Thursday, June 18, 2009

நாட்டாஆமை! தீர்ப்ப மாத்தி சொல்லு!


ஊர் பஞ்சாயத்து கூடி இருக்கிறது. ஒரே கூட்டமான கூட்டம். நாட்டாமை ஐயா என்ன தீர்ப்பு தரப் போறாருன்னு ஊரே காத்துக் கிடக்கு. அப்ப அங்க ஒரு ப்ளசர் கார் வருது. அதிலிருந்து ஒரு ஜட்ஜ் ஐயா இறங்கறாரு. என்ன இங்க கூட்டமின்னு அவரோட கார் டிரைவருகிட்ட கேட்கறார்.

டிரைவர் பதில் சொல்றாரு. "ஐயா! இங்க அண்ணன் தம்பி வழக்குக்கான ஒரு பஞ்சாயத்து நடந்துகிட்டு இருக்கு. இந்த வழக்குல நாட்டாமை என்ன தீர்ப்பு சொல்லப் போறாருன்னு, சுத்தி உள்ள பதினெட்டு பட்டி ஜனங்களும் காத்திருக்காங்க"

நகரத்தில் பல்வேறு சிக்கலான வழக்குகளை சந்தித்துள்ள அந்த ஜட்ஜ் ஐயாவுக்கு இது கொஞ்சம் வித்தியாசமா தெரியுது. '

'கிராமங்கள்ளதான் இந்தியா வாழுதுன்னு ரொம்ப பெரியவங்கள்லாம் சொல்லி இருக்காங்க. நாமும் கொஞ்ச நேரம் இங்க காத்திருந்து அப்படி என்ன தீர்ப்ப இந்த நாட்டாமை கொடுக்கறாரனு பாப்போம்" அப்படின்னு சொல்லிட்டு வழக்க கவனிக்க ஆரம்பிக்கிறாரு.

பக்கத்துல நிக்கிற ஒரு ஊர் பெரிசு சொல்லுது,

" வழக்கு கொஞ்சம் சிக்கல்தான் சாமி! அண்ணன் தம்பி ரெண்டு பேரு. அவங்க அப்பன் மேலே போயிட்டான். அவனோட சொத்துக்காக ரெண்டு பெரும் அடிச்சுக்கறாங்க. மத்த எல்லா சொத்தையும் முன்ன பின்ன பிரிச்சிக்கிட்ட இவங்களால ஒரே ஒரு சொத்த மட்டும் பிரிக்க முடியல"

" அப்படி என்னங்க அது பிரிக்க முடியாத சொத்து?" ஜட்ஜ் ஐயா கேட்கிறார்.

"அதுவா? அது ஒரு பெரிய கதைங்க. ஊருக்கு நடுவுல ஒரு பெரிய கிணறு இருக்கு. உப்புத் தண்ணி கூட கிடைக்காத இந்த ஊருக்கு வரம் தர சாமியா வந்த அந்த கிணத்துல தண்ணி வெல்லக் கட்டியா இனிக்குமுங்க!"

"அப்படியா! அப்புறம் என்ன பிரச்சினை இங்கே? யாருடைய நிலத்தில் கிணறு இருக்கிறதோ அவருக்கே அந்த கிணத்த கொடுத்து விட வேண்டியதுதானே? அந்த நிலப் பகுதியை யாருக்கு அவங்களோட அப்பா பங்கு பிரிச்சு கொடுத்திருக்கிறார்? "

" அட நீங்க வேற! அவங்கப்பாவுக்கே கிணத்து நிலம் சொந்தமில்ல! நிலம் ஊரு பஞ்சாயத்துக்கு சொந்தமானதுங்க"

"இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கே?"

