Thursday, May 6, 2010

பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி?


அன்றாட வாழ்வில் மனிதர்களுக்கு பல விதமான பிரச்சினைகள் வருவதுண்டு. அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு ஒரே மாதிரியாக அமைந்து விட முடியாது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அதே சமயத்தில், பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கான வழி எளிதான ஒன்றுதான் என்று நம்புகிறேன். அந்த வழி என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய எனது கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலில் பிரச்சினை நிகழும் காலகட்டத்தில் நாம் எப்படியெல்லாம் நடந்து கொள்கின்றோம் என்று பார்ப்போம். சில உதாரணங்கள் கீழே.

கஷ்டத்தில் (அல்லது டென்ஷன் ஆக) இருக்கும் போது உணவின் மீது கவனம் குறைந்து விடுகின்றது. ஒன்று சாப்பாட்டின் அளவு குறைந்து போகின்றது. அல்லது கண்டமேனிக்கு (ஆரோக்கியமில்லாத) ஆகாரங்கள் உள்ளே போகின்றன.

தூக்க நேரங்கள் மாறிப்போய் விடுகின்றன. நிறைய டிவி அல்லது சினிமா பார்க்கின்றோம். லேட்டாக படுக்கைக்கு செல்கிறோம். விடிந்த பிறகும் தூக்கம் களைந்த பின்னரும் கூட படுக்கையில் புரண்டு கொண்டே இருக்கின்றோம். உடற்பயிற்சி செய்வது நின்று போகின்றது. லேட்டாக அலுவலகத்திற்கு கிளம்புகின்றோம். அல்லது கட் அடிக்கிறோம்.

எல்லோர் மீதும் கோபம் கோபமாய் வருகின்றது. நிறைய பேரிடம் சண்டைக்குப் போகின்றோம். சாலையில் முரட்டுத்தனமாக வாகனம் ஒட்டுகின்றோம்.

ஒரு சிலர் இன்னும் சில படி மேலே சென்று மது அல்லது போதை பழக்கத்திற்கு அடிமையாகி பிரச்சினையை மறக்க முயற்சிக்கின்றனர்.

மேலே சொன்னவையெல்லாம் உடலையும் மனதையும் இன்னமும் தளர்ச்சியாக்கி பிரச்சினைகளை சமாளிக்கும் (அல்லது தீர்வு காணும்) திறனை குறைக்கின்றனவே தவிர எந்த வகையிலும் நமக்கு உதவியாக இருப்பதில்லை. மேலும் கடைசியாக சொன்ன சில விஷயங்கள் நம்மை மீளமுடியாத அபாயங்களுக்கு தள்ளி விடவும் வாய்ப்புக்கள் உள்ளன.

சமீபத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் என்னை ஒரு பெரிய குழப்பத்தில் ஆழ்த்தி விட, என்னுடைய இயல்பான பழக்க வழக்கங்கள் (பதிவுகள் உட்பட) பலவும் மாறிப்போய் விட்டன. ஒரு வித மந்தமான மனநிலை புதிய சிந்தனைகளை வரவிடாமல் தடுத்துக் கொண்டே இருந்தன. அப்போது என்னை சந்திக்க வந்த ஒருவர் சில கருத்துக்களைக் கூறினார். அவரது பாசிட்டிவான சில கேள்விகள் எனது மனநிலையை வெகுவாக மாற்றியது.

'அதாவது எண்ணங்களை பதிவு செய்வது (Documentation of thoughts) என்ற ஒரு நல்ல விஷயத்தை (பதிவு வலை) ஏன் நிறுத்தி விட்டீர்கள் என்று கேட்டார். பிரச்சினைகள் வரும் போகும். ஆனால் அவற்றை பற்றியெல்லாம் கவலைப் பட்டுக் கொண்டிராமல் நம்மிடமுள்ள நல்ல பழக்க வழக்கங்களை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறினார். உடனடியாக எழுத ஆரம்பியுங்கள் என்றும் கூறினார்.'

எனக்கு புரிந்த வரையில் எவ்வளவு பெரிய கடுமையான காலகட்டமாக இருந்தாலும், ஒருவரது நல்ல பழக்க வழக்கங்களை நிறுத்தி விடக் கூடாது. சொல்லப் போனால் அந்த காலகட்டத்தில் நல்ல விஷயங்களை இன்னும் கொஞ்சம் அதிகமாக கூட செய்யலாம். உதாரணம், உடற்பயிற்சி, நல்ல புத்தகங்கள், அன்றாட கடமைகளை பெண்டிங் வைக்காதது, சுகாதாரமான உணவு, சிறிய சுற்றுலா போன்றவை. இவை மனதிற்கு சற்று ஓய்வு தருவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண உதவும் பலத்தை தருகின்றன.

மொத்தத்தில் எந்த ஒரு பிரச்சினையுமே நமது வாழ்க்கையிலிருந்துதான் பிறக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. நாமில்லா விட்டால் பிரச்சினைகளும் இல்லை. ஒரு சிஸ்டத்தை விட அதன் சப் சிஸ்டம் ஒருக்காலும் பெரியதாக இருக்க முடியாது. எனவே நாம் எப்போதுமே நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சினையையும் விட பெரியவர்கள்தான்.

