Sunday, March 7, 2010

பட்ஜெட் பாத்திரம் ஏந்தி வந்தே!


பட்ஜெட் பாத்திரம் ஏந்தி வந்தே!

பொதுவாக பட்ஜெட் என்பது ஒரு அரசாங்கத்தின் வரவு செலவு அறிக்கையாக மட்டுமே அறியப்படுகிறது. பல நாடுகளில் இதற்கு மேலே எந்த ஒரு முக்கியத்துவமும் பட்ஜெட்டிற்கு வழங்கப் படுவதில்லை. அதே சமயத்தில் இந்தியாவில் பட்ஜெட் மீது எப்போதுமே ஏராளமான எதிர்பார்ப்புக்கள் இருந்து வந்திருக்கின்றன. இந்த முறையும் எதிர்பார்ப்புக்களுக்கு பஞ்சமில்லை. இந்திய சமூகத்தின் ஒவ்வொரு பகுதியினரும் அரசாங்கத்திடமிருந்து ஏதேனுமொன்றை எதிர்பார்த்த வண்ணமே இருக்கின்றனர். பெரும் தொழில் அதிபர்கள் விரும்புவது முதலீட்டு சலுகைகள் மற்றும் வரிச்சலுகைகள். பங்குசந்தையின் விருப்பத்திற்கேற்ப பட்ஜெட் அமைய வேண்டுமென்று பங்கு வர்த்தகர்கள் விரும்புகின்றனர். மத்திய தர மக்கள் விரும்புவது வருமான வரி உயர்வு சலுகைகள் மற்றும் விலைவாசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள். எளிய மக்கள் விரும்புவது தள்ளுபடிகள், மானியங்கள் மற்றும் விலைவாசி குறைப்பு நடவடிக்கைகள்.

சென்ற வாரம் வணிக தொலைகாட்சிகளில் பெரும் தனவந்தர்கள் பட்ஜெட் தொடர்பாக தமது விருப்பங்களை முன்வைத்த போது, எனக்கு ஒரு பழைய கதை ஞாபகத்திற்கு வந்தது. ஒரு பெரிய அரசனிடம் ஏதேனும் பெற்று திரும்பலாம் என்று அவனது நண்பன் வருகின்றான். அவன் வந்த போது, அரசன் பிரார்த்தனைக் கூடத்தில் இருப்பதாக அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு சென்ற அந்த நண்பனுக்கு ஆச்சரியமே காத்திருந்ததாம். இறைவனிடம் அதைக் கொடு, இதைக் கொடு, இன்னும் கொடு என்றெல்லாம் வேண்டிக் கொண்டிருந்த அந்த அரசனைப் பார்த்த இந்த ஏழை நண்பன் கூறினானாம், " ஒரு பிச்சைக்காரனிடம் பிச்சை எடுப்பது ரொம்ப கேவலமான விஷயம், நான் திரும்பிச் செல்கிறேன்" என்று. அதைப் போலத்தான், எவ்வளவு பெரிய தனவந்தர்களாக இருந்தாலும், அரசாங்கத்திடம் அவர்களின் தேவை அடங்குவதில்லை போல.

ஒரு வகையில் எல்லாருமே பிச்சைக்காரர்கள் என்ற கருத்தை முன்வைத்த ஒரு திரைப்பட பாடலும் கூட என் சிந்தையில் ஓடியது.

அரசின் பொறுப்பும் கூட சற்று சிக்கலானதே என்று நினைக்கிறேன். சட்டியில் ஒன்றுமில்லை என்றாலும் ஆப்பையில் நிறைய இருப்பது போல காட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு. பட்ஜெட் உதவியினால் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நிதி ஆதாரத்தை மாற்றியமைக்க முடியுமே தவிர அனைவரது விருப்பத்தையும் நிறைவேற்றுவது என்பது இயலாத காரியமே.

மேற்கு வங்கத்தைத் தவிர மற்றபடிக்கு எளிய மக்களை எதிர்கொள்ள வேண்டிய தேர்தல் அவசியம் இந்த முறை இல்லாமல் போனது மத்திய அரசிற்கு ஒரு வகையில் உதவியாக இருந்தது என்றே நினைக்கிறேன். எளிய மக்கள் மற்றும் மத்திய தர மக்களின் உடனடி தேவையான விலைவாசி குறைப்பு மற்றும் குறைந்த ஊதியம் பெறுவோருக்கான வருமான வரிக்குறைப்பை பற்றி இந்த பட்ஜெட்டில் அரசு அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. சொல்லப்போனால், விலைவாசிகளை இன்னும் மேலே உயரச்செய்யக் கூடிய எரிபொருள் வரி உயர்வு பட்ஜெட்டிலும், விலை உயர்வு பட்ஜெட்டிற்கு வெளியேயும் செய்யப் பட்டது, விலைவாசி குறைப்பை பற்றிய அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது. அதே சமயம், மேல்தட்டு மக்களுக்கு சற்று வரிகுறைப்பும், தொழில் நிறுவனங்களுக்கான மேல்வரி குறைப்பும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டன. குறிப்பாக, உற்பத்தி வரி எதிர்பார்ப்பை விட மிகக்குறைவாக உயர்த்தப் பட்டது பங்குசந்தை வர்த்தகர்களை மகிழ்ச்சியுறச் செய்தது.