"ஆமாங்க! நாட்டாமையும் அவங்கப்பாவும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டாங்க. அது படி, கிணத்த வெட்டி அதுல வர தண்ணிய ஊரு ஜனங்களுக்கு ஒரு குடம் நாலு ரூபான்னு விக்கலாம்னு இருக்காமுங்க! அந்த நாலு ரூபாயில ஒரு ரூபா பஞ்சாயத்து வரிங்க! "

"ஓ! அப்ப கிணத்த வெட்ட ரொம்ப செலவாயிடுச்சுங்களா"

"அதெல்லாம் தெரியாதுங்க. ஆனா கிணறு வெட்டறதுக்கு முன்னையே, வரப் போற தண்ணிக்கு வரின்னு குடும்பத்துக்கு இவ்வளவுன்னு எங்ககிட்டேயே வாங்கிட்டாங்க"

"எல்லாம் சரி! இப்ப அண்ணன் என்ன சொல்றாரு? தம்பி என்ன சொல்றாரு?"

"அண்ணனுக்கு கிணறு. ஆனா தம்பிக்கு அதுல கிடைக்கற தண்ணில ஒரு பங்க குடம் ரெண்டு ரூபாய்ன்னு கொடுக்கணும்னு அவங்க ஆத்தா சொல்லி இருக்கு. அப்படி கிணத்துல கிடச்ச தண்ணியதான், பாட்டில போட்டு விக்கிறன்னு தம்பி சொல்றாரு. ஆனா அவனுக்கு தண்ணிய நாலு ரூபாய்க்குத்தான் கொடுப்பேன்னு அண்ணன் சொல்றான். அதுதாங்க இப்ப பஞ்சாயத்துல வழக்குல இருக்கு"

"அது சரி. தம்பி தண்ணி பேக்டரி கட்டிட்டாரா?"

"இது வரைக்கும் இல்லைங்க! கூடிய சீக்கிரம் கட்டரமுன்னு சொல்லி அதுக்கும் நம்மகிட்டயே நிறைய காசு வாங்கி இருக்கராருங்க. நாங்களும் ஏதாச்சு நல்லதா நடந்து நாக்குல நல்ல தண்ணி படாதான்னு ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருக்கிறமுங்க"

ஜட்ஜ் ஐயாவுக்கு ஆர்வம் ஜாஸ்தியாடிச்சு.

நாட்டாமை எழுந்திருக்கிறார். சொம்பை கையில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு தீர்ப்பை வழங்குகிறார்.

"இந்த பஞ்சாயத்து இதுவரை எத்தனையோ வழக்குகளை சந்தித்திருக்கிறது. ஆனால் இது வரை இப்படி ஒரு வழக்கு வந்ததில்லை. இந்த விசித்திரமான வழக்குக்கு நாட்டாமை என்ன தீர்ப்பை வழங்கப் போகிறார் என்று எல்லாரும் காத்திருப்பீர்கள்" .

"இப்பக் கொடுக்கறன்யா நான் தீர்ப்ப! அண்ணன்காரன் தம்பிக்கு கிணத்துத் தண்ணிய குடம் இரண்டு ரூபாய்க்கு கொடுக்கணும்"

தீர்ப்பை கேட்டவுடன், இதுதான்யா தீர்ப்புன்னு நிறைய எக்கோ கேக்குது. பெண்களெல்லாம் ஊவென்று குலவி சவுண்டு கொடுக்கிறார்கள்.

"அப்ப நமக்கெல்லாம் தண்ணி இல்லையா? வெறும் சொம்பு மட்டும்தானா?" என்று சில இளசுகளின் முனமுணக்கும் சத்தங்களை பெண்களின் குலவி சத்தம் அடக்கி விடுகிறது.

இதில் பின்பாட்டு வேறு. எஜமான் காலடி மண்ணெடுத்து பொட்டு வைக்கும் ஒரு கூட்டம். கண்ணு படப் போகுதையான்னு கவுண்டரையாவுக்கு சுத்திப் போடும் ஒரு கூட்டம். நாட்டாமை தீர்ப்பு சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்குமுன்னு தலையாட்டும் கூட்டம் ஒரு பக்கம்.

