Skip to main content

ஆண்டி மடம் கட்டிய கதை!

அடுத்த வேளை உணவுக்கும் தூங்குவதற்கும் வசதியில்லாத சில ஆண்டிகள் ஒன்றாகக் கூடி, "தமக்காக பெரிய மடம் கட்டிக் கொள்ள வேண்டும், அங்கே இருபத்து நான்கு மணி நேரமும் உணவுக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்" என்றெல்லாம் கதை பேசி விட்டு நிம்மதியாக குறட்டை விடுவார்கள் என்ற கதையை நாம் கேள்விப் பட்டிருப்போம். சென்ற வாரத்தில் கிரீசுக்கு உதவி செய்ய ஐரோப்பிய யூனியன் முன்வந்த போது எனக்கு இந்த கதைதான் ஞாபகம் வந்தது. குறிப்பாக ஸ்பெயின் போன்ற நாடுகள், தாமே கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கின்ற நிலையில் கிரீசுக்கு குறைந்த வட்டியில் கடன் தருவதாக உறுதி அளித்தது வேடிக்கையாகவே இருந்தது. அதுவும் ஆசிய சந்தைகள் துவங்குவதற்கு முன்னரே உதவித்தொகையை அறிவிக்க வேண்டும் என்று முனைந்தது சந்தைகளில் Shorting செய்பவரை (குறிப்பாக யூரோ நாணய சந்தையில்) தண்டிக்க வேண்டும் என்ற நோக்கமே பிரதானமாக இருந்ததை வெளிக்காட்டியது. நீண்ட கால திட்டங்கள் எதுவும் இருப்பதாக தெரிய வில்லை.

இந்த கெட்டிக்காரர்களின் வேடம் மிகக் குறைந்த காலமே நீடித்துள்ளது. கிரீஸ் மற்றும் வேறு சில நாடுகளின் கடன் சிக்கல் தொடரும் பட்சத்தில், வருங்காலத்தில் ஐரோப்பிய யூனியன் பிளவு படும் வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போல தமது நாணயத்தை தாமே (மத்திய வங்கியின் மூலமாக) வெளியிட்டு, விரும்பியபடி (ஓரளவுக்கேனும்) செலவு செய்யும் அதிகாரம் யூனியன் நாடுகளில் இல்லாதது குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளை யூனியனிலிருந்து வெளியேறுவதை பரிசீலிக்கும்படி செய்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் இப்போதைய கடன் சிக்கலில் இருந்து மீண்டு வந்தாலும், முன்பை போல சந்தைகளில் பணத்தை வாரி இறைக்க முடியாது என்பது நிச்சயம். மேலும், ஏற்கனவே சொன்னபடி ஐரோப்பியா உலக பொருளாதாரத்தில் ஒரு பெரிய பங்கினை வகிக்கின்றது. ஐரோப்பிய கடன் சிக்கல் உலக பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய பின்னடைவு என்றே சொல்லவேண்டும். நமது இந்தியாவும் கூட தனது ஏற்றுமதிக்கு பெருமளவில் ஐரோப்பாவை சார்ந்துள்ளது. குறிப்பாக மாருதி, சுஸ்லான் மற்றும் ஐடி நிறுவனங்கள். ஐரோப்பியாவின் பின்னடைவு சீனாவையும் கூட பெருமளவு பாதிக்கும். சீனாவின் தொழிற் உற்பத்தி குறைந்தால் இரும்பு போன்ற தாதுப்பொருட்களின் விலைகள் சரியவும் வாய்ப்புள்ளது.

ஆக மொத்தத்தில் இப்போதைக்கு பங்கு சந்தையில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்வது கடினம். இந்தியாவிலும் கூட தொழிற் உற்பத்தி உயர்வு தொடர்ந்து சிறப்பாக இருந்தாலும், வேகம் மட்டுபட்டிருப்பதும், அரசு மற்றும் மத்திய வங்கி எதிர்பார்த்த அளவுக்கு பணவீக்கம் குறைய வில்லை என்பதும் கவனிக்க வேண்டியவை.

