிக்கு மேலோட்டமான சிகிச்சையை விட அறுவை சிகிச்சையே சிறந்தது என்று நினைக்கிறேன்.

ஆக மொத்தத்தில், தான் ஏமாறுவதை தவிர்க்க வேண்டிய பொறுப்பில் பெரும்பகுதி பொது ஜனத்திற்குத்தான் உள்ளது என்றாலும், தனது குடிமக்களை இந்த உள்நாட்டு பகைவர்களிடம் இருந்து காக்க வேண்டிய பெரிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் உள்ளது என்றே நினைக்கிறேன்.

நன்றி!

15 comments:

எம்.ஏ.சுசீலா said...

வண்டி இழுத்துப் பிழைப்பவனிடமிருந்தும்,வாழைப்பழம் விற்பவனிடமிருந்தும் கூட ஞானம் பெற வழியுண்டு என்பார் ஜெயகாந்தன்.
உங்கள் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்.
முடிந்தால் என் பதிவுகளையும் பாருங்கள்.
http://masusila.blogspot.com/2010/03/blog-post.html
http://masusila.blogspot.com/2010/03/blog-post_05.html

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இவற்றை சிறப்பாக கற்றவர்கள் என்றே ஒரே காரணத்திற்காக மட்டுமே இந்த சாமியார்களை தரிசிக்க இவ்வளவு காசு, கால் கழுவ இவ்வளவு பணம் என்று கொள்ளை லாபம் அடிக்க ஏன் அனுமதிக்க வேண்டும்? //

இது மட்டுமே காரணமாக இருக்க முடியுமா நண்பரே..,

Maximum India said...

நன்றி என்.ஏ. சுசீலா மேடம்!

உங்கள் பதிவு வலைக்கு கட்டாயமாக வருகை தருவேன்!

நன்றி!

Maximum India said...

நன்றி சுரேஷ்!

//இது மட்டுமே காரணமாக இருக்க முடியுமா நண்பரே..,//

அபூர்வ மந்திர சக்திகளையெல்லாம் என்னால் நம்ப முடிய வில்லை. சுபி கதைகள், ஜென் தத்துவங்கள், முல்லா கதைகள் மற்றும் நம்மூர் புராணங்கள் படித்தவர்கள் எல்லா உலக தத்துவமும் பேச முடியும். இவை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?

நன்றி!

nerkuppai thumbi said...

மீண்டும் ஒரு நல்ல பதிவு.

பலப்பல பதிவுகள் இந்த விஷயத்தைப் பற்றி வந்துவிட்டன; வந்து கொண்டே இருக்கின்றன. இது ஒரு கோணம்; தவிர, எதிர் காலத்தில் இது போன்ற அலங்கோலங்கள் நடக்காமல் தடுக்க எத்தனிப்பு.

சிறு வயதில் ஆன்மீக/குறைந்த அளவு மத சிந்தனைகள் பற்றி எண்ணம் ஏற்படுத்துதல் இருந்தது; இருபதுக்குள், இறை நம்பிக்கையும் , அல்லது இறைவன் இல்லை என்ற எண்ணமும் பல தன்னுள் ஆய்வுகளுக்குப் பின் தெளிவாக கருத்து உருவானது. அவர்கள் குரு ஒருவரையும் தேடித் போக அவசியம் இருந்ததில்லை. அந்த காலத்தில் தான் சாமியாராக போக வேண்டும் என்றால் மட்டுமே, தீக்ஷை பெறுவதற்கு, ஒரு குருவை தேடினார்கள்.

இப்போது, சிறு வயதில், கல்வி முறை அதிக நேரம் எடுத்துக்கொண்டு விடுகிறது; மிகுந்த நேரம் தொலைக் காட்சி விழுங்கி விடுகிறது. தற்கால வாழ்க்கை முறையில், மாணவர்கள், பள்ளிப் படிப்பை தவிர, பொது அறிவு, முதலியனவும் நேரம் கழிய காரணம் ஆகிவிடுகிறது. ஆகவே, அவர்கள், முப்பதுகளில் , நாற்பதுகளில் , மன சாந்திக்காக எதையோ தேடி அலைகிறார்கள்; இது போன்ற குருக்கள் (குருகள்) கலங்கரை விளக்காக காட்சி அளிக்கிறார்கள். மாட்டிக் கொள்கிறார்கள்.