"எங்கயோ இடிக்குதே"ன்னு ஜட்ஜ் ஐயா புலம்பிக்கிட்டே போறாரு!

"ஒண்ணு நீங்க குள்ளமா இருக்கணும். இல்ல காரு பெரிசா இருக்கணும்னு" டிரைவர் நக்கல் பண்றாரு.

போற வழியில நாட்டாமைய பார்த்து ஒரு சந்தேகம் கேட்டுட்டுப் போகலாமின்னு அவர் வீட்டுக்கு வண்டிய விட சொல்றாரு ஜட்ஜ் ஐயா. என்ன பண்றது? அவரும் இதே மாதிரி ஒரு வழக்குக்கு கூடிய சீக்கிரம் தீர்ப்பு சொல்ல வேண்டி இருக்கு.

நாட்டாமை வீட்டுல ஒரு அதிசியம். அண்ணன் தம்பி அவங்க ஆத்தா எல்லாம் ஒண்ணா குந்திக்கிட்டு கும்மாளம் போட்டுக்கிட்டு இருக்காங்க. நாட்டாமை அவங்களுக்கு தடபுடலா ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்காரு. அங்க எந்த தண்ணின்னு வித்தியாசம் தெரியாம எல்லா தண்ணியும் கொட்டிக் கிடக்கு.

சொந்த ஊருல தண்ணிக்கு வழி இல்லாம, தலையில ஒண்ணு, இடுப்புல ஒண்ணு, கையில ஒண்ணுன்னு குடங்கள் அடுக்கி இடுக்கி வச்சுக்கிட்டு அடுத்த ஊருக்கு போய் குடிதண்ணிக்காக கையேந்த தயாரா அந்த ஊரு ஜனங்க அப்பாவியா போயிக்கிட்டு இருக்காங்க.

ஜட்ஜ் ஐயாவுக்கு ஏதோ ஒண்ணு புரிஞ்ச மாதிரி இருந்தது.

''ஊர் சொத்துல உக்காந்து சாப்பிடுற இவங்க பஞ்சாயத்துக்காகாவது ஒழுங்கா அந்த ஒரு ரூபா வரி கட்டுவாங்களா"ன்னு ஜட்ஜ் ஐயா தனக்குத் தானே முனக, " யார்ர்ராது? எங்கண்ணன வரியெல்லாம் கட்ட சொல்றது?" அப்படின்னு ஒரு அருவாள் குரல் எழ, ஜட்ஜ் ஐயா வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போகிறார்.

நன்றி.

14 comments:

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

Maximum India said...

நன்றி தமிழினி! கூடிய சீக்கிரம் இணைப்பைக் கொடுக்க முயற்சிக்கிறேன்!

வால்பையன் said...

கும்பாணி சகோதரர்கள் கதையா!

என்ன நடந்ததுன்னு எனகு தெரியல!
மெயில் போடுங்க தல!

கார்த்திக் said...

எல்லாம் தெரிஞ்ச்சிருந்தும் மக்கல் இன்னும் அவங்கள நம்பிகிட்டு தானே இருக்கோம் :((

Thomas Ruban said...

//ஜட்ஜ் ஐயாவுக்கு ஏதோ ஒண்ணு புரிஞ்ச மாதிரி இருந்தது./


எனக்கும் ஏதோ ஒண்ணு புரிஞ்ச மாதிரி இருந்தது.

1.ஊர் பஞ்சாயத்து நாட்டாமை ஐயா தீர்ப்பு உடனடியாக கிடைக்கும் அப்பில் இல்லை .

2.ஜட்ஜ் ஐயா தீர்ப்பு உடனடியாக கிடைக்காது .அப்பில் உண்டு இன்ண்ம் எத்தனை வருடோமோ ?

ஊரு ஜனங்க (share invisters) அப்பாவியா போயிக்கிட்டு இருக்காங்க.

/"எங்கயோ இடிக்குதே"ன்னு ஜட்ஜ் ஐயா புலம்பிக்கிட்டே போறாரு!//

நன்றி...நன்றி ...