ஏற்கனவே சொன்னபடி நீண்டகால முதலீட்டாளர்கள் சற்று நிதானம் காட்டுவது நல்லது. நிபிட்டி 4950 க்கு அருகே செல்லும் போது, பங்குகளை மெல்ல மெல்ல (முன்போல) சேகரிக்க ஆரம்பிக்கலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

Comments

Thomas Ruban said…
//அதுவும் ஆசிய சந்தைகள் துவங்குவதற்கு முன்னரே உதவித்தொகையை அறிவிக்க வேண்டும் என்று முனைந்தது சந்தைகளில் Shorting செய்பவரை (குறிப்பாக யூரோ நாணய சந்தையில்) தண்டிக்க வேண்டும் என்ற நோக்கமே பிரதானமாக இருந்ததை வெளிக்காட்டியது. நீண்ட கால திட்டங்கள் எதுவும் இருப்பதாக தெரிய வில்லை.//

சந்தையை தற்காலிமாக உயர்த்தி ஆதாயம் அடைய வேண்டும் என்று அவர்கள்(பெரும் முதலைகள்) நினைத்து வெற்றியும் பெற்று விட்டார்கள் மாட்டிக்கொண்டது அப்பாவிகள் தான்.

சந்தை இப்போதைக்கு சரிந்தாலும் நீண்டகால நோக்கில் மேலே ஏறவும் பல காரணங்கள் உள்ளது.
1. உலக சந்தைகள் எல்லாம் சரியில்லாத காரணத்தால் FIIதங்கள் முதலீடை எல்லாம் வெளியே எடுக்கமாட்டார்கள்(இங்கே லாபம் அதிகம்).
2. நிலையான அரசாங்கம்.மற்றும் பங்கு சந்தைக்கு சாதகமான கொள்கைகள் புள்ளி விவரங்கள்.
3. நம் நாட்டு LIC மற்றும் மியூச்சவல்பண்டு நிறுவனகளில் உள்ள அபரிதமான யூலிப் நிதி.
4. அரசாங்கம் புதியதாக கொண்டு வரயுள்ள 2லட்சம்ரூபாய் வரை வருமானவரி இல்லை. மற்றும் 5லட்சம்ரூபாய் வரை 10% (15%) வருமானவரி போன்ற அறிவுப்புகள்.
5. அரசாங்கத்தில் மற்ற கட்சிகளின் தலையீடு இல்லாதது.
6. நம் அரசியல்வாதிகளிடம் உள்ள அபரிதமான ஊழல் பணம் மற்றும் நம் அப்பாவி முதலீட்டர்களுக்கு எவ்வளவு அடி வாங்கினாலும் வலிக்கவே வலிக்காதது(வடிவேலு மாதிரி).

ABON பங்கை எந்த விலையில் வாங்கலாம்?
அமெரிக்கா அதிபர் ஒபாமா கூறிய இந்தியர்களும்,சீனர்களும் அதிகமாக கார் வாங்குவதால் தான் கச்சாஎண்ணை விலை உயர்கிறது என்ற கருத்து(அமெரிக்காவில் 1000பேருக்கு 960 கார்) இதை பற்றி உங்கள் கருத்து என்ன சார்?

//நீண்டகால முதலீட்டாளர்கள் சற்று நிதானம் காட்டுவது நல்லது. நிபிட்டி 4950 க்கு அருகே செல்லும் போது, பங்குகளை மெல்ல மெல்ல (முன்போல) சேகரிக்க ஆரம்பிக்கலாம்.//
உங்கள் அறிவுரைக்கும் பதிவுக்கும் நன்றி சார்.
MCX Gold Silver said…
தகவலுக்கு நன்றி சார் http://4.bp.blogspot.com/_4xnY0Ih9Bak/S-_rBBoCDiI/AAAAAAAAAiM/sCSRlsPgABg/s1600/NIFTY_WEEKLY16MAY10.png
Maximum India said…
அன்புள்ள தாமஸ் ரூபன் மற்றும் DG

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

கொஞ்ச காலம் வெளியூருக்கு சென்றிருந்ததால் பதிவுலகம் பக்கம் அதிகம் வர முடியவில்லை.

நன்றி!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...