இறை உணர்வை சின்ன வயதிலே வீட்டிலே ஊட்டினால், ஒரு வேலை பிற்காலத்தில் ஒரு குருவின் தேவை இல்லாமல் இருக்கலாம் என நினைக்கிறேன்.

இவற்றை ஒரேயடியாக மூடிவிடாமல், அரசு, இவற்றை வரி விலக்குகள் அளிக்காமல், லாபம் ஈட்டும் கம்பெனியாக நோக்கினால், இந்த "இன்று ரொக்கம் நாளை முக்தி", கருப்பு-வெள்ளை பணமாற்று, தொழில் அதிபர்கள் -பணக்காரர்கள்-அரசியல் வாதிகள்- திரை நடிகர்கள்-நடிகைகள் அலம்பல், மூடு திரை நாடகங்கள் குறையலாம்.

nerkuppai thumbi said...

Quoted from:
http://nanavuhal.wordpress.com/2010/03/03/nithyananda/

//குழியில் விழுந்த குருடும் குருடுகளும்…!
2010 March 3

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.

- திருமந்திரம் (10.6.105)

Maximum India said...

அன்புள்ள நெற்குப்பைதும்பி ஐயா!

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

//சிறு வயதில் ஆன்மீக/குறைந்த அளவு மத சிந்தனைகள் பற்றி எண்ணம் ஏற்படுத்துதல் இருந்தது; இருபதுக்குள், இறை நம்பிக்கையும் , அல்லது இறைவன் இல்லை என்ற எண்ணமும் பல தன்னுள் ஆய்வுகளுக்குப் பின் தெளிவாக கருத்து உருவானது. அவர்கள் குரு ஒருவரையும் தேடித் போக அவசியம் இருந்ததில்லை. அந்த காலத்தில் தான் சாமியாராக போக வேண்டும் என்றால் மட்டுமே, தீக்ஷை பெறுவதற்கு, ஒரு குருவை தேடினார்கள்.

இப்போது, சிறு வயதில், கல்வி முறை அதிக நேரம் எடுத்துக்கொண்டு விடுகிறது; மிகுந்த நேரம் தொலைக் காட்சி விழுங்கி விடுகிறது. தற்கால வாழ்க்கை முறையில், மாணவர்கள், பள்ளிப் படிப்பை தவிர, பொது அறிவு, முதலியனவும் நேரம் கழிய காரணம் ஆகிவிடுகிறது. ஆகவே, அவர்கள், முப்பதுகளில் , நாற்பதுகளில் , மன சாந்திக்காக எதையோ தேடி அலைகிறார்கள்; இது போன்ற குருக்கள் (குருகள்) கலங்கரை விளக்காக காட்சி அளிக்கிறார்கள். மாட்டிக் கொள்கிறார்கள்.

இறை உணர்வை சின்ன வயதிலே வீட்டிலே ஊட்டினால், ஒரு வேலை பிற்காலத்தில் ஒரு குருவின் தேவை இல்லாமல் இருக்கலாம் என நினைக்கிறேன். //உண்மைதான் ஐயா! இறை பக்தி நிறைந்த ஒரு குடும்பத்தில் வளர்ந்த எனக்கு இப்போது எந்த ஒரு சாமியார் மீதும் ஈடுபாடு ஏற்படாமல் போவதற்கு நீங்கள் சொல்வதுதான் காரணமாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

//இவற்றை ஒரேயடியாக மூடிவிடாமல், அரசு, இவற்றை வரி விலக்குகள் அளிக்காமல், லாபம் ஈட்டும் கம்பெனியாக நோக்கினால், இந்த "இன்று ரொக்கம் நாளை முக்தி", கருப்பு-வெள்ளை பணமாற்று, தொழில் அதிபர்கள் -பணக்காரர்கள்-அரசியல் வாதிகள்- திரை நடிகர்கள்-நடிகைகள் அலம்பல், மூடு திரை நாடகங்கள் குறையலாம்.//மடங்களை முறைப்படுத்த அரசு ஒரு அமைப்பை ஏற்படுத்துவது நல்லது. பொது மக்களும், ஏமாந்த பிறகு லபோ திபோ என்று அலறுவதற்கு பதிலாக, ஒரு குருவை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் "Due Diligence" செய்வது நல்லது என்றே நினைக்கிறேன்.நன்றி!