Maximum India said...

நன்றி வால்பையன்!

//என்ன நடந்ததுன்னு எனகு தெரியல!
மெயில் போடுங்க தல!//

உயர் நீதிமன்றத்தில், அண்ணன் தம்பி கேஸ் முடிவுக்கு வந்துள்ளது. தீர்ப்பில் குடும்ப ஒப்பந்தத்தில் உள்ளபடி தம்பிக்கு எரிவாயுவை குறைந்த விலையில் கொடுக்க வேண்டுமென்று உத்தரவு இடப் பட்டுள்ளது. ஆனால் அந்த எரிவாயுவை உபயோகப் படுத்தக் கூடிய வகையில் தம்பியிடம் மின்உற்பத்தி நிலையங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்திற்கு ராயல்டி எவ்வளவு இவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்பதும் தெரிய வில்லை. இந்த வழக்கே கூட அரசையும் மக்களையும் ஏமாற்றும் கூட்டு சதியா என்பதும் புரிய வில்லை. மொத்தத்தில், மக்கள் பணமும் நாட்டின் வளங்களும் எங்கோ போய் கொண்டிருக்கிறன.

நன்றி.

Maximum India said...

நன்றி கார்த்திக்.

//எல்லாம் தெரிஞ்ச்சிருந்தும் மக்கல் இன்னும் அவங்கள நம்பிகிட்டு தானே இருக்கோம் :((//

என்ன செய்ய? ரொம்ப பெரியவர்கள் கூட கொஞ்சத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டு, நாட்டின் ஆதாரங்கள் கொள்ளை போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றி.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//ஊரு ஜனங்க (share invisters) அப்பாவியா போயிக்கிட்டு இருக்காங்க.//

ஊரு ஜனங்க முதலீட்டாளர்கள் மட்டுமல்ல. நாட்டின் ஆதாரங்கள் கொள்ளை போவதை வேடிக்கை பார்க்கும் அனைத்து குடிமக்க்களும்தான்.

நன்றி.

nerkuppai thumbi said...

// தீர்ப்பில் குடும்ப ஒப்பந்தத்தில் உள்ளபடி தம்பிக்கு எரிவாயுவை குறைந்த விலையில் கொடுக்க வேண்டுமென்று உத்தரவு இடப் பட்டுள்ளது. ஆனால் அந்த எரிவாயுவை உபயோகப் படுத்தக் கூடிய வகையில் தம்பியிடம் மின்உற்பத்தி நிலையங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. //
தம்பிக்கு முன்பு ஒப்பந்தம் செய்த விலையில் எரிவாயு கிடைக்குமா என்று நிச்சயம் இல்லாத போது, எப்படி முதலீடு இட்டு மின் நிலையம் அமைப்பார்?
இப்போது துவங்கி 12 - 18 மாதங்களுக்குள் தயார் படுத்தவில்லை என்றால் மட்டுமே குறை சொல்லலாம்.
//அரசாங்கத்திற்கு ராயல்டி எவ்வளவு இவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்பதும் தெரிய வில்லை //
பிரச்னைகளைக் குழப்புவது அல்லது குழப்பிக்கொள்வது போல் தெரிகிறது. ஆழ்கடல் பரப்புகள் ஏலம் விட்டபோதே ஏலம் எடுப்பவர்கள் எவ்வளவு தொகை எவ்வண்ணம் கொடுக்க வேண்டும் என்று நிர்ணயம் ஆகியிருக்கும். அப்போது எண்ணெய் அல்லது/மற்றும் நில வாயு இருக்குமா, இருந்தால் எவ்வளவு இருக்கும் என்று நிச்சயம் இல்லாத நிலையில் தான் ஏலம் எடுக்கிறார்கள். செலவு செய்து கிணறு தோண்டுகிறார்கள். நல்ல இடம் கிடைத்து விட்டால் அதை பொறாமையுடன் நோக்குவது சரியல்ல.
இது பின்னூட்டம் சம்பந்தப் பட்டது. முன் கூறிய நாட்டாமை தீர்ப்பு கதைக்கு சம்பந்தமிலாத்தது. கொஞ்சம் நானும் கும்பாணி கதையை அம்பானி கதையுடன் இணைத்து குழப்பிக் கொண்ட மாதிரி தெரிகிறது.