எளிய மக்களின் மீதான மறைமுக வரிவிதிப்பாக கருதப் படும் "நிதிப்பற்றாக்குறையை (Fiscal Deficit) அடுத்த நிதியாண்டில் குறைப்பதை பற்றி ஏராளமான அறிவிப்புக்கள் இந்த பட்ஜெட்டில் இருந்தாலும், நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை அரசின் எதிர்ப்பார்ப்பை விட அதிகம் இருப்பது, அடுத்த ஆண்டின் நிதிப்பற்றாக்குறை பற்றிய அரசின் அறிவிப்புக்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்த உதவவில்லை.

இந்தியாவின் இரண்டு முக்கிய நிதி சந்தைகளான பங்கு சந்தை மற்றும் கடன் சந்தை (Debt Market ) ஆகியவை "நிதி பற்றாக்குறை (Fiscal Deficit)" விஷயத்தில் நேரெதிர் நிலையை எடுத்துக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் கடந்த கால செயல்பாடுகள் அதன் வெற்று அறிவிப்புக்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்த உதவ வில்லை என்ற நிலைப்பாட்டுடன் கடன் சந்தை இறங்குமுகமாக இருந்த அதே வேளையில் குறைந்த பட்சம் முனைப்பையாவது காட்டுகின்றார்களே என்ற சந்தோசத்தில் பங்கு சந்தை இந்த வருடத்தின் மிகப் பெரிய வாராந்திர உயர்வை சந்தித்தது.

இது குறித்து இந்தியாவின் ஒரு மிகப் பெரிய பரஸ்பர நிதி மேலாளர் கூறிய ஒரு குஜராத்திய பழமொழி பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். "குறி எப்போதுமே தவறித்தான் வந்திருக்கிறது என்ற நிலையில் குறியை சற்று உயர்த்தி நட்சத்திரங்களின் மீதுதான் வைக்கலாமே? " எப்போதும் போல தவறினாலும் நட்சத்திரத்திற்கு குறி வைத்துத்தான் தோற்றிருக்கிறோம் என்ற சந்தோசமாவது மிஞ்சுமல்லவா? இந்த சந்தோசமே பங்கு வணிகர்களின் தீவிரத்திற்கு காரணம் என்று அவர் கூறினார்.

என்னைப் பொறுத்த வரை, (முந்தைய பதிவுகளில் சொன்னபடி) இந்திய பங்கு சந்தை உள்ளூர் விவகாரங்களை விட அசலூர் செய்திகளுக்குத்தான் (குறைந்த கால நோக்கில்) அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறது. பட்ஜெட்டிற்கு முன்னர் கிரீஸ் விவகாரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதையும் அமெரிக்க பொருளாதார தகவல்கள் சிறப்பாக இருந்ததையும் உலக சந்தைகள் கொண்டாடிய அதே சமயத்தில் உள்ளூர் பட்ஜெட் பயங்களின் காரணமாக நம் சந்தை சற்று அடக்கியே வாசித்து வந்தது. பட்ஜெட்டில் பங்கு வணிகர்களுக்கு பிடிக்காத விஷயங்கள் அதிகம் இல்லை என்று தெரிய வந்தவுடன், விட்டதை திருப்பி பிடிக்கும் நோக்கத்தில் நமது சந்தை வேகமாக முன்னேறியது என்று நினைக்கிறேன்.

சென்ற காலாண்டிற்கான இந்திய பொருளாதார வளர்ச்சி மிகக் குறைவாக இருந்ததையும் சந்தை பொருட்படுத்த வில்லை என்பதையும் இங்கு குறிப்பிட விழைகிறேன். அதே போல பணவீக்கத்தின் உயர்வையும் வட்டிவீதங்கள் உயரக் கூடிய அபாயத்தையும் "கடன் சந்தை" பெரிதளவில் உள்வாங்கிய அதே சமயத்தில் பங்கு சந்தை கொஞ்சம் கூட பொருட்படுத்தவே இல்லை. அடுத்த காலாண்டில் எல்லாம் சரியாகி விடும் என்ற ஒரே நம்பிக்கையில் பங்குகள் வெகுவாக உயர்ந்தன. மூன்று நாட்களில் மூவாயிரம் கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகள் வந்ததும் பங்குசந்தையின் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம். நிபிட்டி 5000 புள்ளிகளை அனாயசமாக கடந்ததும் சென்செக்ஸ் 17000 புள்ளிகளுக்கு அருகேயே முடிவடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்க விஷயங்கள். முன்னேற்றம் பெரிய பங்குகளில் மட்டும் அமையாமல் ஒட்டுமொத்த சந்தையும் முன்னேறியது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம்.

