Monday, June 1, 2009

நிழலா நிஜமா!


சமீபத்தில் எனது நண்பர் ஒருவருடன் அலுவலக அரசியல் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவரது நண்பர் ஒருவர் கூறிய கருத்தினை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

''அதாவது, தனது நண்பனை மட்டுமே ஒருவரால் ஏமாற்ற முடியும். மற்றவர்களை ஏமாற்ற முடியாது. காரணம் நண்பன் மட்டுமே ஏமாற்றப் படும் அளவுக்கு இடம் கொடுப்பான். மற்றவர்களுடன் முயற்சி செய்தாலும் ஏமாற்றும் அளவுக்கு நெருங்க முடியாது. அப்படியே ஒரு தடவை ஏமாற்றி விட்டாலும் இரண்டாவது தடவை நம் பக்கமே திரும்ப மாட்டான். நண்பன் மட்டுமே ஏமாந்தாலும் (நண்பனாக தொடரும் வரை) திரும்ப திரும்ப வந்து மீண்டும் ஏமாந்து போவான். ஒரே விஷயம், ஏமாற்றப் படுகிறோம் என்ற விஷயம் அவனுக்கு புரியக் கூடாது.

இந்த ஏமாற்றுதல் ஏமாறுதல் எல்லாம் பெரிய விஷயங்களுக்கு மட்டுமல்ல ஓசி சிகரெட், டீ காப்பி டிபன், சினிமா போன்ற சின்னச் சின்னச் விஷயங்களுக்கும் பொருந்தும். ''

இப்படி தனது நண்பனையே ஏமாற்றுவது தப்பல்லவா என்று வினவியதற்கு அவர் நண்பர் அளித்த புதியதொரு விளக்கம்.

"உனது நண்பனை ஏமாற்ற விருப்பமில்லையென்றால் நீ ஏமாற்ற விரும்புவனை உனது நண்பனாக்கிக் கொள். அப்புறம் அவனை ஏமாற்று. எந்த சிக்கலும் இருக்காது!"

என்னவொரு அருமையான விளக்கம்? "நமக்கு நல்லதென்றால் எதுவுமே தப்பில்லை" என்று இந்த புதிய நாயகனின் விளக்கமல்லவா இது?

இன்று மீண்டும் அலுவலகம் செல்லும் வரை எனக்கு இந்த விஷயம் மிகவும் குழப்பமானதாகவே இருந்தது. எப்படி ஒருவரை ஏமாற்ற முடியும்? ரொம்ப கஷ்டமான சமாச்சாரமாயிற்றே அது? அதுவும் எப்படி ஒருவரை நம்ப வைத்து நண்பராக்கி ஏமாற்ற முடியும்? இதெல்லாம் ரூம் போட்டு தனியா யோசிக்க வேண்டிய விஷயமோ? ரொம்ப யோசித்து அதற்குள் நமக்கு ரொம்ப வயசாகி விடுமோ? அல்லது நம்மை விட அதிக புத்திசாலியாக இருந்து நாம் ஏமாற்ற விரும்புவர் நம்மையே குனிய வைத்து கும்மி விட்டால் என்ன செய்வது என்றெல்லாம் ரொம்ப யோசித்துக் கொண்டிருந்தேன்.

இன்று என்னுடன் பேச வந்தவர்களையெல்லாம் ஒரு மாதிரியாகவே பார்த்துக் கொண்டிருந்தேன். நம்முடன் வலிய வந்து பழக வரும் இவரின் நோக்கங்கள் என்னவாக இருக்கும்? ஒருவேளை நமக்கு முன்னரே இந்த கருத்தை இவர் கற்றுக் கொண்டிருந்தால் நாம் என்ன செய்வது? ஏற்கனவே இவர் நம்மை ஏதேனும் ஒரு வகையில் ஏமாற்றி கொண்டுதான் இருக்கிறாரா என்றெல்லாம் என் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.