Maximum India said...

கருத்துரைக்கு மிக்க நன்றி நெற்குப்பை தும்பி ஐயா!

//தம்பிக்கு முன்பு ஒப்பந்தம் செய்த விலையில் எரிவாயு கிடைக்குமா என்று நிச்சயம் இல்லாத போது, எப்படி முதலீடு இட்டு மின் நிலையம் அமைப்பார்?
இப்போது துவங்கி 12 - 18 மாதங்களுக்குள் தயார் படுத்தவில்லை என்றால் மட்டுமே குறை சொல்லலாம். //

மின்சக்தி உற்பத்திக்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கி பங்குகளை வெளியிட்டு மக்களிடம் ஏகப் பட்ட பணத்தை வசூல் செய்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஏற்கனவே ஆகி விட்டன. தீர்ப்பு வந்தவுடன்தான் உற்பத்தி நிலையம் என்றால், சுப்ரீம் கோர்ட், சிறிய பெஞ்ச், பெரிய பெஞ்ச், மேல் முறையீடு என்று இறுதி தீர்ப்பு கிடைக்கவும் அதை அமல் படுத்தவும் இன்னும் ஏகப் பட்ட காலம் ஆகி விடுமே? அதற்கு பிறகு எரிவாயு மின்சக்தி உற்பத்தி நிலையம் இவர் அடுத்த 18 மாதங்களில் அமைத்தால் அதுவரை முதலீட்டாளர்கள் கதி என்ன?

நான்கு இலக்கத்தில் புதிய பங்கு விலை இருக்கும் என்று இவர் பேசியது தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப் பட்ட போதும், அது விதிமுறைகளின் படி தவறு என்ற போதும், இவர் மீது செபி போன்ற அமைப்புக்களால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடிய வில்லை?

//பிரச்னைகளைக் குழப்புவது அல்லது குழப்பிக்கொள்வது போல் தெரிகிறது. //

நிச்சயம் குழம்பித்தான் போயிருக்கிறேன் ஐயா! எரிவாயு கிடைத்திருப்பது இந்தியாவில். அதை உற்பத்தி செய்பவர் இந்தியர். நுகர்வோரும் இந்தியர்கள். ஆனால் விலை நிர்ணயம் மட்டும் அமெரிக்க டாலரில். ஏன் இப்படி? இன்னும் ஒரு செய்தி படித்து இன்னும் குழம்பிப் போனேன். பொதுத் துறை நிறுவனமான கெயில் இதே போன்ற எரிவாயுவை இரண்டு டாலர் சொச்ச அளவில் தர, இந்த நிறுவனம் மட்டும் நான்கு சொச்சத்திற்கு அரசு அனுமதி பெற்றுள்ளது. (உலக சந்தையில் உள்ள விலையை விட உள்நாட்டு விலை மிகவும் அதிகமாகவே நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இத்தனைக்கும் உற்பத்திச் செலவு இங்கு மிகவும் குறைவு) இவ்வளவு வித்தியாசம் ஏன்? (இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருந்தாலும் பல உர நிறுவனங்கள் கெயில் நிறுவனத்தில் இருந்தே எரிவாயு பெறுவதாக பத்திரிக்கைகளில் சில செய்திகள் காணப் பட்டன.). எது உண்மை? எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு இன்னும் புரிய வில்லை.