பிரச்சினையை வாழ்வின் ஒரு சிறிய அங்கமாக மட்டுமே பார்க்க வேண்டும். வாழ்வை விட பெரியது (larger than life) என்ற தேவையற்ற ஒரு அங்கீகாரத்தை பிரச்சினைகளுக்கு கொடுக்காமல் இருந்தாலே அவற்றை ஓரளவுக்கு எளிதாக சமாளித்துவிடலாம் என்று நம்புகிறேன்.

நன்றி!

டிஸ்கி: இந்த பதிவை எழுதும் வரை பிரச்சினைகள் முற்றுப் பெற வில்லை என்றாலும், இயல்பான உற்சாகமான வாழ்க்கைக்கு ஓரளவுக்கு முழுமையாக திரும்பியது பிரச்சினைக்கான பாதி தீர்வை ஏற்கனவே தந்து விட்டது.

4 comments:

குறும்பன் said...

விரைவில் உங்கள் சிக்கல்கள் தீரட்டும்.

சிக்கல் வராதவன் மனிதன் அல்ல. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு சிக்கல் இருக்கத்தான் செய்யும். இது கொஞ்சம் பெரிய சிக்கல் அவ்வளவுதான். அல்லது இப்போ பெரியதாக தெரிகிறது. நாம் கடந்து வந்த பாதையை பார்த்தா பல பெரிய சிக்கல்களை கடந்து வந்திருப்போம்.

படிச்சிங்களா.. கிரேக்கம் காலி. சின்ன நாடு. ஐரோப்பிய நாடுகளும் ஐஎம்எப் 2ம் சேர்ந்து காப்பாத்தலாம்... ஆனா....

பெரிய நாடான போர்ச்சுகல், அதை விட பெரிசான ஸ்பெயின்????? என்னாகும். ஒன்னும் புரியலை... இதிலிருந்து 2ம் தப்பிக்குமா?

Tough Man said...

எப்போதும் மனமகிழ்ச்சியுடன் இருப்பது எப்படி?
யாருமே பார்க்கவில்லை என்கிற உணர்வுடன் நடனமாடுங்கள்.. காயமே ஏற்படாது என்கிற நம்பிக்கையுடன் காதலியுங்கள்.. கேட்பதற்கு யாருமே இல்லை என்றாலும் உரக்கப் பாடுங்கள்.. சொர்க்கம் என்பது இந்த பூமிதான் என்று நம்புங்கள்.. (வில்லியம் பர்க்கே)

Maximum India said...

//விரைவில் உங்கள் சிக்கல்கள் தீரட்டும்.//

நன்றி குறும்பன்!

// சிக்கல் வராதவன் மனிதன் அல்ல. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு சிக்கல் இருக்கத்தான் செய்யும். இது கொஞ்சம் பெரிய சிக்கல் அவ்வளவுதான். அல்லது இப்போ பெரியதாக தெரிகிறது. நாம் கடந்து வந்த பாதையை பார்த்தா பல பெரிய சிக்கல்களை கடந்து வந்திருப்போம். //
உண்மைதான்.
உண்மைதான். சிக்கல்கள் என்று நாம் நினைக்கும் பல விஷயங்கள் ஒன்றுமே இல்லாமல் பிசுபிசுத்து போயிருக்கின்றன. உண்மையான பிரச்சினைகளை விட அவற்றை எதிர்கொள்ளுவது எப்படி என்ற குழப்பங்கள்தான் அதிகமாக பாதிக்கின்றன என்று நினைக்கிறேன்.

//படிச்சிங்களா.. கிரேக்கம் காலி. சின்ன நாடு. ஐரோப்பிய நாடுகளும் ஐஎம்எப் 2ம் சேர்ந்து காப்பாத்தலாம்... ஆனா....

பெரிய நாடான போர்ச்சுகல், அதை விட பெரிசான ஸ்பெயின்????? என்னாகும். ஒன்னும் புரியலை... இதிலிருந்து 2ம் தப்பிக்குமா?//

உண்மையில் கிரீஸ் என்பது ஒரு ஆரம்பப் புள்ளி. அவ்வளவே. ஏற்கனவே நமது பதிவில் விவாதித்துள்ள படி நெருப்பால் நெருப்பை அணைக்க முடியாது. பொதுமக்கள் வாங்கிய கடனால் ஏற்பட்ட பிரச்சினைகளை அரசாங்கங்கள் கடன் வாங்கி தீர்த்து விட முடியாது. போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகியவற்றை விடுங்கள், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் கூட கடனைத் திருப்பி செலுத்த முடியாத நிலை வரலாம்.

நன்றி!

Maximum India said...

//யாருமே பார்க்கவில்லை என்கிற உணர்வுடன் நடனமாடுங்கள்.. காயமே ஏற்படாது என்கிற நம்பிக்கையுடன் காதலியுங்கள்.. கேட்பதற்கு யாருமே இல்லை என்றாலும் உரக்கப் பாடுங்கள்.. சொர்க்கம் என்பது இந்த பூமிதான் என்று நம்புங்கள்.. (வில்லியம் பர்க்கே)//

அருமையான தத்துவம். நன்றி nose!

Blog Widget by LinkWithin