இந்த சிந்தனைகளுக்கு இடையே எனக்கு இதுவரை ஒரு பெரிய புதிராக இருந்த ஒரு பொருளாதார நுணுக்கத்தை ஆய்வு செய்யும் வேலை வந்தது. கடுமையான முயற்சிக்கு பின்னர், முழுக் கவனத்தையும் செலுத்தியதில், அந்த புதிர் அவிழ, எனக்கு திருப்தி வரும் அளவுக்கு ஒரு அறிக்கையை தயார் செய்து முடித்தேன். ரொம்ப நாள் புதிராக இருந்த ஒரு விஷயம் இன்று புரிந்த பிறகு, எனது தொழில் ரீதியாக, ஒருபடி உயர்ந்தது போல ஒரு சந்தோச உணர்வு வந்தது.

அப்போது மீண்டுமொருமுறை "ஏமாற்றும் கலை" ஞாபகத்திற்கு வந்தது. அப்போது எனக்கு தோன்றிய ஒரு கருத்து.

நமக்கு தெரிந்த வேலையை மட்டும் செய்வோம். அதையும் முடிந்த வரை சிறப்பாக செய்வோம். செய்யும் தொழிலில் ஒரு "வேலைக்காரனாக" மாறுவோம். இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக முன்னேறலாம். "கனியிருக்க காய் கவந்தற்று" என்று நமது திருவள்ளுவர் சொன்ன அன்றைய கருத்து இன்று மட்டுமல்ல, என்றும் நிற்கும்.

நிழலை பிடிக்க ஓடிப் போய், நிஜத்தை தவற விட்டு விட வேண்டாம்.

நன்றி.

12 comments:

pshiva said...

சரியாக சொன்னீர்கள், இந்த கருத்து எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.

Mouthayen said...

நல்ல சொன்னீங்க
நன்றி, முத்தையன் மதிஒளி, சிங்கப்பூர்

Maximum India said...

வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி சிவா!

Maximum India said...

வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி முத்தையன் மதி ஒளி!

பொதுஜனம் said...

எல்லாம் சரி விகிதத்தில் நடப்பதாக தெரிகிறது. ஒருவர் ஏமாற்றும் விதத்தில் அதற்கு சமமாக ஏமாறுகிறார் என்றே தோன்றுகிறது. ஏமாற்றுவது தெரிந்தே செய்கிறோம். ஆனால் தெரியாமல் ஏமாறுகிறோம். ஏமாற்றுவது குறைந்தால் ஏமாறுவது குறையும்.. குறைந்த பட்சம் ஏமாறுவது தெரியாது. ஓட்டு போடுவது மாதிரி. ஆனால் ஒன்று . வீட்டில் நம் கண்ணில் சிக்காமல் எலி நம்மை ஏமாற்றுவதற்கும் அரசியல்வாதிகள் ஏமாற்றுவதற்கும் வித்யாசம் உண்டு.ஆனால் ரெண்டு பேரும் சுரண்டும் வேலையே தான் ஒழுங்காக செய்கிறார்கள்.

வால்பையன் said...

நிகழ்கால சாக்க்ரடீஸ் வாழ்க!

ஒரு தத்துவ ஆசிரமே வைக்கலாம்
அம்புட்டு சரக்கு உங்ககிட்ட!

சரக்குன்னா தத்துவ சரக்கு!

Maximum India said...

//எல்லாம் சரி விகிதத்தில் நடப்பதாக தெரிகிறது. ஒருவர் ஏமாற்றும் விதத்தில் அதற்கு சமமாக ஏமாறுகிறார் என்றே தோன்றுகிறது. ஏமாற்றுவது தெரிந்தே செய்கிறோம். ஆனால் தெரியாமல் ஏமாறுகிறோம். ஏமாற்றுவது குறைந்தால் ஏமாறுவது குறையும்.. குறைந்த பட்சம் ஏமாறுவது தெரியாது.//

இப்பல்லாம் விசு சார் படம் எடுப்பதில்லை என்ற குறையை நீக்கி விட்டீர்கள்.

// வீட்டில் நம் கண்ணில் சிக்காமல் எலி நம்மை ஏமாற்றுவதற்கும் அரசியல்வாதிகள் ஏமாற்றுவதற்கும் வித்யாசம் உண்டு.ஆனால் ரெண்டு பேரும் சுரண்டும் வேலையே தான் ஒழுங்காக செய்கிறார்கள்.//

இன்னும் கூட ஒரு வித்தியாசம் உண்டு. எலிகள் பிழைப்பிற்காக சுரண்டுகின்றன. அரசியல்வாதிகளோ சுரண்டுவதையே பிழைப்பாக கொண்டிருக்கிறார்கள்.