//ஆழ்கடல் பரப்புகள் ஏலம் விட்டபோதே ஏலம் எடுப்பவர்கள் எவ்வளவு தொகை எவ்வண்ணம் கொடுக்க வேண்டும் என்று நிர்ணயம் ஆகியிருக்கும். அப்போது எண்ணெய் அல்லது/மற்றும் நில வாயு இருக்குமா, இருந்தால் எவ்வளவு இருக்கும் என்று நிச்சயம் இல்லாத நிலையில் தான் ஏலம் எடுக்கிறார்கள். செலவு செய்து கிணறு தோண்டுகிறார்கள். நல்ல இடம் கிடைத்து விட்டால் அதை பொறாமையுடன் நோக்குவது சரியல்ல. //

இவர்கள் மீது பொறாமைப் படும் அளவுக்கு நம்மைப் போன்றவர்களுக்கு தகுதி கிடையாது. அதே போல நிச்சயம் இல்லாத இடம் என்று சொல்வதை விட வாய்ப்புக்கள் அதிகம் இடங்களை ஏலம் விட்டார்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எந்த விலை கொடுத்து இந்த இடங்களை வாங்கினார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக் குறி. விதிகளை திறமையான முறையில் மீறத் தெரிந்தவர் இவர்களது தந்தை என்று ஒரு அப்போதைய அமைச்சர் வெளிப்படையாக பாராட்டியது (?) நினைவு கூறத் தக்கது. உலகில் உள்ள பல பெரிய பெட்ரோல் நிறுவனங்கள் குறைந்த P/E அளவில் வர்த்தகமாக இந்த நிறுவனம் மட்டும் அவற்றைப் போல இரண்டு மடங்கு P/E அளவில் வர்த்தகமாகிறது. இதற்கு காரணம் என்னவென்று சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

நம்மைப் போன்ற ஒரு ஏழை நாட்டில் இருந்து மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் உருவாகுவது அதுவும் நாட்டின் வளங்களை சொந்தமாக்கி கொண்டு கோடீஸ்வரர்களாக வளர்வது ஆரோக்கியமானது அல்ல என்பது என் ஆற்றாமை. அவ்வளவே.

நன்றி.

nerkuppai thumbi said...

//எந்த விலை கொடுத்து இந்த இடங்களை வாங்கினார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக் குறி.
//ஆழ்கடல் பரப்பிலே எண்ணைக் கிணருக்காக ஏலம் விட்டது அனைவரும் ஒப்புக்கொண்ட வழிமுறையிலே தான் செய்யப் பட்டது. பல டெண்டர் களுக்கு நடுவே அதிக விலை சொல்லி பெற்றவர்கள் தான் இந்த நிறுவனம். அந்த கால கட்டத்தில் எந்த இடத்தில் எவ்வளவு எண்ணெய் கிடைக்கும் என்பது லாட்டரி போன்றதே.

இவர்கள் விதி முறைககளை சாமர்த்தியமாக மீறத் தெரிந்தவர்கள் என்று சான்றிதழ் பெற்றிருந்தால் நாம் கூற ஒன்றுமில்லை

Maximum India said...

அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா!

//ஆழ்கடல் பரப்பிலே எண்ணைக் கிணருக்காக ஏலம் விட்டது அனைவரும் ஒப்புக்கொண்ட வழிமுறையிலே தான் செய்யப் பட்டது. பல டெண்டர் களுக்கு நடுவே அதிக விலை சொல்லி பெற்றவர்கள் தான் இந்த நிறுவனம். //

இந்தியாவில் பின்பற்றப் படும் டெண்டர் விதிமுறைகளைப் பற்றி நாம் அதிகம் பெருமைப் பட்டுக் கொள்ள முடியாது.