Maximum India said...

//குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.

- திருமந்திரம் //

அர்த்தமுள்ள வார்த்தைகள் ஐயா! இதனால்தான் இதனை திருமந்திரம் என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

Naresh Kumar said...

நான் கும்பிடுற சாமிக்கே ரெண்டு பொண்டாட்டி...

எங்க முதலமைச்சரு, அமைச்சருக்கெல்லாம் ரெண்டு பொண்டாட்டி...

இந்த விஷயத்தை வெளிபரப்புன சேனலோட சமீபத்து படத்துல மூணு ஹீரோயின் ஒரு ஹீரோ கூட இதைவிட் கம்மி டிரஸ்ஸுல, இதை விட நெருக்கமா இருந்திருக்காங்க...

மிட்நைட் மசாலா என்கிற விஷயத்தை மக்களுக்கு அறிமுகம் செய்ததும் இதே ஊடகந்தான்...

நான் உட்பட, சாமியார் எப்படி இப்படி செய்யலாம் என்ற கோபத்தை விட, எப்படியெல்லாம் செய்திருக்கிறார் என்ற உள்ள அரிப்பிலும், கொடுத்துவைத்தவன் என்கிற பெருமூச்சுக்கிடையே பார்த்தவர்களே அதிகம்....

மக்களின் அரிப்பு நிலையை நன்கு தெரிந்ததாலோ, எல்லாம் லூசுப்பசங்க என்பதாலோ என்னமோதான் முதல் நாளில் பெண்ணின் முகத்தை மறைத்து விட்டு, அடுத்த நாள் யாரிவர் என்ற கேள்வியில் அந்தப் பெண்ணின் கவர்ச்சி நடனத்தையும், கற்பழிப்புக் காட்சியையும் போட்டு தன்னுடைய அரிப்பையும் காட்டியிருக்கிறது ஒரு ஊடகம்....

எல்லாவற்றுக்கும் மேலாக, விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு பிரச்சனை, அண்ணமாலை பல்கலைக் கழக கலவரம் இவற்றையெல்லாம் தாண்டி சாமி(யார்) என்று நம்மாலேயே உயர்த்தி வைக்கப்பட்ட ஒரு மனிதான், இன்னொரு பெண்ணுடன் அவள் விருப்பத்துடன் அவளுடன் படுத்து இருந்ததுதான் தமிழ்நாட்டின் முக்கிய பேச்சுப் பொருள் என்றால், நம்மை ஒழிக்க புதிதாக யாரும் தேவையில்லை....

சன் டிவி என்ன எதிர்பார்த்ததோ அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்....நமக்கு வேற மேட்டர் இல்லையா...

நரேஷ்

Thomas Ruban said...

//இந்தியா போன்ற அடிப்படை வசதிகள் குறைந்த ஒரு நாட்டில், வறுமைக் கோட்டிற்கு கீழே பல கோடி பேர் வாழும் ஒரு நாட்டில், சாமியார் மடங்கள் தேவைதானா? மத வேறுபாடில்லாமல் அனைத்து சாமியார் மடங்களையும் ஏன் அரசாங்கம் மூடி விடக் கூடாது? அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டின் வளர்ச்சிக்காக ஏன் பயன்படுத்தக் கூடாது? மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் கதையல்ல இது. ஒரு சில நல்லவர்களுக்காக பலநூறு தீய சக்திகளை அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்வியிது. //

அரசாங்கம் சாமியார் மடங்களை மூடாது ஏனேன்றால் டாலர் மற்றும் சுற்றுலாவாசிகளின் வருமானத்தை இழக்க விரும்பாது.அதிலும் இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் அர்த்தமில்லாமல் போய்விடும்.

