Skip to main content

இப்போது என்ன செய்யலாம்?

சந்தையின் இப்போதைய அதிவேக முன்னேற்றம், முதலீட்டாளர்கள் பலருக்கும் தமது பழைய முதலீடுகள் எல்லாம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன என்று ஒரு பக்கம் சற்று சந்தோசத்தைக் கொடுத்தாலும் மறுபக்கம் இந்த முன்னேற்றத்தில் சரிவர பங்கு கொள்ளாமல் போய் விட்டோமோ என்ற வருத்தத்தையும் கொடுத்திருக்கும்.

ஒரு சிலருக்கு இது வரை தவற விட்டதை இப்போது பிடிக்க வேண்டும் என்ற வேகம் கூட வந்திருக்கும். அவர்கள் முதலீடு செய்ய புதிய உத்வேகத்துடன் முன் வரும் போது, சந்தைகள் உச்சக் கட்டத்தை அடைந்து வீழ்ச்சி அடைய காத்துக் கொண்டு இருக்கும் என்பது சரித்திரம் சொல்லும் கசப்பான உண்மை.

சந்தை இது போன்ற முதலீட்டாளர்களின் மன உணர்வுகளின் அடிப்படையில்தான் இயங்குகிறது. சந்தை உயர்வை காணும் போது பதட்டமடைந்து முன்பின் யோசிக்காமல் முதலீடு செய்ய முன் வருவது. கீழே செல்லும் போது, பயத்தில் விற்று விடுவது அல்லது சந்தை பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாது என்று சபதம் எடுத்துக் கொள்வது.

சமீபத்தில், பங்கு சந்தை நிபுணரான எனது நண்பர் ஒருவர், கடந்த சந்தை உச்சத்தின் போது அவரது மாமனார் தனது 77 ஆம் வயதில் நோய் வாய்ப் பட்ட நிலையில் கூட , பங்குகளில் பெருமளவில் முதலீடு செய்த அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். பங்கு முதலீடுகள் என்பவை நீண்ட கால நோக்கம் கொண்டவை என்று நண்பர் அவரது மாமனாருக்கு பல முறை அறிவுறுத்தியும் அவர் பொருட்படுத்த வில்லை. அவர் அவ்வளவு நாட்கள் உயிர் வாழ்வது கடினம் என்று மறைமுகமாக உணர்த்திய போதும் கூட பங்கு சந்தை அவரை மிகவும் வசீகரித்து கவர்ந்திழுத்தது. அதிக காலம் உயிர் வாழ்வது கடினம் என்றிருக்கும் நபரைக் கூட தன்பக்கம் ஈர்க்கும் அளவுக்கு சந்தையின் கவர்ச்சி மிக வலிமையானது. . இப்போது சந்தைகள் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்ட போது கூட அவரது முதலீடுகள் அதல பாதாள விலையில்தான் இருக்கின்றன. அவரது மாமனாரோ இப்போது ரொம்ப மேலே போய் விட்டார். ஒருவேளை தனது முதலீடுகள் படும் பாட்டை பார்க்க கூடாது என்றுதான் போய் விட்டாரோ என்னவோ?

எனவே, பங்கு சந்தையில் முதலீடு செய்ய முன் வருபவர்கள் ஆசை மற்றும் பயம் ஆகிய இரண்டு வலிய உந்துதல்களால் பாதிக்கப் படாதவராக இருக்க வேண்டும். இது கடினமான காரியம்தான் என்றாலும் பழகிக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்த அடிப்படை விஷயத்தை முதலில் புரிந்து கொள்வது நல்லது.

இப்போது நமது தலைப்பு கேள்விக்கு வருவோம்.

இப்போதைய நிலையில் பங்கு சந்தைகள் (ஏற்கனவே) நல்ல வளர்ச்சியை கண்டு விட்டன. உலக பொருளாதாரத்தின் போக்கு குறித்து இன்னும் சரிவர புரியாத நிலையில் குறுகிய கால அடிப்படையில் சந்தையின் போக்கினை கணிப்பது கடினம். அதே சமயம் நீண்ட கால அடிப்படையில் இந்தியாவும் சரி இந்திய பங்கு சந்தையும் சரி நல்ல முன்னேற்றத்தைக் காணும் என்பதில் சந்தேகமில்லை.

ஒருவரது பங்கு சந்தை முதலீடுகள் நீண்ட கால நோக்கம் கொண்டவையாக இருக்க வேண்டும். ஒரு நல்ல நிறுவனத்தின் பங்கினை தவறான நேரத்தில் (உச்ச கட்டத்தில்) வாங்கினாலும் கூட நீண்ட கால அடிப்படையில் நல்ல வருவாயைத் தரும். அதே சமயம், சரி வர இயங்காத நிறுவனத்தின் பங்கினை எவ்வளவு குறைந்த விலையில் வாங்கினாலும் அதிக பயன் தராது.