சமீபத்திய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஒரு சிறந்த உதாரணம். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்காக ராடன் டாடா அவர்கள் சுமார் 1500 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்த போது, அவரிடம் அதிகப் பணம் இருந்தால் சேவை நிறுவனங்களுக்கு கொடுக்கச் சொல்லுங்கள் என்ற ரீதியில் அவரது தொழில் போட்டியாளர்கள் (இத்தனைக் காலம் ஸ்பெக்ட்ரம் எனும் மொத்த நாட்டிற்கும் சொந்தமான தங்கச் சுரங்கத்தை குறைந்த செலவில் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள்) பேசியது குறிப்பிடத் தக்கது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அசாத்திய திறமைகளைப் பற்றி எந்த ஒரு குறையையும் கூற முடியாது என்றாலும் அவர்கள் நாட்டின் நெறிமுறைகளை, அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றித்தான் இவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்தார்கள் என்று ஒப்புக் கொள்வது கடினம். அவர்கள் அரசு விதிகளை மீறித்தான் வளர்ந்து இருக்கிறார்கள் என்பதை ஒரு (அப்போதைய) அமைச்சர் வெளிப்படையாகவே ரிலையன்ஸ் மேடையில் அவர்களை பாராட்டும் ரீதியில் கூறி இருக்கிறார்.

//அந்த கால கட்டத்தில் எந்த இடத்தில் எவ்வளவு எண்ணெய் கிடைக்கும் என்பது லாட்டரி போன்றதே. //

இதைக் கூட என்னால் முழுமையாக ஒப்புக் கொள்ள முடியாது. எந்த இடத்தில் எரிவாயு அல்லது பெட்ரோல் கிடைக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்பதை ஓரளவுக்கு துல்லியமாக அறிந்து கொள்ளும் தொழிற் நுட்பம் அப்போதே இருந்தது. ஆனால் அத்தகைய தொழிற்நுட்ப தகவல்களை அப்போதைய மத்திய அரசு நாட்டில் உள்ள அனைவரிடமும் பகிர்ந்து கொண்டிருக்குமா என்பது கேள்விக் குறியே. இது போன்ற தகவல்கள் சக்தி வாய்ந்த வெகு சிலரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளப் படுகின்றன என்பது நாடறிந்த ரகசியம். சமீபத்திய உதாரணம். சத்யம் நிறுவனத்தின் கடைசி இரண்டு மாத லாபம் பற்றிய தகவல்கள்.

//இவர்கள் விதி முறைககளை சாமர்த்தியமாக மீறத் தெரிந்தவர்கள் என்று சான்றிதழ் பெற்றிருந்தால் நாம் கூற ஒன்றுமில்லை//

Said Mr Shourie: “I first learnt about him through the articles of my colleague S Gurumurthy. The point of most of the articles was that Reliance had done something in excess of what had been licensed, it was producing in excess of that capacity.” And then, he explained how times had changed: “Most would say today that those restrictions and conditions should not have been there in the first place, that they are what held the country back. And that the Dhirubhais are to be thanked, not once but twice over: they set up world class companies and facilities in spite of those regulations, and thus laid the foundations for the growth all of us claim credit for today...”

“Second, by exceeding the limits in which those restrictions sought to impound them, they helped create the case for scrapping those regulations, they helped make the case for reforms,” Mr Shourie said.

http://www.financialexpress.com/news/shouries-180degree-turn-with-dhirubhai/86416/

ஒரு ஜனநாயக நாட்டின் சட்ட திட்டங்கள் அமலில் இருக்கும் வரை அவை மீறப் பட்டால் குற்றம்தான். பிற்காலத்தில் அந்த சட்டங்கள் நீக்கப் பட்டது என்ற காரணம் காட்டி சட்ட மீறலை நியாயப் படுத்த முடியாது. அதே சமயம், ரிலையன்ஸ் தவறு செய்தது, சட்டத்தை மீறியது என்றெல்லாம் ஒரு காலத்திலும் நிருபிக்க முடியாது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

நன்றி.

nerkuppai thumbi said...

// இந்தியாவில் பின்பற்றப் படும் டெண்டர் விதிமுறைகளைப் பற்றி நாம் அதிகம் பெருமைப் பட்டுக் கொள்ள முடியாது.