இப்போது வரும் வார சந்தை நிலவரத்தைப் பற்றி பார்ப்போம்.

சந்தையின் மனநிலை இப்போதைக்கு பாசிட்டிவாகவே அமைந்துள்ளது. கிரீஸ் பற்றிய கவலைகள் குறைந்தது, தொடர்ச்சியான அந்நிய முதலீடுகள், நடப்பு காலாண்டிற்கான நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மற்றும் அமெரிக்க பொருளாதார முன்னேற்றம் ஆகியவை சந்தையை ஊக்குவித்து வருகின்றன. ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதும் பங்குசந்தைக்கு சாதகமான ஒரு அம்சமாக கருதப் படுகிறது. பணவீக்கம் மற்றும் வட்டிவீத உயர்வு போன்றவற்றை பற்றிய கவலைகள் இப்போதைக்கு சற்றே பின்தள்ளப் பட்டுவிட்டன என்றே தோன்றுகிறது.

குறுகிய கால வர்த்தகர்கள் நிபிட்டி 5200 என்ற இலக்குடனும் 4990 என்ற ஸ்டாப் லாஸ் லிமிட்டுடனும் வர்த்தகம் செய்யலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் அடிப்படை சிறப்பான பங்குகளை ஒவ்வொரு வீழ்ச்சியின் போதும் வாங்கி வரலாம்.

முதலீட்டாளர்கள் தனிக்கவனத்திற்கு:

நீண்ட கால நோக்கில் கிரீஸ், பட்ஜெட் போன்ற விவகாரங்கள் தனிப்பட்ட பங்குகளின் மீது குறைந்த அளவு தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. காலப்போக்கில் பங்கின் விலையில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துவது நிறுவனத்தின் செயல்பாடு மட்டுமே. ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டின் அடிப்படையில் அதன் பங்குகளில் முதலீடு செய்வது எப்படி என்பதை கூடிய விரைவில் ஒரு தனிப்பதிவின் மூலம் விளக்க முயற்சிக்கிறேன்.

நன்றி!

6 comments:

ராஜரத்தினம் said...

//குறி எப்போதுமே தவறித்தான் வந்திருக்கிறது என்ற நிலையில் குறியை சற்று உயர்த்தி நட்சத்திரங்களின் மீதுதான் வைக்கலாமே? " எப்போதும் போல தவறினாலும் நட்சத்திரத்திற்கு குறி வைத்துத்தான் தோற்றிருக்கிறோம் என்ற சந்தோசமாவது மிஞ்சுமல்லவா?//

இதற்கு ஏன் பாஸ் நீங்க குஜராத்திற்கு போறீங்க? திருவள்ளுவரே சொல்லியிருக்கிறாரே? முயலை குறி வைத்து ஜெயிப்பது என்பது யானை குறிவைத்து தோற்பதை விட கீழானதே என்று.

நன்றி.

Maximum India said...

அன்புள்ள ராஜரத்தினம்!

பழமொழி சொன்ன நண்பர் ஒரு குஜராத்தியர். அடுத்த முறை அவரை சந்திக்கும் போது, நமது திருக்குறள் பற்றியும் சொல்லிவிடுகிறேன்.

தகவலுக்கு நன்றி! :)

DG said...

//ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டின் அடிப்படையில் அதன் பங்குகளில் முதலீடு செய்வது எப்படி என்பதை கூடிய விரைவில் ஒரு தனிப்பதிவின் மூலம் விளக்க முயற்சிக்கிறேன்.//
கூடிய விரைவில் எதிர்பார்கிறேன் நன்றி

Maximum India said...

நன்றி DG!

Thomas Ruban said...

//மேற்கு வங்கத்தைத் தவிர மற்றபடிக்கு எளிய மக்களை எதிர்கொள்ள வேண்டிய தேர்தல் அவசியம் இந்த முறை இல்லாமல் போனது மத்திய அரசிற்கு ஒரு வகையில் உதவியாக இருந்தது என்றே நினைக்கிறேன்//

மற்றொன்று கூட்டணி கட்சிகளின் நிர்பந்தம் இல்லாதது(எடுபடாதது).

விரிவான பதிவுக்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

Blog Widget by LinkWithin