எனவே பங்குகளை தேர்வு செய்வதில் அதிக கவனமாக இருங்கள். பரவலான சந்தை ஊகங்களை நம்பி எந்த முதலீடும் செய்யாதீர்கள். உங்களுடைய மூளையை மட்டும் நம்புங்கள். உண்மையில், பங்குகளை தேர்வு செய்ய பெரிய அளவில் பொருளாதார அறிவியல் ஒன்றும் தேவையில்லை. பார்வையை கொஞ்சம் அகல படுத்துதலுடன் சற்று புத்திக் கூர்மை மட்டும் இருந்தால் போதுமானது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெறக் கூடிய துறையில் நல்ல அடிப்படைகள் அமைந்துள்ள நிறுவனங்களை மட்டும் தேர்வு செய்யுங்கள்.

உதாரணமாக (உதாரணம் மட்டுமே! பரிந்துரை அல்ல) மின்சாரம் (NTPC) எரிவாயுத் துறை (GAIL) போன்ற துறைகளையும் பங்குகளையும் தேர்ந்தெடுங்கள்.

அந்த பங்குகளில், இடைவெளி விட்டு அவ்வப்போது, வேறுபட்ட விலைகளில் முதலீடு செய்யுங்கள். நிச்சயம் நீண்டகால நோக்கில் நல்ல பலன் காண்பீர்கள். குறுகிய கால சந்தை மாற்றங்கள் பற்றி கவலைப் பட தேவையிருக்காது.

நன்றி.

Comments

Joe said…
நல்ல பதிவு.

ஏற்கனவே mutual funds-களில் முதலீடு செய்துள்ளேன். நீங்கள் கூறியவாறு SIP வழியாக சிறிது சிறிதாக மேலும் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்.
KARTHIK said…
நல்ல அலசல்.

இப்போ கொஞ்சம் IPO வரும் போல இருக்கே அதுல முதலீடு செய்யலாங்களா ?
Maximum India said…
அன்புள்ள ஜோ!

//ஏற்கனவே mutual funds-களில் முதலீடு செய்துள்ளேன். நீங்கள் கூறியவாறு SIP வழியாக சிறிது சிறிதாக மேலும் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்//

நல்ல முடிவு. சிறிது சிறிதாக தொடர்ந்து முதலீடு செய்தீர்கள் என்றால் குறுகிய கால சந்தை ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் எல்ஐசி போன்ற நீண்ட கால முதலீட்டு நிறுவனங்கள் எந்த காலத்திலும் பங்கு சந்தைகளினால் நஷ்டப் பட்டிருக்காது.

நன்றி.
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்!

//இப்போ கொஞ்சம் IPO வரும் போல இருக்கே அதுல முதலீடு செய்யலாங்களா ?//

பொதுவாகவே, அடிப்படை சிறப்பாக உள்ள அரசு நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு சாதகமான விலையில்தான் IPO கொண்டு வரும் வழக்கம் கொண்டவை. எனவே அவற்றில் தாராளமாக முதலீடு செய்யலாம். ரிலையன்ஸ் பவர் போன்ற IPO வற்றை தவிர்த்து விடுங்கள்.

நன்றி.
நம்ம பெரிசுகள் லோக்கல் மார்கெட்டில் நுங்கு வாங்கும்போது நூறு கண் கொண்டு பார்த்து வாங்குவார்கள். இப்போது பணம் இருக்கிறதே என்று பங்கு மார்கெட்டில் பலரும் கண்மூடித்தனமாக முதலீடு செய்கிறார்கள். பழைய பங்கு மார்கெட் முறையில் கூவி கூவி பங்குகளை விற்ற வாதாடிகள் ஹர்ஷத் மேத்தா புண்ணியத்தில் பங்கு மார்க்கெட் எலேக்ட்ரோனிக் முறை படுத்தப்பட்ட பின் சரியான சூதாடிகள் ஆகிவிட்டனர். நிறைய ஆசை பட்டு நாம் நாடோடிகளாக மாறாமல் இருந்தால் சரி.
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்!

//நம்ம பெரிசுகள் லோக்கல் மார்கெட்டில் நுங்கு வாங்கும்போது நூறு கண் கொண்டு பார்த்து வாங்குவார்கள். இப்போது பணம் இருக்கிறதே என்று பங்கு மார்கெட்டில் பலரும் கண்மூடித்தனமாக முதலீடு செய்கிறார்கள்.//

சரியாக சொன்னீர்கள். ஆசைக்கு வயதில்லை.

//பழைய பங்கு மார்கெட் முறையில் கூவி கூவி பங்குகளை விற்ற வாதாடிகள் ஹர்ஷத் மேத்தா புண்ணியத்தில் பங்கு மார்க்கெட் எலேக்ட்ரோனிக் முறை படுத்தப்பட்ட பின் சரியான சூதாடிகள் ஆகிவிட்டனர். நிறைய ஆசை பட்டு நாம் நாடோடிகளாக மாறாமல் இருந்தால் சரி.//

உண்மைதான். மேடைகள் மாறி உள்ளன. ஆனால் நடிகர்கள் மாற வில்லை. நாம்தான் இவர்களின் மகுடிக்கு மயங்காமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நன்றி.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...