நித்யானந்தா விசியத்தில் யாரும் சமுக அக்கறையுடன் செயல்பட்டது போல் எனக்கு தெரியவில்லை.அப்பன் எப்போ சவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்திருந்தது போல் தங்கள் உணர்சிகளை கொட்டி தீர்த்துவிட்டார்கள்.அரசாங்கமே கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.சட்டமாவது தன் கடமையை செய்கிறதா என்று பார்கலாம் !!!!!???

நன்றி சார்.

Thomas Ruban said...

//இந்த நித்தியானந்தத்தை கைது செய்வதால் மட்டுமே பிரச்சினை முடியப் போவதில்லை. புதிய புதிய போலிகள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். சொல்லப் போனால், இவரே கூட மீண்டு வந்து புதிய கூடாரத்தை அமைத்தாலும் அமைக்கலாம். எனவே புரையோடிப் போன இந்த தொடர்வியாதிக்கு மேலோட்டமான சிகிச்சையை விட அறுவை சிகிச்சையே சிறந்தது என்று நினைக்கிறேன்.//

கைது செய்து சரியான கடுமையான தண்டனைகள் வழங்கினால் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். நன்றி சார்.

Maximum India said...

அன்புள்ள நரேஷ் குமார்!

கருத்துரைக்கு மிக்க நன்றி!

பதிவிலேயே சொன்னபடி நித்யானந்தா செய்தது தவறா இல்லையா என்ற வாதத்தை விட, சாமியார் மடங்கள் நாட்டுக்கு தேவையா என்பதுதான் எனது கேள்வி.

நன்றி!

Maximum India said...

அன்புள்ள தாமஸ் ரூபன்!

நித்யானந்தா விவகாரத்தில் ஊடகங்களிடம் சமூக அக்கறையை விட வணிக நோக்கமே அதிகம் இருந்ததாக உணர்கிறேன். ஊடகங்களின் மீது இருக்கும் தவறை சுட்டிகாட்டிய படி, நித்யானந்தத்தையும் கை கழுவி விட்டு விடமுடியாது.

நன்றி!

பொதுஜனம் said...

நம் சமூகம் முழுமையான அறிவார்ந்த சமூகமாக மாறும் வரை காவிகள் கண்டதை செய்து கொண்டுதான் இருப்பார்கள்.தனி மனிதன் தவறான வழியில் சென்று தடுக்கி விழுந்தாலும் தட்டி எழுப்பி சரியான பாதை காட்ட வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. பகுத்தறிவை போதிக்கும் நம் அரசு அதை செய்யும் என்று நம்புவோம். ஆனால் சாமியார்கள் ஜாக்கிரதை. இது நவீன யுகம். போன நூற்றாண்டு வரை ஆதாரம் இல்லாமல் செய்த தவறுகளை இப்போது செய்ய முடியாது. பாத்ரூமுக்கு போகும் போதும் பாத்து போகவும்.இல்லை என்றால் இது போல் காவி கன்றாவிகளை வாரம் வாரம் நங்கள் பார்க்க வேண்டி வரும்.

Maximum India said...

நன்றி பொதுஜனம்!

//ஆனால் சாமியார்கள் ஜாக்கிரதை. இது நவீன யுகம். போன நூற்றாண்டு வரை ஆதாரம் இல்லாமல் செய்த தவறுகளை இப்போது செய்ய முடியாது. பாத்ரூமுக்கு போகும் போதும் பாத்து போகவும்.இல்லை என்றால் இது போல் காவி கன்றாவிகளை வாரம் வாரம் நங்கள் பார்க்க வேண்டி வரும்.//

இவர்களைப் போன்ற ஏமாற்றுக்காரர்கள் புத்தம் புதிய வித்தைகளுடன் வருவார்கள். இவர்களிடம் நாம்தான் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

நன்றி!

Blog Widget by LinkWithin