சமீபத்திய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஒரு சிறந்த உதாரணம். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்காக ராடன் டாடா அவர்கள் சுமார் 1500 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்த போது, அவரிடம் அதிகப் பணம் இருந்தால் சேவை நிறுவனங்களுக்கு கொடுக்கச் சொல்லுங்கள் என்ற ரீதியில் அவரது தொழில் போட்டியாளர்கள் (இத்தனைக் காலம் ஸ்பெக்ட்ரம் எனும் மொத்த நாட்டிற்கும் சொந்தமான தங்கச் சுரங்கத்தை குறைந்த செலவில் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள்) பேசியது குறிப்பிடத் தக்கது. //


ஸ்பெக்ட்ரம் ஊழலின் போது, டெண்டர் முறை பின் பற்றப்படவில்லை. first come first serve என்ற நம் ஊர் கிராம முறை பயன் பத்த்தப்ப்பட்டது என்பது தான் ஊழலே.
மற்றபடி எஸ் குருமூர்த்தி சொன்ன விஷயங்களின் மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. ( நானும் ரிலையன்ஸ் சட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்றி வந்துள்ளது என்று வக்காலத்து வாங்கவில்லை.என அறியவும்

Maximum India said...

அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா!

//ஸ்பெக்ட்ரம் ஊழலின் போது, டெண்டர் முறை பின் பற்றப்படவில்லை. first come first serve என்ற நம் ஊர் கிராம முறை பயன் பத்த்தப்ப்பட்டது என்பது தான் ஊழலே.//

ஒரு உதாரணத்திற்கு மட்டும்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை எடுத்துக் கொண்டேன். மற்றபடி இந்தியாவில் ஒரு சிறிய கிராம அரசு அலுவலகம் முதல் மத்திய அரசு வரை டெண்டர் விவகாரங்கள் எப்படி கவனிக்கப் படுகின்றன. என்பது அனைவருக்கும் புரிந்த ஒன்றே. ஒரு சிலருக்கு சாதகமாக வேண்டும் என்பதற்காகவே விதிமுறைகள் தேவைக்கேற்றபடி மாற்றி அமைக்கப் படுகின்றன என்ற வலுவான குற்றச்சாட்டுக்கள் பல உண்டு..

//மற்றபடி எஸ் குருமூர்த்தி சொன்ன விஷயங்களின் மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. (//

எனக்குக் கூட குருமூர்த்தி மீதும் கோயங்கா மீதும் முழுமையான நம்பிக்கை எப்போதுமே இருந்தது இல்லை. ஆனால் ஒரு மத்திய அமைச்சராக இருந்த அருண் சோரி அந்த கூட்டத்தில் வெளிப்படையாக பேசியது ஆச்சரியத்தையே வரவழைத்தது.

//நானும் ரிலையன்ஸ் சட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்றி வந்துள்ளது என்று வக்காலத்து வாங்கவில்லை.என அறியவும்//

ஐம்பது வயதிலும் ஒரு சோஷலிஸ்ட்டாகவே இருக்கும் நீங்கள் ரிலையன்ஸ் போன்ற ஒரு பக்காவான முதலாளித்துவ பிரதிநிதி நிறுவனத்தை நிச்சயம் ஆதரிக்க மாட்டீர்கள் என்பதை நானும் நன்கு அறிவேன்.

நான் ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பார்த்து எப்போதுமே வியந்தது உண்டு. முதல் தலைமுறையிலேயே இந்தியாவின் நம்பர் ஒன் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியது ஒரு மிகப் பெரிய விஷயம்தான்.

ஆனால் ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீடு போன்ற சில விவகாரங்களில் இந்த குழுமத்தின் செயல்பாடு அவ்வளவு திருப்தியாக இருக்க வில்லை. சட்டப் படி எல்லாம் சரியாக இருக்கலாம். ஆனால் அது மட்டும் போதுமா?

நன்றி!

Blog Widget by LinkWithin