நன்றி.

Maximum India said...

//நிகழ்கால சாக்க்ரடீஸ் வாழ்க!

ஒரு தத்துவ ஆசிரமே வைக்கலாம்
அம்புட்டு சரக்கு உங்ககிட்ட!

சரக்குன்னா தத்துவ சரக்கு!//

என்ன தல இது!

நம்மள கருத்து கந்தசாமி ரேஞ்சுக்கு ஆக்கி புட்டீங்க!

தத்துவமெல்லாம் ஒண்ணும் இல்ல வால்!

வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவங்களை எனது கோணத்தில் பதிவு செய்கிறேன் அவ்வளவே!

தப்பபாக இருந்தா திட்டுடுங்க! பரவாயில்ல. சாக்ரடிஸ் எல்லாம் வாணாம்! ரொம்ப வலிக்குது.

நன்றி.

கார்த்திக் said...

// உனது நண்பனை ஏமாற்ற விருப்பமில்லையென்றால் நீ ஏமாற்ற விரும்புவனை உனது நண்பனாக்கிக் கொள். அப்புறம் அவனை ஏமாற்று. எந்த சிக்கலும் இருக்காது!//

நண்பரே எப்போ நம் ஊரு பக்கம் வரீங்க :-))

இன்னைக்கு உலகத்துலையே இந்தியன் தான் பெரிய கேடியாமா.நேத்துதாங்க மாலை மலர்ல ஒரு சர்வே ரிப்போர்ட் பாத்தேன்.எல்லாம் விடாக்கொண்டன் கொடாகொண்டன் தாங்க :-))

Sam said...

சிந்தனை சிறப்பு.

நீண்டநாளாக இருந்த புதிரை அவிழ்த்ததாக எழுதியிருக்கிறீர்கள். அது பற்றி எழுதுங்களேன்.

சத்தியமூர்த்தி

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

//நண்பரே எப்போ நம் ஊரு பக்கம் வரீங்க :-))//

வந்திட்டா போச்சு நண்பா!

//இன்னைக்கு உலகத்துலையே இந்தியன் தான் பெரிய கேடியாமா.நேத்துதாங்க மாலை மலர்ல ஒரு சர்வே ரிப்போர்ட் பாத்தேன்.எல்லாம் விடாக்கொண்டன் கொடாகொண்டன் தாங்க :-))//

உண்மையாகவே இந்தியாவில் நல்ல பண்புகள் குறைந்து கொண்டுதான் வருகின்றன. மேற்கத்திய நாடுகளாவது பிற நாடுகளைச் சேர்ந்தவர்களைத்தான் சுரண்டுகின்றன. ஆனால் நம்மவரோ ?

சொல்லவே கேவலமாக இருந்க்கின்றது. என்ன செய்ய?

நன்றி.

Maximum India said...

//சிந்தனை சிறப்பு.//

நன்றி சத்திய மூர்த்தி.

//நீண்டநாளாக இருந்த புதிரை அவிழ்த்ததாக எழுதியிருக்கிறீர்கள். அது பற்றி எழுதுங்களேன்//

இப்போது நான் ஒரு புதிய பணியில் சேர்ந்திருக்கிறேன். பொருளாதாரம் மற்றும் முதலீடுகளை பற்றி ஆய்ந்து அலசும் வேலை.

பொறியியல் படித்து பின்னர் வங்கிப் பணியில் சேர்ந்து அதிலும் வேறு வேறு பணிகளில் ஈடுபட்ட பின்னர், இந்தப் பொறுப்பு முற்றிலும் புதிதாகவும் பல விஷயங்கள் முதல் தடவையாக கற்றுக் கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. நான் கற்றுக் கொண்ட விஷயங்களை நேரம் அமையும் போது கண்டிப்பாக பகிர்ந்து கொள்வேன்.

பொருளாதார ஆய்வறிக்கைகளை தயாரிப்பதில் சந்தை நிலவரத்தின் அனுபவம் மிகவும் உபயோகமாக இருக்கிறது என்பது ஒரு சந்தோசமான விஷயம்.

நன்றி.

Blog Widget by LinkWithin